வேலைவாய்ப்பு: மோடியின் கட்டுக்கதை
இந்தியப் பொருளாதார வளர்ச்சி மோடியின் ஆட்சியில் சிறப்பாக இருப்பதாக வும், உலகின் மிக வேகமாக வளரும் பொருளாதாரங்களில் ஒன்றாக இந்தியா இருப்பதாகவும் இடைவிடாமல் அரசுத் தரப்பிலும் பாஜகவினரும் கூறினாலும், வேலைவாய்ப்பு உருவாக்கம் என்பது சிறிதும் இல்லை என்ற உண்மை தொடர்ந்து வெளிச்சத்திற்கு வந்த வண்ணம் உள்ளது.
இந்தியப் பொருளாதார வளர்ச்சியை வெளிக்காட்ட பல்வேறு ஆய்வுகள் முன்வை க்கப்படுவது போலவே, வேலைவாய்ப்பு உருவாக்கத்தில் இந்தியா பாதாளத்தை நோக்கியே வளர்கிறது என்ற உண்மையை வெளிக்காட்டவும் ஆய்வுகள் இருக்கின்றன.
2009-10 முதல் 2015-16 வரையிலான ஏழு ஆண்டுகளில் தொழிலாளர் பணியகம் ஐந்து ஆய்வுகளை மேற்கொண்டது.
அதில் ஆண்டு வாரியாக வேலைவாய்ப்பு உருவாக்கம் அல்லது வேலைவாய்ப்பின்மை குறித்த முழுமையான விவரங்கள் இல்லாவிட்டாலும் குறிப்பிட்ட சில தருணங்களுக்கான விவரங்கள் கிடைக்கப் பெற்றுள்ளன.
2008ஆம் ஆண்டில் சர்வதேசப் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டதைத் தொடர்ந்த 2009ஆம் ஆண்டில் வேலைவாய்ப்பு உருவாக்கம் மந்தமாகவே இருந்தது.
அதன்பின்னர் 2014-15ஆம் ஆண்டில் ஆட்சி மாற்றத்தின் போதும் வேலைவாய்ப்பு உருவாக்கத்தில் சில மாற்றங்கள் இருந்தன.
மேற்கூறிய ஏழு ஆண்டுகளிலும் வேலைவாய்ப்பு உரு வாக்கம் என்பது சமச்சீரற்றே இருந்துள்ளது.
2009-10ல் வேலைவாய்ப்பு உருவாக்கம் 38.19 கோடியாக இருந்து, 2011-12ல் 42.93 கோடியாக உயர்ந்துள்ளது. எனில் ஆண்டுக்கு 6.1 சதவிகித உயர்வு ஏற்பட்டுள்ளது.
இக்காலகட்டத்தில் இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி ஆண்டுக்கு 7.8 சதவிகிதமாக இருந்தது.
அதேநேரம் 15 வயதுக்கு மேற்பட்ட இந்தியர்களின் மக்கள்தொகை பெருக்கம்அந்த அளவுக்கு வளர்ச்சி பெற்றிருக்க வில்லை என்பது ஆய்வில் தெரியவந்துள் ளது.
2009-10 முதல் 2011-12 வரையிலான ஆண்டுகளில் வேலைவாய்ப்பு உருவாக்கம்ஓரளவு வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது எனக் கொள்ளலாம்.
ஆனால் அந்தவேலை வாய்ப்புகளால் எப்படிப்பட்ட பலன் கிடைத்தது, நிரந்தரத்திற்கு பதிலாக ஒப்பந்தக்கூலிகள் அதிகரிப்பு என்ற நிலை ஏற்பட்டது தனிக்கதை.ஆனால், இந்த வளர்ச்சியானது 2011-12ஆம் ஆண்டில் சரிவைச் சந்திக்கத் தொடங்கியது.
2011-12 முதல் 2013-14 வரையிலான காலகட்டத்தில் இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி ஆண்டுக்கு 5.9 சதவிகிதம்வளர்ச்சியடைந்துள்ளது.
ஆனால், இதே காலகட்டத்தில் வேலைவாய்ப்பு உருவாக்கம் வெறும் 1.5 சதவிகித வளர்ச்சியை மட்டுமே பதிவுசெய்துள்ளது. மேலும், மக்கள்தொகை பெருக்கமும் 4.6 சதவிகிதம் உயர்ந்துள்ளது.
