மாற்றம் - ஏமாற்றம்

வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் பிரதமர் மோடி புதிய இந்தியா பிறந்துவிட்டது என்று கூறிக்கொண்டேயிருக்கிறார். 

ஆனால் பண மதிப்பு நீக்கம், ஜிஎஸ்டி வரி என இவரது அரசு எடுக்கும் நடவடிக்கைகள் பழைய இந்தியாவையும் பழுதாக்கிக் கொண்டிருக்கிறது. 

புதிய இந்தியா பிறக்கிறதோ இல்லையோ மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை மட்டும் குட்டி போட்டுக் கொண்டேயிருக்கிறது.


மூன்றாவது முறையாக மத்திய அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. தேசிய ஜனநாயக கூட்டணி அரசு என்று கூறிக்கொண்டாலும் கூட்டணிக் கட்சிகளை கொஞ்சம் கூட மதிப்பதில்லை பாஜக என்பது மீண்டும் ஒருமுறை நிரூபணமாகியுள்ளது. 

இந்த முறை நடைபெற்ற விரிவாக்கத்தில் கூட்டணி கட்சியைச் சேர்ந்த யாரும் சேர்க்கப்படவில்லை.

குடியரசுத்தலைவர் மற்றும் குடியரசுத் துணைத்தலைவர் தேர்தலில் பாஜக வேட்பாளர்களுக்கு ஆதரவு அளித்தால் மத்திய அமைச்சரவையில் இடம் கிடைக்கும்என்று அதிமுகவின் ஒருபிரிவு மற்றும் ஐக்கிய ஜனதாதளத்தில் ஒரு பிரிவினருக்கு பாஜக ஆசைகாட்டியது. ஆனால் அவர்களும் ஏமாற்றப்பட்டுவிட்டார்கள்.

தம்பிதுரை, மைத்ரேயன் ஆகியோர் மத்திய அமைச்சர் கனவில் மிதந்த நிலையில், அவர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியுள்ளது. காரியம் முடிந்தவுடன் கழற்றிவிடு என்பதுதான் மோடியின் சித்தாந்தம். இதுவரை வர்த்தகத்துறை இணையமைச்சராக இருந்த நிர்மலா சீதாராமன் கேபினட் அந்தஸ்திற்கு உயர்த்தப்பட்டு பாதுகாப்புத்துறை அமைச்சராக்கப்பட்டுள்ளார். 

கடந்த 38 மாதங்களில் ஏற்றுமதியை கணிசமாக குறைப்பதுதான் இவரது சாதனை என்று காங்கிரஸ் விமர்சித்துள்ளதை புறம் தள்ளிவிட முடியாது. 

அதைபோல பெட்ரோல், டீசல் விலை அன்றாடம் உயரும் என்று அறிவித்து தினசரிவிலை உயர்வுக்கு வழிவகுத்த தர்மேந்திர பிரதானும் கேபினட் அமைச்சராக்கப்பட்டுள்ளார். 

மோடி பதவியேற்றபோது குறைந்தபட்ச அரசாங்கம் அதிகபட்ச செயல்பாடு என்றுஅளந்துவிட்டார். ஆனால் மத்திய அமைச்சரவை தொடர்ந்து விரிவுபடுத்தப்படுகிறது.

ஆனால்செயல்பாடு எதுவும் மக்கள் நலனுக்கு உகந்ததாக இல்லை. 

மாறாக ஆர்எஸ்எஸ் மற்றும் கார்ப்பரேட் முதலாளிகளின் செயல்திட்டத்தைநிறைவேற்றும் அரசாகவே இது உள்ளது. மத்திய அமைச்சரவை என்பது மோடியினால் ஒரு அலங்கார சபையாக மாற்றப்பட்டுள்ளது. 

அனைத்து முக்கியமான முடிவுகளையும் அமைச்சரவையை கூட ஆலோசிக்காமல் ஆர்எஸ்எஸ் மற்றும் அம்பானி, அதானி வகையறாக்களின் ஆலோசனைப்படி மோடி - அமித்ஷா ஜோடிதான் தீர்மானிக்கிறது என்பது வெளிப்படையாகவே தெரிகிறது.

கடந்த மூன்றாண்டுகளில் மோடி அரசு அனைத்துத்துறைகளிலும் படுதோல்வியடைந்துள்ளது. 

இதை மறைப்பதற்காக அவ்வப்போது அமைச்சரவை மாற்றம் என்று படம் காட்டப்படுகிறது. 
தலையணையை மாற்றுவதால் மட்டும் தலைவலி குறையாது.

