வெள்ளி, 1 ஜூலை, 2016

திரும்பவும் விடுதலை போராட்டமா?

இந்தியாவிற்குள் வியாபாரம் செய்ய இங்கி லாந்திலிருந்து வந்த கிழக்கிந்தியக் கம்பெனி தனது வியாபாரம் மற்றும் தொழில் எல்லையை விரிவுபடுத்தி அதற்காக இடங்களை வாங்கியது.
பின் பொருட்களை சேமிக்க கிடங்குகளைக்கட்டியது.


பின்னர் பாதுகாப்புக்காக என  அரண்கள்,கோட்டைகளை காட்டியது.

சின்ன,சின்ன மன்னர்களை நிதிஉதவி செய்து அவரவர் விரோதிகளை அழித்து உதவுவதாக கூறி கடைசியில் அவர்கள் நாட்டையே தனதாக்கிக்கொண்டது.

 இறுதியில் நமது நாட்டையே கைப்பற்றி பல நூற்றாண்டுகளுக்கு மேல் நம்மை அடிமைப்படுத்திஆண்டது. ஏகாதிபத்தியம் ஆண்டதும் பின்னர் நாட்டு மக்களின் சுதந்திரப் போராட்ட வேள்வியில் பகத்சிங், நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ்,வ.உ.சி.சுப்பிரமணிய சிவா,பாரதி  போன்ற தலைவர்கள் தங்கள் உயிரை பணயம் வைத்து ஏற்படுத்திய எழுச்சியாலும் நாடு சுதந்திரம் பெற்றது வரலாறு.வியாபாரம் செய்ய வந்த வெள்ளையனுக்கு நாடாளும் ஆசை வந்த போது நம் நாட்டு மன்னர்கள் மற்றும் குறுநில மன்னர்களை எதிர்த்துப் போரிட ஆயுதங்கள் தேவைப்பட்டன. 
இதற்காக துப்பாக்கிகள், பீரங்கிகள், வெடி மருந்து, வெடிகுண்டு ஆகியவற்றை இங்கிலாந்திலிருந்து கப்பல் மூலம் கொண்டு வர வேண்டிய அவசியம் ஏற்பட்டது. 

இது மிகவும் காலதாமதமாவதையும் பெரும் செலவாவதையும் கவனத்தில் எடுத்த கிழக்கிந்திய கம்பெனியும், பின்னாளில் பிரிட்டிஷ் அரசும் நமது நாட்டிலேயே ஆயுதங்களை உற்பத்தி செய்ய முடிவெடுத்து முதன் முதலில் வெடிகுண்டுகளில் நிரப்புவதற்கான கரிமருந்ததை (கன்பவுடர்) உற்பத்தி செய்ய தொழிற்சாலைகளை நிறுவத் தொடங்கின.மிகவும் ஆபத்தான இப்பணிகளில் இந்தியர்களை குறைந்த கூலியில் எவ்வித பாதுகாப்பும் இல்லாமல் பணியில் அமர்த்தினர். 

பின்னர் ராணுவத்தளவாடங்களை இந்தியாவில் உற்பத்தி செய்ய தொழிற்சாலைகளை நிறுவ முடிவு செய்து முதன் முதலாக கொல்கத்தா நகரில்1802ஆம் ஆண்டு கிழக்கிந்திய கம்பெனி ‘கன்காரேஜ் ஏஜென்சி’ எனும் பெயரில் பீரங்கி தாங்கி வண்டிகளை பழுதுபார்க்கவும் உற்பத்தி செய்யவும் ஒரு தொழிலகத்தை நிறுவி உற்பத்தியை துவக் கினர். 

இன்றளவிற்கும் இத்தொழிற்சாலை “கன்அண்ட் ஷெல் ஃபேக்டரி’ எனும் பெயரில் அரசின் கட்டுப்பாட்டில் இராணு வத்திற்கான ஆயுதங்களை உற்பத்தி செய்து வருகிறது. 

வெள்ளையன் நமது நாட்டை விட்டு வெளியேறும்போது 18 இராணுவத் தளவாட தொழிற்சாலைகளை விட்டு விட்டுச் சென்றான். நாடு சுதந்திரமடைந்த பிறகு 28 படைத்துறை தொழிற்சாலைகள், (மொத்தம் 41 தொழிற்சாலைகள் ), 52 பாதுகாப்பு ஆராய்ச்சி நிறுவனங்கள் எச்.ஏ.எல் உட்பட 8 பாதுகாப்பு பொதுத்துறை நிறுவனங்களை உருவாக்கி நாட்டின் சுயசார்பிற்கு வித்திட்டனர்.

