NEET;இதுவரை என்ன நடந்தது?
தமிழ்நாட்டில் தீவிரமாகி வரும் நீட் விலக்கு மசோதா
விவகாரத்தில்இதுவரைநடந்தது
பிப்ரவரி 3, 2022: நீட் விலக்கு மசோதாவை தமிழ்நாடு சட்டப்பேரவை சபாநாயகருக்கு திருப்பி அனுப்பி மறுபரிசீலனை செய்ய ஆளுநர் அறிவுரை
பிப்ரவரி 2, 2022: மக்களவையில் நீட் விவகாரம் குறித்து காங்கிரஸ் எம்.பி ராகுல்காந்தியும், ஆளுநரின் செயல்பாட்டை விமர்சித்து திமுக குழு தலைவர் டி.ஆர். பாலுவும் பேச்சு
ஜனவரி 17, 2022: சில முயற்சிகளுக்குப் பிறகு தமிழகத்தைச் சேர்ந்த அனைத்து கட்சி எம்.பி.க்கள் குழு டெல்லியில் இந்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்து நீட் விலக்கு மசோதாவை குடியரசு தலைவருக்கு அனுப்பி வைக்குமாறு ஆளுநருக்கு உத்தரவிட கோரியது.
இந்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்த தமிழக அனைத்து கட்சி எம்.பிக்கள் குழு
ஜனவரி 8, 2022: அனைத்து கட்சி கூட்டத்துக்கு முதல்வர் ஸ்டாலின் அழைப்பு
ஜனவரி 6, 2022: டெல்லியில் உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்திக்க தமிழக அனைத்து கட்சி எம்.பிக்கள் மேற்கொண்ட முயற்சி பலன் கொடுக்கவில்லை.
ஜனவரி 5, 2022: தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி சட்டப்பேரவையில் அரசின் திட்டங்களை விளக்கி ஆற்றிய தமது முதலாவது உரையில், நீட் தேர்வுகள் கிராமப்புற மாணவர்களுக்கு எதிராக சமமற்ற தளத்தை உருவாக்குகின்றன என்பதும், அது தேவையற்றது என்பதும் அரசின் கருத்து என்று தெரிவித்தார். தமிழகத்தில் நீட் தேர்வுக்கு தடை விதிக்கும் மசோதாவை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்துக்கு அனுப்பாததற்காக ஆளும் கட்சியின் கடும் விமர்சனத்தை எதிர்கொண்டுள்ள நிலையில் ஆளுநர் இவ்வாறு உரையாற்றினார்.
டிசம்பர் 30, 2022: இந்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா அழைத்ததாகக் கூறி டெல்லி சென்ற தமிழக அனைத்துக் கட்சி எம்.பிக்கள் குழுவால் அவரை சந்திக்க முடியவில்லை.
டிசம்பர் 29, 2022: குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தை சந்தித்து நீட் விலக்கு மசோதா விவகாரம் தொடர்பாக மனு அளிக்க தமிழக அனைத்து கட்சி எம்.பிக்கள் முயன்றனர். ஆனால், கொரோனா வழிகாட்டுதல் நெறிகள் காரணமாக, அந்த மனுவை தமது அலுவலக செயலாளர் மூலம் பெற்றுக் கொண்டு குடியரசு தலைவர் அனுப்பி வைத்தார்.
தமிழக ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் ஸ்டாலின் சந்திப்பு
நவம்பர் 27, 2021: முதல்வர் மு.க.ஸ்டாலின் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை சந்தித்து, நீட் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிக்கக் கோரி சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட மசோதாவுக்கு குடியரசு தலைவரின் ஒப்புதலைப் பெற நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக் கொண்டார்.
