திமிர்&வரம்பு மீறல்!
*விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதிக்கு கடந்த 2019ஆம் ஆண்டு இடைத்தேர்தல் நடைபெற்றது. அப்போது நாம் தமிழர் கட்சி வேட்பாளரை ஆதரித்து அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பிரச்சாரம் செய்தார்.

இது தொடர்பாக கஞ்சனூர் காவல் நிலையத்தில் காங்கிரஸ் கட்சியின் மாவட்ட தலைவர் புகார் அளித்திருந்தார்.
இந்த புகாரின் அடிப்படையில் பதிவு செய்யப்பட்ட வழக்கு விக்கிரவாண்டி நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளது. இத்தகைய சூழலில் தான் இந்த வழக்கில் இருந்து தன்னை விடுவிக்கக் கோரி நா.த.க. தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார்.
இந்நிலையில் இந்த மனு இன்று (06.02.2025) நீதிபதி வேல்முருகன் அமர்வில் விசாரணைக்கு வந்தது.
அப்போது, ஒவ்வொரு நாளும் ஒரு வழக்குப் பதிவு செய்யப்படுகிறது நீதிமன்றம் செல்ல வேண்டியுள்ளது என்று வாதிட்ட சீமான் வழக்கறிஞரிடம், “ ஒவ்வொரு நாளும் உங்கள் மனுதாரர் சீமான் அவதூறாகவும் திமிராகவும் வரம்பு மீறி பேசுகிறார்
அப்பொழுது வழக்குப்பதிவு செய்ய தானே வேண்டும். நீதிமன்றம் அதில் தலையிட முடியாது வழக்கு வேண்டாம் என்றால் வாயை கட்டுப்படுத்த சொல்லுங்கள்.
ஜனநாயக நாட்டில் குறிப்பாக இந்திய அரசியல் சாசனம் Article 19 இன் படி எந்த அவதூறை வேண்டுமானாலும் பேசிவிட்டு தப்பித்து விடலாம் என்று சீமான் கணக்கு போட வேண்டாம்.
தினசரி சீமான் யாரையாவது திட்டிக்கொண்டு அவதூறு பரப்பிக் கொண்டு தூண்டிவிட்டுக் கொண்டே இருக்கிறார்.
சமுதாயத்தில் பதட்டம் ஏற்படுத்துகிறார்.
இது மிகவும் கண்டனத்துக்குரிய செயல். நீதிமன்றம் கண்களை மூடிக்கொள்ளாது. இதுவரை நீதிமன்றம் தானாக வந்து இந்த விஷயத்தை கையில் எடுக்கவில்லை.
கையில் எடுக்க வைத்து விடாதீர்கள். அவர் நீதிமன்றத்தில் ஆஜராவதில் இருந்து விலக்களிக்க முடியாது. குறைந்த பட்சம் அவர் நான்கு நீதிமன்றம் ஏறி இறங்கினால் தான் அவருக்கு வாய் கட்டுப்படுத்த இயலும்.
தற்பொழுது நிதானமற்ற மனிதராக இருக்கிறார். நீதிமன்றம் செல்லட்டும் என்னால் விலக்களிக்க முடியாது. போகிற போக்கில் நிதானம் இல்லாமல் எதையோ பேசிக் கொண்டே இருக்கிறார் என்று நீதிபதி வேல்முருகன் சீமானை கடுமையான வார்த்தையில் சாடியுள்ளார்.
`சட்டம் இயற்றும் இடம் சட்டமன்றம் '
தமிழ்நாடு ஆளுநர் ஆர் யன். ரவிக்கு எதிராக தமிழ்நாடு அரசு தொடர்ந்த வழக்கின் விசாரணை உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.
இன்றைய வழக்கு விசாரணையின் போது உச்ச நீதிமன்ற நீதிபதிகள் பரிதிவாலா மற்றும் ஆர். மகாதேவன் ஆகியோர் அடங்கிய அமர்வு, `ஆளுநர் எந்த அடிப்படையில் ஒரு மசோதா மீது முடிவெடுக்கிறார்?
