தலையாய [முடிப்] பிரச்சினை?


சுரன்11102014

கூந்தலை நான்காக பிரிக்கலாம். உங்கள் கூந்தல் எந்தவகையைச் சார்ந்தது என்று கண்டுகொண்டீர்களானால், அதைப் பராமரிப்பது சுலபம்.
1.    சாதாரண கூந்தல்(Normal hair) 
2.    வறண்ட கூந்தல்(dry hair) 
3.    எண்ணெய்ப் பசையுள்ள கூந்தல்(oil hair)
4.    பலவீனமான கூந்தல்(weak hair)

சாதாரண கூந்தல் (normal hair)

நன்கு அடர்த்தியாகவும், சுத்தமாகவும், பளபளப்பாகவும், வளமையாகவும் இருக்கும் இத்தகைய கூந்தல் நன்கு வளரும் தன்மையுடையது . 

வறண்ட கூந்தல் (dry hair)

இத்தகைய கூந்தல் நிறம் மங்கிய நிலையில் காணப்படும். முடியின் நுனிப்பகுதியில் வெடிப்பு காணப்படும். முடியின் நடுபகுதியில் உண்டாகும் முடிச்சுகளால் முடி அடிக்கடி உடைந்து உதிரும். மயிர்க்கால்கள் மற்றும் முடி  வறண்டு காணப்படுவதால், அடிக்கடி எண்ணெய் மசாஜ் செய்து பராமரித்து வரவேண்டும் .

எண்ணெய்ப் பசையுள்ள கூந்தல் (oil hair )

கூந்தலில் அளவுக்கதிமான எண்ணெய்ப்பசை காணப்படும். முடி மிகவும் மெலிந்து உறுதியற்று காணப்படும். எண்ணெய்ப் பசை அதிகமிருப்பதால் விரைவில் அழுக்கு மற்றும் தூசிகள் சேர்ந்து பொடுகு மற்றும் அரிப்பு உண்டாகி முடி கொட்டல் ஏற்படும்.

பலவீனமான கூந்தல் (weak hair)

நமது தவறான  அணுகுமுறைகளினால் மட்டுமே பலவீனமான கூந்தல் உண்டாகிறது என்பதை உறுதியாகச் சொல்லலாம்.

1.    அடிக்கடி உப்புத்தண்ணீரில் குளிப்பது.
2.    தலைமுடிக்கு அடிக்கடி பிளீச் செய்வது
3.    தலைமுடிக்கு அடிக்கடி சாயம் போடுதல் (colouring)

நெடுநேரம் வெயிலில் அலைவது போன்ற காரணங்களால் பலவீனமான கூந்தல் உண்டாகிறது.

