வியாழன், 12 பிப்ரவரி, 2015

போதையின் பாதை.தமிழகத்தில்  கஞ்சா புழக்கம்  அதிகரித்து வருகிறது.டாஸ்மாக் வளர்ச்சியால் தயங்கி நின்ற கஞ்சா பழக்கம் மது வகைகளை விட மலிவு விலை என்ற நோக்கில் மீண்டும் பெருகிறது.
.மது அ ருந்தியது போல் இதில் வாடை வருவதில்லை என்பதாலும்,காவல்துறை கண்காணிப்பு கஞ்சா விற்பனையில் கடுமையாக இல்லாததாலும் இதன் வளர்ச்சிக்கு காரணம்.
. தேனி, வருசநாடு மலைப்பகுதிகளில் இருந்து மட்டுமல்லாது ஆந்திரா, ஒடிசா மாநிலங்களில் இருந்தும் மூடைக்கணக்கில் கஞ்சா கடத்தி வந்து சில்லரை விற்பனையில் கொள்ளை லாபம் பார்த்து வருகின்றனர்.
மலிவு விலை போதைப்பொருளாக வலம் வரும் இந்த கஞ்சா பாக்கெட்டுகளை மஞ்சள் நிற காகித பொட்டலம் ரூ.60, வெள்ளை நிற பொட்டலம் ரூ.40, காக்கி நிற பொட்டலம் ரூ.30 என வகை பிரித்து விற்கின்றனர்.

இதுதவிர புகையிலைத் தூளுடன், கஞ்சா கலந்து உள்ளங்கையில் இட்டு கசக்கியெடுத்து சிகரெட்டுகளில் நிரப்பியும் ரெடிமேடாக கஞ்சா சிகரெட்டுகள் விற்கப்படுகின்றன.
ஒரு ஜோடி கஞ்சா சிகரெட் ரூ.50க்கு கிடைக்கிறது.
காலை, மாலை நேரங்களில் 6 மணி முதல் 10 மணி வரை என குறிப்பிட்ட நேரத்தை ஒதுக்கிக் கொண்டு தென்மாவட்டங்களின் குறிப்பிட்ட 96 இடங்களில் கஞ்சா மொத்த விற்பனை நடத்தப்படும் அதிர்ச்சித் தகவல் சமீபத்தில் உளவுத்துறை நடத்திய கணக்கெடுப்பில் தெரிய வந்திருக்கிறது.
இங்கு கிலோ கணக்கில் கஞ்சா வாங்கி, தென்மாவட்டத்தின் 300க்கும் அதிக இடங்களில் டூவீலரில் வலம் வந்தபடி பொட்டலங்களாக விற்கும் தொழிலில் பலர் ஈடுபட்டிருப்பதும் தெரியவந்துள்ளது.

தென்மாவட்டத்தில் வைகை ஆற்றங்கரைகளில் குறிப்பிட்ட பகுதிகளை கஞ்சா வியாபாரிகளில் சிலர் தங்கள் கட்டுப்பாட்டில் வளைத்துப் போட்டுள்ளனர்.
 இந்த இடங்களை மற்ற கஞ்சா வியாபாரிகளுக்கு வாடகைக்கு விட்டும் வாரம்தோறும் வாடகை வசூலிப்போரும் இருக்கின்றனர். தென்மாவட்ட சிறைகளிலும் கஞ்சா புழக்கம் தாராளமாக உள்ளது.
 2014ம் ஆண்டில் கஞ்சா வைத்திருந்ததாக தமிழகத்தில் ஆயிரத்து 220 கைதிகள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
 கஞ்சா மற்றும் போதை பொருட்களை கடத்தும், உபயோகப்படுத்தும் குற்றவாளிகளை கைது செய்து நடவடிக்கை எடுக்க போலீஸ் துறையில் மாவட்டம்தோறும் போதை தடுப்பு பிரிவு செயல்பட்டு வருகிறது. ஆனால் இவர்கள் செயல்பாடுகள் மது அருந்துபவர்களை மட்டுமே குறை வைத்து வழக்கு கணக்கை ஏற்றி குறியீட்டை சரி செய்யும் விதமாகவே உள்ளது.மற்ற போதையாளர்களை ,போதை சரக்குகளை கண்டு பிடிக்க இவர்கள் முயற்சிப்பதில்லை.

