உழைப்பாளர் தினம்
அரிசியோ, பாலோ, பஞ்சோ, ஆடையோ, இரும்போ, வாகனமோ, வன்பொருளோ, மென்பொருளோ இவற்றை உருவாக்குபவர்கள் வளர்ச்சிப்பெற்ற மனிதர்களே . இந்த நகரத்தை உருவாகியவர்களும், நகரை தூய்மை செய்பவர்களும் மனிதர்களே.
ஒரு நாளைக்கு 15 முதல் 20 மணி நேர வேலையென்பது பொதுவான விதியாக இருந்தது. காயமடைதலும் சாதலும் சுரண்டலும் இயல்பெனும் நிலையில் பணியிடங்கள் பாதுகாப்பற்றுக் கிடந்த அந்த 18ஆம் நூற்றாண்டில் தொழிலாளர்கள் தங்களின் தேவை எட்டு மணி நேர வேலை என்பதை உணர்ந்தனர்.
மே 1 1886, சனிக்கிழமை, பல்வேறுபட்ட தொழிற்துறையைச் சார்ந்த 3 லட்சத்திற்கும் அதிகமான தொழிலாளர்கள் சிகாகோ நகரம் உள்ளிட்ட அமெரிக்காவின் வீதிகளில் இறங்கி ‘எட்டு மணி நேர வேலை’ என்ற கோரிக்கையை ஒற்றைக் குரலாய் உயர்த்தி இடியென முழங்கினர்.
முதலாளிகளுக்கு எதிரான தொழிலாளர்களின் இந்த ஒற்றுமை பல்வேறு கட்ட போராட்டங்களைக் கடந்து, பல்வேறு சட்ட நடவடிக்கைகளைக் கடந்து, பல உயிர்த்தியாகங்களைக் கடந்து
“எட்டு மணி நேர வேலை – எட்டு மணி நேர பொழுதுபோக்கு – எட்டு மணி நேர ஒய்வு”
என்ற நடைமுறையை நமக்குப் பெற்றுத் தந்தது.
இன்று 8:00 மணி என்று நேர அட்டவணையில் நாம் பதிவிடுவது நமது இந்த முந்தைய தலைமுறையின் ஒன்றுபட்ட நீண்ட நெடிய எதிர்ப்பினால், போராட்டங்களினால் நமக்குக் கிடைத்தது.
மே தினம் நாம் கடந்து போகிற மற்ற கொண்டாட்டங்களைப் போன்றதன்று.
நாடு இனம் மொழி சாதி மதம் ஆண் பெண் நிறம் என அத்தனை வேறுபாடுகளையும் கடந்து ஒற்றைக் கோரிக்கையின் பொருட்டு ஒன்றுபட்ட தொழிலாளர் ஒற்றுமையின் நாள். பல நூற்றாண்டுகளாக கொத்தடிமைகளாக மிகப் பெரிய பணிச்சுரண்டலுக்கு உள்ளாகியிருந்த தொழிலாளர் சமூகத்தின் வாழ்க்கை மீட்டெடுக்கப்பட்ட நாள்.
இந்த மே தினம் உழைக்கும் மக்களாகிய நமது உரிமைகளைப் பற்றிய புரிதலும் ஒற்றுமையினால் அதை வென்றெடுக்கிற மற்றும் காத்துக் கொள்கிற நம்பிக்கையை வலியுறுத்துவதாயும் இருக்க வேண்டும்.
ஆனால் தற்போது 11 லட்சம் பெண் பணியாளர்கள் உட்பட 37 லட்சம் இந்திய தொழிலாளர்கள் தகவல் தொழில்நுட்ப துறையில் பணிபுரிகிறார்கள் .
நமது இந்த தொழிற்துறை முறைப்படுத்தப்பட்ட 8 மணி நேர வேலை நடைமுறையை வைத்திருக்கிறதா?
நாம் பணிபுரிதலை எப்படிப் பார்கிறோம்?
வேலை செய்வதற்காக வாழ்கிறோமா?
வாழ்வதற்காக வேலை செய்கிறோமா?
நாம் பணமிட்டுவதன் நோக்கம் என்ன?
பணத்தின் பின் நாம் ஓடுவதன் பின்புலம் என்ன?
நமது பணியிடம் நமக்குரியதாய் இருக்கிறதா?
இந்த கேள்விகள் நமக்குள் இருக்கின்றனவா?
ஆம்.
இந்த கேள்விகளே மே தினத்தை நமக்கான தினமாக நம்மை உணர்வு பெறச் செய்கிறது.
‘பயன்படுத்து தூக்கியெறி’ என்பதே இன்றைய தகவல் தொழில் நுட்ப துறையின் நடைமுறை. அதற்கேற்றாற்போல் அத்துறையில் பணிபுரிந்தவர்கள் தங்களை தொழிலார்கள் என்ற அடிப்படையில் வைத்துப்பார்க்கவில்லை.காரணம் அவர்கள் கைநிறைய பெற்ற சம்பளம்.
ஆனால் அவர்கள் நானும் ஒரு தொழிலாளி என்ற எண்ணம் இல்லா மமதைக்கு முதலில் டி .சி.எஸ் மூலம் ஆப்பு வைக்கப்பட்டது.
