வியாழன், 17 செப்டம்பர், 2015

பிள்ளையாரும் அவரை உடைத்தவரும்.

பிள்ளையாரும் அவரை உடைத்தவரும்.ஒரே நாளில் பிறந்ததினம் கொண்டாடும் தினம் இன்று.இதுதான் காலத்தின் கட்டாயம் என்பது.
பின்னவர் பிறந்த தினம் உறுதியானது.முன்னவர் பிறப்போ மனித கற்பனையின் பிறப்பு.
இனி உண்மையான பிறப்பை கொண்ட பெரியவர் பற்றி பார்ப்போம்.
"இந்த காலத்து இளைஞர்கள் மனம் என் மீது வெறுப்புக் கொள்ளாது. வெறுப்புக் கொண்டு விடுமானாலும் கூட நான் அதற்கு அஞ்சவில்லை. இனி வருங்கால இளைஞர்கள் பாராட்டுவார்கள்; பாராட்டாவிட்டாலும் இன்று நான் சொன்னதைப் பின்பற்றி வீரத்தோடு, மான வாழ்வு வாழும் வழியில் இருப்பார்கள். சரியாவோ, தப்பாகவோ நான் அதில் உறுதி கொண்டிருப்பதால் எனக்கு எக்கேடு வருவதானாலும் மனக்குறையின்றி, நிறைமனதுடன் அனுபவிப்பேன் - சாவேன் என்பதை உண்மையாய் வெளியிடுகின்றேன்."
"நான் சாதாரண ஆள்தான் என்றாலும், இன்றைய மந்திரிகள் போன்றவர்களை விட எவ்வளவோ மேலானவன்; உலகம் சுற்றியவன்; பூணர பகுத்தறிவாதி; சொத்து சம்பாதிக்க வேண்டிய அவசியமில்லாதவன்; சொந்தத்திற்கும் பணம் சேர்க்க வேண்டிய தேவையில்லாதவன்; ஜாதி உணர்ச்சி, ஜாதிப்பற்று இல்லாதவன்; என்ன செய்தாவது ஜாதியை ஒழிக்க வேண்டும் என்பவன்.
periyar 340
70- ஆண்டு கால அனுபவம், 30- ஆண்டு வியாபார அனுபவம்.1915-16,17,18,19- வரை ரிஜிஸ்தர் செய்யப்பட்ட ஈரோடு வியாபாரச் சங்கத் தலைவன். தெ.இ.வியாபாரச் சங்க நிர்வாக சபை அங்கத்தினராக இருந்தவன். 5- ஜில்லாவுக்கு இன்கம்டாக்ஸ் டிரிபியூனல் கமிஷனர்கள் மூவரில் ஒருவனாக இந்திய கவர்ன்மெண்டாரால் நியமிக்கப்பட்டவன்.
ஈரோடு டவுன் ரீடிங்ரூம் செக்ரட்டரி, பழைய மாணவர் சங்க செக்ரட்டரி, ஹைஸ்கூல் போர்டு செக்ரட்டரி, பிறகு தலைவர்.1914- ஆம் ஆண்டு நடந்த கோவை ஜில்லா காங்கிரசு மாநாடு செக்ரட்டரி, 10- ஆண்டு ஆனரரி மாஜிஸ்ட்ரேட், ஈரோடு தாலுக்கா போர்ட் பிரசிடெண்ட் பல வருடங்கள் ஈரோடு முனிசிபல் சேர்மென். ஜில்லா போர்டு மெம்பர்; வாட்டர் ஓர்க்ஸ் கமிட்டி செக்ரட்டரி, பிளேக் கமிட்டி செக்ரட்டரி, கோவை ஜில்லா 2-வது சர்க்கிள் தேவஸ்தான கமிட்டி செக்ரட்டரியாக 10- ஆண்டு, பிறகு 1929- வரை வைஸ்பிரசிடெண்ட்; பிரசிடெண்ட், 1918- ஆம் ஆண்டு உலக யுத்தத்தில் ஆனரரி ரெக்ரூட்டிங் ஆஃபீசர்; 1918- ஆம் ஆண்டு யுத்தத்தில் தாலுகா, ஜில்லா அரிசி கண்ட்ரோலில் கவர்மெண்டாரின் நிர்வாகி; அதாவது, அரிசி கண்ட்ரோலில் கவர்ன்மெண்டாருக்கு வரும் அரிசி வாகனங்களின் ரசீதுகளை வாரம் ஒவ்வொரு தாலுக்காவிலிருந்தும் 15, 20- டன் வீதம் எனக்கே கொடுத்து மற்ற வியாபாரிகளுக்கு விநியோகிக்கும்படி ஜில்லா கலெக்டர் கேட்டுக் கொள்ளும் டிஸ்டிரிபியூட்டிங் ஆஃபீசர்; கார்னேஷன் கமிட்டி செக்ரட்டரி; காங்கிரசிலும், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி செக்ரட்டரி தலைவர்; காதிபோர்டு (ஃபவுண்டர்) அமைப்பாளராக இருந்ததோடு, 5- வருடம் தலைவராக இருந்த போது எனக்குச் செயலாளராக டாக்டர் டி.எஸ்.எஸ்.ராஜன், கே. சுந்தானம், எஸ்.ராமநாதன், கே.எம்.தங்கபெருமாள், அய்யாமுத்து முதலியவர்கள் இருந்தார்கள்.
