ஒரே நாடு, ஒரே தேர்தல்:
-ராஜன் குறை
அரசியல் என்பதே போராட்டம்தான். எத்தனையோ தலைவர்கள் நெருப்பாற்றில் நீந்தித்தான் வரலாற்று சாதனைகளைப் புரிந்திருப்பார்கள். ஆனால், அதெல்லாம் கொள்கை சார்ந்த, பெரும் லட்சியங்கள், கோட்பாடுகள் சார்ந்த அரசியல். பழனிசாமியை போல சந்தர்ப்பவசமாக தலைவராகி தன் தலைமையை எப்படியாவது தக்கவைத்துக்கொள்ள திணறித் தவிக்கும் நிலையை அரசியல் உலகம் கண்டிருக்குமா என்பது கேள்விதான். அவர் தவிப்பது மட்டுமல்லாமல் அவரிடம் மாட்டிக்கொண்டு அ.இ.அ.தி.மு.க என்ற கட்சியும் தவிக்கிறது.
ஜெயலலிதாவின் வாரிசாக வருவதற்கு அவர் காலத்திலேயே கட்சியை அவருடன் சேர்ந்து வழி நடத்திய சசிகலா விரும்பினார். ஓ.பன்னீர்செல்வம் பாரதீய ஜனதா கட்சி தூண்டுதலில் சசிகலாவை எதிர்த்து போர்க்கொடி தூக்கினார். உறங்கிக்கிடந்த உச்ச நீதிமன்றத் தீர்ப்பு உயிர்பெற்று சசிகலா சிறை செல்ல நேர்ந்ததால், திடீரென அவரால் கூவாத்தூரில் முதல்வராக்கப்பட்டார் எடப்பாடி பழனிசாமி. ஆனால், தொடர்ந்து மத்தியில் ஆட்சி செய்யும் பாரதீய ஜனதா கட்சி கொடுத்த அழுத்தத்தைச் சமாளிக்க முடியாமல் ஓ.பன்னீர்செல்வத்துடன் சமரசம் பேசினார். தன்னை முதல்வராக்கிய சசிகலா, தினகரன் ஆகியோரை கழற்றி விட்டுவிட்டு தன் முதல்வர் பதவியை மட்டும் உடும்புப்பிடியாகப் பிடித்துக்கொண்டு ஓ.பன்னீர்செல்வத்துடன் கைகோத்தார். அன்றிலிருந்து இரட்டைத் தலைமை என்ற விநோதமான அமைப்பு உருவாகி இன்று அதுவே அ.இ.அ.தி.மு.க-வின் தலைவிதி ஆகிவிட்டது. யார் பாஜக-வுடன் சேர்ந்து யாரை கவிழ்ப்பார்கள் என்ற அச்சத்தில் இருவருமே பாரதீய ஜனதாவுக்குக் கட்டுப்பட்டு அரசியல் செய்தாக வேண்டிய நிலையில்தான் இருக்கிறார்கள். வெளியே விடுதலையான சசிகலாவும் தக்க சந்தர்ப்பத்துக்குக் காத்துக்கொண்டிருக்கிவேண்டும்.
