புதன், 15 அக்டோபர், 2014

மழைக்காலம் மட்டுமல்ல கொசு க்காலமும்.மழைக் காலம் ஆரம்பமாகி விட்டது.

மழை பெய்கிறதோ இல்லையோ கொசுக்களின் தொல்லையால் புது நோய்கள் வருவதில் மட்டும் குறைவில்லை.

சிக்கன் குனியா,டெங்கு ,எலி காய்ச்சல்,குரங்கு காய்ச்சல் என்று மனிதனுக்கு கொசு அன்பளிப்புகளில் குறைவில்லை.
ஆனால் இந்த புதிய நோய்களை கட்டுப்படுத்த ஆங்கில மருந்துகளால் இயலாமல் போய் நமது நில வேம்பு,பப்பாளி குடி நீர் என்று பாட்டி வைத்தியம்தான் இன்றைய நம்பிக்  கை கண்ட மருந்துகளாகியுள்ளன.

மழைக்காலங்களில் ஏற்படும் சாதாரண வைரஸ் காய்ச்சல், இருமல், டைபாய்டு, காலரா, மஞ்சள் காமாலை போன்ற தொற்று நோய்களை தவிர  சிக்குன் குனியா, டெங்கு, பன்றிக்காய்ச்சல் போன்ற நோய்களும் மக்களை அச்சுறுத்தி வருகின்றன. 
குறிப்பாக தமிழகத்தில் இந்த அச்சம் ஒவ்வொரு  மழைக்காலத்திலும் மக்களை பாடாய்படுத்தி வருகிறது.  தற்போது மக்களின் பெரும் அச்சத்துக்கு காரணமான டெங்கு காய்ச்சல் என்பது ஏடிஸ் வகை  கொசுக்கள் மூலம் பரவும் டெங்கு வைரஸ் நோயாகும். இந்த வைரஸ் டைப்1, டைப்2, டைப்3 மற்றும் டைப்4 ஆகிய 4 வகைகளில் உள்ளது. வெப்ப  மண்டல நாடுகளில் காணப்படும் ஏடிஸ், ஏஜிப்டி என்ற கொசுவால் இது பரவுகிறது.

1990ம் ஆண்டுகளில் ஏடிஸ் வகை கொசு மூலம் பரவும் நோயாக டெங்கு அடையாளம் காணப்பட்டது. ஒவ்வொரு ஆண்டும் இந்த நோயால்  லட்சக்கணக்கானோர் பாதிக்கப்பட்டனர். 
ஏடிஸ் ஏஜிப்டி என்ற கொசு அதிகமாக காணப்படும் தென் கிழக்காசிய நாடுகள், இந்தியா மற்றும் அமெரிக்கா  போன்ற வெப்பமண்டல நாடுகளில் டெங்கு காய்ச்சல் அதிகமாக வருகிறது. இந்த காய்ச்சல் கண்ட ஒருவரை கடிக்கும் ஏடிஸ் வகை கொசு  மற்றொருவரை கடிக்கும்போது அவருக்கும் டெங்கு வைரஸ் தொற்றுகிறது.

டெங்கு காய்ச்சல் தீவிரமாகும்போது மூக்கு, பல் ஈறு மற்றும் தோலிலிருந்து ரத்தக்கசிவு ஏற்படும். 
வயிற்று குடலினுள் ரத்தம் வடியும் நிலை  ஏற்பட்டால் வாந்தி காபி கொட்டை நிறத்தில், மலம் கறுப்பு நிறத்தில்  வெளியேறும். டெங்கு என்ற ஸ்பானிய மொழிச்சொல் எலும்பு முறிக்காய்ச்சல்  என பொருள்படும். இந்நோய் டெங்கு  வைரசால் ஏற்படுகிறது. 