இவைகள் ஒருபுறமிருக்க, 1940, 42- இல் 2- வைஸ்ராய்கள்; 2- கவர்னர்கள் என்னை அழைத்து மந்திரிசபை அமைக்க வேண்டினார்கள். ராஜாஜியும் வேண்டினார். நான் மறுத்து விட்டேன்.
1919- ஜீலையில் நான் ஜில்லா தாலுக்கா போர்ட் மெம்பர் சேர்மென் முதலிய பதவியை ராஜிநாமா கொடுத்த காரியம் பேப்பரில் வெளியானவுடன் லோகல் அண்டு முனிசிபல் போர்டு கவுன்சில் மெம்பர் பி.ராசகோபாலாச்சாரியார் அவர்கள் ஈரோடு வந்து, "என்ன ராமசாமி நாயக்கரே! இப்படி முரட்டுத்தனமான வேலை செய்து விட்டீரே! உமக்குப் புத்தியில்லையா?" என்றார். அவர் பக்கத்தில் கெரோசின் ஆயில் டீலர்ஸ் ஏஜெண்ட் கோவிந்தாச்சாரி இருந்தார். உடனே நான் வணங்கி, "நான் என்ன செய்து விட்டேன்" என்று கேட்டேன். அவர் தனது மனைவியைப் பார்த்து "அம்மா இவருக்குச் சொல்லு" என்று சொல்லி விட்டு மௌனமாக இருந்துவிட்டார்.
அந்த அம்மையார், "அய்யர் உங்களுக்கு, நீங்கள் உங்கள் முனிசிபாலிடியில் தண்ணீர்க் குழாய் ஏற்படுத்தியதற்காக "ராவ்பகதூர்" கொடுப்பது என்று சிபாரிசு பண்ணியிருக்கிறார். உங்கள் கலெக்டர் ராவ் சாகிப் தான் சிபாரிசு செய்தார். அய்யர் ராவ்பகதூர் என எழுதி கவர்னருக்கு ஃபைல் போய் இருக்கிறது. நீங்கள் இப்படி அய்யருக்கு அவமானம் செய்துவிட்டீர்களே; இது சரியில்லை" என்று சொன்னார். நான் பல காரணங்களைக் கூறி மறுத்து விட்டேன்.
நான் காங்கிரசுக்கு விரோதி என்று ஆனபிறகுங்கூட, ஆச்சாரியார் என் வீட்டிற்கு வந்தும் என்னை (காங்கிரசில் சேராமல், கதர் போடாமல்) சட்டசபைக்கு நாமினேஷன் போட ஃபாரம் நீட்டிக் கையெமுத்து கேட்டார். நான் மறுத்து விட்டேன். 41- இல் மந்திரிசபை அமைக்க ஒப்புக் கொள்ளும்படி சொன்னார். நான் கவர்னர் கவர்னர் ஜெனரல் ஆகியவர்கள் இடமெல்லாமல் மந்திரிசபை அமைக்க மறுத்து விட்ட பிறகு, என்னை அழைத்து மந்திரிசபை அமைக்கும்படியும், நான் விரும்பினால் தானும் ஒரு மந்திரியாயிருந்து எனக்கு உதவியும், காங்கிரசுக்கு ஆதரவும் தருவதாயும் சொன்னார். நான் மறுத்து விட்டேன்.
