(வாலிப) வயோதிக ரசிக அன்பர்களே...!
அர்பத் நாட் வங்கி திவாலான கதை.
தனியார் வங்கிகளில் ஒன்றான எஸ் வங்கி, சிக்கலுக்குள்ளாகி வாடிக்கையாளர்கள் தங்கள் பணத்தை எடுக்கக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருக்கின்றன. போன நூற்றாண்டின் துவக்கத்தில் சென்னையில் இதுபோல ஒரு வங்கி திவாலானதில் பல குடும்பங்கள் நடுத்தெருவுக்கு வந்தன. அந்த வங்கியைப் பற்றித் தெரியுமா?
1906ஆம் ஆண்டு அக்டோபர் 22ஆம் தேதியன்று சென்னை முதலாவது பீச் லைனில் உள்ள அர்பத்நாட் அண்ட் கம்பனியின் வாசலில் ஒரு நோட்டீஸ் ஒட்டப்பட்டது. மறு அறிவிப்பு வரும்வரை, யாரும் வங்கியிலிருந்து பணத்தை எடுக்க முடியாது என்பதுதான் அந்த நோட்டீஸின் சாரம். இந்த அறிவிப்பு அன்றைய சென்னை மாகாணத்தை உலுக்கியது. உடனடியாக வாடிக்கையாளர்கள் அனைவரும் அர்பத்நாட் அண்ட் கம்பெனிக்கு முன்பாகவும் அதன் கிளைகளுக்கு முன்பாகவும் குவிந்தனர். ஆனால், யாருக்கும் பணம் தரப்படவில்லை. அவர்கள் திருப்பி அனுப்பப்பட்டனர்.
அர்பத்நாட் அண்ட் கோவின் வீழ்ச்சி பெரும் கவனத்தை ஈர்த்ததற்குக் காரணம் இருக்கிறது. அதில் நகரத்தில் உள்ள முக்கியப் பிரமுகர்களில் பெரும்பாலானவர்கள் முதலீடுகளைச் செய்திருவேண்டும
அர்பத்நாட் கம்பெனியின் துவக்கம்
பதினெட்டாம் நூற்றாண்டில் ஃப்ரான்சிஸ் லதூர் என்பவரால் ஃப்ரான்சிஸ் லதூர் & கோ என்ற பெயரில் ஒரு நிறுவனம் துவங்கப்பட்டது. இந்த நிறுவனத்தில் 1803வாக்கில் அர்பத்நாட் குடும்பத்தைச் சேர்ந்த ஒருவர் வேலைக்குச் சேர்ந்தார். ஃப்ரான்சிஸ் லதூர் ஓய்வுபெற்றுவிட, இந்த நிறுவனம் அர்பத்நாட், டிமோன்டி அண்ட் கம்பனி என்று பெயர் மாற்றப்பட்டது. பிறகு Arbuthnot & Co என்ற பெயரைப் பெற்றது.
ஒரு வங்கிக்கு Arbuthnot & Co என்று பெயரா எனத் தோன்றலாம். உண்மையில், வங்கி என்பதன் சரியான பொருளில் பார்த்தால், அது ஒரு வங்கி அல்ல. அது ஒரு வர்த்தக நிறுவனம். வாடிக்கையாளர்களிடமிருந்து வைப்புத் தொகைகளைப் பெற்று உற்பத்தி, வர்த்தகம், காப்பித் தோட்டம், இண்டிகோ தோட்டம் ஆகியவற்றில் முதலீடு செய்தது அர்பத்நாட் கம்பனி. வைப்புத் தொகைக்கு ஐந்து சதவீதம் வட்டியாக வழங்கப்பட்டது. அப்போது சென்னையிலிருந்த பெரு முதலாளிகள், அதிகாரிகள், வழக்கறிஞர்கள், தென்னிந்தியாவின் மத்திய தர வர்க்கத்தினர் இந்த வங்கியில் டெபாசிட்களைச் செய்திருந்தனர்.
அர்பட்நாட் அண்ட் கோ அதன் உச்சகட்டத்தில் இருந்தபோது, மாகாணம் முழுவதுமிருந்த அந்த வங்கியின் கிளைகள், ஏஜென்சிகள் எல்லாவற்றிலும் சேர்த்து சுமார் 10,000 பேர் வரை பணியாற்றியதாக இது தொடர்பாக எழுதப்பட்ட The Fall of Arbuthnot & Co புத்தகம் தெரிவிக்கிறது. அந்த வங்கி மூடப்படும்போது கிட்டத்தட்ட 7,000 பேர் அதில் கணக்கு வைத்திருந்தனர்.
