இன்றைய செய்தி,நாளைய வரலாறு. நாளைய வரலாறை படிப்போம்.

வியாழன், 18 ஜனவரி, 2018

ஒரு திறந்த மடல்,ஐயா! வணக்கம்.

இந்தக் கடிதத்தை என் உயிர்மொழி தமிழில் எழுதுகிறேன். ஐயா உர்ஜித் பட்டேல் அவர்களே! 

ஏனெனில் இந்தியாவில் 99.99 % பேருக்கு சமஸ்கிருதம் எழுதப்படிக்கத் தெரியாதது போல் எனக்கும் தெரியாது. 60% பேர்களுக்கு இந்தி தெரியாதது போல் எனக்கும் தரியாது.

யாருக்கும் புரியாத அம்மொழியில் தேவநாகரியில் ரூபாய் மதிப்பை அச்சிடும் உங்களுக்கு தமிழில் எழுதினால் பிடிக்காது என்பது எனக்குத் தெரியும். 
 உர்ஜித் பட்டேல் 


ஆயினும் எனக்கு இந்தி, ஆங்கிலம், சமஸ்கிருதம் உள்ளிட்ட என்ற மொழியிலும் என் உணர்ச்சியைக் கொட்ட இயலாது; எனவே என்தாய்மொழி உயிர் மொழியில் எழுதுகிறேன்.
நானும் என் மனைவியும் ஓய்வு பெற்றவர்கள். எனவே மகனோடு பெங்களூரில் பொம்மசந்திரா அருகில் காச்சநாய்க்கன் ஹள்ளியில் வசிக்கிறோம்.

போகி அன்று எங்கள் வீட்டிலிருந்து 3.5கிமீ தூரத்திலுள்ள அனைத்து ஏடிஎம்முக்கும் சென்று பார்த்தேன்.இயங்கவில்லை, காரணம் பணம் இல்லையாம். 

பொங்கலன்று பேரப்பிள்ளைகளுக்கு ஆளுக்கு நூறு கொடுக்கவும் காசு வேண்டுமே! 

மருந்துவாங்க வைத்திருந்த ஐநூறு ரூபாயில் சமாளித்தோம். 14,15,தேதிகளிலும் ஏடிஎம்மில் பணம் இல்லை.
16 ஆம் தேதி 11.30 மணி உச்சி வெயிலில் ஸ்டேட் வங்கி தொடங்கி கனரா வங்கி வரை 3.5 கி.மீ. அலைந்தும் ஒரு ஏடிஎம்மிலும் பணம் இல்லை.

கனரா வங்கி மேலாளரிடம் கேட்டால் சொல்கிறார், “ரிசர்வ் வங்கி பணம் தராமல்எப்படி ஏடிஎம்மை நிறைக்க முடியும்?”அவரோடு நான் தர்க்கம் செய்ய கூட்டம் சேர்ந்துவிட்டது. 

ஏடிஎம்மில் பணமெடுத்தால் கமிஷன். 


எடுக்கவும் கட்டுப்பாடு, இப்போது நாம் சம்பாதித்த ஆயிரம் இரண்டாயிரத்தை எடுக்கவும் முடியவில்லை. ஆண் லைனில் பரிவர்த்தனை எனில் எம் போல் ஓய்வு பெற்றவரும் ஏழைகளும் எங்கு முட்டிக்கொண்டு சாவது?:
இது வங்கியில் நான் மட்டுமல்ல தானாய்ச் சேர்ந்த கூட்டத்தின் மொத்தக் குரல்.

சில்லறை வியாபாரத்தை அந்நியரிடம் கொடுத்தாயிற்று அவர்கள் புகுந்து விளையாட வசதியாக பணபுழக்கத்தை முடக்கி சில்லறை வியாபாரிகளைக் கொல்வதும் பெரும் நிறுவனம் நோக்கி மக்களைத் தள்ளுவதும் மோடி அரசில் ரகசியத் திட்டம் என்றார் வங்கியில் ஒருவர். 

ஓ! ஆகவேதான் ஏடிஎம்களுக்கு ரிசர்வ் வங்கி பணம் கொடுக்காமல் வறள விடுகிறதோ?