போதும், இவ்வளவு எடுத்துக் காட்டுவகற்கே நான் மிகமிக வெட்கப்படுகிறேன். தறுதலைகளும்! பொறாமைக்காரர்களும்! சொந்த எதிரிகளும்! இதன் மூலம் ஒரு பொது மனிதன் என்னவென்று தெரிந்து கொள்ள வேண்டுமோ அதைவிட்டு விட்டு குற்றம் குறை சொல்ல வழி காணத் துடிக்கிறார்கள்.
இருந்தாலும், நான் ஏன் 'வெட்கம்' என்பதை விட்டு விட்டு இவ்வளவு எடுத்துக் காட்டுகிறேன் என்றால், துரோகம் செய்து அயோக்கியனாய் வாழ வேண்டிய அவசியம் எனக்கு எந்தக் கட்டத்திலும் வந்ததில்லை என்பதை எடுத்துக் காட்டவேயாகும். எல்லாத் துறைகளிலும் எனக்கு இந்த மந்திரிகளுக்குச் சிறிது கூட குறையாத அனுபவமும், திறமையும் உண்டு என்பதைக் கூறவுமேயாகும். ஒன்றை ஒப்புக் கொள்கிறேன்.
அதாவது, நான் பல விஷயங்களில் அறிவுக்குறைவு உள்ளவனாக இருக்கக் கூடும்; பல தவறுகள் செய்திருக்கக் கூடும்; இன்றைய கருத்தில் இருந்து நாளை மாறுதல் அடையக்கூடும்; பல கருத்துக்களை மாற்றியும் இருக்கிறேன். இவைகள் எல்லாம் எனது கண்ணியமான அனுபவம் ஆராய்ச்சியைக் கொண்டே இருக்குமே தவிர, பணம் சேர்க்கவோ, பதவி பெறவோ, வாழ்க்கையை மேம்படுத்திக் கொள்ளவோ, பெரிய ஆள் ஆகவோ, இழிவை மறைத்துக் கொள்ளவோ, கடுகளவு கூட காரணம் கொண்டதாய் இருக்காது.
அதாவது, ஒரு பண்டம் கைநழுவி விழுந்து உடைந்து போவதற்கும், உடைக்க வேண்டுமென்றே கருதி கீழே போட்டு உடைப்பதற்கும் உள்ள பேதம் போன்றதாகும். இப்படிப்பட்ட என்னை இந்நாட்டு விடுதலைக்கு குறுக்கே இருந்தவன், துரோகம் செய்தவன் என்று சொல்லும் போது, எவ்வளவு "மன உரம் இருந்தாலும் நிதானம் தவறத் தூண்டுகிறது". அந்த நிதானம் தவறிய சொற்கள் தான் மேலே என்னைப் பற்றிக் குறிப்பிட்டவையாகும். பொறுத்தருள்க.
இன்னமும் சொல்கிறேன், நான் வெள்ளையன் வெளியேறுவதற்குக் குறுக்கே இருந்திருந்தாலும், இந்திய சுதந்திரத்திற்கு நான் துரோகம் செய்தது உண்மையாக இருந்திருந்தாலும், இந்தப் பாவிகள், மாபாவிகள் ஆதிக்கத்திற்கும் அதனால் ஏற்பட்ட வடநாட்டான் சுரண்டல் ஆட்சிக்கும் இடம் கொடுத்து அடிமையாக்கி அதனால் பணமும் பெருமையும் சம்பாதிக்கும் சுயநலம் கொண்டல்ல.
         பெரியார் பேசியது...அனுப்பி உதவியவர்:- தமிழ் ஓவியா                                                                                                                  நன்றி:கீற்று.
