உங்கள் கணிப்பொறியின் அடிப்படை அறிக்கை,

உங்கள் கம்ப்யூட்டரில் உள்ள ராம் மெமரி எவ்வளவு? 
அதன் ஹார்ட் டிஸ்க் மற்றும் வேக அளவு என்ன? 
என்று கேட்டால் பலருக்கு இந்த கேள்விகளுக்கு விடை தெரியாது. 

பல ஆண்டுகள் பயன்படுத்தும் ஒருவர், தன் கம்ப்யூட்டரின் தொழில் நுட்ப அம்சங்கள் குறித்து பெரும்பாலும் அறியாதவராகவே இருக்கிறார். 
இவை தெரிந்து கொண்டால் தான், கம்ப்யூட்டரைப் பயன்படுத்த முடியும் என்பதில்லை. இருந்தாலும், சில வேளைகளில், குறிப்பாகக் கம்ப்யூட்டரின் செயல்பாட்டு வேகத்தில் மாறுதல் ஏற்பட்டாலோ, அதில் தொடர்ந்து பைல்களை தேக்கி வைக்க முடியாமல், ஒரு ட்ரைவில் இடம் இல்லாத நிலை ஏற்பட்டாலோ, நாம் அப்போது இந்த தகவல்களைத் தெரிந்து கொள்ள வேண்டியதுள்ளது.
சில வேளைகளில், ஏதேனும் அப்ளிகேஷன் ஒன்றை நம் கம்ப்யூட்டரில் நிறுவ முயற்சிக்கையில், கேம் ஒன்றைத் தரவிறக்கம் செய்திட எண்ணுகையில், அதன் தளத்தில், நம் கம்ப்யூட்டரின் செயல்பாடு 32 பிட் அல்லது 64 பிட், இவற்றில் எது எனக் கேள்வி ஒன்றைச் சந்திக்கும்போது, அதனை எங்கே அறிந்து கொள்வது என்ற திகைப்பு நம்மிடம் ஏற்படுகிறது. 
இது போன்ற இக்கட்டான சூழ்நிலைகளைச் சமாளிக்க, நம் கம்ப்யூட்டர் குறித்த அனைத்து தகவல்களையும் தெரிந்து வைத்திருக்க வேண்டியது அவசியம். கம்ப்யூட்டர் திடீரென்று இயங்காமல் போனால், அதன் எந்த உறுப்பு வேலை செய்திடாமல் உள்ளது, 
அதன் பெயர் என்ன, திறன் என்ன என்று அறிந்து கொண்டால் தான், நாம் அது குறித்து, அதனைச் சரி செய்திட அழைப்பவரிடம் கூற முடியும்.
 எனவே, நம் 'சிஸ்டம் குறித்த தகவல்களை' எப்படி தெரிந்து கொள்வது என்று இங்கு காணலாம். 
விண்டோஸ் 10 இயக்க முறைமையில், நம் கம்ப்யூட்டர் சிஸ்டம் குறித்த தகவல்களை, BIOS விபரம், கம்ப்யூட்டர் என்ன மாடல், ப்ராசசர் என்ன, ஹார்ட் ட்ரைவ் எந்த நிறுவனத்தினுடையது, அதன் கொள்ளளவு, ஆப்பரேட்டிங் சிஸ்டம் மற்றும் சார்ந்த பிறவற்றை நாம் எளிதாக அறிந்து கொள்ளும் வழிகள் உள்ளன. 
இதனை அறிய நாம் பயன்படுத்தும் டூல் பொறுத்து, நமக்குக் கிடைக்கும் தகவல்கள் சற்று மாறுபாடாக இருக்கும்.
முதலில் செட்டிங்ஸ் அப்ளிகேஷன் வழியாக, சிஸ்டம் குறித்த தகவல்களை எப்படி அறிந்து கொள்வது எனப் பார்க்கலாம். இந்த அப்ளிகேஷன், நம் கம்ப்யூட்டரின் ஹார்ட்வேர் மற்றும் சாப்ட்வேர் குறித்து அனைத்து தகவல்களையும் நமக்குத் தரும். 
முதலில் சில அடிப்படைத் தகவல்கள் அறிய, கீழே கொடுத்துள்ளபடி செயல்படவும்.

