பாதுகாப்பில்லா ஆதார் அவசியம்தானா?

இந்தியர்களின் தனித்துவ அடையாள (ஆதார்) தகவல்கள் அனைத்தும் முழுமையான பாதுகாப்புடன் தனிப்பட்ட அடையாள ஆணையத்திடம் இருப்பதாகவும், இவ்வாறு பாதுகாக்கப்பட்டிருக்கும் தகவல்கள் எந்த விதத்திலும் வெளியாகவோ அல்லது திருடப்படவோ இல்லை என்றும் கடந்த நவம்பர் மாதம்தான் அந்த ஆணையம் தெரிவித்திருந்தது. 
ஆனால் வாட்ஸாப் வழியாக இந்தியாவில் இதுவரை உருவாக்கப்பட்டிருக்கும் ஏறக்குறைய நூறு கோடிக்கு மேலான ஆதார் எண்கள் குறித்த தகவல்களை எவ்விதத் தடையுமின்றி பெறலாம் என்பதை சண்டிகரிலிருந்து வெளியாகும் ‘தி டிரிபியூன்’ பத்திரிகை அம்பலப்படுத்தி இருக்கிறது. 
வெறும் 500 ரூபாய் செலவு செய்தால் யார் வேண்டுமானாலும்- எவரினுடைய ஆதார் தகவல்களையும் இந்திய தனித்துவ அடையாள ஆணையத்தில்இருந்து ‘வாங்கலாம்’ என்பதை ஆதாரப்பூர்வமாக நிறுவியிருக்கிறது. 
பேடிஎம் மூலமாக 500 ரூபாயை செலுத்திய பத்து நிமிடங்களுக்குள், இதற்கென இருக்கும் முகவர்களில் ஒருவர், ஆதார் ஆணைய தரவுகளுக்குள் செல்வதற்கான ஏற்பாடுகளைச் செய்து அந்தத் தளத்திற்குள் நுழைவதற்கென்று பிரத்தியேகமான பயனர் பெயரையும் அதற்கான கடவுச்சொல்லையும் தட்டினால் உங்களுக்கு தேவையானவர்கள் ஆதார் விபரங்களை போதுமான அளவு பெற்றுக்கொள்ளலாம்.
அந்த ஒட்டு மொத்த இந்தியர்களின் அந்தரங்க விபரங்களை வைத்திருக்கும் ஆதார் விபரங்களை மிக,மிக,மிக,பாதுகாப்பாக வைத்திருக்கிறோம் என்ற இந்திய அரசின் பாதுகாப்பையே கேள்விக்குரியதாக்கியிருக்கிறது.
கேலிக்குரியதாக்கியிருக்கிறது.
இந்த பாதுகாப்பு ஓட்டையை சுட்டிக்காட்டிய வர்கள் மீதே ஆதார் விபரங்களை திருடியதாக வழக்கு பதிந்திருப்பது ஆக வேடிக்கை.
இந்த அரசின் ஆதார் பாதுகாப்பு லட்சணத்தை வெளிக்கொணர்ந்த பத்திரிகையாளர் அது பற்றி வெளியிட்ட உண்மை நிலவரம்.

"அந்தத் தளத்தில் எந்தவொரு ஆதார் எண்ணை நீங்கள் கொடுத்தாலும், அடுத்த நொடியே அந்த எண்ணுக்குரிய நபர், ஆதார் ஆணையத்திடம் அளித்துள்ள பெயர், முகவரி,அஞ்சல் குறியீட்டு எண், புகைப்படம், தொலைபேசி எண்,மின்னஞ்சல் முகவரி உள்ளிட்ட தகவல்கள் அனைத்தும் உடனடியாகக் கிடைத்து விடுகின்றன. 
அடுத்ததாக மேலும் ஒரு முந்நூறு ரூபாயைச் செலுத்தி அந்த முகவரிடம் இருந்து மென்பொருள் ஒன்றைவாங்கினேன். 
அந்த மென்பொருளைப் பயன்படுத்தி எந்தவொரு நபரின் ஆதார் எண்ணை மட்டும் கொடுத்து முழுமையான ஆதார் அட்டையை அச்சிட்டு எடுத்துக் கொள்ள முடிந்தது”..
பிற்பகல் 12:30 மணி: டிரிபியூன் பத்திரிகையாளர்(நான்) ‘அனாமிகா’ என்ற பெயரில் ‘76100 63464’ என்ற வாட்ஸாப்எண் வைத்திருக்கும்- அனில்குமார் என்று தன்னை அறிமுகப்படுத்திக் கொண்ட- நபரைத் தொடர்பு கொள்கிறேன்.
இந்திய தனித்துவ அடையாள ஆணையத்தின்தளத்திற்குள் நுழைவதற்கான அனுமதியை உருவாக்கித் தருமாறு அவரிடம் வேண்டிக் கொள்கிறேன்.

