கண்ணதாசன்----பிறந்தார்.!
நான்காயிரத்திற்கும் மேற்பட்ட கவிதைகள், ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்ட திரைப்படப் பாடல்கள், எழுதியிருக்கிறார். திருமகள், திரை ஒலி, மேதாவி, தென்றல், தென்றல்திரை, முல்லை, கண்ணதாசன் ஆகிய இதழ்களின் ஆசிரியராக இருந்தவர். தமிழக அரசின் அரசவைக் கவிஞராக இருந்தவர். சாகித்ய அகாதமி விருது பெற்றவர்.
சிறுகதை, நாவல், கட்டுரை, கவிதை என்று இலக்கியத்தின் பல்வேறு
துறைகளிலும் முத்திரை பதித்தார். கண்ணதாசன் 1927-ம் ஆண்டு ஜுன் மாதம்
24-ந்தேதி ராமநாதபுரம் மாவட்டம் திருப்பத்தூர் தாலுகா சிறுகூடல்பட்டி என்ற
கிராமத்தில் பிறந்தார். தந்தை பெயர் சாத்தப்ப செட்டியார். தாயார்
விசாலாட்சி ஆச்சி.
இந்த தம்பதிகளுக்கு மொத்தம் 9 குழந்தைகள். அவர்கள் பெயர் விவரம் வருமாறு:-
1.
கண்ணம்மை, 2. ஞானாம்பாள், 3. முத்தாத்தாள், 4. காந்திமதி, 5. கண்ணப்பன்,
6. ஏ.எல்.சீனிவாசன், 7. சொர்ணம்பாள், 8. முத்தையா (கண்ணதாசன்), 9. சிவகாமி.
9
குழந்தைகள் பிறந்த காரணத்தால், சாத்தப்ப செட்டியார் ஏழ்மையில் வாழ்ந்தார்.
முதல் இரண்டு மகள்களுக்கு கஷ்டப்பட்டு திருமணம் செய்து வைத்தார். செட்டி
நாட்டில், அதிக பிள்ளைகள் உடையவர்கள், குழந்தை இல்லாத உறவினர்களுக்கு,
குழந்தைகளை சுவீகாரம் செய்து கொடுப்பது வழக்கம். தனது ஐந்தாவது மகன்
கண்ணப்பனையும், ஆறாவது மகன் ஏ.எல்.சீனிவாசனையும் பங்காளிகளுக்கு சுவீகாரம்
செய்த கொடுப்பதற்கு சாத்தப்ப செட்டியார் ஏற்பாடு செய்தார்.
அப்போது
ஏ.எல்.சீனிவாசன் நோஞ்சானாக இருந்தார். பெற்றோரைப் பிரிய மனமின்றி அழுதார்.
அதனால், முத்தையா (கண்ணதாசன்), 'அண்ணனுக்கு பதில் நான் சுவீகாரமாகச்
செல்கிறேன்' என்று முன்வந்தார்.
அவர், முத்துப்பட்டினத்தைச் சேர்ந்த
பழனியப்ப செட்டியார், சிகப்பி ஆச்சி தம்பதிகளுக்கு தத்துப்பிள்ளையாகச்
சென்றார். இப்படி சுவீகாரம் சென்ற முறையில் காரைக்குடி 'கம்பன் அடிப்பொடி'
சா.கணேசன், கண்ணதாசனுக்கு தாய்மாமன் ஆனார். (தத்து கொடுக்கப்பட்ட
கண்ணதாசனின் அண்ணன் கண்ணப்பனின் மகன்தான் பஞ்சு அருணாசலம். இவர்
பிற்காலத்தில் கண்ணதாசனுக்கு உதவியாளராக இருந்து, பல படங்களுக்கு கதை- வசன
ஆசிரியராகவும், பட அதிபராகவும் உயர்ந்தார்.)
