"உணவு பாதுகாப்பு சட்ட மசோதா: உள்நோக்கம். "
கடும் எதிர்ப்புகளுக்கும் தடைகளுக்கும் மத்தியில் உணவு பாதுகாப்பு மசோதா தொடர்பான அவசர சட்டத்திற்கு ஜனாதிபதியின் ஒப்புதலை பெற்றுவிட்டது காங்கிரஸ் கூட்டணி அரசு. பொது விநியோக திட்டத்தின் மூலம் உணவு தானியங்களை மானிய விலையில் மத்திய அரசு, மாநில அரசுகளுக்கு வழங்கி வருகிறது. இப்போதுள்ள நிலையில் ஒரு கிலோ அரிசியை மத்திய அரசு வெளிச்சந்தையில் 13 ரூபாய்க்கு கொள்முதல் செய்து, அதை மூன்று ரூபாய்க்கு மாநில அரசுகளுக்கு வழங்குகின்றது. அதை மாநில அரசுகள் தங்கள் வசதிக்கேற்ற விலையில் ரேஷன் கடைகள் மூலம் வழங்கி வருகின்றன. தமிழ்நாட்டில் 20 கிலோ அரிசி இலவசம், கர்நாடகாவில் இரண்டு ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசி, ஆந்திராவில் ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசி என்பதெல்லாம் அந்தந்த மாநில அரசுகளின் சலுகை திட்டங்கள். இப்போது வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ளவர்களுக்கு மட்டுமே பொதுவிநியோக திட்டத்தின் மூலம் உணவு தானியங்கள் வழங்கப்பட்டு வருகின்றன. இதை இன்னும் விரிவுபடுத்தி வறுமைக் கோட்டிற்கு மேல் உள்ளவர்களுக்கும் அவர்கள் விரும்பினால் பொது விநியோக திட்டத்தில் உணவு தானியங்களை மானிய விலையில் வழங்குவதுதான் மத்திய அரசு கொண்டு வந்திருக்கும் உணவு பாதுகாப்பு சட்ட மசோதாவின் சாராம்சம். உணவு பாதுகாப்பு வேண்டும் என்று இடது சாரி கட்சிகள் நாடு தழுவிய முறையில் தொடர்ந்து இயக்கங்களை நடத்தி வருகின்றன.
அதில் உள்ள சில ஷரத்துக்களையும் அது கொண்டுவரப்படும் விதத்தையும்தான்
எதிர்க்கிறோம்.
'இந்தியாவில் தமிழகம் உள்ளிட்ட தென் மாநிலங்களில் இருப்பது
போல் மற்ற மாநிலங்களில் பொது விநியோக திட்டம் செம்மையாக இல்லை. அதை அனைத்து
மாநிலங்களுக்கும் ஆக்க வேண்டும் என்பதுதான் கோரிக்கை.
வறுமைக் கோட்டிற்கு கீழ், வறுமைக் கோட்டிற்கு மேல் என்று இல்லாமல்
இந்தியாவில் உள்ள அத்தனை குடும்பங்களுக்கும் கிலோ 2 ரூபாயில் மாதம் 35 கிலோ
அரிசி கொடுக்க வேண்டும். இந்த சிஸ்டத்தை அமல்படுத்தும் போது தமிழகத்தில்
உள்ளது போன்று சில மாநிலங்களில் ஏற்கெனவே அமலில் உள்ள சலுகை திட்டங்களுக்கு
பாதிப்பு ஏதும் வரக் கூடாது இதுதான் இடதுசாரிகளின் கோரிக்கை.
இப்போது அரசு கொண்டுவந்திருக்கும் உணவுப் பாதுகாப்புச் சட்ட மசோதா ஏற்கெனவே ஒருமுறை பாராளுமன்றத்தில் விவாதத்திற்கு வந்து, ஆரம்ப நிலையிலேயே ஒத்திவைக்கப்பட்டுவிட்டது.
காரணம், அதில் உள்ள மக்கள் விரோத
அம்சங்கள்.