பலவீனமான கூந்தலை பராமரிக்க 

1.    பலவீனமான கூந்தலை உடையவர்கள் ஈர்த்தலையில் அல்லது எண்ணெய் பூசியவுடன்  தலையை வாரக்கூடாது .
2.    இரசாயனக் கலவை கொண்ட ஷாம்புகளைவிட, இயற்கை மற்றும் ஆயுர்வேத முறைகளில் தயாரிக்கப்படும் சீயக்காய் அல்லது ஷாம்புகளை உபயோகியுங்கள் .
3.    சீயக்காய் தூளை சாதம் வடித்த கஞ்சியுடன் கலந்து தேய்த்தால் வறட்சித் தன்மை இல்லாதிருக்கும் . 
4.    கூந்தலை சுத்தம் செய்யும்போது மயிர்க்கால்களையும் கவனம் கொண்டு விரல் நுனிகளால் சுத்தம் செய்ய வேண்டும் .
5.    மாதத்திற்கு மூன்று முறையாவது எண்ணெய் மசாஜ் செய்வதால் பலவீனமான கூந்தல் பலமான கூந்தலாகும்.
6.    தலையில் மசாஜ் செய்ய கேரட் சாறு மிகவும் நல்ல பலனைத்தரும்.
7.    அதிக சூடுள்ள நீரில் குளிக்கக்கூடாது.
8.    கூந்தலை டவலால் அடித்து காய வைக்கக்கூடாது.
9.    பலகீனமான கூந்தலில் வெடிப்பு ஏற்பட்டு, முடிகொட்டுதல் உண்டானால், தேங்காய்ப் பாலை தேய்த்து ஊறவைத்துக் குளித்தால் முடி கொட்டுதல் நீங்கும் . 
10.    பிரசவத்திற்குப்  பின் பெண்களுக்கு முடிகொட்டுதல் உடல் பலவீனத்தாலேயே என்பதை உணர்ந்து, சத்தான ஆகாரங்களை  உண்டு கூந்தல் பலவீனத்தை சரிபடுத்திக்கொள்ள வேண்டும் .
கூந்தல் மசாஜ்
1.    மயிர்க்கால்களில் (scalp) விரல் நுனிகளைக் கொண்டு நன்கு அழுத்தி தலைமுழுவதையும் தேய்க்க வேண்டும் .
2.    கூந்தலை வரிவரியாகப் பிரித்து, பஞ்சில் எண்ணெய்யை நனைத்து, மயிர்க்கால்கள் முழுவது நன்கு தேய்க்க வேண்டும்.
3.    மசாஜ் செய்யும்பொழுது தலையின் முன் பக்கத்திலிருந்து பின்பக்கமாய் செய்வது சிறந்த பலனைத் தரும்.
4.    கப்பிங் முறையில் விரல்களை ஒன்றாக இணைத்து, குவித்து தலை முழுவதும் தட்டிவிட வேண்டும் .
5.    இரண்டு உள்ளங்கைகளையும் ஒன்றாக இணைத்து, சுண்டுவிரலால் டேப்பிங் முறையில் மெதுவாக தலையில் தட்டி விடவேண்டும் .
6.    விரல்நுனிகளை மயிர்க்கால்களில் வைத்து லேசாகக் கிள்ளுவதுபோல் பின்சிஸ் முறையில் தலைமுழுவதும் மசாஜ் செய்தல் வேண்டும்.
கூந்தலைப் பராமரிக்க ஆவிப்பிடித்தல்(steaming)

மசாஜ் குறைந்தபட்சம் 20  நிமிடங்கள் செய்யப்பட வேண்டும் . பின்னர் ஒரு பாத்திரத்தில் நீரை கொதிக்க வைக்க வேண்டும் . அதில்  ஒரு பெரிய துண்டினை நனைத்து, பொறுக்கும் அளவு சூட்டுடன் தலையில் சுற்றிட வேண்டும் . இதேபோல் நான்கு முறை செய்ய வேண்டும் .

ஆவி பிடித்த பின் ,தலைக்கு மூலிகை பூச்சு செய்தால் மிகவும் நல்லது . 

முடி கொட்டுதல்

1.    நமது உடம்பில் பித்தம் அதிகரித்து காணப்பட்டால், முடிக் கொட்டுதல் உண்டாகும்.
2.    அடிக்கடி காபி, டீ0 போன்ற பானங்கள் பருகுவதாலும் அதிக அளவில் மதுபானங்களை உபயோகிப்பதாலும், அடிக்கடி அசைவம் உண்பதாலும், புகைப்பிடிப்பதாலும் தலைமுடி வெகுவாகப் பாதிக்கப்படுகிறது.
3.    எண்ணெய்யில் வறுத்த உணவுகள் (fried foods)
    என்ணெய் பதார்த்தங்கள்(oily food)
    புளிப்பு உணவுகள் (acidic food )
    இவைகளை அடிக்கடி அதிக  அளவில் உண்பதாலும் தலைமுடி கொட்டுதல், நரை போன்ற குறைபாடுகள் காணும்.
4.    அடிக்கடி ரசாயன மருந்துகளை (chemical medicines) உட்கொள்வதாலும் முடிகொட்டுதல் உண்டாகும்.
5.    உடம்பில் இரத்தம் குறைந்து உண்டாகும் இரத்த சோகை (anemia) நோயினாலும் உடம்பில் காணும் பொதுவான பலஹீனத்தாலும் (general debility), மனச்சோர்வு, மன உளைச்சல், கோபம் போன்ற காரணங்களினாலும் தலைமுடி சார்ந்த குறைகள் உண்டாகும்.
6.    டைபாய்டு காய்ச்சல் மிக முற்றிய நிலையிலும், பொடுகு மற்றும் பேன் அதிகரித்த நிலையிலும் ஹார்மோன் பற்றாக்குறை (hormonal imbalance) நிலையிலும் முடிக் கொட்டுதல் உண்டாகும் .
7.    அடிக்கடி ரசாயனம் கலந்த ஷாம்பு மற்றும் சோப்புகளை உபயோகிப்பதாலும் முடிக்கொட்டுதல், முடி வெடித்தல், முடி செம்பட்டையாதல் ஆகியன உண்டாகலாம்.
கூந்தல் வளர்ச்சியில் அரோமா எண்ணெய்கள்:

