இன்றைய செய்தி,நாளைய வரலாறு. நாளைய வரலாறை படிப்போம்.

சனி, 25 ஜூன், 2016

கூகுளிடம் எச்சரிக்கை தேவை.கம்ப்யூட்டர், இணையம் மற்றும் ஸ்மார்ட் போன்களில், நம்மைப் பற்றிய தகவல்களை அதிகம் பெற்றுக் கொண்டு, தன் நோக்கத்திற்காகப் பயன்படுத்துவதில் முதல் இடம் பெறுவது கூகுள்  வழங்கும் வசதிகளைத்தான்.
 விளம்பரங்களைத் தன் வர்த்தகத்தின் அடிப்படையாகக் கொண்டுள்ள, கூகுள் நிறுவனத்தின் செயல்பாடுகளுக்கு, மக்களும், அவர்களின் விருப்பு,வெறுப்புகளும்  தெரிந்தாக வேண்டியதுள்ளது. எனவே, ஏதேனும் ஒரு வகையில், வழியில் நம்மைப் பற்றிய தகவல்களை கூகுள் பெற்றுக் கொள்கிறது. நாம் கூகுள் நிறுவனத்தின் பல்வேறு செயலிகளால் பயன் பெறுவதால், நம்மால் தகவல்களைத் தராமலும் இருக்க முடிவதில்லை.
 எனவே, இவற்றை எந்த அளவிற்குக் குறைக்கலாம் என்று பார்ப்போம்.
நீங்கள் ஆண்ட்ராய்ட் போன் அல்லது டேப்ளட் சாதனத்தைப் பயன்படுத்துபவராக இருந்தால், கூகுள் ஏற்கனவே உங்களைப் பற்றிய பல தகவல்களைப் பின் தொடர்ந்து வரும் செயல்பாட்டினை மேற்கொண்டிருக்கும். 
அப்படியா! என் அக்கவுண்ட்டை மூடிவிடவா? 
என்ற எண்ணம் உங்கள் மனதில் தோன்றும். 
மூடுவதற்கும் கூகுள் எளிய வழிகளைத் தரும். ஆனால், நாம் அக்கவுண்ட்டினை மூடிவிட மாட்டோம். ஏனென்றால், கூகுள் பிளே ஸ்டோரிலிருந்து நாம் அப்ளிகேஷன்களை இறக்க வேண்டும் எனில், நமக்கு கூகுள் அக்கவுண்ட் ஒரு கட்டாயத் தேவை ஆகும். பல செயலிகள் வழியாக, பல இடங்களில் நம்மைப் பற்றிய தகவல்கள், கூகுள் நிறுவனம் பெறும் வகையில் கசிகின்றன. 
இருப்பினும், குறைவான அளவில் நம் தகவல்களைத் தரும், சில முக்கிய வழிகளை இங்கு காணலாம்.
கூகுள் நமக்குத் தருபவை எல்லாம் இலவசமே. ஏனென்றால், கூகுள் என்னும் தொழில் நுட்ப அரக்கன், விளம்பரம் வழி பெரும் வருமானமே அதற்கு எக்கச்சக்கமாகும். 
இந்த விளம்பரங்கள் வழியாகவே, உங்களுக்கான விளம்பர வட்டம் கட்டப்படுகிறது. இணையத்தைச் சுற்றி வருகையில், இந்த விளம்பரங்களை ஒதுக்குவது அவ்வளவு எளிதான காரியம் அல்ல. கூகுள் தளத்தின் விளம்பர செட்டிங்ஸ் பக்கத்தில் (https://www.google.com/settings/u/0/ads) நீங்கள் சில நகாசு செட்டிங்ஸ் அமைப்பை மேற்கொண்டு, நீங்கள் தரும் தகவல்கள் துல்லிதமாகவும், ஆர்வம் கொண்டுள்ள விளம்பரங்கள் மட்டும் இருப்பதாகவும் ஏற்படுத்தலாம். 
கூகுள் நிறுவனத்தின் முதன்மை வர்த்தகம் தேடுதல் தான். 
அதில் என்ன செய்யலாம் என்று அடுத்து பார்க்கலாம். கூகுள் நீங்கள் செல்லும், பார்க்கும் அனைத்து தளங்கள் குறித்த தகவல்களைப் பதிவு செய்து வைத்துக் கொள்கிறது. பெர்சனல் கம்ப்யூட்டராக இருந்தாலும், ஆண்ட்ராய்ட் சிஸ்டத்தில் கூகுள் நவ்” செயலியாக இருந்தாலும், தேடுதல் கட்டத்தில் என்னவெல்லாம் டைப் செய்கிறீர்கள் என்பதைக் கூகுள் தொடர்ந்து கண்காணித்துக் கொண்டுள்ளது.
அதிர்ஷ்டவசமாக, கூகுள் இந்த தகவல்கள் எல்லாம் எளிதாகக் காணும்படி, நம் அக்கவுண்ட் ஹிஸ்டரி பக்கத்தில் மேல் பகுதியில் வைத்துள்ளது. 
இங்கு, இவற்றை சேவ் செய்திடாமல் வைத்துக் கொள்ள செட்டிங்ஸ் பகுதியில் வழி தரப்பட்டுள்ளது. எனவே, நாம் கூகுள் எடுத்து வைத்துள்ள தகவல்களை சேவ் செய்திடாமல் நீக்கிவிடலாம். 
அல்லது தேர்ந்தெடுத்த சிலவற்றை மட்டும் பதியும்படி அமைத்துக் கொள்ளலாம்.
ஜிமெயில்: நாம் ஜிமெயில் செயலியைப் பயன்படுத்துகையில், கூகுள் சர்வர்கள் வழியாக நாம் அனுப்புவது அனைத்தையும் ஒரு காப்பி எடுத்து, கூகுள் வைத்துக் கொள்கிறது. மின் அஞ்சல் செயலி ஒன்றின் செயல்பாட்டின் அடிப்படையே இதுதான். 
ஆனால், கூகுள் அதற்கும் மேலாக ஒரு படி சென்று, நமக்கு விளம்பரங்களை அனுப்புவதற்காக, நம் அஞ்சல்களை ஸ்கேன் செய்து தகவல்களைத் திரட்டி வைத்துக் கொண்டு செயல்படுத்துகிறது. நாம் அனுப்பும் டெக்ஸ்ட்டை மட்டுமல்ல; படங்களையும் ஸ்கேன் செய்கிறது. 
இவ்வாறு கூகுள் செயல்படுவதை நீங்கள் விரும்பவில்லை என்றால், நம் அக்கவுண்ட்டிலிருந்து ஜிமெயில் அக்கவுண்ட்டை நீக்குவதுதான் ஒரே வழி.