ரிசர்வ் வங்கி செல்லா நோட்டு விவகாரத்தில் எம்மை - ஏழைகளையே சித்ரவதை செய்தது; வங்கி கட்டணம், நிபந்தனை என எமது பணத்தை ஒவ்வொரு முறையும் பிக்பாக்கெட் அடிக்கிறது ரிசர்வ் வங்கி. இப்போது ஏடிஎம்களை குறைத்தும் பணமில்லாமல் செய்தும் கழுத்தை நெரிக்கிறது.வங்கியில் நடக்கும் இக்கொடுமையை பிக்பாக்கெட் என்பதா? 

பகற்கொள்ளை என்பதா? 
தீவட்டிக் கொள்ளை என்பதா? 
இவையெல்லாம் கூட மென்மையான சொற்களே! 

மோடித்தனம் என்பதே இத்தகு வஞ்சக கொள்ளைக்கும் சித்ரவதைக்கும் வரலாறு சூட்டும் பொருத்தமான பெயராக இருக்குமோ?
ஐயா உர்ஜித் பட்டேல் அவர்களே! 

நீங்கள் அம்பானியின் உறவினர், அவர் கம்பெனியின் உயரதிகாரியாய் இருந்தவர் உங்கள் இதயத்தில் ஈரம் இருக்கும் என யாரும் எதிர்பார்க்கவில்லை.

இரக்கமற்று ஏழைகளைக் கொள்ளையடிக்கவும் சூறையாடவும்தானே பிரதமர் மோடியும் அருண்ஜெட்லியும் உங்களை அந்தப் பொறுப்பில் உட்கார வைத்தார்கள்!

கார்ப்பரேட் முதலாளியும் காவிக்கூட்டமும் கூடி செய்வது எதுவும் எங்களுக்கல்ல; தாங்கள் வாழவே என்பதை அறிந்து கொண்டோம்!வங்கியோடு எம் அனுபவம் இது முதன் முறை அல்ல. 

அண்மையில் முகநூலில்பதிந்த இரண்டு செய்தியை பின் இணைப்பாய்த் தருகிறேன். ரசிக்க அல்ல;

எங்கள் கொதிப்பை உணர்த்த.“அல்லற்பட்டு ஆற்றாது அழுதகண் ணீரன்றே செல்வத்தைத் தேய்க்கும் படை” - என்பது எங்கள் திருக்குறள் சொன்ன உண்மை.

ஆம். பாரதியார் பாடியது போல், “இனி பொறுப்பதில்லை எரிதழல் கொண்டுவா!”என கொதிக்கும் மக்கள் எதை எங்கு எப்போது தீக்கிரையாக்கப் போகிறார்களோ? 

மோடித்தனம் மக்களை அந்த திக்கில் விரட்டிக் கொண்டிருக்கிறதே!

உங்களிடம் பதிலையோ நடவடிக்கையோ எதிர்பார்க்கவில்லை; வஞ்சகம் நிரம்பிய ஆட்சியாளர்கள் இந்த கடிதத்தை எழுதியதற்காக எம்மை தேசவிரோதி என்றோ இந்து விரோதி என்றோ முத்திரை குத்தலாம். குத்துங்கள் கவலை இல்லை.

 தேசம் கொதிக்கத்துவங்கிவிட்டதை சொல்லவே இக்கடிதம்.

இவண், 
மூத்த குடிமகன் சு.பொ.அகத்தியலிங்கம்,                                                                                                                                 நன்றி:தீக்கதிர்,

------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
பாம்பும் நோகாமல்... கம்பும் ஒடியாமல்...
-அறிவுக்கடல்
ஜிஎஸ்டி அறிமுகத்தால் வரி குறைந்தாலும், அதற்கேற்பவிலையைக் குறைக்கவில்லை என்று மெக் டொனால்ட்ஸ் உணவகங்கள், லைஃப்ஸ்டைல் இண்டர்நேஷனல்,ஹோண்டா மோட்டார், இந்துஸ்தான் யுனிலீவர் உள்ளிட்டநிறுவனங்களுக்கு மத்திய அரசு நோட்டிஸ் அனுப்பியுள்ளது. 

