இன்றைய செய்தி,நாளைய வரலாறு. நாளைய வரலாறை படிப்போம்.

திங்கள், 20 ஜூன், 2016

ஒலி அத்துமீறல்
அதிகஅளவு ஒலி அத்துமீறல் தற்போது மிகவும் அதிகரித்துவிட்டது. 

 ஒலி  மாசு (சுற்றுசூழலில் மிகையான சத்தம்) என்பது மனதளவில்  அறியாமலே பாதிப்பை உண்டாக்கும்  ஒன்று. உலக நலவாழ்வு ஆணையம் சமீபத்தில் வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையின்படி, உலகிலுள்ள 10 வயதிற்குட்பட்ட சிறார்களில் 5 விழுக்காட்டினர் ஒலி மாசு காரணமாக தங்களது செவியின் கேட்புத்திறனை இழந்துள்ளனர். 

உச்ச அளவான 75 டெசிபெல்லுக்கும் மேலாக இரைச்சலை உணரும் அனைவரும் தலைவலி, சோர்வு, தலைசுற்றல் போன்றவற்றால் பாதிக்கப்படுகின்றனர். இயந்திர தொழிற்சாலைகளில் பணியாற்றுவோரில் நான்கில் ஒரு பகுதியினர் செவித்திறனை இழந்து, பல்வேறு நோய்களால் அவதிப்படுவதாகவும் அந்த அறிக்கை தெரிவிக்கிறது. 

தற்போது இந்தியாவில் ஆயிரத்தில், 35 பேருக்கு காது இரைச்சல் நோய் உள்ளதாகவும், புறநகர் பகுதிகளில் வசிப்போரில் 10 விழுக்காட்டினரும், கிராமப்புறங்களில் வசிப்போரில் 7 விழுக்காட்டினரும் ஒலியுணரும் திறன் குறைந்தவர்களாகவே உள்ளனர். ஒலியளவு அதிகரித்துள்ள பகுதிகளில் வாழ்கின்ற நபர்களில் பெரும்பாலானோருக்கு நரம்புத்தளர்ச்சி மற்றும் இதயநோய் பாதிப்பு உள்ளதாகவும் கண்டறியப்பட்டுள்ளது. 

தொடரும் இரைச்சல் நிலை மனித இறப்புக்கும் கூட வித்திடக்கூடும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அதிகமாய் ஒலியை எழுப்பும் ராக் இசையின் அதிகபட்ச அளவு 150 டெசிபெல், 
அவசர மருத்துவ ஊர்தி, விமானங்களின் இரைச்சல் 140 டெசிபெல், 
ஆழ்துளைக் கிணறுகள் தோண்டுவதால் ஏற்படும் சத்தம் 130 டெசிபல், 
பரபரப்பான கடைத்தெருவில் ஏற்படும் இரைச்சல் 80 டெசிபல், 
போக்குவரத்து நெரிசல் மிகுந்த சாலைகளில் எழும் இரைச்சல் 70 டெசிபல், சத்தத்துடன் பொழியும் மழையின் அளவு 50 டெசிபல், 
அமைதியாக காணப்படும் நூலகங்களில் ஒலி அளவு 30 டெசிபல் என கணக்கிடப்பட்டுள்ளது. 
பொதுவாக 50லிருந்து 75 டெசிபல் வரை நம் காதுகள் கேட்கும் சராசரி அளவாக வரையறை செய்யப்பட்டுள்ளது. 
ஆனால், பெரும்பாலும் இந்த அளவை காட்டிலும் அதிகமாகவே ஒலி மாசு அதிகரித்த வண்ணம் உள்ளது. 
தேசிய நெடுஞ்சாலைகளுக்கு அருகிலுள்ள பள்ளி, கல்லூரிகளில் நடத்தப்பட்ட ஓர் ஆய்வில் 84 விழுக்காடு ஆசிரியர்களுக்கும், 92 விழுக்காடு மாணவர்களுக்கும் செவித்திறன் குறைபாடு ஏற்பட்டுள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது. 
வாகன போக்குவரத்து நடைபெறும் இடங்களை காட்டிலும், கடைத்தெருக்களில் இரைச்சலின் அளவு அதிகமிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் 55 டெசிபல் அளவை பகலிலும், 45 டெசிபல் அளவை இரவிலும் அனுமதித்துள்ளது. இருப்பினும் இந்த அளவு மீறப்படுகிறது.

