இன்றைய செய்தி,நாளைய வரலாறு. நாளைய வரலாறை படிப்போம்.

சனி, 17 மார்ச், 2018

மானத்தை விற்றவர்கள்.

சந்திரபாபு நாயுடுவின் அரசியலுக்கு நேர் எதிர் அரசியலில் வடக்கு வாழ்கிறது தெற்கு தேய்கிறது என்ற வார்த்தைக்கு சொந்தமான திராவிட இயக்கத்திலிருந்து வந்த அதிமுக தலைவர்கள் மோடியின் அடிமைகளாக செயல்படுவதால் தமிழக நலன் பாதிக்கப்படுகிறது.
தென் இந்தியா சுதந்திரத்திற்கு முன்னும் பின்னும் அற்புதமான தலைவர்களை அளித்துள்ளது. போராட்டக்களமாக என்றுமே இருந்தது திராவிடம் என்று அழைக்கப்படும் தென் மாநிலங்களே. 
கர்நாடகாவை தவிர்த்து இடதுசாரி அரசியல், சமூக நீதி அரசியலுக்கு பெயர் போனது தமிழ்நாடு, ஆந்திர, கேரள மாநிலங்கள் ஆகும்.
சுதந்திரமடைந்த பின்னரும் வீரமிக்க தெலுங்கானா போராட்டமும், திருவனந்தபுரம் சமஸ்தானத்திற்கு எதிராக நடந்த போராட்டமும் வரலாற்றில் நிற்பவை.
கம்யூனிஸ்டுகளும், திராவிடர் கழகமும் அதன் தொடர்ச்சியாக திமுகவும் காங்கிரஸுக்கு மாற்றாக தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில் கால் ஊன்ற பத்தே ஆண்டில் கேரளத்திலும், இருபதே ஆண்டுகளில் தமிழகத்திலும் காங்கிரஸ் ஆட்சிக்கு மாற்று ஆட்சி அமைந்தது.
தமிழகத்தின் நலனை தொடர்ந்து புறக்கணித்ததால் வடக்கு வாழ்கிறது தெற்கு தேய்கிறது என்ற கோஷம் முன் வைக்கப்பட்டது.
தமிழகத்தை மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் காங்கிரஸும் தற்போது பாஜகவும் நடத்துவது என்றுமே மாறாத ஒன்று.
 திமுக 1971-ல் சில ஆண்டுகள் காங்கிரசுக்கு ஆதரவாக இருந்தாலும் தமிழ் நாட்டின் நலனையும்,உரிமைகளையும் விட்டுக்கொடுத்ததில்லை.
ஆனாலும் எம்ஜிஆர் அரசியல் தலைவரான பின்னர் போட்டியில்  பல நேரங்களில் அரசியல் நிலைப்பாடு மற்றும் பல்வேறு நிர்பந்தங்கள் காரணமாக தமிழக நலன்கள் காவுகொடுக்கப்பட்டன.
காவிரி ஒப்பந்தம், கச்சத்தீவு என இன்றும் சர்ச்சைக்குரிய விஷயங்கள் உள்ளன. ஆனால் காவிரி பிரச்சனையில் எப்போதும் இல்லாத அளவுக்கு உரிமைகள் மறுக்கப்படுவதும் உச்சநீதிமன்றமே தீர்ப்பளித்த பிறகும் அதை மத்திய அரசு நிறைவேற்ற மறுப்பதும் தொடர்கதையாகி வருகிறது.
2014-ல் தமிழகத்திற்கு பலமுறை படை எடுத்து நம்மூர் அரசியல்வாதிகளைவிட நம் விவசாயிகளைப்பற்றி கவலைப்பட்டு பேசிய பிரதமர் தற்போது காவிரி மேலாண்மை வாரியம் பிரச்சனைக்கு போராடும் எதிர்க்கட்சிகளை சந்திக்க  கூட மோடி  மறுக்கிறார்.
ஜி.எஸ்.டியில் தொடங்கி மத்திய பட்ஜெட் வரை தமிழகத்திற்கான உரிமைகள் மறுக்கப்படுகிறது. 
வெள்ள நிவாரண நிதி, வறட்சி நிவாரண நிதி எதுவும் வரவில்லை.
தமிழகத்தில் உள்ள நிலையற்ற அரசியல் சூழ்நிலையையும், ஆட்சியாளர்களின் சுயநலத்தையும் நன்றாக பயன்படுத்திக்கொள்கிறது மத்திய அரசு.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் விவகாரத்தில் மத்திய அரசின் மெத்தனப்போக்கை கண்டித்து சடங்குப்பூர்வமான போராட்டத்தை நடத்துகிறார்கள். 
துணிச்சலான நடவடிக்கை எடுக்க துணிவில்லை.திமுக உட்பட்ட எதிர்க்கட்சிகள் ஆளும் அதிமுகவுக்கு ஆதரவாகத் திரண்டாலும் கூட எடப்பாடி,பன்னிர் செல்வம் ஆட்சியாளர்களுக்கு மோடி ஆட்சியை,தமிழகப்புறக்கணிப்பை தட்டிக்கேட்க திராணி இல்லை என்பது வேதனையான உண்மை.