தற்போதைய காலகட்டத்தில் அது பெரிய எண்ணிக்கை இல்லை என்றாலும், அந்த நாட்களில் சென்னை மாகாணத்தில் இருந்த பெரிய மனிதர்கள் பலர் ஏதோ ஒரு வகையில் அர்பட்நாட் வங்கியுடன் தொடர்பில் இருந்தனர். அதன் பங்குகளில் முதலீடு செய்திருந்தனர்.
1906வாக்கில் அந்த நிறுவனத்தின் பொறுப்பில் இருந்தவர்கள் இரண்டு பேர். ஒருவர் ஜார்ஜ் அர்பத்நாட். மற்றொருவர் ஜெ.எம். யங். ஆனால், ஜெ.எம். யங்கிற்கு வங்கியின் அன்றாட நிர்வாகத்தில் பெரிய அதிகாரம் ஏதும் கிடையாது. இதில் கவனிக்கப்பட வேண்டியவர் ஜார்ஜ் அர்பத்நாட்தான்.
1877ல் ஜார்ஜ் அர்பட்நாட் அந்த நிறுவனத்தில் இணைந்தார். மெட்ராஸ் சேம்பர் ஆஃப் காமர்ஸின் தலைவராக பல முறை இருந்தவர் இவர். பேங்க் ஆஃப் மெட்ராஸின் நிர்வாக வாரியத்தின் தலைவராகவும் இருந்தவர் ஜார்ஜ் (இந்த வங்கியே பின்னாளில் ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியாவாக உருவெடுத்தது).
1906வாக்கில் ஜார்ஜ் அர்பத்நாட் சென்னையில் மிகவும் செல்வாக்கு மிகுந்த ஒரு நபராக உருவெடுத்திருந்தார். சென்னை மக்களின் பார்வையில், மாகாண ஆளுநருக்கு அடுத்த இடத்தில் இருந்தார் அவர்.
அர்பத்நாட் அண்ட் கம்பனி லண்டனில் இருந்து செயல்பட்ட P. Macfayden & Co என்ற நிறுவனத்துடன் ஒரு ஒப்பந்தம் செய்துகொண்டது. இந்த P. Macfayden & Co நிறுவனம், அர்பட்நாட் அண்ட் கோவின் லண்டன் கிளையைப் போலவே செயல்பட்டுவந்தது. அதனை பேட்ரிக் மெக்ஃபடைன் Patrick Macfadyen என்பவர் கவனித்துவந்தார். அர்பத்நாட் அண்ட் கோவின் வீழ்ச்சிக்கு இந்த மெக்ஃபடைனே காரணம் எனக் கருதப்படுகிறது.
காரணம், லண்டன் பங்குச் சந்தையில் ஒரு சூதாடியைப் போல முதலீடுசெய்துவந்தார் மெக்ஃபடைன். இதற்கான பணம் அர்பட்நாட் அண்ட் கோவிலிருந்து கிடைத்துவந்தது. ஒரு கட்டத்தில் நிலைமை மிகவும் சிக்கலானது. 1906ஆம் ஆண்டு அக்டோபர் 20ஆம் தேதி முதல், யாருக்கும் பணம் கொடுக்க முடியாது என P. Macfayden & Co அறிவித்துவிட்டது.
இதற்கு அடுத்த நாள், அதாவது அக்டோபர் 21ஆம் தேதி லண்டன் ஓல்ட் ஸ்ட்ரீட்டில், சுரங்க ரயில் முன்பு விழுந்து தற்கொலை செய்துகொணடார் மெக்ஃபடைன். இதற்கு அடுத்த நாள், அக்டோபர் 22ஆம் தேதி அர்பட்நாட் அண்ட் கம்பனி தாங்கள் திவாலாகிவிட்டதாக சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது.
இந்தச் செய்தி பரவியதும் வங்கியிலிருந்து பணத்தை எடுப்பதற்காக பலரும் செக் புத்தகங்களுடன் பீச் முதலாவது லைனில் இருந்த வங்கியை முற்றுகையிட்டனர். ஐரோப்பிய காவல் படையும் உள்ளூர் இந்தியர்களின் காவல் படையும் அங்கே குவிக்கப்பட்டிருந்தன. அடுத்த நாள், சென்னையின் பிரதான செய்தித் தாளான தி மெட்ராஸ் மெயில், "Failure of Messrs. Arbuthnot & Co - Offices Beseiged by Depositors" என கொட்டை எழுத்துகளில் செய்தி வெளியிட்டது.
