சனி, 6 ஜனவரி, 2018

வட மாநிலக் கலவரங்கள் எதற்காக?


மராட்டியத்தில் புனேயில் ஆரம்பித்து மாநிலம் முழுக்க பரவி,தற்போது குஜராத் மற்றும் பக்கத்து மாநிலங்களில் பரவி வரும் கலவரம் திட்டமிட்ட இந்துத்துவா வெறியர்களால் ஆரம்பிக்கபப்ட்டது.
கிட்டத்தட்ட கீழ் வெண்மணி போல் நடந்த சமபவத்திற்கு அஞ்சலி செலுத்தும் ஆண்டுதோறும் நடக்கும் இந்த தினத்தை இந்த ஆண்டு மட்டும் கலவரமாக மாற்றக் காரணம் உண்டு.
நாடு முழுக்க மழுங்கி வரும் பாஜக ,ஆர்.எஸ்.எஸ்,செல்வாக்கை பாமர மக்களிடம் தூக்கி நிறுத்தவே என்றுமில்லா அளவு கலவரத்தை தூண்டியுள்ளனர்,என்றே சந்தேகிக்க தோன்றுகிறது.


மஹாராஷ்டிரா மாநிலத்தின் புனே வட்டாரத்தில் பீமா ஆற்றின் கரையில் அமைந்துள்ள கோரிகாவுன் கிராமத்தில் 1818 ஜனவரி 1ல் நடந்த, மூன்றாம் ஆங்கிலோ மராத்தா போரின் ஒரு இறுதிச் சண்டையில், அன்றைய பேஷ்வா படையை முறியடித்த கிழக்கிந்திய கம்பெனி படையின் மஹர் வீரர்களின் வெற்றியை ஆண்டுதோறும் தலித் மக்கள் நினைவுகூர்ந்து கொண்டாடி வருகிறார்கள். 

அந்தச் சண்டை துவங்கியது தொடர்பான வேறு சில முக்கியத் தகவல்களும் கிடைத்துள்ளன.

முதலில், கிழக்கிந்திய கம்பெனி என்பது பிரிட்டிஷ் அரசின் முகமை என்று சொல்வது தவறு.

கிழக்கிந்திய கம்பெனி பிரிட்டனிலிருந்து வந்த, முழுக்க முழுக்க ஒரு தனியார் வணிக நிறுவனம். படைப்பலத்தோடும் வந்தஅந்த நிறுவனம்தான் இந்திய மன்னர்களை வளைத்துப் போட்டும், அடக்கி வைத்தும் ஒரு பேரரசை இங்கே அமைத்தது. 

பிற்காலத்தில்தான் பிரிட்டிஷ் அரசே, கம்பெனியின் கீழிருந்த பகுதிகளைத் தன் வசம் எடுத்துக்கொண்டது. இதனைச் சுட்டிக்காட்டிய தோழர்களுக்கு நன்றி.
பேஷ்வா ஆட்சி என்பது பிராமண சமூகத்தைச் சேர்ந்தமன்னராட்சிதான். 

அவர்களது படைப் பிரிவுகளில்ஆங்காங்கே மஹர் சமூகத்தினரும் இருந்திருக்கிறார்கள். 
பேஷ்வா மன்னர் முதலாம் பாஜி ராவ் 1740ல் மரணமடைந்ததைத் தொடர்ந்து, நாட்டிற்கு உள்ளேயும் படைப்பிரிவுகளிலும் மஹர் மக்கள் பல்வேறு அவமதிப்புகளைக் கூடுதலாகச் சந்திக்கத் தொடங்கினார்கள்.

கிழக்கிந்திய கம்பெனி நிர்வாகத்தால் தோற்கடிக்கப்பட்டிருந்த பேஷ்வா உள்ளிட்ட மன்னர்கள் தங்களுக்கிடையே கூட்டமைப்புகளை ஏற்படுத்திக்கொண்டு, ஆட்சியைக் கைப்பற்றப் போர்களில் ஈடுபட்டுவந்தார்கள். 

கம்பெனி நிர்வாகம் அவர்களுக்கு கான்ஃபெடரசி (சட்டவிரோத நோக்கங்களுக்கான கூட்டமைப்பு) என்று பெயரிட்டிருந்தது. அவற்றில் ஒன்றுதான் பேஷ்வா கான்ஃபெடரசி. 
அதன் தலைமையில் இருந்தவர் இரண்டாம் பாஜி ராவ்.கம்பெனி படைகளை முறியடித்து விரட்டும் போரில்தாங்களும் இணைய விரும்பி, பேஷ்வா படையில் தங்களைச் சேர்த்துக்கொள்ளக் கோரினார்கள் மஹர்இளைஞர்கள். 