இரண்டு ஆண்டுகளில் வேலைவாய்ப்பு உருவாக்கத்தில் ஏற்பட்ட வளர்ச்சி இவ்வாறு திடீரெனச் சரிவைச் சந்தித்திருக்கிறது.
காணாமல் போன ‘வளர்ச்சி’2013-14 முதல் 2015-16 வரையிலான ஆண்டுகளிலும் வேலைவாய்ப்பு உருவாக்கம் சரிவையே சந்தித்துள்ளது.
உள்நாட்டு உற்பத்தி 7.8 சதவிகித வளர்ச்சியில் இருக்கும்போது, வேலைவாய்ப்பு உரு வாக்கம் வெறும் 0.2 சதவிகிதம் மட்டுமே வளர்ச்சி கண்டிருக்கிறது.
எனவே 2013-14 முதல் 2015-16 வரையிலான ஆண்டுக்கான வளர்ச்சி என்பது வேலைவாய்ப்பு உரு வாக்கம் இல்லாத வளர்ச்சியாகவே இருந்துள்ளது.
2009-12ஆம் ஆண்டுகளில் இருந்த வளர்ச்சி 2013-16ஆம் ஆண்டுகளில் காணாமல்போனது என்பதே உண்மை.குடும்பங்களில் ஆய்வுஇந்தியப் பொருளாதாரக் கண்காணிப்பு மையம் சார்பாக வேலைவாய்ப்பு உருவாக்கம் மற்றும் வேலைவாய்ப்பின்மை தொடர்பான ஆய்வு இந்தியக் குடும்பங்களைச் சார்ந்து மேற்கொள்ளப்பட்டது.
2016 ஜனவரி யில் தொடங்கிய இந்த ஆய்வுக்கு இந்தியாவின் 1,68,000 குடும்பங்கள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டன. ஒவ்வொரு நான்கு மாதங்களுக்கு ஒருமுறை மேற்கொள்ளப்படும் இந்த ஆய்வில்2016ஆம் ஆண்டில் மொத்த வேலைவாய்ப்பு உருவாக்கம் 40.08 கோடியிலிருந்து 40.65 கோடியாக உயர்ந்திருந்தது.
ஆனால், 2017ஆம் ஆண்டில் அது 40.50 கோடியாகக் குறைந்தது.2016ஆம் ஆண்டின் குறுவைப் பருவத்தில் பருவமழை சிறப்பாக இருந்ததால் வேலை வாய்ப்பு உருவாக்கம் அதிகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், பணமதிப்பு நீக்கம் என்னும் மத்திய அரசின்நடவடிக்கை வேலைவாய்ப்பு உருவாக்கத்து க்கும் முட்டுக்கட்டையாக அமைந்தது.
ஆனால், மோடி அரசின் தரப்பிலிருந்து வேலைவாய்ப்பு உருவாக்கத்தை மட்டுமே குறிக்கோளாகக்கொண்டு அரசு செயல்பட்டு வருவதாக முழங்கப்பட்டு வருகிறது.
2016-17ஆம் நிதியாண்டில் இந்தியாவின் அமைப்பு சார்ந்த துறைகளில் மட்டும் 4 லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளதாகத் தொழிலாளர் துறை அமைச்சகம் கூறுகிறது.
இதுகுறித்து தொழிலாளர் துறை அமைச்சகம் வெளியிட்டிருந்த அறிக்கையில், ‘2016-17ஆம் நிதியாண்டில் இந்தியாவின் அமைப்பு சார்ந்த துறைகள் ஒரு நாளைக்கு 1,100 பணியிடங்கள் வரை உருவாக்கப்பட்டுள்ளது.
மொத்தமாக 4.16 லட்சம் பணியிடங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. 2015-16ஆம் நிதியாண்டை ஒப்பிடும்போது 2016-17ஆம் நிதியாண்டில் வேலைவாய்ப்பு உருவாக்கம் அமைப்பு சார்ந்த துறைகளில் 2 சதவிகிதம் அதிகரித்துள்ளது.
அமைப்பு சார்ந்த துறைகளில் 2016-17ஆம் நிதியாண்டில் முதல் மூன்று காலாண்டுகளில் உருவாக்கப்பட்ட வேலைவாய்ப்புகளை விட பணமதிப்பு நீக்கத்திற்குப் பிறகான இறுதிக் காலாண்டில் (ஜனவரி - மார்ச்) வேலைவாய்ப்பு உருவாக்கம் அதிகமாக இருந்தது.