மசோதாக்களை இரண்டாவது முறையாக மாநில அரசு ஒப்புதலுக்காக சமர்ப்பிக்கும் போது அதை குடியரசு தலைவருக்கு அனுப்பி வைக்க ஆளுநருக்கு அதிகாரம் இருக்கிறதா?’ உள்ளிட்ட எட்டு கேள்விகளை நீதிபதிகள் எழுப்பி இருந்தனர்.
பின்னர் தமிழ்நாடு அரசு சார்பில் மூத்த வழக்கறிஞர் ராகேஷ் திரிவேதி வாதங்களை முன் வைத்தார். `மத்திய அரசின் வரம்புக்குள் இருக்கும் ஒரு விவகாரத்தில் மாநில அரசு சட்டமேற்றுகிறது என்றால் அதை நிராகரிக்க மட்டும் தான் ஆளுநருக்கு அதிகாரம் இருக்கிறது.
பொது பட்டியலில் இருக்கும் விவகாரங்கள் அல்லது மாநில பட்டியலில் இருக்கும் விவகாரங்கள் ஆகியவற்றில் ஒரு மாநில அரசு மசோதாவை நிறைவேற்றினால் அதற்கு ஆளுநர் ஒப்புதல் அளித்தே ஆக வேண்டும்’ என தமிழ்நாடு அரசு தரப்பு பதில் அளித்தது.
நீதிபதிகள், `ஒரு மசோதாவை ஆளுநர் சட்டமன்றத்திற்கே திருப்பி அனுப்பி வைக்கிறார். அதை ஏன் அனுப்பி வைக்கிறேன் என்பதை ஆளுநர் குறிப்பிட வேண்டியது மிகவும் அவசியமா?
ஏனென்றால் காரணத்தை குறிப்பிடவில்லை என்றால் மாநில அரசால் எப்படி அதை சரி செய்ய முடியும் இதைப்பற்றி சட்டம் என்ன சொல்கிறது?” என மீண்டும் கேள்வி எழுப்பினர்.
``பெரும்பாலான நேரங்களில் ஆளுநர் அப்படி சொல்வதில்லை வெறுமென அதை நிலுவையில் போட்டு வைப்பார் அல்லது காரணம் எதையும் குறிப்பிடாமலேயே நிராகரித்து விடுவார்” என தமிழ்நாடு அரசு தரப்பில் பதிலளிக்கப்பட்டது.
``என்ன என்ன விஷயங்களை ஆளுநர் குறிப்பிட்டு மசோதாக்களை திருப்பி அனுப்ப முடியும்?” என மீண்டும் நீதிபதிகள் கேட்டபோது
``சில பரிந்துரைகளை கொடுக்கலாம். குறிப்பிட்ட சரத்துகளை சுட்டிக்காட்டி அதை மாற்ற அறிவுறுத்தலாம். சட்ட வரைமுறைகளுக்கு எதிராக இருக்கும் அம்சங்களை சுட்டிக்காட்டலாம். இந்த மூன்று விஷயங்களை மட்டும் தான் ஆளுநரால் செய்ய முடியும்” என தமிழ்நாடு அரசு அதற்கும் பதில் வழங்கியது.
``மசோதாக்கள் மீது முடிவெடுப்பதை அறிவுறுத்தும் அரசியல் சாசனப் பிரிவின் முதல் உட்பிரிவின்படி, மசோதாவை நிராகரித்தாலோ திருப்பி அனுப்பினாலோ அதற்கான காரணத்தை தெளிவாக சுட்டிக்காட்ட வேண்டும் என்று கூறுகிறது. ஆனால் அதை கட்டாயமாக பின்பற்ற வேண்டியது இல்லை” என ஆளுநர் தரப்பு கூறுகிறது.
தமிழ்நாடு அரசு தரப்பு, ``ஆளுநர் மசோதாக்கள் மீது அறிவுரை கூறும் ஆலோசகர் மட்டும்தானே தவிர, முடிவெடுக்கும் அதிகாரம் அவருக்கு வழங்கப்படவில்லை.
