க(லவர)ள நிலவரம்
உத்தரப்பிரதேசத்தைப் பொறுத்தவரை சட்டம் ஒழுங்கு எத்தகைய கொடூர நிலையில் இருக்கிறது என்பது ஊரறிந்த விஷயம்.
உத்தரப்பிரதேசத்தில் கடந்த ஐந்து ஆண்டுக் கால பாஜக ஆட்சியில் மக்களின் அடிப்படை விருப்பங்களைக்கூடப் பூர்த்தி செய்ய முடியாத லட்சணத்தில்தான் சட்டம் ஒழுங்கு இருந்தது. சிறுபான்மையினர், பெண்கள், எதிர்க்கருத்து சொல்பவர்கள், தலித்துகள் எனப் பலர் மீது பாஜக அரசு அராஜகப் போக்கைக் கையாண்டுள்ளது.
உ.பி-யில் வன்முறை கிட்டத்தட்ட இயல்புநிலையாகிவிட்டது. உண்மைநிலை இப்படியிருக்க, சட்டம் ஒழுங்கில் சாதனை படைத்துவிட்டதாக பாஜக மார்தட்டிப் பெருமை பேசுகிறது.2012-17 சமாஜ்வாதி ஆட்சிக் காலத்தில் அகிலேஷ் யாதவ் முதல்வராக இருந்தபோது சட்டம் ஒழுங்கு மோசமாக இருந்ததாகவும், பாஜக ஆட்சிக் காலத்தில் சட்டம் ஒழுங்கு மேம்பட்டுள்ளதாகவும் உள்துறை அமைச்சர் அமித் ஷா கடந்த ஜனவரி 29ஆம் தேதி பேசியிருக்கிறார்.
நாட்டின் உள்துறை அமைச்சரே இப்படிப் பேசியிருப்பது இந்திய அரசியலின் அவலநிலையையே காட்டுகிறது.
கடந்த ஐந்து ஆண்டுகளில் பாஜக ஆட்சியில் உத்தரப்பிரதேச சட்ட ஒழுங்கு நிலை எவ்வளவு அதலபாதாளத்துக்குப் போயிருக்கிறது என்பதைப் பார்க்கலாம்.
போலீஸ் வன்முறை
2020-21ஆம் ஆண்டு தேசிய மனித உரிமை ஆணையம் நாடு முழுவதும் போலீஸாரால் நடத்தப்பட்ட மனித உரிமை மீறல்கள் குறித்து 11,130 வழக்குகளைப் பதிவு செய்துள்ளது.
இதில் பெரும்பாலான வழக்குகள் உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்தவை. 2017 மார்ச் மற்றும் 2018 டிசம்பர் இடையே உத்தரப்பிரதேசத்தில் போலீஸாரால் சட்டவிரோதமாக 59 பேர் கொல்லப்பட்டுள்ளதாக ஐநா சிறப்பு அறிக்கையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
போலீஸ் காவலில் நடந்த மரணங்கள் தொடர்பாக 2017-2021 ஆண்டுகளில் உத்தரப்பிரதேச அரசுக்கு தேசிய மனித உரிமை ஆணையம் ஐந்து நோட்டீஸ்கள் அனுப்பியுள்ளது.
ஆனால் உ.பி அரசு அதையெல்லாம் கண்டுகொள்ளவில்லை.
எதிர்க்கருத்தாளர்கள் மீது தாக்குதல்
ஒவ்வொரு நபரும் அமைதிவழியில் போராட்டம் நடத்துவது அடிப்படை மனித உரிமை என 2020 ஜூலை மாதம் ஐநா மனித உரிமைக்குழு உறுதிபட தெரிவித்தது.
2012ஆம் ஆண்டு ராம்லீலா மைதான வழக்கில் உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பிலும் போராடுவது அடிப்படை உரிமை எனக் கூறப்பட்டுள்ளது.
ஆனால், சிஏஏ சட்டத்துக்கு எதிராக உத்தரப்பிரதேசத்தில் நடந்த போராட்டங்களின்போது, போலீஸாருடன் ஏற்பட்ட மோதலில் சிலர் கொல்லப்பட்டனர். மேலும் ஆயிரக்கணக்கானோர் கைது செய்து தடுப்புக் காவலில் வைக்கப்பட்டனர்.
