ஞாயிறு, 17 செப்டம்பர், 2017

"நீட்" டைத் தொடரும் நவோதயா,

நீட்டைத் தொடர்ந்து நவோதயா பள்ளிகள் குறித்த விவாதம் முன்னுக்கு வந்துள்ளது. 

இரண்டுமே மத்திய அரசின் அதிகாரக் குவிப்பை மேலும் அழுத்தமாக, வெளிப்படுத்தும் செயல் தான். 30 ஆண்டுகளுக்கு முன் ராஜீவ் காந்தி தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி அறிமுகம் செய்ததே புதிய தொழில் கொள்கை, புதிய ஜவுளிக் கொள்கை, புதிய கல்விக் கொள்கை ஆகியவை . ]
இவை அனைத்தும் ஒன்றுக்கு ஒன்று தொடர்புடையவை.

1830களில் மெக்காலே கல்வி முறையை அறிமுகம் செய்கிறபோது, சரியான நுகர்வுச் சந்தையை உருவாக்கும் நோக்கம் இருந்ததை வெளிப்படுத்தினர். 

“அந்நியப் பொருள்களைப் பெறுவதில் இந்தியர்களுக்கு தயக்கம் இருந்தது. ஆங்கிலக் கல்வியின் மூலமே இந்த தயக்கத்தைப் போக்கமுடியும்” என நியாயம் கற்பித்தனர். அதே போல் ஆங்கிலேய கிழக்கிந்திய கம்பெனிக்கு நிதி நெருக்கடி ஏற்பட்ட போது, “இங்கிலாந்தில் இருந்து அதிக சம்பளத்திற்கு அதிகாரிகளை அழைத்து வருவதைக் காட்டிலும், இந்தியாவிலேயே சில அதிகாரிகளை உருவாக்க முயற்சித்தனர். 

அதற்காக ஆங்கிலமும், கணிதமும் கற்ற சிறந்த நிர்வாகிகளை உருவாக்கினர்”என்பதே வரலாறு.

நவோதயாப் பள்ளிகள் 

இந்தியா முழுவதும் மாதிரிப்பள்ளிகளை (School of excellence) உருவாக்க அன்றைய மத்திய அரசு திட்டமிட்டது. 
400 மாவட்டங்களுக்கு 400 (589 பள்ளிகள் தற்போது) பள்ளிகள் என்றும், அங்கே உணவு, புத்தகம் உள்ளிட்ட அனைத்தும் இலவசம் என்றும், விடுதிக்கட்டணம் உள்ளிட்டு எதுவும் இல்லை என்றும், டி.வி, கம்ப்யூட்டர், நீச்சல் குளம் (தற்போது லேப்டாப், ஸ்மார்ட் போர்டு, டேப்லெட், வைபை என உயர்ந்துள்ளன) போன்ற வசதிகள் செய்து தரப்படும் என்றும், மற்ற பள்ளிகளை விடவும் அதிகத் திறன் பெற்றவராக இந்தப் பள்ளிகளின் ஆசிரியர் இருப்பார் என்றும், ஆறு முதல் 8 வரை தாய் மொழியும் அதன் பின் இந்தி மற்றும் ஆங்கில மொழிவழியில் கல்வி கற்பிக்கப்படும் என்றும், ஒரு பள்ளிக்கு 3 கோடி ரூபாய் ஆண்டுக்கு ஒதுக்கீடு செய்யப்படும் என்றும், நுழைவுத் தேர்வுகள் மூலம் 6ஆவது வகுப்பில் மாணவர்கள் சேர்க்கப்படுவார்கள் என்றும், 1986ஆம் ஆண்டில் அன்றைய மத்திய அரசு அறிவித்தது.

