சோகத்தைத் தவிர வேறென்ன சொல்ல?

ஞாநி என்ற பெயரால் அறியப்படும் ஞாநி சங்கரன் 1954ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 4ஆம் தேதி செங்கல்பட்டில் பிறந்தார். 

நீண்ட நாட்களாக குடல் இறக்கத்தினால் அவதிப்பட்டுவந்த அவர் இன்று காலமானார். 
எழுத்திலும் களத்திலும் இயங்கிவந்தவர் அவர். 

பத்திரிகையாளர் என்று பரவலாக குறிப்பிடப்படும் அவர் இலக்கியம், நாடகம், ஓவியம் ஆகியவற்றிலும் தன் இளமைக்காலம் முதலாகவே இடைவிடாது செயலாற்றிக்கொண்டிருப்பவர்.

பால்யத்திலயே அரசியல், சமூக செயல்பாடுகளில் வெளிப்படையான கருத்துகளுடன் களச்செயல்பாட்டாளராக வெளிப்பட்டவர். 

செங்கற்பட்டு புனித சூசையப்பர் பள்ளியில் 11ஆம் வகுப்பு வரை படித்தார். பள்ளிக்கூடத்தில் படித்த போதே ஆசிரியர் வேணுகோபாலின் தூண்டலினால் கையெழுத்துப் பத்திரிகை ஒன்றையும் தயாரித்து வந்தார். 
அதிலிருந்தே அவர் பத்திரிகையாளராக செயல்படத் தொடங்கிவிட்டார். 
இவரது தந்தை வேம்புசாமியும் கூட ஆங்கிலப் பத்திரிகை ஒன்றில் பத்திரிகையாளராக பணியாற்றியவர்.


அப்போதே பேச்சு, எழுத்து, நாடகம் ஆகியவற்றில் பங்கெடுத்துக்கொண்டவர். 

பின் சென்னை கிறிஸ்துவக் கல்லூரியில் மேற்படிப்பைத் தொடர்ந்த அவர் தமிழ்ப்பேரவை செயலாளராக இருந்தார். 

1971ஆம் ஆண்டு, காமராஜர்-ராஜாஜி-சோ ஆகியோரின் கூட்டணியை எதிர்த்தும், இந்திரா காந்தி - கருணாநிதி கூட்டணியை ஆதரித்தும் பிரசாரம் செய்தார். 

2014ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சியில் இணைந்து போட்டியிட்டார் ஞாநி. இதில் தோல்வியைச் சந்தித்த அவர் பின்னாளில் ஆம் ஆத்மிக்கு உடல் நலம் சரியில்லை என்று விமர்சித்து கட்சியிலிருந்தும் விலகினார்.

நாடகங்களுக்குகாக பரீக்ஷா என்ற நாடகக் குழுவை நடத்தி வந்தவர். ஜனரஞ்சக நாடகங்கள் மிகுந்திருந்த காலத்தில் நவீன நாடகங்களை மேடையேற்ற முக்கியமான நாடகக் குழுவாக பரீக்ஷா இருந்தது. ஞாநி இக்குழுவுக்காக பலூன், வட்டம், எண் மகள், விசாரணை, சண்டைக்காரிகள் போன்ற நாடகங்களை எழுதி இயக்கினார். 

சில காலம் இடைவெளி கண்ட இந்தக் குழுவின் இயக்கம், கடந்த சில ஆண்டுகளாக மீண்டும் உயிர்பெற்றுள்ளது. பரீக்ஷா சார்பில் சென்னையில் நாடங்கள் அரங்கேறியுள்ளன.

இலக்கிய விவாதங்களுக்காக கேணி என்ற அமைப்பை ஏற்படுத்தி தனது வீட்டிலேயே பல கூட்டங்களை நடத்தியவர். கோலம் என்ற அமைப்பை நிறுவி அசோகமித்திரன் சிறுகதைப் போட்டியை முதல் ஆண்டாக கடந்த ஆண்டில் நடத்தினார். 


ஆண்டு தோறும் இந்த பரிசை அளிக்க எண்ணிய அவர், முதல் ஆண்டு பரிசு வழங்கும் விழாவிலேயே முன்னுதாரணத்தை அளித்துச்சென்றார். விருது விழாவில் பரிசு பெற்ற இளம் சிறுகதையாளர்கள் அனைவருக்கும் அசோகமித்தரனின் சிறுகதைகள் மொத்தத் தொகுப்பையும் பரிசாகக் கொடுத்தார். அத்துடன் பரிசு பெற்ற சிறுகதைகள் அனைத்தையும் சிறு நூலாக வெளியிட்டு இலவசமாக விழாவுக்கு வந்தவர்களுக்கு வழங்கினார்.

ஓவியத்திலும் நாட்டம் கொண்டவர் ஞாநி. அவரது பாரதியின் முகச்சித்தரம் இப்போது இளைஞர்களின் டீ-சர்ட் வரை புகழ்பெற்றுள்ளது. 


இந்த ஓவியத்தின் சாயலுடன் கூடிய பாரதியின் முகச்சித்திரத்தை ட்ராஸ்கி மருது பிற்காலத்தில்தான் வரைந்துள்ளார்.

திரைத்துறையிலும் ஈடுபாடு கொண்டிருந்த ஞாநி, அய்யா என்ற பெயரில் பெரியாரின் வாழ்க்கை வரலாற்றை குறும்படமாக எடுத்தவர். ஜேம்ஸ் இப்போது என்ன செய்ய வேண்டும் என்ற மற்றொரு குறும்படத்தையும் எடுத்திருக்கிறார்.


பத்திரிகையாளர் என்று தொலைக்காட்சி விவாதங்களில் தோன்றும் ஞாநிக்கு இத்தனை மாறுபட்ட முகங்கள் உள்ளன. 

தனது ஆளுமையின் இந்த முகங்களை ஒவ்வொன்றையும் தொடர்ந்து 40 ஆண்டுகளுக்கும் மேலாக எழுத்து, பேச்சு, களப்பணி மூலம் பிறருடன் பகிர்ந்தும் வந்திருக்கிறார்.

ஞாநி தனது விரிவான வாழ்க்கை அனுபவங்களை எழுத்தில் பதிவுசெய்ய வேண்டும் என்று அவரது நீண்டகால நண்பர் பாஸ்கர் சக்தி தொடர்ந்து கேட்டுக்கொண்டிருக்கிறார்.


 எழுதிவிடுவதாக அவருக்கு ஒவ்வொரு முறையும் நம்பிக்கை கொடுத்து வந்த ஞாநி அந்த நம்பிக்கை பூர்த்தியாகாமலேயே காலத்தில் கலந்திருக்கிறார். 
அவர் இச்சமூகத்திற்கு அளித்த கொடை அவருடன் பழகிய பல துறை வல்லுநர்களால் காலத்தில் பதிவாகும் என்பதில் சந்தேமில்லை.
                                                                                                                                   சமயத்தில் இருந்து,

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

2025ல் தங்கம் விலை

வினேஷ் போகத் வென்றார்!

முடிவுக்கு வருகிறதா?