திங்கள், 27 ஆகஸ்ட், 2018

தவறான இடத்தில் சரியான மனிதர்?

தமிழகம் முழுவதும், தனியார் கேபிள், 'டிவி' சிக்னலை ஊக்குவிப்பதற்காக, அரசு கேபிள், 'டிவி' சிக்னலில் பழுது ஏற்படுத்தும் சதி நடப்பதாக, அரசு கேபிள், 'டிவி' கூட்டமைப்பு குற்றம் சாட்டி உள்ளது.
தமிழகத்தில், 2007ல், அரசு கேபிள், 'டிவி' செயல்பாட்டிற்கு வந்தது.

2011 முதல், குறைந்த கட்டணமாக, 70 ரூபாய்க்கு, 100 சேனல்கள் வழங்கப்படுகின்றன. 
சென்னை உள்ளிட்ட நான்கு மாநகரங்களில், 2014ல், டிஜிட்டல் முறையில், கேபிள், 'டிவி' சேவை துவங்கப் பட்டது.

இதுவரை, தமிழகம் முழுவதும், 24 லட்சத்துக்கும் அதிகமான, 'செட் - டாப் பாக்ஸ்'கள், சந்தாதாரர்களுக்கு இலவசமாகவழங்கப்பட்டுள்ளன.

ஆனால் கேபிள் இணைப்பு தருபவர்கள் 1500 செட்டப்பாக்ஸ் இணைப்பு தர கட்டணமாக வாங்கியுள்ளனர்.இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர்களிடம் குற்றம் கூறினாலும் யாருமே கண்டு கொள்ளவில்லை.

இந்நிலையில், அரசு கேபிள், 'டிவி' சரியாக தெரிவதில்லை என்ற, புகார் எழுந்தது.
பலர்  வீடுகளில்  சில மாதங்களாக, அரசு கேபிள், 'டிவி' சரியாக தெரிய வில்லை. 
இதுபற்றி, கேபிள் ஆபரேட்டரிடம் புகார் அளித்தும், சரி செய்யப்படவில்லை. இதனால் வெறுத்துப்போன பலர்  தனியார் டிஷ் 'டிவி'க்கு மாற முடிவு செய்துள்ளனர். 

தனியார் டிஷ் ஆன்டெனா இணைப்புத்தரும் சன் டைரக்ட்,வீடியோகான்,டிஷ் டிவி,டாடா ஸ்கை  போன்றவைகள் இவர்களைக் குறி வைத்து சலுகைகளை அள்ளி விடுகின்றன.


பெருமபாலான தனியார் டிஸ்கள் செட்டப் பாக்ஸ் இணைப்பு ,ஓராண்டு கட்டணம் எல்லாம் சேர்த்து 1100 இல் இருந்து 1400 வரையே  பெறுகிறது.

ஓராண்டு கட்டணம் இல்லாமல் 210 சானல்கள் தமிழ்,தெலுங்கு,மலையாளம்,கன்னடம் ,இந்தி மற்றும் இந்திய மொழிகள் பலவற்றை காணலாம்.
அதன்பின்னர் மாதக்கட்டணமாக 140இல் இருந்து 160 வரையே செலுத்தினால் போதும் என்று ஆசைகாட்டுகிறார்கள்.

அரசு கேபிள் இப்படியே தரமின்றி தொடர்ந்தால் இன்னும் ஓராண்டில் அனைவருமே தனியாருக்கு மாறி விடுவார்கள்.
தமிழ்நாடு அரசும் அதைத்தான் விரும்புகிறது எனத் தெரிகிறது.

தமிழ்நாடு கேபிள் டிவி இனிப்பு தருபவர்கள் :-
"சில மாதங்களாக, அரசு கேபிள்,'டிவி' சிக்னல் சரியாக கிடைப்பதில்லை. அரசு கேபிள், 'டிவி'யின் பிரதான சர்வரிலிருந்து, மாவட்டங்களில் உள்ள, எம்.எஸ்.ஓ.,க்களுக்கு சிக்னல் நன்றாக கிடைக்கிறது. 

தனியார் கேபிளை ஊக்குவிக்கும் நோக்கில்,ம்.எஸ்.ஓ.,க்கள், சிக்னல் தரத்தை குறைத்துவழங்குவதாகத்தெரிகிறது.