ஆளுநரை பொருத்தவரை மசோதாக்களின் மீது முடிவெடுக்கும் அவரது அதிகாரத்தை ஒருமுறை அவர் பயன்படுத்தி விட்டார் என்றால் இன்னொரு முறை அதை பயன்படுத்த முடியாது. அதனால் தான் முதல் முறை மசோதாவை அரசுக்கு திருப்பி அனுப்பும் ஆளுநரால் இரண்டாவது முறையாக அதை செய்ய முடியாது.
மேலும் குடியரசுத் தலைவருக்கும் அனுப்ப முடியாது ஒப்புதல் அளிப்பது மட்டும்தான் அவருக்கு இருக்கக்கூடிய ஒரே வாய்ப்பு. ஆளுநர் இருக்கக்கூடிய சட்ட அம்சங்களை ஆராய்ந்து முடிவெடுக்க வேண்டும்.
அதை விட்டுவிட்டு சூப்பர் சட்டமன்றமாக அவர் செயல்படக்கூடாது” என அடுக்கடுக்கான வாதங்களை முன்வைத்தது
.
``ஒரு மசோதாவை இரண்டாவது முறையாகவும் அனுப்பி வைக்கும் போது, அதுவும் அதிகார வரம்பு மீறல் எனக் கூறி ஆளுநர் நிராகரிக்கிறார் என்றால் அதை எவ்வாறு பார்ப்பது?” என உச்சநீதிமன்றம் குறுக்கு கேள்வி கேட்டபோது, ``மசோதா அதிகார வரம்பை மீறி இருக்கிறதா இல்லையா என்பதை ஆய்வு செய்ய வேண்டியது நீதிமன்றத்தின் வேலையை தவிர ஆளுநரின் வேலை கிடையாது” என தமிழ்நாடு அரசு பதில் அளித்தது
`சட்டம் இயற்றும் இடம் சட்டமன்றம் தானே தவிர அது கவர்னர் மாளிகை அல்ல’
``பல மசோதாக்கள் மீது 3 ஆண்டுகள் முடிவெடுக்காமல் நிலுவையில் போட்டு வைப்பது என்பது தமிழ்நாடு ஆளுநரின் வழக்கமான வேலைகளாக மாறிவிட்டது , அத்துடன் சேர்த்து தற்போது பல்கலைக்கழகங்களுக்கான துணைவேந்தர்களையும் தான் மட்டுமே நியமிப்பேன் என்று ஆளுநர் முடிவெடுத்திருக்கிறார்.
சட்டம் இயற்றும் இடம் சட்டமன்றம் தானே தவிர அது கவர்னர் மாளிகை அல்ல. பல தருணங்களில் இந்திய நீதிமன்றங்கள் கவர்னர் அது அதிகாரங்களை கேள்வி எழுப்பி, அதை சரி செய்து இருக்கிறது.” என தமிழ்நாடு அரசு உச்ச நீதிமன்றத்தில் வாதங்களை முன் வைத்தது.
தொடர்ந்து, தமிழ்நாடு அரசு சார்பில், ``சட்டங்களை நன்கு அலசி ஆராய்ந்து தான் சட்டமன்றங்கள் மசோதாக்களை நிறைவேற்றுகின்றன. எந்த ஒரு அரசும் தங்களது மசோதா ஆளுநரால் நிராகரிக்கப்பட வேண்டும் என்பதற்காக அனுப்பி வைக்க மாட்டார்கள்.
ஆனால் அவற்றின் மீது எந்த ஒரு விளக்கங்களையும் அளிக்காமல் நிறுத்தி வைப்பது ஏற்கத்தக்கது அல்ல.
தமிழக சட்டசபை
ஆளுநர் என்பவர் அமைச்சரவை குழுவின் முடிவுகளுக்கு கட்டுப்பட்டவர். அவர் ஒரு முடிவெடுக்கிறார் என்றால் அவர் அமைச்சரவை குழுவின் அறிவுரைகளின் படியே தான் எடுக்க முடியும்.