தொடர்புகள் (Contacts):
 ஆண்ட்ராய்ட் சிஸ்டத்தினைப் பயன்படுத்துவதில் நாம் பெறும் மிகப் பெரிய வசதி, நம் தொலைபேசி தொடர்புகளை எளிதாக, ஒரு சாதனத்திலிருந்து இன்னொன்றுக்கு மாற்றிக் கொள்வதுதான். 
இது எப்படி சாத்தியமாகிறது என்றால், நம் தொடர்புகள் அனைத்தும் கூகுள் அக்கவுண்ட்டுடன் ஒருங்கிணைக்கப்படுவதுதான். மொபைல் போனிலேயே, நம் தொடர்புகளின் மின் அஞ்சல் முகவரிகளும் தாமாக சேவ் செய்யப்படுவதும் இப்படித்தான்.
 நாம் நீக்க வேண்டும் என எண்ணினால், ஒரு முயற்சியில், ஒரு தொடர்பினை மட்டுமே நீக்க முடியும். ஆனால், இந்த சாதனங்களில், நாம் நம் தொடர்புகளை சேவ் செய்து வைத்துக் கொள்வதுதான் சிறந்த வழியாகும்.
பெரும்பாலான ஆண்ட்ராய்ட் இயக்கும் சாதனங்களில், உங்கள் போன் தொடர்புகளை, உங்கள் சிம் கார்டிற்கு மாற்றுவது எனில், People என்னும் அப்ளிகேஷன் சென்று, அதில் Settings தேர்ந்தெடுக்க வேண்டும். அதன் பின்னர், Export Contacts to SIM என்பதனைக் கிளிக் செய்திட முகவரிகள் அனைத்து தகவல்களுடன் மாற்றப்படும். 
ஒரு சில ஆண்ட்ராய்ட் சாதனங்களில், இந்த வழிமுறைகள் சற்று மாறுபடலாம்.

கூகுள் காலண்டர்இதில் நாம் அமைக்கும் நிகழ்வுகள் அனைத்தும் கூகுள் தளத்தினால் ஒருங்கிணைக்கப் படுகின்றன. 
இங்கு மட்டும், இதில் உள்ளவற்றை முற்றிலுமாக நீக்க முடியாது. கூகுள் காலண்டருடன் அனைத்து தொடர்புகளையும் நீக்கினால்தான் அது முடியும்.
கூகுள் ட்ரைவ்: ஜிமெயில் சர்வரில், நம் மெயில்கள், தொடர்புகள் அனைத்தும் சேமிப்புக் கிடங்கில் வைக்கப்படுவது போல, ட்ரைவ் செயலிக்கான சர்வரிலும் சேமிக்கப்படுகிறதா என்பது இன்னும் தெளிவாக அறியத் தரப்படவில்லை. 
ஆனால், ட்ரைவ் பயன்படுத்தும் சர்வரில் சேர்த்து வைக்கப்படும் ஆவணங்கள், படங்கள், விடியோக்கள் அனைத்தும், எந்த நேரமும் கூகுள் நிறுவனம் அறியக் கிடைக்கும் வகையில்தான் பதியப்படுகின்றன. நீங்கள் உங்கள் பைல்களை அழிக்கும்போதும் பின்னர் அழித்த பின்னர், ட்ரேஷ் பெட்டியிலிருந்து நீக்கும் போதும், அவை மறைக்கப்படுகின்றன. நிச்சயமாய், அவை கூகுளின் சர்வரிலிருந்து உடனடியாக, அறவே நீக்கப்படுவதில்லை. 
ஆனால், உங்கள் அக்கவுண்ட்டினை வேறு யாரேனும், பின் நாளில் அணுகினால், அவர்களுக்கு நீங்கள் நீக்கியவை நிச்சயமாகக் கிடைக்காது.