மேலும் மோடி அமைசச்சரவையில் இருப்பவர்கள் அவர் கூட்டும் கூட்டத்தில் பேசாமல் அவர் பேசுவதை மட்டுமே கேட்க வேண்டும் யாரும் ஏதாவது கேள்வி கேட்டால் மோடிக்கு அது பிடிக்காதாம்.
மேலும் அமைசர்கள் எல்லாம் பெயருக்குத்தான்.மோடி,அமித் ஷா சொல்கின்றபடிதான் கோப்புகளில் எழுத வேண்டும்,நடவடிக்கை எடுக்க வேண்டும். அதனால் ஜெட்லீக்கு கூட  பணமதிப்பிழப்பு  நடவடிக்கை முன்பே தெரியாது என்பது உண்மைதான்.இது அவர் அமைசச்சரவையில் இருந்து விலக்கப்பட்டவரே கூறியது.
அமைசச்சரவையே  பொம்மை கொலு .இதில் எந்த அமைசராக இருந்தால் என்ன?
-----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
ஒரு குஜராத் பேராசிரியரின் அதிர்ச்சி.



ஞாயிறன்று முன்பின் அறிமுகமில்லாத ஒரு குஜராத் பேராசிரியரோடு நீட் குறித்து விவாதிக்க வேண்டிய கட்டாயம் பயணத்தில் ஏற்பட்டது.உ.பி./குஜராத் எல்லாம் நீட்டை ஏற்கும் போது புத்திசாலியான தமிழர்கள் ஏன் அதை ஏற்கக்கூடாது எனக் கேட்டார் . 

பதில் சொல்ல ஆரம்பித்து அது நீண்ட விவாதமானது .ஒன்றரை மணி நேரம் பயணமும் விவாதத்தில் கழிந்தது .

எல்லா மாநிலங்களிலும் தனியாக லட்சக்கணக்கில் பணம் செலவு செய்து நீட்டுக்காக தனி கோச்சிங் கிளாஸ் போகிறவர்கள் மட்டுமே மருத்துவம் படிக்க இயலும் என்பதை நேர்மையாக ஒப்புக் கொண்டார். 

விவாதத்தில் பிளஸ்-2 தேர்வு மதிப்பெண் அடிப்படையிலேயே தமிழகத்தில் மருத்துவ சேர்க்கை நடைபெற்ற விவரத்தைச் சொன்னபோது அதிர்ந்தார். 
எந்த வரைமுறையும் இல்லாமல் இங்கு நடைபெறுவதாக அவர் கருதி இருக்கிறார்.


நான் நம் மாநில வழக்கத்தைச் சொன்னபோது, ‘‘சரியான முறை. தேர்வை அரசு தானே நடத்துகிறது ; அதில் வெற்றி பெறுவதும் அந்த மதிப்பெண் அடிப்படையும் தகுதிதான்’’ என்பதை ஒப்புக் கொண்டார் . ‘இந்தியாவில் எந்த ஊடகமும் தமிழகத்தில் எப்படி நடக்கிறது என்பதைச் சொல்லாமல் நீட்டை எதிர்ப்பதாக மட்டும் சொல்வதால் என்னைப் போலவே பலரும் தப்பாகப் புரிந்து கொண்டிருக்கிறோம்’ என்றவர் , 

கடைசியில் என்னிடம், ‘இந்த முழுவிபரமும் தெரியவந்தால் குஜராத் மாணவர்களும் ஏனைய மாநில மாணவர்களும் கூட தமிழகத்தையே பின்பற்றக்கோரி போராடத்துவங்கிவிடுவார்கள் என்றார். 

பத்திரிகையாசிரியர் சாய்நாத் சொல்லியது போல, ஊடகங்களில் தீர்மானிக்கும் இடத்தில் பிராமணிய கருத்தோட்டமே ஆதிக்கம் செய்வதால், உண்மையைச் சொல்லமாட்டார்கள். 
எப்படி கொண்டு சேர்ப்பது என்பது பெரும் கேள்வி.
                                                                                                                                                                                                      -சு.பொ.அ.
நன்றி:தீக்கதிர்,
======================================================================================
ன்று,
செப்டம்பர்-05. 