அர்பட்நாட் வங்கியின் வீழ்ச்சி என்பது சென்னை நகர வரலாற்றில் ஒரு நீங்காத இடத்தைப் பிடித்துவிட்டது. அந்த காலகட்டத்தில் முக்கியமான நிகழ்வுகள் நடக்கும்போது அது தொடர்பாக கும்மிப் பாட்டுகள் எழுதும் வழக்கம் இருந்தது. இந்த அர்பத்நாட் வங்கியின் வீழ்ச்சி குறித்தும் ஒரு கும்மிப்பாட்டு எழுதப்பட்டது. தஞ்சாவூரைச் சேர்ந்த மிராசுதாரான வரதராஜ பிள்ளை என்பவர் 'அர்பத்நாட்டின் விழுகையும் இந்தியர் அழுகையும்" என்ற பெயரில் ஒரு கும்மிப் பாட்டை எழுதினார்.
"கொக்கை நம்பி நின்றமீன்போலும்
பூனைக்குட்டியை நம்பும் எலிபோலும்
தக்க மதிப்புறு மிந்தியர், வெள்ளையர்
தம்மை நம்பி ஐயமற்றிருந்தார்"
என்று நீள்கிறது அந்தப் பாட்டு. இந்த கும்மிப் பாட்டுக்கு 1906 நவம்பரில் இந்தியா இதழில் அறிமுகம் ஒன்றைக்கூட பாரதியார் எழுதினார்.
இந்தியா இதழில் தொடர்ச்சியாக அர்பத்நாட் வங்கியின் வீழ்ச்சி குறித்து பாரதி எழுதிவந்தார். 1909 அக்டோபர் 27ஆம் தேதி வெளியான இந்தியா இதழில் இது தொடர்பாக விரிவாக எழுதினார் பாரதி.
"இந்த சமாசாரம் கேட்டவுடனே அநேக ஜனங்கள் நீரில் மூழ்கி சாகப் போகிறவர்கள் துரும்பைக் கைப்பற்றி பிழைத்துவிட முயல்வதுபோல், அர்பத்நாட் கம்பனி சேதம் அடைந்துவிட்டதென்று கேள்விப்பட்டதற்கப்பால் தத்தம் பணம் ஒரு வேளை கிடைக்கலாம் என்ற ஆசையுடன் கடற்கரையோரத்தில் இருக்கும் அர்பத்நாட் கம்பனி வாசலுக்கு ஓடிச் சென்றார்கள். கம்பனி கட்ட வாசலிலே பெரிய பெரிய எழுத்துகளில் பின்வருமாறு எழுதி ஒட்டப்பட்டிருந்தது.
"அர்பத்நாட் கம்பனியார் கடனாளிகளுக்கு பணம் கொடுப்பதை நிறுத்தி வைத்திருப்பதாக அறிவித்துக்கொள்கிறார்கள்". இதைப் பார்த்தவுடன் ஜனங்கள் எல்லாம் இன்னது செய்வதென்று தெரியாமல் திகைத்தார்கள். ஒரு க்ஷணத்துக்குள்ளே கதியற்றுப் போய்விட்ட விதவைகளும் கிழவர்களும் வயிற்றிலும் வாயிலும் அடித்துக்கொண்டு அழுதார்கள்" என்று அந்த நிலையை விவரித்தார் பாரதியார்.
மேலும், பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவும்விதமாக சகாய நிதி சேகிரிப்பது தொடர்பான கோரிக்கைகளையும் இந்தியா இதழிலிலும் அவர் தொடர்ச்சியாக வெளியிட்டார்.
அப்போது சென்னையின் ஆளுநராக இருந்த சர் ஆர்தர் லாலேவின் அறிவுறுத்தலின்படி, இப்போது ராஜாஜி ஹால் என அழைக்கப்படும் அரங்கத்தில் கூட்டம் ஒன்று நடத்தப்பட்டது. சிறிய முதலீட்டாளர்கள் பாதிக்கப்படாமல் இருக்க, 100 ரூபாய் வரை முதலீடு செய்த, சிறிய முதலீட்டாளர்களின் பணத்தை திருப்பி அளிக்க மக்களிடமிருந்து பணம் திரட்டப்பட்டது. அதில் ஒன்றரை லட்ச ரூபாய் திரண்டது.