உலாவும் இடங்கள் (Location): உங்கள் ஆண்ட்ராய்ட் சாதனம் இயங்கத் தொடங்கிய காலத்திலிருந்து, கூகுள் 'லொகேஷன்' என்னும் வசதி மூலம், நீங்கள் எங்கெல்லாம் செல்கிறீர்கள் என்பதனை அறிந்து பதிவு செய்கிறது. 
அந்த சாதனம் மூலம், கூகுள் மேப் பயன்படுத்துவதாக இருந்தால், இந்த டூல் தான் அடிப்படையை அமைக்கிறது. பெர்சனல் கம்ப்யூட்டரில் மேப் பயன்படுத்துகையில், லொகேஷன் டூலை நாம் இயக்காமலேயே, மற்றவை மூலம், கூகுள் நாம் இயங்கும் இடத்தை அறிந்து கொள்கிறது. இதனை நீங்கள் விரும்பவில்லை என்றால், இந்த செயல்பாட்டினை, ஆண்ட்ராய்ட் சாதனத்தில் முடக்கிவிடலாம். 
கூகுள் ப்ளே: ஆண்ட்ராய்ட் போன் வைத்திருப்பவர்கள், கூகுள் ப்ளே பயன்படுத்தாமல் இருக்க முடியாது. பல செயலிகள் இதன் வழியாகவே நமக்குக் கிடைக்கும். கூகுள், நீங்கள் இந்த ஸ்டோர் சென்று பெறும் அனைத்தையும் பட்டியலிட்டுத் தன்னிடம் வைத்துக் கொள்ளும். 
இது நாம் ஸ்டோரைப் பயன்படுத்த ஒப்புக் கொள்ளும் ஒப்பந்தத்தில் ஒரு நிபந்தனையாகும். ஆனால், வெளிப்படையாக இது தெரிவதில்லை. இதற்கு நீங்கள் உடன்பாடில்லை என்றால், ப்ளே ஸ்டோரினைப் பயன்படுத்தாமல் இருப்பதுதான் ஒரே வழி. 
ஆனால், அது சரியான வழி அல்ல. ஏனென்றால், இந்த ப்ளே ஸ்டோரில் இருந்து நீங்கள் பெற்ற அனைத்து செயலிகளையும் நீக்க வேண்டும். பின் எந்த பயன்பாடும் உங்களுக்குக் கிடைக்காது.

