மோடி அரசின் தோல்வி

 முன்னோர் சேர்த்து வைத்ததையெல்லாம் அழிக்கும் ஊதாரிப் பிள்ளைபோல, 10 ஆண்டுகளில் இந்த நாட்டின் வளங்களை விற்று அழித்த மோடி அரசு, வெள்ளை அறிக்கை என்ற பெயரில் யாரை ஏமாற்றப் பார்க்கிறது? என்று நாடாளுமன்றத்தில் சு. வெங்கடேசன் எம்.பி. கேள்வி எழுப்பினார்.

வேலையின்மை, விலைவாசி உயர்வு, பட்டினியால் சித்ரவதையை அனுபவிக்கும் மக்கள், தங்களின் துயரத்திற்கு காரணமான (மோடி - அமித்ஷா- அதானி- அம்பானி ஆகிய) ‘நான்கு பேர்’ கூட்டணியை நன்றாக அறிந்து வைத்திருக்கிறார்கள்; 2024 தேர்தலில் அந்த நான்குபேர் கூட்டணியைத் தோற்கடிப்பார்கள் என்றும் முழங்கினார்.

பட்ஜெட் கூட்டத் தொடரில்  மோடி ஆணவப் பேச்சு
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் கடந்த ஜனவரி 31 அன்று குடியரசுத் தலைவர் உரையுடன் துவங்கியது. பிப்ரவரி 1 அன்று 2024-25 நிதியாண்டிற்கான பட்ஜெட்டைத் தாக்கல் செய்தார். பிப்ரவரி 2 முதல் குடியரசுத் தலைவரின் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது அனைத்துக் கட்சிகளையும் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் பேசி னர். இறுதியாக குடியரசுத் தலைவர் உரை மீதான விமர்சனங்களுக்கு பதிலளித்து, பிரதமர் நரேந்திர மோடி, பிப்ரவரி 5 அன்று மக்களவை  யில் உரையாற்றினார். பிப்ரவரி 7-ஆம் தேதி மாநிலங்களவையில் உரையாற்றினார். அப்போது, எதிர்க்கட்சிகளை குறிப்பாக  காங்கிரஸ் கட்சியை, நாட்டின் முதல் பிரதம ரான நேருவை மட்டமான வார்த்தைகளால் விமர்சித்தார். தானொரு பிரதமர் என்பதை மறந்துவிட்டு, தேர்தல் பிரச்சார மேடைகளில் பயன்படுத்தும் கேலி, கிண்டல்களை முன் வைத்தார்.

‘வெள்ளை அறிக்கை’  வெளியிட்ட நிர்மலா சீதாராமன்
2014-க்கு முந்தைய காங்கிரஸ் தலைமையி லான 10 ஆண்டு காலத்தின் போது இருந்த, இந்தியாவின் பொருளாதார நிலையுடன், தற்போது மோடியின் 10 ஆண்டு கால ஆட்சியில் இருக்கும் இந்தியாவின் பொருளாதாரத்தை ஒப்பிடும் வகையில் ஒன்றிய அரசு வெள்ளை அறிக்கை தாக்கல் செய்ய உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டது.

அதன்படி ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், நாடாளுமன்றத்தில் வியாழக் கிழமையன்று வெள்ளை அறிக்கையை தாக்கல் செய்தார்.

அதில், 2014ஆம் ஆண்டு பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசு ஆட்சிக்கு வந்த போது, பொருளாதாரம் மிகவும் பலவீனமாக இருந்ததாகவும் பொது நிதி மோசமான நிலையிலும், வராக்கடன் அதிகமாகவும், வங்கிகள் அதிக பலவீனமாகவும் இருந்ததாக தெரிவிக்கப்பட்டு இருந்தது. மேலும், பல்வேறு துறைகள் பொருளாதார ரீதியில் பின்தங்கி இருந்ததாகவும், பொருளாதார முறைகேடு மற்றும் பரவலாக ஊழல் நிறைந்து இருந்த தாகவும் அதில் குறிப்பிடப்பட்டு இருந்தது.