ஏடிஸ் ஏஜிப்டி என்ற கொசு கடித்த 2 முதல் 7 நாட்களுக்குள் நோய் ஏற்படும். இந்த கொசுக்கள் கறுப்பு நிறமானவை. இறக்கையில் வெள்ளை  நிறப்புள்ளிகள் தென்படும். மற்ற கொசுக்களை விட தோற்றத்தில் சிறியவை. முதுகில் வெள்ளை நிறக்கோடுகள் 2 தெரியும். பெண் வகை  கொசுக்கள்தான் நோயை பரப்பும். இந்த கொசுக்கள் சூரிய உதயத்திற்கு பின் 2 அல்லது 3 மணிக்குள்ளும், சூரிய அஸ்தமனத்திற்கு முன் 2 அல்லது 3  மணி நேரத்திற்குள்ளும் கடிக்கும். இந்த கொசுக்கள் சாதாரண சூழலில் 60 நாட்கள் வரை உயிர் வாழக்கூடியது. 
அறிகுறிகள் இல்லாத காய்ச்சல் நிலை.
ஆரம்ப நிலை டெங்கு காய்ச்சல் நிலை.
ரத்தப் பெருக்குடன் கூடிய டெங்குக் காய்ச்சல் நிலை.
டெங்கு அதிர்ச்சி அறிகுறி நிலை. 


முதல் நிலையை தொடர்ந்து அடுத்தடுத்த நிலைகள் ஒன்றன் பின் ஒன்றாக ஏற்படும். ஆரம்ப நிலை டெங்கு காய்ச்சல் ஓரிரு நாட்களில்  குறையவில்லை எனில் உடனடியாக உரிய சிகிச்சை பெற்றால் மரணத்தை தவிர்க்க முடியும். 

கடுமையான காய்ச்சல், தாங்க முடியாத தலைவலி,  முன்தலை பக்கத்தில், கண்களின் பின்புறத்தில் வலி, கண்களை உருட்டும்போது கடுமையான வலி, உடல்வலி, மூட்டுக்கள், தசைகள், கை, கால்,  எலும்பு போன்றவற்றில் வலி, குமட்டல், வாந்தி, சிறிய சிவந்த புள்ளிகளைக் கொண்ட சிரங்குகள், கண் சிவத்தல், உடல் சோர்ந்து வெளிறிய நிலை,  பசியின்மை, வெளிச்சத்திற்கு பயம், திடீரென காய்ச்சல் குறைதல் போன்றவை ஏற்படும்.  

உடம்பு குளிர்தல், பதற்றம், அரைத்தூக்கம், அதிர்ச்சி நிலை, அதிகரித்த சுவாசம், அதிகரித்த நாடித்துடிப்பு, தோலில் ரத்தக்கசிவு, ரத்த வாந்தி, கறுப்பு நிற  மலம், வயிறு, கால் முதலியவற்றில் வீக்கம், ரத்த நாளத்தில் அடைப்பு ஏற்பட்டு ரத்த ஓட்டம் தடைப்படுவது, ரத்தத்தின் வெள்ளை அணுக்கள் மற்றும்  ரத்த தட்டுகளின் எண்ணிக்கை குறைதல் முதலியன டெங்கு காய்ச்சலின் அறிகுறியாகும்.
 ரத்தத்தில் சிறுதட்டுகளின் எண்ணிக்கை 28,000க்கு கீழ்  குறையும்போது நுரையீரலுக்குள் தண்ணீர் புகுந்து மரணம் ஏற்படும். இந்நிலை ஏற்பட்ட பின் சிகிச்சை அளித்து நோயாளியை காப்பாற்றுதல் மிகவும்  கடினம்.

நோயை கண்டறிதல் வெள்ளை அணுக்களின் மொத்த அளவை பரிசோதனை செய்தல். அதாவது ரத்தத்தில் சாதாரணமாக இருக்க வேண்டிய  லியூகோசைட்ஸ் என்ற வெள்ளை ரத்த அணுக்களின் அளவு (400010,000 சி.எம்.). டெங்கு காய்ச்சலின்போது ரத்தத்தில் உள்ள ரத்த தட்டுக்களின்  எண்ணிக்கை குறைவாக காணப்படும். 
டெங்கு வைரஸிற்கு எதிராக உடல் உற்பத்தி செய்யும் ஆன்ட்டிபயாடிக் என்று அழைக்கப்படும் எதிர்ப்பு சக்தியை  பரிசோதனை செய்யும் ரத்த நிண நீர் பரிசோதனை ஆகியவைகள் இந்த நோயை கண்டுபிடிக்க பயன்படுத்தப்படும்.

