எச்சரிக்கையாக இருங்கள்



உத்தர பிரதேச மாநிலத்தில் குடியுரிமை சட்டத்திற்கு எதிராக நடைபெற்ற போராட்டத்தின் போது பெரும் வன்முறை வெடித்தது. இந்த வன்முறையால் 20-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். பல இடங்களில் பொது சொத்துக்கள் சூறையாடப்பட்டது.
தற்போது மாநிலத்தில் போராட்ட நிலைமைகள் குறைந்துள்ள நிலையில், கடந்த வாரம் உத்தர பிரதேசத்தை ஆட்சி செய்யும் பா.ஜ.க அரசு சார்பில், பொதுச்சொத்துக்களை சூறையாடியவர்கள் என இஸ்லாமியர்களின் புகைப்படத்தை வீட்டு முகவரியோடு அச்சிட்டு மிகப் பெரிய பேனர்களை லக்னோவின் பல பகுதிகளில் வைத்துள்ளனர்.
மேலும், பொதுச்சொத்துக்களுக்கு உரிய நஷ்ட ஈடு கொடுக்கவில்லை எனில் உங்களது சொத்துக்கள் பறிமுதல் செய்யப்படும் என எச்சரிக்கை விடும் வாசகங்களும் அதில் இடம் பெற்றிருந்தன. இதனால் அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் பேனர்களை நீக்குமாறு அரசுக்கு கோரிக்கை வைத்தனர். அரசு அவர்களின் கோரிக்கைக்கு செவிசாய்க்கவில்லை.
இதனிடையே ,பேனர் வைத்த விவகராம் தொடர்பாக அலகாபாத் உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்கு பதிவு செய்தது. மேலும் வழக்கு விசாரணையின் போது, சொந்த மாநில மக்களை ஆளும் அரசு அவமதிக்கிறது, தனிநபர் சுதந்திரத்தை மீறி செயல்பட்டுள்ளதுள்ளதால் பேனர்களை அகற்றவேண்டும் என எச்சரித்தது.
ஆனால், நீதிமன்றத்தை மதிக்காத உத்தர பிரதேச பா.ஜ.க அரசு நீதிமன்ற உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தது. வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றமும் இதுபோல பேனர் வைக்கும் அதிகாரத்தை யார் கொடுத்தது, சட்டத்தில் இதற்கு இடம் உண்டா? என கேள்வி எழுப்பியதோடு தனது கண்டனத்தைப் பதிவு செய்து வழக்கைத் தலைமை அமர்வுக்கு மாற்றியது.
இதுதொடர்பான வழக்கு அடுத்தவாரம் உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வரவுள்ள நிலையில், அரசு வைத்திருக்கு பேனர்களுக்கு பக்கத்தில் போராட்டக்காரர்கள், சமூக ஆர்வலர்கள் மற்றும் ஜனநாயக அமைப்பினர் புதிதாக மற்றொரு பேனரை வைத்துள்ளனர்.
அந்த பேனரில், பாலியல் வன்கொடுமை வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் இருக்கும் உன்னாவ் தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ குல்தீப் செங்கார் மற்றும் சட்டக் கல்லூரி மாணவியை பாலியல் வன்கொடுமை வழக்கில் சிறையில் இருந்து ஜாமீனில் வெளிவந்த பா.ஜ.க முன்னாள் மத்திய இணை அமைச்சர் சாமியார் சின்மயானந்த் புகைப்படங்களை வைத்து அந்த பேனர் அச்சிடப்பட்டுள்ளது.
மேலும் அதில், “இதில் இருப்பவர்கள் பெண்களுக்கு எதிரான குற்றச்செயலில் ஈடுபட்டவர்கள். எனவே பெண்கள் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்” என வாசகம் இடம்பெற்றுள்ளது. இந்த சம்பவம் பா.ஜ.கவினர் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
------------------------------------------)

இந்திய கொரோனா எதிர்ப்பு!
சீனாவில் தொடங்கிய கோவிட்-19 எனப்படும் கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் மிகத் தீவிரமாக பரவிக் கொண்டிருக்கிறது. பெரும்பாலான நாடுகள் தங்கள் எல்லைகளை மூடி தங்கள் மக்களை பாதுகாத்து வருகின்றன.
இந்தியாவிலும் இதன் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரிக்கிறது. கொரோனா வைரஸ் மிக வேகமாக பரவி வருவது நாட்டு மக்களிடையே மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 
நாடு முழுவதும் வைரஸ் பாதித்தோர் எண்ணிக்கை இன்று வரை 107 ஆக அதிகரித்துள்ளது.
இந்தியாவில், அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 31 பேருக்கும், கேரளாவில் 22 பேருக்கும் கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி, புதிதாக வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்ட 14 பேரும் மகாராஷ்டிராவைச் சேர்ந்தவர்கள். அதேபோல், உத்தரப்பிரதேச மாநிலத்தில் 11 பேருக்கு வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.