கண்ணதாசனுக்கு
பெற்றோர் வைத்த பெயர் முத்தையா. பின்னர் கவிதைகள் எழுதத் தொடங்கும்போது,
அவர் கண்ணதாசன் என்ற புனை பெயரை சூட்டிக்கொண்டார். அந்தப் பெயரே நிரந்தரமாக
நிலைத்துவிட்டது. கண்ணதாசன் காரைக்குடி அருகில் உள்ள அமராவதிப் புதூரில்
இருக்கும் குருகுலம் உயர்நிலைப் பள்ளிக்கூடத்தில் 8-ம் வகுப்பு வரை
படித்தார். பிறகு படிக்க வசதி இன்றி தனது 17-வது வயதில் படிப்பை
நிறுத்தினார். அவர் படிக்கும்போது பள்ளியின் ஆசிரியராக இருந்தவர், 'நீ
உருப்படமாட்டாய்' என்று அடிக்கடி சொல்லி இருக்கிறார்.
'அவர்
சொன்னதின் பலனாகத்தானோ என்னவோ நான் உயர்ந்த நிலையில் இருக்கிறேன்' என்று
கண்ணதாசன் பிற்காலத்தில் கூட்டங்களில் பேசும்போது குறிப்பிடுவார். 1944-ம்
ஆண்டில் புதுக்கோட்டையில் இயங்கி வந்த 'திருமகள்' பத்திரிகை ஆசிரியராக
பொறுப்பு ஏற்றார். அவருக்கு வயது 17தான். கண்ணதாசன் எழுதிய கவிதைகள் அதில்
பிரசுரமாயின. 1945-ல் 'திரை ஒளி' பத்திரிகையின் ஆசிரியரானார், கண்ணதாசன்.
பிறகு அங்கிருந்து விலகி, 1947-ல் மாடர்ன் தியேட்டர்சார் நடத்திய 'சண்ட
மாருதம்' என்ற பத்திரிகைக்கு ஆசிரியர் ஆனார்.
'சண்ட
மாருதம்' ஆசிரியராக இருந்தபோது மாடர்ன் தியேட்டர்ஸ் கதை இலாகாவில்
கண்ணதாசன் இடம் பெற்றார். அப்போது மாடர்ன் தியேட்டர்ஸ் தயாரித்த
'மந்திரிகுமாரி' படத்துக்கு வசனம் எழுத மு.கருணாநிதி வந்தார்.
கருணாநிதிக்கும், கண்ணதாசனுக்கும் அறிமுகம் ஏற்பட்டு, நாளடைவில் நெருங்கிய
நண்பர்கள் ஆனார்கள். இந்தக் காலக்கட்டத்தில், திராவிட இயக்கத்தின் முக்கிய
தலைவர்களில் ஒருவராக கருணாநிதி விளங்கினார். கண்ணதாசனுக்கும், திராவிட
இயக்கத்தின் மீது ஈடுபாடு ஏற்பட்டது. திரைப்படங்களுக்கு பாடல்கள்
எழுதவேண்டும் என்று கண்ணதாசன் விரும்பினார்.
'சண்டமாருதம்'
பத்திரிகைக்கு ஆசிரியராக இருந்து வந்தால் பாடல் ஆசிரியர் ஆக முன்னேற
முடியாது என்று கண்ணதாசன் கருதினார். எனவே, பதவியை ராஜினாமா செய்துவிட்டு,
கோவை சென்றார். அங்கு ஜுபிடர் நிறுவனம், கேமரா மேதை கே.ராம்நாத் டைரக்ஷனில்
'கன்னியின் காதலி' என்ற படத்தைத் தயாரித்து வந்தது. ஜுபிடரின் மானேஜராக
இருந்த வெங்கடசாமி (நடிகை யூ.ஆர்.ஜீவரத்தினத்தின் கணவர்) சிபாரிசின்
பேரில், அந்தப் படத்துக்கு பாடல் எழுதும் வாய்ப்பு கண்ணதாசனுக்குக்
கிடைத்தது.
'கலங்காதிரு
மனமே, உன் கனவெல்லாம் நினைவாகும் ஒரு தினமே' என்ற பாடலை எழுதிக்கொண்டு
போய், டைரக்டர் ராம்நாத்திடம் கொடுத்தார், கண்ணதாசன். பாடல் டைரக்டருக்கு
பிடித்து விட்டது. அந்தப் பாடலை, கதாநாயகி மாதுரிதேவிக்காக டி.வி.ரத்னம்
பாடினார். கண்ணதாசனின் முதல் பாடலே 'ஹிட்' ஆகியது. கல்கத்தாவில் தேவகி போஸ்
என்ற பிரபல டைரக்டர் இருந்தார். அவர் வங்க மொழியில் தயாரித்த 'ரத்ன தீபம்'
என்ற படத்தை தமிழில் 'டப்' செய்வதற்கான ஏற்பாடுகள் நடந்தன.
