படத்தை மாட்டுங்கள் ....!
பெட்ரோல் நிலையங்களில் பிரதமர் மோடியின் படத்தைக் கட்டாயம் வைக்கவேண்டும் என்று பொதுத்துறை பெட்ரோலிய நிறுவனங்கள் வாய்மொழி உத்தரவிடப்பட்டிருப்பதாகத் தெரிகிறது..
பொதுத்துறை நிறுவனங்களான இந்தியன் ஆயில், இந்துஸ்தான் பெட்ரோலியம், பாரத் பெட்ரோலியம் ஆகியவை பெட்ரோல் டீலர்களுக்கு இத்தகைய வாய்மொழி உத்தரவை வழங்கியுள்ளது.
இந்த உத்தரவு குறித்து இந்திய பெட்ரோல்டீலர்கள் கூட்டமைப்பின் தலைவர் எஸ்.எஸ்.கோகி கூறும்போது, “பிரதமர் நரேந்திர மோடியின் படத்தை பெட்ரோல் நிலையங்களில் வைக்குமாறு உத்தரவிடுகின்றனர்.
இதற்கு மறுப்பு தெரிவிப்பவர்களுக்கு சப்ளை நிறுத்தப்படும் என்ற மறைமுக அச்சுறுத்தலும் விடுக்கப்படுகிறது” என்று அதிர்ச்சித் தகவலை வெளியிட்டார்.
பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களின் ஏரியா அதிகாரிகள் மூலம் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அதாவது வறுமைக் கோட்டுக்குக் கீழ் உள்ளவர்களுக்கு எல்பிஜி இணைப்பு வழங்கும் திட்டத்தை குறிப்பிட்டு, ஒரு படம் வைக்க வேண்டும் என்ற உத்தரவே அது. நிறுவனங்களின் பிராந்திய அதிகாரிகளிடமிருந்தோ, விற்பனை அதிகாரிகளிடமிருந்தோ எழுத்துப் பூர்வமாக இது குறித்த உத்தரவு இல்லை என்கிறார் கோகி.
சமீபத்தில் பெட்ரோல் நிலையங்களில் பணியாற்றுவோரின் சுயவிவரங்களை பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் கேட்டதாகவும் ஆனால் அதனை அளிக்க பெட்ரோலிய டீலர்கள் கூட்டமைப்பு மறுத்ததாகவும் அவர்கள் தெரிவித்தனர்.
ஊழியர்களின் சுயவிவரங்களை வைத்துக் கொண்டு அவர்களை சாதி, மதம் ரீதியாக பிரித்து கணக்கெடுக்க முடிவு எடுப்பதாக எழுந்த சந்தேகத்தால் விவரங்களை அளிக்க மறுக்கப்பட்டுள்ளதாக சில டீலர்கள் தெரிவித்தனர்.
கடந்த ஜூன் மாதம் டீலர்களுக்கு ஒரு படிவம் அனுப்பப்பட்டுள்ளது. அதில், “பாதுகாக்கப்பட வேண்டிய சொந்த விவரங்களானசாதி, மதம், ஊழியர்களின் தொகுதி ஆகியவை குறித்த விவரங்கள் கேட்கப்பட்டுள்ளன. இந்த விவரங்களை யார் கேட்டாலும் அது தனியுரிமையை மீறுவதாகும். ஆனால் அரசேகேட்கிறது. நாங்கள் நீதிமன்றம் செல்லவிருக்கிறோம்” என்றார் கோகி.
படிவத்தில் திருமணமானவரா இல்லையா, மொபைல் எண், தந்தை அல்லது காப்பாளர் பெயர், ஆதார் எண், மதம், சாதி, தொடர்பு எண், மின்னஞ்சல் முகவரி, அனுபவம், கல்வித் தகுதி ஆகியவையோடு வங்கி கணக்கு விவரங்களையும் கேட்டுள்ளது.