ஆனால், சாதிய ஆதிக்கப் புத்தியோடும்மமதையோடும் அவமதிக்கப்பட்டுத் திருப்பியனுப்பப்பட்டார்கள். அதனால் ஏற்பட்ட மனக் கொந்தளிப்போடுதான் அவர்கள் கம்பெனிப் படையை நாடினார்கள். நிர்வாகம் உடனே அவர்களைப் படையில் சேர்த்துக்கொண்டது.

இரண்டாம் பாஜி ராவின் பேஷ்வா படையில் அப்போது சுமார் 28,000 பேர் இருந்தார்கள். 12 அதிகாரிகளுடன் இருந்த கம்பெனியின் படையிலோ, காலாட்படையினர் 834பேர்தான்.
அவர்களில் கிட்டத்தட்ட 500 பேர் மஹர்கள்.

அந்தச் சிறிய படைதான் பேஷ்வாவின் பெரும்படையை வீழ்த்தி, கோரிகாவுன் கிராமத்தை மீட்டது.இப்படிப்பட்ட வரலாறுகள் அனைத்தும் பிராமணியக் கண்ணோட்டத்துடனும் உயர்சாதி என்று சொல்லிக்கொள்ளும் இதர பிரிவுகளைச் சேர்ந்தோரது பங்களிப்புமாகவே சித்தரிக்கப்பட்டு வந்திருக்கிறது. 


மஹாராஷ்டிராவைப் பொறுத்தவரையில், முஸ்லிம் மக்களுக்கு எதிரான இந்துத்துவா அரசியலைப் பின்னுகிற வேலையும் நடந்து வந்திருக்கிறது.1927 ஜனவரி 1ல் டாக்டர் அம்பேத்கர் கோரிகாவுனுக்குச் சென்று, அங்கு நிறுவப்பட்டிருந்த வெற்றித்தூண் முன்பாக நின்று, மஹர் வீரர்களுக்கு அஞ்சலிசெலுத்திய பிறகுதான், அதுவரையில் அடிமைப்பட்டவர்களாக மட்டுமே காணப்பட்டவர்களின் மகத்தான வீரமும் தியாகமும் வெளி உலகத்திற்குத் தெரிய வந்தது.

2005ல் பீமா கோரிகாவுன் ரன்ஸ்தம்ப் சேவா சங் (பீகேஆர்எஸ்எஸ்) என்ற அமைப்பு, இதை நினைவுகூர்ந்து பரப்பிடும் நோக்கத்துடன் ஏற்படுத்தப்பட்டது. நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் லட்சக்கணக்கானோர் கோரிகாவுனில் கூடி அஞ்சலி செலுத்திவிட்டு, தலித் சுயமரியாதையை நிலைநாட்ட உறுதியேற்றுத் திரும்புகிறார்கள். 

ராணுவத்தில் பணியாற்றி ஓய்வு பெற்ற தலித்வீரர்கள், அதிகாரிகள் ஆகியோரும் அஞ்சலி நிகழ்ச்சியில் பங்கேற்கிறார்கள்.இருநூறாவது ஆண்டு என்பதையொட்டி இவ்வாண்டுஎல்கார் பரிஷத் (போர்க்குரல் விழா) கொண்டாட ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இதை சில பிராமணிய அமைப்புகள் உள்ளிட்ட இந்துத்துவா கும்பல்களால் சகித்துக்கொள்ள முடியவில்லை. 

தலித் மக்களின் ஒருமைப்பாடு பிராமணியத்திற்கு எதிராக மட்டுமல்லாமல், இந்துத்துவா சித்தாந்தத்திற்கு எதிராகவும் அணி திரண்டு வருவது ஒரு முக்கிய நிகழ்ச்சிப்போக்கு, குஜராத்தின் உனா எழுச்சி இதற்கொரு மைய விசையாக இருக்கிறது என்று வரலாற்றாய்வாளர்கள் குறிப்பிடுகிறார்கள்.
                                                                                                                                                                                                     -அ.குமரேசன்
இது பற்றிய ‘கோரிகாவுனில் அணையா நெருப்பு’ கட்டுரை  ‘தீக்கதிர்’ கட்டுரை கீழே.
அக்கட்டுரையை படிப்பது  உங்களுக்கு இக்கலவரம் தொடர்பாக புரிதலை உண்டாக்கும்.
---------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
திணிக்கப்பட்டதுதான்  இந்த  வேலை நிறுத்தம் !