சிகிச்சை: டெங்கு காய்ச்சலை பொறுத்தவரை ஓய்வு அவசியம். திரவ வகை உணவு அதிகம் உட்கொள்ளலாம். உடல் உஷ்ணத்தை குறைக்க  அசிட்டாமினோஃபென் மாத்திரைகளை பயன்படுத்தலாம். 
ரத்த வட்டுக்களை கண்காணிக்கும் அளவுக்கு சீரியஸாகப் போகும் போது மருத்துவமனையில்  அனுமதிக்கப்படுவது அவசியம்.  டெங்கு காய்ச்சலுக்கு ஆங்கில மருத்துவத்தில் சிறப்பு சிகிச்சைகள் எதுவும் இல்லை. 
காய்ச்சலை குறைப்பது,  ரத்ததட்டு அணுக்கள் குறைவதை தடுப்பது போன்றவைகளுக்கு பொதுவான சிகிச்சை வழங்கப்படுகிறது.
டெங்கு காய்ச்சலினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு, ரத்த தட்டு அணுக்கள் அழிப்பதால், ரத்த கசிவு ஏற்பட்டு இறப்பு ஏற்படுகிறது. சித்த மருத்துவத்தில்  பப்பாளி இலை சாறு குடித்தால், ரத்த தட்டு அணுக்கள் அதிகரிக்கும்.

 நிலவேம்பு கசாயம் டெங்கு வைரசை அழித்து, காய்ச்சலை குணப்படுத்தும்.  மலைவேம்பு இலை சாறு டெங்கு வைரசை எதிர்க்கும் சக்தி கொண்டது. 

சித்த மருத்துவத்தில் தயாரிக்கப்படும் பப்பாளி இலை சாறு, மலைவேம்பு இலை சாறு, நிலவேம்பு குடிநீர் கசாயம் ஆகியவைகளை வீட்டிலேயே  தயாரிக்கலாம். 
பப்பாளி இலை சாறு: புதிதாக பறித்த பப்பாளி இலைகளில் உள்ள காம்புகளை அகற்றிவிட்டு சிறிது தண்ணீர் ஊற்றி அரைத்து அல்லது  இடித்து வடிக்கட்டி 10 மில்லி வீதம் நாளொன்றுக்கு 4 முறை அருந்த வேண்டும். 
பப்பாளி இலைச்சாறு அருந்துவதால் ரத்த தட்டு அணுக்கள்  அதிகரிக்கிறது. கல்லீரல் பாதிப்பு நீங்கி, சீராக செயல்பட வைக்கிறது.

இந்த இலையின் சாற்றை மலேரியா மற்றும் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்கள் அருந்தி வந்தால் பயன் கிடைக்கும். 
பப்பாளி இலையில் வைட்டமின்  ஏ, பி, ஈ போன்ற ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளதால், உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.  மலைவேம்பு இலைச்சாறு: புதிதாக பறித்த  மலைவேம்பு இலைகளுடன் சிறிது தண்ணீர் ஊற்றி அரைத்து அல்லது இடித்து வடிகட்டி 10 மில்லி வீதம் நாளொன்றுக்கு இரண்டு அல்லது மூன்று  முறை அருந்த வேண்டும். 
மலைவேம்பு இலைச்சாறு டெங்கு வைரசை எதிர்க்கும் சக்தி கொண்டது.

நிலவேம்பு குடிநீர்: நிலவேம்பு, சுக்கு, மிளகு, பற்படாகம், விலாமிச்சை, சந்தனம், பேய்புடல், கோரைக்கிழங்கு, வெட்டிவேர் ஆகியவைகளை தேவையான  அளவு தண்ணீர் இட்டு கொதிக்க வைத்து வடிகட்டி 50 மில்லி வீதம் நாளொன்றுக்கு இருவேளை அருந்த வேண்டும். 
வீட்டில் தயாரிக்க  முடியாதவர்கள் மருந்து கடைகளில் நிலவேம்பு குடிநீர் சூரணத்தை வாங்கி மேற்கண்ட முறையில் தயார் செய்தும் அருந்தலாம். நிலவேம்பு குடிநீர்  டெங்கு வைரசை அழித்துவிடும். 
இவற்றையும், குடிநீரையும் ஐந்து நாட்கள் அருந்தி வர காய்ச்சல் தணிந்துவிடும். காய்ச்சல் தணிந்த பிறகு மேலும்  இரண்டு நாட்களுக்கு அருந்தி காய்ச்சலின் தாக்கத்தை தடுத்துவிடலாம்.

