இன்றைய செய்தி,நாளைய வரலாறு. நாளைய வரலாறை படிப்போம்.

வெள்ளி, 1 டிசம்பர், 2017

தயவுசெய்து வாக்களியுங்கள்!குஜராத் தேர்தலில், பாஜக-வின் நிலைமை நாளுக்கு நாள் மோசமாகிக் கொண்டே போகிறது.
சில மாதங்களுக்கு முன்புவரை, தங்களுக்கே வெற்றி என்று இறுமாப்போடு இருந்த பாஜக-வினர், ஜிஎஸ்டி அமலாக்கத்திற்குப் பிறகு, குஜராத்தில் ஏற்பட்டுள்ள கொந்தளிப்பைக் கண்டு அரண்டு போயுள்ளனர்.

மோடி குஜராத்தை சொர்க்கம்போல மாற்றி விட்டார்;
 குஜராத்தை முன்னோடி மாநிலமாக்கி விட்டார்;

குஜராத் மக்கள் மோடிக்கும், பாஜக-வுக்கும் மட்டுமே வாக்களிப்பார்கள் என்று பாஜக-வினர் வெளியே பேசினாலும், உண்மை நிலை அவர்களுக்கு முன்பே தெரிந்து விட்டது.

ஜிஎஸ்டியை கொண்டுவந்து துணிமணிகள் தொழிலையே முடக்கி விட்டதும்,பனமதிப்பிழப்பில் இந்திய தொழிற் துறையில் பல வேலை வாய்ப்பினை பறித்ததும் மற்ற மாநிலங்களை விட அத்தொழிலில் உள்ள குஜராத் அதிகமே பாதித்துள்ளது.


எனவே முந்தைய தேர்தல்களைப் போல, இந்தமுறை இருக்காது

கஷ்டப்பட வேண்டியது இருக்கும் என்று பாஜக தலைவர்கள் கணித்து விட்டனர். எனினும் பணபலத்தையும், அதிகார பலத்தையும் வைத்து அதனை சமாளித்து விடலாம் என்று கணக்கு போட்டனர்.

அதற்கேற்ப தேர்தல் தேதி அறிவிப்புக்கு சில நாட்கள் முன்னதாக, சுமார் 25 லட்சம் விவசாயிகளுக்கு வட்டி இல்லாமல் கடன்கள் வழங்கப்படும் என்று குஜராத் முதல்வர் விஜய் ரூபானி அறிவித்தார். ஆசிரியர்கள், அரசு ஊழியர்களின் சம்பளத்தை உயர்த்தினார்.

அகமதாபாத் புல்லட் ரயில் திட்டம், பழைய - புதிய துவாரகா நகர்களுக்கு இடையே தொங்குபாலம் போன்ற திட்டங்களையும் மோடி துவக்கி வைத்தார்.


ஆனால், இந்த படோடோப கவர்ச்சித் திட்டங்கள் எதுவும் பலனளிக்கவில்லை.பணமதிப்பு நீக்கம், ஜிஎஸ்டி வரி விதிப்பு பாஜக-வுக்கு எதிரியாக மாறியிருக்கிறது.

குஜராத் அரசியலை தீர்மானிப்பவர்களாக இருக்கும் வணிகர்கள்- ஜிஎஸ்டி மூலம் தங்களின் தொழிலில் - வாழ்வாதாரத்தில் பாஜக மண்ணை அள்ளிப்போட்டு விட்டதாக கொந்தளிக்கின்றனர். பண மதிப்புநீக்கம், ஜிஎஸ்டி மூலம் தங்களை மீளமுடியாத துயரத்தில் தள்ளியிருப்பதாக கருதும் அவர்கள், பாஜக-வை தோற்கடித்தே தீருவது என்று துடித்துக் கொண்டிருக்கின்றனர்.


அதற்காக காங்கிரஸ் அல்ல, யாரை வேண்டுமானாலும் ஆதரிக்கத் தயார் என்று முடிவெடுத்து இருக்கின்றனர்.
துவக்கத்தில், படேல் சமூகத் தலைவரான ஹர்திக் படேல், காங்கிரசுக்கு ஆதரவளிப்பதா? வேண்டாமா? என்று குழப்பத்தில் இருந்தார்.

ஆனால், அவர் செல்லும் இடங்களுக்கு எல்லாம் சிசிடிவி கேமிரா வைத்தும், அவரைப் பற்றிய ஆபாச சி.டி. தயாரித்து வெளியிட்டும், ஹர்திக்கிற்கு கோபத்தை ஏற்படுத்தி, வெளிப்படையாக காங்கிரசுக்கு ஆதரவு என்று அறிவிக்கச் செய்து விட்டனர்.