ஒரு மாநில அரசு அரசியல் சாசன பிரிவின் படி நடக்கவில்லை என்றால் அந்த அரசை கலைக்க பரிந்துரை செய்யும் அரசியல் சாசனத்தின் பிரிவு 356 இன் கீழ் மட்டும்தான் ஆளுநர் தன்னிச்சையாக முடிவெடுக்க முடியும். அந்த ஒரு இடத்தில் மட்டும் தான் ஆளுநர் அமைச்சரவை குழுவின் அறிவுரையை பெற தேவையில்லை.
மற்றபடி அனைத்து விஷயங்களுக்கும் ஆளுநர் அமைச்சரவையின் முடிவுகளுக்கு கட்டுப்பட்டவர். அரசியல் சாசனத்தின் படி உயர்ந்த ஒரு பதவியில் இருக்கும் ஒரே ஒரு நபர் ஒரு மாநிலத்தின் சட்டப்பேரவைக்கு எதிராக அந்த சட்டப்பேரவைக்கு உறுப்பினர்களை அனுப்பும் மக்களுக்கு எதிராக செயல்படுவதை ஒருபோதும் ஏற்க முடியாது” என காரசார வாதங்கள் முன்வைக்கப்பட்டது.
``ஆளுநர் பதவி ஒரு மிகச் சிறியது என்பது போன்ற வாதங்களை தமிழ்நாடு அரசு தரப்பு முன் வைத்திருக்கிறார்கள்.
ஆனால் அரசியல் சாசனம் ஆளுநருக்கு அதிகாரங்களை வழங்கி இருக்கிறது” என பேசிய போது குறுக்கிட்ட நீதிபதிகள், ``ஆளுநரின் அதிகாரங்களை நாங்கள் குறைத்து மதிப்பிடவில்லை.
அதே நேரத்தில் மசோதாக்களின் மீது முடிவெடுக்கும் அவரது செயல்பாடுகள் மீது நாங்கள் கேள்விகளை எழுப்புகிறோம்.
உச்சநீதிமன்றம்
குறிப்பாக இரண்டு மசோதாக்களை முதல் தடவையே குடியரசு தலைவருக்கு அனுப்பி வைத்த ஆளுநர், பத்து மசோதாக்களை அரசுக்கு திருப்பி அனுப்பி விட்டு, அரசு மீண்டும் சமர்ப்பித்த பின்னர் ஒப்புதல் அளிக்க வேண்டிய இடத்தில் இருந்து கொண்டு அதை செய்யாமல் குடியரசுத் தலைவருக்கு ஏன் அனுப்பி வைத்தார்?
இதற்கான விளக்கங்கள் எங்களுக்கு தேவைப்படுகிறது.
எந்த அடிப்படையில் யார் யாரிடம் ஆலோசனை செய்து யாருடைய அறிவுரையின்படி ஆளுநர் இவ்வாறு செயல்பட்டார்?
இந்த விவரங்களை எங்களுக்கு தாக்கல் செய்யுங்கள்” என ஆளுநர் தரப்புக்கு அறிவுறுத்தல் வழங்கி வழக்கின் விசாரணையை நாளைய தினத்திற்கு ஒத்தி வைத்தனர் உச்ச நீதிமன்ற நீதிபதிகள்.
ஆளுநர் தரப்பின் பதில்கள் பல இடங்களில் திருப்தி அளிக்காமல் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தொடர்ந்து கேள்விகளை எழுப்பிக் கொண்டே இருந்தனர்.
நாளைய தினம் ஆளுநர் தரும் விளக்கங்கள் உச்ச நீதிமன்றத்திற்கு திருப்தியாக இல்லை என்றால் நிச்சயமாக ஆளுநருக்கு எதிராக தீர்ப்பு வருவதற்கான வாய்ப்புகள் அதிகமாக உள்ளது.
இந்த வழக்கின் தீர்ப்பு நாடு முழுவதிலும் உள்ள ஆளுநர்களின் செயல்பாடுகள், குறிப்பாக மசோதாக்கள் மீது முடிவெடுக்கும் விவகாரத்தில் மைல்கல் தீர்ப்பாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.!