  • இந்திய ஆசிரியர் தினம்
  • விடுதலைப் போராட்ட வீரர் வ.உ.சிதம்பரனார்   பிறந்த தினம்(1872)
  • மோல்டா, பிரிட்டானியாவால் பிடிக்கப்பட்டது(1800)
  • இந்தியாவின் 2வது குடியரசுத்தலைவர்  ராதாகிருஷ்ணன் பிறந்த தினம்(1888)
======================================================================================
செக்கிழுத்த செம்மல்

கப்பலோட்டிய தமிழன்.  என்றெல்லாம் அழைக்கப்படுகிற வ.உ. சிதம்பரனார் பன்முகத் திறமை கொண்டவராக விளங்கியுள்ளார். 

தமிழக தொழிற்சங்க இயக்க முன்னோடிகளில் வஉசியும் ஒருவர்.எனவேதான் பேராசிரியர் நா.வானமாமலை இவரை தமிழக முற்போக்கு இயக்கங்களின் முன்னோடி என்று அழைக்கிறார். இந்த தலைப்பில் நா.வா நூல் ஒன்றையும்எழுதியுள்ளார்.


தன்னுடைய சுயசரிதையை மகாகவிபாரதியார் கவிதை நடையில் எழுதியுள்ளார்.
எனினும் அது முற்றுப் பெறவில்லை. ஆனால்வஉசி தன்னுடைய வாழ்க்கை வரலாறை கவிதை நடையில் முழுமையாக எழுதியுள்ளார். 

அவர் சிறையிலிருந்தபோது மிச்சேல் என்ற சிறை அதிகாரி அவருக்கு அறிவுரை வழங்கியதாகவும் அதற்கு தாம் இவ்வாறு பதிலளித்ததாகவும் வஉசி எழுதியுள்ளார்.
"நீயோ புத்தி நிகழ்த்துகின்றவன்?
வாயை மூடடா மதியிலி உனக்கும்உன்னப் பனுக்கும் உன்சூப் பிரண்டெண்டுஉன்னையாள் கவர்னர் மன்னா தியர்க்கும்புத்திகள் கூறும் பெற்றிமை யுடையேன்’ என்று பல பகர்ந்தேன்..."

தூத்துக்குடியில் வழக்குரைஞராக பணியாற்றிய காலத்தில் தொழிலாளர் உரிமை தொடர்புடைய பல வழக்குகளை இலவசமாக வஉசி நடத்தியதோடு தொழிலாளர்களை அமைப்பு ரீதியாக திரட்டி சங்கம் அமைக்கும் பணியையும் செய்துள்ளார். 

சராசரி காங்கிரஸ்காரர்கள் போல் அல்லாமல் தொழிற்சங்க தலைவராகவும் இவர் உருவானதால்தான் ஆங்கிலேயஅரசுக்கு இவர்மீது ஆத்திரம் அதிகமாகி,இரட்டை ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. 

வஉசியும், சுப்பிரமணிய சிவாவும் கைது செய்யப்பட்டதை எதிர்த்து தூத்துக்குடியில் பிரம்மாண்டமான வேலை நிறுத்தம் நடைபெற்றது.

அரசியல் காரணங்களுக்காக நடைபெற்ற முதல் வேலைநிறுத்தம் என்று வரலாறு இதை பதிவு செய்துள்ளது. 

வஉசி திருக்குறள் மற்றும் சிவஞானபோதம் ஆகிய நூல்களுக்கு உரை எழுதியுள்ளார். திருக்குறளுக்கு மணக்குடவர்எழுதிய உரையை முதன்முதலில் பதிப்பித்தவரும் இவரே. 


தொல்காப்பியத்திற்கு இளம்பூரணார் எழுதிய உரையையும் வஉசி பதிப்பித்துள்ளார். 

மெய்யறிவு, மெய்யறம் உள்ளிட்ட நூல்களையும் எழுதியுள்ளார். 

மனம் போல வாழ்வு, அகமே புறம், வலிமைக்கு மார்க்கம், சாந்திக்கு மார்க்கம்உள்ளிட்ட நூல்களை தமிழில் மொழி பெயர்த்துள்ளார்.

இந்த நூல்கள் ஜேம்ஸ் ஆலன் எழுதியவை ஆகும். 

வஉசி சிறையில் அனுபவித்த கொடுமைகள் கொஞ்சம் நஞ்சமல்ல. ஒருநாள் சிறைக்காவலர் வந்து வஉசிக்கு விடுதலை கிடைத்துவிட்டதுஎன்று கூறியபோதுஅவரிடம்மகிழ்ச்சிவெளிப்பட வில்லையாம். 

இதுகுறித்து சிறைக்காவலர் கேட்டபோது, எனக்குத்தானே விடுதலை. என் தேசத்திற்குஇல்லையே என்றாராம். 