 இதனால், அரசு கேபிள், 'டிவி' சரியாக தெரிவதில்லை என, பெரும்பாலான மக்கள் எங்களிடம் சண்டைப்போட்டு இணைப்பை துண்டிக் கின்றனர். 

சமீபத்தில், அரசு கேபிள், 'டிவி' நிர்வாக இயக்குனர், மாவட்ட வாரியாக ஆய்வு நடத்தினார். அவரிடம் எங்களின் குறைகளை தெரிவித்தோம். 
ஆனால் அவர் இது தொடர்பாக எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.பின் எதற்காக ஆய்வு என்று வருகிறார்கள்.அரசுப்பணம் வெட்டியாக செவுதான் ஆகிறது.
இதுவரை, எந்த நடவடிக்கை யும் எடுக்கப்படவில்லை. தமிழக அரசே தனியார் ஆதரவு நிலையில்தான் உள்ளது போல் தெரிகிறது."என்கின்றனர்..

=====================================================================================
ன்று,

ஆகஸ்ட்-27.
  • கவிமணி தேசிய விநாயகம்பிள்ளை பிறந்த தினம்(1876)

  • உலகின் முதல் ஜெட் விமானமான ஹென்கெல் ஹி 178 சேவைக்கு விடப்பட்டது(1939)

  • மலேசிய அரசியலமைப்பு சாசனம் நடைமுறையானது (1957)
  • மால்டோவா விடுதலை தினம்(1991)
=====================================================================================
 'கவிமணி' தேசிய விநாயகம் பிள்ளை
தென் இந்திய ஆராய்ச்சியில் ஈடுபட்டுழைத்தவர். சுசீந்திரம், கன்னியாகுமரி, நாகர்கோவில், பூதப்பாண்டி, அழகிய பாண்டியபுரம் ஆகிய ஊர்களில் உள்ள திருக்கோயில்களில் மறைந்தும், புதைந்தும் கிடந்த கல்வெட்டுகளை வெளிக் கொணர்ந்து நுணுகி ஆராய்ந்தவர். செப்பேடுகள், ஓலைக்சுவடிகள் முதலியவைகளையும் தேடித்தேடி ஆராய்ச்சி சேர்ந்தவர். கவிதைகள், உரைநடை நூல்கள், இயல், இசை, நாடகம் என்னும் முத்துறைக்கும் எண்ணற்ற நூல்கள் அளித்தவர். பிறமொழி இலக்கியங்களைத் தமிழில் பெயர்த்தவர். குமரியைத் தமிழ்நாட்டுடன் இணைப்பதற்கு அரும்பாடுபட்டவர். 'கவிமணி' என்னும் சிறப்புப்பட்டம் அளிக்கப்பட்டு பாராட்டப்பட்டவர். 'தேசியக்குயில்' என மக்களால் போற்றப்படுகிறவர்! !
kavimani desiga vinayagam pillaiகுமரி மாவட்டம் சுசீந்திரம் அருகில் உள்ள 'தேரூர்' என்னும் சிற்றூரில், சிவதாணுப் பிள்ளை-ஆதிலட்சுமியம்மையார் தம்பதியினருக்கு, 27.07.1876 ஆம் நாள் மகனாகப் பிறந்தார் விநாயகம் பிள்ளை. தேரூரில் உள்ள தொடக்கப் பள்ளியில் ஆரம்பக் கல்வி கற்றார். அக்காலத்தில் குமரி மாவட்டம் திருவிதாங்கூர் ஆட்சிக்கு உட்பட்டிருந்தது. அதனால், பள்ளியில் அவர் மலையாளமே கற்க வேண்டிய நிலை ஏற்பட்டது. இருப்பினும் தாய் மொழியாம் தமிழ் மீது பற்றுக் கொண்டு தமிழை ஆர்வத்துடன் கற்றார்.
 சாந்தலிங்கத் தம்பிரான் என்பவரிடம் தமிழ் கற்றார்.
தொடக்கக் கல்வியை முடித்ததும் கோட்டாற்றில் உள்ள ஆங்கிலப் பள்ளியில் சேர்ந்து பயின்றார். மீண்டும் சாந்தலிங்கத் தம்பிரானிடம் சென்று தமிழ் இலக்கண இலக்கியங்களை முறையாகப் பயின்றார். தமிழில் கவிதை புனையும் ஆற்றல் கைவரப்பெற்றார். பள்ளியில் பயிலும் போதே பாடல் எழுதினார். தமிழாசிரியரின் பாராட்டையும் பெற்றார்! தம்பிரான் வேண்டுகோளுக்கிணங்க 'அழகம்மை ஆசிரிய விருத்தம்' பாடினார்.
நாகர்கோவிலில் உள்ள ஸ்காட் கிறித்துவக் கல்லூரியில் எஃப்.ஏ. படிப்பை முடித்தார். பின்பு திருவனந்தபுரத்தில் ஆசிரியப்பயிற்சியை முடித்தார். உமையம்மையார் என்பவரைத் தனது வாழ்க்கைத் துணையாக ஏற்றார்.