ஆனால் இவர்கள் ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து பெரிய அளவில் கஞ்சா கடத்தி வரும் சில நபர்களை மட்டுமே குறி வைத்து பிடிக்கின்றனர். ஒரு கிலோ, 2 கிலோ என்ற அளவில் ஆயிரக்கணக்கானோர் வெளிமாநிலங்களில் இருந்து சுலபமாக கஞ்சாவை கடத்திக் கொண்டு வந்து, தமிழக எல்லையில் நுழைந்ததும், உரியவர்களிடம் ஒப்படைத்துவிட்டு சென்று விடுகின்றனர்.
இந்த வகையில் ஏராளமான அளவில் கஞ்சா வருகிறது. உள்ளூர் போலீசார், வழக்கமான கஞ்சா வியாபாரிகளிடம் மாமூல் வாங்கி கொண்டு ஒதுங்கி விடுகின்றனர்.

பெயருக்கு சிலரை கைது செய்து கிராம் கணக்கில் கஞ்சாவை பறிமுதல் செய்து கணக்கு காட்டி வருகின்றனர்.
இதனால் தமிழகத்தில், குறிப்பாக தென்மாவட்டங்களில் சமீப காலமாக கஞ்சா விற்பனை அதிகரித்துள்ளது. மாணவர்களை, இளைஞர்களை, தொழிலாளர்களை கஞ்சா சீரழித்து வருகிறது. ரவுடிகள் மோதல், கொலை, வழிப்பறி என பல்வேறு குற்ற சம்பவங்களுக்கும் கஞ்சா விற்பனையே அடித்தளமாக அமைந்து வருகிறது. எனவே கஞ்சாவை முழுமையாக ஒழித்துக் கட்ட அந்தந்த மாவட்ட போலீஸ் அதிகாரிகள் அதிரடி நடவடிக்கைகளில் களமிறங்க வேண்டுமென்ற மக்கள் கோரிக்கை வலுத்துள்ளது.
அன்றாட தேதியை மறப்பது போதை பழக்கத்தின் முதல்படி. அதன்பிறகு கொஞ்சம், கொஞ்சமாக மனதளவில் தன்னையும், குடும்பத்தையும் மறந்து வெறும் உடலளவில் நடமாடிக் கொண்டிருக்கும் போதைவாசிகளின் நிலை உண்மையிலேயே பரிதாபத்திற்குரியது.
 சயனைடு கலவையாக உள்ள போதை மருந்துகளை ஒரு மிலி கூடுதலாக உட்கொண்டாலும் மரணம் நிச்சயம் என்ற நிலையில், கலாச்சார பெருமைமிக்க தென்மாவட்ட பகுதிகளிலும் இந்த போதைத்தேடல் அதிகரித்து வருவது வெட்ககரமானது. வேதனைக்குரியது.

நெயில்பாலிஷ், பெவிகால் இரண்டையும் உள்ளங்கையில் இட்டு, அழுத்தத் தேய்த்து கைகளை பொத்தியபடி விரலிடுக்கு ஓட்டை வழி மூக்கில் உறிஞ்சுகின்றனர்.
 ஒரு முனை வெட்டப்பட்ட பாலித்தீன் பைக்குள் ரப்பர் ஒட்டும் ‘சிந்தெட்டிக் பேஸ்ட்’டை பிதுக்கிவிட்டு தேய்த்து, பாலித்தீன் பையின் வெட்டிய முனை வழி மூக்கால் உறிஞ்சி போதை ஏற்றுவது சிறுவர்கள் என்பதுதான் வேதனையானது.
டூவீலர்களில் வலம் வரும் இளைஞர்கள் திடீரென பெட்ரோல் டேங்க் மூடியைத் திறந்து, மூக்கு நுழைத்து உறிஞ்சிவிட்டு மூடுகின்றனர்.
 இதில் செலவில்லாத போதை கிடைக்கிறதாம். இஞ்சி எனும் திரவபோதைக்கு டிரைசைக்கிள் தொழிலாளி துவங்கி அடிநிலையில் உள்ள பலரும் விழுந்துள்ளனர்.
இதனுடன் முட்டை, கரும்புச்சாறும் கலந்து குடிக்கின்றனர்.