1.    ரோஸ்மேரி எண்ணெய் (rosemarry oil ): 100 கிராம் தேங்காய் எண்ணெயைக் கலந்து தினசரி தலைக்கு தேய்த்துவர முடி அடர்த்தியாக வளரும்.
2.    காஸ்டஸ் எண்ணெய் (costous oil ) : 100 கிராம் தேங்காய் எண்ணெய்யுடன் 5 துளி காஸ்டஸ் என்ணெய் கலந்து, தினசரி தலைக்குத் தேய்த்துவர-பொடுகுத் தொல்லை முற்றிலும் நீங்கி முடி அடர்த்தியாய் வளரும் . 

3.    ஜூனிஃபர் பெரி (junifer berry)     –5 சொட்டு 
எலாங் எலாங்(yalang yalang)     –7 சொட்டு
நல்லெண்ணெய்             –100 மி.லி
ஆமணக்கு எண்ணெய்        -10மி.லி

இவையனைத்தையும் ஒன்றாகக் கலந்து தலை முழுவதும் பூசி மசாஜ் செய்ய வேண்டும் . மசாஜ் செய்து 6 மணி நேரம் கழித்து குளிக்க, முடி உதிரல் குறைபாடு உடனே நீங்கும்.

4.    லாவண்டர் எண்ணெய்(lavener oil )    -5 சொட்டுகள் 
லெமன் எண்ணெய் (lemon oil )     -10 சொட்டுகள்
ரோஸ்மேரி எண்ணெய்(rosemerry oil)    -10 சொட்டுகள் 
டீடிரி எண்ணெய்(tea tree oil )        –10சொட்டுகள் 
தேங்காய் எண்ணெய்            -100மி.லி

இவைகளை ஒன்றாகக் கலந்து வைத்துக்கொண்டு தினசரி தலைக்கு தேய்த்துவர அடர்த்தியுடன் கருமையாய் முடி வளரும்.

5.    ஸ்பெக்நாட் எண்ணெய்(spicknade oil)         –8சொட்டுகள் 
டீ டிரி எண்ணெய் (tea tree oil)            -8சொட்டுகள் 
லெமன் கிராஸ் எண்ணெய்(lemongrass oil )    -8 சொட்டுகள்
லெமன் எண்ணெய்(lemon oil)            -8சொட்டுகள்
சிடார்வுட் எண்ணெய்(cidarwood oil )        -8சொட்டுகள்
நல்லெண்ணெய்                    -20 மில்லி

இவைகளைக் கலந்து வாரம் இருமுறை மசாஜ் செய்து குளித்து வர, தீராத பொடுகும் தூர ஓடும்.

கூந்தல் மசாஜ் செய்ய சில எண்ணெய்கள்:
1.    தேங்காய் எண்ணெய்
2.    ஆமணக்கு எண்ணெய்
3.    கருஞ்சீரக எண்ணெய்
4.    ஆலிவ் எண்ணெய் 
5.    நெல்லிக்காய் எண்ணெய்
6.    செம்பருத்தி எண்ணெய்
7.    கரிசலாங்கண்ணி எண்ணெய்
8.    பொன்னாங்கண்ணி எண்ணெய்
9.    கற்றாழை எண்ணெய்
10.    சவுரிப்பழ தைலம்

மேற்படி எண்ணையை கிண்ணத்தில் தேவையான அளவில் எடுத்து, வாயகன்ற பாத்திரத்தில் நீரை கொதிக்கவிட்டு, கிண்ணத்தில் நீரில் அமிழ்த்தி எண்ணையை சூடு செய்து உபயோகிக்க வேண்டும்.