பிற்பகல் 12:32 மணி: பெயர், மின்னஞ்சல் முகவரி, மொபைல் எண் ஆகிய விவரங்களைத் தருமாறு கேட்கும்அனில் குமார் தன்னுடைய பேடிஎம் கணக்கான ‘7610063464டு’-இல் ஐநூறு ரூபாய் செலுத்துமாறு கூறுகிறார். 

பிற்பகல் 12:35 மணி: டிரிபியூன் பத்திரிகையாளர்  என்ற மின்னஞ்சல் முகவரியை உருவாக்கி அதோடு சேர்த்து எனது ******5852 என்றமொபைல் எண்ணையும் அந்த முகவருக்கு அனுப்புகிறேன்.

பிற்பகல் 12:48 மணி: பேடிஎம் மூலமாக ஐநூறு ரூபாய், அனில்குமார் கணக்குக்கு மாற்றி அனுப்பப்படுகிறது.பிற்பகல் 12:49 மணி: நீங்கள்  பதிவு முகமையின் நிர்வாகியாக பதிவு செய்யப்பட்டுள்ளீர்கள். 
பதிவுமுகமையின் நிர்வாகியாக உங்களுடைய அடையாளம்ஹயேஅமைய-6677 என்றிருக்கும் என்று பத்திரிகையாளருக்கு மின்னஞ்சல் வருகிறது. 
அதில் கடவுச் சொல் பிறிதொருமின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும் என்று தெரிவிக்கப்பட்டு, சிறிது நேரத்தில் அதுவும் வந்து சேர்கிறது.

பிற்பகல் 12:50 மணி: அடுத்த நிமிடமே டிரிபியூன் பத்திரிகையாளரால் தனித்துவ அடையாள ஆணையத்திடம் பதிவுசெய்துள்ள ஆதார் தரவுகள் அனைத்தையும் பார்க்க முடிகிறது.

அதற்குப் பிறகு மீண்டும் அனில் குமாரைத் தொடர்புகொண்டு ஆதார் அட்டை அச்சடிக்க உதவும் மென்பொருள் வேண்டும் என்று கேட்ட போது, அவர் ராஜ் என்ற பெயரில் உள்ள பேடிஎம் கணக்கு எண் 8107888008-க்கு 300 ரூபாய் அனுப்பி வைக்குமாறு கேட்டுக் கொண்டார். 
பணம் அனுப்பியதும், 7976243548 என்ற மொபைல் எண்ணில் இருந்து சுனில்குமார் என்று தன்னை அறிமுகப்படுத்திக் கொண்ட ஒருவர் டீம்வியூவர் மூலமாக பத்திரிகையாளரின் கணினியில் அந்த மென்பொருளை நிறுவுகிறார்.
வேலை முடிந்ததும் மென்பொருளுக்கான ட்ரைவர் உள்படஅனைத்தையும் முழுவதுமாக அழித்து விடுகிறார்.காத்திருக்கும் ஆபத்துகள்இந்த மோசடி வேறொருவர் பெயரில் சிம் கார்டுகள் வாங்குவது, வங்கிக் கணக்குகளைத் துவக்குவது என்றுஅனைத்து வகையான மோசடிகளுக்கும் வழி ஏற்படுத்திக்கொடுத்திருக்கிறது. 
போலியான ஆதார் அட்டையைச் சமர்ப்பித்து வேறொருவரின் வங்கிக் கணக்கில் இருந்து பணத்தை எடுத்ததாக ஜலந்தரில் கடந்த மாதம் ஒருவர் கைது செய்யப்பட்டது நினைவில் கொள்ளத்தக்கது. 
இந்தச் செய்தி வெளியானதும் தனித்துவ அடையாளஆணையம் இந்த செய்திக்கு மறுப்புத் தெரிவித்து பத்திரிகைச் செய்தியொன்றை வெளியிட்டது.
டிரிப்யூன் பத்திரிகையானது செய்தியைத் திரித்து வெளியிட்டிருப்பதாக தனித்துவ அடையாள ஆணையம் அதில் தெரிவித்திருந்தது.
ஆணையம் வெளியிட்டுள்ள பத்திரிகைக் குறிப்பில் இருந்த தகவல்களில் இருக்கும் ’உண்மைகளை’ பத்திவாரியாகத் தொகுத்து டிரிப்யூன் பத்திரிகை மீண்டும் பதிலளித்திருக்கிறது.