யூ ட்யூப்: யு ட்யூப் தள செட்டிங்ஸ் அமைப்புகள் https://www.google.com/settings/accounthistory என்னும் இடத்தில் கிடைக்கும். இங்கு நீங்கள் தேடிய விடியோக்களின் பட்டியல் கிடைக்கும் இவற்றை நீக்க நீங்கள் விரும்பினால், அவற்றைத் தேடி நீக்கிவிடலாம். 
இங்கேயே, உங்கள் தேடலைப் பதிவு செய்ய வேண்டாம் என கூகுளுக்குக் கட்டளை இடலாம். அதே போல, நீங்கள் தேடிப் பார்த்த விடியோக்களின் பட்டியலையும் அணுகி, நீக்க விரும்புவதை நீக்கிவிடலாம்.
மேலே தரப்பட்டுள்ள தகவல்களிலிருந்து, நீங்கள் கூகுள் சர்வர்களுக்கு, உங்களைப் பற்றிய தகவல்களை, அறிந்தோ அறியாமலோ, எந்த அளவிற்குத் தருகிறீர்கள் என்பதனைத் தெரிந்து கொண்டிருப்பீர்கள். கூகுள் நிறுவனம் தரும் எந்த வசதியை நாம் பயன்படுத்தினாலும், நம்முடைய விருப்பங்கள், நம்மைப் பற்றிய தகவல்கள், அதன் சர்வரில் சென்று அடைவதையோ, அவற்றைப் பயன்படுத்தி நம்மை கூகுள் அணுகுவதையோ மாற்ற இயலாது. விருப்பப் பட்டால், நம்மிடமிருந்து செல்லும் தகவல்களைக் குறைத்துக் கொள்ளலாம். 
கூகுள் சேவையே, அதில் உள்ள நம் அக்கவுண்ட்டினைக் கட்டுப்பாட்டில் வைத்துக் கொண்டிருக்கும் டூல்களைத் தருகிறது. ஆனால், இதற்கு நாம் மெனக்கெட்டு செட்டிங்ஸ் அமைத்துத் தொடர்ந்து கண்காணிக்கும் வேலையையும் மேற்கொள்ள வேண்டும். 
ஆண்ட்ராய்ட் சாதனங்கள், ஜிமெயில், கூகுள் மேப்ஸ், யு ட்யூப் போன்றவை எல்லாம், தகவல்களைச் சேகரிக்கும் டூல்களைத் தாங்களாகவே இயக்கித் தங்கள் பணியைத் தொடர்கின்றன. 
நாம் இதனை அறிந்து, ஒவ்வொரு செட்டிங்ஸ் பக்கமும் அணுகி, இவற்றைத் தடுக்கலாம். ஆனால், அவ்வாறு தடுக்கும் வேளைகளில், சில வசதிகளை இழக்க வேண்டியதிருக்கும். 
தேவைப்படும்போது மட்டும் பயன்படுத்தினால், தகவல்கள் தொடர்ந்து செல்வது நிறுத்தப்படும்.
நன்றி:தினமலர்.
=======================================================================================
இன்று,
ஜூன்-25.
  • இந்தியாவில் முதல் முறையாக அவசர நிலை பிரதமர் இந்திரா காந்தியால் பிரகடணப்படுத்தப்பட்டது.மு.க.ஸ்டாப்களின்,முரசொலி மாறன்,ஜெயபிரகாஷ் நாராயணன்,வி.பி.சிங் மீது காவல்துறையினர் கடும் தாக்குதல். கைது. (1975)
  • வின்டோஸ் 98 முதல் பதிப்பு வெளியானது(1998)
  • குரொவேசியா, சிலவேனியா விடுதலையை அறிவித்தன(1991)
  • உலகின் முதலாவது செயற்கைக்கோள் ஒளிபரப்பு 30 நாடுகளில் காண்பிக்கப்பட்டது(1967)
  • பிரபல பாப் இசைப் பாடகர் மைக்கல் ஜாக்சன் இறந்த தினம்(2009)
=======================================================================================
அவசர நிலைப் பிரகடனக் காரணம் என்ன?, 
-கி.வீரமணி..
அலகாபாத் என்ற பெயருக்கு எப்போதுமே ஒரு முக்கியத்துவம் உண்டு. 
1975ஆம் ஆண்டு இதே அலகாபாத் ஒரு திருப்புமுனையான தீர்ப்பை அளித்தது; அந்தத் தீர்ப்பு இந்திய அரசியல் மாற்றத்தையே ஏற்படுத்திய தீர்ப்பு!
ஆம்! அலகாபாத் உயர் நீதிமன்றம் ரேபரேலி தொகுதியிலிருந்து இந்திராகாந்தி தேர்ந்தெடுக்கப்பட்டது செல்லாது என்று தீர்ப்பளித்தது. 1975ஆம் ஆண்டு ஜூன் 12ஆம் தேதி இந்தத் தீர்ப்பு வந்தது. 13ஆம் தேதியிலிருந்து, டெல்லியில் மிகப் பெரும் சதித் திட்டங்கள் வகுக்கப்பட்டன. இந்திராகாந்தி பதவி விலகக் கூடாது என்று மக்கள் கருதுவதுபோல் ஒரு நாடகத்தை அரங்கேற்றினார்கள்!
 டெல்லி போக்குவரத்துக் கழகத்தின் பேருந்துகள் எல்லாம் திருப்பி விடப்பட்டு, ஆட்களை ஏற்றிக் கொண்டு வந்து, இந்திராகாந்தி அம்மையாரின் வீட்டின்முன் குவித்தார்கள்! 
அவர்கள் இந்திராவுக்கு ஆதரவு தரும் மக்கள் என்று பிரச்சாரம் செய்தார்கள்! 