தலைமுடி தாராளமாய் வளர சில குறிப்புகள் 

1.    சாதம் வடித்த நீருடன் (வடிகஞ்சி) சிகைக்காய் பவுடரைக் கலந்து தேய்து வாரம் இருமுறை குளித்துவர, முடி அடர்த்தியாக வளரும்.
2.    ஆலிவ் எண்ணெய் சிறிது சூடாக்கி, தினசரி தேய்த்து 6 மணி நேரம் கழித்து குளித்துவிடவும். முடி பளபளப்பாகவும் அடர்த்தியாகவும் வளரும்.
3.    கூந்தல் வளர்ச்சிக்கு உடல் போஷாக்கு மிகமிக முக்கியம். விதவிதமான கூந்தல் தைலங்களை உபயோகிப்பதைவிட சத்தான ஆகாரங்கள் கூந்தல் வளர்ச்சிக்கு மிகவும் ஏற்றது.
4.    கறிவேப்பிலை உணவில் தாராளமாய் சேர்த்துக்கொள்ளுங்கள் தலைமுடி செழிப்பாய் வளரும்.
5.    சப்பாத்திக் கள்ளிப் பூவை சேகரித்து விழுதாய் அரைத்து தேங்காய் எண்ணெயிலிட்டுக் காய்ச்சி உபயோகித்து வர முடி அடர்த்தியாய் வளரும். முடி கொட்டுதல் நீங்கும்.
6.    செம்பருத்திப்பூவை கசக்கிச் சாறு எடுத்து முடி உதிர்ந்து சொட்டையாகியுள்ள இடத்தில் தேய்த்துவர முடி வளர ஆரம்பிக்கும்.
7.    ஒரு லிட்டர் தேங்காய் எண்ணெய்யில் மூன்று ஸ்பூன் தேயிலையை கலந்து சூடாக்கி, தைலப் பதத்தில் இறக்கிவிடவும்,. இதனை தினசரி பயன்படுத்திட முடி கருமையாய் செழித்து வளரும் .
8.    வேப்பம்பூவை அடுப்பில் சிறிது வதக்கி, கசக்கி இளஞ்சூட்டுடன் உச்சந்தலையில் தேய்த்துவர முடி தாராளமாய் வளரும்.
9.    தாமரை இலையை அரைத்துச் சாறெடுத்து நல்லெண்ணெய்யுடன் கலந்து தைலமாக காய்ச்சிக் கொள்ளவும் . இதனை தலை சொட்டையான இடத்தில் தேய்த்துவர, அந்த இடத்தில் முடி கருகருவென வளர்ந்துவிடும்.
10.    மருதாணி இலையை தேங்காய் எண்ணெயிலிட்டு காய்ச்சி வடிகட்டி வைத்துகொள்ளுங்கள் . இதனை தினசரி தலைக்குத் தடவிவர செம்பட்டை மாறி முடி கருமையாகும்.
11.    வெந்தயத்தை தண்ணீர்விட்டு விழுதாய் அரைத்து தலையில் தேய்த்து, அரைமணிநேரம் வைத்திருந்து குளித்துவிடுங்கள் . அடிக்கடி பயன்படுத்திவர ,முடி வளரும், முடி கொட்டுதல் நீங்கும் .
12.    1 ஸ்பூன் இஞ்சில்ச் சாற்றில் சிறிது தேன் கலந்து அதிகாலையில் சாப்பிட்டுவர, பித்த நரை, மற்றும் இளநரை மறையும்.
13.    பாதாம்  எண்ணெய்யினால் தினசரி தலையில் வேர்க்காலில் (scalp) குறைந்தது 15 நிமிடங்கள் மசாஜ் செய்துவர முடி வளர்ச்சி அதிகமாகும் .
14.    வேப்பிலையை தண்ணீர்லிட்டு கொதிக்க வைத்து அந்த நீரில் தலையைக் கழுவி வர முடி வளர்ச்சி அடர்த்தியாகும்.
15.    பச்சைக் காய்கறிகளை நிறைய சாப்பிடுவதும் பால், பழங்கள், முளைக்கட்டிய தானியங்கள், வெண்ணெய், கோதுமை உணவுகள், சோயாபீன்ஸ், பருப்பு வகைகளை நிறைய உணவாகக் கொள்வதும் முடியை நன்கு வளர்த்திட ஏதுவாகும்.
16.    முடி நன்கு வளர முடி சார்ந்த பிரச்சினைகள் ஏற்படாமல் இருக்க, இயற்கை முறை ஷாம்புகளையே (natural shampoo) உபயோகியுங்கள்.
17.    தலைமுடியை நெல்லிக்காய் பொடி அல்லது சிகைக்காய் கொண்டு மசாஜ் செய்து அலசிவாருங்கள். முடி வளர்ச்சி உண்டாகும்.
18.    அடிக்கடி ஆயில் மசாஜ், முடியின் வேர்க்காலுக்கு (scalp) செய்து வாருங்கள்.
19.    மஹா பிருங்கராஜ தைலம்’ அல்லது ‘நெல்லிக்காய் தைலம் இவைகளைக் கொண்டு தலைமுடிக்கு மசாஜ் செய்திட, முடி தாராளமாக வளரும்.
20.    உடம்பில் மலச்சிக்கல் உண்டானால், உடல் உஷ்ணம் அதிகமாகி, உடம்பில் பித்தம் அதிகரித்து, தலைமுடி கொட்ட ஆரம்பித்துவிடும். எனவே மலசிக்கல் இல்லாமல் பார்த்துக் கொள்ளவேண்டும்.
21.    தினசரி செய்துவரும் எளிய உடற்பயிற்சியும் தலைமுடி வளர துணை செய்யும்.
22.    கீரைசூப், காய்கறி சூப், கேரட் சாறு இவைகளை அடிக்கடி சாப்பிடுவர தலைமுடி நன்கு வளரும்.
23.    கொத்தமல்லி இலைச்சாற்றினைக் கொண்டு, தலைமுடியின்  வேர்க்காலில் (scalp) மசாஜ் செய்துவர தலைமுடி கருமையாய் வளரும்.
24.    தேங்காய் எண்ணெய்யுடன் சிறிது எலுமிச்சைச்சாறு கலந்து தலையில் மசாஜ் செய்துவர, முடி நன்கு வளரும்.
25.    பெருஞ்சீரகத்தை(சோம்பு) விழுதாய் அரைத்து, வாரம் மூன்றுமுறை தலையில் தேய்த்துக் குளித்துவர, முடி கருமையாய் வளரும்.
======================================================================