================================================================================================
"07.11.1948 அன்று சேத்துப்பட்டு வ.உ.சி. இளைஞர் கழகத்தின் ஆதரவில் நடைபெற்ற இலவச வாசகசாலை நூல் நிலையத் திறப்பு விழாவில் தந்தை பெரியாரும், அண்ணாவும் கலந்துகொண்டனர். பெரியார் பேசும்போது, இந்த நாட்டின் விடுதலைக்காக குடும்பத்தோடு நாசமடைந்தவர் ஒருவர் உண்டென்றால் அவர் வ.உ.சிதம்பரனார் அவர்களேயாகும்.
வங்காளத்தில் ஏற்பட்ட சுதேசி உணர்ச்சி இயக்கம் காரணமாக நம் நாட்டிலும் துணி கொளுத்தப்பட்டது. ஆனால் நமது வ.உ.சி. அவர்கள் இது மட்டும் போதாது என்று வெள்ளை யர்களின் கப்பலுக்கு எதிராக கப்பலையும் கட்டி தூத்துக் குடிக்கும், கொழும்புக்கும் பிரயாணக் கப்பலாக ஏற்பாடு செய்தார்.
அந்தக் காலத்தில் நான் நன்றாக வாழ்ந்திருந்தவன் தான்.வ.உ.சி.யின் இந்த முயற்சிக்காக எங்கள் ஊரிலேயே ரூபாய் 35 ஆயிரம் வசூல் செய்து கொடுத்தோம். அதில் எங்கள் பணம் 5 ஆயிரம், முஸ்லீம் நண்பர்களுடையது அய்ந்து ஆயிரம். மற்றவர்களும் ஆயிரம் அய்நூறு என்பது போன்று உதவி செய்து அவரது முயற்சிக்கு பலந்தேடினோம்.
1927ஆம் ஆண்டிலேயே சேலத்திலே நடைபெற்ற ஜஸ்டிஸ் மாநாட்டிற்குத் தலைமையும் வகித்திருக்கிறார். அதற்குப் பிறகு பல ஆண்டுகள் நம்முடனிருந்து வந்தார். எனினும் தேசி யத்தைப் பற்றிப் பேச மறக்கமாட்டார். இந்நிலையைக் கண்ட இந்நாட்டுப் பார்ப்பனர்கள் அவரைத் தூற்ற ஆரம்பித்தனர். நாஸ்திகனோடு சேர்ந்து விட்டானென்று ஓயாது கூப்பாடு போட்டனர். இதைக் கண்டு அவர் அஞ்சவில்லை.
ஒரு சமயம் அவர் செய்த முக்கியக் காரியத்தை எடுத்துக்காட்ட விரும்பு கிறேன். நாகப்பட்டினம் தேசபக்த சமாஜத்தில் எனது படத்தைத் திறந்து வைக்குமாறு வ.உ.சி. அவர்களை அழைத் திருந்தார்கள். படத்தைத் திறந்து வைத்தபோது தேங்காய் பழம் உடைத்து விழுந்து கும்பிட்டார்.
இது தோழர் தண்டபாணி (பிள்ளை) அவர்களுக்கு நன்றாகத் தெரியும். அன்று அவருடன் இருந்திருக்கிறார். தண்டபாணி அவர்களும் விழுந்து கும்பிட்டார். இந்தச் செய்தி  அறிந்த எனக்கு மிகக் கஷ்டமாகி விட்டது. பிறகு அவரையே நேரில் சந்தித்து இந்த அக்கிரமத்தை அய்யா அவர்கள் செய்யலாமா என்று கேட்டேன்.
அப்போது அவர் என்ன சொன்னார் தெரியுமோ? நீங்கள் ஒன்றும் கவலைப்பட வேண்டாம். இப்படிச் செய்தால்தான் பார்ப்பனர்கள் என்னை நாஸ்திகன் என்று தூற்ற மாட்டார்கள். தோழராகிய ராமசாமியின் படத்துக்கே இப்படி விழுந்து கும்பிடும்பொழுது நாஸ்திகனாக இருப்பானா என்று கலங்குவர் என்று பட்டென்று பதில் கூறினார். அவ்வளவு பார்ப்பனிய எதிரியாக இருந்து வந்தவர் வ.உ.சி. அவர்கள்"
 என்று புகழாரம் சூட்டினார் பெரியார்.

================================================================================================
இன்று,
செப்டம்பர் -17.
