100 கோடி ரூபாயில்
உலகத் திருடர்கள் மாநாடு?
காலம் மாறிப்போச்சிங்க, அந்தக் காலத்தில் எல்லாம் திருடர்களை திருடர்கள் என்றுதான் சொல்வார்கள். இப்ப பாருங்க அவர்களை முதலீட்டாளர்கள் என்று சொல்கின்றார்கள்.
போதாத குறைக்குத் திருடர்களை வான்ட்டடாக வரவழைத்தது மட்டும் இல்லாமல் எங்க வீட்டில் திருடிக்கோ, எங்க வீட்டில் திருடிக்கோ என்று காலில் விழுந்து கெஞ்சுகின்றார்கள். இப்படிப்பட்ட மானங்கெட்ட அரசியல்வாதிகளை நீங்கள் எங்கேயாவது பார்த்திருக்கின்றீர்களா?
பார்க்க வேண்டும் என்றால் சென்னை வர்த்தக மையம், நந்தம்பாக்கம், சென்னை என்ற முகவரியில் போய் பார்க்கலாம்.
உலக முதலீட்டாளர்கள் சந்திப்பு 2015 என்ற ஒரு சோக நாடகம் அ.தி.மு.க கும்பலால் அரங்கேற்றப்பட்டு இருக்கின்றது. அம்மா என்று கூழைக்கும்பிடு போடும் பேர்வழிகளால் அன்போடு அழைக்கப்படும் செல்வி ஜெ.ஜெயலலிதா தன்னுடைய கடைசி காலத்தில் அதாவது ஆட்சியின் கடைசி காலத்தில் இப்படி ஒரு நாடகத்தை நடத்த வேண்டிய துர்பாக்கிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார்.
இந்த நாடகத்தை நடத்துவதற்காக மக்கள் வரிப்பணம் 100 கோடி ரூபாய் அள்ளி இறைக்கப்பட்டுள்ளது.
வெளிநாடுகளில் இருந்து வரும் இந்தத் திருடர்கள் அனைவரும் ஐந்து நட்சத்திர விடுதிகளில் சொகுசாக தங்க வைக்கப்பட்டுள்ளனர். அப்படியே ஓசியிலேயே சென்னை நகரை சுற்றிப் பார்க்கவும் ஏற்பாடுகள் செய்யப் பட்டுள்ளன. மக்களின் வரிப்பணத்தை இப்படி கண்ட கண்ட நாய்களுக்குச் செலவழிக்கலாமா என்று ஆட்சியில் இருக்கும் உள்நாட்டுத் திருடர்களுக்கும் தெரியவில்லை, மக்கள் வரிப்பணத்தில் இப்படி ஐந்து நட்சத்திர உணவு விடுதிகளில் தங்கிக்கொண்டு ஓசியில் நக்கி நக்கி தின்கலாமா என்று அந்த வெளிநாட்டுத் திருடர்களுக்கும் தெரியவில்லை.
இந்த மாநாட்டுக்காக சென்னை முழுக்க வைக்கப்பட்ட கட்அவுட்டர்களில் ஜெயலலிதாவின் சிரித்த உருவமே பெரும்பாலும் ஆக்கிரமித்துக் கொண்டு இருக்கின்றது. தமிழ்நாட்டுக்குள் யார் புதிதாக வந்தாலும் அவர்களுக்குப் பூச்சாண்டி காட்டாமல் விடமாட்டோம் என்று அ.தி.மு.க வின் கூழைக்கும்பிடு அமைச்சர்கள் கங்கணம் கட்டிக்கொண்டு அலைகின்றார்கள்.
முதலீட்டாளர்களின் சொர்க்கம் என்று வேறு பத்திரிக்கைகளில் விளம்பரம் கொடுத்து இருக்கின்றார்கள்.