தற்போதைய நிலையில் மிகவும் அவசியமான, தேவையான ஒன்றாக கருதப்படும் இந்த ஒலி மாசு ஆணையம், தமிழகத்தின் அனைத்து நகரங்களிலும் விரைந்து உருவாக்கப்படுதல் வேண்டும். இதன் மூலம் ஒலி அளவை தொடர்ந்து கண்காணிப்பதுடன், வரையறுக்கப்பட்ட ஒலி அளவை அந்தந்த இடங்களில் எச்சரிக்கை பலகையாக அமைத்து வாகன ஓட்டிகளுக்கும்,பொதுமக்களுக்கும் அறிவுறுத்துதல் மிகவும் அவசியம். 
ஒலி மாசு தொடர்பான தேசிய மற்றும் மண்டல அளவிலான கொள்கையினை வகுப்பதற்கு இந்த ஒலி மாசு கண்காணிப்பு ஆணையம் பேருதவியாக இருக்கும்.விரைந்த நகர்மயமாதல், தொழில்மயமாதல் ஆகியவற்றின் பக்க விளைவுகளாக நிலம், நீர், காற்று, ஒலி ஆகியவற்றில் கட்டுக்கடங்காத வகையில் மாசு நிகழ்ந்து கொண்டிருக்கிறது. 

இதன் தீவிரத்தை கட்டுப்படுத்தவும், தொடர்ந்து கண்காணிக்கவும் ஒருங்கிணைந்த சட்டம் மற்றும் நிர்வாக முறை அவசியமாகிறது.

இந்தியாவின் மென்பொருள் தயாரிப்பில் முக்கியமான நகரமாக கருதப்படும் பெங்களூருவில் ஒலி மாசு மற்றும்சூழல் மாசு ஆகியவற்றின் காரணமாக ஒவ்வொரு ஆண்டும் 10 போக்குவரத்து காவலர்கள் இதயநோயால் பாதிக்கப்பட்டு இறக்கின்றனர். தற்போது நகருக்குள் ஓடும் வாகனங்களின் எண்ணிக்கை 35 லட்சத்தைத்தாண்டிவிட்டன. 
பெங்களூர் நகருக்குள் அலுவல் நாட்களில் போக்குவரத்து நெரிசல் என்பது தவிர்க்கவே இயலாத ஒன்றாகிவிட்டது. போக்குவரத்து ஒழுங்குபடுத்தும் பணியில் மட்டும் ஏறக்குறைய மூவாயிரம் காவலர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். 

வாகனங்களின் இடைவிடாத ஒலி, தொடர் இரைச்சல், பரபரப்பு ஆகியவற்றால் மூச்சுவிடுதலில் கோளாறு, காதுகேளாமை, மந்தம், தூக்கமின்மை, மன அழுத்தம், இரத்த அழுத்தம் போன்ற உடற்கோளாறுகள் இயல்பாகிவிட்டன.

போக்குவரத்தினை ஒழுங்கு செய்யும் காவலர்களுக்கே இந்த பாதிப்பென்றால், ஒலி மாசு நிகழும் இடங்களுக்கு அருகே வாழ்கின்ற பொதுமக்களின் நிலை சொல்லி தெரியவேண்டியதில்லை. 

நகர்ப்புற வாகனங்கள் 100 டெசிபலுக்கும் மேலான ஒலியை எழுப்புவதால், போக்குவரத்து காவலர் உள்ளிட்ட பொதுமக்கள் பெரும் இன்னலுக்கு ஆளாகின்றனர். 
இது பெங்களூருக்கு மட்டுமல்ல, சென்னை உள்ளிட்ட இந்தியாவிலுள்ள பெரும்பாலான மாநகராட்சிகளிலும் இதே நிலைதான். 

போக்குவரத்து வாகனங்களில் பயன்படுத்தப்படும் மின்னனு ஒலிப்பான்களை, அவரவர் விருப்பம்போல் பயன்படுத்துவதை உடனடியாக தடை செய்து, 80லிருந்து 85 டெசிபெலுக்கு மேற்படாத அளவினை கொண்ட மின்னனு ஒலிப்பான்களை பயன்படுத்த கடுமையான சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வது அவசியம். 
தொழிற்சாலை பகுதிகளில் 75 டெசிபெல், 
வணிகப்பகுதிகளில் 65 டெசிபெல், 
குடியிருப்பு பகுதிகளில் 55 டெசிபெல், 
அமைதிப்பகுதி என அறிவிக்கப்பட்ட இடங்களில் 50 டெசிபெல் என மாசுக்காட்டுப்பாட்டு வாரியம் ஒலியின் அளவை இடத்திற்கேற்ப இசைவளித்துள்ளது. 

