இன்றைய செய்தி,நாளைய வரலாறு. நாளைய வரலாறை படிப்போம்.

சனி, 23 டிசம்பர், 2017

தனியார்மயமா தீர்வு?


வராக்கடன் சுமை பற்றி .....,

* பொதுத்துறை வங்கிகளிலுள்ள அரசின் பங்குகளை 33 சதவீதத்திற்கு குறைக்க வேண்டுமென்று தொழிலதிபர்கள் அமைப்பான சி.ஐ.ஐ கோரியுள்ளதே!

ஆமாம். பொதுத்துறை வங்கிகளின் வராக்கடன் சுமையும், மூலதனத் தேவையிலேற்படுகிற மோசமான நெருக்கடியும் தலைப்புச் செய்திகளாக மாறியுள்ளன. ஒரு புறம் அந்நெருக்கடியைச் சமாளிக்க கூடுதல் மூலதன அளிப்பை அரசு தருவதற்கான விவாதம் நடந்தேறுகிறது. 

மறுபுறமோ பொதுத்துறை வங்கிகளைத் தனியார்மயமாக்குவதே தீர்வு என்கிற வாதமும் ஆர்வத்தோடு முன் வைக்கப்படுகிறது.
பொதுத்துறை வங்கிகளில் மெத்தனம், திறமையின்மை, ஊழல் இருக்கிற தென்றும் தனியார் உடமையானால் அது தானாகவே திறமையை, சீரான நிதி நிர்வாகத்தை, திறம்பட்ட செயல்பாட்டைக் கொண்டு வந்து விடும் எனவும் ஓர் கருத்தை முன் வைக்கிறார்கள். ஆனால் இந்திய அனுபவம் அதற்கு மாறானது.

* அது என்ன இந்திய அனுபவம்?

இன்றைய வங்கித் தொழில் நெருக்கடிக்கு முழு முதற்காரணம் தனியார் கார்ப்பரேட் நிறுவனங்களே! வராக்கடன் சுழலில் சிக்க வைத்தவர்களும் அவர்களே! வங்கிகளின் வராக்கடன் 5,50,000 கோடிகளில் 90 சதவீதமானவை அரசு வங்கிகள் தந்த கடன்களே. ஆனால் அதில் கிட்டத்தட்ட 100 சதவீதமும் தனியார்கள் கட்டத்தவறிய கடன்களே.

“ கிரெடிட் சூசி ” வெளியிட்டுள்ள ‘கடன்களின் இல்லம்’ என்ற அறிக்கை இந்திய வங்கிகளின் கடன்கள் பற்றிய ஆழமான ஆய்வைச் செய்துள்ளது. இந்த ஆய்வு ஒன்றைத் தெளிவாகச் சொல்கிறது. “ சந்தை எழுச்சி ” இருந்த காலத்தில் தனியார் பெரும் தொழிலகங்கள் அதீத ஆசையோடு செய்த முதலீடுகளே காரணம் என்பதே அதன் செய்தி.
* யார் யார் இந்நெருக்கடியின் காரண கர்த்தாக்கள்?

உலக நிதி நெருக்கடிக்கு பிந்தைய ஐந்து ஆண்டுகளில் (2007 - 12) இந்தியாவின் மிகப்பெரும் 10 தொழிலகங்கள் கடன் சார்ந்த விரிவாக்கத்தில் ஈடுபட்டது. ஒரு சில பெரிய பெயர்களைச் சொல்லலாம். ரிலையன்ஸ் ஏ.டி.ஏ.ஜி, வேதாந்தா, எஸ்ஸார், ஜெய்பி, லாங்கோ போன்ற நிறுவனங்கள் மின்சாரம், உலோகம், ஆதாரத் தொழில்களில் மெகா முதலீடுகளை செய்தன. 

உள்நாட்டு மொத்த உற்பத்தி விகிதங்களின் வளர்ச்சி விகிதங்கள் நிலைத்து நீடித்து நிற்குமென்ற நம்பிக்கையில் கடன் கிணற்றுக்குள் குதித்தார்கள் . 
அவர்களின் கடன்கள் 1 லட்சம் கோடிகளிலிருந்து 5,50,000 கோடிகளாக ஐந்து மடங்கு உயர்ந்தது. சிலர் அயல் நாட்டு நிறுவனங்களைக் கூட வாங்கினர். உள்நாட்டு வங்கிகளும் “ இந்தியப் பெருமிதம் ” பேசி இத்திட்டங்களுக்கு பணத்தை வாரி இறைத்தன. 

10 தொழிலகங்களின் கடன்கள் மட்டும் மொத்த வங்கிக் கடனில் ஐந்தாண்டுகளில் 6 சதவீதத்திலிருந்து 13 சதவீதமாக வளர்ந்தன.


* அவர்களுக்கு என்ன நேர்ந்தது?

2013 ல் உலகளாவிய பொருளாதார நெருக்கடி உள்நாட்டின் நிதிச்சந்தையையும் நகர முடியாத தேக்கத்தில் கொண்டு வந்து நிறுத்திவிட்டது. ஊழல்களும் இத்திட்டங்களைச் சிதைத்தன. பல திட்டங்கள் ஆரம்ப நிலையிலேயே உயிரை விட்டன.

கடன்களைத் திருப்பிச் செலுத்துவதற்கான வாய்ப்புகள் சுருங்கிப் போய்விட்டதால் கடன் வலைக்குள் சுருண்டுவிட்டன. 2012ல் கடன் வட்டியையாவது செலுத்த முடிகிற நிலைமையில் இருந்த இந்த கார்ப்பரேட் நிறுவனங்கள் மேலும் கடன்களை வாங்கின. 2015 நிதியாண்டில் இது 7.3 லட்சம் கோடிகளைத் தொட்டது. இவை வராக்கடன்களாக மாறிப் போயின.