இலவசமாக மின்சாரம், தண்ணீர், சாலைவசதி, வரிச்சலுகைகள் என்று அனைத்தையும் கொடுத்து, போதாத குறைக்கு மலிவான கூலிக்குத் தமிழ்நாட்டு மக்களின் உழைப்பையும் கொடுத்தால் அது உண்மையிலேயே முதலீட்டாளர்களுக்குச் சொர்க்கம் தானே!.
நோக்கியா கம்பெனியாலும், பாக்ஸ்கான் கம்பெனியாலும் நடுத்தெருவுக்குத் துரத்தப்பட்ட ஆயிரக்கணக்கான தொழிலாளர்களிடம் போய் கேட்டால் சொல்வார்கள் முதலீட்டாளர்களின் சொர்க்கங்களுக்குள் ஒளிந்திருக்கும் நரகத்தின் வேதனையை.
இந்த உலக முதலீட்டாளர்கள் மாநாட்டால் தமிழ்நாட்டுக்கு ஏறக்குறைய 1.5 லட்சம் கோடிகளுக்கு மேல் முதலீடுகள் கிடைக்கும் என்று சொல்கின்றார்கள்.
இது அப்பட்டமான பொய்யாகும். ஜெயலலிதா அரசு பதவியேற்ற பின்பு தமிழ்நாட்டுக்கு இந்த நான்கு ஆண்டுகளில் கிடைத்த மொத்த முதலீடு என்பதே வெறும் 31,706 கோடி ரூபாய் மட்டுமே. இதை நாம் சொல்லவில்லை. 2015-2016 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் உரையின் போது ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தது.
”கடந்த நான்கு ஆண்டுகளில் 31,706 கோடி ரூபாய் அளவிற்கு முதலீடுகளுக்கான 33 புரிந்துணர்வு ஒப்பந்தங்களை மாநில அரசு மேற்கொண்டுள்ளது” என்று சட்ட சபையில் ஒத்துக்கொண்டு இருக்கின்றார். நிலைமை இப்படி இருக்கும் போது இன்னும் ஆறுமாதமே இருக்கப்போகும் அ.தி.மு.க அரசை நம்பி எந்த இளிச்சவாயன்கள் 1.5 லட்சம் கோடிகளை கொட்டப் போகின்றார்கள்?
ஓசியிலேயே விமானப்பயணம், ஒசியிலேயே சொகுசாக தங்குமிடம், ஒசியிலேயே நாக்குக்கு ருசியாக விதவிதமான சாப்பாடுகள், ஒசியிலேயே ஊர்சுற்றி பார்ப்பதற்கு ஏற்பாடு, இது எல்லாம் கொடுப்பதாலேயே அவர்கள் நாக்கை தொங்கப் போட்டுக்கொண்டு இங்கு வந்திருக்கின்றார்கள். ஏற்கெனவே 4 லட்சம் கோடிகள் கடனில் ஓடிக்கொண்டிருக்கும் தமிழக திவால் அரசு இந்த மாநாட்டில் இன்னும் நூறுகோடி ரூபாய் சேர்த்துக் கடனாளி ஆகப்போகின்றது. பின்பு இந்தக் கடனையும் சேர்த்துக் கட்டுவதற்குத் தமிழ்நாட்டுக் குடிமகன்களுக்கு இன்னும் அதிகமாக டார்கெட் வைக்கப் போகின்றார்கள்.
நமக்கு என்ன சந்தேகம் என்றால் உலக முதலீட்டாளர்கள் மாநாடு என்கின்றார்கள். பிறகு அங்கு வங்கிகளுக்கு என்ன வேலை என்பதுதான். 25 பொதுத்துறை மற்று தனியார் வங்கிகள் அரங்கங்களை அமைத்திருப்பதாக சொல்கின்றார்கள்.
இவர்களுக்கு அங்கு என்ன வேலை என்று விசாரித்தால் பெரு, சிறு, குறு நிறுவனங்களுக்குக் கடன்கள் வழங்குவதற்கு வந்திருக்கின்றார்களாம். வங்கிகள் கடன்கொடுத்தால் பின் வருபவர்கள் என்ன கொண்டுவருவார்கள் என்று தெரியவில்லை.