அக்டோபர் 5, 2021: செப்டம்பர் 12, 2021 அன்று நடைபெற்ற நீட்-யுஜி 2021 தேர்வை நியாயமாகவும், வெளிப்படையாகவும் நடத்தவில்லை என்றும் அதை ரத்து செய்யக் கோரியும் தாக்கல் செய்யப்பட்ட மனுவை இந்திய உச்ச நீதிமன்றம் நிராகரித்தது. நீட்-யுஜி தேர்வை ரத்து செய்யக் கோரி 20 வயதான மனுதாரர் தாக்கல் செய்த அந்த மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.அக்டோபர் 4, 2021: நீட் தேர்வுக்கு எதிராக வலுவான எதிர்ப்புக் குழுவை உருவாக்கும் முயற்சியில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அக்டோபர் 4ஆம் தேதி, பாஜக கூட்டணியில் அல்லாத 12 மாநிலங்களின் முதல்வர்களுக்கு கடிதம் எழுதினார். பஞ்சாப், ராஜஸ்தான், மேற்கு வங்கம், மகாராஷ்டிரா, ஜார்க்கண்ட், சத்தீஸ்கர், ஆந்திரா, ஒடிசா, தெலங்கானா, டெல்லி, கேரளா மற்றும் கோவா ஆகிய மாநில முதல்வர்களுக்கு அந்த கடிதம் எழுதப்பட்டிருந்தது.
தமிழக ஆளுநராக பதவிப்பிரமாணம் எடுத்துக் கொள்ளும் ஆர்.என். ரவி
செப்டம்பர் 18, 2021: தமிழ்நாட்டின் புதிய ஆளுநராக ஆர்.என். ரவி பதவியேற்றார்.
செப்டம்பர் 13, 2021: இளங்கலை மருத்துவப் படிப்புகளில் நீட் தேர்வு முறையை விலக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மசோதா தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டது. தமிழ்நாடு இளங்கலை மருத்துவப் பட்டப் படிப்புகளுக்கான சேர்க்கை மசோதா, 2021 2017ஆம் ஆண்டுக்கு முன்பு இருந்ததைப் போல பன்னிரண்டாம் வகுப்பு மதிப்பெண்கள் அடிப்படையில் நடத்த வேண்டும் என்று அந்த மசோதாவில் கூறப்பட்டிருந்தது.
செப்டம்பர் 12, 2021: நீட் தேர்வை எழுத பதிவு செய்யப்பட்ட விண்ணப்பதாரர்களில் 95 சதவீதத்திற்கும் அதிகமானோர் நாடு முழுவதும் 3,800 க்கும் மேற்பட்ட மையங்களில் நடத்தப்பட்ட மருத்துவ நுழைவுத் தேர்வில் கலந்து கொண்டனர்.
ஜூலை 16, 2021: தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் எம்.சுப்பிரமணியன், இந்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானை டெல்லியில் சந்தித்து மருத்துவ நுழைவுத் தேர்வு 'நீட் 2021' தொடர்பான பிரச்னைகள் குறித்து விவாதித்தார்.
இந்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானை சந்திக்கும் தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன்
ஜூலை 13, 2021: தேசிய தேர்வு முகமை (NTA) NEET-UG 2021 இன் தேர்வு முறையில் மாற்றங்களை அறிமுகப்படுத்தியது. NEET (UG)-2021 இன் தேர்வு முறை இரண்டு பிரிவுகளைக் கொண்டுள்ளது. ஒவ்வொரு பாடமும் இரண்டு பிரிவுகளைக் கொண்டது. பிரிவு A 35 கேள்விகளையும் பிரிவு B 15 கேள்விகளையும் கொண்டிருந்தது. இந்த 15 கேள்விகளில், விண்ணப்பதாரர்கள் ஏதேனும் 10 கேள்விகளை முயற்சிக்கலாம் என்று என்டிஏ கூறியிருந்தது.
மே 7, 2021: தமிழக ஆளுநர் ஆக இருந்த பன்வாரிலால் புரோகித் சட்டப்பேரவையில் தேர்தலில் பெரும்பான்மையுடன் வெற்றி பெற்ற திமுக தலைவர் மு.க. ஸ்டாலினுக்கு முதல்வராக பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.
மார்ச் 13, 2021: தமிழகத்தின் எதிர்கட்சியான திராவிட முன்னேற்றக் கழகம் (திமுக), சட்டப்பேரவை தேர்தலுக்கான தனது அறிக்கையை வெளியிட்டது. அதில் மருத்துவத் தேர்வுக்கான தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வை (நீட்) ரத்து செய்வதற்கான சட்டம் கொண்டு வர உறுதியளிக்கப்பட்டிருந்தது.