இந்த அளவினை மீறும் தனிநபர்களையும், அமைப்புகளையும் கடும் தண்டனைக்கு உள்ளாக்க வேண்டும்.

கிராமப்புறங்களைவிட நகர்ப்புறங்களில் ஒலி மாசு அளவு அதிகரித்துக்கொண்டே போகிறது. 
========================================================================================
இன்று,
ஜூன் -20.
  • உலக அகதிகள் தினம்
  • உவமைக் கவிஞர் சுரதா காலமானார் (2006)
  • அர்ஜெண்டீனா கொடி நாள்
  • விக்கிமீடியா அமைப்பு உருவானது(2003)
  • இந்திய சிப்பாய் கழகம் முடிவுக்கு வந்தது(1958)
  • மாலி, செனகல் ஆகிய நாடுகள் பிரான்சிடம் இருந்து விடுதலை அடைந்தன(1960)
========================================================================================
ஜூன் 

ஜூன் மாதம்  கிரிகரி நாட்காட்டியின்படி ஆறாவது மாதமாகும். ரோமானியர்கள் தங்கள் ஜூபிடர் கடவுளின் மனைவியாகக் கருதிய ‘ஜூனோ’ என்பவரின் பெயரிலிருந்து ஜூன் மாதம் பிறந்தது.

கிரேக்கர்களின் இளமைத் தெய்வமான மெர்க்குரிக்கு ‘ஜூனியஸ்’ என்ற பெயருண்டு. இந்தப் பெயரில் இருந்துதான் ஜூன் மாதம் பெயர் பெற்றது என்று சொல்பவர்களும் உண்டு. இம்மாதத்துக்கு 30 நாட்கள் என்பது கணக்கு.

முக்கிய தினங்கள்

5 உலகச் சுற்றுச்சூழல் தினம்
8 பெருங்கடல் தினம்
12 குழந்தைத் தொழிலாளர் எதிர்ப்பு தினம்
14 ரத்த தானம் செய்வோர் தினம்
16 தந்தையர் தினம்
17 பாலைவனம் மற்றும் வறட்சியைக் கட்டுப்படுத்தும் தினம்
20 உலக  அகதிகள் தினம்
21 உலக இசை தினம்
23 ஒலிம்பிக் தினம்
23 பொதுச் சேவை தினம்
27 உலக நீரிழிவு தினம்

முக்கிய நிகழ்வுகள்

2,2003 - ஐரோப்பிய நாடுகள் கூட்டாகத் தயாரித்த ‘மார்ஸ் எக்ஸ்பிரஸ்’ என்ற விண்கலம், செவ்வாய்க் கிரக ஆராய்ச்சிக்காக ஐரோப்பிய விண்வெளி ஆய்வு மையத்திலிருந்து செலுத்தப்பட்டது.

3,1989 - சீனாவில் டியானென்மென் சதுக்கத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களை ராணுவம் தாக்கியது. ஆயிரக்கணக்கானோர் இறந்தனர்.
‘புரட்சி’ அடக்கப்பட்டதாக சீன அரசு அறிவித்தது.

6,1971 - ரஷ்யாவின் சோயூஸ் 11 விண்கலம் பைகானூர் விண்வெளி மையத்திலிருந்து புறப்பட்டது.

7,1979 - இந்தியாவில் ரஷ்ய உதவியுடன் இஸ்ரோவில் ‘பாஸ்கரா’ விண்கலம் விண்ணில் ஏவப்பட்டது.
8,1975 - ரஷ்யாவின் வெனேரா 9 - வெள்ளி கிரகத்துக்கு அனுப்பப்பட்டது.

10,1940 - இத்தாலி நாடு, இரண்டாம் உலகப் போரில் குதித்தது

12,1964 - நெல்சன் மண்டேலாவுக்கு ஆயுள் தண்டனை (27 ஆண்டுகள் சிறைவாசம்) விதிக்கப்பட்டது.

14,2013 - இந்தியாவில் 160 ஆண்டு காலமாக செயல்பட்டு வந்த தந்தி சேவை நிறுத்தப்பட்டது.

17,1950 - உலகின் முதல் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை அமெரிக்காவில் நடந்தது.