அந்தப்
படத்துக்கு வசனம் எழுதும் வாய்ப்பு கண்ணதாசனுக்குக் கிடைத்தது. அவர்
கல்கத்தாவுக்குச் சென்று, வசனத்தை எழுதிக் கொடுத்துவிட்டு திரும்பினார்.
1953-ல் தி.மு.கழகம் நடத்திய டால்மியாபுரம் போராட்டத்தில் கண்ணதாசன் கலந்து
கொண்டார். அவருக்கு 1 ஆண்டு ஜெயில் தண்டனை விதிக்கப்பட்டது. அதன்பின்
'தென்றல்' என்ற வாரப் பத்திரிகையை தொடங்கினார்.
அதில் கண்ணதாசன் எழுதிய
கவிதைகளும், கட்டுரைகளும் அவருக்கு புகழ் தேடித்தந்தன. 1954-ல் நேஷனல்
புரொடக்ஷன்ஸ் என்ற படக்கம்பெனி, ஆங்கிலப்படம் ஒன்றின் கதையை தழுவி
'அம்மையப்பன்' என்ற படத்தை தயாரித்தது.
சரித்திரப்
பின்னணியுடன் இதன் திரைக்கதை- வசனத்தை கருணாநிதி எழுதினார். இதில்
எஸ்.எஸ்.ராஜேந்திரன், ஜி.சகுந்தலா ஜோடியாக நடித்தனர். ஏ.பீம்சிங் டைரக்ட்
செய்தார். இதே கதையை மாடர்ன் தியேட்டர்சார் 'சுகம் எங்கே' என்ற பெயரில்
சமூகப் படமாகத் தயாரித்தார்கள். கே.ஆர். ராமசாமி, சாவித்திரி நடித்த
இப்படத்தை கே.ராம்நாத் டைரக்ட் செய்தார். வசனத்தை கண்ணதாசனும், ஏ.கே.
வேலனும் எழுதினார்கள்.
இரண்டு
படங்களின் கதைகளும் ஒரே மாதிரி இருந்ததுடன், சில கட்டங்களில் வசனமும் ஒரே
மாதிரி இருந்தது! இதனால் கருணாநிதிக்கும், கண்ணதாசனுக்கும் உரசல்
ஏற்பட்டது. இருவருடைய கருத்து மோதல்களும், 'முரசொலி'யிலும், 'தென்ற'லிலும்
எதிரொலித்தன.
ஐம்பத்தைந்து வயதில் சரித்திரப் புகழை நாட்டி, நம்மிடமிருந்து மறைந்தவர் கவிஞர் கண்ணதாசன்.
இரண்டாம் திருமணம் பார்வதி என்பவரை செய்து கொண்டார். இவர்களுக்கு ஏழு குழந்தைகள் பிறந்தன. ஐம்பதாவது வயதில் வள்ளியம்மை என்பவரைத் திருமணம் செய்து கொண்டார்.
இவர்களுக்குப் பிறந்தவர் விசாலி.
1981ம் ஆண்டு அக்டோபர் 17ம்தேதி உடல்நலக்குறைவு காரணமாக இறந்தார்
சொற்கள் சாரத்தால் கவிதை தந்தவர் கண்ணதாசன். தமிழ்ப் பாடல்கள், தமிழ்க் கவிதை, சங்ககாலக் கவிதைகள், அதற்கும் முந்தைய கவிதைகள் போன்றவற்றில் உள்ள உயர் கருத்துகளை தமிழ் இலக்கியச் சுவை குறையாமல் பிழிந்து தந்து சென்றவர் கவிஞர் கண்ணதாசன்.
