தனியார்மயமாகும் தண்ணீர் ...

நிலத்தடி நீருக்கும் ஃபுளூரைடு எனும் வேதிப்பொருளுக்கும் மிக நெருங்கிய தொடர்பு உண்டு.இது நிலத்தடி நீரில் கலந்திருப்பதால், அதைபருகும் மக்களுக்கு பற்களில் நிறமாற்றம் ஏற்படுகிறது. இந்த மாற்றம் ஃபுளூரைடின் ஆரம்ப நிலையிலேயே உண்டாகி விடுகிறது. 

இது நாளடைவில் உடலில் உள்ள எலும்பு மண்டலங்களையும் பாதிக்கக்கூடிய அளவிற்கு வீரியம் மிக்கது. இந்த ஃபுளூரைடு பாதிப்பு எந்தெந்த பகுதிகளில் அதிகமாக உள்ளது என ஒரு ஆய்வு வெளியாகியுள்ளது.விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ளவடபட்டி கிராமத்தைச் சேர்ந்த லட்சுமி என்ற பெண்ணின்முன் பற்களில் அழியாத காவி நிறக் கோடுகள் ஏற்பட்டுள்ளன.




இதுகுறித்து அப்பெண் கூறுகையில், நான்என் திருமணத்திற்கு பிறகு எப்போது இந்த கிராமத்திற்கு வந்தேனோ அப்போது முதல் இந்த கறைகள் என்பற்களில் வந்துவிட்டன; 
இதுபோன்று என் மகனுக்கும்உள்ளது என்றார். வடபட்டி கிராமத்தில் மட்டும், இப்படிஃபுளூரோசிஸ் பல் (Dental Fluorosis) நோயால் பாதிக்கப்பட்ட நூறு பேரில் இவரும் ஒருவர்.ஃபுளூரைடின் உயர் செறிவு அதிகளவில் வெளிப்படுவதே, ஃபுளூரோசிஸ் பல் எனும் குறைபாடு ஏற்படுவதற்கு காரணம்.


இப்பகுதியில் வாழும் மக்கள் பலரின்பற்களில் காவி, சாம்பல் மற்றும் கருப்பு நிற திட்டுகள்,குழிகள் இருப்பது சாதாரணமான ஒன்றாகிவிட்டது. 
ஃபுளூரோசிஸ் பல் குறைபாட்டின் ஆரம்ப நிலையில், இது சரியாகிவிடும் என்பதுபோல் நமக்கு தோன்றும். ஆனால், நாளடைவில் வெள்ளை நிறக்கோடுகள், நிறமாற்றம் மற்றும் காவி நிற குறியீடுகள்உருவாகி நிரந்தமாக அவை நமது பற்களில் இருந்துவிடும். 

பின்னர், அப்பற்கள் குழிகளாக, கடினமானதாக மாறி எளிதில் அதை சரிசெய்ய முடியாத அளவிற்குசென்றுவிடும்.



ஃபுளூரோசிஸ் பல் குறைபாடு சிகிச்சை அளிக்கக்கூடியதல்ல. அதனால் பற்களில் ஏற்பட்ட கறைகள்நிரந்தரமானவை. இதன் தீவிரத்தன்மை, ஃபுளூரைடின்அதிக வெளிப்பாடு, அதன் காலம், எதிர்செயல், எடை, ஊட்டச்சத்து ஆகியவற்றை பொறுத்தது. 
ஃபுளூரைடுஅதிகம் கலந்துள்ள நீரை தொடர்ந்து பருகுவதனால் அவை எலும்பு மண்டலங்களை பாதிப்பதற்குக் கூட வழிவகுக்கும்.உலக சுகாதார நிறுவனத்தின் வழிகாட்டல்படி, குடிநீரில் ஃபுளூரைடின் செறிவு லிட்டருக்கு 1.5 மில்லி கிராமை விட அதிகமாகக் கூடாது.