இதனையடுத்து ஜூன் 11-ம் தேதி பெட்ரோலிய டீலர்கள் பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களுக்கு கடிதம் எழுதி இந்த முயற்சி அடிப்படை உரிமைகளுக்கு எதிரானது என்று எதிர்ப்புத் தெரிவித்தனர்.
பஞ்சாபின் பெட்ரோல் நிலைய உரிமையாளர்கள் கூட்டமைப்பு ஐ.ஓ.சி.எல்., இந்துஸ்தான் பெட்ரோலியம், பாரத் பெட்ரோலியம் ஆகிய நிறுவனங்களின் மூத்த செயலதிகாரிகளுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளனர்.
பஞ்சாபின் பெட்ரோல் நிலைய உரிமையாளர்கள் கூட்டமைப்பு ஐ.ஓ.சி.எல்., இந்துஸ்தான் பெட்ரோலியம், பாரத் பெட்ரோலியம் ஆகிய நிறுவனங்களின் மூத்த செயலதிகாரிகளுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளனர்.
ஆனால் பெட்ரோலிய நிறுவன அதிகாரி ஒருவர் இது குறித்து கேட்ட போது, சுயவிவரங்களைக் கேட்டதை ஒப்புக் கொண்டனர்.
ஆனால் பிரதமரின் திறன் வளர்ப்பு அமைச்சகத்துக்காக அவற்றைக் கேட்டதாகத் தெரிவித்தனர்.
இது ஒருவகையில் நல்லதிட்டம்தான்.தினசரி உயரும் பெட்ரோல் விலை மக்கள் கழுத்தை நெரித்து தினமும் நாடித்துடிப்பை உயர்த்தி கோபத்தை கிளறும் போது மோடியின் படத்தைப்பார்த்தால் எல்லாவற்றிற்கும் இவர்தான் காரணம் என்று கோபத்தை மோடி அரசின் மீது திருப்ப காரணமாக அமையும்.
பீப்பாய் 125 டாலர் பெட்ரோல் விலையில் 40 ரூபாயாக இருந்தபோது அதை எதிர்த்து போராடிய பாஜக ,தற்போது தங்கள் அரசில் 40 டாலருக்கு பீப்பாய் கிடைக்கையில் 82 ரூபாய்க்கு விற்பது எவ்வளவு பெரிய கொடுமை.
மோடிக்கு வாக்களித்த மக்கள் நலனை விட பணமளித்த கார்பரேட்கள் நலனே முக்கியம் என்பதுதான் இந்த நான்கரை ஆண்டு காலா ஆட்சி கூறும் உண்மை.
====================================================================================
இன்று,====================================================================================
ஆகஸ்ட்-26.
தமிழறிஞர் திரு.வி.கல்யாண சுந்தரனார் பிறந்த தினம்(1883)- அமெரிக்காவில் பெண்களுக்கு வாக்குரிமை வழங்கப்பட்டது(1920)
- உக்ரைனில் சோட்கிவ் யூதர்களை குழந்தைகள், நோயாளிகள் உட்பட 500 பேர்களை ஹிட்லர் கொன்று குவித்தனர்.(1942)
- கண்டம் விட்டுக் கண்டம் பாயும் நீண்டதூர ஏவுகணையைத் தாம் சில நாட்களுக்கு முன் பரிசோதித்ததாக சோவியத் ஒன்றியம் அறிவித்தது.(1957 )
சூடாகும் பூமி
பல ஆண்டுகளாக பருவநிலை மாற்றம், புவி வெப்பமயமாதல் என்ற கருத்துக்கள் உலக அரங்கில் பேசப்படும் ஒன்றாகிவிட்டது.
ஆரம்பத்தில் இதை பெரிதாக எடுத்துக்கொள்ளாத சர்வ வல்லமை பொருந்திய ஏகாதிபத்திய நாடுகள் கூட இன்றைக்கு இதன்மீது மிகப்பெரும் அக்கறையும், கவனமும் செலுத்த வேண்டிய அவசியத்தை உருவாக்கிவிட்டது.