ஒரு பணியாளரை வெளியேற்ற நிர்வாகம் முடிவு செய்தால் ஏன் எதற்கு என யாராலும் கேள்வி கேட்க இயலாத நிலை உள்ளது. நடு இரவு வரை நீட்டிக்கப் படுகிற வேலை நேரம், பணிச்சுமை, சம்பள உயர்வு, பணியிட மாற்றம், வேலை மாற்றம், வெளிநாட்டுப் பயணம், விடுமுறை, நோய்க்கால விடுமுறை, பேறுகால விடுமுறை போன்ற பணியிட நடைமுறைகள் அனைத்தும் நிறுவனங்களும்,நிர்வாகிகளுமே முடிவு செய்கிற நிலை. பணியாளர்கள் சார்பில் கேள்வி கேட்க ஒரு அமைப்போ அல்லது குழுவோ இல்லாத நிலையில் நாம் சிங்கத்தின் முன் தனித்து விடப்பட்ட மாட்டைப் போல் வேட்டையாடப்படுகிறோம்.
Background checks, கட்டாய பணி நீக்கம் – IT/ITES நிறுவனங்களின் மறைமுக/நேரடி ஆயுதமாக பல ஆயிரம் பணியாளர்களை வேலையிழக்கச் செய்யும் பணியிட நடைமுறையாக உள்ளது.. இளநிலை முதல் முதுநிலை பணியாளர்கள் வரை யாரையும் கேள்வி கேட்பாரின்றி பணி நீக்கம் செய்யும் இந்த நிலை பணியாளர்களுக்குப் பணிப்பாதுகாப்பற்ற சூழலை உருவாக்கியிருக்கின்றன.
குழந்தை வளர்ப்பு சமுகக் கடமையாக உணரப்படாத நிலையில் அவற்றிற்கான பணியிட வசதிகள் ஏற்படுத்தப்படாமல் பணிபுரியும் பெண்கள் திருமணம் மற்றும் குழந்தைப் பிறப்பிற்கு பின்பு வேலையைத் தொடர்வது பெரும் சவாலாகிறது.
இவையாவும் முறைப்படுத்தப்பட்ட மற்றும் முறைப்படுத்தப்படாத என்று அனைத்து தனியார் துறைகளிலும் நிலவுகிற பிரச்சினைகளே. கோடிக்கணக்கானவர்கள் நிரந்தர பணியாளர்களாக, தற்காலிக பணியாளர்களாக, பயிற்சிப் பணியாளர்களாக பணிபுரியும் இந்த துறையில் கேள்வி கேட்க இயலாத பணிச்சுரண்டலுக்கு உள்ளாக்கப் படுவதே இன்றைய அவல நிலை.
வேலையே கிடைக்காத சூழலில் தொழிலாளர்கள் இருந்தாலும் அவர்களின் வருங்கால வைப்பு நிதியை 58 வயதுக்கு பிறகுதான் எடுக்க முடியும் என்ற வகையிலான கோடிக்கணக்கான தொழிலாளர்களைப் பாதிக்கும் மத்திய அரசின் சமீபத்திய தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி மற்றும் இதர ஒதுக்கீடுகள் சட்ட திருத்தத்திற்கு எதிரான பெங்களூரு ஆயத்த ஆடை பணியாளர்களின் போராட்டம் பெங்களுரு நகரத்தை செயலிழக்கச் செய்து சட்ட திருத்தத்தை மத்திய அரசு திரும்பப் பெறச் செய்திருக்கிறது.
25,000 ஊழியர்களை சட்டத்திற்கு எதிராக பணிநீக்கம் செய்ய விழைந்த டாடா நிறுவனத்தின் செயல்பாடுதொடர் போராட்டங்கள் சட்ட நடவடிக்கைகளால், FITE யின் தலையீட்டினால், தடுத்து நிறுத்தப்பட்டு அவர்களின் வேலைஇன்றைக்கு பாதுகாக்கப்பட்டது.அதற்குள்பணி நீக்கம்,எதிர்கால பயம் உயிரை இழந்த வர்கள் எண்ணிக்கை அதிகரித்து விட்டது.
இந்த நிகழ்வுகள் தொழிலாளர்களின் ஒற்றுமையும் அவர்களின் ஒன்றுபட்ட எதிர்ப்புமே அவர்களுக்கான பணிசார் உரிமைகளை வென்றெடுக்க உதவுமென்ற வரலாற்று உண்மையை நமக்கு உறுதி செய்கின்றன.
எங்கு பணியாற்றினாலும் அவர்களுக்கு நானும் ஒரு உழைப்பாளி.தனது உழைப்பை அந்த நிறுவனத்துக்கு விற்று பணம் பெறுகிறேன் என்ற எண்ணமும்,தனக்கு பணி பாதுகாப்பு தேவை.
அதற்கு தொழிலாளர் அமைப்புகள் கண்டிப்பாக தேவை என்ற எண்ணம் வேண்டும்.
தகவல் தொழில் நுட்பத் தொழிலாளர்களுக்கு சங்கம் கூடாது எனக் கூறும் பகாசுர நிறுவனங்கள் தங்களுக்குள் மட்டும் நாஸ்காம் என்ற முதலாளிகள் சங்கம் வைத்திருப்பது ஏன் என்ற சிந்தனை ஒவ்வொருவருக்கும் தேவை .
தொழிலாளர் ஒற்றுமை மூலமே பணிப்பாதுகாப்பை ,கோரிக்கைகளை வென்றெடுக்க முடியும்.
அதற்கு முன்னுதாரணம் தந்த சிக்காகோவில் உயிரிழந்த தொழிலாளர்களுக்கு வணக்கம்.
மேதின வாழ்த்துக்கள்.
========================================================================================
இன்று,
மே -01.
- சர்வதேச உழைப்பாளர் தினம்
- இந்தியாவின் மகாராஷ்டிர மாநிலம் அமைக்கப்பட்டது(1960)
- நியூயார்க்கில் எம்பயர் ஸ்டேட் கட்டிடம் திறந்து வைக்கப்பட்டது(1931)
- புளூட்டோவின் பெயர் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது(1930)
========================================================================================