- பாதிக்கப்பட்ட சிலர் மகாஜன சபா என்ற பெயரில் திருவல்லிக்கேணியில் உள்ள ஒரு பள்ளிக்கூடத்தில் ஒன்றுகூடினர். இந்த விவகாரத்தை விசாரிக்க இரண்டு பேரை நீதிமன்றம் நியமித்து, வழக்கைத் துரிதப்படுத்த வேண்டுமென தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இதில் ஆச்சரியகரமான விஷயம் என்னவென்றால், வங்கியை நடத்திவந்த ஜார்ஜ் அர்பட்நாட்டிற்கு சமூகத்தில் உயர்ந்த இடம் இருந்ததால் அவர் கைதுசெய்யப்படவில்லை. கம்பனியின் கணக்கு வழக்குகளைப் பார்த்தபோது, அந்த நிறுவனத்திற்கு 2.4 கோடி ரூபாய் அளவுக்கு சொத்துகள் இருந்தன. ஆனால், தர வேண்டிய பணம் 3 கோடி ரூபாயாக இருந்தது.
இந்த விவகாரம் சென்னை உயர் நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டபோது பாதிக்கப்பட்டவர்களின் சார்பில் ஆஜரானவர் வி. கிருஷ்ணசாமி ஐயர். இவரது தலைமையில் ஒன்றுகூடிய சென்னையின் முக்கியப் பிரமுகர்கள் ஒன்று சேர்ந்து ஒரு சுதேசி வங்கியை உருவாக்க முடிவுசெய்தனர். 1907 மார்ச் 5ஆம் தேதி அந்த வங்கி உருவாக்கப்பட்டது. அது, இப்போதும் செயல்பட்டுவரும் இந்தியன் வங்கி!
அர்பத்நாட் வழக்கு இரண்டு விதமாக நடந்தது. முதலாவது, அதன் திவால் நோட்டீஸை பரிசீலிக்கும் வழக்கு சிவில் நீதிமன்றத்தில் நடந்தது. இந்த விவகாரத்தில் நடந்த குற்றங்கள் கிரிமினல் நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டன. அர்பத்நாட் வங்கிக் கணக்குகளை ஆராய்ந்தபோது, ஜார்ஜ் அர்பத்நாட்டும் வங்கியின் பிற நிர்வாகிகளும் கணக்கு - வழக்குகளில் பல குளறுபடிகளைச் செய்திருந்ததை நீதிமன்றம் கண்டறிந்தது.
ஜார்ஜ் அர்பட்நாட்டுக்கு எதிராக நடந்த வழக்கில், அவருக்கு மூன்றாண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. 1908 டிசம்பரில் ஜார்ஜ் அர்பட்நாட் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டார். பிறகு இங்கிலாந்து திரும்பிய அர்பட்நாட், 1929ல் காலமானார்.
பீச் முதல் லைனில், 'அர்பத்நாட் அண்ட் கோ'வின் தலைமை அலுவலகம் இருந்த இடத்தில் இந்தியன் வங்கியின் தலைமை அலுவலகம் இப்போது இருக்கிறது. அர்பத்நாட் பெயரில் அருகிலேயே தெரு ஒன்றும் இருக்கிறது.
அர்பட்நாட் வங்கியைத் தொடர்ந்து 1908ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் கமர்ஷியல் பேங்க் ஆஃப் இந்தியா மூழ்கியது. ஆனால், அர்பத்நாட் வங்கி அளவுக்கு அது கவனத்தை ஈர்க்கவில்லை.
நன்றி:பி.பி.சி.
0---------------------------------8----------------------------0
இன்னும் இவரை நம்புகிறீர்கள்?.
தமிழகத்தில் எழுச்சி ஏற்படாவிட்டால், ரஜினிகாந்த் என்ன செய்வார் என்பதுதான் இப்போது அவரது ரசிகர்களிடம் எழுந்துள்ள பெரும் கேள்வியாக மாறியுள்ளது.
2017ம் ஆண்டு டிசம்பர் மாதம், ஒரு முக்கிய தகவலை ரஜினிகாந்த் தெரிவித்தார். தமிழகத்தில் வெற்றிடம் இருப்பதாகவும், எனவே 234 தொகுதிகளிலும் தனித்து போட்டியிடப் போவதாகவும் அறிவித்தார்.