இதுவரை பாஜகவின் பசப்பு வார்த்தைகளால் அத்துனுடன் கூட்டணியில் இருந்து தனது குள்ளநரித்தனத்தை பாஜக வெளிப்படுத்தியாதல் மத்திய அமைச்சரவையில் இருந்தே விலகிய சந்திரபாபு நாயுடு துணிச்சலாக கொண்டு வந்துள்ள நம்பிக்கை இல்லா தீர்மானத்தில் அதிமுக இணையுமா என்ற கேள்விக்கு துணை சபாநாயகர் தம்பிதுரை, முதல்வர் உடைபட்ட அதிமுக தலைமையினர்  நழுவி தப்பித்து ஓடுகிறார்கள். காவேரியை விட்டு, விட்டு சம்பந்தமில்லாமல் பெண் பத்திரிகையாளரை வர்ணிக்கிறார்கள்.
என்ன நம்பிக்கை இல்லா தீர்மானம் என்று தூக்கத்திலிருந்து விழித்து வந்தவர்போல் கேட்கிறார் தம்பிதுரை.
இந்தியாவிலேயே இரண்டு அவைகளிலும் 51 எம்பிக்களை வைத்துள்ள அதிமுக மத்திய அரசை பயமுறுத்தாமல் பயந்து நடுங்குகிறது.காரணம் தங்கள் தலைவியைப்போல் சொத்துக்களைக் குவித்து வைத்திருப்பதால் அதிமுக குடுமி பாஜக தலைகள் கையில் உள்ளது.
அடுத்து ஆட்சியை  எந்த வகையிலும் அமைக்க முடியாது அடுத்த தேர்தலில் அதிமுக என்று ஒன்று இருக்குமா என்ற ஐயத்தில் காலம் கடத்துகின்றனர்.பதவியில் ஒட்டிக்கொண்டு இருந்தால் பாஜகவை பகைக்காமல் இருந்தால் எல்லா வகையிலும் லாபம் என்றே கார்  டயருக்கு பதில் டெல்லியை நோக்கி தங்கள் தரை வணக்கத்தை வைத்துள்ளனர்.
2021 வரை ஆட்சியை தள்ளிக்கொண்டு போகவேண்டும் என்ற முனைப்பில்தான்  இருக்கிறார்கள்.ஆட்சியை விட்டு விட்டால் அடுத்து திகாரத்தான் என்பதாலேயே தங்களுக்குள் அடித்து,உதைத்துக்கொண்டாலும் வெளியே கட்டிப்பிடித்து புன்னகைக்கிறார்கள்.
அடுத்த தேர்தலில் தங்களுக்கு போட்டியிட  வாய்ப்புக்கிடைக்காது,கிடைத்தாலும் நோட்டாவை வீட்டா குறைவாகத்தான் வாக்கு பெறுவோம் என்ற நம்பிக்கைதான் பதவியை விட்டு விலகாமல்,தமிழக மக்கள் என்னதான் திட்டினாலும்,கிண்டலடித்தாலும் ஏன் காரித்துப்பினாலுமே அசையாமல் இருக்கும் தியான நிலை யோகாவை கடைபிடிக்கின்றனர்.
உண்மையிலேயே அதிமுகவினர் ஆட்சி என்றால் சந்திரபாபு நாயுடுவுடன் கரம்கோர்க்கும் நேரம் இது, இதன்மூலம் காவிரி மேலாண்மை கோரிக்கை பக்கம் மத்திய அரசை இழுக்க முடியும் ஆனால் அதற்குரிய துணிச்சல் அதிமுகவுக்கு இல்லை ,அவர்கள் அடிமைகள் என்பதைத்தான் முன்னாள் எம்.பி. கே.சி.பழனிசாமி பாஜகவை தாக்கிப்பேசியதால் நீக்கிய  காட்டுகிறது.மற்றபடி கட்சியும் இல்லை,கட்டுப்பாடும் இல்லை,மீறலும் இல்லை.
அண்ணாவின் "வடக்கு வாழ்கிறது தெற்கு தேய்கிறது"குரல் தற்போதுதான் உண்மை என்பதை தென் மாநிலங்களை உண்மைதான் அசைத்துள்ளது.  ஆனால் அண்ணாவை தங்கள் கட்சியின் பெயரிலே வைத்திருக்கும்  ஆட்சியாளர்களுக்கு அதை சந்திரபாபு நாயுடு சொல்வதை கேட்கும்  துணிவு கூட இல்லை.
இந்தியா முழுக்க பாஜக வென்ற போது தமிழ்நாட்டில் பாஜகவை விலக்கிவிட்டு அதிமுகவுக்கு  கிடைத்த 37 எம்பிக்களும் மோடிக்கு கைக்கட்டி வாழ்த்துவதற்காக கிடைத்ததல்ல.தமிழக நலனுக்காக வாதாடி திட்டங்களைப் பெற்றுத்தர.