இப்படி கூடவே இருக்கும் ஓ.பன்னீர்செல்வம், வெளியில் இருக்கும் சசிகலா என்று இருவரிடமும் இருந்து தன் கட்சித் தலைமையைக் காப்பாற்றிக்கொள்ள ஓயாது போராட வேண்டிய சிக்கலான சூழலில் இருக்கிறார் பழனிசாமி. மூன்று சதவிகித வாக்குகள்கூட இல்லாத பாரதீய ஜனதா கட்சி முப்பது சதவிகிதத் தொகுதிகளைக் கேட்டு மிரட்டுகிறது. அது என்றைக்கு மற்ற இருவரையும் தூண்டிவிட்டு என்ன செய்யுமோ என்ற அச்சத்தில் வாழ வேண்டியுள்ளது. அதற்கு மேல் வருமான வரி, அமலாக்கத் துறை போன்ற ஆயுதங்களும் மத்திய அரசிடம் உள்ளன. இத்தனை பிரச்சினைகளையும் வைத்துக்கொண்டு பழனிசாமி தி.மு.க என்ற வலுவான இயக்கத்துடனும், நாளும் தன் ஆளுமையை வளர்த்துக்கொண்டு, சிறப்பான ஆட்சியைத் தமிழ்நாட்டுக்குத் தருவதுடன், அகில இந்திய அளவில் அரசியல் சக்தியாக உருவாகி வரும் மு.க.ஸ்டாலினுடனும் தேர்தல் களத்தில் மோத வேண்டியுள்ளது. இந்த பரிதாப நிலையில் எடப்பாடி சந்திக்கும் சிக்கல்களில் அவரது சமீபத்திய நீட் தேர்வு பம்மாத்துக்கள் ஒருபுறம் நகைப்புக்குரியவை என்றால், மறுபுறம் ஒரே நாடு, ஒரே தேர்தல் என்ற பாசிச திட்டத்தை ஆதரிக்கும் அளவு சென்றுள்ளது அதிர்ச்சியளிக்கிறது. கடலில் மூழ்குபவன் சிறு துரும்பையும் பற்றிக்கொண்டு நீந்த நினைக்கலாம். ஆனால், அடுத்தவன் கழுத்தைப் பிடித்து அவனையும் மூழ்கடிப்பது போல, மாநில உரிமைகள் நாசமானாலும் பரவாயில்லை, தி.மு.க ஆட்சி கலைக்கப்பட்டால் போதும் என்று பேசுவது மிகவும் கண்டிக்கத்தக்கது. இந்த மனிதர் கட்சித் தலைமையில் பங்குபெறும் வரை கட்சிக்கு எதிர்காலம் என்பதே இருக்காது என்பதை கட்சித் தொண்டர்கள் புரிந்துகொள்ள வேண்டும்.
நீட் தேர்வு புரட்டுகள்
நீட் தேர்வைக் குறித்து எப்போது பேசினாலும் முதலில் அது காங்கிரஸ் ஆட்சியில் கொண்டு வரப்பட்டது என்று தொடங்குவார்கள். அந்த நீட் வேறு, இந்த நீட் வேறு என்று எத்தனை முறை விளக்கினாலும் கேட்க மாட்டார்கள். அடுத்து உச்ச நீதிமன்றத் தீர்ப்புதான் காரணம். யார் என்ன செய்ய முடியும் என்பார்கள். ஓ.பன்னீர்செல்வம் ஆட்சியில்தான் ஜல்லிக்கட்டு போராட்டம் நடந்து, தனிப்பட்ட சட்டம் இயற்றப்பட்டு உச்ச நீதிமன்றத் தீர்ப்பை செல்லாமலாக்கி ஜல்லிக்கட்டு நடைபெற தொடங்கியது என்பதை மறந்துபோனது போல நடிப்பார்கள். நாடாளுமன்றம் திட்டவட்டமாக சட்டம் இயற்றினால் அது அரசியலமைப்பு சட்டத்துக்கு முரண்பட்டதாக இருந்தாலே தவிர அதில் உச்ச நீதிமன்றம் தலையிட முடியாது. மருத்துவக் கல்லூரி நுழைவுத் தேர்வு குறித்து அரசியலைப்புச் சட்டத்தில் எதுவும் சொல்லவில்லை என்பதால், கல்வி, சுகாதாரம் இரண்டுமே பொதுப்பட்டியலில் இருப்பதால், தமிழக அரசின் நீட் விலக்கு சட்டத்தை குடியரசுத் தலைவர் ஏற்றுக்கொண்டால் உச்ச நீதிமன்றம் நிச்சயம் தலையிட முடியாது. அப்படி அந்த நீட் விலக்கு சட்டம் குடியரசுத் தலைவர் ஒப்புதலைப் பெற தடையாக இருப்பது மத்தியில் ஆட்சி செய்யும் பாரதீய ஜனதா கட்சிதான் என்பது உள்ளங்கை நெல்லிக்கனி போன்ற உண்மை. இந்த உண்மையைத்தான் அ.இ.அ.தி.மு.க பூசி மொழுகி, பிதற்றி வருகிறது.