செப்டம்பர் 17, 2020: திமுக தலைவர் மு.க. ஸ்டாலின், "மாநிலத்தில் திமுக ஆட்சிக்கு வந்தால் நீட் தேர்வை ரத்து செய்ய சட்ட வழிகள் ஆராயப்படும் என்றும் சட்டப்பேரவையின் அதிகாரம் மற்றும் நீதிமன்றங்களின் ஆதரவுடன் நீட் விலக்கு மசோதாவை நிறைவேற்றி அமல்படுத்தும் என்று அறிவித்தார்.
-------------------------------------------------------------------------+
குஜராத் மாடல் வளர்ச்சி
நான் குஜராத்தில் அஹமதாபாத்தில் மூன்று வருடங்கள் எங்கள் வங்கியில் உயர் அதிகாரியாகப் பணி புரிந்தேன்(2009 முதல் 2012 வரை). எங்கள் வங்கியின் கிளைகள் மொத்தமே 42 தான் குஜராத்தில் அப்போது இருந்தது.தமிழ்நாட்டில் 600க்கு மேல் இருந்தது.அதுவும் அகமதாபாத், சூரத் , பரோடா, ராஜ்கோட் போன்ற பெரிய நகரங்களில் மட்டுமே கிளைகள் இருந்தது.26 மாவட்டங்களில் 20 மாவட்டங்களில் ஒரு கிளை கூடக் கிடையாது.
ரிசர்வ் வங்கியின் லைசென்ஸ் 50 கிளைகளுக்கும் மேல் பாக்கி இருந்தது.என் ஜெனரல் மேனேஜர் என்னிடம் அந்தப் பொறுப்பை கொடுத்தார்.நான் ஏற்கனவே மும்பை, உத்தரப் பிரதேசம் போன்ற வட இந்தியாவில் பணியாற்றியதால் ஹிந்தி நன்கறிந்தவன்.
அடுத்த மூன்று வருடங்களில் குஜராத்தில் இருந்த 26 (2009ல்) மாவட்டங்களிலும் எல்லா ஊர்களுக்கும் பயணித்து கிளைகளை நிறுவினேன்.அதனால் இந்தக் கேள்விக்கு நான் பதில் கூற முடியும்.
தமிழ்நாடு ஒரு ஆல்ரவுண்டர் மாநிலம்.விவசாயம்,தொழில், சர்வீஸ் என்ற மூன்று துறைகளிலும் முன்னணி மாநிலம்.தொழிற்சாலைகளின் எண்ணிக்கை அதிகம்.
மேலும் சமுதாய முன்னேற்றத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கும் மாநிலம்.கல்வி, சுகாதாரம்,மருத்துவம் ,சுற்றுலா ,ஐடி,மீடியா ,சினிமா போன்ற எல்லா துறைகளிலும் சிறந்து விளங்கும் மாநிலம் நம் தமிழ்நாடு.ஆனால் குஜராத்தில் தொழில் துறை வளர்ச்சி மட்டுமே உள்ளது,
அதுவும் ஒரு சில குறிப்பிட்ட துறைகளில் குறிப்பிட்ட இடங்களில் மட்டுமே உண்டுஅஹமதாபாத், சூரத், பரோடா போன்ற நகரங்களில் மட்டுமே நல்ல வளர்ச்சி உண்டு.
பால் வள துறையில் நல்ல வளர்ச்சி கண்ட மாநிலம்.
ஒரு சிறிய உதாரணம் போதும்.குஜராத்தில் மின்வெட்டு கிடையாது.
ஆனால் மின்சாரக் கட்டணம் நிஜ ஷாக் கொடுக்கும்.நான் அங்கு சென்ற முதல் பில் (பைமன்த்லி) 5000 ரூபாய் வந்தது.
ஒரு யூனிட்டுக்கு வீட்டு உபயோகத்திற்கே 7 ரூபாய்க்கு மேல்.அதுவும் 2009 லேயே.இலவச மின்சாரம் கிடையாது, விவசாயம் உள்பட.
மது விலக்கு என்பது ஒரு காமெடி.2009 ஜூலை மாதம் ஒரே நாளில் 130க்கும் மேல் கள்ளச் சாராய சாவு. ஒரு போன் செய்தால் சரக்கு ஹோம் டெலிவரி.