பிஐஎஸ் (Bureau of Indian Standards - BIS)அமைப்பின் வழிகாட்டல் பரிந்துரையின்படி, குடிப்பதற்கும் சமையல் செய்வதற்கும் பயன்படுத்தப்படும் நீரில் ஃபுளூரைடின் அளவு 1 லிட்டருக்கு 1 மில்லிகிராம் மட்டுமே இருக்கலாம். ஆனால் சிவகாசி பகுதியில் குடிநீரில் ஃபுளூரைடு தாக்கம் அதிகமாக உள்ளது.ஆண்டியாபுரம் - 1.6 மி.கி. மத்தியசேனை - 1.7 மி.கி,சுக்கிரவார்பட்டி- 1.5 மி.கி, நாகலாபுரம் - 2.0 மி.கி, ஈஞ்சார் - 2.2 என ஃபுளூரைடின் தாக்கம் அதிகம் உள்ளது. 
இந்தியாவில் ஃபுளூரோசிஸ் என்பது மிகக் கடுமையான சமூக சுகாதாரப் பிரச்சனை. தற்போது தமிழகத்தின் குழந்தைகள் உட்பட நாடு முழுவதும் 3.5 கோடிமக்கள் ஃபுளூரோசிஸ் குறைபாட்டினால் பாதிக்கப்பட்டுள்ளனர். 

மேலும் 6.6 கோடி மக்கள் இக்குறைபாடுஅதிகரிக்கக்கூடிய நிலையில் உள்ளனர். ஆந்திரப் பிரதேசம், பஞ்சாப், ஒடிசா, ஹரியானா,ராஜஸ்தான், குஜராத், தமிழ்நாடு மற்றும் உத்தரப்பிரதேசம் ஆகிய மாநிலங்கள் இதனால் மிகக் கடுமையான பாதிக்கப்பட்டுள்ளன.


மேற்குத் தொடர்ச்சி மலையின் கிழக்குப் பகுதியில்அமைந்துள்ள விருதுநகர் மாவட்டத்தில் சிவகாசி தான் சார்கோனைட், குவார்ஸ்சைட், பெகாமடைட், லாட்டரைட் மற்றும் மணற்கல், வண்டல்மண் உள்ளிட்டவளங்களின் பூமியாகும். இங்குள்ள வைப்பாறு மற்றும்குண்டாறு படுகைகள் நல்லதொரு நீர்த் தேக்கும்வளங்களாக திகழ்கின்றன. 
இப்பகுதி மக்களுக்குகுடிநீர் விநியோகம் செய்யும் பெரிய நீராதாரமாகவும்இந்தஆறுகள் இருக்கின்றன.
 இங்கு 40 முதல் 70மீட்டர்ஆழம் வரை ஆழ்துளைக் கிணறுகள் தோண்டப்படுகின்றன.


பாறைகளின் இயல்பு மற்றும் தட்பவெப்பநிலை காரணமாக, ஃபுளூரைடு அயனிகள் கசிந்து நிலத்தடிநீர்த்தேக்கத்தினுள் செல்கின்றன. சார்னாக்கைட் பாறைகளிலிருந்து அப்படைட் மற்றும் ஃபுளூரப்படைட் தனிமங்கள் வெளிப்படுவதால், ஃபுளூரைடு அயனிகள் நிலத்தடி நீருடன் கலக்கின்றன.

நிலத்தடி நீர் முற்றிலும் ஃபுளூரைடு கலந்துள்ளதால், இப்பகுதியில் உள்ள விஸ்வநத்தம், வெற்றிலையூரணி மற்றும் செங்கமலநாச்சியார்புரம் போன்ற கிராமங்களில் உள்ள மக்களின் பற்களிலும் இத்தகைய கறைகள் இருப்பதைக் காண முடிகிறது. 

இரண்டு வயது முதல் 80 வயது வரை உள்ள மக்களின் பற்களில்இக்கறைகள் உள்ளன.சிவகாசியில் கடந்த 40 ஆண்டுகளாக மருத்துவம்பார்த்து வரும் பல் மருத்துவர் ஏ.சி.திலகர் இதுகுறித்துகூறுகையில், “பெண்கள், வழக்கமாக அவர்களின் திருமணத்திற்கு முன்பு என்னிடம் வந்து, பற்களில் உள்ளகறைகளை நீக்க வேண்டும் என்பர். ஆனால், எளிதாகபற்களில் ஏற்பட்ட இக்கறைகளை அகற்ற முடியாது.


