பனாமா? (கருப்புப்பண) பாசமா??
பனாமா ஆவணங்கள் உலகம் முழுதும் இருக்கின்ற பணம் படைத்தவர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்யக்கூடிய விதத்தில் வர்த்தகச் செயல்பாடுகள் எதுவும் மேற்கொள்ளாமல் பெயரளவில் மட்டும் உள்ள போலியானகம்பெனிகளின்வலைப்பின்னல் மிகவும் விரிவான அளவில் செயல் பட்டு வந்திருப்பதை வெளிச்சத்திற்குக் கொண்டு வந்திருக்கிறது.
இதுபோன்று பெயரளவிலான கம்பெனிகளின் சேவை களைப் பயன்படுத்திக் கொள்வதற்காக, பனாமாவைத் தலைமையகமாகக் கொண்டு செயல்பட்டு வந்த மொசாக் ஃபொன்சேகா என்னும் சட்ட நிறுவனம்ஒன்றை இந்தியர்கள் பலர் பயன்படுத்திக் கொண்டிருப்பதை தி இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளேடு வெளியிட்டிருக்கிறது.
உலகின் முக்கிய பிரபலங்கள் தங்களது சொத்து ஆவணங்களை மொசாக்ஃபொன்சேகா நிறுவனத்தில் பாதுகாத்துவந்தனர்.
இதில் 500க்கும் மேற்பட்ட இந்தியர்கள் இடம் பெற்றிருந்திருக் கிறார்கள். இந்த நிறுவனங்கள் அனைத்தும் பிரிட்டிஷ் விர்ஜின் ஐலேண்ட்ஸ், கேமேன் ஐலேண்ட்ஸ் போன்று எண்ணற்ற பெயர்களில் பதிவு செய்யப்பட்டி ருக்கின்றன.
ஃபொன்சேகா நிறுவனத்தி லிருந்து கணினி வழி கசிந்துள்ள விவரங்களிலிருந்து 1 கோடியே 15 லட்சம் (1.5மில்லியன்) ஆவணங்கள் வெளி உலகத் திற்கு வெளிச்சத்திற்கு வந்துள்ளன.
இவைகள் அத்தனையும் சர்வதேச புலனாய்வு இதழியலாளர்களின் கூட்டமைப்பு ஆய்வு செய்து, அதன் முடிவுகளை உலகம் முழுதும் உள்ள நூற்றுக்கும் மேற்பட்ட பத்திரிகைகளில் வெளியிட்டிருக்கிறது.
இத்தகைய கூட்டுமுயற்சியின் ஒரு பகுதியாக, தி இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளேடும் திரைமறைவில் நடைபெற்ற இத்தகைய வணிகத்துடன் தொடர் புடைய 500 இந்தியர்களின் பெயர்களை வெளிப்படுத்தி இருக்கிறது.
பனாமா ஆவணங்கள் ஏற்கனவே சர்வதேச அளவில் ஒரு சலசலப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
இவ்வாறு அமைக்கப்பட்டுள்ள போலியான கம்பெனி யில் காணப்பட்டு, பின்னர் அது தன் மனைவியின் பெயருக்கு மாற்றப்பட்டிருப்பதைத் தொடர்ந்து ஐஸ்லாந்து பிரதமர், குன்லாக்சன் தன் பதவியை ராஜினாமா செய்திட மக்களால் நிர்ப்பந்திக்கப் பட்டிருக்கிறார்.
நாடாளுமன்றத்திற்கு வெளியே நடைபெற்ற பிரம்மாண்டமான மக்கள் திரளின் பேரணியை அடுத்து அவர் ராஜினாமா செய்திருக்கிறார்.
பாகிஸ்தான் பிரதமர், தன் மகன்கள் மற்றும் மகள்களும் இதுபோன்ற போலிக் கம்பெனிகளில் சம்பந்தப்பட்டிருப்பதாகக் கூறப்பட்டிருப்பதைத் தொடர்ந்து, இது குறித்து விசாரிக்க ஓர் ஓய்வுபெற்ற நீதிபதியின் தலைமையில் விசாரணை நடத்திட நகைப்பிற்கு இடமளிக்கக்கூடிய விதத்தில் ஒரு குழுவை அமைத்திருக் கிறார்.
