தமிழ் நாட்டின் முதல் தேர்தலே இப்படித்தான்.
தமிழ்நாட்டில் வரும்2016 மே, 16 அன்று நடைபெறவுள்ள தேர்தல் மாநிலத்தின் பதினைந்தாவது சட்டமன்றத் தேர்தலாகும்.
இதுவரை நடந்துள்ள 14 சட்டமன்றத் தேர்தல்களின் பின்னணிகள் அக்காலகட்டத்தில் நிலவிய தேசிய, மாநில அரசியல் சூழலுக்கு ஏற்ப அமைந்திருந்தன.
1952ல் நடந்த முதல் தேர்தல் இந்தியா விடுதலை பெற்ற பின் நடந்த முதல் தேர்தலாகும்.
1977ல் நடந்த தேர்தல் அவசரநிலை முடிவுக்கு கொண்டுவரப்பட்ட பின் நடந்த தேர்தலாகும். 1991 தேர்தலின் போது பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்பட்டார்.
இதனால் தேர்தல் முடிவுகள் எதிர்பார்ப்புக்கு மாறாக அதிமுக - காங்கிரசுக்கு சாதகமாக மாறின. தமிழக தேர்தல்களைப் பொறுத்த வரை ஒவ்வொரு தேர்தலும் ஒரு வகையில் அரசியல் பரபரப்பை ஏற்படுத்துவதாகவே அமைந்தன.
1952 ம் ஆண்டில் நடந்த முதல் தேர்தல்
பி.ராமமூர்த்தி-ராஜாஜி |
மத்திய அரசின் சித்து விளையாட்டு தமிழகத்தில் முதல் தேர்தலிலேயே அரங்கேறியது. முதலாளிகளின் வழிகாட்டலின்படி தமிழகத்தின் முதல் அமைச்சரவை அமைந்தது.
ராஜகோபாலாச்சாரியார்(ராஜாஜி) கம்யூனிஸ்ட்டுகள் ஆதரித்த ஐக்கிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி அமைக்கவிடாமல் தடுத்ததுடன், பல தில்லுமுல்லுகளைச் செய்து தானே முதல்வரானார். டி.டி.கிருஷ்ணமாச்சாரி, கோயங்கா போன்றவர்களின் விருப்பப்படி கம்யூனிஸ்ட் ஆதரவு அரசு அமைவதை அவர் தடுத்து நிறுத்தினார்.
அப்போதெல்லாம் தமிழ்நாடு என்று தமிழகம் அழைக்கப்படவில்லை.
சென்னை மாகாணம் என்றே அழைக்கப்பட்டது.
அக்காலகட்டங்களில் மொழிவழி மாநிலங்கள் அமைக்கப்படவில்லை.
சென்னை மாகாணத்தில் இன்றைய தமிழ்நாடு, கேரளாவின் மலபார் பகுதிகள், ஆந்திராவின் கடற்கரை மற்றும் ராயலசீமா ஆகிய பகுதிகள், கர்நாடகாவின் பெல்லாரி, தெற்கு கன்னடா மற்றும் உடுப்பி பகுதிகள் ஆகியவை அடங்கியிருந்தன.
ஜனவரி 2 முதல் 25 வரை ஒன்பது கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது. மார்ச் 1 அன்று சட்டப்பேரவை அமைக்கப்பட்டது. அன்று சட்டமன்றத்தில் 375 உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இரட்டை உறுப்பினர் முறை நடைமுறையில் இருந்தது.
இதில் பல சிக்கல்கள் உருவானதால் 1961ல் இம்முறை நீக்கப்பட்டது. 375 தொகுதிகளில் 309 பொதுத்தொகுதிகளாகவும், 66 இரட்டை உறுப்பினர் தொகுதிகளாகவும் இருந்தன.
இரட்டை உறுப்பினர் தொகுதிகளில் 62 தாழ்த்தப்பட்ட சமூகத்தாருக்காகவும்(எஸ்சி), 4 மலைவாழ் மக்களுக்காகவும்(எஸ்டி) ஒதுக்கப்பட்டிருந்தன.
ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட வாக்காளர்களைக் கொண்ட தொகுதிகள் மட்டுமே இரட்டை உறுப்பினர் தொகுதியாக அறிவிக்கப்படும்.காங்கிரஸ், டி.பிரகாசத்தின் கிஸான் மஸ்தூர் பிரஜா கட்சி, மாணிக்கவேல் நாயக்கரின் காமன்வீல் கட்சி, ராமசாமி படையாச்சியின் தமிழ்நாடு உழைப்பாளர் கட்சி, சென்னை மாகாண முஸ்லீம் கட்சி, நீதிக்கட்சி, முத்துராமலிங்கத்தேவர் தலைமையிலான பார்வர்ட் பிளாக், அம்பேத்கர் பட்டியல் சாதிகள் கூட்டமைப்பு ஆகியவை இத்தேர்தலில் களம் கண்டன.
கோஷ்டிப்பூசலில் சாதனை படைத்து வரும் காங்கிரசில் அன்று நான்கு கோஷ்டிகள் இருந்தன. டி.பிரகாசம் தலைமையில் தெலுங்கு பேசுவோர் ஒரு கோஷ்டியாக செயல்பட்டனர்.
இவர்கள் தேர்தலுக்கு முன்பாக காங்கிரசில் இருந்து விலகி கிருபளானி நிறுவிய கிஸான் மஸ்தூர் பிரஜா கட்சியில் இணைந்து தனியாக போட்டியிட்டனர்.
தனி ஆந்திரா என்பது இவர்கள் கோஷமாக இருந்தது. காமராஜர் கோஷ்டி ராஜாஜி கோஷ்டி மற்றும் பட்டாபி சீதாராமையா, காலவெங்கடராவ், பெசவாடா கோபால ரெட்டி பிரிவினர் என நான்கு கோஷ்டிகள் செயல்பட்டன.
கம்யூனிஸ்ட்டுகள் மீது தடை
நாடு சுதந்திரம் பெறுவதற்கு முன்பு 1946 இறுதியில் நவம்பர் மாதத்தில் கம்யூனிஸ்ட் கட்சி தலைவர்களையும், ஊழியர்களையும் தடுப்புக்காவல் சட்டம் இயற்றி, விசாரணையின்றி காங்கிரஸ் மந்திரிசபை சிறையில் அடைத்தது.
என்னையும், கே.டி.கே.தங்கமணி மற்றும் மதுரையில் இருந்த தோழர்கள் மீதும் சதிவழக்குப் போட்டு ஜாமீனில் விட மறுத்துச் சிறையில் அடைத்தது” என்று பி.ராமமூர்த்தி தான் எழுதிய விடுதலைப்போரும் திராவிட இயக்கமும் என்ற நூலில் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் கட்சிப்பத்திரிகையான ஜனசக்தி தடை செய்யப்பட்டு அச்சகமும் கைப்பற்றப்பட்டது என்றும் அவர் சொல்லியுள்ளார்.தலைவர்களையும், ஊழியர்களையும் 1947 ஆகஸ்ட் 14 மற்றும் 15 தேதிகளில்தான் அரசு விடுதலை செய்தது. ஆனால் அதிக காலம் அவர்களை வெளியில் விட்டுவைக்கவில்லை.
1948ம் ஆண்டில் கட்சி மீண்டும் தடை செய்யப்பட்டது. இந்த நிலை 1952ம் ஆண்டு இந்தியாவில் நடந்த முதல் தேர்தல் வரை நீடித்தது.1950ம் ஆண்டில் அரசியல் அமைப்புச் சட்டம் அமலுக்கு வந்த பிறகு உச்சநீதிமன்றத்தில் வழக்காடி அதன் தீர்ப்புப் பிரகாரம் கட்சியின் மீதும், தொழிற்சங்கம், விவசாய சங்கம் முதலிய அமைப்புகளின் மீது இருந்த தடை நீக்கப்பட்டது.
ஜனசக்தி மீதிருந்த தடையும் நீக்கப்பட்டது. இருப்பினும் 1952 தேர்தலுக்கு ஒன்றிரண்டு மாதங்கள் வரையில் கட்சித் தோழர்களும், ஊழியர்களும் விடுதலை செய்யப்படவில்லை. தேர்தலின் போது சிறையில் இருந்த பி.ஆர்.மதுரை வடக்கு தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
தேர்தலுக்குப் பின்புதான் பி.ஆர். விடுதலை செய்யப்பட்டார்.தெலுங்கானா போராட்டம் தோல்வி அடைந்த போதும், ஆந்திராவில் கம்யூனிஸ்ட்டுகள் செல்வாக்கு குறையவில்லை.