கோட்டாற்றில் உள்ள தொடக்கப் பள்ளியில் ஆசிரியராகச் சேர்ந்தார். மாணவர்களுக்குப் பாடங்கற்பிப்பதோடு, குழந்தைகளுக்கான பாடல்களும் இயற்றினார். அவரின் சிறந்த ஆசிரியப் பணியினால் ' நல்லாசிரியர்' எனப் போற்றிப் பாராட்டப்பட்டார். பின்பு, கோட்டாற்றில் உள்ள ஆசிரியப் பயிற்சி பள்ளியில் ஆசிரியராக நியமிக்கப்பட்டார். நாகர்கோவிலில் போதனாமுறைப் பாடசாலையிலும், திருவனந்தபுரம் அரசினர் மகளிர் உயர்நிலைப் பள்ளியிலும் தலைமையாசிரியராகவும், மகாராஜா கல்லூரியில், தமிழ் விரிவுரையாளராகவும் பணியாற்றினார்.
புத்தபிரான் பற்றி ஆங்கிலக் கவிஞர் எட்வின் ஆர்னால்ட் எழுதிய 'லைட் ஆப் ஆசியா' (Light of Asia) என்னும் நூலை 'ஆசிய ஜோதி' எனும் தலைப்பில் தமிழில் மொழிபெயர்த்து வெளியிட்டார்.
பாரசீகக் கவிஞர் உமர்கயாம் பாடல்களையும் தமிழில் பெயர்த்தார். இவரது, 'மலரும் மாலையும்' என்னும் கவிதை நூலில் பிறநாட்டு நல்லறிஞர் சாத்திரங்கள் பல இடம் பெற்றுள்ளன.
பிறமொழி இலக்கியங்களைக் கவிதைத் தமிழில் கொண்டு வந்து சேர்த்தவர் 'கவிமணி'. மேலும் 'நாஞ்சில் நாட்டு மருமக்கள் வழி மான்மியம்' –என்ற நகைச்சுவை நூலையும், 'தேவியின் கீர்த்தனைகள்' என்ற பக்தி நூலையும் படைத்து அளித்துள்ளார். இவரது பாடல்கள் பாமரரும் படித்துப் பொருள் புரிந்து கொள்ளும்படி எளிமையான முறையில் அமைந்துள்ளன.
அனைவரும் போற்றும் 'காந்தளூர்ச் சாலை' என்னும் ஆராய்ச்சி நூலை ஆங்கிலத்தில் எழுதி வெளியிட்டார். சென்னைப் பல்கலைக் கழகத்தில் 1926 முதல் 1936 வரை, தமிழ்ப் பேரகராதியின் சிறப்பு ஆலோசகராகவும், 1941 ஆம் ஆண்டு திருவிதாங்கூர் பல்கலைக் கழக தமிழ்ப்பாடக் குழுவில் உறுப்பினராகவும் இருந்து சிறப்பாகப் பணியாற்றி பலரின் பாராட்டைப் பெற்றார்.
சென்னை மாகாணத் தமிழ்ச் சங்கத்தினர், 24.12.1940ஆம் நாள், சென்னை பச்சையப்பன் கல்லூரியல், 'தமிழ்வேள்' உமா மகேசுவரனார் தலைமையில் தேசிய விநாயகம் பிள்ளைக்குப் பாராட்டு விழா நடத்தினர். அந்த விழாவில் அவரைப் பாராட்டி 'கவிமணி' என்னும் சிறப்புப் பட்டம் அளித்தனர்.
செட்டிநாட்டு அரசர் அண்ணாமலைச் செட்டியார், கவிமணிக்கு பொன்னாடை போர்த்திப் பாராட்டினார். திருநெல்வேலியிலும், 1944ஆம் ஆண்டு, கவிஞருக்குப் பாராட்டு விழா நடத்தினர்.
நாகர்கோவிலில், கவிமணிக்கு எழுபதாவது ஆண்டு விழா நடை பெற்றது. அந்த விழாவில், அப்போதைய மத்திய நிதி அமைச்சர் ஆர்.கே. சண்முகம் செட்டியார் கலந்து கொண்டு பாராட்டுரை வழங்கிப் பாராட்டினார். அவர் பிறந்த ஊரில் மக்கள் நன்கொடை திரட்டிக், 'கவிமணி நிலையம்' ஒன்று கட்டி எழுப்பி உள்ளனர்.