சிக்குன்குனியா நோயும் ஈடிசு ஈஜிப்டை என்ற கொசு கடிப்பதால்தான் பரவுகிறது. 
ஈடிசு ஈஜிப்டை, ஈடிசு அல்போபிக்டசு இரு வகைக் கொசுக்கள்  திறந்தவெளியில் இருக்கும்போது கடிக்கும். 
ஈஜிப்டை வகைக்கொசு வீடுகளின் உள்புறங்களிலும் உலவுவதால் உள்புறங்களிலும் கடிக்கின்றன.  பெரும்பாலும் இவை பகல் நேரங்களிலும், அதிலும் குறிப்பாக காலை, மாலை நேரங்களில் அதிகம் கடிப்பவை. 
இவை இரவில் கடிப்பதில்லை. 
அதிலும்  பெண் கொசுக்கள்தான் கடிக்கின்றன. 
அதிகமான காய்ச்சலும் மூட்டு வலியும் இந்நோயின் முக்கிய அறிகுறிகளாகும். தலைவலி மற்றும் ஒளி ஒவ்வாமையும் இருக்கக்கூடும். பெரும்பாலும்,  ஓரிரு நாட்கள் நீடித்த பின்னர் காய்ச்சல் குறைந்து விடும். எனினும், கடுமையான தலைவலி, மூட்டுவலி, தூக்கமின்மை ஆகியவை ஐந்து முதல் ஏழு  நாட்கள் வரை நீடிக்கக்கூடும். 
அறிகுறிகள் தெரிந்தவுடன் மருத்துவர்களை அணுகி உரிய சிகிச்சை பெற்றால் ஒரு வாரத்திலேயே நோய் குணமாகும்.  மேலும் பப்பாளி இலைச்சாறு, நிலவேம்பு சாறு ஆகியவற்றையும் குடிக்கலாம். 

தண்ணீர் தேங்கி நிற்கும் எல்லா இடங்களையும் சுத்தம் செய்து, மண் அல்லது மணல் மூலம் நிரப்பி விட வேண்டும். 
சுற்றுபுறத்தில் உள்ள தண்ணீர்  தேங்கக்கூடிய பிளாஸ்டிக் பைகள், உடைந்த பானைகள், கண்ணாடி பாட்டில்கள், பழையை டயர்கள், தேங்காய் சிரட்டைகள் போன்றவற்றை புதைத்து  விட வேண்டும். 

பயன்படுத்தாத பாத்திரங்கள், வாளிகள் போன்றவற்றை கவிழ்த்து வைக்க வேண்டும். பூந்தொட்டிகள், பாத்திரங்கள் போன்றவற்றில் தேங்கி நிற்கும்  நீரை ஒரு நாள் விட்டு ஒரு நாள் மாற்ற வேண்டும். 
எறும்பு வராமல் இருக்க மேசை கால்களுக்கு வைக்கும் பாத்திரங்களின் தண்ணீரையும் ஒரு நாள்  விட்டு ஒரு நாள் மாற்ற வேண்டும்.

ஏசியிலிருந்து வெளியேறும் நீரையும் மாற்ற வேண்டும். 
தண்ணீரை அகற்ற முடியாத இடங்களில் உப்பை சேர்க்கலாம். 
கொசு ஒழிப்பு மருந்துகளை  தெளிக்கலாம்.
--------------------------------------------------------------------------------------------------------------------------

காஷ்மீர்: 