அதாவது 2016-17ஆம் நிதியாண்டில் உருவாக்கப்பட்ட வேலைவாய்ப்புகளில் 45 சதவிகிதம் அளவு ஜனவரி - மார்ச் வரையிலான காலத்தில்தான் உருவாக்கப்பட்டுள்ளது. ஒவ்வோர் ஆண்டும் இந்தியா 8 லட்சம் பேருக்குப் புதிதாக வேலைவாய்ப்பு அளித்துவருகிறது.
58.5 மில்லியன் பணிகளில் வெறும் 1.4சதவிகிதம் மட்டும்தான் அமைப்பு சார்ந்த பணிகள் என்று மக்கள் தொகை கணக்கெடுப்புகூறுகிறது.
4.16 லட்சம் பணியிடங்களில் கிட்டத்தட்ட பாதி உற்பத்தித் துறையில்தான் உருவாக்கப்பட்டுள்ளது. கல்வி மற்றும் சுகாதாரத் துறையில் 32 சதவிகிதம் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன” என்று விரிவாக தெரிவித்திருந்தது.ஆனால் மேற்கண்ட அறிக்கையின் விபரங்கள், மக்களின் உண்மை வாழ்வில், உண்மை வருமானத்தில் சாதகமான எந்தத் தாக்கத்தையும் ஏற்படத்தவில்லை.
நாட்டின் ஒட்டுமொத்த வேலைவாய்ப்பு உருவாக்கம் என்பது பின்தங்கியே இருக்கிறது. பணமதிப்பு நீக்கம், அதைத் தொடர்ந்து ஜிஎஸ்டி என, பல்வேறு காரணிகள் தொடர்ந்து தடைகளாகவே வேலைவாய்ப்பு உருவாக்கத்துக்கு அமைந்துள்ளன.
இந்த விபரங்களை வெளியிட்டுள்ள ‘லைவ் மின்ட்’ ஏடு, வேலைவாய்ப்புகள் குறைந்துமக்களின் வாழ்வாதாரம் மேம்படாதபோது இந்தியப் பொருளாதாரம் வேகமாக வளர்ந்துகொண்டிருக்கிறது என்று மார் தட்டிக்கொண்டிருப்பது வேடிக்கையாகவே இருக்கிறது எனச் சாடியுள்ளது.
காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் வேலைவாய்ப்பு உருவாக்கப்படவில்லை என்று குறைகூறிவந்த பாஜக, பின் தானே ஆட்சிக்கு வந்தபிறகு போதிய வேலைவாய்ப்புகளை உரு வாக்கியுள்ளதா என்றால் இல்லை.
அதிகாரம் கையில் இருக்கும்போது வேலைவாய்ப்பை உருவாக்கத் தவறிய இவ்வரசு இனி மார் தட்டுவதை விடுத்து மவுனம் காப்பது சிறந்தது என்றும் கூறியுள்ளது.
=====================================================================================
நான் வெறும் காவி இல்லை, ?மார்ச் 20, 2017ம் ஆண்டு யோகி ஆதித்யநாத் உ.பி. முதல்வராக பதவியேற்ற பின், இதுவரை அங்கு நடத்தப்பட்ட என்கவுண்டர்களின் எண்ணிக்கை 921.
அதில், 29 என்கவுண்டர்களில் 30 குற்றவாளிகளும், வெவ்வேறு என்கவுண்டர்களில் 3 போலீசாரும் கொல்லப்பட்டுள்ளனர்.
நவம்பர் 22, தேசிய மனித உரிமைகள் ஆணையம், என்கவுண்டர்கள் குறித்து பதிலளிக்க வேண்டும் என்று, அம்மாநில அரசுக்கு நோட்டீஸ் அனுப்பி இருந்தது.
மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ் அனுப்பிய பின்னரும் அடுத்த ஒன்றரை மாதத்தில் புத்தாண்டு அன்று மட்டும் மூன்று என்கவுண்டர்கள் உட்பட,எட்டு என்கவுண்டர்கள் நடத்தப்பட்டுள்ளது.
இதில் 8 தேடப்பட்ட குற்றவாளிகள் சுட்டுக் கொல்லப்பட, ஒருகாவலரும் உயிரிழந்துள்ளனர்.
ஆனால் உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத் அரசோ “இதுவரை தேசிய மனித உரிமைகள் ஆணையத்திடம் இருந்து நோட்டீஸ் எதுவும் வரவில்லை” என்று தெரிவித்துள்ளது.