தனி ஆந்திரா மாநிலம் வேண்டும் என்று கம்யூனிஸ்ட்டுகள் கோரிக்கை வைத்ததால் அவர்களுடைய செல்வாக்கு மேலும் அதிகரித்தது. நிலமற்ற விவசாயிகள் தொழிலாளர்களின் வாழ்வாதாரப் பிரச்சனைகள் மீது இவர்கள் போராட்டம் நடத்தி வந்ததால் அவர்களுடைய ஆதரவும் இவர்களுக்கு நீடித்தது. தமிழகத்தில் நகரப்பகுதிகளில் இவர்கள் செல்வாக்குடன் இருந்தனர்.
தஞ்சை பகுதிகளில் விவசாயிகள் மத்தியில் இவர்களுக்கு பெரும் ஆதரவு நீடித்தது.கேரளாவின் மலபார் பகுதிகளில் கம்யூனிஸ்ட்டுகள் வலுவாக இருந்தனர்.
திமுக பங்கேற்கவில்லை
1952 தேர்தலில் திராவிட முன்னேற்றக்கழகம் பங்கேற்கவில்லை.
1949ம் ஆண்டு திராவிடர் கழகத்தில் இருந்து அண்ணா தலைமையில் கருணாநிதி, அன்பழகன், நெடுஞ்செழியன், என்.வி.நடராஜன், சத்யவாணி முத்து ஆகியோர் வெளியேறி திராவிட முன்னேற்றக்கழகத்தைத் தொடங்கினர்.
தனி திராவிட நாடு வேண்டும் என்பது இவ்விரு கட்சிகளின் அடிப்படைக் கொள்கையாக இருந்தது. தஞ்சாவூர் பகுதியில் திராவிடர் கழகம் கம்யூனிஸ்ட்டுகளை ஆதரித்தது.
“திராவிடர்களின் கருத்தையறியாமலும், திராவிடர்களின் ஜீவாதார உரிமைகளுக்கு ஊறு செய்யும் வகையிலும், ஒரே கட்சியாரின் எதேச்சதிகார முறைப்படியும் தயாரிக்கப்பட்ட இந்திய அரசியல் சட்டத்தை திமுக கண்டிப்பதன் அறிகுறியாக தேர்தலில் தனது வேட்பாளர்களை நிறுத்தவில்லை” என்று அக்கட்சி அறிவித்தது.
ஆனாலும் “ ஆந்திரம், கர்நாடகம், தமிழ்நாடு, கேரளம் ஆகிய திராவிட இன மொழி வழி மாநிலங்களை உள்ளடக்கிய தனியாட்சி பெற்ற திராவிட நாடு” கோரிக்கையை ஏற்றுக்கொள்ளும் கட்சிகளை ஆதரிப்பதாக திமுக அறிவித்தது.
வன்னியர்களின் ஆதரவு பெற்ற காமன் வீல் கட்சி, உழைப்பாளர் கட்சி ஆகியவற்றுடன் சில சுயேச்சைகளும் திராவிட நாடு கோரிக்கையை சட்டமன்றத்தில் எழுப்புவோம் என உறுதியளித்து உடன்படிக்கையில் கையொப்பமிட்டன.
.தமிழ்நாட்டில் 190, ஆந்திராவில் 143, கர்நாடகாவில் 11, கேரளாவில் 29 தொகுதிகளில் தேர்தல்கள் நடைபெற்றன.
மூவர் ஒருமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
ஒன்பது கட்டமாக நடந்த தேர்தலில் 58 விழுக்காடு வாக்குகள் பதிவாயின. காங்கிரஸ் 152 தொகுதிகளில் வென்று தனிப்பெருங்கட்சியாக வெற்றி பெற்ற போதும் அதற்கு பெரும்பான்மை கிடைக்கவில்லை.
காங்கிரசுக்கு தமிழ்நாட்டில் 96,
கர்நாடகாவில் 9,
ஆந்திராவில் 43,
கேரளாவில் 4 தொகுதிகளில் வெற்றி கிட்டியது.