தலை சுற்றல்?
------------------------------------
சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் தலைசுற்றல் பிரச்னை ஏற்படுகிறது. 

உடலில் ஏதேனும் குறைபாடு இருந்தால் முதலில் தலைசுற்றலில் தான் ஆரம்பிக்கும். இரத்தசோகை உள்ளவர்களுக்கும் இந்த பிரச்னை ஏற்படும். இக்காலகட்டத்தில் 80 சதவீத பெண்கள் இரத்தசோகையால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் தலைசுற்றல், மனச்சோர்வு ஆகிய பிரச்னைகள் ஏற்படுகிறது. சூன்ய முத்ரா பயிற்சி செய்வதன் மூலம் தலைசுற்றல் பிரச்னையை சரிசெய்யலாம். 
நடுவிரலை மடக்கி கட்டை விரலை அதன் மீது பதிய வையுங்கள். மற்ற மூன்று விரல்களையும் நேராக நிமிர்த்தி வையுங்கள். இதுவே சூன்ய முத்திரை ஆகும். இந்த பயிற்சி தினமும் 45 நிமிடம் செய்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும். 

இந்த முத்திரை பயிற்சியை செய்வதன் மூலம் காதுவலி, காதில் சீழ் வடிதல், சரியான முறையில் காது கேளாமை போன்ற குறைபாடுகளை இந்த முத்ரா சரி செய்யும். அதுமட்டுமில்லாமல் பயண நேரங்களில் வரும் களைப்பு, தலைசுற்றல் ஆகிய பிரச்னைகளுக்கு தீர்வாக இந்த முத்ரா அமைகிறது. 
==========================================================================================

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

2025ல் தங்கம் விலை

வினேஷ் போகத் வென்றார்!

முடிவுக்கு வருகிறதா?