ஜிஎஸ்டியால் வரி விகிதம் குறைந்த துறைகளில், அடுத்தடுத்தகீழ் மட்டங்களுக்கும் வரிக் குறைப்பு நடைமுறைப்படுத்தப்படுகிறதா என்று ஆய்வதற்காக அமைக்கப்பட்டுள்ள, பொதுவான பாதுகாப்பு அம்சங்களுக்கான இயக்ககம் இந்த நோட்டிசை அனுப்பியுள்ளது.
ஜிஎஸ்டியில் எந்தப் பொருளுக்கான வரியும் உயரவில்லை என்று மத்திய அரசு தொடர்ந்து கூறிவந்தாலும், எல்லாப்பொருட்களின் விலையுமே உயர்ந்தது என்பது குறிப்பிடத்தக்கது.


இதைத் தொடர்ந்து நவம்பரில், பற்பசை, ஷாம்பூ, சலவைத்தூள், ஷேவிங் கிரீம் உள்ளிட்ட 200 பொருட்களுக்கான ஜிஎஸ்டியை 28 சதவீதத்திலிருந்து 18 சதவீதமாக மத்திய அரசு குறைத்துவிட்டதாக அறிவித்தது.
 ஆனாலும், விலைகள் குறையாததைத் தொடர்ந்து, பில்களில் உள்ள ஜிஎஸ்டி எவ்வளவு என்றுபார்த்து, தவறாக இருந்தால் புகார் செய்யுமாறு நுகர்வோரைக் கேட்டுக்கொள்ளும் விளம்பரங்களை வெளியிட்டது. 
பச்சையாகச் சொன்னால், அரசு செய்யவேண்டிய கண்காணிப்புப் பணியை, மக்களைச் செய்யுமாறு வேண்டியது. ஆனால், இதுபோன்ற எந்த நடவடிக்கையாலும் விலைகள்குறையாததைத் தொடர்ந்து தற்போது இந்த நடவடிக்கையில் அரசு ஈடுபட்டுள்ளது. 

தற்போதும்கூட, அரசு நிர்ணயித்ததைவிடக் கூடுதல் வரி வசூலித்ததும், வசூலித்ததைவிடக் குறைவான வரியைச் செலுத்தியதும் குற்றங்களாகக் கருதப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். ஆனால், அதற்கான சட்ட ஏற்பாடுகள் இன்றுவரை ஜிஎஸ்டியில் இல்லாததால், அளவுக்கதிகமான லாபமீட்டுதல் என்ற அடிப்படையிலேயே இந்தநோட்டிஸ் அனுப்பப்பட்டுள்ளது.

இதற்காக, அளவுக்கதிகமான லாபமீட்டுதல் தடுப்பு தேசிய ஆணையம் என்பதை, நவம்பரில் வரிக் குறைப்பைத் தொடர்ந்து அரசு உருவாக்கியது என்பதுகுறிப்பிடத்தக்கது.
வரிக் குறைப்பால் சேமிக்கப்படும் தொகைக்கு நிகராக, சிலபொருட்களின் எடையை அதிகரித்துள்ளதாகவும், சில பொருட்களுக்கு விலைகளைக் குறைத்து, அந்த விலைப்பட்டியலை இணையத்தில் வெளியிட்டுள்ளதாகவும், இந்த நோட்டிசிற்கு இந்துஸ்தான் யுனிலீவர் பதிலளித்துள்ளது. 

மாத வருமானம் பெறும் நடுத்தர வர்க்கத்தினர், வருமானவரிக் கணக்கீட்டில் தவறாகி, நூறு ரூபாய் குறைவாகச் செலுத்திவிட்டால்கூட, கிரிமினல் குற்றவாளிகளைப் போல நடத்தும் அரசு, கோடிக்கணக்கில் ஏமாற்றும் கார்ப்பரேட் நிறுவனங்களின்மீது நடவடிக்கை எடுப்பதற்கான சட்டங்களை உருவாக்க மட்டுமல்ல, இருக்கும் சட்டங்களின்படி கடுமையான நடவடிக்கைகள் எடுக்கக்கூடத் தயாராக இல்லை என்பதைத்தான் இந்த நடவடிக்கை காட்டுகிறது.
=========================================================================================
ன்று,
ஜனவரி-18.