ஒன்றுபட்டிருந்த கம்யூனிஸ்ட் கட்சி 62,
கிசான் மஸ்தூர் பிரஜா கட்சி 35,
தமிழ்நாடு உழைப்பாளர் கட்சி 19,
கிரிஷ்கார் லோக் கட்சி 15,
பொதுவுடைமைக்கட்சி 13,
காமன் வீல் 6
சென்னை மாகாண முஸ்லீம் லீக் 5,
பார்வர்ட் பிளாக் 3,
தாழ்த்தப்பட்டோர் பட்டியல் கூட்டமைப்பு 2,
நீதிக்கட்சி 1,
சுயேச்சைகள் 62 ஆகிய கட்சிகளின் வேட்பாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
முதல் தேர்தலில் காங்கிரசுக்கு ஆட்சி அமைக்கத் தேவையான பெரும்பான்மை கிடைக்கவில்லை.
காங்கிரஸ் தவிர்த்த மற்ற கட்சிகளின் 166 உறுப்பினர்கள் இணைந்து ஐக்கிய ஜனநாயகக் கூட்டணியை அமைத்தனர்.
இவர்கள் ஒன்று கூடி கிஸான் மஸ்தூர் பிரஜா கட்சியைச் சேர்ந்த டி.பிரகாசம் தலைமையில் ஆளுநர் ஸ்ரீபிரகாசத்தைச் சந்தித்து ஆட்சி அமைக்கும் உரிமையைக் கோரினர். கம்யூனிஸ்ட்டுகள் ஆதரவுடன் ஒரு அரசு அமைவதை ஸ்ரீபிரகாசமும், மத்திய அரசும் விரும்பவில்லை.
இதனால், அரசியலில் இருந்து ஓய்வு பெற்றிருந்த ராஜாஜியை அழைத்து முதல்வராகும்படி காங்கிரஸ் கேட்டுக் கொண்டது.
இந்த அழைப்பை அன்றைய மாகாண காங்கிரஸ் தலைவராக இருந்த காமராசாரும் விரும்பவில்லை. அவர் எதிர்க்கட்சிகளால் நிலையான அரசை நடத்த முடியாது என்பதால், அவர்களை அரசு அமைக்கும்படி கூற வேண்டும் என்று கருதினார்.
ஆனால் காங்கிரஸ் மேலிடம் அவருடைய கருத்தை புறக்கணித்தது. டி.டி.கே., கோயங்கா ஆகியோரின் வற்புறுத்தலால் ராஜாஜியை காங்கிரஸ் அழைத்து வந்தது.சட்டமன்ற உறுப்பினர் அல்லாத ராஜாஜியை ஆளுநர் பிரகாசம் மேலவை உறுப்பினராக நியமித்தார்.
அவர் 14.4.1952 அன்று முதல்வர் பொறுப்பை ஏற்றார். காங்கிரசுக்கு சட்டமன்றத்தில் பெரும்பான்மையை உருவாக்க ராஜாஜி குறுக்குவழி வேலைகளைச் செய்யத் தொடங்கினார். அடுத்து வந்த இருமாதங்களில் அவர் மாணிக்கவேல் நாயக்கருக்கு அமைச்சர் பதவி அளித்து காமன் வீல் கட்சியை உடைத்தார்.
அதே போல் ராமசாமி படையாச்சியின் தலைமையிலான உழைப்பாளர் கட்சியையும் தன்வசப்படுத்திக் கொண்டார். கிருஷிகார் லோக் கட்சியை உடைத்து அதன் நான்கு உறுப்பினர்களையும் காங்கிரசில் சேர்த்துக் கொண்டார்.
மேலும் பல்வேறு ஆசைகளைக் காட்டி பல சுயேச்சைகளைக் காங்கிரசில் சேர்த்து தேவையான பெரும்பான்மையை உருவாக்கினார். தமிழகத்தில் கட்சித்தாவலை உருவாக்கியதில் ராஜாஜி சாதனை படைத்தார். கம்யூனிஸ்ட்டுகள் ஆதரவுடன் அரசு அமைவதை விரும்பாத ஐந்து முஸ்லீம் லீக் உறுப்பினர்களின் ஆதரவும் அவருக்கு கிடைத்தது.
3.7.1952 அன்று சட்டமன்றத்தில் ராஜாஜி 200 பேருடன் தனது பெரும்பான்மையை நிரூபித்தார். கம்யூனிஸ்ட் கட்சி பிரதான எதிர்க்கட்சியானது.பி.ராமமூர்த்தி சென்னை மாகாண சட்டமன்றத்தின் எதிர்க்கட்சி தலைவாரானார்.