டெல்லி போக்குவரத்துக் கழகத்துக்குச் சொந்தமான 983 பேருந்துகளும், டெல்லி மாநகர வளர்ச்சிக் கழகத்துக்குச் சொந்தமான நூற்றுக்கணக்கான டிரக்குகளும் இந்தப்  பணிக்குப் பயன்படுத்தப்பட்டன. காங்கிரஸ் கட்சிக்காரர்களும் அரசாங்க ஊழியர்களும் இந்தப் பேருந்துகளில் ஏற்றப்பட்டு இந்திராகாந்தியின் வீட்டின்முன் இறக்கிவிடப்பட்டனர். ராஜஸ்தான், அரியானா, பஞ்சாப், உ.பி. மாநிலங்கள் வரை இந்தப் பேருந்துகள் அனுப்பப்பட்டு, ஆட்கள் பிடித்து வரப்பட்டார்கள். 
சிவப்பு விளக்குப் பகுதிகளில் உள்ளவர்களைக்கூட விட்டுவைக்கவில்லை. நாள்தோறும் இந்திராவின் வீட்டின்முன், இந்தக் கூட்டம் குவிக்கப்படுவதும், அவர்களை இந்திராவுக்கு ஆதரவாக முழக்கமிடச் செய்வதுமான நாடகம் தொடர்ந்து நடந்துகொண்டே இருந்தது. இன்னொரு பக்கம் திரைமறைவில் ரகசிய புலனாய்வுத்துறை அதிகாரிகளும், டெல்லி  காவல்துறையின் சிறப்புப் பிரிவினரும் கைது செய்யப்பட வேண்டியவர்களின் பட்டியலைத் தயாரித்துக் கொண்டிருந்தனர். 
முக்கியத் தலைவர்களின் வீடுகளும் கண்காணிப்புக்கு உட்படுத்தப்பட்டன. அவர்களின் தொலைப்பேசிகள் துண்டிக்கப்பட்டன.
தலைநகரம் முழுதும் ஒரே பதட்டம்; தீர்ப்பு வெளியான 13 நாட்களுக்குப் பிறகு ஜூன் 25ஆம் தேதி உள்நாட்டு அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டது. அதாவது, இந்திய அரசியல் சட்டம் ஒவ்வொரு குடிமகனுக்கும் வழங்கியுள்ள அடிப்படை உரிமைகள் இதன்மூலம் பறிக்கப்பட்டன.
அதேபோல் பத்திரிகைகள் அன்றைய தினம் வெளிவராமல் இருப்பதற்கும் அவசரமான ஏற்பாடுகள் நடந்தன.
இந்தியாவில் 1975ஆம் ஆண்டு ஜூன் 25ஆம் நாள் பிரகடனப்படுத்தப்பட்ட நெருக்கடி நிலையில் சிறைப்படுத்தப்பட்ட அரசியல்வாதிகளும், ஜனநாயகவாதிகளும், பகுத்தறிவுவாதிகளும் சிறைச்சாலைக்குள் எல்லை மீறிய இன்னல்களை எதிர்கொண்டனர். 
இந்தியாவில் நெருக்கடி நிலை அமல்படுத்தப்பட்ட நள்ளிரவு வேளையிலேயே நெருக்கடி நிலையை எதிர்க்கக்கூடும் எனக் கருதப்பட்ட அரசியல் கட்சியினரும் ஜனநாயக அமைப்புகளின் பிரதிநிதிகளும் சிறைகளில் அடைக்கப்பட்டனர். நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலை நிகழ்த்தக் கூடியவர்கள் என்ற சட்டப் பிரிவுகள் அவர்கள்மேல் பதிவு செய்யப்பட்டன.
 தமிழகத்தில் ஆட்சியிலிருந்த திராவிட முன்னேற்றக் கழகம் 1976 ஜனவரி 31ஆம் நாள் கலைக்கப்பட்டவுடன் தி.மு.க. கட்சித் தலைவர்களையும், தொண்டர்களையும், திராவிடர் கழக முக்கியப் பொறுப்பாளர்கள் சிலரையும் என்னையும் கைது செய்து சிறையில் அடைத்தனர். 
1976 பிப்ரவரி 2ஆம் தேதி எங்களைச் சிறைச்சாலையில் இரவு 9 மணிக்கு மேல் திறந்து அடித்து வதைத்தனர்.
சென்னை மத்திய சிறையிலுள்ள சிறிய அறைகளில் எட்டுப் பேர் அடைக்கப்பட்டதில் தொடங்கி, வேப்ப எண்ணெய் கலந்த உணவை வழங்குதல், திடீர்த் தாக்குதல்கள், மருத்துவச் சிகிச்சை மறுப்பு, உறவினர்கள் பார்க்க அனுமதி மறுப்பு, நடமாடக்கூட அனுமதி மறுப்பு என சிறைக்குள் நெருக்கடி நிலை எதிர்ப்பாளர்கள் மிகக் கொடுமையாக நடத்தப்பட்டனர்! 
அவசர நிலைப் பிரகடனம் செய்யப்பட்ட நாளான 1975 ஜூன் 25ஆம் தேதியன்று டில்லியில் என்ன நடந்தது? 
அப்போது டில்லியின் உயர் அதிகாரிகள் என்ன செய்து கொண்டிருந்தார்கள்? அவசர நிலைப் பிரகடனத்திற்குப் பின்னணியில் என்ன நடந்து கொண்டிருந்தது என்பதுபற்றி  டைம்ஸ் ஆப் இந்தியா என்ற  பத்திரிகை வெளியிட்ட தகவல்களை  அப்படியே இங்கு தருகிறேன்.
பிரதமர் இந்திராவின் தேர்தல் செல்லாது என்று அலகாபாத் உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்ததைத் தொடர்ந்து இந்திரா பதவி விலக வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் எல்லாம் ஒருமுகமாகச் சேர்ந்து ஜூன் 29, 1975ஆம் நாளன்று ஒரு போராட்டத்தைத் தொடங்க இருந்தன.
இதற்கிடையில் பதவியை எப்படியும் காப்பாற்றிக் கொள்ள வேண்டும் என்ற வெறியில் இந்திராவும் அவரது எடுபிடிகளும் திட்டமிட்டனர். 
தனக்கு மிகவும் நம்பிக்கையான சிலருடன் கலந்து இந்திரா இதற்கான திட்டம் வகுத்தார். இதன் முடிவுதான் அவசர நிலைப் பிரகடனம்.
