ஓட்டை விழுந்த கோட்டை.
உத்தரப்பிரதேசத்திலும், பீகாரிலும் மூன்று மக்களவைத் தொகுதிகளுக்கும் ஒரு சட்டப்பேரவை தொகுதிக்கும் நடைபெற்ற இடைத்தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி படுதோல்வி அடைந்துள்ளது.
குறிப்பாக உத்தரப்பிரதேசத்தில் பாஜக அரசின் முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்தின் கோட்டை என்று கருதப்பட்ட கோரக்பூர் தொகுதியிலும் துணை முதலமைச்சர் கேசவ் பிரசாத் மவுரியாவின் பூல்பூர் தொகுதியிலும் சமாஜ்வாதி கட்சி வேட்பாளர்களிடம் பாஜக வேட்பாளர்கள் மண்ணைக் கவ்வியுள்ளனர். யோகியின் கோட்டை, சமாஜ்வாதி - பகுஜன் சமாஜ் அணியால் றுக்கப்பட்டிருக்கிறது.
உத்தரப்பிரதேசத்தில் கடந்த 2014ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக 71 தொகுதிகளை கைப்பற்றியது.
நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றிபெற்ற அதே வேகத்தில், கடந்த ஆண்டு அங்கு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலிலும் பாஜக பெரும் வெற்றியைப் பெற்றது. மாநிலத்தை முற்றாக மதவெறிமயமாக்கும் நோக்கத்துடன், போலிச்சாமியாரான யோகி ஆதித்யநாத்தை பாஜக மேலிடம் முதலமைச்சராக்கியது.
யோகி தலைமையிலான பாஜக அரசு, கடந்த ஓராண்டு காலத்தில் உத்தரப்பிரதேசத்தை மதவெறி வன்முறைக் களமாக மாற்றி வருகிறது.
யோகி தலைமையிலான பாஜக அரசு, கடந்த ஓராண்டு காலத்தில் உத்தரப்பிரதேசத்தை மதவெறி வன்முறைக் களமாக மாற்றி வருகிறது.
எண்ணற்ற என்கவுண்ட்டர் படுகொலைகள், இந்தியாவிலேயே மிக அதிகமான மதவெறி தாண்டவச் சம்பவங்கள் என உத்தரப்பிரதேச மக்கள், யோகியின் ஆட்சியில் மிகப்பெரும் துயரத்தில் எதிர்கொண்டுள்ளனர்.
இந்த நிலையில், யோகி ஆதித்யநாத் தொடர்ந்து 5முறை வெற்றிபெற்று வந்த கோரக்பூர் மக்களவைத் தொகுதி எம்.பி. பதவியை ராஜினாமா செய்திருந்தார்.
அதேபோல அவரது அரசின் துணை முதலமைச்சராக பொறுப்பேற்ற மற்றொரு பாஜக தலைவரான கேசவ் பிரசாத் மவுரியா, பூல்பூர் மக்களவைத் தொகுதி எம்.பி. பதவியை ராஜினாமா செய்திருந்தார்.இந்த இரண்டு தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது.
இடைத்தேர்தலில் யாரும் எதிர்பாராவண்ணம் சமாஜ்வாதி கட்சி வேட்பாளருக்கு ஆதரவளிப்பதாக, அக்கட்சியின் பரம எதிரியான பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவர் மாயாவதி அறிவித்தார். இந்த அறிவிப்பு உத்தரப்பிரதேச அரசியலில் மட்டுமின்றி தேசிய அரசியலிலும் புதிய தாக்கத்தை ஏற்படுத்தியது.
ஆனால் கோரக்பூர் காவிகளின் முக்கிய கோவில்கள்,மடங்கள் உள்ளன.அவைகளுக்கு யோகி ஆத்யனாத்தான் தலைமை சாமியார்.
அந்த மடம் மூலம் பள்ளிகள்,மருத்துவமனைகள் நடத்த்தப்படுகின்றன.எனவே இதுவரை நடந்த தேர்தகளில் ஆத்யநாத் மொத்த வாக்குகளில் 60% வரை பெற்று வந்தார்.எனவே அது பாஜகவின் கோட்டையாகவே இதுவரை இருந்து வந்துள்ளது.
சமாஜ்வாதி தொண்டர்களும் பகுஜன் சமாஜ் தொண்டர்களும் கரம்கோர்த்து களத்தில் பணியாற்ற வேண்டுமென்று அழைப்பு விடுத்தார்.