தமிழின் பன்முக வளர்ச்சிக்காக நாளும் பொழுதும் கவிதையில் கரைந்த, 'கவிமணி' தேசிய விநாயகம் பிள்ளை, 26.09.1954ஆம் நாள் மறைந்தார். அவர் மறைந்தாலும் அவர் ஆற்றிய தமிழ்த் தொண்டு என்றும் மறையாமல் நிலைத்து நிற்கும்.
                                                                                                                                                                                                        - பி.தயாளன்
=================================================================================================================================
வாஜ்பாய் மறு முகம்.
"தவறான இடத்தில் சரியான மனிதர் என்று கூறுவது சரியா?அப்படி அவர் இருந்தால் தலைமை பதவிக்கும்,பிரதமர் பதவிக்கும் அந்த நல்ல மனிதர் வர அந்த தவறான இடம் இடம் கொடுக்குமா?"
கடந்த ஆகஸ்ட் 17 ஆம் தேதி தமிழக அரசு பொது விடுமுறையை அறிவித்திருந்தது. 
பல பேருக்கு எதற்காக அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டது என்றே தெரியவில்லை. 
லைபாயை மட்டுமே அறிந்திருந்த கோடிக்கணக்கான தமிழர்களுக்கு வாஜ்பாய் யார் என்பது கூட தெரியவில்லை. பல சிறுசுகளிடம், கிழடு கட்டைகளிடம் பேசிப் பார்த்ததில் இருந்து இந்த உண்மை தெரிய வந்தது. 
ஆனால் தமிழ்நாட்டில் பெரும்பாலான இடங்களில் கார்கில் நாயகனே, தங்கநாற்கரச் சாலை தந்த தலைவனே என பலவாறாக வாஜ்பாய் புகழ்பாடும் கட் அவுட்டர்கள் வைக்கப்பட்டிருந்தன. இரவோடு இரவாக வைக்கப்பட்ட இந்த கட் அவுட்டர்களை ஊர் மக்கள் திடீர் பிள்ளையாரைப் பார்ப்பது போல அதிசயமாக பார்த்துக் கொண்டிருந்தனர். 
16 ஆம் தேதி இரவு தமிழக மக்கள் தூங்கி விழிப்பதற்குள் அசுர வேகத்தில் தமிழகம் முழுக்க இந்தக் கட்அவுட்டர்கள் வைக்கப்பட்டிருந்தன. ஏதாவது ஒரு ஐந்துபைசா விஷயம் கிடைத்தால் கூட அதை வைத்து கட்சிக்கு ஆள் சேர்க்க முடியுமா எனப் பார்க்கும் பிஜேபியின் அவல ஆசை இதிலும் தெரிந்தது.
Vajpayee 320ஆனால் என்னதான் வாஜ்பாயைப் பற்றி காவி வானரங்கள் புகழ்பாடினாலும் வரலாற்றைப் புரட்ட நினைத்தாலும், அதை நம்பும் மனநிலையில் இந்திய மக்கள் இல்லை. 
ஏழைத்தாயின் மகன், ரயில் நிலையத்தில் டீ விற்றவன் என்றெல்லாம் சொல்லி, மோடியைப் பிரதமாராக்கினால் இந்தியாவில் பாலாறும், தேனாறும் ஓடும் என்று இந்திய மக்களை நம்ப வைத்து கழுத்தறுத்த கும்பலின் வாயில் இருந்து வரும் அனைத்துமே பச்சைப் பொய்கள்தான் என்பதை மக்கள் நன்கு உணர்ந்துள்ளனர். 
