இன்றைய செய்தி,நாளைய வரலாறு. நாளைய வரலாறை படிப்போம்.

வெள்ளி, 24 ஜூன், 2016

ஜெயலலிதாவின் "அமைதி பூங்கா " .

தமிழ் நாட்டின் முதல்வர் ஜெயலலிதா சட்டப் பேரவையில் திமுகவின் குற்றச்சாட்டுகளுக்கு பதில் சொல்லும் போது தமிழகம் அமைதி பூங்காவாக திகழ்வதாக  கூறியுள்ளார்.

ஆனால் தமிழகத்தில் அதிகரித்திருக்கும் கொலை, கொள்ளைச் சம்பவங்கள் ஒருபுறம் பெரும் அச்சுறுத்தலையும் மறுபுறம் பெரும் கவலையையும் தோற்றுவிக்கின்றன. 

ஜெயலலிதா கூறும் அமைதி பூங்காவின் அர்த்தம் விளங்க மாட்டேன் என்கிறது.

தலைநகர் சென்னையிலேயே அடுத்தடுத்து நடந்துவரும் கொலைகள் காவல் துறை என்ன செய்துகொண்டிருக்கிறது என்ற கேள்வியை எழுப்புகிறது.
அதை கட்டுக்குள் வைத்திருக்கும் உள்துறையும் அதனை கட்டுப்படுத்தும் முதல் அமைசர் ஜெயலலிதாவும் என்னதான் செய்கிறார்கள் என்றும் தெரியவில்லை.
சட்டமன்றத்தில் எதிர்க்கடசியினர் கருத்துக்களை மறைத்து  தமிழகம் அமைதி பூங்காவாக திகழ்வதாக என்று பதிவு செய்தால் மட்டும் போதுமா?

காவல்துறையினர் ஜெயலலிதா சிறைக்கு சென்றால் கறுப்புக்கொடி குத்திக்கொள்வதிலும்,வெளியே வந்தால் வாழ்த்து பதாகை வைப்பதிலும் தான் சுறு,சுறுசுறுப்பாக செயல் படுகிறார்கள்.

அதிமுகவில் சட்டமன்ற தொகுதி கேட்டு காவல் ஆய்வாளர்கள் விண்ணப்ப மனு கொடுக்கிறார்கள்.
ஜெயலலிதா தொகுதியில் கரை வேட்டியுடன் விடுப்பு போட்டு வாக்கு சேகரிக்கிறார்கள்.ஆனால் கொலை,கொள்ளை தடுக்க அவர்கள் செய்வது ?

ஒன்றும் இல்லை.
பைக்,இன்னோவா கார்களில் வந்து கொலை செய்து,கொள்ளையடித்து விட்டு செல்லும் குற்றவாளிகளை பிடிக்க காவலர்களுக்கு சைக்கிள் வழங்குகிறது அரசு.
இந்த சைக்கிள் வைத்து குற்றவாளிகளை என்றைக்கு பிடிப்பது.இதனால் ஒரே நன்மை.காவலர்களின் தொப்பை குறையும்.

சென்னையில் கடந்த 20 நாட்களுக்குள் மட்டும் நான்கு வழக்கறிஞர்கள் கொடூரமான முறையில் கொல்லப்பட்டிருக்கிறார்கள். இதேபோல தமிழகத்தின் ஏனைய பகுதிகளிலும் கடந்த இரண்டு மாதங்களில் 20-க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டிருக்கிறார்கள். 