தற்போது, பிரதமர் மோடி தலைமையிலான அரசு கடந்த 10 ஆண்டு மேற்கொண்ட நீண்ட  முயற்சிகள் காரணமாக நாட்டின் பொருளா தாரம் உறுதிப்படுத்தப்பட்டு உள்ளதாகவும், தற்போது வளர்ச்சிப் பாதையில் பொருளாதாரம் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது. முந்தைய ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு விட்டுச் சென்ற சவால்களை தற்போதைய அரசு வெற்றிகரமாக முறியடித்துள்ளோம் என்றும் கூறப்பட்டு இருந்தது.

‘கருப்பு அறிக்கை’ வெளியிட்டு காங்கிரஸ் கட்சி பதிலடி
இதற்குப் பதிலடியாக, காங்கிரஸ் கட்சி யானது, ‘நரேந்திர மோடி காலத்தின் கருப்பு அறிக்கை’யை ‘10 ஆண்டுகள் அநீதி’ என்ற தலைப்பில் வெளியிட்டது. அதில் மோடி ஆட்சி யின் பிளவுவாதம், வேலையில்லாத் திண்டாட் டம், கார்ப்பரேட்டுக்களுக்கான சலுகை, மாநி லங்களுக்கான வரிப் பங்கீட்டில் நடக்கும் அநீதி உள்ளிட்டவை சுட்டிக்காட்டப்பட்டு இருந்தது.

ஆனால், தாங்கள் செய்த நல்லவேலைகள் மீது இருந்த கண் திருஷ்டியை, காங்கிரசின் கருப்பு அறிக்கை போக்கி விட்டது. காங்கிர சின் அறிக்கை “காலா தீக்கா” (கண் திருஷ்டி வில கல்) என பிரதமர் மோடி கேலி செய்தார்.

நாடாளுமன்றத்தை அதிரவைத்த சு. வெங்கடேசன் பேச்சு
இந்நிலையில்தான், பட்ஜெட் கூட்டத்தொட ரின் இறுதிநாளான வெள்ளியன்று, ஒன்றிய பாஜக அரசின் வெள்ளையறிக்கை மீது கூர்மை யான விமர்சனங்களை முன்வைத்து, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மதுரை மக்களவைத் தொகுதி உறுப்பினர் சு. வெங்கடேசன் எம்.பி. நாடாளுமன்றத்தில் உரையாற்றினார். அந்த உரை வருமாறு:

கார்ப்பரேட்டுக்கள் பற்றி கேட்டால் கஜினி முகமதுவை பேசுவது ஏன்?
சில உயிர்கள் ஒளிக்கு அஞ்சி இருளிலே வாழும், சில மனிதர்கள் நிகழ்காலத்திற்கு அஞ்சி கடந்த காலத்திலே வாழ்வார்கள். அதேபோலத் தான் சில கட்சிகளும்... தேர்தல் வந்துவிட்டால் நாங்கள் எல்லாம் வளர்ச்சியைப் பற்றி, வேலை யின்மை பற்றி, வறுமையைப் பற்றி பேசி னால் அவர்கள் 400 ஆண்டுகளுக்கு முன்பு  நடந்த படையெடுப்பைப் பற்றிப் பேசுவார்கள். 600 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த ஆக்கிர மிப்பைப் பற்றிப் பேசுவார்கள். நாங்கள் பண வீக்கத்தைப் பற்றிப் பேசினால், அவர்கள் பாபரைப் பற்றிப் பேசுவார்கள், நாங்கள் கார்ப்ப ரேட்டுகளைப் பற்றிப் பேசினால், அவர்கள் கஜினி முகமதைப் பற்றிப் பேசுவார்கள். கடந்த  காலத்தைக் கழித்து விட்டால், அவர்களிடம் எதிர்காலத்தைச் சந்திக்கிற எந்த ஒரு கருவியும் இல்லை. 2024 இந்தியாவின் வளர்ச்சி, உலக வளர்ச்சியைப் பற்றிப் பேசச் சொன்னால் இந்த தேர்தல் யுத்தத்தை துவங்கும்பொழுது பத்து  ஆண்டுகள் பின்னால் போய் நின்று கொண்டி ருப்பது இந்த அரசினுடைய தோல்வியின் இன்னொரு அடையாளம்..