தமிழகத்தில் ஆவடியில் மூன்று தொழிற்சாலைகளும், ஒரு ஆராய்ச்சி நிறுவனமும், திருச்சிராப்பள்ளியில் இரண்டு தொழிற்சாலைகளும், அரவங்காடில் ஒரு தொழிற்சாலையும் இராணுவத் தளவாட உற்பத்தியில் ஈடுபட்டுள்ளன.இராணுவ தொழில்நுட்பத்தை சோஷலிச நாடுகள் குறிப்பாக சோவியத் யூனியன் எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல் நமக்கு வழங்கின. 

இதன் விளைவாகவும் டாக்டர் அப்துல்கலாம் போன்ற திறமையான விஞ்ஞானிகள் மற்றும் இராணுவத்தளவாட உற்பத்தியின் தொழில்நுட்பத்தில் அறிவும் ஆற்றலும்மிக்க பொறியாளர்களும் தொழிலாளர்களும் பாதுகாப்பு உற்பத்தியில் சுயசார்பை அடைந்திட இரவும் பகலும்உழைத்துக் கொண்டிருப்பதன் விளைவாக நவீன ஏவு கணைகள், ராக்கெட், பீரங்கிகள், நவீன டாங்கிகள், துப்பாக்கி கள், இராணுவ வீரர்களை உடல்ரீதியாக சௌகரியமாக வைத் திருக்க நவீன சீருடைகள், பாரா சூட்டுகள் என எந்த அந்நிய நாட்டின் உதவியும் இன்றி உற்பத்தி செய்து வருகின்றனர். 

நவீன போர் விமானம் நவீன போர்க் கப்பல், நீர்மூழ்கிக் கப்பல் உற்பத்தி போன்ற துறைகளில் நமது நாடு அந்நிய நாடுகளை சார்ந்திருக்க வேண்டிய அவசியம் உள்ளது. 

இவற்றிற்கான தொழில்நுட்பத்தை நமது நாட்டிலேயே ஆய்வு செய்து உற்பத்தி செய்ய திட்டங்கள் தீட்டி அமல்படுத்த அகில இந்திய பாதுகாப்புத்துறை ஊழியர் சம்மேளனம் பலமுறை முன்னாள் பாதுகாப்பு அமைச்சர்கள் ஜார்ஜ் பெர்ணான்டஸ், பிரணாப் முகர்ஜி, ஏ.கே.ஆண்டனி மற்றும் தற்போதைய அமைச்சர் மனோகர் பாரிக்கர் ஆகியோரிடம் ஆலோசனை கள் வழங்கி உள்ளது. 

ஆனால் தொடர்ந்து வரும் அரசுகள் அதற்கான முறைப்படுத்தப்பட்ட திட்டங்களை தீட்டாமல் தனியார்மயத்திலும், அந்நிய நாட்டு இராணுவத் தளவாட உற்பத்தியாளர்களை ஊக்குவிப்பதிலுமே கவனம் செலுத்தி வருகின்றன.ஏ.கே. ஆண்டனி அவர்கள் பாதுகாப்பு அமைச்சராக இருந்த போது, மத்திய தொழில் மற்றும் வர்த்தகத்துறை பலமுறைபாதுகாப்புத்துறையில் 100 சதவீத அந்நிய மூலதனத்தை அனுமதிக்க பாதுகாப்பு அமைச்சகத்தை நிர்ப்பந்தித்தது.
ஆனால், ஏ.கே.ஆண்டனி அவர்கள் பாதுகாப்பு அமைச்சகம் 49 சதவீதத்திற்கு மேல் அந்நிய மூலதனத்தை அனுமதிக்கும் முதிர்ச்சியை அடையவில்லை” என்று தொடர்ந்து வர்த்தகத் துறையின் ஆலோசனையை நிராகரித்து வந்தார்.

தற்போது நரேந்திரமோடி தலைமையிலான பாஜக அரசு பாதுகாப்புத்துறையில் 100 சதவீத அந்நிய மூலதனத்தை அனுமதித்துள்ளது. 

இதுவரையில் இருந்த அரசுகள் “வெளிநாடுகளில் இருந்து நாம் இறக்குமதி செய்யும் ஆயுதங்களை மட்டுமே நமது நாட்டில் உற்பத்தி செய்யஅந்நிய மூலதனத்தை அனுமதிப்போம்” என்று சொல்லிவந் தார்கள். 