இந்த வைரஸ் பாதிப்பால், கர்நாடகா மாநிலம், கல்புர்கியில் 76 வயது முதியவர் ஒருவர் பலியான நிலையில், நேற்று முன்தினம் டெல்லியை சேர்ந்த 68 வயது மூதாட்டி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். 
வெளிநாட்டில் இருந்து திரும்பிய தனது மகன் மூலமாக அந்த மூதாட்டிக்கு கொரோனா வைரஸ் பரவியுள்ளது. இதனால், இந்தியாவில் உயிரிழப்பு 2 ஆக அதிகரித்துள்ளது.
இந்த சூழலில், வெளிநாடுகளில் இருந்து திரும்புபவர்கள் தீவிரமாகக் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். வைரஸ் பாதித்தவர்களுடன் பழகிய 4,000 பேர் அடையாளம் காணப்பட்டு, அவர்களுக்கும் நோய் பாதிப்பு உள்ளதா என்பது குறித்து பரிசோதனை நடத்தப்பட்டு வருகிறது.
இந்தியாவில் கொரோனா பாதிப்பால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவது சுகாதாரத்துறை மீது பல்வேறு கேள்விகளை எழுப்புகிறது. ஒருவேளை வைரஸை எதிர்கொள்ளும் அளவிற்கு மோடி அரசிடம் திட்டங்கள் மற்றும் மருத்துவ வசதிகள் இல்லையா என்ற கேள்வியும், சந்தேகமும் பரவலாக எழத் தொடங்கி உள்ளது.

தமிழக சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
கொரோனா வைரஸ் பாதிப்பை தடுக்க தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. ரெயில், பஸ், சினிமா தியேட்டர், திருமண மண்டபம், ஓட்டல்கள், தங்கும் விடுதிகள், வணிக வளாகங்கள் போன்றவற்றில் அடிக்கடி கைகள் படும் இடங்களான இருக்கைகள், மேஜைகள், கதவுகள், டிக்கெட் கவுண்ட்டர்கள், ரெயில், பஸ், கதவுகளின் கைப்பிடிகளை சுத்தமாக பராமரிக்க வேண்டும்.

சினிமா தியேட்டர்களில் ஒவ்வொரு காட்சி முடிந்ததும் இருக்கைகள், டிக்கெட் கவுண்ட்டர்கள் மற்றும் தியேட்டரின் உட்பகுதியில் கிருமி நாசினி தெளிக்க வேண்டும். பஸ், ரெயில்களில் ஒரு வழித்தட பயணம் முடிவடைந்ததும் இருக்கைகள், கைப்பிடிகளில் கிருமி நாசினி தெளிக்க வேண்டும்.

ஓட்டல்கள், தங்கும் விடுதிகள், திருமண மண்டபங்களில் தரை தளங்களில் அவ்வப்போது கிருமி நாசினியை தெளித்து பராமரிக்க வேண்டும். குறிப்பிட்ட இடைவெளி விட்டு அவ்வப்போது கிருமி நாசினி தெளிப்பதை உறுதி செய்ய வேண்டும்.

கொரோனா வைரஸ்

பஸ் நிலையம், ரெயில் நிலையம், வணிக வளாகம், சினிமா தியேட்டர், திருமண மண்டபம், பஸ், ரெயில் மற்றும் வாகனங்களில் ஒரு லிட்டர் கிருமி நாசினியில் 19 லிட்டர் தண்ணீரை கலந்து தெளிக்க வேண்டும். மருத்துவமனை, ஆம்புலன்ஸ் போன்றவற்றில் ஒரு லிட்டர் கிருமி நாசினியில் 9 லிட்டர் தண்ணீரை கலந்து தெளிக்க வேண்டும்.