மக்களை துயரத்தில் தள்ளிவிட்டு கைதட்டிக் கொள்வீர்களா?
இந்த வெள்ளை அறிக்கை என்ன சொல்கிறது? பில்லியனர்களுடைய வளர்ச்சி யைப் பற்றி இங்கே நான் சொல்ல வேண்டும், 2014-ஆவது ஆண்டில் இந்தியாவில் 70 பில்லி யனர்கள் இருந்தார்கள், இன்றைக்கு 170 பில்லி யனர்கள் இருக்கிறார்கள். ஆனால், தனிநபர் சராசரி வருமானம் உலகத்தில் 142-ஆவது இடத்தில் இந்தியா இருக்கிறது. மனித வள குறியீட்டில் 132-ஆவது இடத்தில் இந்தியா இருக்கிறது. மகிழ்ச்சிக் குறியீட்டில் 136-ஆவது இடத்தில் இந்தியா இருக்கிறது. கார்ப்பரேட்டு கள் மகிழ்ச்சியில் திளைக்கிற ஒரு நாட்டில் மக்களின் மகிழ்ச்சி கடலினுள்தான் மூச்சு மூழ்க கிடக்கும். எனவேதான், இந்தியா உலகின் மகிழ்ச்சிக் குறியீட்டில் 136-ஆவது இடத்தில் இருக்கிறது. சர்வதேச உணவுக்கொள்கைக் கழ கத்தினுடைய பட்டினிக் குறியீட்டில் 122 நாடு களில், இந்தியா 107-ஆவது இடத்தில் இருக்கி றது. இந்தப் புள்ளி விவரத்தை எல்லாம் எதிர்க்கட்சிகள் சொன்னால் இந்தப் புள்ளி விவ ரத்தை நாங்கள் ஏற்கவில்லை என்று அமைச்சர் சொல்கிறார்.. நீங்களே பரிட்சை எழுதிக் கொள்வீர்கள், நீங்களே மதிப்பிட்டுக் கொள்வீர்கள், நீங்களே அதற்கு மதிப்பெண் இட்டுக் கொள்வீர்கள் என்று கேட்டால் மதிப் பெண் விஷயத்தில் தவறு இழைத்தால் பத்தாண்டு கால சிறைத்தண்டனை என்று புதிய  சட்டத்தைக் கொண்டு வருகிறீர்கள்.

பெட்ரோல், டீசல், எரிவாயு விலை வரைபடத்தை வெளியிடத் தயாரா?
பணவீக்கத்தைப் பற்றி இங்கே பேசி உள்ளீர் கள்... நிறைய வரைபடங்கள் வெள்ளை அறிக்கையிலே இருக்கிறது. ஆனால் ஒரே ஒரு வரைபடத்தை நீங்கள் ஏன் தவறவிட்டீர்கள்? சமையல் கியாஸ் விலை உயர்வு வரைபடத்தை நீங்கள் வெளியிடத் தயாரா? 10 ஆண்டுகளில் பெட்ரோல் மீதான வரிகள் 3.5 மடங்கு உயர்ந்திரு க்கிறது, டீசல் மீதான வரி 9.5 மடங்கு உயர்ந்திருக் கிறது. இதற்கு யார் காரணம்? யமுனையின் கரை யிலே சாந்தி வனத்திலே உறங்கிக் கொண்டிருக் கிற ஜவஹர்லால் நேருதான் இதற்கும் காரணமா?  

கார்ப்பரேட்டுக்களின் வரியை  11 சதவீதம் குறைத்தது ஏன்?
நீங்கள் யோசித்துப் பாருங்கள், கார்ப்ப ரேட்டுகளின் வரி 2016-ஆவது ஆண்டு 33 சத விகிதம் இருந்தது. உங்கள் ஆட்சியில் கார்ப்ப ரேட்டுகளின் வரி 22 சதவிகிதம் மட்டுமே. 11  சதவிகிதம் கார்ப்பரேட்டுகளுக்கு வரியை குறைத்து இருக்கிறீர்கள். 1 சதவிகிதம் கார்ப்ப ரேட் வரி, 50 ஆயிரம் கோடி ரூபாய் கோடி எனில், 11 சதவிகிதம் என்றால் எத்தனை ஆயிரம் கோடி ரூபாய் என்று நிதியமைச்சர் இந்த அவையிலே கணக்கு முன் வைப்பாரா? 