ஆனால் தற்போதைய அரசு உள்நாட்டில் நமது பாதுகாப்புத்துறை தொழிற்சாலைகளில் உற்பத்தி செய்யும் ஆயுதங்களையும் தளவாடங்களையும் அந்நிய நாட்டு கம்பெனிகள் நமது நாட்டில் தொழிற்சாலைகளை நிறுவி உற்பத்தி செய்ய அனுமதித்துள்ளது. 

இது மிகவும் ஆபத்தான முடிவாகும்.2014 நாடாளுமன்றத் தேர்தல் பிரச்சாரத்தின் போது பாஜக மற்றும் மோடி அந்நிய மூலதனத்தை எதிர்த்தும், ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு நாட்டை அந்நிய நாடுகளுக்கும், அந்நிய நாட்டு முதலாளிகளுக்கும் அடகு வைப்பதாக கடும் பிரச்சாரம் செய்தார்கள். ஆனால் இன்று ஆட்சிக்கு வந்தபிறகு அந்நிய நாட்டு கம்பெனிகளுக்கு சிகப்புக் கம்பளம் விரித்து வரவேற்கிறார்கள். 
‘ஸ்வதேசி’ என்று வாய் கிழியப்பேசும் ஆர்எஸ்எஸ் அமைப்பு வாய்மூடி மௌனியாக இருந்து தனது இரட்டை வேடத்தை வெளிப்படுத்துகிறது. 

நாட்டின் மீதும், நாட்டில் பாதுகாப்பு மற்றும் இறையாண்மை மீதும் பற்றும் அக்கறையும் உள்ள அனைவரும் அரசின் முடிவை எதிர்க்கின்றனர். 

அமெரிக்காவிடம் ஒட்டு மொத்தப் பாதுகாப்பையும் திறந்து விடும் மோடி அரசு அமெரிக்கா தனது பாதுகாப்பு பொறுப்பை தன்னிடம் வைத்திருப்பதையும் ராணுவ ஆயுதங்களை தான்தான் தயாரித்து உலக நாடுகளுக்கு விற்பனை செய்கிறது என்பதையும் ஏன் உணரவில்லை.உரைக்கவில்லை?

நமது நாட்டின் பாதுகாப்புத்துறை நிறுவனங்களில் பணிபுரியும் சுமார் 4 லட்சம் ஊழியர்கள் பாதுகாப்புத் துறையில் 100 சதவீதம் அந்நிய நாட்டு மூலதனத்தை அனுமதிக்கும் அரசின் முடிவை எதிர்த்து 24-6-2016 ஆம் நாள் மிகப்பெரிய ஆர்ப்பாட்டமும், ஊர்வலமும் நடத்தி உள்ளனர். 

ஜூலை 11 ஆம் நாள் முதல் துவங்க உள்ள மத்திய அரசு ஊழியர்களின் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் இது பிரதானமான கோரிக்கையாக வைக்கப்பட்டுள்ளது.

எனவே , பாதுகாப்புத் துறை தொழிலாளர்கள் பாதுகாப்புத் துறை தனியார் மயத்தை எதிர்த்தும் மற்றும் பாதுகாப்புத் துறையில் 100 சதவீத அந்நிய மூலதனத்தை எதிர்த்தும் நடத்தி வருகின்ற போராட்டத்திற்கு மீண்டும் இந்தியா அடிமை நாடாக  மாறி விடக் கூடாது என்று ஆவல் கொன்டவர்கள் அனைவரும் ஆதரவளிக்க வேண்டியது நமது தேசியக் கடமை.
முன்பு பிரிட்டன் ,இன்று அமெரிக்கா என்று அடிமை சாசனம் எழுதிய பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசு தன்னை வளப்படுத்திக்கொண்டு இந்தியாவை அடிமை புதை குழியில் தள்ளுகிறது.
இவர்கள் மூதாதையர்கள்தானே பிரிட்டன் ராணிக்கு  பல்லக்கு தூக்கி ராவ்பகதூர்,சர்,திவான்,ஜமீன்தார் பட்டம் பெற்று பாமர மக்களை அன்றும் அடிமைப்படுத்தியவர்கள்.

மீண்டும் அந்த வரலாற்றை திருப்பிக் கொண்டுவருகிறார்கள்.

இத்தாலி ஆள்வதா என்று வீரம் பேசியவர்கள்தான் அமெரிக்காவின் காலடியில் 115 கோடி இந்திய மக்களை பலியாடுகளாக வைத்து  செய்கிறார்கள்.