ஏற்கெனவே பொதுத்துறை வங்கிகள் எல்லாம் லட்சக்கணக்கான கோடிகள் வாராக்கடன்களால் நஷ்டத்தில் ஓடிக்கொண்டு இருக்கின்றது. இப்போது தன்பங்கிற்கு ஜெயலலிதாவும் அதை திவாலாக்கப் பார்க்கின்றார். ஜெயலலிதாவுக்குப் பொதுத்துறையைச் சார்ந்த நிறுவனங்களை திவாலாக்குவதென்றால் அப்படி ஒரு சந்தோசம்.
ஏற்கெனவே தமிழ்நாடு மின்சார வாரியம் 1.6 லட்சம் கோடி கடனும், தமிழ்நாடு போக்குவரத்துகழகம் 2084 கோடி கடனும் நிதி நிறுவனங்களுக்கு செலுத்த வேண்டுமாம்.
உலக முதலீட்டாளர்களிடம் காரியம் சாதிக்க குத்தாட்ட பெண்கள்? அரசே இப்படி பெண்களைக்காட்டி காரியம் சாதிக்க முனைவதற்கு என்ன பெயர்? |
இப்போது அ.தி.மு.க திருடர்களின் பார்வை நேராக வங்கிக்கே திரும்பி இருக்கின்றது. மாநாட்டிற்கு வருபவர்களிடம் “கையெழுத்த மட்டும் போடுங்க சார் மத்ததை எல்லாம் எங்க அம்மா பார்த்துக்குவாங்க” என்று சொல்லி ஒரு தீட்டு தீட்டப் போகின்றார்கள்.
ஏற்கெவே ஜெயலலிதா மோடியின் நண்பர் என்பதால் 1.5 இலட்சம் கோடி என்ன 30 லட்சம் கோடிகள் முதலீடு வந்துள்ளதாகக் கூட நம்மை நம்பவைக்க முயற்சி செய்வார்கள் என்று நாம் எதிர்பார்க்கலாம்.
ஆட்சி செய்த இந்த நான்கரையாண்டுகளில் ஒரு ஆணியைக் கூட புடுங்காத அ.தி.மு.க அரசு இப்போது மொத்தமாக புடுங்கப் போகின்றோம் என்று சொல்லி அனைவரையும் ஏமாற்றப் பார்க்கின்றது. லட்சக்கணக்கான இளைஞர்கள் படித்து முடித்துவிட்டு வேலை வாய்ப்பு இல்லாமல் சுற்றிக்கொண்டு இருக்கின்றார்கள்.
தமிழ்நாட்டில் பெரும்பாலான ஆண்கள் குடிநோயாளிகளாக மாறிவிட்டார்கள். இந்தியாவிலேயே அதிக இளம் விதவைகள் உள்ள மாநிலமாக தமிழகம் உள்ளது. அப்போதும் மனசு அடங்காமால் இன்னும் ஏதாவது தமிழ்நாட்டு மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்று ஜெயலலிதாவும் அவரது அடிமைகளும் இரவும் பகலுமாக யோசித்துக்கொண்டு இருக்கின்றார்கள்.
சரியாக பேரம் படிந்தால் இரவோடு இரவாக தமிழ்நாட்டையே விற்றுவிட்டு ஓடிவிடுவார்கள். ஜாக்கிரதையாக இருங்கள்!
இருந்த நோக்கியா,பாக்ஸ்கான் போன்ற நிறுவனங்களை தக்க வைக்க முடியாத இந்த அரசு புதிதாக நிறுவனங்களை கொண்டு வருமா?பார்க்கலாம்.
-செ.கார்கி
நன்றி:கீற்று,
100கோடி செலவில் நடந்த முதலீட்டாளர்கள் மாநாடு மூலம் ரூ.2,42,160 கோடி முதலீடு(என்றைக்கு வரும்?வரும்,ஆனா வராது?): முதல்வர் ஜெயலலிதா
உலக முதலீட்டாளர் மாநாடு
சில கேள்விகள் -ஐயங்கள்?