இந்தியா, பாகிஸ்தான், சீனா – 370க்கும் அப்பால்


இந்தியாவில் காஷ்மீருக்கு அளிக்கப்பட்டுள்ள சிறப்பு மதிப்பான 370 ஆவது பிரிவை நீக்க வேண்டும் என்று குரல்கள் ஒலிக்கின்றன. 
அதாவது மோடி பிரதமரானதும் இந்தப்பிரச்சனை திட்டமிட்டு கிளப்பட்டுள்ளது. தெளிவாகச் சொன்னால், ஆர்.எஸ்.எஸ் இந்துத்துவா கும்பலின் திட்டம் எனும் போர்வையில் ஒரு தீப்பொறியைப் போல இந்தப் பிரச்சனை பற்ற வைக்கப்பட்டுள்ளது. இதுவே இந்து முஸ்லீம் பிரச்சனை போல மக்களிடையே பரப்படுகிறது. 
ஆனால் கடலில் மிதக்கும் பனிப்பாறையில் வெளியில் தெரிவதை மட்டும் பார்ப்பது எப்படி ஆபத்தானதோ அதைவிட பலமடங்கு பேராபத்தானது காஷ்மீர் பிரச்சனையை 370 ஆவது பிரிவை மட்டும் வைத்துக் கொண்டு பார்ப்பது.
இப்போது பரவலாக பேசப்படுவது என்ன? காஷ்மீர் இந்தியாவின் பிற மாநிலங்களைப் போன்று ஒரு மாநிலம் அதற்கு மட்டும் ஏன் அரசியல் சாசனத்தில் சிறப்பு மதிப்பு அளிக்கப்பட வேண்டும்? இது மோடி, ஆர்.எஸ்.எஸ் வகையறா அம்பிகளின் தும்பிகளின் கேள்வி. இந்தக் கேள்வி,370 ஆவது பிரிவு என்பது ஆட்சிக்கு வரும் கட்சி நினைத்தால் மாற்றிவிடக் கூடிய ஒன்றல்ல என்றும், 370 ஆவது பிரிவை மாற்றினால் இந்திய இறையாண்மைக்கே ஆபத்தாகும் என்றும் எதிர்கொள்ளப்படுகிறது. இந்த இரண்டில் எது வீரியமாக இருந்தாலும் இல்லாவிட்டாலும் இந்த 370 பிரச்சனை ஏன் திடீரென்று எழுப்பப்பட்டது? அதன் நோக்கம் என்ன? என்பதை அவை விளக்கப்போவதில்லை.