1. Settings பிரிவினை முதலில் திறக்கவும். இதற்கு விண்டோஸ் கீயில் அழுத்தி, கிடைக்கும் மெனுவில், கீழிருந்து இரண்டாவதாக உள்ள ஐகானில் கிளிக் செய்திடவும். அல்லது தேடல் கட்டத்தில், Settings என டைப் செய்து, கிடைக்கும் விடைப் பட்டியலில் முதலில் உள்ளதில் கிளிக் செய்திடவும்.

2. அடுத்து System என்பதில் கிளிக் செய்திடவும். 

3. தொடர்ந்து, About என்பதில் கிளிக் செய்திடுக.

4. இப்போது கிடைக்கும் Settings பக்கத்தில், உங்கள் கம்ப்யூட்டரில் இயங்கும் விண்டோஸ் 10 இயக்க முறைமையின் சரியான பெயர், அதன் அமைப்பு எண் (Build Number) ஆகியவற்றைக் காணலாம். இதில் அமைப்பு எண், ஒவ்வொரு முறை, மைக்ரோசாப்ட், இயக்க முறைமை மேம்படுத்தலுக்கான பைல்களை அளிக்கும் போதெல்லாம் மாறுபடும். 

5. இங்கு மேலும் கம்ப்யூட்டரின் சிஸ்டம் வகை, ப்ராசசர் குறித்த தகவல் மற்றும் கம்ப்யூட்டரில் இணைக்கப்பட்டுள்ள மெமரி வகை, கொள்ளளவு குறித்தும் அறிந்து கொள்ளலாம்.

இதே தகவல்களை, Control Panel > System எனச் சென்றும் அறிந்து கொள்ளலாம்.

மேலே தரப்பட்டுள்ள வழிகளில் நமக்குக் கிடைக்கும் கம்ப்யூட்டர் குறித்த தகவல்கள், கம்ப்யூட்டர் சிஸ்டத்தின் முக்கிய பிரிவுகள், குறிப்பாக ஹார்ட்வேர் குறித்த அடிப்படைத் தகவல்களாக இருக்கும். சிஸ்டம் குறித்த ஹார்ட்வேர் மற்றும் சாப்ட்வேர் ஆகியவை குறித்த, அனைத்து தகவல்களும் அடங்கிய தகவல் தொகுப்பு வேண்டும் எனில், நாம் System Information என்னும் டூலைப் பயன்படுத்தலாம். இது விண்டோஸ் 10 இயக்க முறைமையில் புதிதாகத் தரப்பட்டுள்ள டூல் அல்ல. முந்தைய விண்டோஸ் பதிப்புகளிலும் தரப்பட்டது. 

சிஸ்டம் இன்பர்மேஷன் டூல் பெற,

1. முதலில் ஸ்டார்ட் மெனு செல்லவும்.
2. பின்னர், msinfo32 அல்லது System Information எனத் தேடல் கட்டத்தில் கொடுத்து என்டர் அழுத்தவும். இந்த டூல் திறக்கப்படும்.
3. இந்த டூல் திறக்கப்பட்டவுடன், கம்ப்யூட்டர் சிஸ்டம் குறித்த தகவல்கள் அனைத்தும் System Summary என்ற தலைப்பில் தரப்படும். இதில் சிஸ்டம் மாடல், சிஸ்டம் வகை, ப்ராசசர், பயாஸ் (BIOS) தகவல்கள், இறுதியாக அப்டேட் செய்யப்பட்ட நாள் மற்றும் கம்ப்யூட்டரில் இன்ஸ்டால் செய்யப்பட்ட ராம் நினைவகம் என அனைத்து தகவல்களும் தொகுப்பாகக் கிடைக்கும். 
4. இங்கு கம்ப்யூட்டரில் உள்ள கிராபிக்ஸ் கார்ட் குறித்த தகவல் இருக்காது. 
ஆனால், அதனை நீங்கள் அறிய வேண்டுமானால், Components என்பதை விரித்து, அதில் Display என்பதைத் தேர்ந்தெடுத்து அறியலாம்.
5. மாறாக, தேடல் கட்டத்திலும் அறியலாம். ஆனால், நாம் தேடுவதைச் சரியாகவும், துல்லிதமாகவும் தர வேண்டும். ஏனென்றால், இது குரோம் அல்லது பிங் தேடல் டூல் மேற்கொள்ளும் தகவல் வழி அல்ல.