திரைப்பட பாடலாசிரியராகக் கொடிகட்டிப்
பறந்த கண்ணதாசன், சொந்தமாக படக்கம்பெனி தொடங்கி, படத்தயாரிப்பில்
ஈடுபட்டார். சில படங்கள் தோல்வி அடைந்ததால், அவர் பெரும் சோதனைகளை
அனுபவிக்க நேர்ந்தது.
'மாலையிட்ட
மங்கை', கண்ணதாசன் தயாரித்த முதல் படம். இது வெற்றிப்படம். பட உலகில்
இருந்து விலகி இருந்த டி.ஆர். மகாலிங்கத்துக்கு, இப்படம் புதுவாழ்வு
அளித்தது. நாடக நடிகையாக இருந்த மனோரமாவை, திரை உலகில் அறிமுகப்படுத்திய
படம் இதுதான். 1959-ல் சிவாஜிகணேசன், பத்மினி, ஜெமினி கணேசன்,
எஸ்.வரலட்சுமி, ஜாவர் சீதாராமன் ஆகியோர் நடிக்க 'வீரபாண்டிய கட்டபொம்மன்'
படத்தை பத்மினி பிக்சர்ஸ் தயாரித்தது. பி.ஆர்.பந்துலு டைரக்ட் செய்த இந்த
படம், தமிழின் முதல் டெக்னிக் கலர் படம்.
வசனத்தை
சக்தி கிருஷ்ணசாமி எழுதினார். இப்படம், அதிக பொருட்செலவில் பிரமாண்டமாகத்
தயாரிக்கப்பட்டது.
அதோடு மோதுகிற விதத்தில், 'சிவகங்கை சீமை' என்ற படத்தை
கண்ணதாசன் தயாரித்தார். கட்டபொம்மனுக்கும், சிவகங்கை சீமைக்கும் நெருங்கிய
ஒற்றுமை உண்டு. இரண்டு படங்களும், வெள்ளையர் ஆட்சிக்கு எதிராக நடந்த
போராட்டங்களை சித்தரிப்பவை. 'சிவகங்கை சீமை'யில் எஸ்.எஸ்.ராஜேந்திரன்,
பி.எஸ்.வீரப்பா, டி.கே.பகவதி, வளையாபதி முத்துகிருஷ்ணன், குமாரி கமலா,
எஸ்.வரலட்சுமி, எம்.என்.ராஜம் ஆகியோர் நடித்தனர்.
திரைக்கதை-வசனத்தை
கண்ணதாசன் எழுத, கே.சங்கர் டைரக்ட் செய்தார். இது, கறுப்பு- வெள்ளை படம்.
படம் தயாரானதும், அதை ஏவி.மெய்யப்ப செட்டியாருக்கு கண்ணதாசன்
போட்டுக்காட்டினார்.
படத்தைப் பார்த்த ஏவி.எம்., 'படம் நன்றாக
வந்திருக்கிறது. ஆனால், கட்டபொம்மன் படத்துடன் மோதவேண்டாம். அந்த படம்
வெளியாகி, 2 மாதங்களுக்குப் பிறகு ரிலீஸ் செய்யுங்கள்' என்று யோசனை
தெரிவித்தார். இதை கண்ணதாசன் கேட்கவில்லை. கட்டபொம்மனும், சிவகங்கை
சீமையும் ஒரே சமயத்தில் (1959 மே) வெளிவந்தன.
சிவாஜிகணேசனின்
அற்புத நடிப்பு, பிரமாண்டமான சண்டைக்காட்சிகள், கண்ணைக் கவரும் வண்ணம்-
இவற்றால், கட்டபொம்மன் ஓகோ என்று ஓடியது.
ஆனால் சிவகங்கை சீமை தரமானதாக
இருந்தும் கட்டபொம்மனை எதிர்த்து நிற்க முடியாமல் தோல்வி அடைந்தது.
சிவகங்கை சீமையால் கண்ணதாசனுக்கு ஏற்பட்ட நஷ்டம் கொஞ்சம்தான்.
ஆனால் அதற்கு
அடுத்தபடியாக, சந்திரபாபுவை கதாநாயகனாகப் போட்டு எடுத்த 'கவலை இல்லாத
மனிதன்' என்ற படம், அவரை பயங்கர நஷ்டத்திற்கு உள்ளாக்கியது.
