திங்கள், 21 பிப்ரவரி, 2022

போரைத் தூண்டுவது யார்?

ரஷ்யா,உக்ரைன் இரு நாடுகளையும் போர்செய்யத் தூண்டி

குளிர்காய எண்ணுகிறது 

அமெரிக்கா!

உலகமே உற்று நோக்கும் ரஷ்யா - உக்ரைன் போர் விவகாரம், வெறும் இரு நாட்டு பிரச்னை அல்ல.  இதன் பின்னணியில் மிகப்பெரிய உலக அரசியல் நடந்து கொண்டிருக்கிறது. 

ஐரோப்பாவில் ஆதிக்கம் செலுத்த காய் நகர்த்தும் ரஷ்யாவை, உக்ரைன் எனும் துருப்பு சீட்டை கொண்டு வெட்டித் தள்ள அமெரிக்கா துடித்துக் கொண்டிருக்கிறது. 


பொருளாதார தேவைக்காகவும், அதிகாரப் பசிக்காகவும் உலக யுத்தத்தை நடத்த வல்லரசுகள் தயாராகி வருகின்றன.அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் அடங்கிய நேட்டோ படையில் அண்டை நாடான உக்ரைன் இணைவதை விரும்பாத ரஷ்யா, அந்நாட்டை ராணுவ பலத்தை கொண்டு கைப்பற்ற திட்டமிட்ட விவகாரம் கடந்த சில நாட்களாக உலகையே உலுக்கிக் கொண்டிருக்கிறது. தனது அண்டை நாட்டில் நேட்டோ படைகள் மூலமாக அமெரிக்கா, ஐரோப்பிய நாட்டு ராணுவங்கள் முகாமிடுவதை ரஷ்யா விரும்பவில்லை. 

ஆனால், சோவியத் யூனியனில் ஒரே நாடாக இருந்த உக்ரைன், ரஷ்யாவை மீறி, ஐரோப்பிய நாடுகளுடன் நெருக்கம் காட்டுகிறது. ஐரோப்பிய நாடுகளும் உக்ரைனுக்கு ஆதரவாக இருப்பதால், இந்த விவகாரம் 3ம் உலகப் போருக்கு வழிவகுக்கும் அளவுக்கு சிக்கலாகி உள்ளது

உண்மையில் , உக்ரைன் நேட்டோவில் சேர்வது மட்டும் இப்பிரச்னைக்கு காரணமா? என்றால், நிச்சயமாக இல்லை. 

இதன் பின்னணியில் உலக ஆதிக்க சக்திகளின் பயங்கரமான அரசியல் பின்னிப் பிணைந்துள்ளது. இயற்கை எரிவாயு வளமிக்க நாடு ரஷ்யா. ஐரோப்பிய நாடுகளின் எரிவாயு தேவையை அதிகளவில் பூர்த்தி செய்வதும் இதுதான். 

அந்த இடத்தை பிடிக்க அமெரிக்கா பல ஆண்டாக தீவிரமாகப் போராடி வருகிறது. 

அதில் ஓரளவு வெற்றியும் கண்டுள்ளது. இப்படிப்பட்ட நிலையில், ரஷ்யாவில் இருந்து ஜெர்மனி வரை பால்டிக் கடலுக்கு அடியில் 1,222 கிமீ தொலைவுக்கு எரிவாயு குழாய் அமைக்கும், ‘நார்டு ஸ்ட்ரீம்-2’ விரிவாக்க திட்டத்தை ரஷ்ய அரசு திட்டமிட்டது. இந்த திட்டத்தின் மூலம் பின்லாந்து, ஸ்வீடன், போலந்து ஆகிய நாடுகள் வழியாக ஜெர்மனியை எரிவாயு குழாய் சென்றடையும்


இதன் மூலம், ரஷ்யா நேரடியாக ஜெர்மனிக்கு எரிவாயு சப்ளை செய்ய முடியும். ஜெர்மனி மூலமாக மற்ற ஐரோப்பிய நாடுகளுக்கு மலிவான விலையில் எரிவாயு வழங்க முடியும். 

இதை வைத்து ரஷ்யா, ஜெர்மனியின் பொருளாதாரம் மேம்படுவதோடு, ஐரோப்பிய கண்டத்தில் ரஷ்யா தனது ஆதிக்கத்தை முழுமையாக நிலைநாட்ட முடியும்.