காந்தி பிறந்த போர்பந்தர் நகரில் மெயின் ரோட்டில் சட்டத்துக்குப் புறம்பான பார் (Bar). எல்லாம் பஞ்சாப் மற்றும் ராஜஸ்தான் கடத்தல் சரக்கு.
லஞ்சம் ஊழல் இரண்டும் எல்லாத் துறைகளிலும் (institutionalised)அங்கீகரிக்கப்பட்ட விஷயம்.அதனால் வெளியே தெரியாது.
கல்வித்தரம்,மருத்துவம் எல்லாம் மிகவும் சுமார் ரகம்.(except central institutions like IIM,NIT ).
சுற்றுலாத்துறை,IT, மீடியா சினிமா எல்லாம் சராசரிக்கும் கீழ்தான்.ஆட்டோமொபைல் தொழிலுக்கு முக்கியத்துவம் கொடுத்துப் பார்த்தார்கள்.பெரிதாக ஒன்றும் பலன் இல்லை.ஒரு டாடா மோட்டார்ஸ் மற்றும் போர்டு மோட்டார்ஸ் வந்தது ஆனால் ஜெனரல் மோட்டார்ஸ் மற்றும் போர்டு இரண்டுமே வந்த வேகத்தில் மூடிவிட்டு போய்விட்டனர்.
- பார்மா மற்றும் கெமிக்கல் துறை அதிகம்.ஆனால் பொல்யூசன் மிக அதிகம்.
- வாபி,பாரூச் நகரங்கள் நரகம்.மூக்கைப் பொத்தாமல் ஊரில் நடக்க முடியாது.பருத்தி விளைச்சல் அதிகம் ஆனால் அத்தனையும் தமிழ்நாட்டில் உள்ள பஞ்சாலைகளுக்குத் தான் வரும்.
- சமூக முன்னேற்றத்திற்கு முக்கியத்துவம் கொடுக்காத ஒரு மாநிலம்.
- ஏழைகளின் முன்னேற்றத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்காத ஒரு மாநிலம்.
- தமிழகத்தைப்போல இலவச கல்வி சத்துணவு போன்றவை கிடையாது.ரேஷன் கடைகள் கூட அதிகம் கிடையாது.
- ஆனால் குஜராத் மக்கள் பழகுவதற்கு இனிமையானவர்கள்.
- குஜராத்தில் உள்ள தாஹோத் (dahod),தாங்ஸ் (The dangs) போன்ற மாவட்டங்கள் ஆதிவாசிகள் நிறைந்த மிகவும் பின் தங்கிய அடிப்படை வசதிகள் கூட இல்லாத மாவட்டங்கள்.
- அங்கு உள்ள துவாரகா சோம்நாத் கோவில்கள் நம் மீனாட்சியம்மன் கோவில், ஸ்ரீரங்கம் கோவிலின் அழகோ கம்பீரமோ கிடையாது.
- மிகவும் சுமார்.
- 2010 முதல் முதலீட்டாளர்கள் மாநாடு என்ற பெயரில் இன்னொரு காமெடி உண்டு.பத்து லட்சம் கோடி முப்பது லட்சம் கோடி என்று கதை கட்டுவார்கள்.
- ஆனால் பெரிதாக ஒன்றும் முதலீடு வராது.2010 ல் முதல் மாநாட்டில் பெரிய அளவில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கணக்கு காண்பிப்பதற்காக எங்கள் வங்கி மற்றும் எல்லா வங்கிகளையும் தலா 10000 கோடி 20000 கோடி என்று பெயரளவுக்கு ஒப்பந்தம் செய்ய வைத்தனர்.அது இன்றளவும் தொடர்கிறது.
- மொத்தத்தில் குஜராத் நல்ல மார்க்கெட்டிங் செய்ததன் மூலம் மிகைப்படுத்தப்பட்ட ஒரு சாதாரண வட இந்திய மாநிலம்.அவ்வளவு தான்.
- தமிழ்நாடு நிச்சயமாக குஜராத்தை விட முன்னேறிய மாநிலம் தான்.
- திரு. மோடி அவர்கள் தான் அப்போது மாநிலத்தின் மூன்றாவது முறையாக முதலமைச்சராக இருந்தார்.