''தும்பை விட்டு விட்டு வாலைப் பிடிப்பது என்று கிராமங்களில் ஒரு பழமொழி உண்டு. அதைப் போல நான்காண்டு காலமாக நன்றாகத் தூங்கிவிட்டு, தற்போது திடீரென்று தூக்கம் கலைந்து விழித்தெழுந்து, சர்வதேச முதலீட்டாளர்கள் மாநாட்டைக் கூட்டி முதலீடுகளைக் குவிக்கப் போவதாக அறிவித்துக் கொண்டு, ஏதோ ஒரு நாடகத்தை நடத்தியிருக்கிறார்கள்.
அந்த மாநாட்டைப் பற்றி எழுதியுள்ள அனைத்து நாளேடுகளும், அந்த மாநாட்டையொட்டி அதிமுகவினர் நடத்திய குத்தாட்டம் குறித்தும், நகரம் முழுவதும் ஏற்பட்ட போக்குவரத்து நெரிசல் மற்றும் பொதுமக்கள் முணுமுணுப்பு குறித்தும் எழுதத் தவறவில்லை.
அதிமுக ஆட்சியினர் ஒரு சில ஆண்டுகளுக்கு முன்பு இது போல முதலீட்டாளர்களையெல்லாம் அழைத்து பல நூறு கோடி ரூபாய்க்கு ஒப்பந்தம் போடப்பட்டு விட்டது, பல நூறு பேருக்கு வேலைவாய்ப்பு என்றெல்லாம் ஒரு பெரிய விளம்பரம் செய்தார்கள். ஆனால் முதலீடும் வரவில்லை; வேலை வாய்ப்பும் ஏற்படவில்லை. அப்போது போடப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தங்களே உருப்படியாக நிறைவேற வில்லை என்கிற போது, அதிமுக ஆட்சியினர் போகிற போக்கில் போடுகின்ற ஒப்பந்தங்களுக்கு ஏதாவது மதிப்பு இருக்கப் போகிறதா என்ன?
அதனால் இப்போது வந்திருக்கும் தொழில் முதலீட்டாளர்கள் கூட மிகுந்த எச்சரிக்கையாகவும் கவனமாகவும் அடுத்த மூன்றாண்டுகளில் இவ்வளவு கோடி ரூபாய் முதலீடு செய்யப் போகிறோம், அடுத்து வரும் ஐந்தாண்டுகளில் இவ்வளவு கோடி ரூபாய் முதலீடு செய்யத் திட்டமிட்டிருக்கிறோம் என்று தெரிவித்திருக்கிறார்கள்.
தற்போது நடைபெறும் சர்வதேச முதலீட்டாளர் மாநாட் டிற்கு பல்வேறு நாடுகளிலிருந்தும் முதலீட்டாளர்கள் வந்திருப்பதாக விளம்பரப்படுத்தியும் கூட தொடக்க விழாவின் போது அன்னிய முதலீட்டாளர் எவரும் பேசியதாகத் தெரியவில்லை. தொழில் முதலீடு குறித்து அதிமுக ஆட்சியினர் கடந்த நான்கரை ஆண்டுக் காலத்தில் என்ன செய்தார்கள், அதனால் ஏற்பட்ட விளைவுகள் என்ன என்பதைப் பற்றிச் சுருக்கமாகக் கூறுகிறேன்.
கடந்த ஆண்டு 13-2-2014 அன்று தமிழகச் சட்டப் பேரவையில், அதிமுக அரசின் சார்பாக நிதிநிலை அறிக்கையைப் படித்த ஓ.பன்னீர்செல்வம், அந்த அறிக்கையின் பக்கம் 31-ல் “நமது மாநிலத்தில் தொழில் வளத்தையும் கட்டமைப்பையும் மேலும் ஊக்குவிக்க இந்த அரசு, வரும் அக்டோபர் மாதத்தில் சர்வதேச முதலீட்டாளர்கள் மாநாட்டை சென்னையில் நடத்தும் என்பதை இந்த மாமன்றத்திற்கு மகிழ்ச்சியோடு தெரிவிக்க விரும்புகிறேன். இதற்காக இந்த வரவு செலவுத் திட்டத்தில் 100 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது” என்று படித்தார்.