போருக்கு ரெடியாகுங்கள், போர் வரும்போது பார்த்துக் கொள்ளலாம் என்று ரசிகர்களுக்கு அவர் அரைகூவல் விடுத்தார். அவர் போர் என கூறியது, சட்டசபை தேர்தலைத்தான் என அப்போது, கூகுள் டிரான்ஸ்லேட்டர் துணையின்றி, மொழிபெயர்க்கப்பட்டது.. கோனார் உரையின்றி அர்த்தம் கற்பிக்கப்பட்டது.
25 ஆண்டுகளுக்கு முன்வந்த செய்தி. |
இதோ.. போருக்கான சங்கநாதம் ஒலிக்கிறது. ஏனெனில் தேர்தல் நடைபெற இன்னும் ஒரு ஆண்டுதான் இருக்கிறது. அதனால்தான் ரஜினிகாந்த் இன்று அளித்த பேட்டி மீது அவ்வளவு எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால் நடந்தது என்ன? 1995களின் இறுதிகளிலோ, அல்லது 1996ன் துவக்கத்திலோ ஒரு செய்தியாளர் சந்திப்பை ரஜினிகாந்த் நிகழ்த்தினாரே, அதன் ரீப்ளேயாகத்தான் முடிந்து போனது. ஆம்.. அப்போதும் இப்படித்தான். ஜெயலலிதா ஆட்சியை வீழ்த்த, ஆர்.எம்.வீரப்பனுடன் இணைந்து ரஜினி கட்சி துவங்கப்போகிறார் என்றும், அதை அறிவிக்க ஹோட்டலில் பிரஸ் மீட்டுக்கு அழைத்துள்ளார் என்றும், அடித்துபிடித்து ஓடினர் பத்திரிக்கையாளர்கள். "எனக்கு பதவி மீதெல்லாம் ஆசை இல்லைங்க.. எல்லாரும் சாப்பிட்டுட்டுத்தான் போகனும்" என பத்திரிக்கையாளர்களை வழியனுப்பி வைத்தார் ரஜினி. அதேதான் இன்றும் நடந்துள்ளது.
ஐயோ, அம்மா
இன்றைய செய்தியாளர் சந்திப்பில், 2017ல் சொன்ன டோன் சுத்தமாக மாறிப்போனது. "மக்கள் மத்தியில் அரசியல் புரட்சி வர வேண்டும், அப்படி வராவிட்டால் நான் அரசியலுக்கு வந்து என்ன லாபம்? புரட்சி வரட்டும், நான் உடனே வருகிறேன்" என்று சொன்னாரே ஒரு வார்த்தை. லைவாக பேட்டியை பார்த்த 50 வயதுக்கு மேற்பட்ட அவரது பெருவாரியான ரசிகர்கள், பி.பி மாத்திரை தேடிய தருணம் அது. பலரும் நெஞ்சை பிடித்துக் கொண்டு உட்கார்ந்துவிட்டதாக, உளவுத்துறை தகவலும் உள்ளது.
ரஜினிகாந்த் இன்றைய செய்தியாளர் கூட்டத்தில் தெரிவித்த 3 'மாற்று அரசியல்' என்ன? கட்சியின் அடிமட்டத்தில் உள்ள பதவிகளை தேர்தலுக்கு பிறகு கலைத்துவிடுவது, இளைஞர்கள்-படித்தவர்கள் அதிகம் அரசியலுக்கு வருவது அப்புறம் மக்கள் புரட்சி வெடிப்பது. முதலில், பதவிகளை பற்றி பார்ப்போம். இன்று கிராமத்தில் தனக்கு முதியோர் பென்ஷன் ஒழுங்காக வராவிட்டால், ஒரு முதியவரோ, மூதாட்டியோ, யாரை தேடி சென்று தங்கள் குறைகளை சொல்கிறார்கள்? கட்சிக்காரர்களைத்தானே. அது எதிர்க்கட்சியை சேர்ந்தவராகவே இருக்கட்டுமே. அவர்கள்தானே மக்களுக்கும், அதிகாரிகளுக்கும் பாலமாக இருக்கிறார்கள். அவர்களும் இல்லாவிட்டால், சாமானிய மக்கள் எப்படி அதிகாரிகளுக்கு அழுத்தம் கொடுக்க முடியும்? அப்புறம் ஏன் இப்படி ஒரு கொள்கை ரஜினிக்கு. இந்த கொள்கையை மக்கள் ஏன் ஏற்று இவரை அரசியலுக்கு வரவேற்க வேண்டும் என எதிர்பார்க்கிறார்.