இதுபற்றி அவரே தன் சுயசரிதையில் எழுதியிருப்பதாவது:-
'சிவகங்கைச்
சீமை'யில் எனக்கு நஷ்டம் தொண்ணூறாயிரம்தான். அதை ஒரு வருஷத்திற்குள்
தீர்த்து விட்டு நிம்மதியாக இருந்திருப்பேன். ஆனால், வலிமையான விதி என்னை
மேலும் மேலும் இழுத்தது. அது என் சிந்தனைகளைக் கெடுத்தது. சிவாஜி
நடிக்கவும், பீம்சிங் டைரக்ட் செய்யவும் என்னிடம் ஒப்புக்கொண்டிருந்தும்
கூட, நான் அவர்களை வைத்து எடுக்காமல், `கவலை இல்லாத மனிதன்' என்றொரு படத்தை
ஆரம்பித்தேன்.
அதுவே என்
கவலைகளுக்கெல்லாம் தாயாக அமைந்தது. என்னுடைய `பார்ட்னர்' மனம்போன போக்கில்
கையெழுத்துப் போட்டுக் கடன் வாங்கினார். அன்று சிவாஜி வாங்கியதை விட அதிக
தொகை கொடுத்து சந்திரபாபுவை போட்டேன். 'சிவகங்கை சீமை'யால் ஏற்பட்ட தாழ்வு
மனப்பான்மையும், சந்திரபாபு படுத்திய பாடும் என்னை நிம்மதி இழக்கச் செய்த
நிலையில் கதையை ஒழுங்காக எழுதாமல், 'கவலை இல்லாத மனிதன்' படத்தை எடுத்தேன்.
நன்றி
இல்லாத ஊழியர்கள், பொறுப்பில்லாத பார்ட்னர், எல்லாருமாகச் சேர்ந்து
பணத்தைப் பாழாக்கினார்கள். சந்திரபாபு தன் வழக்கப்படி, பேசிய தொகைக்கு மேல்
கேட்டுக்கொண்டும், வாங்கிக்கொண்டும் இருந்தார். அந்தத் துயரங்களையும்,
அவமானங்களையும் சொல்லாமலிருக்க முடியவில்லை. நான்கு நாட்களில் எடுக்க
வேண்டிய `கிளைமாக்ஸ்' கட்டத்தை, நான்கு மணி நேரத்தில் எடுத்துப் படத்தைக்
கொலை செய்தோம். முழுமுதற்காரணம் சந்திரபாபு.
தொழிலைப்
பொறுப்பாகவும், நாணயமாகவும் செய்யாதவர்கள் ஒரு கட்டத்தில் மிகுந்த
கஷ்டப்பட்டு தொழிலுக்காக ஏங்குவார்கள்.
தன் குணத்தாலேயே தன்னைக்
கெடுத்துக்கொண்ட சந்திரபாபு என் படத்தையும் கெடுத்து வைத்தார்.
தொழிலை
மட்டும் பொறுப்பாகச் செய்து வரும் என்னால் அதைத் தாங்க முடியவில்லை. ஒரு
நாள் படத்தின் `ஷூட்டிங்'கிற்கு சந்திரபாபுவை அழைப்பதற்கு அவர்
வீட்டிற்குப் போயிருந்தேன். அன்றைக்கு எனக்கேற்பட்ட தலைகுனிவு ஆறாத புண்ணாக
இன்றைக்கும் இருக்கிறது.
அன்று
காலை ஏழு மணிக்கு 'ஷூட்டிங்.' எடுக்கப்பட வேண்டியதோ 'கிளைமாக்ஸ்' கட்டம்.
டி.எஸ்.பாலையா, எம்.ஆர்.ராதா, ராஜசுலோசனா அத்தனை பேரும் `செட்'டிற்கு
வந்துவிட்டார்கள். பேசிய தொகைக்கு மேல் இருபதாயிரம் அதிகமாகப் பெற்றுக்
கொண்டிருந்தும் கூட, சந்திரபாபு சரியாக வரமாட்டார் என்பதாலே அதிகாலையில்
குளிக்கக்கூட இல்லாமல் நானே அவர் வீட்டிற்குப் போனேன். அவர் தூங்குவதாகச்
சொன்னார்கள். நான் வெளியில் சோபாவில் இரண்டு மணி நேரம்
உட்கார்ந்திருந்தேன். பொறுத்துப் பொறுத்து பார்த்துவிட்டு, பையனைக்
கூப்பிட்டு, 'சந்திரபாபு எழுந்துவிட்டாரா?' என்று கேட்டேன்.