எந்திர தெளிப்பான் போன்ற பல்வேறு வகையான தெளிப்பான்களை பயன்படுத்தி கிருமி நாசினியை தெளிக்கலாம். கிருமி நாசினியை தெளித்த பின்பு, ஈரமான துடைப்பானை(மாப்) கொண்டு சுத்தம் செய்ய வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
---------------------------------------------------------0
அறிவியல் தெளிவோம்.

1. வேதியியல்  அட்டவணை 150 
 
பூமியில் இயற்கையாக கிடைக்காமல்செயற்கையாக தயாரிக்கப்படும் மூலகங்கள்செயற்கை மூலகங்கள் எனப்படுகின்றன.இதுவரை24 செயற்கை மூலகங்கள் தயாரிக்கப்பட்டுள்ளன. இவற்றுள் ஒகநேஷன் என்ற மூலகம் மாஸ்கோ அருகிலுள்ள கூட்டு மூலக்கூறு ஆய்வகத்தில் ரசிய அமெரிக்க கூட்டு குழுவினரினால் 2002 ஆம் ஆண்டு தயாரிக்கப்பட்டது.2015ஆம் ஆண்டு அது புதிய மூலகம் என ஏற்றுக்கொள்ளப்பட்டு 2016இல் ஒகநேஷன் என்று பெயரிடப்பட்டது.Og என்ற குறியீடும் அணு எடை 118ம் கொண்டது. இதைக் கண்டுபிடித்தவர் யூரி ஒகநேஷன். வேதியியல் அட்டவணையில் கன மூலகங்களைக் கண்டுபிடித்ததில் பெரும்பங்காற்றியவர்..ஒரு விஞ்ஞானி உயிருடன் இருக்கும்போதே அவரால்கண்டுபிடிக்கப்பட்ட மூலகத்திற்கு அவரது பெயர் சூட்டப்படுவது இது இரண்டாவது முறையாகும். இதற்கு முன்னால் சீபோர்கியம் என்ற மூலகத்திற்கு இவ்வாறு பெயரிடப்பட்டது. அதிக அணு எண்ணும் அதிக அணு எடையும் கொண்ட ஒகநேஷன் கதிர்வீச்சு தன்மையால்மிகுந்த நிலையற்ற தன்மை கொண்டது. 2005 இலிருந்து இதுவரை ஐந்தாறு மூலக்கூறுகளே அறியப்பட்டுள்ளது. எனினும் இது ஆராய்ச்சி நோக்கில் முக்கியத்துவம் கொண்டதாம்.
2. கடைசிவெள்ளைக் காண்டாமிருகம்?
நஜின் மற்றும்ஃபடு என்ற பெயர்கொண்ட உலகின் கடைசி இரண்டு வெள்ளை காண்டாமிருகங்களின் ஏழுசினைமுட்டைகளை விஞ்ஞானிகள் செயற்கை முறையில் கருத்தரிக்க வைத்துள்ளார்கள். இதே இனத்தை சேர்ந்த சுனி மற்றும் சாட் என்ற பெயர் கொண்ட ஆண் மிருகங்களிடமிருந்து எடுக்கப்பட்டு உறைநிலையில் வைக்கப்பட்ட விந்துக்களைக் கொண்டு இக்கருத்தரிப்பு செய்யப்பட்டுள்ளது. 45 வயதான சுடான் என்ற பெயர் கொண்ட உலகின் கடைசி வெள்ளை ஆண் காண்டாமிருகம் கடந்த வருடம் கென்யாவில் இறந்துவிட்டது.
3. நிலவின்மித்ரா பள்ளம் 
ஆகஸ்ட் 23அன்று சந்திரயான் விண்கலத்தில் பொருத்தப்பட்டிருந்த டெரைன் மேப்பிங்கேமிரா-2 எடுத்த நிலவின் மேற்பரப்புக் காட்சிகளை இஸ்ரோ பகிர்ந்துள்ளது.