திங்கள், 3 ஜூன், 2013

பேரீச்சை

-
அத்தியாவசிய சத்து நிறைந்த கனியென்றால் அது பேரீச்சை என்று சொல்லி விடலாம். அந்த அளவுக்கு வைட்டமின்கள்,  தாதுக்கள் மற்றும் சத்துப்பொருட்கள் இதில் நிறைந்துள்ளன. சீரான உடல் வளர்ச்சிக்கும், நலமாக இருப்பதற்கும் ஒவ்வொருவரும்அவசியம் சாப்பிட வேண்டும்.

எளிதாக ஜீரணமாகும் சதைப்பகுதி மற்றும் ஒற்றைச் சர்க்கரைகள் நிறைந்தது பேரீச்சை. உண்டதும் புத்துணர்ச்சியும், சக்தியும் உடலுக்கு கிடைக்கிறது.  அதனால் தான் விரதத்தை நிறைவு செய்பவர்கள் பேரீச்சைப் பழம் எடுத்துக் கொள்கிறார்கள். பேரீச்சை, எளிதில் ஜீரணமாகும் நார்ச்சத்து கொண்டது.  குடற்பகுதியில் இருந்து, கெட்ட கொழுப்புகளை உறிஞ்சி அகற்றும் ஆற்றல் பேரீச்சைக்கு உண்டு.
பெருங்குடற் பகுதியில் புற்றுநோயை உருவாக்கும் ரசாயனங்களை நீக்குவதிலும் பேரீச்சை பங்கெடுக்கிறது. டேனின்ஸ் எனும் நோய் எதிர்ப்பொருள்  பேரீச்சையில் உள்ளது. நோய்த் தொற்று, ரத்தம் வெளியேறுதல், உடல் உஷ்ணமாதல் ஆகியவற்றுக்கு எதிராக செயல்படக்கூடியது டேனின்ஸ்.  வைட்டமின் ஏ, பேரீச்சையில் ஏராளமான அளவில் உள்ளது. இது கண் பார்வைக்கும்,குடல் ஆரோக்கியத்திற்கும், சருமத்திற்கும் அவசியமானது.

சிறந்த நோய் எதிர்ப்பொருள்களான லுடின்,ஸி-சாந்தின் மற்றும் பீட்டா கரோட்டின் நிறைந்துள்ளது. இவை உடற்செல்களை காப்பதோடு, தீங்கு  விளைவிக்கும் பிரீ-ரேடிக்கல்களை விரட்டுவதிலும் பங்கெடுக்கிறது. குடல், தொண்டை, மார்பகம், நுரையீரல், இரப்பை ஆகிய உறுப்புகளைத் தாக்கும்  புற்றுநோய்களுக்கு எதிராக செயல்படக் கூடியது.

பேரீச்சை இரும்புச் சத்தை ஏராளமாக அள்ளி வழங்கும். 100 கிராம் பேரீச்சையில் 0.90 மில்லிகிராம் இரும்பு உள்ளது. இரும்புத் தாது, ரத்தத்திற்கு  சிவப்பு நிறம் வழங்கும் ஹிமோகுளோபின் உருவாக்கத்தில் பங்கு வகிப்பதாகும். இது ரத்தம் ஆக்சிஜனை சுமந்து செல்லும் அளவை தீர்மானிப்பதிலும்  பங்கெடுக்கிறது.

பொட்டாசியம் தாது குறிப்பிட்ட அளவில் உள்ளது. உடலுக்குத் தேவையான மின்னாற்றலை வழங்கும் தாதுவாக பயன்படுகிறது. உடற்செல்களும்,உடலும் வளவளப்புடன் இருக்கவும் பொட்டாசியம் அவசியம். இதயத்துடிப்பு மற்றும் ரத்த அழுத்தம் ஆகியவற்றை கட்டுப்படுத்துவதிலும் பங்கு வகிக்கிறது. பக்கவாதம், இதய வியாதிகள் ஏற்படாமலும் காக்கிறது.

கால்சியம், மாங்கனீசு, தாமிரம், மக்னீசியம் போன்ற அத்தியாவசிய தாதுக்களும் உள்ளது. கால்சியம் எலும்புகள் மற்றும் பற்களின் பலத்திற்கு அவசியம். நாடித் துடிப்பை சீராக்குதல் மற்றும் ரத்தக் கட்டி ஏற்படுவதைதடுத்தல் ஆகியவற்றிலும் பங்கு வகிக்கிறது. ரத்த சிவப்பனுக்கள் உற்பத்தியில் தாமிரம் பங்கு வகிக்கிறது. மக்னீசியம் எலும்புகளின் வளர்ச்சிக்கு உதவுகிறது. பி-காம்ப்ளக்ஸ் வைட்டமின்கள் பேரீச்சம் பழத்தில் மிகுந்துள்ளது.
------------------------------------------------------------------------------------------------------------------------------------

"ஹியுமன் பாப்பிலோமா"