ஓசூரில் தலைமைக் காவலர் ஒருவரே, கொள்ளையர்களால் கொல்லப்பட்டிருக்கிறார்.
சென்னையில் ஜூன் 6-ம் தேதி கோடம்பாக்கத்தில் வழக்கறிஞர் முருகன், 8-ம் தேதி வடபழநியில் வழக்கறிஞர் நாகேஷ்வர ராவ், 15-ம் தேதி புழலில் வழக்கறிஞர் அகில்நாத், 22-ம் தேதி வியாசர்பாடியில் ரவி என்று விழும் கொலைகள் ஒவ்வொன்றின் பின்னணியும் வெவ்வேறானவையாக இருக்கலாம். ஒரு விஷயம் பொதுவானது: 

கூலிப் படையினர் எந்தப் பயமும் இல்லாமல் அனாயாசமாகச் செயல்படத் தொடங்கியிருக்கின்றனர்.
பொதுவில், ஆத்திரத்தில் அவசரப்பட்டுத் தாக்கிவிடுவதையோ அல்லது விபத்தாகவே மரணம் நேர்ந்துவிடுவதையோதான் பெரும்பாலான கொலைகளின் பின்கதைகளாக நம்மூரில் பார்த்துவந்திருக்கிறோம். 

ஒருகாலத்தில் அரசியல்வாதிகளும் ரௌடிகளும் தமக்குள்ளான ‘தொழில் போட்டி’யில் ஒருவரை ஒருவர் தீர்த்துக்கொள்ளப் பயன்படுத்திவந்த, நிழல் உலகம் மட்டுமே அறிந்த கூலிப் படையினரை இப்போது சாதாரணர்களும் பயன்படுத்தும் அளவுக்கு நிலைமை மோசமாகியிருப்பது அபாயகரமானது.

சில ஆண்டுகளுக்கு முன் அரசியல் செயல்பாட்டாளர் ஒருவர் கூலிப்படையால் கொல்லப்பட்ட வழக்கில், மதுரை உயர் நீதிமன்றம் முக்கியமான கருத்து ஒன்றைத் தெரிவித்தது. “
கடந்த 10 ஆண்டுகளில் தமிழகத்தில் நடந்த கொலை, கொள்ளை, ஆள்கடத்தல், பலாத்காரம் இவற்றில் கூலிப்படையினரின் தொடர்பு பற்றி தமிழக உள்துறைச் செயலரும் காவல் துறைத் தலைவரும் அறிக்கை தர வேண்டும்” என்று சொன்ன நீதிமன்றம், “ஒருங்கிணைக்கப்பட்ட கொலைக் கும்பல்களை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்காவிட்டால் பொது அமைதி கெடும். 

கூலிப்படைகளை ஒடுக்க காவல் துறையில் தனிப்பிரிவு ஏதேனும் உள்ளதா?” என்றும் அப்போது கேள்வி எழுப்பியது.

இதன் தொடர்ச்சியாக, கூலிப் படையினரைக் கண்காணிப்பதற்காக காவல் துறைத் தலைமை அலுவலகத்தில் தனியாக ஒரு பிரிவும் அப்போது தொடங்கப்பட்டது. 
எனினும், இந்தப் பிரிவு உண்மையில் இப்போது எப்படிச் செயல்பட்டுக்கொண்டிருக்கிறது, கூலிப் படையினரை ஒடுக்க அது தொடர்ந்து மேற்கொண்டுவரும் செயல்திட்டம் என்னவென்பது எல்லாம் பொதுச் சமூகத்துக்குத் தெரியாததாகவே இருக்கிறது.
கூலிப்படைகள் போன்ற நிழலுலகச் செயல்பாடுகள் காலம் முழுவதும் தொடர்ந்துகொண்டே இருக்கக் கூடியவை. குற்றங்கள் நடக்கும்போது களம் இறங்கிச் செயல்படுவதில் அல்ல; 

ஒவ்வொரு நாளும் தொடர்ந்து கண்காணிப்பதும் உளவறிவதும் முன்கூட்டிச் செயல்படுவதும் குற்றங்களைத் தடுப்பதுமே நல்ல காவல் பணிக்கான இலக்கணம். ஆட்சியாளர்களையும் அரசியல் கட்சிகளையும் பொறுத்த அளவில் கொலை, கொள்ளைகள் சட்டம் - ஒழுங்குப் பிரச்சினையாக இருக்கலாம்; மக்களைப் பொறுத்த அளவில் இது உயிர்ப் பிரச்சினை. தமிழக முதல்வர் நேரடியாகவும் உடனடியாகவும் கவனித்து நடவடிக்கை எடுக்க வேண்டிய விவகாரம் இது. 