'அவர்
பின்பக்கமாக, அப்பொழுதே போய்விட்டாரே' என்றான் பையன். இந்த அவமானம்
மட்டுமல்ல. படம் என்ன ஆகுமோ என்ற பயம், கடன்காரர்களுக்கு என்ன சொல்லப்
போகிறோம் என்ற கவலை - எல்லாம் என்னைச் சூழ்ந்து கொண்டன. பிறகு, நடிகவேள்
எம்.ஆர்.ராதா அவர்களிடம் சொல்லி அழுதேன். அவரும், அண்ணன் டி.எஸ்.பாலையா
அவர்களும் காரை எடுத்துக்கொண்டு, சந்திரபாபுவைத் தேடி அலைந்ததை என்னால்
மறக்கமுடியாது. 1960 செப்டம்பர் மாதம் படம் வெளியானபோது என்னை கடன்காரனாக
நிறுத்தின.
அன்றைய
கணக்குப்படி ஐந்து லட்சத்து 90 ஆயிரம் ரூபாய் கடன். பின்நாளில் வட்டி ஏறி,
ஏழு லட்சமாகப் பரிணமித்தது. தோல்விகளையும், துயரங்களையும் தாங்கிக்
கொள்வதில் எனக்குப் பழக்கம் உண்டு; சிறு வயதில் இருந்தே அந்த அனுபவம்
உண்டு. ஆகவே, `கவலை இல்லாத மனிதன்' படத்தின் தோல்வி என்னை விரக்தி அடையச்
செய்யவில்லை. ஆனால், அது உருவாக்கிக் கொடுத்த ஆறு லட்ச ரூபாய்க் கடன்,
அடிக்கடி என்னை பயமுறுத்திக் கொண்டிருந்தது. அப்போது என் கம்பெனியின்
பெயரில் பதினோரு கார்கள் இருந்தன. ஏழு `பியட்' கார்கள், இரண்டு
`ஹிந்துஸ்தான்' கார்கள், ஒரு `பிளைமவுத்' கார், ஒரு `ஸ்டேஷன் வேகன்'
கம்பெனிக்கு எதிரே அந்தக் கார்களை நிறுத்தி வைத்தால் கம்பெனியில் ஏதோ விழா
நடப்பது போல் தோன்றும். அத்தனை கார்களிலும் ஒரே ஒரு பியட் காரை மட்டும்
வைத்துக்கொண்டு, பாக்கி அனைத்தையும் கார் மீது பணம் கொடுத்தவர்களின்
வீடுகளில் கொண்டு போய் விட்டு விட்டேன்.
சில
கார்களின் மீது இரண்டாயிரம், மூவாயிரம்தான் பாக்கி இருந்தது என்றாலும்,
அந்தக் கார்களை விற்று மீதிப்பணத்தைக் கொடுக்கும்படி அவர்களிடமே
சொல்லிவிட்டு வந்துவிட்டேன். யார் கொடுப்பார்கள்? அப்படி நாணயமானவர்கள்
எத்தனை பேர் இருக்கிறார்கள்? ஏதோ இரண்டொருவர் இரக்கப்பட்டுக் கொஞ்சத் தொகை
கொடுத்தார்கள்; மற்ற அனைத்துமே போய்விட்டன. கம்பெனி வீட்டைக் காலி செய்து,
இருந்த சாமான்களை எல்லாம் அள்ளிக் கொண்டு வந்து வீட்டிலே போட்டேன்.
சுமார்
ஐம்பதினாயிரம் ரூபாய் பெறக்கூடிய ஆடையணிமணி உபகரணங்களை எல்லாம் எட்டாயிரம்
ரூபாய்க்கு விற்றுவிட்டேன். வேலையாட்களையெல்லாம் நிறுத்திவிட்டேன். படம்
எடுப்பதை நிறுத்திவிட்டேன், கம்பெனியை மூடிவிட்டேன் என்றதும், சுமார்
முப்பது கடன்காரர்கள் கோர்ட்டில் வழக்குத் தொடர்ந்தார்கள்.