அதோடு, ஐரோப்பாவுக்கு அமெரிக்காவின் தேவையே இல்லாமல் செய்ய முடியும். பொருளாதார ரீதியாக அமெரிக்க டாலரை விட ஐரோப்பாவின் யூரோ மதிப்பை அதிகரித்து உலக வர்த்தக கரன்சியாக மாற்ற முடியும். இதுதான் பிரச்னையின் ஆணி வேர். ஆனால், ஐரோப்பா மீதான தனது பிடி எந்த விதத்திலும் தளர்த்து விடக்கூடாது என்பதில் அமெரிக்கா உறுதியாக உள்ளது. 

இதனால்தான், அமெரிக்காவின் ஒபாமா, டிரம்ப், பைடன் என சமீபத்திய அதிபர்கள் அனைவருமே இந்த எரிவாயு குழாய் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். 

இதன் காரணமாக கடந்த ஆண்டு செப்டம்பரில் இந்த திட்டம் நிறைவு பெற்ற போதிலும் ஜெர்மனி தரப்பில் அனுமதி தரப்படாமல் உள்ளது. அமெரிக்காவின் ஒரே குறி நார்டு ஸ்ட்ரீம் திட்டத்தை தகர்த்து விட வேண்டும் என்பது மட்டுமே. அதே சமயம், ரஷ்யாவும், ஜெர்மனியும் பழைய நண்பர்கள். 

இவர்கள் மீண்டும் நெருக்கமாவது ஐரோப்பிய யூனியனுக்கு நல்லதல்ல என ஐரோப்பிய உறுப்புகள் நாடுகள் சில கவலைப்படுகின்றன.

இதன் காரணமாக, அமெரிக்காவுடன் இணைந்து எரிவாயு குழாய் திட்டத்தை தரைமட்டமாக்க முழு ஆதரவு தருகின்றன. இதற்காக பயன்படுத்தப்படும் துருப்பு சீட்டுதான் உக்ரைன். 

அதோடு, ஐரோப்பியா முழுவதற்கும் எரிவாயு சப்ளை செய்ய தொடங்கிவிட்டால் தங்கள் நாட்டிற்கான எரிவாயு சப்ளையை ரஷ்யா தன்னிச்சையாக நிறுத்திவிடும் என உக்ரைன் அஞ்சுகிறது. 
இதுவே ஐரோப்பிய யூனியனுடன் இணைந்தால், ரஷ்யாவின் மிரட்டல்களில் இருந்து விடுபடலாம் என நினைக்கிறது.

எனவே, உக்ரைனை பயன்படுத்தி ரஷ்யாவின் கனவை தகர்க்க அமெரிக்கா, இங்கிலாந்து போன்ற நாடுகள் வரிந்து கட்டி களம் இறங்கி உள்ளன. உக்ரைன் மீது ரஷ்யா கைவைத்தால், அமெரிக்கா உள்ளிட்ட நேட்டோ படைகள் உக்ரைனை காப்பாற்றுகிறதோ இல்லையா, நார்டு ஸ்ட்ரீம் திட்டக் குழாய்களை துவம்சம் செய்வதைத்தான் முக்கிய குறிக்கோளாக கொண்டு செயல்படும்.
 அந்த பயத்தினால்தான் ரஷ்யாவும் உக்ரைன் மீது கைவைக்க தயக்கம் காட்டி வருகிறது.


சமீபத்தில் ஜெர்மனி பிரதமர் ஓலப் ஸ்கால்ஸ் உடனான சந்திப்புக்கு பின் கூட்டாக பேட்டி அளித்த அமெரிக்க அதிபர் பைடன், ‘உக்ரைனில் ரஷ்யா ஆக்கிரமித்தால் எங்களின் முதல் குறி நார்டு ஸ்ட்ரீம் எரிவாயு குழாய்களாகத்தான் இருக்கும்.

 அதன் பின் அந்த குழாய்கள் இருக்கவே இருக்காது. அந்த திட்டத்தை நிறுத்தி விடுவோம்,’ என்றார். அதற்கான அதிகாரம் ஜெர்மனியிடம் இருக்கும் போது எப்படி திட்டத்தை நிறுத்துவீர்கள்? என செய்தியாளர்கள் கேட்டதற்கு பைடன் பதிலளிக்கவில்லை. 

அதே சமயம், எந்த ஒரு இடத்திலும் நார்டு ஸ்ட்ரீம் திட்டம் குறித்து ஜெர்மனி இதுவரை வாய் திறக்கவில்லை. ஜெர்மனியை பொறுத்த வரை அத்திட்டம் வெற்றி அடைய வேண்டும் என்பதே விருப்பமாக உள்ளது.