இந்தப் பின்னணியில் மார்ச் 11 அன்று கோரக்பூர், பூல்பூர் ஆகிய தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெற்றது.
வாக்கு எண்ணிக்கை மார்ச் 14 புதனன்று நடைபெற்றது. துவக்கம் முதலே இரு தொகுதிகளிலும் சமாஜ்வாதி கட்சி வேட்பாளர்கள் முன்னிலை பெற்றனர்.
இந்த தகவல்கள் வெளியானது முதல் தேசிய அரசியலில் பாஜகவுக்கு எதிரான புதிய குதூகலம் பிறந்தது. வாக்கு எண்ணிக்கை முடிவடைந்த நிலையில் கோரக்பூர் தொகுதியில் சமாஜ்வாதி கட்சி வேட்பாளர் பிரவீண்குமார் நிசாத், பாஜக வேட்பாளர் உபேந்திரதத் சுக்லாவைவிட 21 ஆயிரத்து 961 வாக்குகள் வித்தியாசத்தில் மகத்தான வெற்றி பெற்றார்.
பூல்பூர் தொகுதியில் சமாஜ்வாதி வேட்பாளர் நாகேந்திர பிரதாப் சிங் படேல், பாஜக வேட்பாளர் கவுஷ்லேந்திர சிங்கைவிட 59 ஆயிரத்து 613 வாக்குகள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றியினைப் பெற்றார். இருதொகுதியிலும் தனித்துப் போட்டியிட்ட காங்கிரஸ் டெபாசிட் இழந்தது.
பீகாரிலும் இதேபோல அரேரியா மக்களவைத் தொகுதியில் ராஷ்ட்டிரிய ஜனதா தள வேட்பாளர், பாஜக வேட்பாளரை 23 ஆயிரம் வித்தியாசத்தில் வீழ்த்தினார்.
பீகாரில் ஜெகனாபாத் சட்டமன்றத் தொகுதியில் ராஷ்ட்டிரிய ஜனதா தளமும், பபுவா சட்டமன்றத் தொகுதியில் பாஜகவும் வெற்றிபெற்றன.
உத்தரப்பிரதேசத்திலும், பீகாரிலும் மூன்று மக்களவை இடைத்தேர்தல்களில் பாஜக அடைந்துள்ள படுதோல்வியும் ,ராஜஸ்தானில் பெற்ற தோல்வியும் பாஜகவை பொறுத்தவரை அவர்கள் கோட்டைகளில் விழுந்த ஓட்டைதான்.
ஆனால் இதுதான் 2019 மக்களவைத் தேர்தலில் நரேந்திர மோடி ஆட்சியின் வீழ்ச்சியின் துவக்கம் .
எந்த விலை கொடுத்தும் ஆட்சியை கைப்பற்றும் தரமிழந்த பாஜக அடுத்துவரும் நாட்களில் தங்கள் வெற்றிக்ககாக ஜனநாயகத்தை கொலை செய்யும் கேலிக்கூத்துகள்,வன்முறைகள் என்ன,என்ன செய்யப்போகிறதோ.?
உலக ஊடகங்களை ஈர்த்த மும்பை நெடும் பயணம்
இந்திய விவசாயிகளின் போராட்ட வரலாற்றில் பொன்னெழுத்துக்களால் பொறிக்கத்தக்க நெடும்பயணத்தை இந்திய ஊடகங்கள்,தொலைக்காட்சிகள் கண்டுகொள்ளாமல் இருந்தபோதிலும் உலக ஊடகங்கள் மிகுந்தமுக்கியத்துவம் அளித்துள்ளன.
பிரிட்டனின் பிபிசி, அமெரிக்காவின் வாஷிங்டன் போஸ்ட்,டெய்லி மெயில், ஜப்பான் டைம்ஸ், சீன நாளிதழான சின்குவா உள்ளிட்டவை தலைப்புச் செய்தியாக வெளியிட்டுள்ளன.
சிபிஎம் தலைமையிலான அகில இந்திய விவசாயிகள் சங்கம், விவசாயிகளின் உரிமைகளை வென்றெடுக்க இந்தியாவின் பொருளாதார தலைநகரத்தை முற்றுகையிட்டனர் என்பதாக கார்டியன் நாளிதழ் செய்திவெளியிட்டுள்ளது.
நாசிக்கிலிருந்து புறப்பட்டபயணம் தினமும் மக்கள் ஆதரவை பெற்று கடந்து வந்த விவரமான செய்தியை கார்டியன் வழங்கியுள்ளது.