அது அப்பவே நடந்து போச்சு
இளைஞர்கள்-படித்தவர்கள் அரசியலுக்கு வர வேண்டும் என்கிறார். இது நடந்து முக்கால் நூற்றாண்டு வரப்போவதை, ரஜினிகாந்த் உணர..
முகத்தை கழுவி, கண்ணை கசக்கி, தூக்கத்தில் இருந்து எழுந்திருந்தால்தான் உண்டு. திமுக ஆரம்பிக்கப்பட்டபோது அப்படியான இளைஞர்களும், படித்தவர்களும்தான் அதில் சாரை சாரையாக சேர்ந்தனர். பின்னர் அதிமுக உருவானபோதும், அப்படித்தான். இ
ரு கட்சிகளிலுமே, இளைஞர் அணி நல்லபடியாகத்தான் செயல்படுகிறது.
அறிஞர் அண்ணா, 1949ம் ஆண்டு, திமுக என கட்சி துவங்கியபோது, அவருக்கு வயது 40ஐக் கடக்கவில்லை. பண்ருட்டி ராமச்சந்திரன் இன்ஜினியரிங் படித்து முடித்த கையோடு அரசியலுக்கு வந்தவர். திமுகவில் மாணவர் அணி முழுக்க அப்போது கல்லூரி மாணவர்களால் நிரம்பி வழிந்தது.
அப்படி புரட்சி செய்துதான், திமுக 1967ல் முதன் முதலில் ஆட்சிக்கு வந்தது. விடுதலை சிறுத்தைகள் கட்சி துவங்கும்போது திருமாவளவனுக்கு கூட 27 வயதுதான்.
படித்தவர்கள் அரசியலுக்கு வந்தால்தான், நான் அரசியலுக்கு வருவேன் என்ற ரஜினிகாந்த்தின் வாதம் எவ்வளவு நகைப்புக்குரியது என்பதற்கு இவை சில உதாரணங்கள். ஆனால், உச்சகட்ட காமெடி என்பது, அரசியல் புரட்சி பற்றிய ரஜினிகாந்த் கருத்துதான். கடல் வற்றட்டும்.. நான் மீன் பிடிக்கிறேன்.. என்று சொல்வதற்கு இணையானது இது. புரட்சி என்பது அதுவாக வெடித்து கிளம்புவது. ஜல்லிக்கட்டுக்கு நடந்ததே அது சமகால தமிழக வரலாற்றின் முக்கிய புரட்சி.
அதற்கு தலைவர் கூட தேவைப்படாது. ஆனால் புரட்சி வெடிக்கட்டும், அதற்கு நான் தலைமை தாங்க வருவேன் என்பது சாத்தியமா என்பதோடு, அதற்கான அவசியம் இருக்கிறதா என்ற கேள்வியையும் கூடவே கூட்டி வருகிறது.
மலையை தூக்கி வைக்கவும்
இரு பெரும் கட்சிகள் தமிழகத்தில் செயல்படுகின்றன. மக்களின் தேவைகளை அந்த கட்சிகள் மூலமாக நிறைவேற்றிக்கொள்கிறார்கள். இதற்கு மேலும் ஏன் புரட்சி பொங்கி வழிய வேண்டும் என்கிறார் ரஜினிகாந்த்? ஆக.. புரட்சி வராது.. நாமும் அரசியலுக்கு வராமல், ஓய்வு காலத்தை நிம்மதியாக கழிக்கலாம் என்பதால்தானா?
இப்படித்தான், 'நட்புக்காக' என்ற திரைப்படத்தில், வரும் செந்தில் கதாப்பாத்திரம், மலையை தூக்குகிறேன் என்று ஊரிலுள்ள அனைவரையும் ஒரே இடத்தில் கூட்டி வைப்பார். எல்லோரும் வாயை பிளந்து பார்த்து நிற்கும்போது, சரி.. சரி.. டைம் ஆச்சு.. வந்து மலையை தூக்கி என் கைகளில் வைங்க.. தூக்குகிறேன் என்று கூலாக சொல்வார். அந்த காமெடி சீனை, சீரியசாகவே அப்ளை செய்துள்ளார் ரஜினி. 2021 தேர்தல் நெருங்கும்போது, கண்ணுக்கு எட்டிய தூரம் வரை புரட்சியையே காணோம்.. அப்போ நானும் அரசியலுக்கு வரப்போவதில்லை என்று சொல்லப்போகிறார்.
இது தெரியாமல் ரசிகர்கள், இன்னும் சில்லரையை சிதற விடுவதுதான் வேதனை!.