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழக தொழிலாளர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த வேலை நிறுத்தத்திற்குதமிழக அதிமுக அரசுதான் பொறுப்பேற்கவேண்டும். 

இந்த வேலைநிறுத்தம் தொழிலாளர்கள் மீது திணிக்கப்பட்டஒன்று. வேறு வழியில்லாத நிலையில்தான் தொழிலாளர்கள் ஒன்றுபட்ட போராட்டத்தை வெற்றிகரமாக நடத்தி வருகின்றனர்.இந்த வேலைநிறுத்தம் காரணமாக பஸ்பயணிகளுக்கு சிரமம் ஏற்பட்டுள்ளது. உண்மைதான். 

ஆனால் இதற்கு காரணம் தொழிலாளர்களை பொறுப்பாக்குவது எந்த வகையிலும் நியாயம் அல்ல. 
அரசு ஊழியர்,ஆசிரியர் போராட்டத்தின் போதும், செவிலியர் போராட்டத்தின் போது பொதுநல மனுக்களின் அடிப்படையில் நீதிமன்றங்கள் தலையிட்டன. உடனடியாக பணிக்கு திரும்ப வேண்டும் என்று போராட்டக்காரர்களுக்கு கெடு விதித்தன. 

போராடும் ஊழியர்களின் நியாயத்தை நீதிமன்றங்கள் கணக்கில் எடுத்துக்கொள்ளவில்லை என்பதையே இவைஎடுத்துக்காட்டின.
இந்த நிலையில் வேலைநிறுத்தத்தில் ஈடுபடும் போக்குவரத்து தொழிலாளகள் மீது நடவடிக்கை எடுக்கலாம் என்று சென்னை உயர்நீதிமன்றம் கூறியிருப்பது ஏற்கத்தக்கதல்ல. சுமூகமான தீர்வு காண வேண்டும் என்று அரசுக்கு நீதிமன்றம் வலியுறுத்தியுள்ளது. 

ஆனால்நீதிமன்றங்கள் கடந்த காலத்தில் பலமுறை உத்தரவிட்டபோதும், மாநில அரசு கண்டுகொள்ளாமல் இருந்தது ஏன் என்பது குறித்து நீதிமன்றம் கேள்வி எழுப்பியிருக்க வேண்டும்.

அரசு போக்குவரத்துக் கழக ஊழியர்களின் ஊதிய உயர்வு மற்றும் ஓய்வூதியர்களுக்கு கிடைக்க வேண்டிய பயன்கள் மறுக்கப்படுவது குறித்து கடந்த 16 மாதங்களில் 21 முறை பேச்சுவார்த்தை நடைபெற்றுள்ளது. 


ஆனால் அரசின் பிடிவாதம் காரணமாக பேச்சுவார்த்தை வெற்றி பெறவில்லை. போக்குக்காட்டி தொழிலாளர்களை ஏமாற்றுவதே அரசின் நோக்கமாக இருந்தது. 

இந்தநிலையில்தான் போக்குவரத்துத் தொழிலாளர்கள் ஒன்றுபட்ட, காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.
ஆளுங்கட்சி தொழிற்சங்கத்தினரை பயன்படுத்தி வேலைநிறுத்தத்தை முறியடித்துவிடலாம் என்ற மாநில அரசின் முயற்சிகள் படுதோல்வியடைந்துள்ளன. ஒரு மாநில அரசாங்கமே இத்தகைய கருங்காலித்தனத்தை ஊக்குவிக்க முயல்வது அவக்கேடானது. 

இந்த வேலைநிறுத்தம் காரணமாக பொதுமக்களுக்கு ஏற்பட்டுள்ள சிரமத்தையும், தொழிலாளர்கள் தொடர்ச்சியாக வஞ்சிக்கப்பட்டு வந்துள்ளதையும் கருத்தில் கொண்டு தொழிற்சங்கங்களுடன் பேச்சு வார்த்தை நடத்தி வேலைநிறுத்தத்தை உடனடியாக மாநில அரசு முடிவுக்குகொண்டு வரவேண்டும். இதுதான் மக்களுக்கு நல்ல அரசு  செய்கிற நன்மையாக இருக்கும் . 
ஒரு மக்களுக்கான அரசு முன் இருக்கும் , செய்கிற கடமையும் அதுதான்.