பெயின்ட் கடையில் வார்னிஷ் டப்பா வாங்கி, ஒரு குச்சி விட்டு அதனை தொடர்ந்து கலக்க, கெட்டித்தன்மை குச்சிக்குள் ஒட்டி வந்துவிட, தெளிந்த நீராக மாறி இருக்கும் வார்னிஷை கொஞ்சம் குடித்தாலும் கண் மண் தெரியாத போதை ஏறி, விரைந்து சாவு தொடுவோர் அதிகமிருக்கின்றனர்.
இந்த வார்னிஷ் அளவு மேலும் அதிகரிக்க அதை ‘கால்வாரி போதை’ என்கின்றனர்.
கடைகளில் டைப்பிங் எழுத்தை அழிக்க இரு பாட்டில்கள் கொண்ட ஒயிட்னர் பாக்கெட் விற்கப்படுகிறது.
இதில் ஒரு பாட்டில் ஒயிட்னர் முழுமையையும் குடித்து போதைஏற்றிக் கொள்வோரும் உள்ளனர்.
இதனால் இப்போது இந்த ஒயிட்னர்கள் பேனா போல் தயாரித்து விற்கப்படுகிறது.இதை முன் போல் போதைக்கு உபயோகிக்க முடியாது.
பிராந்தி, விஸ்கியுடன் தண்ணீரும், குளுக்கோசும் கலந்து அருந்த, நேரடியாக ரத்தத்தில் அந்த மது கலந்து உடனடி போதையுடன், அதிக நேரம் போதை நீடிக்கிறது என்கின்றனர்.
மேலும் இருமல் டானிக்குடன், வலிநிவாரண மாத்திரைகளைக் கலந்து குடிப்பது உள்ளிட்ட பல்வேறு உடல்நலப்பாதிப்பை உடனடி ஏற்படுத்தும் போதைப்பழக்கத்தில் சிலர் உள்ளனர்.
 பலதரப்பட்ட சுவைகளில் விற்கும் போதை பீடாக்களுடன், பங்கி உள்பட பல ஆயுர்வேத உருண்டைகள், உதட்டுக்குக்கீழ் மாவா பவுடரை வைத்து உமிழ்நீர் கூட்டி விழுங்கி போதை பெறுவதும் என போதைத்தேடல்களின் வீரியம் பெருகி வருகிறது.
 போலீசார், பொதுமக்கள், தொண்டு அமைப்புகள், சமூக ஆர்வலர்கள் என கூட்டு நடவடிக்கை மூலமே போதைப் பாதையில் செல்லும் இளைஞர்களை மீட்டு வர முடியும்.

பீடி, சிகரெட்டில் வைத்தும், ஆப்பிள் உள்பட பழங்களின் இரு முனைகளில் ஓட்டையிட்டும் கஞ்சா கொட்டி பற்றவைத்து உறிஞ்சுவது,
 உணவில் கஞ்சாவைத் தூவி உண்பதென போதை தேடல்கள் மாறி, தற் போது ‘கறிக் கஞ்சா குழம்பு’ தென்மாவட்ட பகுதிகளில் போதை ஆசாமிகளின் பெருத்த வரவேற்பை பெற்று வரு கிறது.
அடுப்பில் கோழி அல்லது ஆட்டுக் கறிக்குழம்பு கொதிக்கும்போது காட்டன் துணியில் கஞ்சாவை பொட்டலமாகக் கட்டி சட்டிக்குள் போட்டு விடுகின்றனர்.
 குழம்பு கொதிக்கக் கொதிக்க கஞ்சாச்சாறு குழம்புக்குள் இறங்கிவிட, துணி பொட்டலத்தை வெளியில் எடுத்து விட்டால், சாதத்தில் இந்த கறிக்குழம்பை இட்டு பிசைந்துண்ண போதை பிய்த்துக் கொள்கிறதாம்.
ஆனால் இந்த பழக்கம் மிகக்குறைந்த நாட்களிலேயே அந்த நபரின் உயிர் பறித்து விடும்.
இவ்வளவு போதை சமாச்சாரங்களை விலாவாரி எழுத காரணம் பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை இந்த கொடும் போதை பழக்கங்க்களில் இருந்து காத்துக்கொள்ளவும்.அவர்கள் இது போன்ற மயக்க நிலைகளில் இருந்தால் அதை உடனே கண்டு பிடித்து அப்பழக்கததை போக்கிடவும்,இது போன்ற போதை தரும் பொருட்களை தம் குழந்தைகள் அடிக்கடி கையாளுகிறார்களா என்று கண்டறியவும்தான்.
அதை விடுத்து இந்த பொருட்களும் போதை தருமா என்று சீரழிய அல்ல.