பற்களின் வேர் ஆழம் வரை சென்று சிகிச்சை அளித்து,செயற்கை பல்லைத்தான் பொருத்த வேண்டும். இந்தசிகிச்சைக்கு அதிக அளவில் செலவு ஏற்படும்” என்றார்.வெற்றிலையூரணிப் பகுதியைச் சேர்ந்த தனம் என்றபெண் கூறுகையில், ‘‘என்னால் காசு கொடுத்து தண்ணீர் கேன் வாங்க முடியாது. நாங்கள் இந்தத்தெருவின் கடைசியில் உள்ள போர்வெல் பைப் மூலம்கிடைக்கும் தண்ணீரைத்தான் எடுக்கிறோம். இந்த போர்வெல் தண்ணீரை குடிப்பதால்தான் பற்களில் இப்படி காவி நிற கறைகள் உண்டாகின்றன என்றுசொல்கிறார்கள். 

ஆனால், நான் இதை நம்பமாட்டேன். என் பெற்றோருக்கும் சகோதரருக்கும் இந்த குறைபாடுஉள்ளது. தண்ணீர் எப்படி பற்களை கறையாக்கும்? என்கிறார்.



இந்த நிலை விருதுநகர் மாவட்டத்தில் மட்டுமல்ல!திண்டுக்கல் மாவட்டம் நத்தம் தாலுகாவில் உள்ளகுக்கிராமமான களத்துப்பட்டியில் ஆயிரம் குடும்பங்கள் வசிக்கின்றன. இங்குள்ள ஐந்து வயது குழந்தைகளுக்குக் கூட காவி நிறப் பற்கள் உள்ளன. 

இங்கு வசிக்கும் ரத்னா கூறுகையில், எனக்கும் என் மகளுக்கும் ஒரே மாதியான காவி நிற கோடுகள் உள்ளன.இது பரம்பரை குறைபாடு போலத்தான் இருக்கிறது என்றார் சிரிப்புடன். இது அவர்களுக்கு பழக்கமான ஒன்றாகிவிட்டது. அவர்களது பற்கள் காவி நிறத்திலும் மிக எளிதில் நொறுங்கிவிடும் நிலையிலும் உள்ளன. இக்குறைபாடு குறித்து நத்தம் தாலுகாவில் உள்ளபல் மருத்துவர் ஏ.டி.காயத்ரி, ‘‘ஒரு கட்டத்திற்கு மேல்பற்கள் எளிதில் நொறுங்கி விடும் நிலைக்கு மாறும்.இந்த கறை லேசானதுதான், எளிதில் போக்கிவிடலாம் என்று மக்கள் நினைப்பார்கள்.


ஆனால், இதற்கு கையாளப்படும் முறையே வித்தியாசமானது.
 பற்களில் அதிக கறைகள் ஏற்பட்டு முற்றிப் போன நேரங்களில், அந்தப் பற்களை பிடுங்கி விட்டு, அவ்விடத்தில் உலோகம் அல்லது செராமிக் பற்களைத்தான் பொருத்த வேண்டும்’’ என்கிறார். 

நிலக்கோட்டை தாலுகாவில் உள்ள முருகதூரன்பட்டி எனும் குக்கிராமத்தில் உள்ள மக்களுக்கு பற்களில் இது போன்ற கறைகள் இருப்பது சாதாரண ஒன்று.நிலக்கோட்டை மிக அதிக அளவாக 1 லிட்டர் நீருக்கு 3.2மி.கி. அளவு ஃபுளூரைடை கொண்ட பகுதியாகும். இதற்கு தீர்வுகாண, தமிழ்நாடு குடிநீர் வடிகால்வாரியத்துடன் காந்திரகிராம கிராமியப் பல்கலைக்கழகத்தின் வேதியியல் துறை இணைந்து ஆராய்ச்சியில் ஈடுபட்டு வருகிறது.