இன்று ஆண் மாணவர்களில் வறுமைக் கோட்டிற்கு மேல் உள்ளவர்களுக்கு 200 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படுவதாகத் தெரிகிறது. மற்றவர்களுக்கு இலவசம். 
இவை இன்று சொற்பமாகக் கூட தெரியலாம். அன்றைய நிலையில் பிரம்மாண்ட ஏற்பாடாக இது கருதப்பட்டது. தமிழ்நாடு தவிர இதர மாநிலங்கள் அமலாக்கின. இதிலிருந்தே இன்றைய பெரும்பான்மையான, ஐ.ஏ.எஸ்., உள்ளிட்ட பல்வேறு நிர்வாக அதிகாரிகளும், நீதிபதிகளும், தனியார் நிறுவன சி.இ.ஓக்களும் உருவாகியுள்ளனர். 
இந்த பெரும்பான்மையோர், இந்தியாவின் நவதாராளமய கொள்கை அமலாக்கத்தின் மூளையாக தீவிரமாக கடந்த 10 ஆண்டுகளில் அமலாக்கக் கூடியவர்களாக உள்ளனர். நவோதயா கல்வி நிலையங்களை இடதுசாரிகள், இந்திய மாணவர் சங்கம் போன்ற மாணவர் இயக்கங்கள் தீவிரமாக எதிர்த்தன. 
மேற்படி வசதிகளுடன் கூடிய பள்ளி ஆளும் வர்க்கத்தையும், வசதிகளற்ற இதர பள்ளிகள் ஆளப்படும் வர்க்கத்தையும் உருவாக்கும்; எனவே பாரபட்சமான கல்வி முறையை அரசே அமலாக்குவது அநியாயமானது; இந்தி மற்றும் ஆங்கிலம் வழிக்கல்வி கூடாது; மாநில மொழி, ஆங்கிலம் மற்றும் மாணவர் விரும்பும் மூன்றாவது மொழி வழிக்கல்வி என்ற வகையில் அது இருக்கலாம் எனவும் ஆலோசனை கூறினர்.

மாநிலங்களவையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரி கடந்த 12 ஆண்டுகளில் அதிகம் பயன்படுத்திய வார்த்தைகள், “ஒளிரும் இந்தியா, துயருறும் இந்தியா” என்பதாகும். 
இது நவோதயா பள்ளிகளின் செயல்பாட்டில் உண்மை என்பதை அறிய முடியும். இன்றைக்கும் கழிவறை இல்லை, வகுப்பறை இல்லை, ஆசிரியர் இல்லை என்பது போன்ற அவலங்களுடன் தான் பெரும்பான்மை பள்ளி மாணவர்கள் உள்ளனர். 

ஆனால் நவோதயா மாணவர்களுக்கு மட்டும் சகல வசதிகளும் செய்து தருவது, இந்திய அரசியல் சட்டத்திற்கு எதிரானது ஆகும்.நீதிமன்றங்கள், நவோதயா பள்ளிகள் என்ற ஒன்றை திறக்க வேண்டும் என வலியுறுத்துவது, சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்பதை நிராகரிப்பது ஆகும். 
எனவே தான் அன்று எஸ்.எப்.ஐ மற்றும் மாணவர் இயக்கங்கள் நவோதயா பள்ளிகள் என்ற முறையை அனைத்து மாணவர்களுக்குமான ஏற்பாடாக அமைத்துத் தர அரசு முன் வர வேண்டும் என வலியுறுத்தின.