இந்த மசோதாவில், பொதுவிநியோக திட்டத்தின் கீழ் வரும் மக்களை
பிரையாரிட்டி செக்ஷன், ஜெனரல் செக் ஷன் என இரண்டு வகையாக பிரிக்கிறார்கள்.
பிரையாரிட்டி செக் ஷனில் கிராமப்புறங்களில் 75
சதவிகிதம் குடும்பங்களுக்கும் நகர் பகுதிகளில் 50 சதவிகிதம்
குடும்பங்களுக்கும் மாதம் 25 கிலோ அரிசியை கிலோ மூன்று ரூபாய்க்கு வழங்கப்
போவதாக சொல்கிறார்கள். இந்த அளவுகோலை யார் எப்படி தீர்மானிப்பது என்பதற்கு
தெளிவான விளக்கம் இல்லை. அதுவுமில்லாமல், அரிசியாக கொடுக்க முடியாமல் 25
கிலோ அரிசிக்கான ரூபாயை மக்கள் கையில் நேரடியாக கொடுக்கப் போவதாக
சொல்கிறார்கள்.
இது பொது விநியோக திட்டத்தையே தகர்க்கும் செயல். மக்களுக்கு தேவையான உணவு தானியத்தை வழங்க வேண்டியது அரசின் கடமை. ஆனால், தானியத்திற்கு பதிலாக பணத்தைக் கொடுத்து அந்தப் பொறுப்பை தட்டிக் கழிப்பதுடன் மக்களை தனியார் மார்க்கெட் சக்திகளிடம் தள்ளிவிட துடிக்குது மத்திய அரசு. அதனால்தான் இந்த மசோதாவை நாங்கள் எதிர்க்கிறோம். மசோதாவை பாராளுமன்றத்தில் தாக்கல் செய்தால் மத்திய அரசின் உள்நோக்கமும் சதித் திட்டங்களும் அம்பலத்துக்கு வந்துவிடும் என்பதால் வசர சட்டமாக்கி மக்களை ஏமாற்ற நினைக்கிறார்கள்.
இந்தச் சட்டம் அமலானால் எதிர்காலத்தில் மார்க்கெட்
சக்திகள் உணவு தானியங்களை பதுக்கிக் கொண்டு செயற்கை பஞ்சத்தையே உருவாக்கி
விடுவார்கள். இந்த சட்டம் அமலானால் நீர்ப்பாசன திட்டங்களும் விவசாயமும்
மேம்படும் என்றுசொல்வது மொட்டைத் தலைக்கும் முழங்காலுக்கும்
முடிச்சுப் போடும் செயல். அதெல்லாம் உண்மையாக இருந்தால் மசோதாவை
பாராளுமன்றத்தில் தாக்கல் செய்து விவாதம் நடத்தலாமே!
ஜனாதிபதி ஒப்புதல் அளித்துவிட்டாலும் இன்னும் ஆறுமாத காலத்திற்குள் இந்தச்
சட்டத்திற்கு பாராளுமன்ற ஒப்புதல் பெற்றாக வேண்டும்.
மத்திய அரசின் இந்த ஆண்டிற்கான பட்ஜெட்டில் பற்றாக்குறை 70 ஆயிரம் கோடி. ஆனாலும், வருவாய் இனங்களை பெருக்கி இந்த பற்றாக்குறையை சமாளிக்கும் வேலைகளை செய்து கொண்டிருக்கிறார்கள். இப்படிச் செய்வதன் மூலம் இந்திய பொருளாதாரம் வளர்ச்சியடைவதாக வெளிநாட்டு கார்ப்பரேட் கம்பெனிகளை நம்ப வைக்கப் பார்க்கிறார்கள். இந்த நேரத்தில் இந்த மசோதா அமலுக்கு வந்தால் மத்திய அரசுக்கு கூடுதலாக இன்னுமொரு 70 ஆயிரம் கோடி செலவாகும். இதன் மூலம் நிதிச் சிக்கல் ஏற்படும்.
----------------------------------------------------------------------------------------------------------------------------------
|