System Information டூலைப் பொறுத்த வரை, ஓர் ஆர்வமூட்டும் தகவல் உண்டு. 
இது தானாகவே, தான் தரும் தகவல்களை ஓர் அறிக்கையாகத் தயாரித்து வழங்கும். நம் கம்ப்யூட்டர் சிஸ்டம் குறித்த அனைத்து தகவல்களும் கிடைக்கும். 
இது போன்ற அறிக்கை நமக்குப் பல நேரங்களில் உதவும். குறிப்பாக, நம் கம்ப்யூட்டரில் உள்ள ஹார்ட்வேர் பிரிவில் ஏதேனும் பழுது ஏற்பட்டு, கம்ப்யூட்டர் இயங்க மறுத்தால், இந்த அறிக்கை நமக்கு உதவும். எனவே, இந்த அறிக்கையினை உருவாக்கி, வேறு ஒரு ப்ளாஷ் ட்ரைவில் அல்லது கம்ப்யூட்டரில் சேவ் செய்து வைப்பது நல்லது. 
அச்செடுத்த ஆவணமாகவும் வைத்துக் கொள்ளலாம்.

இந்த அறிக்கையை உருவாக்கி வைத்துக் கொள்ள, கீழே கொடுத்துள்ளபடி செயல்படவும்.

1. System Information டூலைத் திறக்கவும்.
2. நீங்கள் தேடி, பைலாக, அறிக்கையாக அமைக்க வேண்டிய தகவல் பிரிவினைத் தேர்ந்தெடுக்கவும். எடுத்துக்காட்டாக, System Summary என்பதைத் தேர்ந்தெடுத்தால், கம்ப்யூட்டர் குறித்த ஒவ்வொரு தகவலையும் நீங்கள் பெற்று, பைலுக்குக் கொண்டு செல்வீர்கள். அல்லது, கம்ப்யூட்டரின் கிராபிக் கார்ட் குறித்த தகவல்களை மட்டும் பெற எண்ணினால், Display என்பதை மட்டும் தேர்ந்தெடுக்கவும்.
3. அடுத்து File என்பதில் கிளிக் செய்திடவும்.
4. தொடர்ந்து, Export என்பதில் கிளிக் செய்திடவும்.
5. இப்போது, இந்த பைல் எந்த இடத்தில் சேவ் செய்யப்பட வேண்டும் என்பதைத் தேர்ந்தெடுக்கவும். 
6. இதனை One Drive போன்ற க்ளவ்ட் ட்ரைவில் பதிந்து வைத்தால், இந்த குறிப்பிட்ட கம்ப்யூட்டர் இயங்காமல் போனால், வேறொரு கம்ப்யூட்டரிலிருந்து இந்த அறிக்கையினைப் பெறலாம். அல்லது இணைக்கப்பட்டுள்ள ப்ளாஷ் ட்ரைவ் போன்றவற்றில் பதிந்து வைக்கவும்.
7. இந்த பைலை உணரும் வகையில், சரியான பெயர் ஒன்றைக் கொடுத்து, Save என்பதில் கிளிக் செய்து, இந்த வேலையை முடிக்கவும்.

இந்த அறிக்கை, ஒரு டெக்ஸ்ட் பைலாக சேவ் செய்யப்படும். இதனை எந்த டெக்ஸ்ட் எடிட்டரிலும் படிக்கலாம். உங்கள் போனில் கூட படிக்கலாம்.

நம் கம்ப்யூட்டர் சிஸ்டம் குறித்த தகவல் அறிக்கை என்பது, அதன் அனைத்து செயல் படும் பகுதிகள் குறித்த தகவல்களாகும். கம்ப்யூட்டருக்கான செயலிகளைப் பெறுகையிலும், அதில் ஏற்படும் சிக்கல்களைத் தீர்க்கையிலும், இந்த தகவல்கள் நமக்குத் தேவைப்படும்.