இது சென்ற ஆண்டு நிதிநிலை அறிக்கையில் படித்த அறிவிப்பு! ஆனால் அமைச்சர் பேரவையில் படித்தபடி அக்டோபர் மாதத்தில் முதலீட்டாளர் மாநாடு நடைபெற்றதா என்றால் அதுதான் இல்லவே இல்லை. நிதிநிலை அறிக்கையிலே கூறப்பட்ட அறிவிப்புக்கே இந்த கதி!
இது பற்றிக் கேட்டால், 2012ஆம் ஆண்டிலேயே ஒரு முறை ஒரே நாளில் 12 நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடுவதாகவும், அதன் மூலம் 36,855 பேருக்கு வேலை கிடைக்குமென்றும், 20 ஆயிரத்து 925 கோடி ரூபாய் முதலீட்டில் தொழிற்சாலைகள் தொடங்குமென்றும் பூதாகாரமாக அறிவிப்பு செய்தார்களே, மீண்டும் ஒருமுறை 5,081 கோடி ரூபாய்க்கு 16 நிறுவனங்களுடன் ஒப்பந்தம் கையெழுத்தானது என்று அறிவித்தார்களே; அந்த அறிவிப்புகள் எல்லாம் என்ன ஆயிற்று? காற்றோடு கலந்து விட்டன.
குறிப்பிட்டபடி 12 நிறுவனங்களும் தொழிற்சாலைகளைத் தொடங்கினவா? உறுதியளிக்கப்பட்ட முதலீடு வந்ததா? அதற்குப் பிறகு, ஏற்கெனவே செய்த அறிவிப்புகளையெல்லாம் மறந்து 26,625 கோடி ரூபாய் அளவிற்கு மொத்த முதலீட்டிற்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத் திடப்பட்டு, அதன் தொடர்ச்சியாக 10,660 கோடி ரூபாய் அளவிலான முதலீடுகள் செய்யப்பட்டுள்ளன என்றும், இதனால் 10,022 பேருக்கு கூடுதல் வேலை வாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன என்றும் புதிதாகத் தெரிவித்தார்கள்.
அதன் பிறகு, 2015ஆம் ஆண்டு மே மாதத்தில் முதலீட் டாளர்கள் மாநாடு நடைபெறும் என்று பன்னீர்செல்வம் அறிவித்தார். அதுவாவது நடைபெற்றதா என்றால் இல்லை. முதலமைச்சர் ஜெயலலிதா கோவையில் பேசும் போது, அவருடைய மூன்றாண்டு கால ஆட்சியில் 33 இந்திய மற்றும் பன்னாட்டு நிறுவனங்களுடன் 31,706 கோடி ரூபாய் முதலீட்டிற்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் செய்து கொண்டிருப்பதாகத் தெரிவித்திருந்தார். புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் பல நிறுவனங்களுடன் போடலாம்; உண்மையில் தொழில்கள் தொடங்கப்பட்டால்தானே மாநிலத்துக்குப் பலன் ஏற்படும்! உண்மை நிலை என்ன?
தமிழகத்தில் நடந்து வந்த “ஃபாக்ஸ்கான்” தொழிற் சாலை, மராட்டிய மாநிலத்திற்குச் செல்ல அங்கே 32 ஆயிரம் கோடி ரூபாய்க்கு ஒப்பந்தம் போட்டிருக்கின்றது. ஏற்கெனவே தமிழகத்தில் நடைபெற்று வந்த தொழில்களாவது தக்க வைக்கப்பட்டனவா? தமிழகத்தில் ஏற்கனவே செயல்பட்டு வந்த தூத்துக்குடி ஸ்பிக் நிறுவனமும், மெட்ராஸ் பெர்டிலைசர்ஸ் நிறுவனமும் மூடப்படும் நிலையில் இருக்கின்றன.