அ.இ.அ.தி.மு.க ஆட்சியில் இருந்தபோதே அவர்கள் இயற்றிய நீட் விலக்கு சட்டத்தை குடியரசுத் தலைவர் நிராகரித்துவிட்டார் என்ற உண்மையை மூடி மறைக்கப் பார்த்தார்கள். உண்மை வெளிவந்தபிறகு சாக்குப்போக்கு சொன்னார்கள். பின்னர் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு ஒதுக்கீடு கொடுப்பதன் மூலம் பிரச்சினையை திசை திருப்பப் பார்த்தார்கள். நீட் தேர்வு இருந்தாலும், இல்லாவிட்டாலும் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு ஒதுக்கீடு தருவது என்பது சிறப்பான திட்டம்தான். ஆனால், இன்றைய பிரச்சினை அரசுப் பள்ளி மாணவர்கள் மட்டுமல்லர். மாநில அரசின் கல்வித் திட்டத்துக்கு வரும் ஆபத்து. நீட் தேர்வை வைத்து மத்திய அரசு கல்வித் திட்டத்துக்கும், மாநில அரசு கல்வித் திட்டத்துக்கும் நடக்கும் மோதல். மாநில அரசு கல்வித் திட்டத்தைப் பலவீனப்படுத்தி, மத்திய அரசு கல்வித் திட்டத்தை தனியார் பள்ளிகள் அனைத்தையும் பின்பற்றச் செய்தால் உள்ளே நுழைய காத்திருக்கின்றன புதிய கல்விக் கொள்கையும், மும்மொழி பயிற்சி என்ற பெயரில் இந்தி மொழி திணிப்பும்.
எடப்பாடி பழனிசாமி அவ்வளவு தூரம் சிந்திக்க வேண்டாம். அவரிடம் சில எளிய கேள்விகளைக் கேட்டால் போதும். பாரதீய ஜனதா கட்சி நீட் தேர்வை ஆதரிக்கிறது. அதன் நிலைபாட்டை அவரால் கண்டித்து பேச முடியுமா? நீங்கள் எங்கள் கட்சி கொள்கைக்கு எதிராக நீட் தேர்வை ஆதரித்துப் பேசினால் நாடாளுமன்றத் தேர்தலில் கூட்டணி அமைப்பது சாத்தியமில்லை என்று கூற முடியுமா? அ.இ.அ.தி.மு.க தயவு இல்லாமல் பாஜக-வால் டெபாசிட் கூட பெற முடியாதே?
ஆளுநரை எடுத்துக்கொள்வோம். அவர் நீட் தேர்வுதான் நாட்டுக்கு, மக்களுக்கு நல்லது என்று கூறுகிறார். ஆனால் அ.இ.அ.தி.மு.க-வோ நீட் தேர்விலிருந்து விலக்கு கேட்கிறது. அப்படியானால் ஆளுநரைக் கண்டித்து ஒரு அறிக்கை விடலாமே? ஆளுநரைத் திரும்பப் பெறச் சொல்லியெல்லாம் போராட வேண்டாம். ஆளுநரின் போக்கு விரும்பத்தக்கதல்ல என்று சொல்லலாமே? அதற்குப் பதில் ஏன் அ.இ.அ.தி.மு.க தலைவர்கள் ஆளுனரைச் சந்தித்துப் பேசுகிறார்கள்? என்ன பேசுகிறார்கள்?