370 ஆவது பிரிவு என்றால் என்ன?
அது ஏன் காஷ்மீருக்கு மட்டும் அளிக்கப்பட்டது? 
இதற்கான பதிலை அறிந்து கொள்வதற்கு காஷ்மீர் வரலாறு குறித்த புரிதல் வேண்டும். முகலயர்களின் வருகைக்கு முன்னர் இந்தியா எனும் நாடே கிடையாது. துண்டுதுண்டான ராஜ்ஜியங்கள் தான்
. சிந்து எனும் நதியின் கரையில் இருக்கிறது எனும் பொருளில் “இந்திய்யா” (சிந்து என்பது அவர்களின் உச்சரிப்பில் இந்து என்றானது) என்று அழைத்தார்கள். 
அது மருவி இந்தியா ஆனது. இதனால் தான் ஆர்.எஸ்.எஸ் அம்பிகள் இந்தியா என உச்சரிக்காமல் எப்போதும் பாரதம் என்றே உச்சரிக்கிறார்கள். 
இதற்கு “முன்னொரு காலத்தில் பரதன் எனும் மன்னன் இந்தியாவை சீறும் சிறப்புமாக ஆண்டான்” என்று கதையும் கட்டி விட்டிருக்கிறார்கள். 
வரலாற்றில் அந்த மன்னன் எந்த ஆண்டு காலத்தில் ஆண்டான்? அந்தக் காலத்தில் இந்தியா இருந்ததா? எனும் கேள்விக்கு மட்டும் யாரும் பதில் சொல்வதில்லை. இப்படி முகலாயர்களால் தொடங்கி வைக்கப்பட்டு ஆங்கிலேயர்களால் முடித்து வைக்கப்பட்ட இந்தியா 1947 ஆட்சி மாற்றத்தின் பின்னர் அந்தந்த ராஜ்ஜிய வாரிசுகளால் தனித்தனி நாடுகளாக அறிவிக்கப்பட்ட கதம்பமாக காட்சியளித்தது. 
இதைத்தான் இராணுவ வலிமை கொண்டு ஒடுக்கி இந்தியாவில் மாநிலங்களாக ஒருங்கிணைத்தார்கள். இங்கு இரண்டு இடங்களில் நெருடல் ஏற்படுகிறது. 
1. ஹைதராபாத், 
2. காஷ்மீர். 
ஹைதராபாத்தில் மக்கள் பெரும்பான்மையினர் இந்துக்கள் மன்னன் முஸ்லீம். 
பாகிஸ்தானுடன் ஹைதராபாத்தை இணைப்பதற்கு மன்னன் விரும்ப, மக்கள் பெரும்பான்மையினர் இந்துக்கள் என்ற காரணத்தைக் கூறி, இராணுவ வலிமை மூலம் இந்தியாவுடன் ஹைதராபாத் இணைக்கப்படுகிறது. ஆனால், இதே அளவுகோல் காஷ்மீரில் பின்பற்றப்படவில்லை. 
அங்கு மன்னன் இந்து மக்களில் பெரும்பான்மையினர் முஸ்லீம்கள். காஷ்மீர் மன்னனாக இருந்த ஹரி சிங் காஷ்மீரை தனி நாடாக நீடிக்க விரும்பினான். மக்களில் பெரும்பான்மையோர் முஸ்லீம்கள் என்பதால் காஷ்மீர் பாகிஸ்தானுடன் இணைக்கப்பட வேண்டும் என பாகிஸ்தான் விரும்பி இராணுவ நடவடிக்கையை தொடங்கியது. 
இதனால் மன்னன் ஹரி சிங்குக்கு உதவுவது என்ற பெயரில் இந்திய இராணுவம் களத்தில் இறங்கியது. விளைவு முதல் இந்திய பாகிஸ்தான் போர். காஷ்மீர் இந்தியாவின் ஒரு மாநிலம் என்று கூறப்பட்டாலும், காஷ்மீரின் 45 விழுக்காடு தான் இந்தியா வசம் இருக்கிறது. 
மீதம் பாகிஸ்தானிடமும், கொஞ்சம் சீனாவுடனும் இருக்கிறது. ஒரே தேசிய இனத்தைச் சேர்ந்த காஷ்மீரிகள் மூன்று வெவ்வேறு நாடுகளில் பிரிந்திருக்கிறார்கள். இது தான் காஷ்மீரின் அண்மை வரலாறு.
 தனிநாடாக இருக்க விரும்பிய ஹரி சிங் வேறு வழியில்லாமல் இந்தியாவுடன் இணைவதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார். ஆனால், இந்தியாவில் கரைந்து போய்விடுவதை அவர் விரும்பவில்லை. அதனால் இராணுவம் வெளிவிவகாரம் உள்ளிட்ட சிலவற்றைத் தவிர பிற உரிமைகள் தனக்கு வேண்டும் என வற்புறுத்தினார். 
இதை ஏற்றுக் கொண்ட நேரு, இதில் கருத்து வேறுபாடு கொண்டிருந்த அம்பேத்காரை விடுத்து மன்னன் ஹரி சிங்கிடம் திவானாக இருந்த கோபல்சாமி ஐயங்கார் என்பவரை வைத்து 370 ஆவது பிரிவை உருவாக்கினார். இதன்படி சில தனிப்பட்ட சலுகைகள் காஷ்மீருக்கு உண்டு. அவற்றில்
,1. பிற மாநிலத்தவர் காஷ்மீரில் நிலம் வாங்க முடியாது 
2. காஷ்மீர் சட்டசபை ஆறு ஆண்டுகளுக்கு இயங்கும் 3
. இராணுவம், வெளியுறவு, தகவல் தொடர்பு ஆகியவை தவிர பிற அம்சங்களில் இயற்றப்படும் சட்டங்கள் காஷ்மீர் சட்டமன்றத்தின் ஒப்புதலுக்குப் பிறகே அமலாகும் போன்றவை முக்கியமனவை.
 இவை எல்லாவறையும் விட மேலாக இந்தியாவுடன் இணைவதையும் நீடிப்பதையும் காஷ்மீர் மக்களே தீர்மானிப்பார்கள் என்பது முதன்மையானது. மாநில அரசுகள் எனும் அடிப்படையில் இது போன்ற உரிமைகள் அனைத்து மாநிலங்களுக்கும் வழங்கப்பட வேண்டும். 
ஆனாலும், ஐ.நா விடம் காஷ்மீர் மக்களிடம் வாக்ககெடுப்பு நடத்தி அவர்களின் விருப்பம் அறியப்படும் என்று உறுதியளித்த இந்தியா இன்றுவரை அந்த வாக்கெடுப்பை நடத்தவே இல்லை.
 மட்டுமல்லாமல், அனைத்து தகிடுதத்தங்களுடன் கூடிய ஓட்டுப் பொறுக்கி தேர்தலை நடத்தி அதையே வாக்கெடுப்பாக ஆதிக்கத் தனத்துடன் அறிவித்தது. இதன் பின்னர் மன்னன் ஹரி சிங்கால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஷேக் அப்துல்லாவை இந்தியா நடத்திய விதம், காஷ்மீர் சட்டமன்றத்தை பொம்மையைப் போல் கலைத்துப் போட்டது, இவைகளை பயன்படுத்தி பாகிஸ்தான் செய்த அரசியலை முறியடிக்க தனித்தனி குழுக்களை ஏற்படுத்தியது,