அவசர நிலைப் பிரகடனம் செய்ய வேண்டுமென்றால் சில சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் ஆலோசனைகளும் பெறப்பட வேண்டும். ஆனால், இதுபற்றி அன்றைய தினம் அமைச்சகச் செயலாளருக்கோ, மத்திய உள்துறை அமைச்சகச் செயலாளருக்கோ, இந்திராவின் ஒற்றர் படையான  ராவின் தலைமை அதிகாரிக்கோ எதுவும் தெரியாது. 
அவசரநிலை பிறப்பிப்பதற்கு சம்பந்தப்பட்ட மற்ற உயர் அதிகாரிகளுடனும் கலந்து ஆலோசிக்கப்படவில்லை. அவர்கள் எல்லாம் இதுபற்றி எதுவுமே அறியாதவர்களாக நகரின் எங்கெங்கோ மூலைகளில் இருந்தனர். 
இவர்களைக் கலந்துகொண்டு அவர்களிடம் அவசரநிலை பற்றித் தெரிவித்தால், எங்கே அவர்கள் இதுபற்றி மூச்சு விட்டுவிடுவார்களோ அல்லது உடன்படமாட்டார்களோ என்று பயந்து மிகவும் நம்பிக்கையான அதிகாரிகள் சிலரை மட்டும் வைத்துக் கொண்டு அவசர நிலை அறிவிப்புக்கான காரியங்கள் மும்முரமாக, ஆனால் ரகசியமாக நடந்தன.
உயர் அதிகாரிகள் அவசர நிலைப் பிரகடனத்துக்கு எதிராக சதி வேலைகளைச் செய்துவிடுவார்கள்; அல்லது இந்தச் செய்தியை லீக் செய்து விடுவார்கள் என்று பயந்து கொண்டுதான் இவ்வாறு ரகசியமாக காரியங்கள் நடந்ததாக பின்னர் தெரிய வந்தது.
ஜனாதிபதி பக்ருதீன் அலி அகமதுவின் உதவியாளர்கள், உயர் அதிகாரிகளுக்கும் தெரியாமல் அவசர நிலைப் பிரகடனச் செய்தி நடுச்சாமத்திற்குச் சில மணி நேரத்திற்கு முன்பாக பிரதமர் இந்திரா மூலம் அதிகாரப்பூர்வமாகத் தெரிவிக்கப்பட்டது. 
ஜூன் 25ஆம் தேதி மாலை 5.45 மணிக்கு பிரதமர் இந்திராவும், மேற்குவங்க முதல்வர் சித்தார்த்த சங்கர் ரேயும் ஜனாதிபதி பக்ருதீனைச் சந்தித்து அவசர நிலைக்கான காரணங்களை விளக்கினர். 45 நிமிடங்களுக்கு மேல் இருவரும் பக்ருதீனிடம் விவாதித்தனர். 
ஆனால், அவர் எந்த முடிவுக்கும் உடனே வர மறுத்துவிட்டு சிறிது நேரம் கழித்து முடிவை அறிவிப்பதாகத் தெரிவித்து விட்டார். இந்த நிகழ்ச்சிகள் எல்லாம் ஒரு மவுன உலகத்தில் நிகழ்ந்து கொண்டிருந்த வேளையில், அரசின் உயர் அதிகாரிகள் தங்கள் வீடுகளில் உறங்கிக் கொண்டிருந்தனர்.
ஜனாதிபதியின் செயலாளர் கே. பாலச்சந்திரனும் அப்போது வீட்டில் உறங்கிக் கொண்டிருந்தார். 
இரவு 11.15 மணிக்கு பிரதமர் இந்திராவின் அடிஷனல் தனிச் செயலாளர் ஆர்.கே. தாவன் அவரை எழுப்பி அவரிடம் உள்நாட்டு அவசரநிலை பிறப்பிப்பதற்கான பிரதமரின் கடிதத்தை ஜனாதிபதியின் ஒப்புதல் பெறுவதற்காகக் கொடுத்தார்.
ஜனாதிபதியின் செயலாளர் பாலச்சந்திரன் அந்தக் கடிதத்தை எடுத்துக் கொண்டு ஜனாதிபதியிடம் சென்று கொடுத்தார். பின்பு அவசர நிலைப் பிரகடன உத்தரவை அவர் பிறப்பித்தார். பின்பு தூக்க மாத்திரை ஒன்றைச் சாப்பிட்டுவிட்டு படுக்கச் சென்றுவிட்டார்.
 இதற்குள் நாடு முழுவதும் போலீசார் தலைவர்களை எல்லாம் வேட்டையாடத் தொடங்கி விட்டனர். 
அந்த வேட்டைதான் நாடு முழுவதும் தொடர்ந்து 18 மாத காலம் நடந்து வந்தது. 
அவசர நிலைப் பிரகடனத்தின்போது மத்திய உள்துறைச் செயலாளராக எஸ்.எல். குரானா இருந்தார். அவசர நிலைப் பிரகடனத்துக்கு மூன்று நாட்களுக்கு முன்பாகத்தான் அவர் ராஜஸ்தானிலிருந்து மாற்றுதல் செய்யப்பட்டு உள்துறைச் செயலாளராக ஆக்கப்பட்டிருந்தார். 
அதுவரை உள்துறைச் செயலாளராக இருந்த என்.கே. முகர்ஜி எடுத்ததெற்கெல்லாம் ஆமாம் போடாதவர் என்பதால் அவரை மாற்றிவிட்டு குரானா நியமிக்கப்பட்டார். 
இருந்தாலும், குரானாவையும் இந்திரா நம்பவில்லை. (இந்தக் குரானா பிறகு தமிழ்நாடு கவர்னராக நியமிக்கப்பட்டார் _- ஓய்வு பெற்ற பின்பு)
இரவு 11.15 மணிக்கு குரானா மற்றொரு அதிகாரிக்கு போன் செய்து, டில்லி லெப்டினன்ட் கவர்னர் கிரிஷன்சந்த் மூன்று பட்டாளம் ஆயுதப்படைகளைக் கேட்கிறார், அதற்கான காரணம் என்னவென்று தெரியவில்லை. உங்களுக்குத் தெரியுமா என்று கேட்டார். 