மக்களுக்கு கொடுத்தால் சலுகை முதலாளிகளுக்கு கொடுத்தால் ஊக்கமா?
மக்களுக்குக் கொடுத்தால் அது சலுகை, மக்களுக்கு கொடுத்தால் அது இலவசம். கார்ப்ப ரேட்டுகளுக்கு அள்ளிக் கொடுத்தால் அது ஊக்கத் தொகை. உங்களது அகராதியை இந்த நாடு மீண்டும் மீண்டும் பார்த்துக் கொண்டிருக்கிறது. உங்களது வெள்ளை அறிக்கை ஏழைகளின் கண்ணீராலும், கார்ப்பரேட்டுகளின் புன்னகை யாலும் நிரம்பி வழிவதை இந்த நாடு பார்த்துக் கொண்டிருக்கிறது. 

சூடமேற்றும் ஒவ்வொரு இந்தியனும்  பாஜக தோல்விக்கு பிரார்த்திப்பார்
இவற்றின் உச்சம் என்ன தெரியுமா? அடுத்த  ஆயிரம் ஆண்டுகளுக்கு நாங்கள் அடித்தளம் இடுகிறோம் என்று மாண்புமிகு பிரதமர் சொல் கிறார். ஆனால், கடந்த ஆயிரம் ஆண்டுகளில் இல்லாத ஒன்றை நீங்கள் செய்திருக்கிறீர் கள். இந்தியாவில் இறைவனை வழிபடுகிற ஒவ்வொரு இந்தியனும் சூடம் பொருத்தி  வழிபடுவது இந்திய மரபுகளிலே ஒன்று. ஆனால் நீங்கள் என்ன செய்திருக்கி றீர்கள்? இறைவனை வழிபடுவதற்கு பயன்படுத்துகிற சூடத்திற்கு 18 சதவிகிதம் ஜிஎஸ்டி விதித்த வரலாற்றின் முதல் நபராக நீங்கள் இருக்கிறீர்கள். யோசித்துப் பாருங்கள் இறைவனை வழிபடுகிற, சூடத்தை  ஏற்றுகிற ஒவ்வொரு இந்தியனும் இந்த அநீதியான வரி விதிப்புக்கு எதிராக, இந்த அநீதியான அரசுக்கு எதிராக ஆண்டவனை பிரார்த்திப்பான் என்பதுதான் உண்மை. 

நம்பிக்கைக்கு மதிப்பு கொடுத்து ‘நாத்திகர்’ படைத்த இலக்கணம்
இந்த இடத்தில் இன்னொரு விஷயத்தை  நான் நினைவுபடுத்தக் கடமைப்பட்டிருக்கிறேன். தன்னை ‘நாத்திகன்’ என்று அறிவித்துக் கொண்ட முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்கள், சூடம், பக்திப் பொருள்; எனவே, தமிழ்நாட்டில் அதற்கு வரி விலக்கு அளிக்கிறேன் என்று  சொல்லி வரி விலக்கு அளித்தார். ஆத்திகரா  நாத்திகரா என்பதல்ல; அடுத்த மனிதன் மீதான நம்பிக்கைக்கு எவ்வளவு மதிப்பு கொடுக்கி றோம் என்பதுதான் ஒரு அரசினுடைய இலக்கண மாக இருக்க வேண்டும். 

ரபாய் நோட்டிலும் ‘தேவநாகரி’ எண்களைப் போட்டது சாதனையா?
1975-ஆவது ஆண்டில் துவங்கி 2013 வரை  ஒன்றிய அரசு அமல்படுத்திக் கொண்டிருந்த 15 திட்டங்களின் பெயர்களை நீங்கள் இந்தியில் மாற்றினீர்கள். இந்தப் பத்தாண்டுகளில் நீங்கள் கொண்டுவந்த அனைத்து திட்டத்திற்கும் இந்தி யில் மட்டுமே பெயர் வைத்தீர்கள். திட்டங்கள் மட்டுமல்ல, சட்டங்களுக்கும் இந்தியில் பெயர் (ஐபிசி உள்ளிட்டு) வைத்திருக்கிறீர்கள். இவற்றின் உச்சபச்சம் என்ன தெரியுமா? பண மதிப்பிழப்பின் பொழுது நீங்கள் புதிதாக கொண்டு வந்த 500 ரூபாய் நோட்டுகள், 2000 ரூபாய் நோட்டுகளில் வரலாற்றில் இதுவரை இல்லாதபடி முதல் முறையாக ‘தேவநாகரி’ எண்களை நீங்கள் பொருத்தி இருக்கிறீர்கள். இந்த அரசுக்கு நாங்கள் சொல்லிக் கொள்வோம் 2000 ரூபாய் நோட்டுகளையும், 500 ரூபாய் நோட்டுகளையும் பயன்படுத்துகிற ஒவ்வொரு இந்தியனும் இந்தியைத் திணிக்கிற இந்த ஆட்சியினுடைய அநியாயத்தை நினைத்துப் பார்ப்பான் என்பதை இந்த நேரத்திலே நான் சுட்டிக்காட்டக் கடமைப்பட்டிருக்கிறேன்.  