தூத்துக்குடியில் மக்கள் குருவி போல் சுடப்பட்டு இறந்தபோது தொலைக்காட்சியில் பார்த்து தெரிந்துகொண்டேன் என்றவர்தான் முதல்வர் பழனிசாமி. சாத்தான்குளத்தில் தந்தையும், மகனும் போலீஸ் லாக்கப்பில் கொடும் சித்ரவதை செய்யப்பட்டு மாண்டபோது, உடல் நலக்குறைவால் இறந்தார்கள் என்று கூசாமல் சொன்னார் பழனிசாமி. இத்தகைய மனிதருக்கு தன் தலைமையைத் தக்கவைப்பதைத் தவிர வேறு அரசியல் லட்சியங்களோ, நீட் தேர்வை எதிர்ப்பதோ முக்கியம் என நினைக்க முடியுமா? முடியாது என்பதை அவரே நிரூபிக்கும் விதமாகத்தான் ஒரே நாடு, ஒரே தேர்தல் குறித்துப் பேசியுள்ளார்.
ஒரே நாடு,
ஒரே தேர்தல்
என்றால் என்ன ஆபத்து என
எடப்பாடிக்கு தெரியுமா?
இந்தியாவில் அரசு, ஆங்கிலத்தில் ஸ்டேட் எனப்படுவது ஒன்றல்ல; இன்றைய நிலையில் 28 அரசுகள் உள்ளன. தமிழில் அவற்றை மாநிலங்கள் என்கிறோம். ஆங்கிலத்தில் ஸ்டேட் என்கிறோம். இந்த அரசுகளின் ஒன்றியம்தான் இந்திய அரசாங்கம் என்னும் யூனியன் கவர்ன்மென்ட். இந்தியா என்பது அரசாங்கம்தானே தவிர, அரசு கிடையாது. மாநில அரசுகளை ஆட்சி செய்யும் அரசாங்கங்களை அமைக்க தனித்தனியாக தேர்தல்கள் நடக்கின்றன. ஒன்றிய அரசாங்கத்தி்ல் ஆட்சி செய்யவும் தனியாக தேர்தல் நடக்கிறது. இந்தத் தேர்தல்கள் ஒரே நேரத்தில் நடந்தால்கூட, அவை ஒரே தேர்தல் கிடையாது. அப்படி இருக்கும்போது “ஒரே நாடு, ஒரே தேர்தல்” என்று பிரதமர் நரேந்திர மோடி சொல்வதன் பொருள் என்ன? அது யாருக்கும் விளங்கவில்லை. ஆனால், ஒன்று புரிகிறது. மாநில அரசுகளின் இறையாண்மையைப் பறிப்பதும், அவற்றின் அதிகாரங்களை எல்லாம் ஒன்றிய அரசிடம் குவித்து அதை ஒற்றை இந்திய அரசாக மாற்றுவதும் பாரதீய ஜனதா கட்சியின் செயல்திட்டம் என்று புரிகிறது.
மேற்கு வங்கம், மகாராஷ்டிரம், காஷ்மீர், தெலங்கானா, கேரளம், தமிழகம் ஆகிய மாநில மக்கள் தங்கள் அரசுகளின் தனித்துவத்தையும், தங்கள் உரிமைகளையும் காக்கும் உணர்வு கொண்டவர்கள். இங்கே ஆளும் மாநிலக் கட்சிகளும் சரி, இந்திய தேசிய காங்கிரஸும் சரி... பாரதீய ஜனதாவின் ஒற்றை அரசு கனவுக்கு ஒரு போதும் இணங்கப் போவதில்லை.