  • லீமா நகரம் அமைக்கப்பட்டது(1535)
  • புதுப்பிக்கப்பட்ட  ஹாக்கி போட்டிகள் இங்கிலாந்தில் உருவாக்கப்பட்டன(1886)
  • எக்ஸ்ரே இயந்திரம் முதல் முறையாக காட்சிப்படுத்தப்பட்டது(1896)
  • தோழர்  ஜீவா  மறைவு.(1963) 
  • நடிகரும் ஆந்திர முன்னாள்முதல்வருமான என்.டி.ராமா ராவ் காலமானார்.(1996)


==========================================================================================
தோழர்  ஜீவா...
‘காலுக்குச் செருப்புமில்லைகால்வயிற்றுக் கூழுமில்லைபாழுக்குழைத் தோமடா-என் தோழனேபசையற்றுப் போனோமடா’பாலின்றிப் பிள்ளைஅழும் பட்டினியால் தாயழுவாள் வேலையின்றி நாமழுவோம்-என் தோழனே வீடு முச்சூடும்அழும்’‘கோடிக்கால் பூதமடா..தொழிலாளி கோபத்தின் ரூபமடா’ எனும் கவிதைகள் காலத்தால் அழியாதவை. 

அவை சுதந்திரப் போராட்ட வீரர், பொதுவுடமைப் போராளி, மிகச் சிறந்த பேச்சாளர் தோழர் ஜீவா அவர்களை நினைவுபடுத்திக் கொண்டேயிருக்கும்.

தமிழகத்தில் கம்யூனிஸ்ட் கட்சியின் முக்கியத் தலைவராக விளங்கிய தோழர் ஜீவா, பொது வாழ்வில் நாற்பது வருடம் ஈடுபட்டு, பல்வேறு சிறைத்தண்டனைகளையும் சோதனைகளையும் தாங்கியவர். அவரது ஆயுள் காலத்தில் பத்து வருடங்கள் சிறையில் கழித்தவர். 

காந்தியவாதியாக, சுயமரியாதை இயக்கப் பற்றாளராக, இலக்கியவாதியாக,பொதுவுடமை இயக்கத் தலைவராகச் செயலாற்றியவர்.
ஜீவா என்று அன்புடன் அழைக்கப்படும் தோழர் ப.ஜீவானந்தம் சிறு வயதிலேயே காந்தியின் கருத்துக்களால் ஈர்க்கப்பட்டார். 
ஒன்பதாம் வகுப்பு படிக்கும்போதே கவிதைகளும், நாடகங்களும் எழுதி நடிக்கவும் செய்தார். தமிழிலக்கியம் மீது தனி ஆர்வம் கொண்டிருந்தார். 
பெரும்இலக்கியவாதியாகவும், பத்திரிகையாளராகவும் திகழ்ந்தார்.


 குடியரசு, ஜனசக்தி, பகுத்தறிவு, புரட்சி, தாமரை ஆகிய இதழ்களுக்குப் புரட்சிகரமான கட்டுரைகளும், கவிதைகளையும் படைத்தவர். 
பொதுவுடமை மேடைகளில் முதல் முறையாக தமிழ்கலாச்சாரத்தோடு கலந்துரையாடல் நடத்தித் தமிழிலக்கியம் பேசியவர் ஜீவா. 
தமிழோடு சேர்த்து கட்சியையும் வளர்த்தார். 

இலக்கிய மேடைகளில் ஜீவா ஏறினால், அவரது பேச்சை ரசிக்க அக்காலத்தில் இளைஞர்கள் திரண்டுவருவர். 
ஒரு தேர்ந்த தமிழறிஞர் போல அவர் நாவாடுவதை தமிழறிஞர்களும் பெரிதும் ரசிப்பர். 