=======================================================================================
ன்று,
டிசம்பர்-06.
சாமுவேல் மோர்ஸ்


  • சாமுவேல் மோர்ஸ், மின்னியல் தொலைத் தந்தியை முதன் முறையாக வெற்றிகரமாக சோதனை செய்தார்(1838)

  • மெக்சிகோ, அமெரிக்காவின் 47வது மாநிலமானது(1912)

  • ஈராக் ராணுவம் உருவாக்கப்பட்டது(1921)

  • கலாஷேத்திரா, சென்னையில் ஆரம்பிக்கப்பட்டது(1936)
========================================================================================


"திருடன் கொடுத்த பிச்சை" தொடர்பாக என் மீது கொடுக்கப்பட்டுள்ள புகார்களை சட்ட ரீதியில் எதிர்கொள்ள தயார்"
-கமல் ஹாசன் .
சென்னை விமான நிலையம்பேட்டி.
------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
கோரிகாவுனில் அணையாத நெருப்பு!
200 ஆண்டுகள் ஓடிவிட்டன. 
இன்னமும் நிலைமையில் மாற்றமில்லை, அந்த மாற்றம் எளிதில்லை என்பதைக் காட்டுவதாக கோரிகாவுன் வன்முறைகள் நிகழ்த்தப்பட்டுள்ளன. 
சாதாரணமாகக் கவனத்துக்கு வராத, மராத்திய மாநிலத்தின் கோரிகாவுன் என்ற சிறிய கிராமம், புத்தாண்டு நாளன்று கட்டவிழ்த்துவிடப்பட்ட வன்முறையால் நாடு முழுக்கச் செய்தியாகியுள்ளது. அந்தக் கிராமத்தில் கூடிய தலித் மக்கள்மீது தொடுக்கப்பட்ட தாக்குதலில் ஓர் இளைஞர் பலியாக, மாநிலம் தழுவிய கடையடைப்பு, வாகனங்கள் நிறுத்தம், வேலை நிறுத்தம் உள்ளிட்ட கண்டனப் போராட்டங்கள் நிகழ்ந்துள்ளன. 
தலைநகர் தில்லியிலும் கண்டனம் எதிரொலிக்க, அங்குள்ள மராத்தா சதன் (மாநில அரசு இல்லம்) பகுதியில் பாதுகாப்பு வலுப்படுத்தப்பட்டுள்ளது. 
நாடாளுமன்றத்திலும் எதிர்ப்புக்குரல்கள் எழுந்துள்ளன.
கோரிகாவுன் சொல்லும் செய்தி என்ன?மகாராஷ்டிரா மாநிலத்தின் புனே நகரத்துக்கு அருகில் இருக்கிற கிராமம் கோரிகாவுன். 
பீமா ஆற்றின்கரையில் இருப்பதால் அதற்கு பீமா கோரிகாவுன் என்று பெயர். கோரிகாவுன் பீமா என்றும் குறிப்பிடப்படுவதுண்டு. பொதுவாகப் பலரும் அறிந்திராத அந்தக் கிராமம் கடந்த 90 ஆண்டுகளாக, இந்தியாவின் சாதி அடுக்கில் அடித்தட்டில் தள்ளப்பட்டுள்ள தலித் மக்களுக்குப் பெருமிதமும் நம்பிக்கையும் ஊக்கமும் அளிக்கும் அடையாளச் சின்னமாக விளங்கிவருகிறது.
 200 ஆண்டுகளுக்கு முன் புத்தாண்டுப் பிறப்பு நாளில் அங்கே முடிவடைந்த ஒரு சண்டையில் பங்கேற்று வெற்றி பெற்ற வீரர்களைப் போற்றி நினைவுகூர்வதற்காகவும் அஞ்சலி செலுத்துவதற்காகவும் ஆண்டுதோறும் புத்தாண்டு நாளன்று அங்கே கூடுகிறார்கள் தலித் மக்கள்.
யாருக்கு எதிரான வெற்றி?“வென்றார்கள் என்பது உண்மை. 