சுதேசி கப்பலோட்டி அடிமை இந்தியாவில் சுதந்திரக் கனலை மூட்டினர் வஉசி, சிவா, பாரதி போன்ற தலைவர்கள். 

ஆனால் விடுதலை போராட்டத்தில் பங்கேற்காதவர்கள் இன்றைக்கு ஆட்சி பீடத்தில் அமர்ந்துள்ள காரணத்தால் தேசத்தை விலைபேசி விற்கத் துடிக்கின்றனர். 

நாட்டின் விடுதலைக்காக சொத்தை இழந்தார்,சிறை சென்றார்,செக்கிழுத்தார்.
தனது சொத்துக்கள் அனைத்தையும் விற்றும் ,அடகு வைத்தும் வெள்ளியர்களுக்கெதிராக கப்பல்களை ஒட்டி ஆங்கில அரசின் கண்களில் பயத்தை வரவைத்தார்.
ஆனால் சிறை சென்ற வ.உ.சி பல கொடுமைகளை அனுபவித்தும் வெளியே இருந்த காந்தி போன்ற காங்கிரசார் அவரை ஆங்கிலேய அரசின் வழிகாட்டலின் படி திலகரின் அனுதாபி என்று கைக்கழுவி விட்டனர்.
வ.உ.சி  சிறை தண்டனைகளை அனுபவித்து வெளியே வருகையில் அவரை வரவேற்ற மூவரில் ஒருவர்ஆங்கிலேய அரசால் தொழுநோயாளியாக்கப்பட்ட  சுப்பிரமணிய சிவா .
காங்கிரசில் இடமில்லாமல் சொத்துக்களை நாட்டுக்காக இழந்த நிலையில் ஆங்கிலேய அரசு வ.உ.சி யின் வழக்குரைஞர் தொழில் அனுமதியையும் பறித்து விட்டது.
எண்ணெய் ,பலசரக்கு கடைகளில் கணக்கு எழுதியும் சிறிய அளவில் நண்பர்கள் உதவியுடன் அரிசிக்கடை வைத்தும் பிற்காலத்தை ஓட்டினார்.

வாலஸ் என்ற ஆங்கிலேயர்தான் வ.உ.சி நிலையை கண்டு கலங்கி அரசிடம் போராடி வழக்குரைஞர் தொழில் அனுமதியை திரும்ப பெற்றுக்கொடுத்தார்.
அதனால்தான் தனது மகனுக்கு வலேஸ்வரன் என்ற பெயரை வ.உ.சி.சூட்டினார்.

வ.உ.சி.குடுமப நிலை அறிந்து அவருக்கு உதவ தென்னாப்பிரிக்க இந்தியர்கள் வழங்கிய நிதி உதவி 2000 ரூபாய்.(இன்றைய மதிப்பு கணக்கிட்டுக்கொள்ளுங்கள்.)

அதை காந்தி மூலம் கொடுத்து விட்டு ,அத்தொகை வ.உ.சி குடும்பத்துக்கு போகவில்லை என்று அறிந்து காந்தியாரிடம் கேட்டபோது "சபர்மதி ஆசிரம கட்ட செலவிட்டு  விட்டதாக அப்போது பிர்லா மாளிகையில் குடியிருந்த காந்தி சொல்லிவிட்டார்.

ஒரு ஆங்கிலேயே வாலஸ் துரை க்கு இருந்த மனிதாபிமானம் கூட இல்லாதவர்களுடன் இணைந்து விடுதலைக்கு போராடியதையும்,அதானால் வாழ்க்கையையே பறி கொடுத்ததையி எண்ணி வ.உ.சி. எவ்வளவு மனவேதனையடை ந்திருப்பார்.

இன்றைய காங்கிரசினருக்கும் ,தியாகிகள் என்று சொல்லி ஓய்வூதியத்துக்கு அலைபவர்களுக்கும்,  பொதுவாகவே ஊழலின் உச்சத்தில் திளைக்கும் அரசியல்வாதிகளுக்கும் வ.உ.சி.அவர்களின் சிலைக்கு மலை அணிவிக்கும் தகுதியோ ,அருகதையோ இல்லை என்பதுதான் இயல் நிலை.

                               குமாரசாமி தான் தலைமை ஆசிரியரோ?
நல்லா இருக்க வை "னு காணிக்கை போட்டவன் வறுமையில்,
வரம் கோடா சாமிகள் பணக்குவியல்களில்.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

2025ல் தங்கம் விலை

வினேஷ் போகத் வென்றார்!

முடிவுக்கு வருகிறதா?