போதைக்கு அடிமையானால் மன அழுத்தம் அதிகரித்து விடும். கஞ்சாவினால் ஞாபகசக்தி அதிகரிக்கும் என்ற தவறான கருத்து இவர்களிடம் பரப்பிவிடப்படுகிறது.
 இது மிகவும் மோசமான பழக்கம், கஞ்சா மனிதனை எந்த சிந்தனையுமின்றி செயலிலக்க வைத்துவிடும்.
கஞ்சாவிற்கு அடிமையானவர்கள் கடைசியில் பைத்தியமாகி விடுவார்கள் என்பதே உண்மை. போதைப்பழக்கம் உடலுறவில் பாதிப்பை உண்டாக்கும்.
 போதை பழக்கம் உடலை பாதிப்பதோடு உள்ளத்தையும் பாதிக்கிறது.
 உடலில் நரம்பு மண்டலம் பாதிக்கப்படும்.
நோய் எதிர்ப்பு சக்தி குறைந்துவிடும்.

இருதயம், மஞ்சள் காமாலை, கல்லீரல், சிறுநீரகம் உள்ளிட்ட அனைத்து உறுப்புகளும் செயலிழந்துவிடும். புற்றுநோய், டிபி, எச்ஐவி, வயிற்று புண் என்று பாதிப்புகளை அடுக்கிக்கொண்டே போகலாம்.
 தலை முதல் கால்வரை, தோல் முதல் எலும்பு வரை அனைத்து பிரச்னைகளும் ஏற்பட வாய்ப்புகள் உள்ளது.
மொத்தத்தில் போதை பழக் கம் புதை மண்ணில் கால்வைப் பது போல் சுகமாக இருந் தாலும், அதிலிருந்து மீளமுடியாமலே போய்விடும் என்று மருத்துவர்களும் எச்சரிக்கின்றனர்.
போதை தடுப்பு பிரிவு தென்மாவட்ட அதிகாரி ஒருவர் கூறுகையில், “தமிழகத்தில் மலைப்பகுதியில் உள்ள மாவட்டங்களில் கஞ்சா தோட்டங்கள் முற்றிலும் அழிக்கப்பட்டுவிட்டன.
இங்கு கஞ்சா பயிரிட்ட விவசாயிகள் தற்போது கேரளா உள்ளிட்ட வெளிமாநிலங்களுக்கு சென்றுவிட்டனர். தற்போது ஆந்திராவில் இருந்து தமிழகத்திற்கு கஞ்சா அதிகம் கடத்தி வரப்படுகிறது. இதனை தடுக்க போதை தடுப்பு பிரிவு போலீசார் தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர்.

ஆனால் உள்ளூர் போலீசார் ஒத்துழைப்பு கொடுப்பதில்லை. நடப்பாண்டில் தமிழகத்தில் 9 ஆயிரத்து 453 கிலோ கஞ்சா பறிமுதல் செய்துள்ளோம். 5 ஆயிரத்து 123 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவர்களில் 82 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சிறையில் இருந்து விடுதலையாகி வந்ததும், மீண்டும் கஞ்சா விற்பனையில் ஈடுபடுகின்றனர்.
சிறையிலேயே கஞ்சா விற்பனை நடப்பதும்,சிறைக்குள் அடிக்கடி கஞ்சா பிடிபடுவதும் செய்தி தாள்களில் அடிகடி வரும் செய்திகள்.
சட்டங்களை கடுமையாக்கி, கடும் தண்டனை கொடுத்தால்தான் கஞ்சா விற்பனையை முற்றிலும் தடுக்க முடியும்,’’ என்றார்.