ஆனால், நாட்டை அடிமைப்படுத்தியிருந்த பிரிட்டிஷ் ஆட்சியின் படையாட்களாக அல்லவா அவர்கள் அந்தக் கிராமத்தை முற்றுகையிட்டார்கள், அதைக் கொண்டாடலாமா?” என்று அஞ்சலி எதிர்ப்பாளர்கள் கேட்கிறார்கள். 
பின்னணிஎன்ன?உலக நாடுகள் பலவற்றையும் தன் பிடியில் வைத்திருந்த, சூரியன் மறையாத சாம்ராஜ்ஜியம் என்றஅடைமொழியைப் பெற்றிருந்த பிரிட்டிஷ் அரசின் நிர்வாகஅதிகார முகமையான கிழக்கிந்திய கம்பெனி இந்தியத்துணைக்கண்டத்தின் பல பகுதிகளை அடக்கி ஆண்டது. கம்பெனியிடமிருந்து மறுபடியும் அந்தப் பகுதிகளைகைப்பற்றுவதற்காக, அதற்கு முன் தோற்கடிக்கப்பட்டிருந்த மன்னர்களும் அவர்களது ஆதரவாளர்களும் சிறு சிறு படைகளை அமைத்துப் போரிட்டு வந்தார்கள்.
அவ்வாறு கலகம் செய்த குழுக்களுக்குக் கம்பெனியார் சூட்டிய பெயர் கான்ஃபெடரசி - அதாவது சதிக்கும்பல்.பிரிட்டிஷ்காரர்கள் மட்டுமல்லாமல், அடிமைப்படுத்தப்பட்டிருந்த பல்வேறு நாடுகளிலிருந்து சேர்க்கப்பட்டிருந்தவர்களும், இந்தியப் பகுதிகளிலிருந்து வேலைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டவர்களும் இணைந்து பெரும் எண்ணிக்கையோடு இருந்த கம்பெனியாரின் படை பலம், அவர்களிடமிருந்த அன்றைய காலத்திய நவீன ஆயுதங்கள் உள்ளிட்ட காரணங்களால் மன்னர்கள் அந்தப்போர்களிலும் தோற்கடிக்கப்பட்டார்கள். 

பிற்காலத்தில்தான், குறிப்பாகச் சொல்வதானால் சிப்பாய்க் கலகம்என்று பெயரிடப்பட்ட 1857இன் படைவீரர் கிளர்ச்சி, வேலூர்கோட்டையை அதிர வைத்த படை வீரர்கள் எழுச்சி உள்ளிட்ட முன்னுரைகளுக்குப் பிறகுதான், இந்திய விடுதலைப் போராட்டம் உருவெடுத்தது. 

மறுபடி மன்னர்களிடம் ஆட்சியை ஒப்படைப்பதற்காக அல்லாமல், முன்பு அவர்களிடம் அடிமைப்பட்டுக் கிடந்த பகுதிகள் அனைத்தையும் ஒன்றுபடுத்தி அடிமைப்படுத்திய பிரிட்டிஷ் ஆட்சியை வெளியேற்றுவதற்கான போராட்டமாக அது பரிணமித்தது.மராத்தா வட்டாரத்தில், பத்தொன்பதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில், புனேயின் பேஷ்வா, குவாலியர் அரசின்சிந்தியா, இந்தூர் அரசின் ஹோல்கார், பரோடாவின் கெய்க்வாட், நாக்பூரின் போன்ஸ்லே ஆகிய மன்னர்களுக்கிடையே வரி வசூலிலும், கப்பம் கட்டுவதிலும் மோதல்கள் இருந்துவந்தன.