7 சதவிகித வாக்குகளை பிரதிநிதித்துவம் செய்யும் தலித் மக்களின் தலைவர் ஜிக்னேஷ் மேவானி, பிற்படுத்தப்பட்டோர் கூட்டமைப்புத் தலைவர் அல்பேஷ் ஆகியோரும் பாஜக-வை ஒழித்துக் கட்டுவதுதான் தங்களின் முதல் வேலை என்று அறிவித்திருக்கின்றனர்.

மோடியின் பகட்டுக்கு குஜராத் மக்கள் சாக முடியாது என்று அல்பேஷ் மிகக் கோபமாக பேசி வருகிறார்.

ஆம் ஆத்மிக்கு வாக்களிக்காவிட்டாலும் பரவாயில்லை; 
பாஜக-வுக்கு மட்டும் யாரும் வாக்களித்து விடாதீர்கள் என்று தில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் குஜராத் மக்களுக்கு வேண்டுகோள் விடுக்கிறார்.

 “விவசாயிகளுக்கும், வேலையில்லாத இளைஞர்களுக்கும், சிறு வர்த்தகர்களுக்கும் ஏதாவது மோடி செய்வார் என குஜராத் மக்களாகிய நீங்கள் எதிர்பார்த்தீர்கள்; ஆனால், 22 ஆண்டுகளாக அவர் எதையுமே செய்யவில்லை;

நான் இங்கு உங்களுக்கு ரூ. 15 லட்சம் தருவேன் என்று உறுதியளிக்க வரவில்லை; ஆனால், நாங்கள் ஆட்சியில் அமர்ந்தால், தனி ஒருவர் (அதானி) ரூ. 33 ஆயிரம் கோடி பெறமாட்டார் என்று உறுதியளிக்கிறோம். மோடி ஏற்படுத்திய மாயாஜாலம் என்னவென்றால், அது தனி மனிதர் ஒருவரின் (அமித்ஷா மகன் ஜெய்ஷா) ரூ. 50 ஆயிரத்தை ரூ. 80 கோடியாக மாற்றியதுதான். 

அதை நாங்கள் செய்ய மாட்டோம்” என்று கூறிவருகிறார்.


அதையே  ராகுல் காந்தியும் தன்பங்குக்கு பிரச்சாரம் செய்து வருகிறார்.

இவை எல்லாமும் சேர்ந்து, பாஜக-வுக்கு எதிரான ஒரு அலையை குஜராத்தில் ஏற்படுத்தியுள்ளது. அது தற்போது தேர்தல் பிரச்சாரக் களத்திலும் எதிரொலிக்கத் துவங்கியுள்ளது.

பிரதமர் நரேந்திர மோடியின் பொதுக்கூட்டங்கள்கூட ஆட்கள் இல்லாமல் காற்றாடுகின்றன.
நான் மண்ணின் மைந்தன் என்று எதை எதையோ மோடி பேசிப் பார்க்கிறார்.


பாவம், அவரைத் திரும்பிப் பார்ப்பவர்களின் எண்ணிக்கைதான் குறைந்து கொண்டே போகிறது.
குஜராத் மக்களைப் பற்றி கவலைப்படாமல், எதிர்க்கட்சிகளை கடுமையாக விமர்சிப்பதில் மட்டுமே பாஜக-வினர் முன்பு குறியாக இருந்தார்கள்.

இப்போது எதிர்க்கட்சிகளை விட்டுவிட்டு, மக்களை நோக்கி ஓடிக் கொண்டிருக்கின்றனர். பண மதிப்பு நீக்கமும், ஜிஎஸ்டி வரியும் மக்களுக்கு கிடைத்த வரம் என்று பேசிவந்த பாஜக-வினர், இப்போது பாவமன்னிப்பு கேட்கத் துவங்கியுள்ளனர்.

மோடி கைகளை கூப்பியபடி மக்களிடம் வேண்டுகோள் விடுப்பதை போன்ற புகைப்படங்களை வெளியிட்டு, தயவுசெய்து வாக்களியுங்கள், இந்த ஒருமுறை வாக்களியுங்கள், ஜிஎஸ்டி, பணமதிப்பு நீக்க சிரமத்தைப் பொறுத்தருளுங்கள் என்று கெஞ்சத் துவங்கியுள்ளனர்.

நமது வீடு புனரமைக்கப்படும்போது நமக்கு இடையூறு ஏற்படாதா?
தற்போது, நமது நாடு முழுவதும் புனரமைக்கப்படுகிறது; எனவே, பண மதிப்பு நீக்கம், ஜிஎஸ்டி-யைப் பொறுத்துக்கொள்ளுங்கள் என்று போஸ்டர்களை ஒட்டி வருகின்றனர்.