அந்த அதிகாரிக்கும் காரணம் தெரியவில்லை. சில நிமிடங்கள் கழித்து குரானாவின் நண்பர்கள் சிலர், சில முக்கியப் புள்ளிகள் கைது செய்யப்பட இருக்கிறார்கள் என்று அவரிடம் தகவல் கூறினர்.
சிறிது நேரத்திற்கெல்லாம் உள்துறை அமைச்சகத்தின் உயர் அதிகாரி ஒருவருக்கு சண்டிகரில் உள்ள உயர் அதிகாரி ஒருவரிடமிருந்து போன் வந்தது. பத்திரிகை அலுவலகங்களை எல்லாம் முற்றுகையிடும்படி எங்களுக்கு உத்தரவு வந்திருக்கிறது. அதற்கான காரணங்கள் எதுவும் தெரியவில்லையே என்று அவர் போனில் விசாரித்தார். 
ஆனால், உள்துறை அமைச்சக அதிகாரிக்கும் அதுபற்றி தகவல் தெரியவில்லை. காலை பத்திரிகைகள் வெளிவராமல் மின்சாரம் துண்டிக்கப்பட்டது.
புதுடில்லியில் உள்ள மற்றொரு மேலதிகாரியிடமும் இதுபற்றி நான் டெலிபோனில் பேச முடியாது. அந்த அதிகாரியின் வீட்டில் ரகசிய டெலிபோன் எதுவும் இல்லை என்று அந்த சண்டிகர் அதிகாரி அவரிடம் தெரிவித்தார்.
செய்தியாளர்கள் சிலரும் அந்த உள்துறை அமைச்சக அதிகாரியுடன் தொடர்பு கொண்டு மத்தியப் பிரதேசம் முழுதும் பலர் கைது செய்யப்பட்டு வருகின்றனர். இதற்கான காரணம் என்ன என்று அவரிடம் கேட்டனர். அந்த அதிகாரியும் எதுவும் புரியாமல் குழப்பத்தில் ஆழ்ந்தார்.
நாட்டில் ஆட்சிக் கவிழ்ப்பு செய்ய சதி ஒன்று நடந்து அது முறியடிக்கப்பட்டுள்ளது என்று சிலர் பேசிக்  கொண்டனர். நாடு முழுதும் ராணுவ ஆட்சி பிரகடனப்படுத்தப்பட்டு விட்டது என்று மற்றும் சிலர் கூறினர். பொதுவாக அதிகாரிகள் முதல் பொதுமக்கள் வரை எல்லோருக்கும் ஒரே குழப்பம். தலைநகரிலும் நாட்டின் இதர பகுதிகளிலும் பல தலைவர்கள் கைது செய்யப்பட்டிருக்கிறார்களே. 
எனக்குத் தெரியாமல் இவர்கள் எப்படிக் கைது செய்யப்பட்டார்கள் என்று இன்டலிஜென்ஸ் பிரிவின் தலைமை அதிகாரி ஜெயராம் 26ஆம் தேதி விடியற்காலையில், தன் கீழ் வேலை பார்க்கும் அதிகாரிகளுக்கு போன் செய்து கேட்டார், அவர்கள் வியப்படைந்தனர். 
மாநிலங்களின் பல பகுதிகளிலும் தலைவர்கள் கைது செய்யப்பட்டுள்ளது மாநிலத் தலைநகர்களில் உள்ள கீழ் அதிகாரிகள் கூறித்தான் தலைமை அதிகாரி ஜெயராமுக்குத் தெரிய வந்தது. தலைமை அதிகாரிக்கேகூட தெரியாமல் கீழ் அதிகாரிகள் மூலம் இப்படிப் பலர் கைது செய்யப்பட்டுள்ளதைக் கண்டு அந்த அதிகாரிகள் ஆச்சரியப்பட்டனர். 
ஜூன் 26 விடியற்காலை 6 மணிக்கு அமைச்சரவையின் அவசரக் கூட்டத்தைக் கூட்டும்படி விடியற்காலை 4.30 மணிக்கு அமைச்சகச் செயலாளரிடம் கூறப்பட்டபோதுதான் நாட்டில் உள்நாட்டு அவசரநிலை பிறப்பிக்கப்பட்டுள்ள செய்தியே தெரிய வந்தது. உடனே, அவர் இதை உள்துறைச் செயலாளருக்கும் மற்ற அதிகாரிகளுக்கும் தெரிவித்தார்.
காலை 6 மணிக்கு அமைச்சரவைக் கூட்டம் நடக்கும் அறைக்குள் அதிகாரிகள் விரைந்தனர். அதற்குள் அமைச்சரவைக் கூட்டம் கூடியிருந்தது. சில அமைச்சர்கள் அந்த அறையிலிருந்து வெளியேறிக் கொண்டிருந்தனர். 
அவசரநிலைப் பிரகடனம் கோரி ஜனாதிபதி பக்ருதீன் அலி அகமதுக்கு எழுதப்பட்ட கடிதத்தைப்பற்றி அப்போதைய சட்ட அமைச்சர் எச்.ஆர். கோகலே பேசிக் கொண்டிருந்ததாக அதிகாரி ஒருவர் அப்போது நடந்த சம்பவத்தை நினைவு கூர்ந்தார்.
எதிர்க்கட்சித் தலைவர்கள் பற்றி மிகவும் மோசமாக அந்தக் கடிதத்தில் விமர்சனம் செய்யப்பட்டிருந்தது. இந்திராவின் தனிச் செயலாளரான தாவன், சஞ்சய்காந்தி ஆகியோரின் உதவியுடன் பிரதமர் அமைச்சகத்தின் இணைச் செயலாளர் பி.என். பெல் என்பவர் இந்தக் கடிதத்தைத் தயாரித்திருந்தார்.
=========================================================================================
தற்போது என்எஸ்ஜி எனப்படும் அணுசக்தி மூலப்பொருள் விநியோக நாடுகள் கூட்டமைப்பில் இந்தியா இடம் பெர கடுமையாக போராடி வருகிறது.அப்படி எனெஸ்ஜியில் இந்தியா இடம் பெற்றால் என்னென்ன பலன்கள் கிடைக்கும்..