 பூனைகளின் அப்பச் சண்டையில் குறுக்கிட்டுப் பஞ்சாயத்து செய்தது பிரிட்டிஷ் பேரரசுக்குரங்கு. 
அந்தப் பகுதிகள் கம்பெனி நிர்வாக வட்டாரங்களாக மாற்றப்பட்டன. பேஷ்வா மன்னன் இரண்டாம் பாஜிராவ், கம்பெனியாருடன் ஓர் உடன்பாட்டில் கையெழுத்திட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. பெயருக்குமன்னனாக வலம் வரலாமேயன்றி வரி வருவாய் உள்ளிட்டஅதிகாரங்களெல்லாம் கம்பெனி நிர்வாகத்திற்கே.
1817 நவம்பரில் அதை எதிர்த்துக் கிளம்பிய பாஜிராவ் தோற்கடிக்கப்பட்டார்.
மன்னருக்காகவும் அவர்களதுஆளுமைக்காகவும் ஆயுதமேந்திய படையின் ஒரு பிரிவுதான் பேஷ்வா குழு. மராத்தா கான்ஃபெடரசி (மராத்திய சதிக்கும்பல்) என்று கம்பெனியாரால் பெயரிடப்பட்டிருந்த படை அது. அவர்களை ஒடுக்குவதற்கு அனுப்பப்பட்ட படையானது, ஆட்களின் எண்ணிக்கை, நவீன ஆயுதங்கள் இரண்டிலுமே கூடுதல் வலிமையோடு இருந்தது. 
பேஷ்வா படை முறியடிக்கப்பட்டது.பேஷ்வா படையை கம்பெனிப் படையால் எளிதில் முறியடித்துவிட முடியவில்லை. பேஷ்வா குழுக்களின் போர் தங்களுடைய முந்தைய ஆதிக்கத்தை நிறுவுவதுதான் என்றாலும், அது அன்றைய பிரிட்டிஷ் ஆட்சியைவிரட்டியடிக்க நடந்த கிளர்ச்சியோடும் இணைந்ததுதான் என்பதை மறுப்பதற்கில்லை. 
தமிழ்நாட்டின் கட்டபொம்மன், மருதுபாண்டியர், ராணி மங்கம்மாள் கிளர்ச்சிகளைப் போன்றவை அவை.
கம்பெனி நிர்வாகத்தையும் படைத் தலைவர்களையும் குழப்பும் வகையில் தனது இலக்குகளையும் வியூகங்களையும் மாற்றிக்கொண்டே இருந்தார் பாஜி ராவ். 
கடைசியாகச் சண்டை நடந்த இடம் கோரிகாவுன் கிராமம். நடந்த நாள் 1818 ஜனவரி 1.கம்பெனிப் படை முன்னேறுவதைத் தடுக்க பேஷ்வாபடையினர் ஊருக்குத் தீ வைத்தனர். 
பல வீடுகள் எரிந்து சாம்பலாகின. கிராமத் தெருக்களில் கம்பெனிப் படையாட்களின் உடல்களும், அவர்களது குதிரைகளின் உடல்களும் கரிக் கட்டைகளாகக் கிடந்ததைப் பின்னர்அங்கே வந்த அதிகாரிகள் பதிவு செய்தனர். பேஷ்வா படையிலும் பலர் கொல்லப்பட்டார்கள். 
பலர் பின்வாங்கி ஓடினார்கள். 
கிராமம் கம்பெனிப் படையின் கைவசமானது.கம்பெனி ஆவணங்களின்படி அதன் 834 படையாட்களில் இரண்டு அதிகாரிகள் உட்பட 275 பேர் கொல்லப்பட்டார்கள் அல்லது காணாமல் போனார்கள். உயிரிழந்தவர்களில் 50 பேர் காலாட்படையினர். 
அவர்களில் 22 பேர் மஹர் சமூகத்தைச் சேர்ந்தவர்கள். 
16 பேர்மராத்தா சமூகத்தினர். 
8 பேர் ராஜ்புத் சமூகத்தினர். 
2 பேர் யூதர்கள்.பேஷ்வா படையில் சுமார் 500 முதல் 600 பேர் வரை கொல்லப்பட்டனர் அல்லது படுகாயமடைந்தனர் என்றும்பிரிட்டிஷ் ஆவணங்கள் தெரிவிக்கின்றன.
போரிட்டவர்களின் மனநிலை எத்தகையது?