உண்மையில் வாஜ்பாய் ஒரு மிதவாதியாக இருந்தாரா, சிறப்பான பொருளாதாரத் திட்டங்களை முன்னெடுத்தாரா, தேசபக்தியோடு இருந்தாரா என்பதையெல்லாம் பார்த்தால் நிச்சயம் தமிழ்நாட்டு மக்கள் ரயிலேறி நாக்பூருக்குப் போயோ, இல்லை குறைந்தபட்சம் கமலாயத்துக்கு போயாவது காறித் துப்பிவிட்டு வந்து விடுவார்கள்.
1998 ஆம் ஆண்டு வாஜ்பாய் பிரதமராகப் பதவியேற்றவுடன் பல சீர்திருத்தங்களை அறிவித்தார். அந்நிய முதலீட்டுக்கு அனுமதி வழங்குவது குறித்த விண்ணப்பம் செய்த அறுபது நாட்களில் முடிவு, தொழிலாளர்களின் ஓய்வூதியம் மற்றும் காப்பீட்டு நிறுவனங்களின் சேமிப்பை முதலாளிகள் பயன்படுத்திக் கொள்ள அனுமதிப்பது, 18 எண்ணெய் வயல்களும் 3 மின் நிலையங்களும் 48000 சதுர கி.மீ பரப்பிலான கனிம வயல்களும் பன்னாட்டு நிறுவனங்களுக்கு வழங்கப்படுதல் போன்றவை மேற்கொள்ளப்பட்டன. 
ரேசன் உணவுப் பொருட்களுக்கான மானியத்தைக் குறைத்த வாஜ்பாய் அரசு, இந்திய உணவுக் கழகத்தின் இருப்பில் இருந்து கிலோ 11 ரூபாய் மதிப்புள்ள 1.4 கோடி டன் அரிசியை ரூ 6 ரூபாய்க்கு தனியார் முதலாளிகளுக்கு விற்பனை செய்தது. லாபத்தில் இயங்கி வந்த டெல்லி, மும்பை, கல்கத்தா, சென்னை , பெங்களுர் விமான நிலையங்களைத் தனியாருக்கு விற்பது போன்ற முடிவுகளும் எடுக்கப்பட்டன.
"நாங்கள் ஆட்சிக்கு வந்தால் மூன்றே நாட்களில் காப்பீட்டுத் துறையை அந்நிய மூலதனத்துக்குத் திறந்து விடுவோம்" என்று தேர்தலுக்கு முன்பே அமெரிக்க முதலாளிக்கு வாக்குறுதி அளித்த யஷ்வந்த் சின்கா, அதன்படி ஆட்சிக்கு வந்ததும் நாடாளுமன்றத்தின் முதல் அமர்விலேயே காப்பீட்டுத் துறையைத் திறந்துவிடுவதற்கான சட்டத்தை நிறைவேற்றினார். 
சிறப்புப் பொருளாதார மண்டலத்தில் 100 சதவீத அந்நிய மூலதனமும், ரியல் எஸ்டேட் தொழிலில் 74 சதவீதமும் அந்நிய மூலதனம் அனுமதிக்கப்பட்டது. பொதுத்துறை நிறுவனங்களை விற்பனை செய்வதற்காகவே ஒரு துறையை ஏற்படுத்தி அந்தத் துறைக்கு அருண் ஷோரியை அமைச்சராக்கினார் வாஜ்பாய். மொத்தம் 31 பொதுத்துறை நிறுவனங்கள் தனியார்மயமாக்கப்பட்டன. 
2100 கோடி ரூபாய் மதிப்புள்ள மாடர்ன் புட்ஸ் 104 கோடிக்கு விற்பனை செய்யப்பட்டது. அதே போல 5000 கோடி சொத்து மதிப்புள்ள பால்கோ நிறுவனம் வெறும் 551 கோடிக்கு விற்பனை செய்யப்பட்டது. தொலைபேசித் துறைக்கு சொந்தமாக இருந்த விதேஷ் சஞ்சார் நிகாம் நிறுவனம் டாடாவுக்கு விற்கப்பட்டது.
வந்தே மாதரம் பாட மறுப்பவர்கள் பாகிஸ்தானுக்கு ஓடிவிட வேண்டும் என தேசபக்தியைக் கக்கியவர்கள் போலி ராணுவ பேர ஊழலிலும், கார்கில் போரில் இறந்த வீரர்களை அடக்கம் செய்ய சவப்பெட்டி வாங்கியதிலும் ஊழல் செய்து தமது பூர்வாங்க தேசபக்தியை நிரூபித்தார்கள்.