தமிழ்நாடு பெட்ரோ-ப்ராடக்ட்ஸ் நிறுவனம், திருச்சி டிஸ்டிலரீஸ் நிறுவனம், தூத்துக்குடி அல்கலின் கெமிகல்ஸ் நிறுவனம் ஆகியவை ஏற்கெனவே மூடப்பட்டு விட்டன. பல்லாயிரம் கோடி ரூபாய் முதலீட்டில் மூன்றாண்டு களுக்கு முன்பே பணிகள் தொடங்கப்பட்ட கடலூர், நாகார்ஜுனா பெட்ரோ கெமிகல் தொழில் வளாகம் எப்போது உற்பத்தி தொடங்கும் என்றே தெரியாத நிலை ஏற்பட்டிருக்கின்றது. பஞ்சாலைத் தொழில் பல பிரச்சினைகளினால் நலிந்து வருகிறது. பட்டாசு தயாரிக்கும் தொழில் மறைமுக ஆக்கிரமிப்பினால் நசுங்கிக் கொண்டிருக்கிறது. கைத்தறி - விசைத்தறித் தொழில் சுருங்கிச் சுருண்டு கொண்டிருக்கிறது. பொய் நெல்லைக் குத்திப் பொங்க நினைத்து, கை நெல்லை விட்ட கதைதான், தமிழகத்தில் நடந்து கொண்டிருக்கிறது!
மே மாதம் நடக்கவிருந்த இந்த மாநாட்டையொட்டி 13-2-2015 அன்று சென்னையில் நடைபெற்ற முன்னோட்ட மாநாட்டில் 18 ஆயிரம் கோடி ரூபாய்க்கு ஏழு நிறுவனங்களோடு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும் என்று மிகப் பெரிய விளம்பரம் செய்தார்களே தவிர அங்கே அந்த நிகழ்ச்சியே அந்த முன்னோட்ட மாநாட்டில் நடைபெறவில்லை .
தமிழக அரசின் தொழில் அமைச்சர் “குறைந்த விலைக்கு நிலம் தருகிறோம், வரிச் சலுகையும் தருகிறோம் என்று சொல்லி, ஆந்திர மாநிலத்திற்கு அழைக்கிறார்கள். அது போல ஆந்திர முதல்வர் இந்த வழியாகச் சென்னைக்கு வந்து செல்லும் போதெல்லாம் நம் தொழிலதிபர்களை அழைத்து குறைந்த விலைக்கு நிலம் தருகிறோம் என்று பேசுவார்” என்று வெளிப்படையாகவே கூறினார்.
அதிலிருந்தே தமிழகத்தின் நிலைமை என்ன என்று அப்போதே தெரிந்து விட்டது.
இவர்கள் ஆளுகின்ற ஒரு மாநிலத்திற்கு வேறொரு மாநில முதலமைச்சர் வந்து கூட்டம் போட்டு தொழில் முதலீட்டாளர்களுக்கு நேரடியாகவே அழைப்பு விடுக்கிறார்கள் என்றால், அதற்காக இந்த ஆட்சியினர் வெட்கப் படத்தான் வேண்டும்.
இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த நிறுவனங்கள் அதிக அளவில் தமிழகத்தில் முதலீடு செய்வது குறித்து, அந்நாட்டு வர்த்தகத் துறை அமைச்சருடனும், அதைப்போல தமிழகத்தில் மேலும் முதலீடு செய்வது குறித்து அமெரிக்காவின் தெற்கு கரோலினா மாகாணத்தின் கவர்னருடனும் பன்னீர்செல்வம் பேச்சு வார்த்தை நடத்தியதாக ஒரு செய்தி வந்தது.
அதுவும் என்னவாயிற்று என்று தெரியவில்லை.