 பெரியார் 137வது பிறந்த நாள்
  • மசாசுசெட்ஸ், போஸ்டன் நகரங்கள் அமைக்கப்பட்டன(1630)
  • பெரியார் பல்கலைக்கழகம் அமைக்கப்பட்டது(1997)
  • தமிழ், செம்மொழியாக அறிவிக்கப்பட்டது(2004)
  • தமிழறிஞர் திரு.வி.க., இறந்த தினம்(1953)


"தொண்டு செய்து பழுத்த பழம்! 
தூயத்தாடி மார்பில் விழும்! 
மண்டைச் சுரப்பை உலகு தொழும்! 
மனக்குகையில் சிறுத்தை எழும்! '"


-புரட்சிக்கவி பாவேந்தர் பாரதிதாசன்

================================================================================================
விநாயகர் சதுர்த்தி சிறப்புக் கட்டுரை.

பெரியார் ஈ.வெ.ரா.


சற்றொப்ப மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு மானுடம் முழு பரிணாமம் அடையக் கவலையும் ஆர்வமும் கொண்டு சிந்தித்துத் தனி மனிதன், குடும்பம், நாடு, அரசியல், நிர்வாகம் முதலானவை எவ்வாறு இருந்து இயங்க வேண்டும், எவ்வாறு இருந்து இயங்கக் கூடாது – எது நல்லது எது தீயது என்னும் மனிதர் வாழும் இயக்கத்தை தன் காலச் சூழலுக்கேற்ப முழு பரிணாமம் கொள்ளும் வகையில் எடுத்துச் சொல்லித் தன் திருக்குறள் வாயிலாகப் பதிவு செய்து சென்றார் திருவள்ளுவர்.
அவரைப் போன்றே பெரியார், மானுடத்தைப் புரிந்து கொண்டபோது தன்னைச் சுற்றியுள்ள மனிதப் பண்பின் சீரழிவைக் கண்டு உள்ளம் பதைக்கச் சிந்தித்தார். அடிமைகளாக இருந்து உழைத்தும் துன்பங்களையே கூலியாகப் பெற்று உழன்று வரும் இவர்களைக் காத்து மானமும் அறிவும் கொண்டும் விடுதலை ஊணர்வுடனும் மனிதப் பண்புடனும வாழ்விக்கத் தன் வாழ்நாளைப் பயன்படுத்த வேண்டும் என்று முனைப்புடன் செயலாற்றினார். பெரியாரிடம் நான் பெற்ற தாய்ப்பாலே மனிதநேயம்தான்.
ரோஜா செடி முள்முள்ளாகத்தான் இருக்கும். ஆனால் அதன் மலரின் அழகு கண்ணைக் கவரும், மணந்து மனங்கவரும். தேன் இனிக்கும் மருந்தாகும். பெரியாரின் ஒவ்வொரு சொல்லும் செயலும் மானுடப் பண்பின் பரிணாம வளர்ச்சிக்கு தடையாக உள்ள யாவையும் நீக்கப்பெற்று முழு மானுடம் நோக்கிப் பரிணமிக்க வேண்டும் என்பதேயாகும். இந்த உணர்வும் சிந்தனையும் அவருக்கு இயல்பாகவே இருந்து செயல்பட வைத்துள்ளது. எவ்வாறு என்பதற்குச் அவரின் வாழ்வில் நிகழ்ந்தவற்றில் சில…….
பெரியாரின் துணைவியார் அன்னை நாகம்மையார் மறைந்தபோது மற்ற அனைவரும் அழுது கொண்டிருந்தார்கள். பெரியார் துக்கத்திற்கு வந்தவர்களின் பசியைப் பற்றிச் சிந்தித்தார். உடனே அனைவருக்கும் உணவாக்கிப் பறிமாறச் செய்தார்!