 மேலும் சாமானிய மக்களுக்காக கொள்முதல் செய்யப்பட்ட மருந்துகளில் ஊழல், டெல்லியின் மையப்பகுதியில் சங்பரிவார நபர்களுக்கு ஒதுக்கீடு செய்த வீட்டு மனை ஊழல் என தொட்டதெல்லாவற்றிலும் ஊழல் செய்து, மீண்டும் மீண்டும் தங்களது தேசபக்தியை வெளிப்படுத்தினர். நாடாளுமன்றத்தில் கேள்வி கேட்கக் கூட லஞ்சம் வாங்க முடியும் என்ற உண்மையை இந்திய அரசியல்வாதிகளுக்கு கற்றுக் கொடுத்தது வாஜ்பாயி அரசுதான்.
 இவ்வளவு ஊழல்களும், அத்துமீறல்களும் நடந்தபோதும் ‘மிதவாதி’ வாஜ்பாய் மெளனமாகவே இருந்தார். அந்த மெளனம்தான் மோடிக்கு குஜராத் இனப்படுகொலையை நடத்தும் உத்வேகத்தை அளித்தது.
வாஜ்பாயின் ஆட்சிகாலத்தில்தான் நாடு முழுவதும் உள்ள நேரு யுவகேந்திரா பள்ளிகளில் இந்துத்துவா பிரச்சாரம், பாடத்திட்டங்களில் இந்துத்துவாவை புகுத்துவது, குஜராத் மற்றும் மத்தியப் பிரதேசத்தில் கிறித்துவர்கள் மீதான தாக்குதல், அரசு நிதியை ஆர்.எஸ்.எஸ் அமைப்பிற்குப் பயன்படுத்துதல் போன்றவை நடைபெற்றன. 
மேலும் மும்பை படுகொலையை விசாரித்து வந்த சிறீ கிருஷ்ணா கமிஷனையும், பாபர் மசூதி இடிப்பு குறித்து விசாரணை நடத்திவந்த லிபரான் கமிஷனையும் முடக்கும் சதிகள் மேற்கொள்ளப்பட்டன. எல்லாவற்றுக்கும் மேலாக வாஜ்பாயின் ஆட்சியில்தான் 1999ம் ஆண்டு காத்மாண்டுவில் இருந்து டெல்லி வந்த இந்தியன் ஏர்லைன்ஸ் விமானத்தை தீவிரவாதிகள் கந்தகாருக்குக் கடத்தினர். தீவிரவாதத்தை தனது இரும்புக்கரம் கொண்டு அடக்கிய வாஜ்பாயி அரசு, காஷ்மீர் சிறையில் இருந்த ஜெய்ஷ்-ஏ- முகமது தீவிரவாத இயக்கத் தலைவரான மெளலானா மசூர் அசார் உட்பட மூன்று தீவிரவாதிகளை பாதுகாப்பாக பாதுகாப்புத் துறை அமைச்சாரக இருந்த ஜஸ்வந்த் சிங் மூலம் கந்தகாரிலேயே கொண்டுபோய் விட்டுவிட்டு வந்தது. 
வாஜ்பாய் அரசின் வீரத்தை உலகமே பார்த்துக் குதூகலித்த தருணம் அது.modi advani vajpayee
இந்த அவமானத்தில் இருந்து தன்னை காப்பாற்றிக் கொள்ளவும், தீவிரவாதிகளுக்கு அஞ்சுபவர்கள் தாங்கள் கிடையாது என்பதைக் காட்டவும் வேண்டிய நெருக்கடி வாஜ்பாய் அரசுக்கு ஏற்பட்டது. 
இதற்காக இந்திய உளவுத்துறையும், பாஜக அரசும் திட்டமிட்டு இந்திய பாராளுமன்றத்தின் மீதான தாக்குதல் என்ற நாடகத்தை டிசம்பர் 13, 2001 அன்று நடத்தினர். 
மொத்தம் 14 பேர் இந்தத் தாக்குதலில் உயிரிழந்தனர். இந்தக் குற்றத்தில் எந்தத் தொடர்பும் இல்லாத அப்பாவியான அப்சல் குரு வேண்டுமென்றே தூக்கிலிடப்பட்டார். இப்படியாக ஒட்டுமொத்தமாக வாஜ்பாயின் அரசு ஊழலிலும், லஞ்சத்திலும், முறைகேட்டிலும்,அதிகார துஷ்பிரயோகத்திலும், போலி தேசபக்தியிலும் முழ்கிக் கிடந்தது.