ரஷ்யாவின் ராஜ தந்திரம் கிளர்ச்சி படை மூலம்  தாக்குதல் துவங்கியது: எரிவாயு குழாய்கள் மீது குண்டுவீச்சு

உக்ரைனில் ரஷ்யா கிளர்ச்சியாளர்களை தூண்டி விட்டு பல காலமாக, அந்நாட்டுக்கு தொல்லை கொடுத்து வருகிறது.
 இந்த கிளர்ச்சியாளர்கள் கிழக்கு உக்ரைனின் பல பகுதிகளை தங்களின் கட்டுப்பாட்டில் வைத்துள்ளனர். 
இவர்களுக்கான பொருளாதார தேவைகளை ரஷ்யாதான் பூர்த்தி செய்து வருகிறது. 

உக்ரைன் எல்லையை சுற்றி ராணுவத்தை நிறுத்தியுள்ள ரஷ்யாவின் அடுத்தக்கட்ட நடவடிக்கைகளை அமெரிக்காவும், நேட்டோ நாடுகளும் கண்காணித்து வருகின்றன. 
அதனால், தாக்குதலை தாமதப்படுத்தி வரும் ரஷ்யா, கிளர்ச்சியாளர்கள் மூலம் ் உக்ரைனில் தனது தாக்குதலை தொடங்கி விட்டதாக சந்தேகம் எழுந்துள்ளது.

இவ்வளவு நாட்களாக அமைதியாக இருந்த கிளர்ச்சி படைகள், திடீரென படைகளை திரட்டி வருகின்றனர். 
இதனால் பீதி அடைந்துள்ள இப்பகுதி மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேறி வருகின்றனர். இதற்கு கிளர்ச்சி படைகளும் உதவி வருகின்றன. இதுவரையில் 7 லட்சம் மக்கள் வெளியேற்றப்பட்டு வேறு பகுதிக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். 
இந்நிலையில், கிழக்கு உக்ரைனில் லுஹான்ஸ்க்கில் உள்ள எரிவாயு குழாய் மீது நேற்று முன்தினம் வெடிகுண்டு வீசி தாக்கப்பட்டதில் அது வெடித்து சிதறியது. இந்த தாக்குதல் நடந்த சிறிது நேரத்தில் நகரில் உள்ள பெட்ரோல் நிலையமும் தாக்கப்பட்டது. இந்த 2 தாக்குதல்களிலும் உயிரிழப்பும் ஏற்பட்டுள்ளது. 
இந்த தாக்குதல்களை நிகழ்த்தியது யார் என இன்னும் உறுதி செய்யப்படவில்லை. 
ஆனால், ரஷ்யாவின் உத்தரவின் பேரில் கிளர்ச்சியாளர்கள் நடத்திய தாக்குதலாக இது இருக்கலாம் என அமெரிக்கா கூறுகிறது.

உக்ரைன் எல்லையை ஒட்டி ரஷ்ய படைகள் குவிக்கப்பட்டுள்ள சமீபத்திய செயற்கைக்கோள் படங்கள் நேற்று வெளியாகின. 
அதில், அரை மணி நேரத்தில் உக்ரைனை அடையக் கூடிய வகையில் கிரிமியா எல்லையில் ரஷ்யா போர் விமானங்களையும், ஹெலிகாப்டர்களையும், தரைப்படையையும் நிலைநிறுத்தி உள்ளது. அங்கு மருத்துவ கட்டமைப்புகளையும் ஏற்படுத்தி உள்ளது. 
அமெரிக்கா உக்ரைனை சுற்றி ரஷ்யா 1.90 லட்சம் வீரர்களை நிறுத்தி இருப்பதாக கூறி வருகிறது.

கடந்த 2019ம் ஆண்டு புள்ளி விவரங்களின்படி, ஐரோப்பிய யூனியனின் எரிவாயு தேவையில் 5 சதவீதத்துக்கும் குறைவாக அமெரிக்கா பூர்த்தி செய்து வந்தது. 
முக்கிய சப்ளையர்களாக ரஷ்யா (41%), நார்வே (16%), அல்ஜீரியா (7.6%), கத்தார் (5.2%) ஆகியவை உள்ளன. 
கடந்த ஆண்டில் இந்த சப்ளையில் முன்னேற்றம் அடைந்த அமெரிக்கா, ஐரோப்பாவுக்கான எரிவாயு ஏற்றுமதியை தற்போது 23 சதவீதமாக அதிகரித்துள்ளது. 
பிரான்ஸ், இத்தாலி, ஸ்பெயின், கிரீஸ், போர்ச்சுகல் மற்றும் சில சிறிய நாடுகளும் எரிவாயுவுக்கு அமெரிக்காவையே நம்பி உள்ளன.
----------------------------------------------------------------------------
மனிதாபிமானம்.