-------------------------------------------------------
ஹாலிவுட் பிரபலம் ஒருவரிடம் இருந்து இந்தக் கருத்து வருவது சற்று பரபரப்பைத் தோற்றுவித்திருப்பதுடன், ஹியுமன் பாப்பிலோமா வைரஸ் பற்றிய விழுப்புணர்வின் அவசியத்தையும் வலியுறுத்தியுள்ளது.
 "தனக்கு தொண்டையில் புற்றுநோய் வந்ததற்குக் காரணம் தன்னுடைய வாய்ப் புணர்ச்சி வழக்கம்தான்"என்று மூத்த ஹாலிவுட் நடிகர் மைக்கேல் டக்ளஸ் கூறியுள்ளார்.
68 வயதாகும் மைக்கேல் டக்ளஸுக்கு தொண்டையில் புற்றுநோய் இருப்பது மூன்று ஆண்டுகளுக்கு முன்பு கண்டுபிடிக்கப்பட்டிருந்தது.
தற்போது தி கார்டியன் பத்திரிகையில் அவர் பேட்டி கொடுத்துள்ளார்.
புகைப்பழக்கமும் குடிப்பழக்கமும் புற்றுநோயின் பொதுவான காரணங்கள் என்ற நிலையில், தன்னுடைய நெடுநாள் புகைப்பழக்கம், குடிப்பழக்கம் ஆகியவற்றுக்காக வருந்துகிறீர்களா என்று அவரிடம் கேட்கப்பட்டது.
அதற்கு இல்லை என்று ஒற்றை வார்த்தையில் பதிலளித்த மைக்கேல் டக்ளஸ், "இதுபற்றி விளக்கமாகச் சொல்ல நான் விரும்பவில்லை, ஆனாலும் எனக்கு வந்திருக்கின்ற குறிப்பிட்ட அந்த புற்றுநோயின் குறிப்பிட்ட காரணம் ஹியுமன் பாப்பிலோமா வைரஸ் என்ற கிருமியால் ஏற்படுவது. பெண்களின் மர்ம உறுப்பிலும் காணப்படுகின்ற ஒரு கிருமி இது." எனக் கூறியிருந்தார்.

90களின் ஆரம்பத்தில் ஒரு பழக்கத்திலிருந்து விடுபட இவருக்கு மருத்துவமனை சிகிச்சை அளிக்கப்பட்டிருந்தது.
சிலர் அதீத உடலுறவுப் பழக்கத்துக்கு டக்ளஸ் சிகிச்சை பெறுகிறார் என்று அப்போது கூறியிருந்தனர்.
ஆனால் அதெல்லாம் இல்லை என்று மறுத்திருந்த டக்ளஸ், குடிப்பழக்கம் அளவுக்கதிகமாகியதால்தான் சிகிச்சை பெற்றதாக விளக்கமளித்திருந்தார்.
தற்போது மைக்கேல் டக்ளஸ் வெளிப்படையாகப் பேசியிருப்பதை உறவுகள் தொடர்பான மனோதத்துவ நிபுணர்சூசன் குவில்லியம் வரவேற்றார்.
"மைக்கேல் டக்ளஸ் மிகவும் தைரியமாகவும் வெளிப்படையாகவும் தனக்கு வந்த நோய் அந்த நோய்க்கான காரணம் பற்றி பேசியுள்ளார். அவரைப் போன்ற பிரபலம் இப்படி வெளிப்படையாகப் பேசுவது பாலுறவுப் பழக்கங்கள் தொடர்பில் சமூகத்திடையே வெளிப்படையாக சில எச்சரிக்கைகளை முன்வைக்க எங்களைப் போன்றவர்களுக்கு உதவியாக இருக்கிறது. ஒருவர் உடலில் இருந்து இன்னொருவர் உடலுக்கு திரவங்கள் பரிமாறும் எந்த வழக்கத்திலும் ஆபத்து இருக்கத்தான் செய்கிறது என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்."

"ஹியுமன் பாப்பிலோமா" வைரஸ்

ஹியுமன் பாப்பிலோமா வைரஸ் கிருமித் தொற்று ஏற்பட்டால் ஆண்கள் பெண்களுடைய மர்ம உறுப்புகளில் சிரங்கு வரும்.
உடலுறவு மூலம் எளிதாகப் பரவுகின்ற ஒரு கிருமி இது.
இந்தக் கிருமித் தொற்று ஏற்பட்டால் பல நேரங்களில் எவ்வித தொந்தரவும் ஏற்படுத்தாமல் அது தானாகவே அகன்றுவிடுகிறது.
ஆனால் அந்தக் கிருமியின் குறிப்பிட்ட சில வகைகள் புற்றுநோயை ஏற்படுத்தவல்லவை.
பெண்களுடைய கர்ப்பப்பை வாயில் புற்றுநோய் ஏற்பட இந்தக் கிருமியின் குறிப்பிட்ட சில வகை காரணமாக உள்ளது
அதேபோல ஆணுறுப்பு, பெண்ணுறுப்பு, ஆசனவாய், வாய், தொண்டை போன்றவற்றில் புற்றுநோய் ஏற்படுவதற்கும் இந்தக் கிருமிக்கும் இடையே தொடர்பு இருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது.

ஹெச் பி வி கிருமித் தொற்றிலிருந்து ஒருவர் தன்னைப் பாதுகாத்துக்கொள்ள உடலுறவின்போது ஆணுறை போன்ற சாதனங்களைப் பயன்படுத்தலாம் என்பது பரவலாக அறியப்பட்ட ஒரு விஷயம்.
ஆனால் வாய்ப் புணர்ச்சி, ஆசன வாய்ப் புணர்ச்சி, ஆழமாக முத்தமிடும் வழக்கம் போன்றவற்றாலும்கூட இந்தக் கிருமி பரவுகிறது.
பலரோடு பாலுறவு வைத்துக்கொள்ளும் வழக்கம் உடையவர் எனும்போது, இந்தக் கிருமித் தொற்று ஏற்படுவதற்கான ஆபத்தும் அதற்கேற்றார்போல அதிகரிக்கிறது.
ஆனால் இந்தக் கிருமி நம்மில் மிக அதிமானோரிடையே காணப்படும் ஒரு கிருமியாகும்.
ஆனால் ஒரு சிலரில்தான் இது புற்றுநோயை ஏற்படுத்துகிறது. தவிர புற்றுநோய் வருவதற்கு புகைப்பழக்கம் குடிப்பழக்கம் என்ற மற்ற காரணிகளும் உண்டு.
------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------