மோடி அரசின் தோல்விக்கு நிதி ஆயோக் உறுப்பினரே சாட்சி
அதேபோல வேலைவாய்ப்புப் பற்றிப் பேசியிருக்கிறீர்கள். 15 வயது முதல் 24 வயது வரை இருக்கிற இளைஞர்களில் வேலை வாய்ப்பற்ற இளைஞர்கள் எத்தனை சதவிகிதம் இருக்கிறார்கள் என்று பார்த்தால் பாகிஸ்தா னில் 11 சதவிகிதம்தான், பங்களாதேஷில் 12 சதவிகிதம்தான். ஆனால் இந்தியாவில் 24 சதவிகிதம் இருக்கிறார்கள். இது உண்மையா? இல்லையா? என்பதை நிதியமைச்சர் அவர்கள் இந்த அவையிலே சொல்ல வேண்டும். நீங்கள் துவங்கிய ‘ஸ்டார்ட் அப் இந்தியா’ திட்டம் 95 சத விகிதம் தோல்வியில் முடிந்து விட்டதாக ‘நிதி ஆயோக்’ உறுப்பினர் பேட்டி அளித்திருக் கிறார். இது உண்மையா? இல்லையா? என்பதை  நிதியமைச்சர் அவர்கள் இந்த அவையிலே சொல்ல வேண்டும். 

ஏர் இந்தியா, எல்ஐசி, பிஎஸ்என்எல், வங்கியை சூறையாடியது யார்?
அதேபோல முன்னோர்கள் சேர்த்து வைத்தச் சொத்தை எல்லாம் ஊதாரிப் பிள்ளை தொலைப்பதைப் போல, பிஎஸ்என்எல் 4G சேவையை தரவிடாமல் சாகடித்தது யார்?  ‘ஏர் இந்தியா’வை தனியாருக்குத் தூக்கிக்  கொடுத்தது யார்? எல்ஐசி- வங்கி உள்ளிட்ட  அனைத்துப் பொதுத்துறை நிறுவனங்களையும் தனியாருக்குத் தூக்கிக் கொடுக்கச் சட்டத்தைக் கொண்டு வந்தது யார்? என்பதை நாங்கள் கேட்க விரும்புகிறோம். 

குஜராத் முதல்வராக பேசிய வீடியோவை போட்டு பாருங்கள்
மாநில உரிமையைப் பற்றி, மாநிலங்களுக் கானப் பங்கீடு பற்றி இந்த வெள்ளை அறிக்கை மிக மவுனம் காப்பது ஏன்? எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களைக் கசக்கிப் பிழிகிற ஒரு கொள்கையை நீங்கள் தொடர்ந்து அமல் படுத்திக் கொண்டிருக்கிறீர்கள். கேரளம், கர்நா டகா, தமிழ்நாடு என்று பேசினால் பிரதமரே சொல்கிறார்: ‘வடக்கிற்கும் தெற்கிற்கும் இடை யிலே பிரிவினையை உருவாக்குகிறீர்கள்’ என்று. நாங்கள் பிரிவினையை உருவாக்க வில்லை. குஜராத் முதல்வராக இருந்தபொழுது நீங்கள் என்ன பேசினீர்கள் என்று, அந்தக் காணொளியை இன்னொருமுறை பார்த்து விட்டுப் பேசுங்கள். 