சிஏஏ எதிர்ப்புப் போராட்டங்களின்போது பல இடங்களில் இணையம் துண்டிக்கப்பட்டது. வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் போராடியபோதும் பலர் கைது செய்யப்பட்டனர்; சிலர் கொலையும் செய்யப்பட்டனர்.
போலீஸ் என்கவுண்டர்
2017 மார்ச் மாதத்துக்கும் 2021 ஆகஸ்ட் மாதத்துக்கும் இடையே உ.பி போலீஸ் என்கவுண்டர்களில் 146 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
இதே காலத்தில் சுமார் 8,472 என்கவுண்டர்கள் நடத்தப்பட்டு 3,302 பேர் படுகாயமடைந்துள்ளனர். இதனால் பலர் உடல் ஊனமுற்றுள்ளனர். 2017 முதல் 2020ஆம் ஆண்டு ஆகஸ்ட் வரை என்கவுண்டர்களில் கொல்லப்பட்டவர்களில் 37% பேர் இஸ்லாமியர்கள்.
உத்தரப்பிரதேசத்தில் நடக்கும் என்கவுண்டர் கொலைகள் குறித்து 2019ஆம் ஆண்டு ஜனவரியில் ஐநா மனித உரிமை நிபுணர்கள் வேதனை தெரிவித்தனர்.
பெண்களுக்கு எதிரான குற்றங்கள்
தேசிய மகளிர் ஆணையத்தின் தகவல்படி, 2021ஆம் ஆண்டின் முதல் எட்டு மாதங்களில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் 46% உயர்ந்துள்ளன.
இதில் பாதிக்கும் மேலான புகார்கள் உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்தவை. இதையெல்லாம் தாண்டி உ.பி-யில் பெண்களும், எருமை மாடுகளும், காளை மாடுகளும் பாதுகாப்பாக இருப்பதாக அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் கூறினார்.
தேசியக் குற்றப் பதிவு ஆணையத்தின் தகவலின்படி, 2018ஆம் ஆண்டில் நாடு முழுவதும் பெண்களுக்கு எதிராக 3,78,277 குற்றங்கள் நடந்துள்ளன.
இதில் அதிகபட்சமாக உத்தரப்பிரதேசத்தில் 59,445 குற்றங்கள் நடந்துள்ளன.
2019லும் அதிகபட்சமாக உ.பி-யில் பெண்களுக்கு எதிராக 59,853 குற்றங்கள் நிகழ்ந்துள்ளன.
ஹத்ராஸில் ஒரு தலித் பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதுகுறித்து ஐநா அதிகாரிகளும் வேதனை தெரிவித்தனர்.
சிறுபான்மையினர் மீது தாக்குதல்
2021ஆம் ஆண்டில் கிறிஸ்தவர்களுக்கு எதிராக 300 வன்முறை குற்றங்கள் நிகழ்ந்துள்ளதாக உண்மை கண்டறியும் குழு அறிக்கை கூறுகிறது.
இதில் அதிகபட்சமான குற்றங்கள் உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்தவை. குறிப்பாக, தலித் மற்றும் பழங்குடியின சமூகங்களைச் சேர்ந்த கிறிஸ்தவர்களுக்கு எதிராக ஏராளமான தாக்குதல்கள் நடந்துள்ளன.
2019ஆம் ஆண்டில் தலித்துகளுக்கு எதிரான குற்றங்களில் நாட்டிலேயே உத்தரப்பிரதேசம் முதலிடத்தில் உள்ளது.
அந்த ஆண்டில் நாட்டில் நிகழ்ந்த தலித்துகளுக்கு எதிரான 45,852 குற்றங்களில், நான்கில் ஒரு பங்கு குற்றங்கள் உ.பி-யில் நடந்துள்ளதாக தேசிய குற்றப் பதிவு ஆணையத்தின் தகவல் கூறுகிறது.
2019ஆம் ஆண்டு டிசம்பர் 31ஆம் தேதி வரை உ.பி சிறைகளில் இருந்தவர்களில் 65 விழுக்காட்டுக்கும் மேற்பட்டவர்கள் தலித், பழங்குடி மற்றும் ஓபிசி வகுப்புகளைச் சேர்ந்தவர்கள்.