விருதுநகர் மாவட்டத்தில் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் ஏற்கெனவே இரண்டு திட்டங்களை நடைமுறைப்படுத்தியுள்ளது. மாவட்டத்தின் மேற்குப் பகுதிகளுக்கு விரைவில் தாமிரபரணியிலிருந்து நீர்வழங்கப்படுவது உட்பட 755 கிராமப்புற குடியிருப்புகளுக்கு பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்குவதற்காக அரசு ரூ. 234 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது.


 திண்டுக்கல்லில் இத்திட்டத்தை செயல்படுத்த ரூ.636 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம்திண்டுக்கல்லில் 1,276 கிராமங்களுக்கு பாதுகாப்பான குடிநீர் வழங்கப்படும் என்று அதிகாரிகள் கூறுகின்றனர். ஆனால் இவையெல்லாம் முறையாக நடக்கிறதா என்பது ஆய்வுக்குரியதே!

கேன் வாட்டர் வியாபாரம்


அநேகமாக தமிழகம் முழுவதும் கிராமப்புற மாவட்டங்களில் பாதுகாக்கப்பட்ட குடிநீர் தொடர்பான உண்மை நிலை இதுதான் என்றால், பெருநகரங்களிலும் கேன் குடிநீர் வாங்காத வீடுகள், அலுவலகங்களை விரல்விட்டு எண்ணிவிடலாம் என்ற நிலை இருக்கிறது. சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் என்று நம்பி வாங்கும் கேன் குடிநீர் உண்மையிலேயே சுத்திகரிக்கப்பட்டது தானா என்ற கேள்வி எல்லோர் மனதிலும் இருக்கிறது. 


காய்ச்சிய தண்ணீரை சாண்ட் ஃபில்டர் (sand filter) இயந்திரத்துக்கு அனுப்பி தண்ணீரில் இருக்கும்மண் துகள், தூசு, அழுக்கு ஆகியவற்றை நீக்க வேண்டும்.

நிலக்கரியால் நிரப்பப்பட்டிருக்கும் ஆக்டிவேட்டட் கார்பன் ஃபில்டர் (Activated Carbon Filter) இயந்திரத்தில் தண்ணீரை செலுத்தி தண்ணீரின் கடினத் தன்மைகுறைக்கப்பட வேண்டும்.

மைக்ரான் ஃபில்டர் பிராஸஸ் (Micron Filter) முறையில் தண்ணீரில் இருக்கும் நுண் கிருமிகளை நீக்க வேண்டும்.


ரிவர்ஸ் ஆஸ்மாஸிஸ் இயந்திரத்தில் தண்ணீரை செலுத்தி எதிர் சவ்வூடு பரவல் தொழில்நுட்பம் (Reverse osmosis) மூலம் தண்ணீரில் அளவுக்கு அதிகமாக இருக்கும் கனிமங்கள் அப்புறப்படுத்தப்பட வேண்டும்.


இந்தத் தண்ணீரை கொதிக்க வைத்து, அல்ட்ரா வயலெட் பல்ப் (UV Bulb) தொழில்நுட்பம் மூலம் புறஊதாக் கதிர்களை பாய்ச்சி வைரஸ், பாக்டீரியா கிருமிகள் நீக்கப்பட வேண்டும்.

ஒரு கேன் 20 முறை மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும்.



தண்ணீரைச் சுத்திகரிக்கும் நிறுவனங்கள் தங்களின் கேன் மீது நிறுவனத்தின் பெயர், பேட்ச் அல்லதுகோட் எண், சுத்திகரிப்பு தொழில்நுட்ப விவரங்கள், தயாரான தேதி, காலாவதி தேதி ஆகியவற்றை குறிப்பிட வேண்டும். உண்மையில் இதெல்லாம் நடப்பது இல்லை. ஆனால், அங்கீகாரம் இல்லாத நிறுவனங்கள் புறநகர் பகுதிகளில் ஆழ்துளை மற்றும் விவசாயக் கிணறுகளில் தண்ணீரை வாங்கி, செலவு பிடிக்காத மேலோட்டமான சுத்திகரிப்பை செய்கின்றனர். 
எதுவுமே செய்யாமல் தண்ணீரை அப்படியே கேன்களில்நிரப்புவோரும் உண்டு. 