கம்பெனிப் படையில் நூற்றுக்கு மேல் இருந்த, தாழ்த்தப்பட்டவர்களாக ஒடுக்கப்பட்ட மஹர் இளைஞர்களின் மனங்களில் காலங்காலமாகத் தங்கள் சமூகம் அவமதிக்கப்பட்டு, ஒதுக்கப்பட்டு வந்திருக்கிற சினமும், பிரிட்டிஷ் ஆட்சியில் தங்களுக்குச் சமநிலை கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பும் இருந்திருக்கும் எனமதிப்பிடுவதில் பிழையிருக்காது.
குறிப்பாக பிராமணர்கள் அதிகமாகவும், மேல் சாதி என்று சொல்லிக்கொள்ளும் இதர பிரிவுகளைச் சேர்ந்தோர் கணிசமாகவும் இருந்த பேஷ்வா குழுக்களில் சில தலித்துகளும் இருந்தார்கள். 
ஆயினும் படையில் மற்ற சாதியினருக்குச் சமமாக நடத்தப்படவில்லை என்ற வேதனையும் அவர்களுக்கு இருந்தது எனக் கருதுவதிலும் பிழையிருக்காது.
இன்றைக்கும், பல மட்டங்களில் பல வடிவங்களில் தலித் மக்களுக்கு எதிரான பாகுபாடுகளும் தீண்டாமைக் கொடுமைகளும் இந்த அளவுக்கு இருக்கிறபோது, 200 ஆண்டுகளுக்கு முன் எப்படி இருந்திருக்கும் என எளிதில் ஊகிக்கலாம். 
கோரிகாவுன் சண்டையில் உயிரிழந்த தங்கள் இளைஞர்களை வரலாற்று நாயகர்களாக தலித் மக்கள் போற்றுவதன் சமூக உளவியலும் புரிந்துகொள்ளத்தக்க நியாயமே. அவர்களைப் பொறுத்தவரையில் தங்களைச் சிறுமைப்படுத்தி ஒடுக்கிய கூட்டத்தை முறியடித்த வீரர்களே கம்பெனிப் படையில் இணைந்து போரிட்ட மஹர் இளைஞர்கள்.‘மூன்றாம் ஆங்கிலோ - மராத்தா போர்’ என்று பதிவு செய்யப்பட்ட அந்தச் சண்டையின் முடிவைத் தொடர்ந்துகம்பெனி ஆட்சியாளர்கள் அங்கே ஒரு வெற்றித் தூணைநிறுவினர்.
109 ஆண்டுகளுக்குப் பிறகு, 1927 ஜனவரி 1இல்கோரிகாவுன் கிராமத்துக்கு வந்தார் டாக்டர் அம்பேத்கர். மஹர் வீரர்களுக்கு அஞ்சலி செலுத்திச் சென்றார் அம்பேத்கர். பின்னர் ஆண்டுதோறும் இந்த அஞ்சலி தொடர்வதானது. 
1947 ஆகஸ்ட் 15ஆம் தேதிக்குப் பிறகு,சுதந்திர இந்தியாவில் அந்த வெற்றித் தூண், சாதியஆதிக்கத்துக்கு எதிரான தலித் எழுச்சியின் அடையாளமாக, தொடரும் ஒடுக்குமுறைகளுக்கு எதிரான ஒருங்கிணைப்புக்கான தூண்டுதல் புள்ளிகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது.தலித் மக்களின் சம நீதிக்காகச் செயல்படுவோரும் போராடுவோரும் ஆண்டுதோறும் ஜனவரி 1இல் அங்கேகூடுகிறார்கள், அஞ்சலி செலுத்துகிறார்கள், சமத்துவத்தை நிலைநாட்ட உறுதியேற்றுத் திரும்புகிறார்கள். 
இந்த 2018 ஜனவரி 1 அன்றும் கூடினார்கள். 
குஜராத்தில் தலித் மக்களையும் தலித் உணர்வாளர்களையும் திரட்டி,சாதிய எதிர்ப்பு, வர்க்கப் போராட்டம் இரண்டும் பிரிக்கமுடியாதவை என்ற தெளிவோடு களமிறங்கியுள்ள, உனா எழுச்சியின் முன்னணி வீரரும், அண்மையில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் வென்றிருப்பவருமான ஜிக்னேஷ் மேவானி கலந்துகொண்டார்.

அஞ்சலியில் வெடித்த வன்முறைஆனால், இத்தகைய ஒருங்கிணைப்பும் ஒருமைப்பாடும் வளர்வதை அனுமதிக்க முடியாது என்று ஒரு மூர்க்கம் தலைக்கேறிய ஒரு பெருங்கும்பல் திடீரென அங்கே வந்தது. காவி வண்ணக் கொடிகளுடன் வந்த,தங்களை ஒரு இந்துத்துவா படை என்று சொல்லிக்கொள்கிற அந்தக் கும்பலில் பேஷ்வா படையில் ஆதிக்கம்செலுத்திய சாதியினர் உள்ளிட்ட தலித் அல்லாத சமூகங்களின் அமைப்பைச் சேர்ந்தவர்கள் வெறிக் கூச்சல் எழுப்பினர். 
அஞ்சலி நிகழ்ச்சிக்கு எதிர்ப்புத் தெரிவித்து வன்முறையில் இறங்கினர். 
இரு தரப்பினருக்கிடையேயும் மோதல் மூண்டது. 
அஞ்சலிக்காக வந்த ஒருவர் கொல்லப்பட்டார்.
சாதிய ஆதிக்கவாதிகளின் வன்முறையைத் தடுக்கத்தவறிய மகாராஷ்டிரா மாநில பாஜக அரசின் செயலின்மையைக் கண்டித்து மும்பை, புனே உள்பட மாநிலம் முழுவதும் கடையடைப்புப் போராட்டத்துக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. 
மனித உரிமைக் குழுக்களும் தலித் அமைப்புகளும் கம்யூனிஸ்ட் இயக்கங்களும் காங்கிரஸ், தேசிய மாநாட்டுக் கட்சி உள்ளிட்ட கட்சிகளும் கண்டனப் போராட்டத்துக்கு ஆதரவாக நிற்கின்றன. முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிஸ் நீதி விசாணைக்கு ஆணையிடுவதாக அறிவித்திருக்கிறார்.
மராத்திய மாநிலத்தில் இப்போது ஏற்பட்டிருக்கும் தலித் கிளர்ச்சி நெருப்பு மூள்வதற்கு கோரிகாவுன் வன்முறைஒரு பொறியாக இருந்திருக்கலாம். 
ஆனால், அது மட்டும்தான் என்று முடிவுகட்டிவிட முடியாது. அந்தமாநிலத்தில் தொடர்ந்து நடக்கிற சாதிய ஆதிக்கவாதிகளின் கொடுமைகள், இன்னமும் 21ஆம் நூற்றாண்டை எட்டிப்பார்க்காத பாகுபாடுகள் ஆகியவை அணையாத கங்குகளாக அனல் பரப்பி வந்திருக்கின்றன. 
இந்தியா முழுக்க நாள்தோறும் நிகழ்ந்துகொண்டே இருக்கிற சாதியஆணவக் கொலைகள் உள்ளிட்ட, ஆலய நுழைவுரிமை மறுப்புகள் உள்ளிட்ட, வாடகை வீடுகள் தவிர்ப்பு உள்ளிட்டஅநீதிகள் எங்கேனும் ஓரிடத்தில் ஒரு கிளர்ச்சி வெள்ளத்துக்கு மடை திறக்கத்தான் செய்கின்றன. 
2019இன்மக்களவைத் தேர்தல் பற்றிய கணக்குடன், தலித் அல்லாத சமூகங்களின் வாக்குகளை மடை மாற்றுகிற யுக்திகளும் இதன் பின்னணியில் இருக்கக்கூடும் என்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள்.
வெண்மணித் தீப்பந்தம்தமிழகத்தில் இளவரசன்களும் கோகுல்ராஜ்களும் சங்கர்களும் நாடு தழுவிய தலித் எழுச்சி மடை திறப்புக்கான சாவிகளாகியிருக்கிறார்கள் அல்லவா? 