- +--------------------------------------------------+நிதிநிலை அறிக்கை என்ற பெயரால் நிதியை நிர்மூலம் செய்யும் அறிக்கையை ஆண்டுதோறும் வாசித்துக் கொண்டு இருக்கிறார் ஒன்றிய நிதிஅமைச்சர் நிர்மலா சீதாராமன்!
பா.ஜ.க. அரசின் ஒற்றைக் கொள்கையாக, அரசின் சொத்துகளை விற்பது மட்டுமே இருக்கிறது. அதனைத் தான் வேறு வார்த்தைகளில் சொல்லி வருகிறார்கள். விற்றோம் - விற்றுக் கொண்டிருக்கிறோம் - விற்போம் என்பதைத்தான் ஆண்டுதோறும் கூறுகட்டி கூவிக்கூவி ஏலம் விட்டுக் கொண்டு இருக்கிறார்கள். அதுவும் பொதுத்துறை பங்குகளை விற்பதைக் கொள்கையாகவே வைத்துள்ளார்கள்.இந்த ஆண்டு இந்திய ஆயுள் காப்பீட்டுக்கழகம், பாரத்பெட்ரோலியம், கப்பல் கழகம், கண்டெய்னர் கழகம் ஆகியவற்றின் பங்குகளை விற்கப் போகிறார்கள். ஏற்கனவே, ஏர் இந்தியாவை விற்றுவிட்டதை பெருமையாகச் சொல்லி இருக்கிறார் நிர்மலா சீதாராமன். அடுத்த நிதி ஆண்டில் அரசின் பங்குகளை விற்று 65 ஆயிரம் கோடியை இலக்கு வைத்துள்ளதாகவும் சொல்லி இருக்கிறார்.
மத்தியதர வர்க்கம் அதிகம் எதிர்பார்ப்பது வருமான வரி விலக்கு உச்சவரம்பில் மாற்றம் இருக்குமா என்பதுதான். அதில் மாற்றம் இல்லை என்று சொன்னதன் மூலமாக மத்தியதர வர்க்கத்தினர் மொத்தப்பேரையும் கைவிட்டு விட்டார்கள். வருமான வரி விலக்கு உச்சவரம்பானது இரண்டரை இலட்சத்தில் இருந்து மூன்று லட்சம் ஆகலாம் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இந்த சலுகை தரப்படவில்லை. 2 லட்சம் இருந்ததை 2.50 லட்சமாக 2014 ஆம் ஆண்டு அன்றைய நிதிஅமைச்சர் அருண்ஜெட்லி மாற்றினார். அதன்பிறகு மாற்றப்படவே இல்லை.இந்த நிதிநிலை அறிக்கையின் மிக முக்கியமான பலனே, ஏழைகள் நலன்தான் என்று சொல்லி இருக்கிறார் பிரதமர். எதைவைத்துச் சொல்லி இருக்கிறார் என்று சொன்னால் நன்றாக இருக்கும். குடைக்கு வரி போட்டு, வைரத்துக்கு வரியை விலக்கியதை வைத்துச் சொல்கிறாரா எனத் தெரியவில்லை. ஒரு சிலிண்டர் விலை 915 ரூபாய். அதில் எந்த விலைக் குறைப்பும் இல்லை.
ஒன்றரை ஆண்டு காலமாகப் போராடித்தான் மூன்று வேளாண் சட்டங்களையும் திரும்பப் பெற வைத்தார்கள் விவசாயிகள். அவர்கள் கேட்டது, குறைந்தபட்ச ஆதார விலையை சட்டபூர்வமாக நிறைவேற்றித் தர வேண்டும் என்பதாகும். அது குறித்து இந்த நிதி நிலை அறிக்கையில் எதுவும் இல்லை. விவசாயத்தில் ட்ரோன் பயன்பாட்டை ஊக்குவிக்கப் போவதாக அறிவித்துள்ளார்கள். கங்கை நதிக்கரையில் இயற்கை விவசாயம் செய்யப் போகிறார்களாம். இன்னும் இவர்கள் கங்கையை விட்டு இறங்கி வரத் தயாராக இல்லை.