ஆனால் ஜெயலலிதாவோ அமைதி பூங்கா கனவில் அதை கண்டு கொள்வதில்லை.காவலர் ஒருவரை  குற்றவாளியே குத்தி கொலை செய்ததற்கு காவலர் குடும்பத்திற்கு ஒரு கோடி ரூபாய் கொடுப்பது அமைதி பூங்காவில் நடக்கும் செயல்களோ?

காவல் துறை விரிவான திட்டமிடல்களுடன் களம் இறங்க வேண்டும். 

குற்றவாளிகள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டு கடும் தண்டனைக்கு ஆளாக்கப்பட வேண்டும்!

காவல்துறை அதிமுக கட் சியின் ஒரு கிளை அமைப்பாக செயல்படுவதை உடனே  வேண்டும்.

ஜெயலலிதாவின் புகழ் பாடுவதை,பன்னிர் செல்வம் அளவு குனிந்து மரியாதை செய்வதை காவல் துறை அதிகாரிகள் நிறுத்தி விட்டு அவர்களுக்குண்டான பணிகளை செம்மையாக செய்தாலே போதும் தமிழ் நாடு அமைதி பூங்காதான் .
=========================================================================================
இன்று,
ஜூன் -24.

  • மணிலா நகரம் அமைக்கப்பட்டது(1571)

  • நியூஜெர்சியில் குடியேற்றம் ஆரம்பமானது(1664)

  • தமிழறிஞர் கா.அப்பாத்துரை பிறந்த தினம்(1907)

  • கவிஞர் கண்ணதாசன் பிறந்த தினம்(1921)

  • மணிக்கொடி எழுத்தாளர் சிட்டி பெ.கோ.சுந்தரராஜன் இறந்த தினம்(2006)

=========================================================================================

'கவியரசு' கண்ணதாசன்

சிவகங்கை மாவட்டம் சிறுகூடல்பட்டி யில் (1927) பிறந்தார்.

இயற் பெயர் முத்தையா. சிறு வயதில் வேறொரு குடும்பத்துக்கு தத்து கொடுக்கப்பட்டார். அங்கு 'நாராய ணன்' என அழைக்கப்பட்டார். 

சிறுகூடல்பட்டியில் ஆரம்பக்கல்வி யும், அமராவதிபுதூர் உயர்நிலைப் பள்ளியில் 8-ம் வகுப்பு வரையும் பயின்றார்.

சிறுவனாக இருக்கும்போது, வீட்டில் கிடக்கும் வெற்றுத் தாள்களில் 'கடைக்குப் போனேன், காலணா கொடுத்தேன், கருப்பட்டி வாங்கி னேன்..' என, அன்றாட நிகழ்வுகளைக்கூட கவிதை வடிவில் எழுதிய பிறவிக் கவிஞன்.
சென்னை திருவொற்றியூரில் ஒரு நிறுவனத்தில் வேலை செய்துகொண்டே, கதையும் எழுதினார். 'கிரகலட்மி' பத்திரிகையில் வெளியான 'நிலவொளியிலே' என்பதுதான் இவரது முதல் கதை. 
புதுக்கோட்டையில் ஒரு பத்திரிகையில் சேர்ந்து சில நாட்களில் ஆசிரிய ராக உயர்ந்தார். 'சண்டமாருதம்', 'திருமகள்', 'திரை ஒலி', 'தென்றல்' உள்ளிட்ட பல பத்திரிகைகளில் ஆசிரியராக இருந்தார்.