ஒரு பார்ப்பனப் பெண்ணைப் பிள்ளைப் பேற்றுக்காக மகிழுந்தில் மருத்துவமனைக்கு அவளின் பெற்றோரும் உறவினர்களும். அழைத்துச் செல்கின்றனர். புயலுடன் மழையும் சேர்ந்து கொள்ள மகிழுந்து கெட்டு நின்று விடுகிறது. பேறுகாலம் நெருங்கி விட்ட பெண் வேதனையுடன் கதறுகிறாள்.;. பெற்றவரும் மற்றவரும் செய்வதறியாது துடிக்கின்றனர். அப்போது அந்த வழியில் மூடுந்து ஒன்று வரக் கைக்காட்டி நிறுத்த வேண்டுகின்றனர்! மூடுந்து நின்றுவிடுகின்றது. “போய் என்னவென்று பார்.” ஒரு முதியவரின் குரல் சொன்னது! மூடுந்து ஓட்டுநர் இறங்கிச் சென்று பார்த்துவிட்டு வந்து நிலைமையைச் சொல்கின்றார். “சீக்கிரம் அவர்களை நம் வண்டியில் ஏற்று”அந்த முதியவரின் குரல்! 
அந்தப் பார்ப்பனக் குடும்பம் மூடுந்தில் ஏறிக் கொள்ளச் சிறிது நேரத்தில் குழந்தை பிறந்துவிடுகிறது! அந்த வெண்தாடிக் கிழவரிடம் குழந்தையைக் கொடுக்கின்றனர். 
அந்தக் கிழவன் குழந்தையை முத்தமிட்டுக் கொஞ்சுகிறார். 
அவர்தான் மானுடத்தின் தலைமகன் தந்தை பெரியார்!
பெரியார் ஈரோட்டு நகராட்சித் தலைவராக இருந்தபோது ஈரோட்டில் பிளேக் என்னும் நோய் கண்டு மக்கள் கொத்துக் கொத்தாக மாண்டு கொண்டிருந்தார்கள். பலரும் நோய்க்கு அஞ்சி ஊரைவிட்டு ஓடிக் கொண்டிருந்தார்கள். ஆனால் பெரியார் ஓடி ஒளிந்து கொள்ளவில்லை! 
மாறாக நோய் கண்டவர்களைத் தூக்கிச் சென்று மருத்துவமனையில் சேர்த்தார்.
பெரியார் பலருக்குக் கடன் கொடுப்பார். அப்படி பெரியாரிடம் கடன் பெற்றவர்கள், பெரியார் நடந்து போகும்போது எதிரில் வருவது தெரிந்தால் கடன் கொடுத்த பெரியார் பக்கத்துச் சந்தில் மறைந்து கொண்டு கடன் பெற்றவர் சென்று மறைந்தபின்பு நடையைத் தொடர்வாராம்! 
ஏனென்றால் எவராக இருந்தபோதிலும் - தன்னிடம் கடன்பட்டவராக இருந்தபோதிலும் தன்னால் துன்பமோ சங்கடமோ படக்கூடாது என்ற மனிதத்தன்மை – மனிதநேயம்!
பெரியார் தனிமனிதப் பண்பு வியக்கத்தக்கது. தம்மிடம் வரும் சிறுவர் முதல் முதியோர் ஈறாக எவர் வந்தாலும் மரியாதையுடன் வரவேற்று வந்தவர் சங்கடப்படாமல் உரையாடுவார்.
 இறைப் பற்றாளர்களாகிய துறவியர் தம் இல்லம் வந்தால் அவர்களுக்குத் தேவையான பூசைப் பொருள்களை வாங்கித் தருவார்! குன்றக்குடி அடிகளார் முதலானவர்கள் பெரியாருடன் தோழமையுடன் பழகினர்! ஞானியார் அடிகளாரைக் கொண்டு தன் விடுதலை ஏட்டின் அலுவலகத்தைத் திறந்து வைக்கக் கேட்டுக் கொண்டார். 
இந்தப் பண்பின் குணத்தால் கவரப்பட்டுப் அவரிடம் தோழமை கொள்ளவும் பணியாற்றவும் பலர் வந்தார்கள். அவர்களில் பலர் பின்னாளில் தலைவர்களாகவும் அறிஞர்களாகவும் பேரும் புகழும் அடைந்தார்கள்.
மாவீரன் பகத்சிங்கிற்குத் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டபோது; ‘மகாத்மா’காந்தி முதல் எவருமே காத்திடக் குரல் கொடுக்க முன்வரவில்லை! பெரியார் மட்டுமே எதிர்த்துக் குரல் கொடுத்தார்.
