தூத்துக்குடி நிலத்தடியில் கடல் நீர்
துாத்துக்குடியில், 12 கி.மீ., துாரம் வரை கடல் நீர் ஊடுருவியுள்ளதே, அங்கு நிலத்தடி நீர் மாசுபாட்டுக்கு முக்கியமான காரணம்,''
என, வ.உ.சிதம்பரம் கல்லுாரியின் நிலத்தியல் துறை உதவிப் பேராசிரியர் சே.செல்வம் தெரிவித்துள்ளார்.
கடந்த 1985 முதல் நடைபெற்று வந்த பல்வேறு ஆய்வுகளின் அடிப்படையில், இந்தக் கருத்தை, இவர் தெரிவித்துள்ளார்.
பெருநிறுவனங்கள் வெளியிடும் நீர் கழிவுகளால் மட்டுமல்ல துாத்துக்குடி நிலத்தடி நீர் மாசானது .கடல் நீரும் புகுந்து மாசு அதிகரித்து விட்டது. என்கிறார் பேராசிரியர் செல்வம்.
கடல்நீர் அருகில் உள்ள நிலத்தில் ஊடுவுவது என்பது, கடலோரப் பகுதிகள் அனைத்திலும் காணப்படும் பிரச்னை தான். துாத்துக்குடியிலும் இதுதான் நடைபெற்றுள்ளது.
1985 முதல் நடைபெற்று வந்த பல்வேறு நிலவியல் ஆய்வு முடிவுகள், இதற்கு ஆதாரமாக விளங்குகின்றன. கடந்த 2010 முதல் நானே இந்த ஆய்வில் ஈடுபட்டு வருகிறேன்.
இதில் ஒரு விஷயம் தெளிவாகத் தெரிகிறது.துாத்துக்குடியின் நிலத்தடி நீர் உப்பு கரிக்கிறது, அதனைக் குடிநீர்த் தேவைகளுக்குப் பயன்படுத்த முடியவில்லை என்ற குறைபாடு சொல்லப்படுகிறது.
இதற்கு முதன்மையான காரணம், கடல்நீர் படிப்படியாக துாத்துக்குடி நிலத்தில் ஊடுருவுவது தான். பத்தடி தோண்டினாலேயே உப்பு நீர் தான் கிடைக்கும் வெல்லப்பட்டி, புதுார் பாண்டியாபுரம், முள்ளக்காடு, தாளமுத்து நகர், முத்தையாபுரம் போன்ற பகுதிகள், கடலுக்கு அருகே இருப்பதால், இங்கேயெல்லாம் நிலத்தடி நீர் இன்னும் உப்பாக இருக்கும்.
கடல் நீர் ஊடுருவல் படிப்படியாக நடந்திருக்கிறது. 1993ல் கடலில் இருந்து 1.5 கி.மீ., துாரம் வரை ஊடுருவிய கடல் நீர், 2007ல், 5 கி.மீ., வரை;- 2011ல், 6 கி.மீ., வரை; 2014ல் 8 கி.மீ., துாரத்திற்கு பரவியது.
கடந்த 2018க்குப் பின், கடல்நீர், துாத்துக்குடியின் நிலத்தடியில் 12 கி.மீ., துாரத்துக்கு ஊடுருவி உள்ளது.இதை நான்கு முதன்மையான காரணிகளைக் கொண்டு உறுதிப்படுத்தினோம்.
மொத்த கரைந்த திட கலவைப் பொருள், மின்கடத்து திறன், சோடியம்,கால்சியம் ஆகிய நான்கு அம்சங்கள், 1985 முதல் 2020 வரை எவ்வளவு துாரம் அதிகமாகியுள்ளன என்று அளவீடு செய்தோம்.
உதாரணமாக, நிலத்தடி நீரின் அமிலத்தன்மையை பி.எச்., என்ற அளவீட்டைக் கொண்டு கணக்கிடுவோம்.
1985ல், கடற்கரையில் இருந்து 1 கி.மீ., துாரத்தில் எடுக்கப்பட்ட மாதிரியில், அந்தத் தண்ணீர் அனைத்து விதமான பயன்பாடுகளுக்கும் ஏற்றதாக இருந்தது.ஆனால், 2007ல், பி.எச்., அளவு 7.8 ஆக இருந்தது. 2011ல், 10.2 ஆக உயர்ந்தது. இது, கடற்கரையில் இருந்து 7 கி.மீ., தொலைவில் எடுக்கப்பட்ட மாதிரியில் இருந்து பெறப்பட்ட தகவல்.