பொதுவாக போதையை 3 வகைப்படுத்துகின்றனர். மருத்துவ குணம் வாய்ந்த கஞ்சாவை சட்டவிரோதமாக பயிரிட்டு உட்கொள்வது ஹெர்பல் டிரக்.
அதிக தூக்கம், வலிநிவாரணிக்காக தயாரிக்கப்படும் மருந்து மாத்திரைகளை போதைக்காக பயன்படுத்துவது மெடிக்கல் டிரக்.
ஆராய்ச்சி மற்றும் வேதி மாற்றம் மூலமாக ஊசி வடிவில் அதிபயங்கர போதை பொருளாக விற்பனைக்கு வருவது கெமிக்கல் டிரக் என்கின்றனர்.

இவ்வகையில் கஞ்சா, கொகைன், அபின், ப்ரவுன்சுகர், ஹெராயின், எபிடிரைன், ஓபியம், சர்பன்ட் வெனம், ஹேசிஸ் ஆயில், வங்க், எச்என்ஜி ஆயில், டிடிஜெசிக், மேன்ட்ராக்ஸ், பெத்தடின், மார்பைன், நைட்ரோமெட், வேல்யூம், காம்போ என 239 வகையான போதைமருந்துகள் இந்தியாவில் புழக்கத்தில் உள்ளதாக ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.
 எந்த நிலையிலும் போதை இல்லை என்பவர்களுக்கான கடைசி காஸ்ட்லி ஆயுதம் சர்பன்ட் வெனம். இதுபோதையின் உச்சகட்ட நிலை.
விஷம் குறைவான தண்ணீர் பாம்புகளின் உடலில் போதை மருந்துகளை செலுத்தி, போதைவாசிகளின் நாக்கில் பாம்பை கொத்த விடுவதன் மூலம் போதை பெறுகின்றனர்.
போதைதடுப்பு மற்றும் மனமயக்கும் தடுப்புச் சட்டம் (நார்கோடிக்ஸ், டிரக்ஸ் அன்ட் சைக்கோடிராபிக் சப்ஸ்டான்சஸ் ஆக்ட்) 1985ல் உருவாக்கப்பட்டது. அதன்பிறகு 1989 மற்றும் 2001ல் சட்டதிருத்தம் கொண்டு வரப்பட்டது.
அதன்படி 5 மில்லி கிராம் வைத்திருந்தால் போதைவாசி, 5 கிராம் வைத்திருந்தால் ரீடெய்லர், 50 கிராம் வைத்திருந்தால் ஹோல்சேலர் என கஞ்சா வியாபாரிகள் தரம் பிரிக்கப்பட்டு தண்டனை விதிக்கப்படுகிறது.
என்டிபிஎஸ் சட்டம் 8சி உடன் இணைந்த 21சி, 21பி, 21ஏ ஆகிய பிரிவுகளின் கீழ் மனமயக்கும் போதை மருந்து வைத்திருக்கும் குற்றத்திற்கு குறைந்தது ஒரு நாள் சிறை அல்லது அபராதம், அதிகபட்சமாக 20 ஆண்டு சிறை அல்லது தூக்கு தண்டனை விதிக்க முடியும்.

போதை பழக்கத்திற்கு அடிமையாகும் சிறார்களை எக்காரணம் கொண்டும் தண்டிக்காமல், அவர்களை மறுவாழ்வு இல்லங்களுக்கு அனுப்பி சுகப்படுத்த வேண்டும் என விதி 64ஏ கூறுகிறது.
சட்டவிரோதமாக கஞ்சா உள்ளிட்ட போதைபொருட்களை கடத்தல் அல்லது பதுக்குதல் குற்றத்திற்கு 8சி உடன் இணைந்த 20பி பிரிவின் மூலமாக குறைந்தது 10 ஆண்டுகள் முதல் அதிகபட்சம் 20 ஆண்டுகள் வரை சிறைதண்டனை விதிக்க முடியும்.
சட்டங்களில் கடுமை இருந்தும் போதைப்பழக்கத்திற்கு ஆளாவோரும், அழிவோரும் நம்மூர்களில் அதிகரித்து வருவது வேதனையானது.
 உதவி:தினகரன் .
========================================================================