எனவே, மேலே குறிப்பிட்ட செயல்முறைகளைக் கையாண்டு, உங்கள் கம்ப்யூட்டர் சிஸ்டம் குறித்த தகவல் அறிக்கை ஒன்றைத் தயார் செய்து வைத்துக் கொள்ளவும்.
                                                                                                                            நன்றி:தினமலர்,கணினிமலர்.
==========================================================================================
ன்று,
மே-10.
  • சிப்பாய்கள் புரட்சி   துவங்கியது(1857)
  • ருமேனியா, துருக்கியிடம் இருந்து விடுதலை பெற்றது(1877)
  • நெல்சன் மண்டேலா, தென்னாப்பிரிக்காவின் முதலாவது கறுப்பினத் தலைவரானார்(1994)
  • ============================================================================================
“தண்ணீர் காப்போம்! தலைமுறை காப்போம்!”
என் உயிரோடு கலந்துவிட்ட தலைவர் கலைஞர் அவர்களின் அன்பு உடன்பிறப்புகளுக்கு, உங்களில் ஒருவன் எழுதும் தமிழக நீர் மேலாண்மை செயல்பாட்டுக்கான அழைப்பு மடல்
நீரின்றி அமையாது உலகு என்பது அய்யன் திருவள்ளுவர் வாக்கு. வரப்புயர நீர் உயரும் என்றுதான் மக்களைக் காக்கும் மன்னனை வாழ்த்தினார் அவ்வையார். மக்கள் நலனில் அக்கறையுள்ள எவர் ஒருவரும் நீர் நிலைகளைப் பராமரிக்கவும் மேம்படுத்தவும் அக்கறை செலுத்த வேண்டியது காலத்தின் கட்டாயமாக இருக்கிறது. பொதுவாழ்வில் இருப்போர் இதில் ஈடுபடுவதன் மூலம் அவர்களுக்குத் தேவைப்படும் தண்ணீருக்கும் சேர்த்தே பாடுபடுகிறார்கள் என்றே கருதவேண்டும். "ஆகாரத்திற்காக அழுக்கைச் சாப்பிட்டு தடாகத்தை சுத்தம் செய்கிறதே மீன்” என்று பராசக்தி படத்தில் தலைவர் கலைஞர் அவர்கள் எழுதிய உரையாடல் வரிகள் இன்றைய நிலையில் நீர் மேலாண்மைக்கு மிகவும் பொருத்தமாக இருக்கிறது.
தனி மனிதர்கள் தொடங்கி, பொதுநல அமைப்புகள் வரை அனைத்துத் தரப்பிலும் தமிழகத்தில் நிலவும் வறட்சியையும் குடிநீர்ப்பஞ்சத்தையும் போக்க இயற்கை வளங்களான நீர்நிலைகளைப் பராமரித்து பாதுகாக்க வேண்டும் எனக் குரல் கொடுப்பதுடன் அதற்கான செயல்பாடுகளிலும் இயன்ற அளவில் ஈடுபட்டு வருகிறார்கள். ஆனால், அதிமுக அரசின் நிர்வாக சீர்கேடுகளால் கடந்த ஆறு வருடங்களாக தமிழகத்தின் ஆறுகள் எல்லாம் பாலை நிலங்களாக, அதுவும் மணல்கூட இல்லாத பாலை நிலங்களாக மாற்றப்பட்டிருக்கின்றன என்பது வெட்கித் தலைகுனிய வேண்டிய வேதனையாகும்.
தமிழகத்தை ஆளும் அ.தி.மு.க அரசின் வேளாண்துறை, பொதுப்பணித்துறை மற்றும் ஊராட்சி மற்றும் ஊரக வளர்ச்சித் துறை போன்றவற்றில் நடைபெறும் ஊழல் முறைகேடுகளாலும் இன்றைக்கு தமிழக மக்கள் குடிநீருக்காகவும், விவசாயிகள் பாசனத்திற்கு நீர் கிடைக்காமலும் தவிக்க வேண்டிய அபாயம் ஏற்பட்டிருக்கிறது. தமிழகத்தில் 34 ஆறுகளும், 89 அணைகளும் உள்ளன. அரசின் பொதுப்பணித்துறையின் கீழ் 39 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குளங்களும் நீர் ஆதாரங்களாக திகழ்கின்றன. கிராமங்களின் குடிநீர் தேவையை நிறைவேற்றும் 70 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஊரணிகள், குட்டைகள் ஊரக வளர்ச்சித் துறையின் கட்டுப்பாட்டில் இருக்கின்றன.