சிலர் தண்ணீரில் அலுமினியம் சல்பேட் படிகாரத்தைப் போட்டு சுத்திகரிக்கிறார்கள். இது ஆபத்தானது. கேன் வாட்டர் சப்ளை செய்வதில் தமிழகத்தில் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்கள் சுமார் 1,250 மற்றும் அங்கீகரிக்கப்படாத ஆயிரம் நிறுவனங்கள் இயங்குகின்றன.


இது சீசன் தொழில். கோடை தொடங்கிவிட்டால் போர்வெல் தோண்டி குடிசைத் தொழிலைப் போல செய்கிறார்கள். 

தமிழகத்தில் சுமார் 500 நிறுவனங்கள் ‘ஐ.எஸ்.ஐ. 2002’ உரிமம் இல்லாமல் தொழில் செய்கின்றன. லாரிகள் மூலம் விநியோகம் செய்யப்படும் தண்ணீரை கொண்டு வந்து ஒரு குடம் தண்ணீர் ரூ.5என்ற அளவில் விற்கின்றனர். சாதாரண தண்ணீரைக் கூட கேன் வாட்டர் என ஏமாற்றி ரூ.30க்கு விற்பனை செய்கின்றனர்.


 சுத்தமான குடிநீர் என்பது, ஒவ்வொரு குடிமகனின் அடிப்படை உரிமையாகும். ஆனால் தினமும்1,600 இந்தியர்கள் குடிநீர் தொடர்பான நோய்களால் மரணமடைகிறார்கள் என்ற விபரமே சுத்தமான குடிநீர் என்ற அடிப்படை உரிமையை அரசுகள் அமலாக்கவில்லை என்பதற்கு சாட்சி. 

தமிழகத்தில் ஊராட்சிகள், பேரூராட்சிகள், நகராட்சிகள், மாநகராட்சிகள் என மொத்தம் உள்ள 46,438உள்ளாட்சி அமைப்புகளில் 83 சதவீதமாகத் தண்ணீர் விநியோகம் குறையும் நிலை ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.


அத்துடன், மேலும் குறைத்து 60 சதவீதமாக தண்ணீர் விநியோகத்தை மாற்ற குடிநீர் வடிகால் வாரியம் முடிவு செய்துள்ளதாகக்கூறப்படுகிறது.சுருக்கமாகச் சொன்னால், குடிநீர் விநியோகம் என்பதை படிப்படியாக தனியார்மயமாக்கும் ஏற்பாடேஇது. 

இதன் காரணமாகவே, தமிழகத்தின் பெரும்பகுதிமக்கள் புளூரைடு கலந்த நிலத்தடி நீரை பருக வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். 

ஆயிரக்கணக்கில், லட்சக்கணக்கில் காலிக்குடங்கள் வீதிக்கு வந்து சாலைகளை நிரப்புவதைத் தவிர வேறு எந்த வழியில் அரசாங்கத்தை நிர்ப்பந்திக்க முடியும்?
                                                                                                                                  ஆர்.நித்யா
 நன்றி: தீக்கதிர்.





ஆதாரம்: திஇந்து நாளிதழ் (ஆங்கிலம்) மற்றும் இணையதளப் பதிவுகள்.
=====================================================================================
ன்று,
ஆகஸ்ட்-25.


  • கலிலியோ கலிலியோ  தனது முதல் தொலைநோக்கியை அறிமுகப்படுத்தினார்(1609)
  • உருகுவே விடுதலை தினம்(1825)
  • பெல்ஜியம் புரட்சி ஆரம்பமானது(1830)
  • ஜிம்பாப்வே ஐ.நா., வில் இணைந்தது(1980)
======================================================================================

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

2025ல் தங்கம் விலை

வினேஷ் போகத் வென்றார்!

முடிவுக்கு வருகிறதா?