மகாராஷ்டிர விவசாயிகள் போராட்டம் வெற்றிகரமாக நிறைவடைந்தது என்று செய்தி வெளியிட்டுள்ளது பிபிசி. போராட்டத்தின் மூலம் விவசாயிகள் வென்றெடுத்துள்ளகோரிக்கைகளையும் அது பட்டியலிட்டுள்ளது.
பதினாயிரக்கணக்கில் விவசாயிகளும்,பெண்களும் பங்கேற்ற நெடும்பயணம் மாபெரும் நிகழ்வு என்பதாக அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது.
இந்திய விவசாயிகள் அனுபவித்துவரும் பிரச்சனைகளுக்கு சுமூக தீர்வு காணப்பட வேண்டும் எனவும் பிபிசி சுட்டிக்காட்டியுள்ளது.இந்திய அரசின் நவீன தாராளமய கொள்கைகளுக்கு எதிராக செங்கொடியேந்தி விவசாயிகள் தங்களது கோரிக்கைகளுக்காக நடத்திய போராட்டம் என லத்தின்அமெரிக்க நாளிதழான டெலிஸுர்ட் குறிப்பிட்டுள்ளது.
போராட்டத்தின் பல்வேறு புகைப்படங்களும் இதில் இடம்பெற்றுள்ளன. கடும் வெயிலின் தாக்கத்தையும் தாங்கி பதினாயிரக்கணக்கான விவசாயிகள் இந்தியாவின் பொருளாதார தலைநகரை முற்றுகையிட்டதாக வாஷிங்டன் போஸ்ட் குறிப்பிட்டுள்ளது.
விவசாயிகளுக்கு இக்கட்டான நிலை ஏற்பட்டுள்ளபோது, உதவாத அரசுக்குஎதிரான போராட்டம் எனவும் அச்செய்தி தெரிவிக்கிறது.
======================================================================================
மார்ச்-15.
- உலக நுகர்வோர் தினம்
- தென்னாப்பிரிக்கா காமன்வெல்த் நாடுகள் கூட்டமைப்பில் இருந்து வெளியேறியது(1961)
- முதலாவது இணைய டொமைன் பெயர் பதியப்பட்டது(1985)
- சூரிய குடும்பத்தில் அதிவேகமான பொருளான 90377 செட்னா கண்டுபிடிக்கப்பட்டது(2004)
ஸ்டீபன் ஹாக்கிங்
வாழ்க்கையில் சோதனைகளை சாதனைகளாக மாற்றிய மகத்தான மனிதன் தான் ஸ்டீபன் ஹாக்கிங். நரம்பியல் நோயால், உடல் உறுப்புகள் செயலிழந்து, பேசும் திறனையும் இழந்தாலும், அயராத உழைப்பு, அறிவியல் மீதான அதீத ஈர்ப்பால் உலகம் போற்றும் தன்னிகரற்ற இயற்பியல் அறிஞராக உருவெடுத்தார்.
டைம் மெஷின், பிளாக் ஹோல், ஏலியன், பிக்பேங் தியரி என அண்டவியல் தொடர்பான பல ஆராய்ச்சிகளை வெற்றிகரமாக நிகழ்த்தினார்.
இங்கிலாந்தின் ஆக்ஸ்போர்டு நகரில், 1942 ஜன., 8ல் ஸ்டீபன் ஹாக்கிங் பிறந்தார். கல்லுாரியில் படித்துக்கொண்டிருந்த போது, ALS எனப்படும் என்ற நரம்பியல் நோயால் பாதிக்கப்பட்டார்.
உடல் உறுப்புகள் செயலிழக்கத் தொடங்கின.
கேமராவும், சென்சாரும் பொருத்தப்பட்ட கண்ணாடி. கம்ப்யூட்டர் இணைக்கப்பட்ட சக்கர நாற்காலியுடன் தன் மன உறுதியால் மறு பிறவி எடுத்தார்.
சக்கர நாற்காலியுடன், கேம்பிரிட்ஜ் பல்கலையில் காஸ்மோலாஜி எனப்படும் அண்டவியல் துறையில் ஆய்வு படிப்பை முடித்தார்.
பின் கல்லுாரி பேராசிரியராக பணியாற்றி வந்த நிலையில், அவரது பேசும் திறனையும் இழந்தார்.
பின் 'வாய்ஸ் சிந்தஸைசர்' கருவியுடன் பேசினார்.