 காஷ்மீர் மக்களின் நியாயமான கோரிக்கைகளைக் கூட இராணுவ பலம் கொண்டு ஒடுக்கியது என்று காஷ்மீரின் இன்றைய வன்முறை வரலாற்றுக்கு இந்தியாவின் பங்களிப்பு ஏராளம்.

இந்த அனைத்து உண்மைகளையும் மறைத்து விட்டுத்தான் காஷ்மீருக்கு மட்டும் ஏன் தனிச் சிறப்பு என்று கேட்கிறார்கள் அம்பிகளும் தும்பிகளும். ஆனால் இந்த வரலாற்றை நினைவுபடுத்தவோ, இப்போது இதைக் கிளப்புவதன் பின்னணி என்ன? 

என்பதை அம்பலப்படுத்தவோ யாரும் தயாராக இல்லை என்பது தான் இப்போதைய முதன்மையான பிரச்சனை.

இலங்கை தமிழர்கள் மீதான இனவழிப்பை வெறுமனே ராஜபக்சேவின் தமிழர்கள் மீதான கொலைவெறி என்றும், ராஜீவைக் கொன்ற புலிகள் மீதான சோனியாவின் கோபம் என்றும் பொழிப்புரை செய்யும், இந்திய முதலாளிகளின் லாப வேட்டை அதில் முக்கியப் பங்காற்றியிருக்கிறது, அதற்காகத்தான் இந்தியா பாடுபடுகிறது என்பதை அம்பலப்டுத்த மறுக்கும் தமிழினவாதிகளைப் போல இந்த 370 ஆவது பிரிவை நீக்கும் விசயத்திலும் இந்திய முதலாளிகளின் லாப வேட்டைக்கு முக்கியப் பங்கிருப்பதை யாரும் முணுமுணுக்கக் கூட மறுக்கிறார்கள். 
காஷ்மீர் சுற்றுலா முக்கியத்துவம் வாய்ந்த பகுதி. குறிப்பிட்ட காலமாக இங்கு முதலாளிகளின் லாபவேட்டைக்கு உகந்த சூழல் இல்லாமல் இருக்கிறது. 
மட்டுமல்லாமல் பிறர் காஷ்மீரில் நிலம் வாங்குவதும் முடியாமல் இருக்கிறது. இலங்கை மீதான வேட்டைக்கு விடுதலைப் புலிகளும், அவர்களின் தேசியவாத அணுகுமுறையும் எப்படி தடையாக இருந்ததோ அதேபோல் காஷ்மீரின் சுற்றுலா முக்கியத்துவதை காசாக்குவதற்கு நிலம் வாங்க முடியாத நிலையை ஏற்படுத்தியிருக்கும் 370 ஆவது பிரிவு தடையாக இருக்கிறது. ஏற்கனவே இலங்கையில் தமிழர்களை அலட்சியமாய் கொன்றழித்து சோதனை செய்திருக்கும் இந்தியாவின் அடுத்த இலக்காக காஷ்மீர் மக்கள். இது தன்னை கோபுரத்தில் வைத்த கார்ப்பரேட்டுகளுக்கு மோடி வழங்கும் பாத காணிக்கை.
நேற்றுவரை மோடிக்கு விசா கிடையாது என்று படம் காட்டிக் கொண்டிருந்த அமெரிக்கா இன்று மோடியை அழைத்திருக்கிறது. 
மோடி பிரதமராகி விட்டார் அதனால் அமெரிக்காவுக்கு வேறு வழியில்லாமல்போய்விட்டது என்று கூறப்படுவதை ஏற்கலாமா?எந்த நாட்டுத் தலைவரை அமெரிக்கா மதித்திருக்கிறது மோடி பிரதமாராகி விட்டார் அதனால் அழைத்திருக்கிறது என்று கூறப்படுவதை ஏற்பதற்கு? 
அல்லது அமெரிக்கா காரணமாகக் கூறிய 2002 குஜராத் படுகொலைகள் இல்லாமல் போய்விட்டனவா? இந்தியாவை பிராந்திய வல்லரசாக அமெரிக்கா ஏற்பதற்கு ஒரே காரணம் அமெரிக்காவுக்கு போட்டியாக வளர்ந்து கொண்டிருக்கும் சீனாவை கட்டுப்படுத்த இந்தியா அடியாளாக செயல்படும் என்பதற்காகத்தான். அதற்குத் தோதான சில ஆரம்பகட்ட வேலைகளை காங்கிரஸ் ஏற்கனவே செய்திருக்கிறது. அருணாச்சல பிரதேசத்தில் சிவப்புக் கோடு போட்டார்கள்,50 மீட்டர் உள்ளே வந்து விட்டார்கள்,
 தனி விசா கொடுக்கிறார்கள் என்று காங்கிரஸ் அரசும் ஊடகங்களும் ஏற்கனவே சீனாவை வில்லனாக காட்டிக் கொண்டிருந்தன.
 இதன் அடுத்த கட்ட வேலைகளுக்கு காஷ்மீரின் சிறப்பு மதிப்பு தடையாக இருக்கிறது. எடுத்துக் காட்டாக அமெரிக்க இந்திய கடற்படைகள் கூட்டாக பயிற்சி மேற்கொண்டதைப் போன்று காஷ்மீரில் ஏதாவது செய்து சீனாவை ஆத்திரப்படுத்த வேண்டும் என முடிவெடுத்தால் அதை காஷ்மீர் சட்டமன்றம் ஏற்க வேண்டும் என்று எந்த அவசியமும் இல்லை.