ஆனால் மக்களவையில் "காஷ்மீர் பியுட்டிபுல் காஷ்மீர் "என்று பாடியதைத்தவிர அதிமுக எம்பிகள் செய்தது என்ன?
இப்படிப்பட்ட 37 பொம்மைகள் அங்கு இருந்தாலென்ன,அதற்கெல்லாம் தலையாய தலையாட்டி பொம்மை அதிமுக இங்கு ஆண்டாலென்ன?
தமிழக மக்களுக்கு ஒரு பயனும் இல்லை.யாருமில்லா அனாதை குழந்தையாக இந்தியாவில் அழுது திரிகிறது தமிழ் நாடு.
இதற்கு காரணம் வெறும் 500 ரூபாயை வாங்கிக்கொண்டு வாக்களித்த பிச்சைக்காரர்கள்தான். 
அவர்கள்தானே 500 ரூபாய்க்கு தமிழர்களின் மானம்,மரியாதை,உரிமைகளை இப்படி அடிமைகளிடம் விற்றனர்.
அடுத்த மாநில முதல்வர் நாங்கள் தமிழ்நாடு போல் முதுகெலும்பில்லாதவர்கள் அல்ல என்று சொல்ல வைத்ததற்கு அடிப்படையே இந்த வாக்கு விற்ற கயவர்கள்தானே.
இவர்கள்தானே இந்த முனையற்ற அம்பை  செங்கோட்டைக்கும்,செயின்ட் ஜார்ஜ் கோட்டைக்கும் செலுத்தியவர்கள்.
அவர்கள் செலுத்திய அம்பிற்கு காலில் விழுவதைத்தவிர மார்பில் பாயத்தெரியாது என்பது மிக வேதனையான உண்மை.
========================================================================================
இதை அந்த 56 இஞ்சுக்கு சொல்லுங்கோ !
சார் ! என்ன சார் ! திடீர்னு ஒருத்தர் திராவிடநாடுங்கிறார் .. என்னொருத்தர் தனித்தமிழ்நாடுங்கிறார்ன்னு பதறிக்கேட்டார் நண்பர் .
நான் சொன்னேன் காவிகள் தொடர்ந்து ஆட்டம் போட்டால் இந்தியா 56 துண்டுகளாய் மீண்டும் சிதறினாலும் ஆச்சரியப்பட மாட்டேன் ! இதை அந்த 56 இஞ்சுக்கு சொல்லுங்கோ !
இந்தியா ஒற்றை நாடல்ல .பல மாநிலங்களின் ஒன்றியம் .உபகண்டம் .பலமொழி ,பல இனம் ,பல பண்பாடு ,பல்வேறு தட்பவெப்பம் கொண்ட நாடு இதனை மறந்து ஒரு மொழி - ஒரு மதம்- ஒரு பண்பாடு -ஒரு தேசம் என காவிகள் கொக்கரிப்பு அதிகமாக அதிகமாக பிரிவினை மனோநிலை அதிகரிக்கவே செய்யும் .
மாநிலங்களின் உரிமை பறிக்கப்பட பறிக்கப்பட தேசபக்தி அதிகரிக்காது ; எரிச்சலும் வெறுப்பும் கோபமுமே மேலோங்கும் .
நீட் எதற்கு ? ஆதர் எதற்கு ? மாநிலங்களை மிதிக்கும் எதேச்சதிகாரம் எதற்கு ? மொழி ,பண்பாடு திணிப்பு எதற்கு ?

மாநிலங்களிடையே பாரபட்சம் எதற்கு ? மாநில மக்கள் விரும்பாத திட்டங்கள் எதற்கு ?
குஜராத் பனியாக்களும் பிராமணிய மேலாதிக்கமுமே இலக்கென செயல்படும் இந்துத்துவவெறி இந்தியாவுக்கு பேராபத்து என்பதை தேசம் இப்போதேனும் உணர்ந்தால் விடிவு .இல்லையேல் பேரழிவு நிச்சயம் .
                                                                                                                - சு.பொ.அகத்தியயலிங்கம்,======================================================================================
ன்று,
மார்ச்-17.
  • ரப்பர் பேண்ட் கண்டுபிடிக்கப்பட்டது(1845)
  • இத்தாலிய பேரரசு அமைக்கப்பட்டது(1861)
  • ரவுலட் சட்டத்தை எதிர்த்து பிரசாரம் செய்ய மகாத்மா காந்தி சென்னை வந்தார்(1919)
  • கலிபோர்னியம் என்ற 98வது தனிமம் கண்டுபிடிக்கப்பட்டது(1950)
  • அமெரிக்கா வங்கார்ட் 1 செய்மதியை ஏவியது(1958)
=======================================================================================
2018-19 தமிழக பட்ஜெட் - எம் விமர்சனத்தை சொல்ல சில சிற்றாய்வுகள் செய்யவேண்டி இருந்தன. ஆதலால் இந்த தாமதம். 
நிதிநிலை அறிக்கைப் பற்றிய எம் கருத்து