பிரிட்டிஷ் பிரதமர் டேவிட் கேமரூனும்கூட தானும் தன் குடும்பமும் தன் தந்தையால் மொசாக் மூலம் அமைக்கப்பட்ட நிதியத்திலிருந்து பயன டைந்ததா என்பது தொடர்பாக விளக்கம் அளித்திட மிகவும் சிரமப்பட்டுக் கொண்டிருக்கிறார்.
இதேபோன்று பல் வேறு நாடுகளும் இதனுடன் சம்பந்தப்பட்டிருக் கிற தங்கள் நாட்டுக் குடிமக்கள் மீது விசாரணைகள் நடத்திட உத்தரவிட்டிருக்கின்றன.
உலகின் பெரும் பணக்காரர்களும், பெரும் நிறுவனங்களின் பண முதலை களும், தங்கள் சொந்த நாட்டின் அரசாங்கத்திற்கு வரிசெலுத்தாமல் ஏமாற்றுவதற்காக இதுபோன்ற போலி கம்பெனிகளில் தங்கள் பணத்தையும், சொத்துக்களையும் போட்டு வைப்பது மற்றும் பண மோசடி நடவடிக்கைகளில் ஈடுபடுவது என்பது அனைவரும் அறிந்த ஒன்றுதான்.
எனவேஇதில் நாம் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை. உலகம் முழுதும் இயங்கும் கிரி மினல்தனமான வணிகக் கூட்டமைப்பினர் இதுபோன்ற கம்பெனிகளை தங்கள் போதை மருந்துப் பொருட்களைக் கடத்தியதில் ஈட்டிய பணத்தைப் போடுவதற்கும், ஆயுதங்கள் வாங்குவதற்கும் பயன் படுத்திக் கொள்கிறார்கள்.
ஃபொன்சேகா ஆவணங்கள் சுமார் 2 லட்சத்து 14 ஆயிரம் கம்பெனிகளின் பெயர்களை வெளிப்படுத்தி இருக்கின்றன.
இக்கம்பெனிகளின் வழியாக பணக்காரர் களும், கிரிமினல் பேர்வழிகளும் நன்கு கொழிக்க பல ஆண்டு காலமாகவே வசதிகள் செய்து தரப்பட்டு வந்திருக்கின்றன.
பொது நலத் திட்டங்களில் பயன்படுத்த வேண்டிய, அரசாங்கத்திற்கு வர வேண்டிய, வரிவருவாயை ஏமாற்றுவதுஎன்பது சமுதாயத்தில் சமத்துவமின்மை யை உருவாக்குவதற்கான வழிகளில் ஒன்றாகும். கலிபோர்னியா பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த பொருளாதாரவாதியான கேப்ரியல்சுக்மான் என்பவரது கூற்றுப்படி, உலகின்செல்வ வளத்தில் 8 சதவீதம் அளவிற்கு - சுமார் 68 லட்சம் கோடி ஆகும்.[7.6 டிரில்லியன் டாலர்]
இதுபோன்ற ரகசியகம்பெனிகளில் மறைத்து வைக்கப்பட்டி ருப்பதாக மதிப்பிடப்பட்டிருக்கிறது.
தி இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளேட்டின் படி இக்கம்பெனிகளில் தங்கள் பணத்தைமறைத்து வைத்திருக்கும் இந்தியர் களில், பெரும் வர்த்தகப் புள்ளிகள், அரசியல்வாதிகள், சினிமா நட்சத்திரங் கள், கார்ப்பரேட் முதலாளிகள் மற்றும்வழக்குரைஞர்கள் அடங்குவர்.
சர்வதேசப் புலனாய்வு இதழியலாளர்களின் கூட்ட மைப்பு, இதற்கு முன்பு ஒருதடவை, எச்எஸ்பிசி வங்கியின் சுவிட்சர்லாந்து கிளையில் ரகசியக் கணக்குகள் வைத்திருக்கிற இந்தியர்களின் பட்டியலை பிரசுரித்திருந்தது.
அதனையும் தி இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளேடு வெளியிட்டிருந்தது. அதற்கும்முன்பு ஒரு தடவை லெய்ச்டென்ஸ்டின் வங்கியில் கணக்குகள் வைத்திருப் போரின் பட்டியலும் வெளியாகி இருந்தது.