17,1911 - மணியாச்சி ரயில் நிலையத்தில் வாஞ்சிநாதன், கலெக்டர் ஆஷ் துரையை சுட்டுக் கொன்று, தானும் சுட்டுக்கொண்டு இறந்தார்.

18,1981 - அமெரிக்காவின் கலிபோர்னியாவில், மருத்துவ ஆய்வாளர்கள் எய்ட்ஸ் நோயைக் கட்டுப்படுத்த மருந்து கண்டுபிடித்ததை முறைப்படி உலகுக்கு அறிவித்தனர்.

19,1981 - பிரெஞ்சு கயானாவிலிருந்து இந்தியாவின் ஆப்பிள் தொலைத்தொடர்பு செயற்கைக் கோள் விண்ணில் வெற்றிகரமாக ஏவப்பட்டது.

பிறந்த தினங்கள்

3,1924 - கலைஞர் மு.கருணாநிதி, முன்னாள் தமிழக முதல்வர்.

3,1890 - பாபுராவ் பெயின்டர், முதன்முதலாக மூவி கேமரா மூலம் படம் எடுத்தவர்.

5,1896 - காயிதே மில்லத் 
7,1811 - சர்.ஜேம்ஸ் யங் சிம்சன், குளோரோஃபார்ம் (மயக்க மருந்து) கண்டவர்.

10,1931 - எம்.எஸ்.கோபால கிருஷ்ணன், வயலின் வித்வான்.

12,1895 - ஏ.நேசமணி, கன்னியாகுமரி மாவட்டம் தமிழகத்துடன் இணைய பாடுபட்டவர்.

14,1928  - புரட்சியாளர் சே குவேரா

16,1923 - டி.ஆர். மகாலிங்கம், தமிழ்த் திரையுலக நடிகர், பாடகர்.

18,1908 - கக்கன், முன்னாள் தமிழக அமைச்சர்.

19,1947 - சல்மான் ருஷ்டி, எழுத்தாளர்.

21,1953 - பெனாசிர் பூட்டோ, பாகிஸ்தானின் முன்னாள் பெண் பிரதமர்.

24,1927 - கவிஞர் கண்ணதாசன்.

25,1931 - வி.பி.சிங், முன்னாள் பிரதமர்.

26,1906 - ம.பொ. சிவஞானம், முன்னாள் சபாநாயகர்; திருத்தணி தமிழகத்துடன் இணையக் காரணமான சுதந்திரப் போராட்ட வீரர்.

27,1838 - பங்கிம் சந்திர சட்டோபாத்தியாய, வங்கக் கவிஞர்.

27,1880- ஹெலன் கெல்லர், அமெரிக்கா பெண் எழுத்தாளர், பட்டம் பெற்ற முதல் பார்வையற்றவர்.

நினைவு நாட்கள்

1,1968 - ஹெலன் கெல்லர்.

2,1988 - ராஜ் கபூர், இந்தித் திரைப்பட நடிகர், தயாரிப்பாளர்.
வாஞ்சிநாதன்
3,1657 - வில்லியம் ஹார்வி, உடலில் ரத்த ஓட்டம் பற்றிக் கண்டறிந்த இங்கிலாந்துக்காரர்.

17,1911 - வாஞ்சிநாதன், ஆஷ் துரையை சுட்டுக் கொன்ற சுதந்திரப் போராட்ட வீரர்.

17,1858 - ஜான்சி ராணி (ராணி லட்சுமிபாய்)

21,1906 - கனகசபை பிள்ளை, தமிழ் ஆராய்ச்சியாளர்.

26,1827 - சாமுவேல் கிராம்ப்டன், நூல் நூற்கும் இயந்திரம் கண்டறிந்தவர்.

27,2008 - சாம் மானெக்‌ஷா, முன்னாள் ராணுவத் தளபதி.

28,1972 - தண்டபாணி தேசிகர், கர்நாடக இசைப் பாடகர்.

30,1975 - விந்தன் (கோவிந்தன்), தமிழ் எழுத்தாளர், நாவலாசிரியர்.

ஜூன் மாதம் விடுதலை தினம் கொண்டாடும் நாடுகள்


4 டோங்கா,
10 போர்ச்சுகல்,
12 பிலிப்பைன்ஸ்,
17 ஐஸ்லாந்து,
19 குவைத்,
25 மொஸாம்பிக்,
26 மடகாஸ்கர்,
29 சீஷெல்ஸ்.

                                                                                                      - சீ.சுப்பிரமணியன்,
======================================================================================