ஆணையம் கூறுவது: ‘‘ரூ500, பத்து நிமிடங்கள் - நூறுகோடி ஆதார் தகவல்கள் உங்களின் கைகளில்’’ என்றுடிரிப்யூன் பத்திரிகையில் வெளியான செய்தியை மறுத்த இந்திய தனித்துவ அடையாள ஆணையம், அந்தச் செய்தியில் தகவல்கள் திரித்துக் கூறப்பட்டிருப்பதாக கூறியதோடு, ஆதார் தகவல்கள் எதுவும் திருடப்படவில்லை, பயோமெட்ரிக் தகவல்கள் உள்பட அனைத்து ஆதார் தகவல்களும் பத்திரமாக இருப்பதாக ஆணையம் உறுதி அளித்திருக்கிறது.


உண்மை: அங்கீகாரம் இல்லாதவர்கள் அணுகும் வகையிலேயே ஆதார் தகவல்கள் இருக்கின்றன. அப்படிஇருக்கும் போது, ஆதார் தகவல்கள் திருடப்படவில்லை என்று ஆணையம் கூறுவது நம்ப முடியாததாகவே இருக்கிறது.

ஆணையம் கூறுவது: ஆதார் எண் அல்லது பதிவு அடையாள எண் ஆகியவற்றைக் கொண்டு அதற்கென்று நியமிக்கப்பட்டவர்கள், மாநில அரசின் அதிகாரிகள் ஆகியோருக்கு, பொதுமக்களின் குறைகளைச் சரி செய்துகொள்வதற்காக தரவுகளைத் தேடுவதற்கான வசதியை ஆணையம் ஏற்படுத்திக் கொடுத்துள்ளது. 
இந்த வசதியைப்பயன்படுத்துபவர்கள் குறித்த முழு தகவல்களும் சேகரிக்கப்பட்டு இருப்பதால், தவறுகள் நடைபெறும்பட்சத்தில் உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். 
இப்போது வெளியாகி உள்ள செய்தி மூலமாகப் பார்த்தால், குறை தீர்ப்பதற்கான இந்த தேடும் வசதியையே அவர்கள் பயன்படுத்தி இருப்பதாகத் தெரிகிறது. 
எனவே இவர்கள் மீது முதல்தகவல் அறிக்கையைப் பதிவு செய்வது உள்ளிட்டசட்டப்பூர்வமான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

உண்மை: அவர்களுடைய தளத்தில் உள்ள வசதியைப்பயன்படுத்தி தவறான வழியில் ஆதார் தகவல்கள் பயன்படுத்தப்பட்டிருக்கிறது என்பதை ஆணையம் ஒப்புக் கொள்கிறது. தவறான வழியைப் பயன்படுத்தி பெயர், பிறந்தநாள், முகவரி, அஞ்சலக குறியீட்டு எண், புகைப்படம், தொலைபேசி எண், மின்னஞ்சல் போன்ற தனிப்பட்ட தகவல்களைத் தங்கள் விருப்பத்திற்கேற்ற வகையில் பயன்படுத்திக் கொள்ளுமாறு தகவல்கள் திருடப்பட்டுள்ளன என்பது தெரிகிறது.

இந்த வசதியை பயன்படுத்தும் அனைவரையும் கண்டறியும் வசதி இருப்பதாகக் கூறும் ஆணையம்இந்த மோசடியில் ஈடுபட்டவர்களைப் பிடிப்பதற்கான முயற்சிகளை மேற்கொள்ளும் என்று எதிர்பார்க்கலாம். ஆனாலும் பல மாதங்களாக ஏராளமான பேர் இந்த தகவல்களைப் பயன்படுத்தி இருப்பதன் மூலமாக, தகவல்கள் அனைத்தும் வெளியே ஏற்கனவே வந்து விட்டன என்பதால்,இத்தகைய நடவடிக்கைகளால் எந்தப் பயனும் இருக்கப் போவதில்லை. 
முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்படுவது என்பதே ஏதோ தவறு நடந்திருக்கிறது என்பதைக் காட்டுவதாகவே இருக்கிறது. 