ஏன் வாஜ்பாயி இவ்வளவு கீழ்த்தரமாக ஆட்சி செய்தார் என்றால், அடிப்படையில் அவர் தன்னளவிலேயே ஒரு கீழ்த்தரமான மனிதராக இருந்ததுதான். 
ஏனென்றால் அடிப்படையில் கீழ்த்தரமான சிந்தனை உள்ள நபர்கள்தான் கீழ்த்தரமான சித்தாந்தத்தை தேர்ந்தெடுத்துக் கொள்கின்றார்கள். வெள்ளையனே வெளியேறு இயக்கத்தில் பங்கெடுத்து, பிரிட்டிஷ் அரசுக்கு எதிராகப் போராடிய லீலாதரை காட்டிக் கொடுத்து, அவருக்கு மூன்று ஆண்டுகள் சிறைத் தண்டனை பெற்றுக் கொடுத்த பார்ப்பன வாஜ்பாய் தனது கொள்கையாய் ஆர்.எஸ்.எஸ் சித்தாந்தத்தை ஏற்றுக் கொண்டது இயல்பானதுதான். 
வாஜ்பாய் ஆட்சியில் நாட்டின் சொத்தான பொதுத்துறை நிறுவனங்களை பெருமுதலாளிகளுக்கு விற்றதும், நாட்டுக்காக போரில் உயிர்நீத்த வீரர்களுக்கு சவப்பெட்டி வாங்கியதில் ஊழல் செய்ததும், இராணுவ பேர ஊழலில் ஈடுபட்டதும், பாபர் மசூதியை இடித்துத் தள்ள வெறுப்புப் பிரச்சாரத்தில் ஈடுபட்டதும், முஸ்லிம்களை இன அழிப்பு செய்ய உடந்தையாக இருந்ததும், பார்ப்பன வாஜ்பாயின் இயல்பான நடத்தையாகவே நாம் புரிந்துகொள்ள வேண்டும். 
ஆர்.எஸ்.எஸ் சாகாவில் இருந்து வெளிவரும் ஒவ்வொருவனும் நாட்டை கூட்டிக் கொடுப்பவனாகவும், காட்டிக் கொடுப்பவனாகவும் இருக்கின்றான் என்றால், இந்திய மக்கள் புரிந்து கொள்ள வேண்டும் ஆர்.எஸ்.எஸ் அமைப்பு எதற்காக தோற்றுவிக்கப்பட்டது என்று.
நாம் வாஜ்பாயையோ, இல்லை மோடியையோ புரிந்து கொள்ள வேண்டும் என்றால் அடிப்படையில் ஆர்.எஸ்.எஸ் சித்தாந்தத்தைப் புரிந்து கொள்ள வேண்டும். 
அதைப் புரிந்து கொள்ளும் போதுதான் நாட்டை தேசவிரோதிகளின் பிடியில் இருந்து காப்பாற்ற முடியும். நாம் வாஜ்பாயின் வரலாற்றை கீழ் இருந்து மேலாகப் படித்தாலும், மேல் இருந்து கீழாகப் படித்தாலும் அதில் துரோகம் மட்டுமே எஞ்சி நிற்கும். 
வாஜ்பாயிக்கு மட்டுமல்ல, மோடியின் வரலாறும் அப்படித்தான்.
                                                                                                                              - செ.கார்கி                                                                                                                                                                                            கீற்று தளத்திலிருந்து.