இவை அனைத்தும் இந்தியாவில் உள்ள பணக்காரர்களும், நிறுவனங்களும் அரசுக்கு செலுத்த வேண்டிய வரிகளை செலுத்தாமல் அரசாங்கத்தை ஏமாற்றி, சட்டவிரோதமாக வெளிநாடுகளில் பணத்தை மோசடித்தனமாக முடக்கி வைத்திருப்பதைக் காட்டுகின்றன.
மோடி அரசாங்கம் ஆட்சிக்கு வரு வதற்கு முன்பு வெளிநாடுகளில் பதுக்கி வைத்துள்ள கறுப்புப் பணத்தை எல்லாம் மீண்டும் நம் நாட்டுக்குக் கொண்டு வருவோம் என்று படாடோபமாக அறிவித்த அறிவிப்புகளை எல்லாம் காற்றில்பறக்கவிட்டுவிட்டு, கையாலாகாத்தன மாக இருந்து கொண்டிருக்கிறது.
பிரதமரின் வழிகாட்டுதலின்படி, இந்திய அரசாங்கம், வரி ஏய்ப்பு செய்து வெளிநாடுகளில் பணத்தைப் பதுக்கி வைத்திருக்கும் இந்தியர்கள் தொடர்பான வழக்குகளை ஆராய்ந்திட பல்வேறு அமைப்புகளையும் இணைத்து ஒரு சிறப்பு ஏஜன்சி அமைத்திருப்பதாக அறிவித்திருக்கிறது.
நிதி அமைச்சர் அருண்ஜெட்லியும், வெளிநாட்டில் சட்டவிரோதமாகப் பதுக்கி வைக்கப்பட்டிருக் கிற பணத்தை மீண்டும் நம் நாட்டிற்குக் கொண்டுவருவதற்கு எப்படியெல்லாம் இந்த அமைப்பு உதவி இருக்கிறது என்றும்வாய்ச்சவடால் அடித்துக் கொண்டிருந் தார்.
ஆனால், அரசின் செயல்பாடுகளைப் பார்க்கும்போது கொஞ்சமும் நம்பிக்கை யைத் தரவில்லை. மோடி அரசாங்கம் ஆட்சிக்கு வந்து ஈராண்டுகள் ஆகிவிட்டன.
இதுவரை நம் நாட்டிற்கு மீண்டும் கொண்டுவந்த கறுப்புப் பணம் எவ்வளவு என்று பார்த்தால் அநேகமாக எதுவும் இல்லை என்றே சொல்ல வேண்டும்.
வெளிநாடுகளில் பணம் சட்ட விரோதமாக தங்களுடைய ரகசிய கணக்குகளில் பதுக்கி வைத்திருப்பவர்கள் தொடர்பாக சில நோட்டீஸ்கள் அனுப்பியிருக்கிறது, அவ்வளவுதான். அத்துடன் அரசு திருப்தி அடைந்துவிட்டது. இது தொடர்பாக பல நாடுகளுடன் செய்துகொண்டுள்ள ஒப்பந்தங்கள் மூலம் இவ்வாறு சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டிருப் பவர்களைக் கண்டுபிடித்திட முடியும் என்று கூறி நிதி அமைச்சர் ஜெட்லி, திருப்திப்பட்டுக்கொண்டிருக்கிறார்.
உண்மையில் பனாமா அவ்வாறு ஒப்பந்தம் செய்து கொள்ளப்பட்டுள்ள நாடுகளில் ஒன்று அல்ல. இவ்வாறு நம் அரசு செய்து கொண்டுள்ள ஒப்பந்தங்களில் உள்ள பல்வேறு ஓட்டைகள் வரி ஏய்ப்போருக்கு, நாட்டை ஏமாற்றுவதற்குப் போதுமானவைகளாகும்.
அயல்நாடுகளில் வைத்திருக்கின்ற பணம் மற்றும் கணக்குகள் முறைப்படி சட்டரீதியானவைகளாக இருக்கலாம் என்று நிதி அமைச்சரும், ரிசர்வ் வங்கி ஆளுநரும் திரும்பத் திரும்ப கூறிக் கொண்டிருக்கிறார்கள்.