ஆணையம் கூறுவது: பெயர், முகவரி போன்ற தகவல்களை மட்டுமே இந்தத் தேடுதல் வசதி மூலமாகப் பெற முடியும், பயோமெட்ரிக் தகவல்களைப் பெற முடியாது. 
பயோமெட்ரிக் தகவல்கள் எந்தத் திருட்டுக்கும் உள்ளாகாமல் மிகவும் பத்திரமாக இருப்பதாகவும், பயோமெட்ரிக் தகவல்கள் இல்லாமல் மற்ற தகவல்களை மட்டுமே கொண்டு தவறுகள் நடப்பதற்கான வாய்ப்புகள் இல்லை எனவும் ஆணையம் கூறுகிறது.

உண்மை: பயோமெட்ரிக் தகவல்கள் தவிர பிற தகவல்களைக் கொடுப்பதால் எவ்விதப் பாதிப்பும் இல்லை என்பதைஆணையம் வலியுறுத்திக் கூறுகிறது. 
ஆதார் தகவல்கள் அனைத்தும் பத்திரமாக முழுமையான பாதுகாப்புடன் இருக்கின்றன என்றும், ஆணையத்திடம் இருந்து எந்த தகவல்களும் வெளியே செல்லவில்லை என்று 2016 நவம்பர்20 அன்று ஆணையம் தெரிவித்ததற்கு முற்றிலும் மாறாகஇது இருக்கிறது. 
அந்த சமயத்தில் மத்திய, மாநில அரசுகளின் 210 இணையதளங்களில் ஆதார் எண் வைத்திருப்பவர்களின் தனிப்பட்ட தகவல்கள் வெளியிடப்பட்டிருந்ததை நீக்குமாறு ஆணையம் கேட்டுக் கொண்டது. 
இணையதளத்தைப் பயன்படுத்துபவர்களிடமிருந்து பெறப்படும் இத்தகைய தகவல்களைப் பயன்படுத்தியே கடன் அட்டை,நெட் பேங்கிங் போன்றவற்றின் கடவுச் சொற்களைக் களவாடுவதற்கு பயன்படுத்துகிறார்கள் என்பது நாம்அறிந்ததே. 

ஆணையம் கூறுவது: அரசின் மானியங்கள், பிற சேவைகளைப் பெற விரும்புகின்ற ஆதார் அட்டை வைத்திருக்கும்ஒருவர் அந்த எண்ணை உரிய நிறுவனங்களிடம் தெரிவிக்கவேண்டும் என்பதால், ஆதார் எண் என்பது ரகசிய எண்அல்ல.
ஆதார் அட்டையை உரிய முறையில் பயன்படுத்துவதற்கு கைரேகை, கருவிழி போன்ற பதிவுகளும் தேவை என்பதால், ஆதார் எண்ணை அளிப்பதால் மட்டுமே பாதுகாப்புக்குறைவோ, பணம் சார்ந்த பிரச்சனைகளோ எழுவதற்கானவாய்ப்பில்லை.

உண்மை: அங்கீகாரம் பெற்ற நிறுவனங்களிடம் ஆதார்எண்ணை அளிப்பதில் எந்தவிதப் பிரச்சனையுமில்லை. 
ஆனால் மக்களின் தனிப்பட்ட தகவல்களை அங்கீகாரம்பெறாதவர்கள் அணுகிப் பெறுவதைப் பற்றித்தான் பத்திரிகையில் வெளியான செய்தியில் குறிப்பிடப்பட்டிருந்தது. 
அங்கீகாரம் பெறாத ஓரிடத்தில், டிரிப்யூன் பத்திரிகையாளரால் பயோமெட்ரிக் தகவல்களைப் பெற்று அதனை ஆதார்அட்டையில் அச்சிட்டு எடுக்க முடிந்தது என்பது கவனிக்கத்தக்கது. 
பயோமெட்ரிக் தரவுகள் பதிவிறக்கம் செய்யப்படவில்லை என்றாலும், இவ்வாறு அட்டையில் அச்சிடப் பயன்படுத்தியது ஒரு வகையில் மீறலாகவே கருதப்பட வேண்டும்.