கடந்த 2020 கொரோனா ஊரடங்கு காலத்தில், துாத்துக்குடி மாநகராட்சியில் பி.எச்., அளவு, 8.9 என்ற காரத்தன்மையைத் தொட்டுள்ளது.
இதேபோன்று, 1985ல், துாத்துக்குடி கடற்கரையில் இருந்து, 1.5 கி.மீ., தொலைவில் எடுக்கப்பட்ட மின்கடத்துத் திறன், ஒரு சென்டிமீட்டருக்கு 2,000 'மைக்ரோசீமென்ஸ்' ஆக இருந்தது.
இது, 2011ல், கடலில் இருந்து 7 கி.மீ., தொலைவில் எடுக்கப்பட்டபோது, சென்டிமீட்டருக்கு 10 ஆயிரம் மைக்ரோசீமென்ஸ் ஆக இருந்தது.
கடந்த 2019ல், கடற்கரையில் இருந்து, 12 கி.மீ., தொலைவிலும் மின்கடத்துத் திறன், ஒரு சென்டிமீட்டருக்கு, 13 ஆயிரத்து, 920 மைக்ரோசீமென்ஸ் இருந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதேபோல், மொத்த கரைந்த திடக் கலவைப் பொருளின் அளவும் அதிகரித்துள்ளது.
1985ல் கடற்கரையில் இருந்து, 1.5 கி.மீ., தொலைவில் எடுக்கப்பட்ட மாதிரியில், ஒரு லிட்டரில், 2,000 மில்லி கிராம் அளவுக்கு மொத்த கரைந்த திடக் கலவைப் பொருள் இருந்தது.
அதுவே, 2007ல் கடலில் இருந்து, 5 கி.மீ., தொலைவில் எடுக்கப்பட்ட மாதிரியில், ஒரு லிட்டருக்கு, 6,000 மில்லி கிராம் இருந்தது. 2018ல் இது ஒரு லிட்டருக்கு 12 ஆயிரத்து 500 மில்லிகிராம் அளவுக்கு அபாயகரமாக உயர்ந்துள்ளது.
இந்திய தர நிர்ணய அமைப்பான பி.ஐ.எஸ்., குடிநீருக்கான அளவீடாக ஒரு லிட்டருக்கு, 2,000 மில்லிகிராம் தான் இருக்க வேண்டும் என்று தெரிவிக்கிறது.
இந்த வரையறைகள், துாத்துக்குடியில் சாத்தியமே இல்லாமல் இருக்கின்றன.'சோடியம், கால்சியம், பொட்டாசியம், சல்பேட், குளோரைடு, பைகார்பனேட்' என்று ஒவ்வொரு அளவும், 1985ல் இருந்து தொடர்ந்து அதிகரித்தே வந்துள்ளது.
துாத்துக்குடி கடற்கரையில் இருந்து ஊருக்குள் 12 கி.மீ., வரை, இந்த அமிலத்தன்மை அதிகரித்துள்ளது. |
பேராசிரியர் செல்வம். |
இதுதான் பிரச்னை. அரசு சில விஷயங்களைச் செய்ய வேண்டும். உப்பு உற்பத்திக்காக கடற்கரை ஓரம் நிலத்தடி நீரை எடுக்கும் பம்புகளை மூட வேண்டும்.
மழை நீர் நிலத்தினுள் இறங்காமல் இருக்கும்படி நகர் முழுக்க மண் தரையே இல்லாமல் சிமின்டினால் தளம் அமைக்கப்படுகிறது.
சாலை ஓரங்கள்,கழிவு நீர் சாக்கடைகள்,வீடுகள், வணிகத்தளங்கள்,தனியார் கட்டிடங்கள் முதல் அரசு கட்டிடங கள் வரை எங்குமே மண் தரை இல்லை. கான்கிரிட்தான் .இதனால் மழை நீர் கடலுக்கே செல்கிறது.நிலத்தடி நீராகும் வாய்ப்பே இல்லை.
நல்ல தண்ணீரைக் கொண்டு இந்தப் பகுதி முழுக்க மறு ஊட்டம் செய்ய வேண்டும். இப்படிச் செய்தால் தான் துாத்துக்குடியில் மேலும் கடல் நீர் ஊடுருவலைத் தடுக்க முடியும்.இவ்வாறு அவர் கூறினார்.
------------------------------------------------------------------------------