இது உண் மையான பிரச்சனையைத் தட்டிக்கழிக்கும் போக்கேயாகும். உண்மையில் மொசாக் ஃபொன்சேகாவிடமிருந்து தகவல்களைப் பெற அரசாங்கம் தவறிவிட்டது.
வெளிநாடுகளில் பதுக்கி வைக்கப்பட்டுள்ள கறுப்புப் பணத்தை மீண்டும்நம் நாட்டிற்குக் கொண்டுவரவேண்டும் என்பதில் மோடி அரசாங்கம் உண்மை யிலேயே அக்கறை கொள்ளுமானால், இந்தியர்கள் இதுபோன்று வெளிநாடு களில் போலி கம்பெனிகளை நிர்வகிப்ப தற்கும், அவற்றின் பெயர்களில் ரகசியக் கணக்குகள் வைத்திருப்பதற்கும் தடை விதித்திட வேண்டும்.
பனாமா ஆவணங்களில் கூறப்பட்டுள்ள பணம் மற்றும் சொத்துக்களைப் பறிமுதல் செய்திட வேண்டும். ஆனால் இதனை செய்வதற்கான துணிச்சல் பாஜக அரசாங்கத்திற்குக் கிடையாது.
ஏனெனில் இதுபோன்ற போலி கம்பெனிகளுடன் சர்வதேச நிதி மூலதனம் பின்னிப்பிணைந்துள்ளது. மொரி சியஸ் வழியாக நிதி முதலீடுகளை அனுமதித்ததே முந்தைய தேஜகூ அரசாங்கம் தான் என்பதை நாம் மறந்துவிட முடியாது.
வெளிநாடுகள் மூலம் பணமோசடி செய்திடும் கும்பல் இந்த வழியை நன்கு பயன்படுத்திக் கொண்டது.
பனாமா ஆவணங்கள் தொடர்பாக அரசாங்கம் மேற்கொள்ள இருக்கும் நடவடிக்கை என்பது மேலோட்டமான ஒன்றே.
உண்மையில் மோடிக்கு வரி ஏய்ப்பு கட்டமைப்பைத் தகர்த்திடவோ, பண மோசடியைத் தடுத்திடவோ, கறுப்புப் பணத்தை மீண்டும் நம் நாட்டிற்குக் கொண்டு வரவோ எவ்வித விருப்பமும் கிடையாது. மொத்தத்தில் இந்திய கார்பரெட்டுகள் ,பன்னாட்டு,அந்நிய முதலாளிகள் நலன் காக்கும் அரசைத்தான் மோடி இந்தியாவில் நடத்தி வருகிறார்.2000 கோடிகள் வங்கிகளை வராக் கடன் வைத்திருக்கும் அதானிக்கு மேலும் 20000 கோடிகள் ஆஸ்திரேலியாவில் சுரங்கத்தொழில் செய்ய இந்திய வங்கிகளை வற்புறுத்துகிறார்.
9000 கோடி வராக் கடன் காரர் விஜய் மல்லையாவை வெளிநாடு போகும் வரை காத்திருந்து தற்போது தேடுகிறார்கள்.
=====================================================================================
இன்று,ஏப்ரல்-11.
- சர்வதேச தொழிலாளர் கழகம் அமைக்கப்பட்டது(1919)
- ஆப்பிள் 1 உருவாக்கப்பட்டது(1976)
- விளையாட்டு வர்ணனை முதன் முறையாக வானொலியில் ஒலிபரப்பானது(1921)
- ஐன்ஸ்டீன் தனது சார்புக் கோட்பாட்டை வெளியிட்டார்(1905)
இன்று உங்கள்"சுரன்" பார்வையாளர்கள் எண்ணிக்கை ஏழு லட்சத்தை [7,00,000.]தாண்டியுள்ளது.
2011 தை தமிழ்ப் புத்தாண்டு அன்று இணையத்தில் வலைப்பூவாக ஆரம்பித்தது.ஐந்தாண்டுகளை கடந்துள்ளது.
இது உங்கள் ஆதரவால் மட்டுமே நிகழ்ந்துள்ளது.மேலும் தொடர்ந்து "சுரன் " வலைத்தளத்தில் வலம் வர நீங்கள் சுரன் தளத்தில் வலம் வந்து ஆதரிக்க வேண்டுகிறேன்.
மீண்டும் நன்றிகள்.
=====================================================================================