அக்காலத்தில் அது எல்லா தலைவர்களுக்கும் கிடைக்காத பேறு.இளமையில் கடலூர் காங்கிரஸ் எம்.எல்.ஏ.வின் மகளாகிய கண்ணம்மாவைத் திருமணம் செய்து கொண்டார். 
இவரது மறைவிற்குப்பின் 1948 ஆம் ஆண்டு பத்மாவதி என்பவரை கலப்புத் திருமணம் செய்து கொண்டார். 
இந்த தம்பதிக்கு குமுதா, உஷா, உமா என்ற மகள்களும் மணிக்குமார் என்ற மகனும் பிறந்தனர்.
பெரியாரோடு இணைந்து வைக்கம் போராட்டம், சுசீந்திரம் தீண்டாமை எதிர்ப்பு இயக்கம் ஆகியவற்றில் பங்கேற்றவர் ஜீவா.

மாவீரன் பகத்சிங் தூக்கிலிடப்பட்ட காலக் கட்டத்தில் அவருக்கு அளிக்கப்பட்ட தூக்குத் தண்டனைக்கு எதிராகவெகுண்டெழுந்தார். 
அனல் கக்கும் பேச்சால் அன்றையஇளைஞர்களின் மனதில் புரட்சிக் கனலை மூட்டினார்.
சிறையிலிருந்தபடி பகத்சிங் தன் தந்தைக்கு எழுதிய நான்ஏன் நாத்திகனானேன்?’ எனும் நூலை தமிழில் மொழிபெயர்த்தார். 
அதை பதிப்பித்தவர் ஈ.வெ.கிருஷ்ணசாமி.அதை வெளியிட்டவர் பெரியார். 


மொழி பெயர்த்ததற்காக, ஜீவாவின் கை கால்களுக்கு விலங்கிட்டனர். 

1930- களில் சிந்தனைச் சிற்பி சிங்காரவேலரோடு தன்னை சுயமரியாதை இயக்கத்தவராக அடையாளப்படுத்திக் கொண்ட ஜீவா, காங்கிரஸ் நடத்திய ஒத்துழையாமை இயக்கத்தில் கலந்து கொண்டு சிறை சென்றார். 
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தடை செய்யப்பட்ட காலத்தில் (1939-1942) மும்பையிலும் சிறையிலும் தன் பெரும்பகுதியை செலவிட்டார். 

1948இல் கம்யூனிஸ்ட் கட்சி தடைசெய்யப்பட்டபோது கைது செய்யப்பட்டு சிறையில்அடைக்கப்பட்டார்.
1952ஆம் ஆண்டு வண்ணாரப்பேட்டை தொகுதியில்இருந்து சட்டமன்றத்திற்கு தேர்வு செய்யப்பட்டார். சட்டமன்றத்தில் தனது பேச்சால் மற்ற தலைவர்களையும் கவர்ந்தார் ஜீவா. எதிராளியையும் பேச்சால் தன்வசப்படுத்தும் தனித்துவம் மிக்கவராக ஜீவா விளங்கினார். 

ஜீவா சட்டமன்றத்தில் நிகழ்த்திய உரை “சட்டப்பேரவையில் ஜீவா” என்று நூலாகவும் வெளிவந்துள்ளது.எதிரணியில் இருந்தாலும் அனைத்துத் தலைவர்களுடனும் நட்பு பாராட்டியவர் ஜீவா. காமராஜரால் பெரிதும் மதிக்கப்பட்டவர். 

நகைச்சுவை மேதை கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணனின் பெருமதிப்பிற்குரியவராக ஜீவா இருந்தார். இலக்கியத்தின்பால் தீராத தாகம் கொண்ட ஜீவா,தனது இறுதிக் காலத்தில் தமிழ்நாடு கலை இலக்கியப்பெருமன்றத்தைத் துவக்கினார். 
இலக்கியத்தைமையப்படுத்தி கட்சியின் சார்பில் தொடங்கப்பட்ட‘தாமரை’ இலக்கிய இதழ், ‘ஜனசக்தி’ நாளிதழ்ஆகியவற்றுக்கு ஆசிரியராக செயல்பட்டார்.

தன் இறுதிக்காலம் வரை சாதாரண மக்கள் மத்தியிலேயே வாழ்ந்தார் ஜீவா. ஒருமுறை அப்போதைய முதல்வர் காமராஜர் சென்னையில் ஜீவா வசித்துவந்த பகுதியில் ஒரு அரசு நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். 