வணிகமயமாக்கப்பட்ட கல்வி


பொதுக்கல்விக்கு நிதி ஒதுக்கீட்டை அதிகப்படுத்தாமல், அறிவிற்சிறந்த மையங்கள் (Centre of Excellence) என்ற பெயரில் சிற்சில கல்வி நிறுவனங்களுக்கு மட்டும் கூடுதலாக ஒதுக்கீடு செய்யும் வேலையை நீண்ட நாட்களாக அரசு செய்து வருகிறது. 
மாணவர்களிடையே பாரபட்சம் என்பதை பகிரங்கமாக செய்து வருகிறது. 1985இல் புதிய கல்விக் கொள்கை பேசப்பட்ட பின்னர், ‘‘கல்வியில் தனியாரின் ஆதிக்கம் அதிகரித்தது. 
1993இல் உச்சநீதிமன்றம், ஆந்திர மருத்துவ மாணவர் உன்னிகிருஷ்ணன் தொடுத்த வழக்கில் தீர்ப்பளிக்கிற போது, “கல்வி பெறும் உரிமையைத் தடுக்க முடியாது; அதை கட்டணம் நிர்ணயித்தல் மூலம் தடுப்பது கூடாது” என்றும் சுட்டிக்காட்டியது.குறிப்பிட்ட துறையில் நிபுணத்துவம் பெற்றவர்களை உருவாக்காமல் இருந்தால் எப்படி என்ற கேள்வி எழலாம். 
சமவாய்ப்பு அளிக்கப் பட்டவர்களில் இருந்து நிபுணத்துவத்திற்கு தேர்வு செய்யாமல், மலைக்கும் மடுவுக்கும் இடையில் போட்டி என்ற அறிவிப்பு ஆபத்தானது.

அதை திட்டமிட்டு நவோதயா பள்ளிகள் மூலம் அரசும், நாமக்கல் பள்ளிகள் மூலம் தனியாரும் செய்தனர்.அண்மையில் நீட் தேர்வு முடிவுகள் குறித்து பாஜக தலைவர் ஒருவர் கூறும்போது, நவோதயா பள்ளிகளை ஒப்பீடு செய்துள்ளார். நவோதயா பள்ளியில் படித்த நீட் தேர்வாளர்கள் 14,183 பேரில் 11,875 பேர் வெற்றி பெற்றுள்ளனர். இது பாரபட்சமானது இல்லையா என்ற சிந்தனை கூட பாஜக தலைமைக்கு இல்லை.
மேலும் ஒரு நவோதயா பள்ளிக்கு தற்போது 20 கோடி ரூபாய் ஒதுக்கப்படுகிறது என்பதையும் கணக்கில் கொண்டால், சமமற்ற வாய்ப்பு வழங்கி போட்டி நடத்துவதாக அரசு உள்ளது. இது அப்பட்டமான ஜனநாயக மறுப்பு என்பதால் தான் நவோதயாவை எதிர்க்க வேண்டியுள்ளது.இதே விவரங்கள் தனியார் பள்ளிகளின் வளர்ச்சிக்கும் பொருந்தும்.

சமச்சீர் கல்விக்கு எதிராக சிபிஎஸ்இ.

தமிழகத்தில் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் தீவிரமாக சமச்சீர் கல்வி குறித்த விவாதம்,போராட்டம் நடந்து 2011இல் அமலானது. கடந்த 5 ஆண்டுகளாக தமிழக பள்ளிகள் சமச்சீர் கல்வி பாடத் திட்டத்தைப் பின்பற்றுகின்றன. தங்களின் கட்டணக் கொள்ளைக்கு சமச்சீர் கல்வி தடையாக இருக்கும் என்பதனால், தனியார் பள்ளிகள் பெரும்பாலும் சி.பி.எஸ்.இ பாடத்திட்டத்திற்கு மாறின.

2010ஆம் ஆண்டில் மட்டும் தமிழகத்தில் இருந்து சி.பி.எஸ்.இ பாடத்திட்ட கல்வி நிலையங்கள் துவக்க அனுமதி கோரி 700 விண்ணப்பங்கள் தனியார் நிறுவனங்களால் சமர்ப்பிக்கப்பட்டன. இப்போது நீட் தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களில் கணிசமானவர்கள் சி.பி.எஸ்.இ மாணவர்களும், அதைத் தொடர்ந்து தனியார் பள்ளிகளிலும் தனியார் பயிற்சி மையங்களிலும் படித்த மாணவர்கள் தான்.

நவதாராளமயக் கொள்கை அமலாக்கத்தில், எலைட் (ELITE) என்று சொல்கிற ஆளும் அதிகார வர்க்கச் சிந்தனை கொண்ட நிபுணர்களைத் தேர்வு செய்யும் ஏற்பாடு அதிகரித்து வருகிறது. ஒருபிரிவினரை திறனிலும் அதிகத் திறன் பெற்றவர்களாக திட்டமிட்டு உருவாக்குவது என்பதே கல்விக் கொள்கையாக மாறுகிறது.

