தொடர் குற்றவாளி

 ஸ்டெர்லைட் திருந்தவே திருந்தாது.

நிபுணர்குழு அவசியமில்லை!

மக்கள் நலனே அவசியம்!!

இந்திய தலைமை நீதிபதி ஒய்.வி. சந்திரசூட் அவர்கள் கீழ்க் கண்ட கருத்துக்களை தெரிவித்துள்ளார்.

“தேசிய நலனை கண்டுகொள்ளாமல் விட்டு விட முடியாது. இந்த நாட்டில் சில தாமிர உற்பத்தி நிலையங்கள் தான் உள்ளன. இந்த சொத்தை தேசம் இழந்து விடக் கூடாது. முன்னோக்கிச் செல்ல சில விஷயங்களை நான் முன்வைக்கிறேன். 

ஒரு ஆலையை மூடி விடுவது எளிது. ஆனால் நாங்கள் பொதுமக்களின் நலனுக்கு உகந்தவாறு சில முன்மொழிவுகளைச் சொல்ல விரும்புகிறோம். மாநில அரசின் கவலைகளை நாங்கள் புரிந்து கொள்கிறோம். 

மிக கடுமையான நிபந்தனைகளை அந்த நிறுவனத்தின் மீது விதிக்கிறோம். தூத்துக்குடி மக்களும், சமூகமும் நம்பிக்கை கொள்ள வேண்டும் என்பதை நாங்கள் ஏற்றுக் கொள்கிறோம்” - என்று தொடர்ந்த அவர், ஒரு பொது நிபுணர்குழுவை அமைக்கலாம் என்றும் அதனுடைய கருத்தைக் கேட்டு மாநில அரசும் ஒப்புக் கொண்டால் அதை திறக்கலாம் என்றும் குறிப்பிட்டிருக்கிறார்.

தேசத்தின் நலன் குறித்தும் தாமிர உற்பத்தியின் முக்கியத்துவம் குறித்தும் மாண்பமை நீதிமன்றத்தின் கருத்தை நாமும் பகிர்ந்து கொள்கிறோம். 

ஆனால், அதே சமயம் மாண்பமை நீதிமன்றம் வேதாந்தா குழு மத்தின் ஸ்டெர்லைட் ஆலை ஒரு தொடர் குற்றவாளி (Habitual offender) என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். சென்னை உயர்நீதிமன்ற அமர்வின் தீர்ப்பில் பல்வேறு விதமான குற்றச்சாட்டுக்களை அந்த நீதிமன்றம் உறுதிப்படுத்தியது.

1.    இந்த ஆலை சிவப்பு வகைப்பட்டது என்பதன் காரணமாக சில குறிப்பிட்ட பகுதிகளிலிருந்து 25 கி.மீட்டருக்கு அப்பால் அது அமைக்கப்பட்டிருக்க வேண்டும். கடல் உயிரின பூங்கா பகுதியிலிருந்து 7 கி.மீ. தொலைவில் தான் அது இருக்கிறது. அடிப்படையிலேயே அது அந்த இடத்தில் நீடிக்க முடியாது.

2.    அன்றைய நிலையில் 50 கோடிக்கு அதிக மான முதலீட்டில் துவங்கப்படும் ஆலை அனைத்திற்கும் ஒன்றிய அரசின் காடுகள் மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சகத்திடமிருந்து சுற்றுச் சூழல் அனுமதி பெறுவதற்கு முன்பாக பொது கருத்துக்கேட்பு நடத்தப்பட்டிருக்க வேண்டும். அது நடைபெறவில்லை.

3. ஆலையைச் சுற்றிலும் 250 மீட்டர் அகலத்திற்கு பசுமை வளையம் அமைக்கப்பட்டிருக்க வேண்டும். அதாவது ஆலையின் நான்கு பக்கங்களில் ஆலையின் சுற்றுச்சுவரிலிருந்து 250 மீட்டர் அகலத்திற்கு மரங்கள் நடப்பட்டிருக்க வேண்டும். ஆலை நிர்வாகம் சண்டித்தனம் செய்தது. குறைந்தபட்சம் 25 மீட்டர் அளவிற்காவது மரங்கள் நடப்பட வேண்டும் என்று சொன்ன போது 10லிருந்து 15 மீட்டருக்கு மரம் நடுவதாகச்சொல்லிவிட்டு அதையும் கால் நூற்றாண்டு காலம் வரையிலும் செய்ய மறுத்தது ஆலை நிர்வாகம்.