அந்தப் படத்தில் ஜேக்சன், மேக்,கொரோலீவ், மித்ரா ஆகிய பள்ளங்கள் காட்டப்பட்டிருந்தது. இதில்மித்ரா பள்ளமானது பத்மபூஷன் விருது பெற்றவரும் கதிரலை இயற்பியலில் பல கண்டுபிடிப்புகளை செய்தவருமான பேராசியர் சிசிர் குமார் மித்ராவின் பெயரில் அழைக்கப்படுகிறது.1890இல் பிறந்த  அவர் இந்தியாவில் முனைவர் பட்டம் பெற்றபின் பாரிஸ் சென்று அலைவரிசைகள் குறித்த ஆய்வில் இரண்டாவது முனைவர் பட்டம் பெற்றார். அங்குசிறிது காலம் கியூரி நிறுவனத்தில் மேரி கியூரியின் கீழ் பணி புரிந்தார். வளிமண்டலத்திலுள்ள அயனோஸ்பியர்(ionosphere) குறித்த ஆய்வுகள் மூலம்அந்த மண்டலத்தில் புற ஊதாக் கதிர்கள் நடுப்படலமாக(E layer)உள்ளது என்றும் இரவில் வானம் முழுக் கருமையாக இல்லாமல் ஒளிச் சிதறல்களாக காட்சியளிப்பதற்கு அதிலுள்ள படலத்திலுள்ள அயனிகள்தான் (ions) காரணம்போன்ற கண்டுபிடிப்புகள் அவருடைய சாதனைகளில் குறிப்பிடத்தகுந்தவை. 1947ஆம் ஆண்டு ‘மேல் வளி மண்டலம்’என்ற ஆய்வறிக்கையை வெளியிட்டார்.
4. விண்வெளி மோதல்கள்
அமெரிக்காவிலுள்ள தனியார் விண்வெளி நிறுவனமான ஸ்பேஸ்எக்ஸ்க்கு சொந்தமான ஸ்டார்லின்க் எனும் செயற்கைக்கோளும் ஐரோப்பிய ஒன்றியம் அனுப்பியிருந்த  ஆய்வு செயற்கைக்கோள் ஒன்றும் மோதவிருந்தனவாம். இதனால்ஐரோப்பிய ஒன்றியம் தனது செயற்கைக்கோளின் பாதையை மாற்ற வேண்டியிருந்ததாம். பூமிக்கு மேல் 320 கி.மீ தொலைவில் இந்த நிகழ்வு நடந்துள்ளது.இந்த சம்பவம் விண்வெளிப் பயணங்களின் பாதுகாப்பு குறித்தும் விண்வெளியில் சுற்றும் செயற்கைக்கோள்களுக்கு இடையில் ஏற்படக்கூடிய மோதல்கள் குறித்தும் கவலையை எழுப்பியுள்ளது.
5. உயிரியல் கத்திரிக்கோல் 
புனேவிலுள்ளஇந்திய அறிவியல் கல்வி மற்றும் ஆய்வுக் கழகத்தை(IISER) சேர்ந்த அறிவியலாளர்கள் குழு McrBC  என்ற சிக்கலான பேக்டீரியா புரோட்டீனின் அணு அமைப்பை நிர்ணயித்துள்ளார்கள்.இந்த புரோட்டீன் பேக்டீரியாவின் செல்லில் வைரல் தொற்றுக்களைதடுக்க உதவும் ஒன்றாகும். இது ஒரு கத்திரிக்கோல் (molecular scissor) போல் செயல்படுகிறது. உயிரியல் உதவிப் பேராசிரியர் கயரட் சசி கிருஷ்ணன் மற்றும் அவரது குழுவினரின் இந்த மகத்தான கண்டுபிடிப்பு இரண்டு மதிப்பு மிக்க அறிவியல் இதழ்களில் வெளியிடப்பட்டுள்ளது.மூலக்கூறு கத்திரிக்கோல் வேலை செய்யும் விதத்தை புரிந்துகொள்ள இது ஒரு பெரிய முன்னேற்றம் என்று சொல்லப்படுகிறது. பேஜஸ் என்னும் வைரஸ் அணிகள் பேக்டீரியாவின் செல்களை தாக்கி அவைகளை அழிக்கின்றன.இவைகளை பயன்படுத்தி பேக்டீரியா தொற்றுக்களை குணப்படுத்தும் முறை பேஜ் சிகிச்சை என்றழைக்கப்படுகிறது. McrBC புரோட்டீன் அமைப்பை கண்டுபிடித்திருப்பது இந்த சிகிச்சை முறையில் நீண்ட கால தாக்கத்தை உண்டுபண்ணும்.மேலும் மருந்துகளுக்கு எதிர்ப்பு சக்தி கொண்ட பேக்டீரியா தொற்றுக்களை சமாளிக்கவும் உதவும்.
--------------------------------------------------------------------------*

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விகடானந்தா நிலவரம்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?