இதற்கு இந்தியா மட்டும் எப்படி விதிவிலக்காக இருக்க முடியும்?
இதன் விளைவுதான் கேரளாவில் இன்று ஏற்பட்ட மழை, வெள்ள சேதம்.இயற்கையை பாதுகாக்காவிடில் அதுமக்களின் இயல்பான வாழ்க்கையை பாதிக்கவே செய்யும் என்பதை இந்த வெள்ளச்சேதம் உணர்த்திவிட்டது.
கேரளம் மட்டுமல்ல, சில ஆண்டுகளுக்கு முன்பாக மராட்டியம், குஜராத்தோடு, கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்னால் நமது தமிழகத்தின் தலைநகரான சென்னையும் இந்த வெள்ளத்தால் அழிவை சந்தித்தது கொஞ்சம் நஞ்சமல்ல.
மருத்துவமனையில் இருந்த நோயாளிகள் வெள்ளத்தால் மரணம், இயந்திரங்கள் பழுதாகி லாயக்கற்றவையானது உள்பட சொல்லிமாளாத சேதங்களை நாம் சந்தித்தோம்.
நமது நீலகிரி மாவட்டத்தில் கூடயானைகளின் வழித்தடத்தில் கட்டப்பட்டிருக்கிற 45 ரிசார்ட்டுகளை சீல் வைக்கஉத்தரவிட்டதை அதில் அறிவோம்.
10ஆண்டுகளுக்கு முன்னால் கொடைக்கானல் மலையில் விதிமுறைகளை மீறி கட்டப்பட்ட பிளசண்ட் ஸ்டே ஹோட்டல் விவகாரம் ஊரறிந்த ஒன்று.காவிரியில் ஏற்பட்ட வெள்ளத்தில் 8 மாவட்டங்களில் கரையோரத்தில் வாழும் மக்கள் படக்கூடிய துயரை இப்போது பார்த்து வருகிறோம்.
கொள்ளிடம் ஆற்றில் பாலங்களே அடித்துச் செல்லப்படுவதும், தடுப்பணைகள், மதகுகள் உடைந்து லட்சக்கணக்கான கன அடிநீர் விரயமாகி கடலுக்கு செல்வதையும் கனத்த இதயத்துடன் பார்த்துக் கொண்டிருக்கிறோம்.
பருவநிலை மாற்றம் என்பது ஒவ்வொரு வருடத்தில் இயல்பான மழை அளவை தவறவிடுவதும், கடுமையான வறட்சியை உருவாக்குவதும் சில ஆண்டுகள் கழித்து இடைவிடாது வாரக்கணக்கில் பெய்து பேரழிவை உருவாக்குவதுமான ஒரு கட்டத்திற்கு போய்விட்டது.
ஆகவே, இதற்கு ஏற்றாற்போல் அரசுகள் நீர் மேலாண்மையை தகவமைத்துக்கொள்ள வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. காவிரியில் இப்படிப்பட்ட ஏற்பாடுகளை செய்தால் இந்தியாவின் நெற்களஞ்சியமாகவே தமிழகம் மாறிவிடும்.
ஒகேனக்கல்லிலிருந்து கால்வாய் வெட்டி தென்பெண்ணையாற்றில் இணைப்பதும், காவிரி, வைகை, குண்டாறு திட்டத்தை நிறைவேற்றுவதும், காவிரியில் வாய்ப்புள்ள இடங்களில் எல்லாம் தடுப்பணைகள் கட்டுவதும்மிகப்பெரும் பயன்தரும் திட்டங்களாகும்.
இனியாவது மேற்கண்ட திட்டங்களை நிறைவேற்ற தமிழக அரசு முன்வரவேண்டுமென்பதே எல்லோருடைய எதிர்பார்ப்பு.
இல்லையெனில், வெள்ளத்தினால் ஏற்படும் உயிர்ச்சேதம், பொருட்சேதம்; அதனால் மக்களுக்கு ஏற்படும் சேதாரம் கூடிக்கொண்டே போகும்.
=======================================================================================