4.    ஆலைக்குள் 33 சதவிகிதம் அளவிற்கு பசுமை வளாகம் இருந்திருக்க வேண்டும். ஆனால், 2011ஆம் ஆண்டு நீரி (NEERI) அந்த வளாகத்தை உச்சநீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் நேரடியாக ஆய்வு
செய்தது. சென்னை உயர்நீதிமன்ற வழக்கில் வழக்கு தொடுத்திருந்த நான்கு பேர் முன்னிலையில் இந்த ஆய்வு நடத்தப்பட்டது. அதுவரையிலும் எந்த தாவரங்களையும் உள்ளே வளர்க்காத ஸ்டெர்லைட் நிர்வாகம் சில வளர்ந்த மரங்களை பிடுங்கி வந்து அப்போது தான் நட்டிருந்தது. அப்போதும் 33 சதவிகிதம் வரவில்லை. ஆலையையும், ஊழியர் குடியிருப்பையும் பிரிக்கும் சாலைக்கு அப்பால் உள்ள ஊழியர் குடியிருப்பில் உள்ள மரங்களையும் சேர்த்தாலும் 20 சதவிகிதம் கூட வரவில்லை.

5.    நீரி 2005ஆம் ஆண்டு ஆலையில் உள்ள நிலத்தடி நீரை ஆய்வு செய்த போது கன உலோகங்கள் அனுமதிக்கப்பட்ட அளவிற்கு அதிகமாக இருந்ததை உறுதிப்படுத்தியிருக்கிறது.
6.ஆலையிலிருந்து ஒவ்வொரு நொடியும் உற்பத்தியாகும் ‘காப்பர் ஸ்லாக்’ எனப்படும் நச்சுக்கழிவை ஆலைக்குள் 50 சதவிகிதத்திற்கு மேல் தேக்கி வைத்திருக்கக் கூடாது என்கிற சட்டத்தை மீறி பல வருடங்களாக தேக்கி வைத்திருந்தது. மேலும், நெருக்கடிமுற்றிய பிறகு இந்த கழிவுகளை உப்பாற்று ஓடை, புதுக்கோட்டை பாலம் என்று கடலுக்குள் கலக்கும் ஓடை நீர் செல்லும் வழிகளில் நிரப்பி வைத்து நீரை மாசுபடுத்தியது. மட்டுமின்றி, நீரின் போக்கை தடுத்ததால் கடந்த ஆண்டின் இறுதியில் ஏற்பட்ட வெள்ளத்தால் தூத்துக்குடியும், தூத்துக்குடிக்கும் - புதுக்கோட்டைக்கும் இடையில் உள்ள பகுதிகளும் மிக கடுமையாக பாதிக்கப்பட்டன.

‘சண்டியர்த்தனமே’ அதன் வழக்கம்
இப்படி அடுக்கிக் கொண்டே போக முடியும். இது தவிர அவ்வப்போது ஏற்பட்ட விபத்துக்களாலும், நச்சு வாயு கசிவாலும் பாதிக்கப்பட்டவர்கள் ஏராள மான பேர். சுத்திகரிக்கப்படாத ஆலைக் கழிவு நீரை  அருந்தி இறந்த கால்நடைகள் ஏராளம். மண்,  காற்று, நிலத்தடி நீர், ஓடைகள் என்று அனைத்தும் மாசுபடுவதற்கு ஸ்டெர்லைட் ஆலை காரணமாக இருந்திருக்கிறது. பொதுமக்கள், பாதிக்கப்பட்ட வர்கள் முறையிட்டால் காவல்துறை மற்றும் மாவட்ட நிர்வாகத்தை தன் அடியாளாக மாற்றி வழக்கு பதிவு செய்வது, மிரட்டுவது என்று சண்டியர்த்தனம் செய்வதையே வழக்கமாக வைத்திருந்தது. உச்சநீதி மன்றத்தில் அந்த மாவட்ட ஆட்சித் தலைவரால் சமர்ப்பிக்கப்பட்ட பிரமாண பத்திரத்தை இது மாவட்ட  நிர்வாகத்தின் பிரமாண பத்திரமா, ஸ்டெர்லைட் நிர்வாகத்தின் பிரமாண பத்திரமா என்று திருப்பிக் கொடுக்கும் வகையில் மாவட்ட நிர்வாகத்தையே தனது கைக்குள் வைத்திருந்தது.