தமிழகத்தின் நெடுங்கால நீர் மேலாண்மைக்கு எடுத்துக்காட்டான இவற்றில் பல ஏரிகள் இன்றைக்கு இருக்கும் இடம் தெரியாமலேயே ஆக்கிரமிக்கப்பட்டு விட்டன. மாநிலத்தின் வளர்ச்சி சார்ந்த திட்டங்களுக்காக சில நீர் நிலைகளில் கட்டடங்கள் கட்டப்பட்டுள்ளன என்பது ஒரு புறமிருக்க, தண்ணீர் தேவைக்கும் நிலத்தடி நீர் அதிகரிப்பதற்கும் காரணமான ஊரணிகளையும், குட்டைகளையும் பராமரிக்க அதிமுக அரசு முற்றிலும் தவறி விட்டது. பருவமழை பொய்த்துள்ள நிலையில், இவற்றை தூர் வாருவது குறித்தோ அல்லது பாதுகாப்பது குறித்தோ அதிமுக அரசு கடந்த ஆறு வருடத்தில் ஒரு துரும்பைக் கூட தூக்கிப் போடவில்லை.
கடந்த ஐந்து வருட அதிமுக ஆட்சியில் பொதுப்பணித்துறையின் சார்பில் நீர் மேலாண்மைக்காக 3500 கோடி ரூபாய் செலவிடப்பட்டுள்ளதாக கணக்கிடப்பட்டிருக்கிறது. அந்தப் பணிகள் உருப்படியாக நடைபெற்றிருந்தால், கடந்த 2015 டிசம்பரில் பெய்த கனமழையினால் கிடைத்த தண்ணீரை கடலில் வீணாகக் கலக்காமல் சேமித்து வைத்திருக்க முடியும். அ.தி.மு.க அரசு உருவாக்கிய செயற்கை பெருவெள்ளத்தால் சென்னை, காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்ட மக்கள் பேரழிவைச் சந்தித்த கொடூர நினைவுகள் இன்னும் மறையாத நிலையில், அவர்கள் உள்பட தமிழகத்தில் வாழும் பலரும் கடுமையான குடிநீர்ப் பஞ்சத்தை இப்போது சந்தித்துக் கொண்டிருப்பதிலிருந்தே அ.தி.மு.க அரசின் நிர்வாக லட்சணத்தை காண முடியும்.
தமிழகத்தில் தொடர்ச்சியான நடைபெறும் மணல் கொள்ளையைத் தடுக்கும் வகையில் நீதிமன்றங்கள் உத்தரவுகள் பிறப்பித்தாலும் அதை நிறைவேற்ற அதிமுக அரசு தயாராக இல்லை. அரசின் அலட்சியப் போக்கினாலும் இயற்கையின் பருவநிலை மாறுபாடுகளாலும் தமிழகம் மிகப்பெரிய குடிநீர் பிரச்சினையை சந்தித்து வருகிறது. தாய்மார்கள் காலிக்குடங்களுடன் போராடும் வேதனைக் காட்சிகளை மாநிலத்தின் பல பகுதிகளிலும் காண்கிறோம்.
தி.மு.கழக அரசு ஆட்சியில் இருந்தபோது அன்றைய முதல்வரான தலைவர் கலைஞர் அவர்கள் தமிழகத்தின் எதிர்கால நலன் கருதி, தொலைநோக்குப் பார்வையுடன் எப்படி செயல்பட்டார் என்பதை அவரது உடன்பிறப்புகளான நீங்கள் அறிவீர்கள். உங்களில் ஒருவனான நானும் அறிவேன். மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்புத் திட்டம் மூலம் ஏரிகள், குளங்களை தூர்வாரும் பணியை தீவிரமாக செயல்படுத்தியது. 1996-2001 ஆட்சிக்காலத்தில் “நமக்கு நாமே” திட்டத்தின் கீழ் ஏரி, குளங்களை சீரமைக்க திட்டம் வகுத்து செயல்படுத்தியது. காவிரி டெல்டா மாவட்டம் முழுவதும் பாசனத்திற்கான வாய்க்கால்களை கழக அரசு தூர் வாரியது போல எந்த அரசும் செய்யவில்லை என்பதை அப்போது மாற்றுக்கட்சியினரும் ஒப்புக்கொண்டனர் என்பது வரலாறு.