ராஜாஜியும் பெரியாரும் இரு துருவங்களாகக் கொள்கை வழியில் செயல்பட்டு வந்த போதிலும்; அவர்கள் இருவரின் நட்புக்கு ஈடாக ஒரு எடுத்துக்காட்டையும் எவராலும் காட்டமுடியாது. ராஜாஜி மறைந்தபோது பெரியார் குலுங்கிக் குலுங்கி அழுதாரே! 
அந்த வரலாற்றைத்தான் சொல்கிறேன். 
பெரியாருக்குப் பல பார்ப்பனர்கள் நண்பர்களாக இருந்துள்ளார்கள்.
“நான் சொல்வதை உடனே நம்பிவிடாதீர்கள். நன்றாகச் சிந்தியுங்கள். உங்கள் அறிவுக்குச் சரி என்று பட்டால் ஏற்றுக்கொள்ளுங்கள். சரியில்லை என்றால் தள்ளி விடுங்கள”; -என்பார் பெரியார். இவரைத்தவிர மேதை என்பாரோ ஞானியர் என்பாரோ இவ்வாறு சொன்னதாக நான் அறிந்திலேன். திருவள்ளுவரைத் தவிர! 
பெரியாரின் இந்தச் சொல்தான் என்னை அவர்பால் ஈர்த்தது.
பெரியரின் தொண்டுக்கும் ஓயாத உழைப்புக்கும் பரிசாக, அவர் யாருக்காக உழைத்தாரோ அவர்கள் கொடுத்த பரிசுகள் ஏராளம்! அவர்மேல் பாம்பு கல் செருப்பு முட்டை முதலானவை வீசப்பட்டன. வசவுகள் பொழியப் பட்டன! அவர் சாக வேண்டும் என்று யாகங்கள் நடத்தப் பட்டன! 
அனைத்தையும் தன் உழைப்புக்குக் கிடைத்த கூலியாக மகிழ்வுடன் ஏற்றுத் தொண்டாற்றி தன் 95 ஆம் வயதில் களத்தில் போரடியவாறு வீர மரணமடைந்தார்!
பெரியார், மானுடப் பண்பின் பரிணாமம் வளர்த்த புரட்சியாளர். மானுடத்திற்கு எது எது தடையாக உள்ளதோ எது எது பயன்படவில்லையோ அவற்றை யெல்லாம் தகர்க்கப் போராடினார். 
எவரெவர் அவற்றிற்குக் காரணகர்தாக்களோ அவர்களையெல்லாம் தாட்சண்யமோ விட்டுக் கொடுத்தோ ராஜதந்திரமோ இல்லாமல் எதிர்த்தார்.
இவை பொன்ற பெரியாரின் வாழ்வின் நிகழ்வுகள் மிகை. 
அவரின் கொள்கைகள் பேச்சுகள் எழுத்துகள் செயல்பாடுகள் யாவும் மனிதப் பண்புகளை நோக்கிப் பரிணமிப்பதாகவே இருக்கும். பெரியாரை அவரின் நடைமுறையில் பார்த்து, கேட்டு, படித்து அறிந்து கொண்ட பின்பே நானும் பெரியாரின் தொண்டர்களில் ஒருவனாக என்னை மாற்றிக் கொண்டேன்.
இன்றையச் சமுதாயச் சூழலில் பெரியாரின் கொள்கைகளைச் சொல்லி மட்டும் மனிதர்களை விழிப்படையச் செய்வது மிகக்கடினமானதாகும்.
 அவரின் மனிதப் பண்புகளைப் பின்பற்றி வாழ்ந்து காட்டித்தான் கொள்கைகளைப் பரப்பி விழிப்படையச் செய்ய இயலும்.
பெரியாரின் மனிதப் பண்பைச் சொல்லி மக்களுக்குப் பெரியார் கொள்கைகளை அறிமுகப்படுத்துவோம். பெரியார் வெல்க!
                                                                                                                                                                                                - குயில்தாசன்
 நன்றி;கீற்று.
                                                       இன்று  பிறந்த நாள் காணும் பிள்ளையார் சிலையை உடைத்து 
                                                   பிள்ளையார் மகிமையை உலகுக்கு உணர்த்தியவர் நம் பெரியாளர் . 
============================================================================================================================