உடல்நிலை பாதிப்பால் இரண்டு ஆண்டுகள் மட்டுமே வாழமுடியும் என டாக்டர்கள் அவரது21 வயதில் தெரிவித்தனர்.
ஆனால் மனம் தளராத இவர், மூளையின் செயல்பாட்டைக் கொண்டு மேலும் 55 ஆண்டுகள் வாழ்ந்து காட்டினார்.
விண்வெளிக்கு செல்ல வேண்டும் என ஆசைப்பட்டார். அது நிறைவேறவில்லை.
இருப்பினும், ஒரு மாற்றியமைக்கப்பட்ட விமானத்தில் அண்டார்டிகா மேலே பறந்து ஈர்ப்பு விசை அற்ற நிலையை உணர்ந்தார்.
ஸ்டீபன் ஹாக்கிங் வாழ்வு, இளம் தலைமுறைக்கு தன்னம்பிக்கை அளித்தது. நோய் தாக்கத்தால் இவரது தலை, வலது பக்கம் சாய்ந்திருக்கும். 'வீல் சேரில்' அமர்ந்தவாறு அழகாக புன்னகைப்பார். அண்டம், ஏலியன், வேற்று கிரகம், பூமியை காக்கும் ஆராய்ச்சியில் ஈடுபட்டார்.
'கடவுளின் துகள்' எனப்படும் 'ஹிக்ஸ் போஸன்', இந்த பிரபஞ்சத்தையே அழிக்கும் ஆற்றல் கொண்டது எனவும் எச்சரித்தார்.
எழுத்தாளராகவும் பரிணமித்த இவர், பல நுால்களை எழுதியுள்ளார். இதில் சாதாரண மக்களும் புரிந்து கொள்ளும் வகையில் இவரது, 'A BRIEF HISTORY OF TIME' என்ற புத்தகம், விற்பனையில்ஒரு கோடியை எட்டி சாதனை படைத்தது.
தமிழ் உள்பட 35 மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டது.
ஹாக்கிங்கின் மூளை நரம்புகளை இந்தக் கருவியோடு இணைத்து, அவர் பேச நினைப்பவை வார்த்தை வடிவங்களாக கருவியில் வெளிவரும் வகையில் உருவாக்கியிருந்தனர்.
பல்வேறு ஆராய்ச்சிகளில் ஈடுபட்ட ஹாக்கிங். அண்டவியல் துறையில் செய்த ஆய்வுகள், பிரபஞ்சம் குறித்த பல புதிர்களுக்கு விடையளிக்கும் விதமாக அமைந்தன.
கருந்துகள்கள் குறித்து அவர் வெளியிட்ட ஆராய்ச்சி முடிவுகள் இயற்பியல் துறையில் முக்கிய முன்னேற்றமாக கருதப்படுகிறது.
இந்நிலையில் பிரிட்டனின் கேம்பிரிட்ஜில் உள்ள தன் இல்லத்தில் காலமானார்.
ஜெர்மனி இயற்பியல் அறிஞர் ஐன்ஸ்டின்னுக்கும் ஸ்டீபன் ஹாக்கிங்ற்கும் நிறைய ஒற்றுமைகள் உள்ளன. இருவருக்கும் மூளை ரீதியான பிரச்சனை இருந்தது.
மாமேதை காரல் மார்க்ஸ் இறந்த மார்ச்-14 அன்றுதான் ஹாக்கிங் இறந்துள்ளார்.
ஐன்ஸ்டின் பிறந்த தேதியில் (1879 மார்ச் 14),
ஹாக்கிங் மரணம்(2018 மார்ச் 14) அடைந்து இருக்கிறார்.
இருவரும் இறந்த போது 76 வயது.
இத்தாலிய இயற்பியலாளர் கலிலியோ 1642, ஜன. 8ல் மறைந்தார்.
300 ஆண்டுகளுக்கு பின்ஜன. 8ல் ஹாக்கிங் பிறந்தார்.
ஸ்டீபன் ஹாக்கிங் கடந்த 2001, ஜனவரியில் இந்தியா வந்தார்.
மும்பையில் நடந்த சர்வதேச இயற்பியலாளர்கள் மாநாட்டில் உரையாற்றினார்.
தனது 59வது பிறந்த நாளை (ஜனவரி -8) மும்பை, ஒபராய் ஓட்டலில் கொண்டாடினார்.
'இந்தியர்கள் கணக்கு மற்றும் இயற்பியலில் வல்லவர்கள்,' என பாராட்டிச் சென்றார் .