பெட்ரோல் - டீசல் கலால் வரி கொள்ளை.
மத்திய அரசுக்கு வரவு ரூ. 3.35 லட்சம் கோடிகள்
பெட்ரோலியப் பொருட்கள் மீதான வரி விதிப்பின் மூலம் மட்டும், கடந்த நிதியாண்டில் ரூ. 3 லட்சத்து 34 ஆயிரத்து 534 கோடியை மோடி அரசு வாரிச் சுருட்டியிருப்பது தெரியவந்துள்ளது.
கச்சா எண்ணெய் விலை வீழ்ச்சியால் மக்கள் பயனடைந்து விடக்கூடாது என்ற அடிப்படையில் கலால் வரியை 200 மடங்கு உயர்த்தி கொள்ளை வருமானம் பார்த்துள்ளது.
பொதுவாக, சர்வதேசச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறையும்போது, பெட்ரோல் - டீசல் விலையும் குறைக்கப்பட வேண்டும். ஆனால், கச்சா எண்ணெய் விலை வீழ்ச்சியின் பயன், நாட்டு மக்களுக்கு கிடைத்து விடாத வகையில், மத்திய அரசு கலால் வரியை உயர்த்திக் கொண்டே போகிறது.
அதனால்தான் ஒரே ஆண்டில் பெட்ரோலியப் பொருட்களின் மூலம் கிடைக்கும் வரி வருவாய் இரண்டு மடங்கு அதிகரித்துள்ளது.
விலை என்ன?
ஒரு லிட்டர் பெட்ரோலின் அடக்கவிலை வெறும் 26 ரூபாய் 65 காசுகள்தான். கச்சா எண்ணெய் மீதான கலால் வரியையும் சேர்த்துத்தான் இந்த விலை. ஆனால், சந்தையில் ஒரு லிட்டர் பெட்ரோல் 73 ரூபாய் என்ற கொள்ளை விலைக்கு விற்கப்படுகிறது.
மும்பை போன்ற இடங்களில் 80 ரூபாய் அளவிற்கு பெட்ரோல் விலை உள்ளது. அதாவது 200 மடங்கு அளவிற்கு கூடுதல் விலைக்கு பெட்ரோலை விற்கிறார்கள். 26 ரூபாய் அடக்கவிலை கொண்ட டீசலும் சந்தையில் 62 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை எவ்வளவு குறைந்தாலும், இவர்கள் வரியை மட்டும் குறைக்கவே மாட்டார்கள். மாறாக, எவ்வளவு விலை குறைகிறதோ, அதே அளவிற்கு வரியை உயர்த்தி விடுவார்கள்.
உதாரணத்திற்கு, கடந்த 2008-ஆம் ஆண்டு ஜூன் - ஜூலை மாதங்களில், கச்சா எண்ணெய் விலை பீப்பாய் ஒன்றுக்கு 147 டாலர் என்ற அளவிற்கு இருந்தது.
அப்போது இந்தியாவில் பெட்ரோல் விலை ரூ. 73 என்ற அளவில் இருந்தது.
இப்போது கச்சா எண்ணெய்யின் விலை 53.06 டாலராக வீழ்ச்சி அடைந்துள்ளது.
நியாயமாக பெட்ரோல் விலை பெருமளவு குறைந்திருக்க வேண்டும். ஆனால், இப்போதும் பெட்ரோல் விலை ரூ. 73-தான்.
அவ்வளவும் வரி.குறிப்பாக மத்திய பாஜக ஆட்சியில், பெட்ரோலியப் பொருட்கள் மீதான கலால் வரி 126 சதவிகிதம் உயர்த்தப்பட்டதன் காரணமாகவே பெட்ரோல் விலை 73 ரூபாயைத் தொட்டது.
அடக்கவிலைக்கும் சந்தை விலைக்கும் இடையிலான வித்தியாசத் தொகை யாருக்கு போகிறது என்றால், பெரும்பகுதி மத்திய அரசுக்கும், ஒரு சிறு பகுதி மாநில அரசுக்கும் பல்வேறு வரிகள் மூலம் சென்று கொண்டிருக்கிறது.
சுத்திகரிப்பு ஆலையில் ஒரு லிட்டர் பெட்ரோல் 26 ரூபாய் 65 காசுகள். எண்ணெய் நிறுவனங்கள் டீலர்களுக்கு அதை விற்பனை செய்யும்போது அதன் விலை 30 ரூபாய் 7 காசுகள் ஆகிறது.
இதன் பின் மத்திய கலால் வரியாக 21 ரூபாய் 48 காசுகளும், மாநில அரசு விதிக்கும் மதிப்புக் கூட்டு வரி 14 ரூபாய் 96 காசுகள், டீலர் கமிஷன் தொகை 3 ரூபாய் 24 காசுகள் என சேர்க்கப்படும் போது, ஒரு லிட்டர் பெட்ரோல் சந்தைக்கு வரும்போது 70 ரூபாய் 39 காசுகளாகி விடுகிறது.
பின்னர் தினசரி விலை நிலவரத்திற்கு ஏற்ப பெட்ரோல் விலை 73 ரூபாயிலிருந்து 80 ரூபாய் வரை விற்கப்படுகிறது.
அள்ள அள்ளக் குறையாத அமுதசுரபியாக, பெட்ரோலியப் பொருட்கள் மீதான வரிவிதிப்பை மத்திய பாஜக ஆட்சி பார்க்கிறது. நாட்டின் தொழில்துறை வீழ்ச்சியால் நாடு சந்திக்கும் பொருளாதார நெருக்கடியை சமாளிக்க வரிகளை மேலும் மேலும் உயர்த்தி போலியான வரி வருவாயைக் காட்ட முயற்சிக்கிறது.