சர்வதேச முதலீட்டாளர் மாநாடு மே மாதம் 23 மற்றும் 24ஆம் தேதிகளில் நடைபெறும் என்று அறிவித்து, முதலீட்டாளர்கள் மாநாட்டிற்காக வெளி நாட்டினரைக் கவர்ந்திழுக்கச் செல்வதாக ஒரு பிரச்சாரம் செய்யப்பட்டு, அதற்காக அதிகாரிகள் எல்லாம் வெளிநாடு களுக்குப் படையெடுத்த செய்தியும் வந்தது.
தமிழக அரசின் தொழில் அமைச்சர் சென்னையில் நடைபெற்ற முதலீட்டாளர்கள் மாநாட்டில் வெளிநாடுகளில் இருந்து ஏராளமான தொழில் அதிபர்கள் வர உள்ளதாகவும், அதன் மூலம் ஒரு லட்சம் கோடி ரூபாய் தமிழகத்திலே முதலீடு செய்ய வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவித்தார்.
அவர் அவ்வாறு அறிவித்த ஒரு சில நாட்களிலேயே முதலீட்டாளர்கள் மாநாடு மேலும் தள்ளி வைக்கப்படுவ தாக அரசினால் அறிவிக்கப்பட்டது.
சர்வதேச முதலீட்டாளர்கள் மாநாட்டில் பங்கேற்க உள்ளூர் தொழில் அதிபர்களை அழைப்பதற்கான ஆலோசனைக் கூட்டம் ஒன்று சேலத்தில் நடைபெற்றதாகவும், அந்தக் கூட்டத்தில் தொழில்துறை அமைச்சர், நெடுஞ்சாலைத் துறை அமைச்சர், தொழில் துறையின் சிறப்புச் செயலாளர் ஆகியோர் கலந்து கொண்டதாகவும், அதிலே அமைச்சர்கள் பேசியபோது மே மாதத்தில் மாநாடு நடைபெறும் என்று பேசினார்.
ஆனால் அவர்களுக்குத் தெரியாமலேயே, மாநாடு ஒத்தி வைக்கப்பட்டு செப்டம்பரிலே நடைபெறும் என்று சென்னையில் அறிவிப்பு வந்தது.
புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் எவ்வாறு செயல்படுத்தப் படப்போகின்றன?
எப்போது அவை செயலாக்கத்திற்கு வரும்?
அதற்கான கால நிர்ணயம் ஏதும் செய்யப்பட்டிருக்கிறதா?
புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத் திடும் தமிழக அரசும், முதலீட்டாளர்களும், அவர்கள் வழங்கிடும் உறுதிமொழியை நிறைவேற்றுவதற்கான அடிப்படை ஆதாரங்களைப் பெற்றுள்ளார்களா? அரசின் தொழிற் கொள்கையும், அரசு அதிகாரிகளும் தொழில் திட்டங்களைச் சிறிதும் தாமதிக்காமல் செயலாக்கத்திற்கு அனுமதித்து ஒத்துழைப்பார்களா? என்ற கேள்விகள், செய்திகளைப் படிக்கும் அனைவருடைய மனதிலும் எழுவது இயற்கையே!
இவற்றில் முக்கியமான கேள்வி, கையெழுத்திடப்படும் புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் எத்தனை ஒப்பந்தங்கள் உண்மையிலேயே செயலாக்கத்திற்கு வரப்போகின்றன என்பதுதான்!
இந்தக் கேள்விக்கான பதிலைத் தேடுவதற்கு முன் தொழில் முதலீடுகள் சம்மந்தமாகத் தமிழகத்தில் கடந்த நான்காண்டுகளில் எத்தகைய முன்னேற்றம் ஏற்பட்டிருக்கிறது என்பதை நாம் தெரிந்து கொண்டாக வேண்டும்.
2011ஆம் ஆண்டில் தமிழகத்தில் 73,298 கோடி ரூபாய் முதலீட்டுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டதாக செய்திகள் வெளியிடப்பட்டன. ஆனால் அவற்றுள் வெறும் 235 கோடி ரூபாய் முதலீடு மட்டுமே தமிழகத்திற்கு வந்து சேர்ந்திருக்கிறது. உண்மையில் வந்து சேர்ந்த முதலீடு 0.3 சதவிகிதம்தான் என்பதை அறிய அனைவரும் வெட்கப்பட வேண்டும்!