ராஜாஜியை மேலவை உறுப்பினராக நியமித்தது செல்லாது என்று பி.ஆர். சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். மேலவையில் ஒருவரை நியமனம் செய்ய அமைச்சரவையின் பரிந்துரை வேண்டும். ஆனால் பரிந்துரை செய்வதற்கு அமைச்சரவை இல்லாததால், ராஜாஜியை மேலவை உறுப்பினராக ஆளுநர் நியமித்தது செல்லாது என்று அவர் வாதிட்டார்.
ஆனால் தலைமை நீதிபதி பி.வி.ராஜமன்னார், நீதிபதி வெங்கடராம அய்யர் ஆகியோர் அடங்கிய அமர்வு இத்தகைய விசயங்களில் நீதிமன்றம் தலையிட முடியாது என்று கூறி வழக்கைத் தள்ளுபடி செய்தது. பின்னாட்களில் ஆளுநர்கள் எதேச்சதிகாரமாகச் செயல்படுவதற்கு இந்த தீர்ப்பு பெரிதும் உதவியது. மாநில சுயாட்சி குறித்து ஆய்வு செய்து பரிந்துரை செய்ய நியமிக்கப்பட்ட சர்க்காரியா குழு ஸ்ரீபிரகாசத்தின் செயல் அரசியல் சட்டத்திற்கு புறம்பானது என்று கருத்து தெரிவித்தது.
ராஜாஜி கொண்டு வந்த குலக்கல்வி சட்டம் பிராமணர் அல்லாத சட்டமன்ற உறுப்பினர்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.
சி.சுப்ரமணியம் |
தமிழகமெங்கும் இச்சட்டத்துக்கு எதிராக இயக்கங்கள் நடந்தன. கம்யூனிஸ்ட் கட்சியும் இச்சட்டத்தை எதிர்த்தது.
காமராஜ் தலைமையிலான சட்டமன்ற உறுப்பினர்கள் இதை கடுமையாக எதிர்த்தனர்
. ராஜாஜி முதல்வராக நீடிப்பது கடினம் என்ற நிலை ஏற்பட்டது.
இச்சமயத்தில் மொழிவழி மாநிலங்கள் உருவானதால், கேரளா, கர்நாடகா, ஆந்திரா மாநிலங்கள் தனியாகப் பிரிந்தன.
இதனையடுத்து இம்மாநிலங்களைச் சேர்ந்த 145 உறுப்பினர்கள் அவர்களுடைய மாநிலங்களுக்கு மாற்றப்பட்டனர்.
இவர்களில் பெரும்பாலோர் காங்கிரஸ் அல்லாதோர் ஆவர்.
எனவே 230 உறுப்பினர்களைக் கொண்ட திருத்தி அமைக்கப்பட்ட தமிழ்நாடு சட்டமன்றத்தில் காங்கிரசுக்கு பெரும்பான்மை கிடைத்தது.
அவர்களில் பெரும்பாலோர் காமராஜ் ஆதரவாளர்கள். சட்டமன்றத்தில் குலக்கல்வி சட்டம் ஏற்படுத்திய அதிருப்தியும், காமராஜின் செல்வாக்கும் ராஜாஜியை மீண்டும் அரசியல் துறவறம் கொள்ள வைத்தது.
1954 மார்ச்சில் ராஜாஜி உடல்நிலையைக் காரணம் காட்டி பதவி விலகினார்.
மார்ச் 31 அன்று நடந்த காங்கிரஸ் சட்டமன்றத் தலைவர் தேர்தலில் காமராசர் தன்னை எதிர்த்து ராஜாஜி ஆதரவுடன் போட்டியிட்ட சி.சுப்ரமணியத்தை தோற்கடித்து முதல்வரானார்.
அவர் 13.4.1954ல் காமராஜர் பதவி ஏற்றார்.
அன்று குலக்கல்விதிட்டம் புகழ் ராஜாஜி குழப்பத்தை உண்டாக்கினார்.இன்று குலத்தொழில் செய்ய திட்டியவர் குழப்பிக்கொண்டு இருக்கிறார்.
-எம்.எஸ்.அருள்தாஸ்
ஓட்டுக்கு கொடுத்ததை எல்லாம் பெருமையா எழுதலாமா?