கடைசிக் கட்ட முயற்சியாக, குஜராத்தேர்தலுக்காகவே ஜவுளிக்கான ஜிஎஸ்டிவரியை 18 சதவிகிதத்திலிருந்து 5 சதவிகித மாக குறைத்திருக்கிறார்கள்.


ஜவுளி ஏற்று மதிக்கான சலுகையையும் 2 சதவிகிதம் உயர்த்தி இருக்கிறார்கள். மிகப்பெரிய சலுகைஎன்று அறிவித்து விட்டு, அதன்கீழ் சிறிதாக நிபந்தனைகளுக்கு உட்பட்டது என்று விளம்பரங்களில் போடுவார்கள்.

அதுபோல, சலுகைகள் என்று அறிவித்துள்ள மத்திய அரசு, அது குறிப்பிட்ட காலத்திற்கு மட்டுமேஎன்று சிறிய எழுத்தில் குறிப்பிட்டிருப்பதையும் குஜராத் மக்கள் கவனிக்கத் தவறவில்லை.
இன்னும் சொன்னால், பாஜக வாக்குறுதிகளை நம்ப குஜராத் மக்கள்  தயாரில்லைஎன்றே தெரிகிறது .

"தேனீர் விற்பேன்.நாட்டை காங்கிரசார் போல் விற்க மாட்டேன் "
இதுதான் மோடியின் புது வாக்குறுதி.

இதில் உள்ள இரண்டு பொய்களை காங்கிரசார் குஜராத்திகளிடம் கூறுகின்றனர்.

1.மோடி தேனீர் விற்றதாக ஆதாரம் இல்லை என்று தகவல் உரிமை ஆணையம் பதிலளித்துள்ளது.மோடி தான் தேனீர் விற்றதாக கூறிய ரெயில் நிலையம் அவர் விற்றதாகக் கூறிய காலக்கட்டத்துக்குப் பின்னர்தான் அவ்விடத்தில் அமைக்கப் பெற்றதாக ஆணையம் அறிவித்துள்ளது.

2.நாட்டை காங்கிரஸ் விற்றிருந்தால் இப்போது மோடி எப்படி இந்தியாவுக்கு பிரதமர் ஆனார்?எப்படி அம்பானி,அதானிக்கு நாட்டின் வளங்களை அள்ளி வழங்குகிறார்?

சரியான வாதங்கள்தாம்.மோடி கூட்டம் இவைக்கு என்ன பதில் சொல்லுகிறது?
=========================================================================================

"அழிவி னவைநீக்கி ஆறுய்த் தழிவின்கண் அல்லல் உழப்பதாம் நட்பு"
தீய வழியில் நண்பன் செல்லாமல் தடுப்பதும்,அவனுக்கு துன்பம் வருகையில் 
உடனிருந்து காப்பதும்தான் நட்பு. 

ன்று ,
டிசம்பர் -01.
  • உலக எய்ட்ஸ் தினம்
  • நாகாலாந்து, இந்தியாவின் 16வது மாநிலமானது(1963)
  • இந்தியாவில் எல்லைக் காவல்படை அமைக்கப்பட்டது(1965)
  • விஜயலட்சுமி பண்டிட்  இறந்த  தினம் (1990)
விஜயலட்சுமி பண்டிட், 
மோதிலால் நேரு- - ஸ்வரூப ராணி தம்பதிக்கு மகளாக, 1900ஆக., 18 ல் பிறந்தார். 
முன்னாள் பிரதமர் ஜவகர்லால் நேருவின் உடன்பிறந்த தங்கை.

 'வெள்ளையனே வெளியேறு' இயக்கம் உள்ளிட்ட பல்வேறு சுதந்திர போராட்டங்களில் பங்கேற்று, சிறை சென்றவர்.உ.பி.,யில் நடந்த சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்று, நாட்டிலேயே முதல் பெண் மந்திரியாக பொறுப்பு ஏற்றார்.

இந்தியாவின் துாதுவராக பல நாடுகளிலும், ஐக்கிய நாடுகளின் சபையின் மனித உரிமை ஆணையத்திலும் பணியாற்றியவர். பல கவிதைகள் எழுதியுள்ளார் .

1962 - 64 வரை, மஹாராஷ்டிரா மாநில ஆளுனராக இருந்தார். 

பிரதமர் இந்திரா அமல்படுத்திய, அவசர நிலையை கடுமையாக எதிர்த்ததால், 1977ல் ஜனாதிபதி ஆகும் வாய்ப்பு பறிபோனது.அதன்பின், தீவிர அரசியலில் இருந்து ஓய்வு பெற்றார். 
1990 டிச., 1ல் காலமானார். 
==========================================================================================