பெட்ரோலியப் பொருட்கள் மீதான வரி விதிப்பு தொடர்பாக மத்திய அரசு மீது விமர்சனங்கள் எழும்போ தெல்லாம், அவ்வளவு கஷ்டமாக இருக்கிறது என்றால், மாநில அரசுகள் தங்களின் வரியை குறைத்துக் கொள்ள வேண்டியதுதானே என மத்திய பாஜகஆட்சியாளர்கள் கூறுவதும் வாடிக்கை யாகி விட்டது.
ஆனால், 2016-17 நிதியாண்டில் பெட்ரோலியப் பொருட்கள் மீதான வரி விதிப்பு மூலம் மத்திய அரசுக்கு கிடைத்துள்ள வருவாய், மோடி அரசு கூறுவது எவ்வளவு மோசடியானது என்பதை வெட்ட வெளிச்சமாக்கியுள்ளது.
பெட்ரோலியப் பொருட்களின் விலை உயர்வுக்கு மாநில அரசுகள் மீது பழிபோடுவது நாட்டு மக்களை ஏமாற்றும் நடவடிக்கை என்பதையும் அது அம்பலப்படுத்தியுள்ளது.
2014-15ஆம் நிதியாண்டில் மத்திய அரசுக்கு பெட்ரோலியப் பொருட்களின் மூலம் சுமார் 1 லட்சத்து 72 ஆயிரத்து 066 கோடி ரூபாய் வருமானம் கிடைத்தது.
அதுவே 2016-17ஆம் நிதியாண்டில் 3 லட்சத்து 34 ஆயிரத்து 534 கோடி ரூபாயாக உயர்ந்திருப்பது, மக்களைக் கசக்கிப் பிழியும் மோடி அரசின் ஆட்சிலட்சணத்தை தெளிவாகக் காட்டியுள்ளது.பெட்ரோலியப் பொருட்களின் மீதான வரி உயர்வின் மூலம் மத்திய அரசு மக்களிடமிருந்து இரண்டு மடங்கு கொள்ளை லாபம் பெற்றுள்ளது.
இதே காலக்கட்டத்தில் மாநில அரசு பெற்ற வருமானத்தின் அளவைப் பார்த்தால், அது 1 லட்சத்து 60 ஆயிரத்து 554 கோடி ரூபாயில் இருந்து 1 லட்சத்து 89 ஆயிரத்து 770 கோடி அளவிற்கு - சுமார் 30 ஆயிரம் கோடி அளவிற்கே உயர்ந்துள்ளது.
2014-ஆம் ஆண்டு, ஜனவரி 1-இல் டீசல் மற்றும் பெட்ரோல் மீது மத்திய அரசு விதிக்கும் கலால் வரி, முறையே 3 ரூபாய் 56 காசுகளாகவும், 9 ரூபாய் 48 காசுகளாகவும் இருந்த நிலையில், 2017-ஆம் ஆண்டு ஆகஸ்டில் மத்திய அரசு இந்த கலால் வரியை டீசலுக்கு 17 ரூபாய் 33 காசுகளும், பெட்ரோலுக்கு 21 ரூபாய் 48 காசுகளும் உயர்த்தியுள்ளது.
இந்த உண்மையை மறைக்க, மாநில அரசுகள் விதிக்கும் வாட் வரியை நோக்கி கைகாட்டுகிறது. உண்மையில் மத்திய அரசின் கலால் வரி, மாநில அரசின் மதிப்புக் கூட்டுவரி இரண்டுமே பலமடங்கு குறைக்கப்பட வேண்டும் என்பதுதான் மக்களின் கோரிக்கை. அதை இரண்டு அரசுகளுமே செய்வதில்லை.
மக்களை ஏமாற்றுவதிலேயே தீவிரமாக இருக்கின்றனர்.
ஆனால் நாட்டின் விலைவாசி உயர்வுக்கும் ,பொருளாதார வீழ்ச்சிக்கும் இந்த பெட்ரோல் விலை அதிகரிப்பு முக்கிய காரணிகளை ஒன்றாக உள்ளதை அரசுகள் புரிந்து கொண்டதாக தெரியவில்லை.
டீசல் விலை உயர்வினால் உணவுப்பொருட்கள் முதல் அனைத்து பொருட்களுக்கும் போக்குவரத்து செலவினம் தினமும் உயர்கிறது.இதனால் விலைவாசிகள் உயர்ந்து கொண்டே போகிறது.
பெட்ரோல் விலை ஏற்றம்-இரக்கம் இல்லாமல் உயர்வை மட்டுமே சந்திக்கையில் போக்குவரத்து வாகனங்கள் வாடகையும் தன்னால் உயர்ந்து விடுகிறது.
பெட்ரோலை அதிக விலை கொடுத்து வாங்கும் மக்களே அதானால் விலை உயர்ந்த பொருட்களையும் அதிகவிலை கொடுத்து வாங்கும் இரட்டை விலை உயர்வுக்கு பலியாகிறார்கள்.
====================================================================================================================================
இன்று ,
செப்டம்பர்-21.- உலக அமைதி தினம்
- பிரான்சில் குடியரசு நிறுவப்பட்டது(1792)
- மோல்ட்டார் விடுதலை தினம்(1964)
- பக்ரைன்,பூட்டான், கத்தார் ஆகின ஐ.நா.,வில் இணைந்தன(1971)
- ஆர்மேனியா விடுதலை தினம்(1991)