காலையில் ஒரு
ஜப்தி, மாலையில் ஒரு ஜப்தி என்று வந்து கொண்டே இருந்தது. அனைத்தையும் நான்
சமாளித்தேன்.
மூன்று
மாதங்களுக்குள்ளாக 34 வழக்குகள் கோர்ட்டுக்கு வந்துவிட்டன. நேரே வழக்கறிஞர்
வி.பி.ராமனிடம் போனேன். 'ஒரு வருஷத்துக்குள் பணம் சம்பாதித்து கடனை கட்ட
முடியுமா?' என்று கேட்டார் அவர். 'முடியும்' என்றேன். ஒரு பக்கம் கடன்
வந்தால், ஒரு பக்கம் வரவு வரவேண்டும் அல்லவா? அந்தப் பக்கம் அடி
விழுந்தபோது, இந்தப்பக்கம் ஏராளமான படங்களுக்கு சந்தர்ப்பம் வந்தது.
நோட்டெழுதி வாங்கிய கடனுக்கு, பாட்டெழுதி வாங்கிய பணம் போகத் தொடங்கிற்று!
இவ்வாறு கண்ணதாசன் குறிப்பிட்டுள்ளார்.
'கவலை
இல்லாத மனிதன்' படத்துக்குப்பிறகு, சென்னை மாநகராட்சி கவுன்சிலராக இருந்த
கே.முருகேசனுடன் கூட்டு சேர்ந்து, 'வானம்பாடி' என்ற படத்தை கண்ணதாசன்
எடுத்தார். இந்தப்படம் வெற்றிகரமாக ஓடியது.
கண்ணதாசனுடைய கடனில் ஒரு
பகுதியை அடைக்க இப்படம் உதவியது. பின்னர், கோவை செழியனுடன் சேர்ந்து 'சுமை
தாங்கி' என்ற படத்தைத் தயாரித்தார்.
இந்தப்படமும் லாபம் சம்பாதித்துக்
கொடுத்தது.
'மொத்தத்தில்
அப்போதெல்லாம் ஏராளமாகப் பணம் புரண்டு விளையாடிற்றே தவிர, கையிலே
தங்கவில்லை' என்று குறிப்பிட்டுள்ளார், கண்ணதாசன். 1962-ல் இந்தியா மீது
சீனா படையெடுத்தது. அதை அடிப்படையாக வைத்து கண்ணதாசன் கதை-வசனம் எழுதிய
'இரத்தத் திலகம்' என்ற படத்தை பஞ்சு அருணாசலம் தயாரித்தார்.
சிவாஜிகணேசனும், சாவித்திரியும் நடித்த இப்படம் வெற்றிகரமாக ஓடியது.
இப்படத்தில்
ஒரு காட்சியில், 'பழைய மாணவர் முத்தையா'வாக கண்ணதாசன் தோன்றி, 'ஒரு
கோப்பையிலே என் குடியிருப்பு; ஒரு கோலமயில் என் துணையிருப்பு' என்று
பாடுவார். 1964-ல் மீண்டும் சொந்தப் படத்தயாரிப்பில் ஈடுபட்டார்,
கண்ணதாசன்! படத்தின் பெயர் 'கறுப்பு பணம்' பாலாஜி, டி.எஸ்.பாலையா,
கே.ஆர்.விஜயா ஆகியோர் நடித்த இப்படத் தில் முக்கிய வேடத்தில் கண்ணதாசனே
நடித்தார்.
படம் சுமாராகத்தான் ஓடியது.
'கவலை இல்லாத மனிதன்'
அனுபவத்திற்குப் பிறகும் சொந்தப்படம் தயாரித்தது பற்றி கண்ணதாசன் பின்னர்
எழுதும்போது, 'ஒரு தவறு செய்துவிட்டு, அது தவறு என்று தெரிந்தபின்னும்,
மீண்டும் அதே தவறை செய்தேன்' என்று குறிப்பிட்டுள்ளார்.