ஆணையம் கூறுவது: ஆதார் பதிவு மையங்களை மீறி ஒருவர் செயல்படலாம் என்று கூறுவது அடிப்படை இல்லாதகுற்றச்சாட்டு ஆகும்.
ஆதார் என்பது முழுமையான பாதுகாப்புடன் மிகவும் பத்திரமானதாகும். இந்த மையங்கள் உயர் தொழில்நுட்பங்களுடன் பாதுகாப்பாக அனைத்து சட்ட விதிகளுக்கும் உட்பட்டே செயல்பட்டு வருகின்றன.

உண்மை: ஆதார் பதிவு மையங்களை மீறி ஒருவர்செயல்படலாம் என்று கூறுவது அடிப்படை இல்லாத குற்றச்சாட்டு என்று கூறுவது, எல்லோருக்கும் தெரிந்துள்ள உண்மையை மறைப்பதற்கான முயற்சியாகவே உள்ளது.
அங்கீகாரம் இல்லாதவர்கள் அரசின் தளத்திற்குள் சென்றுதரவுகளைப் பதிவிறக்கம் செய்வது மீறுகின்ற செயலன்றிவேறு என்னவாக இருக்க முடியும்? 

பாஜகவின் அதிகாரப்பூர்வ டுவிட்டரிலும் டிரிப்யூனில் வெளியான இந்தச் செய்தி போலியான செய்தி என்ற தகவல் பகிரப்பட்டுள்ளது. 
நன்றி: தி டிரிப்யூன்                                                                                                                                                    தமிழில் : பேரா. தா.சந்திரகுரு
ரச்னா கைரா
=====================================================================================================================================
ன்று,
ஜனவரி-11.


  • நீரிழிவு மருந்தாக  இன்சுலின் முதன் முறையாக பயன்படுத்தப்பட்டது(1922)
  •  தியாகி திருப்பூர் குமரன் இறந்த தினம்(1932)
  • அல்பேனியா குடியரசு தினம்(1946)
  • முன்னாள் பிரதமர் லால் பகதூர் சாஸ்திரி இறந்த தினம்(1966)
===========================================================================================
திருப்பூர் குமரன்
திருப்பூர் குமரனின் இயற்பெயர் குமாரசாமி. 
அக்டோபர்  4, 1904 அன்று  பிறந்தார். ஈரோடு மாவட்டத்தில் உள்ள சென்னிமலையில் நாச்சிமுத்து - கருப்பாயி தம்பதியினருக்கு முதல் மகனாகப் பிறந்தார். சிறு வயதிலேயே  குடும்ப சூழ்நிலை காரணமாக பள்ளிப் படிப்பை தொடர இயலவில்லை. 
ஆதலால் கைத்தறி நெசவுத் தொழிலை செய்து வந்தார்.
1923ஆம் ஆண்டு தனது 19வது வயதில், 14 வயது ராமாயியை திருமணம் செய்து கொண்டார். கைத்தறியில் போதிய வருமானம் கிடைக்கப்பெறாததால் ஈங்கூர் என்னும் ஊரில் கந்தசாமி கவுண்டர் நடத்திய பஞ்சு மில்லில் எடைபோடும் பணியில் சேர்ந்தார்.

பிறகு காந்திய சிந்தனையில் தன்னை ஈடுபடுத்தி கொண்ட குமரன், தேசபந்து வாலிபர் சங்கத்தில் உறுப்பினரானார்.

1932 ஆம் ஆண்டு காந்தியை கைது செய்தது ஆங்கிலேய அரசு. இதன்படி காங்கிரஸ் இயக்கமும் தடை செய்யப்பட்டு இருந்தது. ஊர்வலங்கள், போராட்டங்கள், பொது கூட்டங்கள் தடை செய்யப்பட்டிருந்தது. அந்நாட்களில் பாதுகாப்பு சட்டம் என்று ஒன்று இருந்தது. 
இதன்மூலம் ஆங்கிலேய அரசின் ஆதிக்கமும் அடக்குமுறையும் எல்லை மீறியிருந்தது.