=======================================================================================
இன்று,
ஜனவரி-12.- விவேகானந்தர் பிறப்பு (1863)
- இந்திய இளைஞர் தினம்
- நடிகர் எம்ஜிஆரை எம்.ஆர்.ராதா சுட்டார் (1967)
- முன்னாள் அமைசசர் இரா.நெடுஞ்செழியன் மரணம் (2000)
- சவூதி அரேபியாவில் மினா நகரில் சாத்தான் மீது கல்லெறியும் நிகழ்ச்சியின் போது இடம்பெற்ற நெரிசலில் சிக்கி 44 இந்தியர்கள் உட்பட 362 பேர் உயிரிழந்தனர்.(2006 )
- எயிட்டி நில நடுக்கம் 1,00,000 பேர்கள் பலி.(2010)
=======================================================================================
முடி வளர்ச்சியைத் தூண்ட
கடுகு எண்ணெய்
ஒரு பாத்திரத்தில் ஒரு கப் கடுகு எண்ணெயை ஊற்றி சூடேற்றி, அதில் 4 டேபிள் ஸ்பூன் மருதாணி இலைகளை சேர்த்து ஒரு கொதி விட்டு இறக்கி குளிர வைக்க வேண்டும். பின் அந்த எண்ணெயை வடிகட்டி பாட்டிலில் ஊற்றி வைத்து, தினமும் தலையில் தடவி வந்தால், சில வாரங்களில் சொட்டையான இடத்தில் முடியின் வளர்ச்சியைக் காணலாம்.
வெங்காய கூழ்.
வழுக்கைத் தலைக்கு வெங்காயம் சிறப்பான பலனைத் தரும். அதற்கு சொட்டையான இடத்தில் வெங்காயத்தை அரைத்து பேஸ்ட் செய்து தடவி சிறிது நேரம் கழித்து அவ்விடத்தில் தேனை தடவ வேண்டும். இப்படி அடிக்கடி செய்தால், வெங்காயத்தில் உள்ள சல்பர் ஸ்கால்ப்பில் இரத்த ஓட்டத்தை தூண்டி, முடியின் வளர்ச்சிக்கு உதவும்.
முட்டை மஞ்சள் கரு
ஒரு முட்டையின் மஞ்சள் கருவுடன் சிறிது தேன் சேர்த்து கலந்து, ஸ்கால்ப் மற்றும் முடியில் தடவி, குறைந்தது 30 நிமிடம் ஊற வைத்து, பின் மைல்டு ஷாம்பு பயன்படுத்தி தலைமுடியை அலச வேண்டும். இப்படி வாரத்திற்கு 1 முறை செய்து வர, சொட்டையில் முடி வளர்வதைக் காணலாம்.
தயிர்
2 டேபிள் ஸ்பூன் தயிருடன், 2 டேபிள் ஸ்பூன் கடலை மாவு மற்றும் 1 டேபிள் ஸ்பூன் எலுமிச்சை சாறு சேர்த்து கலந்து பேஸ்ட் செய்து, ஸ்கால்ப் மற்றும் முடியில் தடவி 1 மணிநேரம் ஊற வைத்து, பின் நீரில் அலசுங்கள். இதன் மூலமும் மயிர்கால்களின் வளர்ச்சி தூண்டப்படும்.
வெந்தயப் பூச்சு
வெந்தயத்தை நீரில் ஊற வைத்து அரைத்து, தலையில் தடவி 40 நிமிடம் ஊற வைத்து பின் குளிர்ந்த நீரில் அலச வேண்டும். அதன் பின் தலையை கடுமையாக மசாஜ் செய்ய வேண்டும். இந்த சிகிச்சையை வாரத்திற்கு 2 முறை என ஒரு மாதம் தொடர்ந்து செய்து வந்தால், தலைமுடி நன்கு வளர்ச்சி பெறும்.
சீகைக்காய்
நெல்லிக்காய், பூந்திக்கொட்டை மற்றும் சீகைக்காயை 2 லிட்டர் நீரில் போட்டு, பாதியாகும் வரை கொதிக்க வைக்க வேண்டும். பின் அந்நீரில் தேங்காய் எண்ணெய் அல்லது கற்றாழை ஜெல் சேர்த்து கலந்து, ஸ்கால்ப்பில் படும்படி மசாஜ் செய்து, 1/2 மணிநேரம் ஊற வைத்து அலச வேண்டும். இப்படி வாரத்திற்கு 3 முறை செய்து வர நல்ல பலன் கிடைக்கும்.