தமிழ்நாடு:
தமிழ்நாட்டுக்கு இந்த நிதிநிலை அறிக்கையில் எதுவுமில்லை என்பதை முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் அறிக்கை முழுமையாகத் தெளிவுபடுத்தி விட்டது. தமிழக அரசின் சார்பில் ஒன்றிய அரசிடம் வைக்கப்பட்ட எந்த கோரிக்கைக்கும் நிதி ஒதுக்கீடு இல்லை. தமிழ்நாட்டுக்கான புதிய திட்டங்கள் இல்லை. புதிய ரயில்வே திட்டங்கள் இல்லை. மழை, வெள்ளம் காரணமாக நாம் கேட்ட இழப்பீடுகள் வழங்கப்படுவதாக அறிவிப்புகள் இல்லை. கோதாவரி - பெண்ணாறு - காவிரி நதிநீர் திட்டத்துக்கான முதல்கட்ட நிதி ஒதுக்கீடு இல்லை.
தமிழகத்தில் அமைய உள்ள இராணுவ பெருவழித்திட்டத்துக்கு நிதி ஒதுக்கீடு இல்லை. இப்படி தமிழ்நாட்டுக்கு எதுவுமே இல்லை என்பதுதான் இந்த நிதி நிலை அறிக்கை!
மாநிலங்களுக்கு 1 லட்சம் கோடி நிதி ஒதுக்குவதாக அறிவித்துள்ளார்கள். ஆனால் அது மாநிலத்தின் கையில் ஒப்படைக்கப்படாது. பிரதமரின் கதிசக்தி திட்டத்துக்குத்தான் ஒதுக்கப்படும். இதை விட மாநிலங்களை அவமானப்படுத்த முடியுமா? மாநிலங்களுக்கான மொத்த நிதிப்பற்றாக்குறை வரம்பு 4 விழுக்காடு குறைக்கப்பட்டுள்ளது.
சரக்கு சேவை வரி இழப்பீட்டுத் தொகை வழங்குவதை தொடர வேண்டும் என்ற மாநிலங்களின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டுள்ளது. ஒரே நாடு - ஒரே பத்திரப்பதிவு என்பதும் மாநில உரிமைப் பறிப்பாகும். மாநிலங்களுக்கு வரும் வருமானமே பத்திரப் பதிவுதான். அதுவும் பறிபோகப் போகிறது.
திரும்பத் திரும்ப ஒரே பொய்:
இந்த நிதி நிலை அறிக்கையில் மிகப்பெரியமாய்மாலம் என்பது கோதாவரி காவிரி இணைப்பு என்ற கதையாகும். கோதாவரி - கிருஷ்ணா - பெண்ணையாறு - -காவிரி ஆகியவை இணைக்கப்படும் என்று சொன்னதை பலரும் கொண்டாடுகிறார்கள்.
2.9.2017ஆம் ஆண்டும் இதையே சொல்லி இருக்கிறார் மோடி. ஐந்தரை லட்சம் கோடி செலவில் 60 நதிகளை இணைக்கும் திட்டத்தை பிரதமர் மோடி தொடக்கி வைக்கப்போவதாக அன்றைய தினம் செய்தி வெளியாகி உள்ளது. இவர்கள் பேச்சை மாற்றிக் கொள்வதே இல்லை என்பதற்கு இது ஒரு உதாரணம்.
ஆறுதல்:
கொரோனா காலத்து இழப்பீடாக மக்களுக்கு ஏதாவது இருக்கிறதா என்று கேட்பீர்களேயானால் இதோ இருக்கிறது. தொலைபேசி வழியாக 24 மணிநேரமும் மனநல ஆலோசனை வழங்கும் திட்டத்தை அறிமுகம் செய்துள்ளார்கள். இதுதான் கொரோனா காலத்துக்காகச் செய்வது!
பெருங்காயத்துக்கு வரி குறைத்துள்ளார்கள். மக்களின் பெரும், காயத்துக்கு மருந்திடுவதாக ஒன்றிய அறிக்கை இல்லை. காகிதமில்லா பட்ஜெட் என்கிறார் நிர்மலா சீதாராமன்.
மக்களுக்கு சாதகமில்லாத பட்ஜெட்!
கார்பரேட் பணமுதலைகளுக்கான பட்ஜெட்.
------------------------------------------------