இந்த கட்டுபாட்டுகளை  எல்லாம் மீறி 1932ஆம் ஆண்டு ஜனவரி 10ந்தேதி ஓர் ஊர்வலம் நடைபெற்றது.  தியாகி பி.எஸ்.சுந்தரம் அந்த ஊர்வலத்துக்கு தலைமை தாங்கினார். 
இவரது தலைமையில் திருப்பூர் குமரன், இராமன் நாயர், விசுவநாத ஐயர், நாச்சிமுத்து கவுண்டர், அப்புக்குட்டி, நாராயணன், சுப்பராயன், நாச்சிமுத்து செட்டியார், பொங்காளி முதலியார் ஆகியோர் ஊர்வலத்தில் கலந்து கொண்டனர்.  
இந்த ஊர்வலம் திருப்பூர் வீதிகளில் தேசபக்த முழக்கங்களோடு சென்றது.


ஊர்வலம் போலீஸ் நிலையத்திற்கு அருகில் சென்று கொண்டிருந்த போது போலீஸ் நிலையத்திலிருந்து வெளியே வந்த போலீஸ்காரர்கள் ஊர்வலத்தில் ஈடுப்பட்டவர்களை தடியடியுடன் சரமாரியாக தாக்கினர். மண்டைகள் உடைந்தன. கை கால்கள் முறிந்தன.

திருப்பூர் குமரனின் தலையில் விழுந்த அடியால் மண்டை பிளந்தது. ரத்தம் பீறிட்டு கொட்டியது. 
உடல் சரிந்து தரையில் விழுந்தபோதும் அவர் கையில் பிடித்திருந்த பிடி தளரவேயில்லை. 
கையில் பிடித்திருந்த கொடிக்கம்பும் கொடியும் கீழே விழவேயில்லை. போலீஸ்காரர்கள் அவர்கள் அணிந்திருந்த பூட்ஸ் காலால் உதைத்தனர். 
சிலர் உடலின் மீது ஏறி மிதித்தனர். 
சுய நினைவை இழந்த குமரன் அப்போதும் அவரின் பிடி தளரவிடவேவில்லை.

கடைசி அவர் கொடி அவர் கைகளிலேயே இருந்தது.  
படுகாயமடைந்த குமரன் சிகிச்சை பலனின்றி அடுத்த நாள் அதாவது ஜனவரி 11, 1932 அன்று உயிர் நீத்தார். 
அன்று முதல் குமாரசாமியாகவும், திருப்பூர் குமரமாகவும் இருந்த குமரன், "கொடி காத்த குமரன்" என்று அழைக்கப்பட்டார்.

தமிழ்நாடு அரசு திருப்பூர் குமரனின் தியாகத்தைப் போற்றும் வகையில் திருப்பூரில் நினைவகம் ஒன்றை அமைத்துள்ளது.

இந்திய அரசு இவரது நூறாவது பிறந்த நாளைச் சிறப்பிக்கும் வகையில் 2004ஆம் ஆண்டு அக்டோபரில்   அவரின் நினைவாக தபால் தலையை வெளியிடப்பட்டது.
========================================================================================
இஸ்ரோ தலைவராக தமிழக விஞ்ஞானி க.சிவன் நியமனம்!
சென்னை எம்.ஐ.டி. கல்விநிறுவனத்தில் ஏரோநாட்டிக்கல் பாடப்பிரிவில் கடந்த 1980-ல் பட்டம்பெற்ற க.சிவன், கடந்த 2006-ம் ஆண்டில் மும்பை ஐ.ஐ.டி-யில் முனைவர் பட்டத்தைப் பெற்றார். 
இஸ்ரோவின் பி.எஸ்.எல்.வி. ராக்கெட்டின் திட்டமிடுதல் மற்றும் வடிவமைப்புக் குழுவில் கடந்த 1982 இணைந்த சிவன், அந்த ராக்கெட் உருவாக்கத்தில் முக்கியப் பங்காற்றினார். 
இஸ்ரோவின் மிகப்பெரிய விண்வெளி நிலையமாகக் கருதப்படும் திருவனந்தபுரம் விக்ரம் சாராபாய் விண்வெளி நிலைய இயக்குநராகப் பணியாற்றுவதற்கு முன்பாக, நெல்லை மாவட்டம் மகேந்திரகிரியில் உள்ள திரவ இயக்கத் திட்ட மையத்தின் இயக்குநராக சிவன் பணியாற்றினார். 
இஸ்ரோ தலைவராக தமிழகத்தைச் சேர்ந்த ஒருவர் நியமிக்கப்பட்டிருப்பது இதுவே முதல்முறையாகும். 


இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

2025ல் தங்கம் விலை

வினேஷ் போகத் வென்றார்!

முடிவுக்கு வருகிறதா?