காமராஜரின் உதவியாளர், திறப்பு விழா நடக்கும் இடத்தின்அருகேதான் ஜீவாவின் வீடு இருப்பதாக போகிறபோக்கில் சொல்ல அதிர்ந்தார் காமராஜர். 
காரணம் அது ஒரு குடிசைப்பகுதி. நிகழ்ச்சி முடிந்து ஜீவாவின் வீட்டுக்கு சென்ற காமராஜர், அவரது எளிமையான வீட்டைக் கண்டு இன்னும்அதிர்ந்துபோனார்.

அத்தனை சாதாரணமாக இருந்தது அந்த வீடு.
 இத்தனை மக்கள் ஆதரவுடனும் பெரும்தலைவர்களுக்குப் பிடித்தமானவராகவும் இருந்தாலும், துாய்மையான தலைவராக, எளிமையாக இறுதிவரை நேர்மையாக தன் பொதுவாழ்வினை அமைத்துக்கொண்டார் தோழர் ஜீவா. 
உடல்நலம் குன்றிய நிலையில் கடந்த 1963ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 18ஆம் நாள் இயற்கை எய்தினார் ஜீவா. 
அவருக்கு கட்சி வேறுபாடின்றி அனைத்துத் தலைவர்களும், பொதுமக்களும் அஞ்சலி செலுத்தினர். பின்னாளில் மத்திய அரசு அவரது தபால் தலையை வெளியிட்டு அவருக்கு பெருமை சேர்த்தது.
இவரது நினைவாக கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் மணிமண்டபம் அமைத்து பெருமை சேர்த்துள்ளது தமிழக அரசு.
புதுச்சேரியில் இவரது நினைவாகஅரசு மேல்நிலைப் பள்ளிக்கு ஜீவானந்தம் என பெயரிட்டது புதுவை அரசு. 
அவரைப் பற்றி ஏராளமானநூல்கள் எழுதப்பட்டுள்ளன. 
இருந்தாலும் மதமும் மனித வாழ்வும், புதுமைப் பெண், மேடையில் ஜீவா,தேசத்தின் சொத்து, கலை இலக்கியத்தின் புதிய பார்வை ஆகியவை ஜீவாவின் எழுத்துக்கள், பேச்சுக்களைத் தொகுத்த நூல்கள்.
பாட்டாளிகளின் குரலாய் ஒலித்த தோழர் ஜீவாவின் வாழ்வு என்றும் மக்களிடையே சிறந்து விளங்கும்.
                                                                                                                                    -பெரணமல்லூர் சேகரன்
----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
"நீங்க.. என்ன, ஆம்படையாள இன்னும் ஒத்துக்கல, ஆண்டாளாவாவது ஏத்துக்கோங்கோ...."

இது தீவிர வைணவர்களான கவிஞர் வாலி, எழுத்தாளர் சுஜாத்தா மற்றும் நடிகர் கமல் பங்குபெற்ற ஹே ராம் படத்தில் வசுந்தரா, கமலை நோக்கி பேசும் வசனம்.. 

உலகநாயகன் கமல்ஹாசன்  எழுதிய வசனம்.(அவரது தந்தை சீனிவாசன் அய்யங்கார்தான்.)

அதாவது, என்ன பொண்டாட்டியா ஒத்துக்கல, ஆண்டாளாவாவது ஏத்துக்கோங்கோ.... என தாலி கட்டிய மனைவி, கணவனிடம் பேசும் வசனம்... 

ராஜாஜி முதல், வாலி, சுஜாத்தா, கமல்ஹாசன் , பா. ராகவன், பத்ரி சேஷாத்திரி என அனைத்து  அய்யங்கார்களுக்கும் ஆண்டாளின் உண்மை வரலாறு தெரிகிறது.. 

அதையொட்டி பேசியும், எழுதியும் உள்ளார்கள்.. 

ஆனால், பார்பனர் அல்லாத கவிஞர் வைரமுத்து சொன்னதை தான் தாங்க முடியவில்லை.