அதிகபட்சமான சிறைவாசிகள் பிற்படுத்தப்பட்ட, தலித் வகுப்புகளைச் சேர்ந்தவர்கள்.
மாட்டிறைச்சி சாப்பிட்டதற்காக இஸ்லாமியர்கள், தலித்துகள் உள்ளிட்ட பலர் மீது நடந்த தாக்குதல்களுக்கு பாஜகவே காரணம் என்பது மனித உரிமை கண்காணிப்பகத்தின் அறிக்கை மூலம் தெளிவாகிறது.
பத்திரிகையாளர்கள் மீது ஒடுக்குமுறை
உ.பி-யில் பத்திரிகை சுதந்திரம் மற்றும் பத்திரிகையாளர்களின் பாதுகாப்பு தொடர்பான பிரச்சினைகளைத் தீர்க்கும்படி முதல்வர் யோகி ஆதித்யநாத்துக்கு 2020 நவம்பர் மாதம் இந்திய எடிட்டர்ஸ் கில்டு கடிதம் எழுதியது.
கொரோனா ஊரடங்கு காலத்தில் 55 பத்திரிகையாளர்கள் தங்கள் வேலையை செய்ததற்காகவே தாக்கப்பட்டதாகவும் ஒரு ரிப்போர்ட் கூறுகிறது.
கலவரங்கள்
தேசியக் குற்றப் பதிவு ஆணையத்தின் தகவல்படி உத்தரப்பிரதேசத்தில் 2019ஆம் ஆண்டு 5,714 கலவரங்களும், 2018ஆம் ஆண்டில் 8,908 கலவரங்களும், 2017ஆம் ஆண்டில் 8,990 கலவரங்களும் நடந்துள்ளன.
மக்களவையில் உள்துறை இணையமைச்சர் ஹான்ஸ்ராஜ் கங்காராம் அஹிர் வழங்கிய பதிலில், 2017ஆம் ஆண்டு உ.பி-யில் 195 சமூகக் கலவரங்கள் நடந்துள்ளதாகத் தெரிவித்தார்.
2018 - 2020 ஆண்டுகளில் உத்தரப்பிரதேசத்தில் 120 வழக்குகளில் தேசியப் பாதுகாப்புச் சட்டம் பயன்படுத்தப்பட்டுள்ளது.
இதில் 94 வழக்குகளை அலகாபாத் உயர் நீதிமன்றம் ரத்து செய்துவிட்டது.
பசு கொலை தொடர்பாக 41 வழக்குகள் பதியப்பட்டுள்ளன. இதில் குற்றம்சாட்டப்பட்டவர்கள் அனைவரும் சிறுபான்மை சமூகங்களைச் சேர்ந்தவர்கள். தேசியப் பாதுகாப்பு சட்டம் தவறாகப் பயன்படுத்தப்படுவதாக உயர் நீதிமன்றமே கடுமையாகச் சாடியது.
இவையெல்லாம் கடந்த ஐந்து ஆண்டுகளில் உ.பி-யில் நடந்த அராஜகங்களின் ஒரு மேற்பார்வை மட்டுமே.
சமூக வெறுப்பின் மூலம் வளரும் ஒரு கட்சி இப்படிப்பட்ட சட்டம் ஒழுங்கு நிலையைக் கொண்டாடித் தீர்க்கிறது. பாஜக கொடுக்கும் நல்லாட்சிக்கு உத்தரப்பிரதேசம் ஒரு சான்று என்றால், இந்தியாவின் நிலைதான் என்ன?
வெறும் பொய் சொல்வது மட்டுமே இந்திய அரசியலின் அடிப்படையாகிவிட்டது.
எனவே, நம் கண்முன்னே நடக்கும் அராஜகத்தை அம்பலப்படுத்த வேண்டியதும், குரலற்றவர்களுக்குக் குரல் கொடுக்க வேண்டியதும் முற்போக்கு சக்திகளின் பொறுப்பாக உள்ளது.
-மரு. அப்துல்லா நசீர்:
--------------------------------------------------------------------------------------------