இதுஒருபுறமிருக்க, பொருளாதார குற்றங்களிலும் அந்த நிறுவனம் குறைவைக்கவில்லை. தங்க கடத்தலைப் பற்றி செய்திகள் வந்திருக்கின்றன. ஆனால், தங்கம் என்று சொல்லி தங்கத்தை விட விலை  உயர்ந்த பிளாட்டினம், பல்லாடியம் ஆகிய பொருட் களை ஸ்டெர்லைட் நிர்வாகம் கடத்தியது தெரிய வந்தது. தாமிர உற்பத்தியின்போது கிடைக்கும் விலை  உயர்ந்த பொருட்களை தங்கம் என்று கூறி கடத்தி யதன் மூலம் ஸ்டெர்லைட் நிர்வாகம் மிகப்பெரும் குற்றம் இழைத்திருந்தது. இந்த குற்றம் 2010ல் தான்  கண்டுபிடிக்கப்பட்டது. 10 ஆண்டுகளுக்கு மேலாக இந்த கடத்தல் தொடர்ந்து நடந்து கொண்டிருந்ததை தெரிந்து கொள்ள முடிந்தது.

இதேபோன்று, ஸ்டெர்லைட் நிர்வாகம் வரி  ஏய்ப்பு செய்ததற்காக அதன் துணைத் தலைவர் வரத ராஜன் 2013 ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டார். வரி ஏய்ப்பின் அளவு ரூபாய் 750 கோடி. அவருக்கு ஜாமீன் வழங்கியபோது ரூபாய் 200 கோடி பிணை யாக வழங்க வேண்டுமென சென்னை உயர்நீதி மன்றத்தின் மதுரை கிளை உத்தரவிட்டதை இங்கு குறிப்பிட வேண்டியுள்ளது. எனவே, தாமிரம் உற்பத்தி  செய்கிறார்கள், அதனால் சுற்றுச்சூழல் விதிகளை மதிக்க வேண்டாம், நீர் வழித்தடங்களில் நச்சுக் கழிவு களை கொட்டலாம். சுத்திகரிக்கப்படாத ஆலைக் கழிவு களை பொது இடங்களில் திறந்து விடலாம், நச்சு வாயுக்களை திறந்து விடுவதில் கட்டுப்பாடு ஏதும் இருக்க முடியாது, அரசுக்கு கட்ட வேண்டிய வரியை ஏய்க்கலாம் என்று எந்த வகையிலும் சட்டத்திற்கு கட்டுப் படாத ஒரு ஆலையாக இருந்ததன் காரணமாகத்தான் அது மூடப்படும் நிலைக்கு தள்ளப்பட்டது.

எந்தப் பகுதியிலும்  இயங்கத் தகுதியற்றது
உண்மையில், வேலை இழப்பு ஒரு முக்கியமான பிரச்சனைதான். தாமிர உற்பத்தி ஆலை நமக்கு தேவை தான். ஆனால், மகாராஷ்டிரா, குஜராத், கோவா  என்று ஒவ்வொரு மாநிலமாக துரத்தி அடிக்கப்பட்ட பிறகு தங்களுக்கு வாய்ப்பு கொடுத்த தமிழக மக்க ளிடம் ஸ்டெர்லைட் நடந்து கொண்ட விதம் மிகவும் அராஜகமானது. 

அந்த ஆலையின் தாளத்திற்கு ஆடாத அதிகாரிகள் பந்தாடப்பட்டார்கள். அதிகாரிகளுக்கு ஆசை வார்த்தை காட்டியும், பணப் பலன்கள் கொடுத்தும் சட்டத்தை வளைப்பதையும் மிக  இயல்பாக அந்த நிறுவனம் செய்து கொண்டிருந்தது. 

இந்த பின்னணியில்தான் ஆரம்பத்தில் அந்த நிறு வனத்திற்கு எதிராக நடந்த போராட்டத்தின்போது அமைதி காத்த அல்லது போராட்டத்திற்கு எதிர்ப்பு தெரி வித்த வியாபாரிகள் சங்கம் உள்ளிட்ட பொதுவான அமைப்புகள் போராட்டத்தில் ஈடுபட்டார்கள். 

இவற்றை யெல்லாம் கணக்கில் கொண்டால் அந்த நிறுவனம் தூத்துக்குடியில் மட்டுமல்ல, இந்தியாவில் எந்த பகுதி யிலும் இயங்குவதற்கு லாயக்கற்றது, அருகதை யற்றது. எனவே, குழு போடுவோம், நிபந்தனைகள் விதிப்போம்,

 அவர்கள் திருந்தி விடுவார்கள் என்றெல் லாம் நினைப்பது நாய் வால் நிமிர்ந்து விடும் என்று நம்புவதற்கு சமமாகும். 

எனவே, உச்சநீதிமன்றம் இந்த விபரீத கருத்தை கைவிட வேண்டும். 

தமிழக  அரசு இதுவரை இருந்ததைப் போல இந்த பிரச்சனை யில் உறுதியாக இருக்க வேண்டும்.  

                                      சு.கனகராஜ் (தீக்கதிரில்)



இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

2025ல் தங்கம் விலை

வினேஷ் போகத் வென்றார்!

முடிவுக்கு வருகிறதா?