ஆனால் பாருங்கள் பழனிசாமியை. அவர் தமிழ்நாட்டு உரிமைகளே போனாலும், இறையாண்மையே போனாலும், தி.மு.க அரசு கலைக்கப்பட்டால் போதும் என்று நினைக்கிறார். தான் யார் காலில் விழுந்து பதவி பெற்றாரோ அவரையே “சூரியனைப் பார்த்து குலைக்கும் ஏதோவொன்று” என்று கூறிய இந்த மனிதர். தன் கட்சியை அடகு வைத்ததுபோல, பதவிக்காக தமிழகத்தையே அடகு வைக்கவும் தயங்க மாட்டார் என்பதைத்தானே அவர் பேச்சு உணர்த்துகிறது?
இதற்கு வக்காலத்து வாங்குபவர்கள் ஒன்றை சொல்கிறார்கள். தி.மு.க தலைவரும் 2019 நாடாளுமன்றத் தேர்தலின்போது ஒன்றிய ஆட்சி மாறினால், அ.இ.அ.தி.மு.க அரசு கவிழ்ந்துவிடும் என்று கூறினாராம். அவர் ஏன் கூறினார்? சட்டமன்றத்தில் பெரும்பான்மை இல்லாத ஆட்சி கவர்னரின் தயவால், அதாவது ஒன்றிய அரசின் தயவால் பதவியில் ஒட்டிக்கொண்டு இருந்தது. தினகரன் ஆதரவாளர்களான பதினெட்டு சட்டமன்ற உறுப்பினர்களை பதவியிலிருந்து நீக்கியது சட்டப்படி செல்லாது. அதனை ஆளுநர் ஏற்க மறுத்திருந்தால், அவர்களையும் உள்ளடக்கி பெரும்பான்மையை நிரூபிக்க சொல்லியிருந்தால் எடப்பாடி அரசு கவிழ்ந்திருக்கும். மற்றொருபுறம் பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் பதினோரு பேர் கொரடா உத்தரவை மீறி வாக்களித்ததால் அவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டியிருந்தது. இப்படி பலவிதமான விதிமுறை மீறல்கள், குளறுபடிகள் ஆகியவற்றின் மூலம் பதவியில் எடப்பாடி அரசை ஒன்றிய அரசாங்கம் ஆளுநர் என்ற கருவியைப் பயன்படுத்தி ஒட்டி வைத்திருந்தது என்பதால்தான், ஒன்றிய ஆட்சி மாறினால் எடப்பாடி அரசு கவிழும் என்று தன் கணிப்பை வெளிப்படுத்தினார் தி.மு.க தலைவர்.
அவ்வாறாக முறையற்று ஆட்சியில் ஒட்டிக்கொண்டிருந்த நிலையைக் கண்டித்துப் பேசியதும், தெளிவான பெரும்பான்மையுடன், மக்கள் பேராதரவுடன் நடைபெறும் தி.மு.க ஆட்சியை “ஒரே நாடு, ஒரே தேர்தல்” என்ற பாசிச திட்டத்தின் மூலம் பழனிசாமி வீழ்த்த நினைப்பதும் ஒன்றா? தமிழ்நாட்டின் சுயாட்சி உரிமைகளில் சிறிதும் அக்கறையிருந்தால் அப்படிப் பேசியிருப்பாரா பழனிசாமி?
இதற்கெல்லாம் மக்கள் உள்ளாட்சித் தேர்தலில் உரிய பாடம் கற்பிப்பார்கள்; ஆனால் அ.இ.அ.தி.மு.க தொண்டர்களும் விழித்துக்கொள்ள வேண்டும். பாரதீய ஜனதா கட்சியிடம் தங்கள் கட்சியை அடகுவைத்துவிட்ட தலைவர்களை புறமொதுக்கி புதியதொரு தலைமையை, மாநில நலனை முதன்மைப்படுத்தும் தலைமையை உருவாக்கிட வேண்டும்.
கட்டுரையாளர் :-
ராஜன் குறை கிருஷ்ணன் -
பேராசிரியர், அம்பேத்கர் பல்கலைக்கழகம், புதுதில்லி. இவரைத் தொடர்புகொள்ள: rajankurai@gmail.com.