இவர்கள் பசுவின் மூத்திரத்துக்கு ( கோமியத்துக்கு)தரும் மதிப்பை கூட இந்திய விவசாயிகளுக்கும்,தொழிலாளர்களுக்கும் ஒட்டு மொத்த மக்களுக்கும் தருவதில்லை.
மீண்டும் ஒரு விடுதலைப் போராட்டத்துக்கு இந்திய மக்களை தள்ளி  வருகிறார்கள்.
========================================================================================
இன்று,
ஜூலை-1.
  • இந்திய மருத்துவர்கள் தினம்
  • சோமாலியா விடுதலை தினம்(1960)
  • சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் உருவாக்கப்பட்டது(2002)
  • இந்தியாவுக்கு ஆகஸ்ட் 15ம் தேதி முழு விடுதலை வழங்க பிரிட்டன் நாடாளுமன்றத்தில் முடிவெடுக்கப்பட்டது(1947)
  • ஐரோப்பிய சமூகம் உருவாக்கப்பட்டது(1967)


ஜூலை 1: இந்திய மருத்துவர்கள் தினம் 

ஆண்டுதோறும் ஜூலை 1-ம் தேதி இந்தியாவில் மருத்துவர்கள் தினம் (Doctor's Day) கொண்டாடப்படுகிறது.

பீகார் மாநிலம் பாட்னா அருகே உள்ல பாங்கிபோர் என்ற ஊரில் 1882, ஜூலை 1-ம் தேதி பிறந்தவர் பிதான் சந்திரா ராய் (Dr. Bidhan Chandra Roy). ஏழைகள் மேல் மிகவும் அன்பு கொண்ட பி.சி.ராய், மருத்துவப் பணிக்கே தன்னை அர்ப்பணித்தவர்.
இவர் தேசத் தந்தை மகாத்மா காந்திக்கு நெருக்கமானவாராக இருந்தவர். காந்தியுடன் இணைந்து நாட்டு விடுதலைக்காகவும் போராடியதோடு மட்டுமல்லாது, இந்திய தேசிய காங்கிரஸின் தலைவராகவும் இருந்தார். அத்துடன் மேற்கு வங்க மாநிலத்தின் முதல் அமைச்சராகவும் பொறுப்பு வகித்து மக்கள் சேவையாற்றினார்.
தன் வீட்டையே ஏழைகளுக்கான மருத்துவமனை கட்ட கொடுத்த டாக்டர் பி.சி.ராய், முதல் அமைச்சராக இருந்த காலத்தில்கூட ஏழைகளுக்கு தினமும் இலவச மருத்துவம் செய்தவர்.
இவர், தான் பிறந்த தேதியான (1962-ம் ஆண்டு) ஜூலை 1-ம் தேதியிலே மரணம் அடைந்தார்.
அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகளில் மார்ச் 30-ம் தேதி டாக்டர்கள் தினமாக கொண்டாடப்படுகிறது என்றபோதிலும், டாக்டர் பி.சி.ராயின் நினைவாக இந்தியாவில் மட்டும் ஆண்டுதோறும் ஜூலை 1-ம் தேதி மருத்துவர்கள் தினமாக கொண்டாடப்படுகிறது.
இவரின் பெயரில் சிறப்பாக மருத்துவ சேவை செய்பவர்களுக்கு 1976-ம் ஆண்டு முதல் டாக்டர் பி.சி.ராய் விருது வழங்கப்பட்டு வருகிறது.
மனிதர்களின் ஆரோக்கியம் மற்றும் உயிர் காப்பவர்கள் டாக்டர்கள். ஆனால், அவர்களின் ஆயுள் சராசரி மக்களை விட குறைவாக இருக்கிறது என்கிறது இந்திய மருத்துவக் கழகத்தின் (ஐ.எம்.ஏ) ஆய்வு முடிவு.
இந்தியாவில் மருத்துவர்களின் சராசரி வயது 55 முதல் 59 ஆண்டுகளாக இருக்கிறது. இது பொது மக்களின் ஆயுளை விட 10 ஆண்டுகள் (சாதாரண மக்களின் ஆயுள் 69 முதல் 72 ஆண்டுகள்) குறைவாகும்.
அதிக மன அழுத்தம், உடல் செயல்பாடு குறைந்த சொகுசு வாழ்க்கை, உடற்பயிற்சி இல்லாமை, உடல் பருமன், நீரிழிவு, உயர் ரத்த அழுத்தம்,ஒழுங்கற்ற சாப்பாட்டு வேளைகள் போன்றவை மருத்துவர்களின் ஆயுளைக் குறைத்து வருகிறது.
தங்களுக்காக மட்டுமல்லாது, மற்ற உயிர்களை காப்பாற்றவேண்டும் என்ற பொது நலனும் அடங்கி இருப்பதால், மருத்துவர்கள் தங்களையும் பாதுகாத்துக் கொள்ள வேண்டியது அவசியம்!
========================================================================================