1992 ஐ நாம் மறந்து விட முடியுமா?
பலநூறு ஆண்டு வரலாறு கொண்ட பாபரி பள்ளி திட்டமிட்டு இடித்து தரைமட்டமாக்கப்பட்டது. 
இதை இந்து முஸ்லீம் பிரச்சனை என்றோ, பா.ஜ.க, சங்கப் பரிவாரங்களின் திட்டம் மட்டுமே என்றோ குறுக்கிப் புரிந்து கொள்ள முடியுமா? அந்த இடிபாடுகளின் களேபரங்களுக்கு மத்தியில் தான் காட் ஒப்பந்தம் சத்தமின்றி, பாராளுமன்றத்துக்குத் தெரியாமல் கொல்லைப்புறமாக உள்ளே நுழைந்து இந்தியர்களின் கழுத்தை இறுக்கிக் கொண்டிருக்கிறது. 
இதோ இப்போது மீண்டும் வரலாறு திரும்புகிறது.
 இந்த 370 சர்ச்சையின் மத்தியில் சத்தமில்லாமல் மறுகாலனியாக்கத்தை அதி தீவிரப்படுத்தும் ஒரு ஒப்பந்தம் சத்தமின்றி கையெழுத்தானால் புதிதாக கொள்ளையடிக்க களம் இறங்கியிருக்கும் எந்த பாராளுமன்ற உறுப்பினருக்காவது இது குறித்து கவலை இருக்குமா?

ஆனால் நாம் கவலைப்பட்டாக வேண்டும். 
அன்று ஆட்சி மாற்றத்தை சுதந்திரமாக காட்டிய நேரு பாலாறும் தேனாறும் ஓடும் என்றார். ஆனால் இன்றோ தண்ணீர் கூட கிடைக்காமல் தவித்துக் கிடக்கிறோம். 
இதற்கு என்ன காரணம் யார் காரணம் என்று சிந்திக்கப் போகிறோமா? அல்லது ஓட்டுப் பொறுக்கிகளின் கேவலமான சதித்தனங்களில் சிக்குண்டு சாக்கடையையே அரசியல் என்று பேசிக் கொண்டிருக்கப் போகிறோமா?
                                                                                                          -நன்றி:செங்கொடி
http://senkodi.wordpress.com/2014/06/07/kashmir-370/
------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------