2012ஆம் ஆண்டில் 21,253 கோடி ரூபாய் முதலீட்டுக் கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாயின. ஆனால் 524 கோடி ரூபாய் முதலீடு மட்டுமே செயலாக் கத்துக்கு வந்திருக்கிறது. செயலாக்கத்துக்கு வந்துள்ள முதலீடு 2.4 சதவீதம் மட்டுமே.
2013ஆம் ஆண்டில் 27,380 கோடி ரூபாய் முதலீட் டுக்கான ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டு, 2292 கோடி ரூபாய் முதலீடு மட்டுமே வந்திருக்கிறது. செயலாக்கத்துக்கு வந்துள்ள முதலீடு 8.3 சதவீதம்தான்.
2014ஆம் ஆண்டில் 14,596 கோடி ரூபாய் முதலீட்டுக்கான ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டு, 2500 கோடி ரூபாய் முதலீடு மட்டுமே தமிழகத்துக்கு வந்து சேர்ந்திருக்கிறது. செயலாக்கத்துக்கு வந்திருக்கும் முதலீடு 17 சதவீதம்தான்.
2015ஆம் ஆண்டில் ஜூலை மாதம் வரை 17,412 கோடி ரூபாய் முதலீட்டுக்கான ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டு, வெறும் 41 கோடி ரூபாய் முதலீட்டுக்கான பணிகள் மட்டுமே நிறைவேறியிருக்கின்றன. செயலாக்கத்துக்கு வந்திருக்கும் முதலீடு வெறும் 0.2 சதவீதம் தான் என்பது எவரையும் தலை குனிய வைப்பதாகும்.
ஆக அதிமுக ஆட்சியில் 2011ஆம் ஆண்டு முதல் 2015ஆம் ஆண்டு ஜூலை மாதம் வரை செயலாக்கத்துக்கு வந்துள்ள முதலீடு வெறும் 5.64 சதவீதம்தான்.
இவ்வாறு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் செய்யப்படும் முதலீடுகளின் அளவுக்கும், உண்மையிலேயே செயலாக்கத்துக்கு வரும் முதலீடுகளின் அளவுக்கும் மிகப்பெரிய இடைவெளி இருப்பதற்கு, மின்சாரம், தண்ணீர், போக்குவரத்து வசதிகள் போன்ற அடிப்படைக் கட்டமைப்பு தேவையான அளவுக்கும் தரத்திற்கும் இல்லாததும், அரசின் தொழில் கொள்கையும் - அதிகார அமைப்பும் தொழில் முதலீட்டாளர் களுக்கு அனுசரணையான அணுகுமுறையினைக் கையாளாததும்தான்.
கடந்த நான்கரை ஆண்டுகளாக தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்கு உகந்த முறையெதையும் பின்பற்றாமல், முதலீடுகளை ஈர்ப்பதில் மிகப் பெரிய தோல்வி ஏற்பட்ட பிறகு, 2016 தேர்தல் விளம்பரத்திற்காக கடைசி நேரத்தில் சாதிக்கப் போகிறோம் என்று சவடால் பேசுவது எந்த அளவுக்குச் சாத்தியமாகி நல்ல விளைவுகளை ஏற்படுத்தப் போகிறது?''
- கலைஞர் கருணாநிதி
=================================================================================================================================
இன்று,
செப்டம்பர்-11.
- அர்ஜெண்டினா ஆசிரியர் தினம்
- லத்தீன் அமெரிக்கா ஆசிரியர் தினம்
- தமிழக கவிஞர் சுப்பிரமணிய பாரதியார் நினைவு தினம்(1921)
- நியூயார்க் உலக வர்த்தக மைய இரட்டை கோபுரங்கள் தாக்கப்பட்ட தினம்(2001)
==================================================================================================================================
-
-