கம்பர், பாரதியாரிடம் ஈடுபாடு கொண்டவர். பாரதியைத் தன் மானசீக குருவாக ஏற்றுக்கொண்டவர். 'கண்ணதாசன்' என்ற பெயரில் கதை, கட்டுரை, கவிதைகள் எழுதினார். காரை முத்துப் புலவர், வணங்காமுடி, கமகப்பிரியா, பார்வதிநாதன், ஆரோக்கியசாமி ஆகிய புனைப்பெயர்களிலும் எழுதினார்.
சேலம் மாடர்ன் தியேட்டர்ஸில் கதை, வசனம் எழுதுபவராக சேர்ந்தார். 

'கன்னியின் காதலி' படத்துக்கு பாடல் எழுதினார். தொடர்ந்து பெரிய அளவில் வாய்ப்புகள் இல்லை. 

இதற்கிடையே பன்மொழிப் புலவர் கா.அப்பாதுரையிடம் இலக்கண, இலக்கியங்கள் கற்றுத் தேர்ந்தார்.
'பாகப்பிரிவினை' படத்தில் பாடல் எழுதியதைத் தொடர்ந்து 'பாசமலர்', 'பாவமன்னிப்பு', 'படிக்காத மேதை' உள்ளிட்ட படங்களிலும் இவரது பாடல்கள் பிரபலமாகின. 

தமிழ் திரையுலகில் 20 ஆண்டுகாலம் ஈடு இணையற்ற கவிஞராகத் திகழ்ந்தார். 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கவிதைகள், 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட திரைப்பாடல்கள் எழுதியுள்ளார்.

பராசக்தி', 'ரத்தத் திலகம்', 'கருப்புப் பணம்', 'சூரியகாந்தி' உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். சொந்தமாக படம் தயாரித்ததுதான் இவருக்கு கைகொடுக்கவில்லை. 

அரசியலிலும் தீவிர ஈடுபாடு கொண்டிருந்தார். திமுக,, பின் ஈ.வி.கே.சம்பத்துடன் தனிக்கட்சி  அதன்பின் கடைசிவரை காங்கிரசு .

தமிழக அரசவைக் கவிஞராக நியமிக்கப்பட்டார்.

கவிதையோ,கட்டுரையோ சொல்ல ஆரம்பித்ததும் ஏற்கனவே  எழுதிவைத்ததை கடகடவென்று படிப்பதுபோல அவர் வாயில் இருந்து வார்த்தைகள் கொட்டும்! 

'இயேசு காவியம்', 'பாண்டமாதேவி' உள்ளிட்ட காப்பியங்கள், பல தொகுதிகளாக வெளிவந்த 'கண்ணதாசன் கவிதைகள்', 'அம்பிகை அழகு தரிசனம்' உள்ளிட்ட சிற்றிலக்கியங்கள் படைத்தார்.

கவிதை நாடகம், மொழிபெயர்ப்புகள், நாவல்கள், நாடகங்கள், உரைநூல், சிறுகதைத் தொகுப்பு, கட்டுரைகள் மட்டுமின்றி, 'வன வாசம்' என்பது உள்ளிட்ட சுயசரிதைகளையும் எழுதினார். இவரது 'அர்த்தமுள்ள இந்துமதம்' 10 பாகங்களாக வெளிவந்தது. 'சேரமான் காதலி' நாவலுக்காக சாகித்ய அகாடமி விருது பெற்றார். 

'குழந்தைக் காக' திரைப்பட வசனத்துக்காக 1961-ல் தேசிய விருது பெற்றார்.

ஆழமான, புதிரான வாழ்வியல் கருத்துகளை திரைப்பாடல்கள் வழியாகப் பாமர மக்களுக்கும் கொண்டு சேர்த்த கவியரசர் கண்ணதாசன், உடல்நலக் குறைவு காரணமாக 54-வது வயதில் (1981) மறைந்தார். 

இவரது நினைவைப் போற்றும் வகையில், காரைக்குடியில் மணிமண்டபம் அமைக்கப்பட்டுள்ளது.