இதில் சமூகநீதி முற்றிலும் பாதிக்கப்படும். ஆட்சியாளர், அதிகார வர்க்கம், பெரும்பணக்காரர் ஆகிய ஆளும் வர்க்கத்தினர், வெகுசுலபமாக வாய்ப்பைப் பறித்துச் செல்ல முடியும். நகர்ப்புறங்களில் தேர்வுக்கான பயிற்சி மையங்கள் அதிகரிப்பதும், பல லட்சங்கள் செலவாகும் என்பதும் சாமானியர்களின் வாய்ப்பை அபகரிப்பதே ஆகும்.

கல்வி மாநிலப்பட்டியலில் இருந்து பொதுப்பட்டியலுக்கு எடுத்துச் செல்லப்பட்ட தும், அதைத் தொடர்ந்து பொது நுழைவுத் தேர்வுகள் அதிகமாவதும், பெரும்பான்மை மாணவர்கள் போட்டியில் இருந்து ஓரம் கட்டப்படுவதும், தொடர் நிகழ்வுகளாக பார்க்கப்பட வேண்டிய ஒன்று. அடுத்து சர்வதேசபல்கலைக் கழகங்கள் வர இருக்கின்றன.
 அதற்கு தயார் செய்யும் பள்ளிகள் என்ற பெயர்ப்பலகைகள் அதிகரிக்கும்.

கட்டணக் கொள்ளைக்கு பஞ்சம் இருக்காது.எனவே கல்வியை மாநிலப் பட்டியலுக்கு மீண்டும் மாற்றுவதற்கான போராட்டம் தீவிரமாக வேண்டும். திறன் கொண்டோர் தாராளமாக சர்வதேசப் போட்டிகளில் பங்கேற்பதற்கு மாநிலப்பட்டியல் தடையாக இருக்காது. கல்விக்கொள்ளைக்கு செக் வைக்க முடியும். 

நீட் தேர்வுக்கு முன்னதாக சிறந்த மருத்துவர்களை உருவாக்கிய அனுபவம் தமிழக மருத்துவக் கல்லூரிகளுக்கு உண்டு.
 இந்தியாவில் உள்ள பல மாநிலங்களுடன் ஒப்பிடுகையில் தமிழக மருத்துவம் பல மடங்கு முன்னேறியதாகும்.இந்தியாவைக் கட்டமைப்பது குறித்த விவாதங்களில், கூட்டாட்சித் தன்மை கொண்ட நாடாக விளங்க வேண்டும் என்பதற்குஅரசியலமைப்புச் சட்டத்தில் முக்கியத்துவம் தரப்பட்டுள்ளது. 

ஆனால் தற்போது படிப்படி யாக மையப்படுத்தப்பட்ட ஆட்சியதிகாரமாக, மாறிவருகிறது. இது கல்விக்கு மட்டுமல்ல, அரசியல் அமைப்புக்கே கேடு விளைவிக்கும்.
                                                                                                                                          நன்றி:தீக்கதிர்,
"இன்று 139வது பிறந்த நாள் காணும் தந்தை பெரியார் இருந்தால் தமிழகத்துக்கு வடபுலத்தாரிடம் கெஞ்சும் நிலை வந்திராது.
 மட்டுமின்றி போராட்டக்களமே மாறுதலாக இருக்கும்."
========================================================================================
ன்று,
செப்டம்பர் -17.
    தந்தை பெரியார் பிறந்த தினம் (1879)


  • தமிழறிஞர் திரு.வி.க., இறந்த தினம்(1953)

  • பெரியார் பல்கலைக்கழகம் அமைக்கப்பட்டது(1997)

  • தமிழ், செம்மொழியாக அறிவிக்கப்பட்டது(2004)
  • ========================================================================================