இப்போதுகூட, தஞ்சாவூர் மாவட்டம் குடிக்காடு கிராமத்தில் தலித்மக்கள் புத்தாண்டு விழா கொண்டாடியதைச் சகித்துக்கொள்ள முடியாத சாதிய ஆதிக்கவாதிகளால் வீடுகள், வண்டிகள், விழா மேடை, விளக்குகள், ஒலியமைப்புக் கருவிகள், நாற்காலிகள் நொறுக்கப்பட்டிருக்கின்றன. 
தடுக்க முயன்ற மார்க்சிஸ்ட் கட்சி, தீண்டாமை ஒழிப்பு முன்னணி தோழர்கள் தாக்கப்பட்டிருக்கிறார்கள்.
இந்த வன்முறை நெருப்புக்குள் கிடப்பது வெண்மணித் தீப்பந்தம் அல்லவா?புத்தாண்டுக் கொண்டாட்டம்கூட தலித் மக்களால் தீண்டப்படக் கூடாது என்பதன் பொருளென்ன? 
கடந்துபோன நூற்றாண்டுகளில் கையைக் கட்டிப் பணிந்திருந்தவர்கள் சென்ற நூற்றாண்டில் கைகளை விரித்தார்கள், இந்த நூற்றாண்டில் கைகளை உயர்த்தவும் தொடங்கிவிட்டார்கள் என்ற உண்மையைப் பொறுத்துக்கொள்ள விடமாட்டேன் என்கிறது சாதி.எத்தனையோ புதுமைகளைப் புகுத்திக்கொண்டிருக்கும் இன்றைய உலகமயமாக்கல் யுகத்திலா இப்படியெல்லாம் நடக்கிறது என்று சிலர் வினவுகிறார்கள். 
மக்களிடையே இப்படிப்பட்ட பகைமைகளும் மோதல்களும் நீடிக்கிற வரையில் தனது சுரண்டல் சுகத்தில் சின்னக்கீறலும் விழாமல் பாதுகாப்பாக இருக்கலாம் என்ற களிப்போடு லாப வேட்டையைத் தொடர்கிறது உலகச் சந்தை ஆக்கிரமிப்புக் கும்பல். உலகின் எந்த மூலையில் என்ன நடந்தாலும் இந்தக் கும்பலின் கால்களும் கைகளும் இருப்பதைப் புரிந்துகொள்ளத்தான் வேண்டும். சரியான, திட்டவட்டமான தீர்வுக்கான இறுதிப்போராட்டத்துக்கு அந்தப் புரிதல் மிக மிகத் தேவை.
                                                                                                                                            -.குமரேசன் 
                         ஆன்மிகத்தில் இருந்து திரைக்கு வந்தவர். சுவாமிஜி ராம் ரகீம்.இப்போது சிறையில்.