கேரளத்தைப் பார்த்தாவது  திருந்த வேண்டாமா?
உங்களின் அதிகாரப் பசிக்காக இந்தியாவி னுடையக் கூட்டாட்சிக் கோட்பாட்டை, இந்த நாட்டின் ஒற்றுமையைச் சிதைக்க முயலா தீர்கள். நீங்கள் கைவிட்ட நிறுவனங்களைக் கேரள அரசு மீண்டும் எடுத்து நடத்துகிறது. இது  ஒன்றிய அரசுக்கு அவமானமாகத் தெரிய வில்லையா? என்று நாங்கள் கேட்க விரும்புகிறோம் 

அதேபோல ஒன்றிய நிதியமைச்சர் அவர்களே! அதிக வருமானத்தை ஈட்டிக்  கொடுக்கிற மாநிலம் தமிழ்நாடு. ஆனால் இந்தப் பத்து ஆண்டுகளில் நீங்கள் தமிழ்நாட்டை வஞ்சித்த விதம் ஒன்றா? இரண்டா? இன்றைக்கு வரை மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையின் நிலை என்ன? இன்றைக்கு காலையில் எனது அருமை நண்பர் மாணிக்கம்தாகூர் அவர்கள் கேட்ட கேள்விக்கு அமைச்சர் அவர்கள் இன்று காலையில் சொன்ன பதில் என்ன? நிலம் கையகப்படுத்துவதிலே தாமதம், ஜெய்காவினுடய ஒப்பந்தத்தில் தாமதம், கோவிட் காரணம் என்று வரிசையாக அடுக்குகிறீர்கள். 

எய்ம்ஸ், நைபர், வெள்ள நிவாரணம் அனைத்திலும் தமிழகத்திற்கு வஞ்சகம்

இந்தக் காரணங்கள் எல்லாம் இமாசல  பிரதேசத்தின் எய்ம்ஸ்-க்கு ஏன் பொருந்த வில்லை? இந்த காரணங்கள் எல்லாம் நீங்கள் ஆட்சி நடத்துகிற மாநிலத்தில் உருவாக்கப் பட்ட எய்ம்ஸ்-க்கு ஏன் பொருந்தவில்லை? உங்களது நோக்கம் எய்ம்ஸ்க்கு நிதி தராமல்  இழுத்தடிப்பது மட்டுமல்ல, தமிழ்நாட்டை வஞ்சிக்க வேண்டும் என்ற ஒற்றைப் புள்ளிதான்.  மதுரை ‘நைபர்’ (மருந்தியல் ஆராய்ச்சிக் கழகம்) இன்றைக்கு வரை கிடப்பிலே இருக்கிறது. வரிசையாக எங்களால் அடுக்கிக் கொண்டே போக முடியும். இரண்டு பெரும் வெள்ளத்தால் மூழ்கிக் கிடந்த தமிழ்நாட்டுக்கு ஒரு பைசா நிதியைக் கூட இப்பொழுது வரை கொடுக்கமாட்டேன் என்று விடாப்பிடியாக இருக்கிறீர்கள். வெள்ளம் வடிந்துவிட்டது, ஆனால் உங்களுடைய வஞ்சக அரசியல் வடியவில்லை. தமிழக மக்கள் ஒருபோதும் அதை மன்னிக்கப் போவதில்லை.

எதிர்வரும் தேர்தலில்  ‘இந்தியா’ வெல்லும்
இந்த வெள்ளை அறிக்கையில் இருக்கும் அனைத்து சாராம்சத்தையும் எடுத்துக் கொண்டால் இறுதியாக எழுத்தாளர் அருந்ததி ராயினுடைய புகழ்மிக்க மேற்கோளை இங்கே சுட்டிக்காட்ட விரும்புகிறேன். ‘இந்தி யாவை ரெண்டு பேர் விற்றுக் கொண்டிருக் கிறார்கள், இரண்டு பேர் வாங்கிக் கொண்டிருக் கிறார்கள்’. அந்த நாலு பேர் யார்? என்பதை நாடறி யும். அந்த நாலு பேர் யார்? என்பதை 140 கோடி  மக்கள் அறிவார்கள். அந்த நாலு பேரின் கூட்டணியை உடைத்து, ‘இந்தியா வெல்லும் ... வெல்லும்..’ என்று சொல்லி முடிக்கிறேன்... வணக்கம்! 

இவ்வாறு சு. வெங்கடேசன் எம்.பி. தனது உரையில் குறிப்பிட்டார்.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

2025ல் தங்கம் விலை

வினேஷ் போகத் வென்றார்!

முடிவுக்கு வருகிறதா?