இன்றோ, அ.தி.மு.க அரசின் அலட்சியத்தால், தமிழ்நாட்டின் முக்கிய ஆறுகள் மூலமாக ஆண்டுதோறும் கடலில் கலக்கும் நீரின் அளவு மட்டும் 259 டி.எம்.சி.க்கு மேல் இருக்கிறது என்று ஒரு புள்ளிவிவரம் கூறுகிறது. இதுபோன்ற நிலையைத் தவிர்க்கத்தான், 2006-2011ல் தலைவர் கலைஞர் அவர்கள் முதலமைச்சராக இருந்த போது மாநிலத்திற்குள் ஓடும் நதி நீர் இணைப்புத் திட்டங்களை வடிவமைத்து முதலில் காவிரி- குண்டாறு நதி நீர் இணைப்பு, பிறகு தாமிரபரணி- நம்பியாறு நதி நீர் இணைப்பு போன்ற தொலை நோக்குத் திட்டங்களை துவக்கி செயல்படுத்தினார்.
ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் திட்டம், ராமநாதபுரம் காவேரி குடிநீர் திட்டம், வேலூர் கூட்டுக் குடிநீர் திட்டம், மீஞ்சூர் கடல் நீரை குடிநீராக்கும் திட்டம் என்று பல்வேறு குடிநீர் திட்டங்களை செயல்படுத்தினார் தலைவர் கலைஞர். அத்தகைய நல்ல திட்டங்களை தொடர்ந்து செயல்படுத்த தயக்கம் காட்டி-முடக்கிப்போடுவதே அ.தி.மு.க அரசின் வழக்கமாக இருந்து வருகிறது.
மக்கள் நலனில் அக்கறை காட்டாத அதிமுக அரசின் நடவடிக்கைக்காக காத்திருந்தால் இனி பலனில்லை என்பது மட்டுமல்ல- விவசாயிகளும், பொதுமக்களும் படும் இன்னல்களை தீர்க்க வேறு வழியில்லை என்ற நிலையில், "நமக்கு நாமே" என்ற முறையில், நமது தமிழக மக்களின் தாகம் போக்கவும், தமிழகத்தில் வறண்டு கிடக்கும் வயல்களின் வயிறு நிறையவும், அதன் காரணமாக விவசாயிகளின் உயிரைப் பாதுகாக்கவும் கருதி சென்னை தெற்கு மாவட்ட கழகத்தின் சார்பில் சட்டமன்ற உறுப்பினர் மா.சுப்பிரமணியத்தின் சீரிய முயற்சியில் சைதாப்பேட்டையில் நேற்று (7-5-2017) கோதண்டராம கோவில் குளத்தைத் தூர் வாரும் பணியைத் தொடங்கினேன்.
வெட்டி வா என்றால் கட்டி வரும் ஆற்றல் மிக்கவர்கள் தலைவர் கலைஞர் அவர்களின் உடன்பிறப்புகள் என்பதை உங்களில் ஒருவனாகக் களம் காணும் நான் அறிவேன். தமிழகத்தில் ஆங்காங்கு உள்ள குட்டைகள், குளங்கள், ஏரிகள், கண்மாய்கள், ஆறுகள் ஆகியவற்றை மேம்படுத்தவும், பாதுகாத்திடவும் கழகத்தினர் ஆக்கப்பூர்வமான செயல்பாடுகளை மேற்கொள்ள வேண்டும் என்பது எனது அன்பு வேண்டுகோள்.
மாவட்டக் கழகச் செயலாளர்களில் தொடங்கி நகர-ஒன்றிய-பேரூர்-கிளைச் செயலாளர்களும் மற்ற நிர்வாகிகளும் பொதுநல அமைப்புகளுடன் கழகத் தொண்டர்களையும், பொதுமக்களையும் இணைத்து, உரிய அனுமதியினைப் பெற்று இத்தகையப் பணிகளை மேற்கொள்ள வேண்டும். சொல்லால் அரசுக்கு விடுக்கப்படும் எச்சரிக்கையைவிட, இந்த செயல் கடும் எச்சரிக்கையாக அமையட்டும் அ.தி.மு.க. அரசுக்கு! தண்ணீரைக் காத்து, தலைமுறையைக் காக்கும் பணியில் இன்றே-இப்போதே களம் காண்பீர். தமிழகம் காப்பீர்.


                                                                                                                                             மு.க.ஸ்டாலின்.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

2025ல் தங்கம் விலை

வினேஷ் போகத் வென்றார்!

முடிவுக்கு வருகிறதா?