அணுசக்தி மூலப்பொருள் விநியோக நாடுகள் கூட்டமைப்பில் இந்தியா இடம் பெற்றால் கதிரியக்க மருந்துகளை தடையின்றி தயாரிக்க வாய்ப்பு கிடைக்கும். 

அணு உலைகளை நிறுவுவதற்கான பொருட்களை மற்ற நாடுகளிடமிருந்து எளிதாக பெற முடியும்.

அணுசக்தி மூலம் மின்சாரத்தை தயாரிக்க தேவையான யூரேனியம் போன்ற எரிபொருட்களை பெறுவதில் இருக்கும் தடைகள் நீங்கும். அதன் மூலம் பிறநாடுகளிலிருந்து அணுசக்தி உற்பத்திக்கான எரிபொருட்களை பெற முடியும்.

தற்போது இந்தியா அணு உலைகளை அமெரிக்கா, ரஷ்யா போன்ற நாடுகளிலிருந்து வாங்கி வருகிறது. அணு சக்தி மூலப்பொருள் விநியோக நாடுகள் கூட்டமைப்பில் இடம் பெறுவதன் மூலம், அணுமின் உலைகளை இந்தியாவிலேயே சொந்தமாக உருவாக்குவதுடன், பிறநாடுகளுக்கும் விற்க முடியும். 

இந்தியாவில் சொந்தமாக அணு உலைகளை தயாரிப்பதன் மூலம் அணுமின்சார உற்பத்தியை அதிகரிக்க வாய்ப்பு ஏற்படும். இதன் மூலம் மேக் இன் இந்தியா திட்டத்தை மேலும் வலுப்பெற செய்ய முடியும்

இந்தியா அணுசக்தி மூலப்பொருள் விநியோக நாடுகள் கூட்டமைப்பில் சேர்ந்தால், பிற்காலத்தில் பாகிஸ்தான் இக்கூட்டமைப்பில் சேர்வதற்கு இந்தியா எதிர்ப்பு தெரிவிக்க வாய்ப்பு ஏற்படும்.

என்எஸ்ஜி.,யில் சேர்வதன் மூலம் அணு ஆயுத பரவல் தடைச்சட்டம் மற்றும் விரிவான அணு ஆயுத சோதனை தடை சட்டத்தில் இந்தியா கையெழுத்திட நேரிடும். அதனால், அணு ஆயுத சோதனைகளை மேற்கொள்ள முடியாது. எனினும், அண்டை நாடான பாகிஸ்தான், அணு ஆயுதங்களை தவறாக பயன்படுத்த வாய்ப்புள்ளதை காரணம் காட்டி அதிலிருந்து இந்தியா விலக்கு கோர வாய்ப்புள்ளது. 

அணுசக்தி விநியோக நாடுகள் கூட்டமைப்பில் உள்ள 48 நாடுகளில் ஒரு நாடு எதிர்ப்பு தெரிவித்தாலும் இந்தியாவால் அவ்வமைப்பில் இணைய முடியாது. 

அமெரிக்கா, ரஷ்யா, இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகள் ஏற்கனவே இந்தியாவிற்கு நிபந்தனையற்ற ஆதரவை தெரிவித்துள்ளன.

எனினும், பாகிஸ்தானையும் இந்த அமைப்பில் சேர்க்க வலியுறுத்தும் சீனா, அணு ஆயுத பரவல் தடைச்சட்டம் மற்றும் விரிவான அணு ஆயுத சோதனை தடை சட்டத்தில் இந்தியா கையெழுத்திட்டால் மட்டுமே இந்த அமைப்பில் சேர்க்க வேண்டும் என கூறி வருகிறது.