* இவ்வளவு பெரிய நெருக்கடி இப்போதுதான் தெரிகிறதா?

2013 நிதியாண்டிற்குப் பிறகு சிக்கல் நிறுவனங்களுக்கு கடன் தருவதை நிறுத்தினாலும், கடன் மறுசீரமைப்பு என்ற பெயரால் வராக்கடனைக் குறைத்துக் காண்பிக்கிற நடைமுறைகள் கையாளப்பட்டன. பிறகு ரிசர்வ் வங்கி கொஞ்சம் ஸ்குரூக்களை டைட் பண்ண ஆரம்பித்தது. இதற்குப் பின்னர்தான் நெருக்கடியின் முழுப் பரிமாணம் வெளியில் தெரிய ஆரம்பித்துள்ளது.

ஆனால் மேலோட்டமாக அரசு வங்கிகள் எச்சரிக்கையாக கடன் தந்திருக்க வேண்டும், திட்டங்கள் குறித்து சரியான மதிப்பீடுகளைச் செய்திருக்க வேண்டும் என்று பேசுகிறார்கள். அரசு வங்கிகளின் எச்சரிக்கையற்ற கடன் நிர்வாகம் குற்றம் எனில், அதீதமான நிதி இடர்களை ஆசையின் காரணமாக மேற்கொண்டு இச்சிக்கலுக்கு காரணமாக இருந்த பெரும் தொழிலகங்களும் குற்றவாளிகள் அல்லவா!

* இருந்தாலும் வங்கி உயர்மட்ட நிர்வாகிகளும் பொறுப்பு ஏற்க வேண்டுமே!

அவர்களின் தவறுகளுக்கும் உள்நோக்கங்கள் இருந்திருக்கலாம். பொதுத்துறை வங்கிகளின் தலைவர்கள் அரசியல் நிர்பந்தத்திற்கு ஆளாகியிருக்கலாம். அல்லது கைமாறாக ஏதாவது எதிர்பார்த்திருக்கலாம். ரிசர்வ் வங்கி அதிகாரிகள் தனிப்பட்ட முறையில் பேசும்போது அரசு வங்கிகளின் கடன் முடிவுகளில் அரசியல் தலைவர்களின் தொலைபேசி அழைப்புகள் பெரும் பங்கு வகித்துள்ளன என்பதை ஒத்துக் கொள்கிறார்கள்.

ஆனால் எவ்வளவு அரசியல் தலையீட்டால், எவ்வளவு கையூட்டுக்காக, எவ்வளவு தவறான மதிப்பீடுகளால் என வராக்கடன்களைப் பிரிப்பதற்கு ஆழமான ‘ரேகை’ ஆய்வு தேவைப்படுகிறது.

*தனியார்வங்கிகளின் நிலைமை என்ன?

கார்ப்பரேட்டுகளின் இடர் கடன்களுக்கு தனியார் வங்கிகளும் தப்பவில்லை. ரிசர்வ் வங்கி அவர்களை
நெருக்குகிற வரை இத்தகவல்கள் வெளிவராமல் இருந்தன. மார்ச் 2017 ல் தனியார் வங்கிகளின் கடனிலும் 9.3 சதவீதம் இடர் கடன்களாக மாறியுள்ளது என்ற உண்மை வெளியே வந்துள்ளது. 

ஆக்சிஸ் வங்கி, யெஸ் வங்கி, ஆர்.பி.எல் வங்கி, ஐசிஐசிஐ வங்கி ஆகியன கடந்த சில காலாண்டுகளில் தங்களின் பாரம்பரியக் கடன்கள் பல இடரில் சிக்கியுள்ளதை ஒப்புக் கொண்டுள்ளன. ஏன், அந்நிய நிதி நிறுவனங்களின் கடன்கள் கூட சிக்கலுக்கு ஆளாகியுள்ளதை ரிலையன்ஸ் ஏ.டி.ஏ.ஜி, ஜெய் பிரகாஷ் இண்டஸ்ட்ரீஸ் ஆகியவற்றின் ஆவணங்கள் தெரிவிக்கின்றன.

* அரசு நிறுவனங்கள் வங்கிக் கடன்கள் வாங்கியிருக்குமே!

மின்சாரம், உலோகம், ஆதாரத் தொழில்களில் ஈடுபட்ட தனியார் பெரு நிறுவனங்கள் வராக்கடன் சுமைக்குப் பெரும் காரணங்களாக உள்ளன. ஆனால் இதே ‘சந்தை எழுச்சி’ காலத்தில் (2007- 12) என்.டி.பி.சி, கோல் இந்தியா, என்.எம்.டி.சி, நால்கோ, என்.பி.சி.சி போன்றவை அதிக ஆசைப்படாமல் முதலீடு செய்து வலுவான இறுதிக் கணக்குகளோடு திகழ்கின்றன. 
எனவே தனியார் மயம் நல்ல நிர்வாகத்தைத் தரும் என்பது உண்மையும் அல்ல... நெருக்கடிக்கு தீர்வும் அல்ல...
                                                                                                              - ஆர்த்தி கிருஷ்ணன்
                                                                                                                                                                               ( பிசினஸ் லைனில் )
 "மோசடி கண்காணிப்பு குழு சமர்ப்பித்த அறிக்கையின்படி கடந்த நிதியாண்டில் (2016-17) மட்டும் வங்கிகளுக்கு நிதி மோசடி காரணமாக 16,786 கோடி ரூபாய் வரையில் இழப்பு ஏற்பட்டுள்ளது."
                                                                                                                                         -ரிசர்வ் வங்கி 
=======================================================================================
ன்று,
டிசம்பர்-23.


  • இந்திய விவசாயிகள் தினம்
  • முதல் டிரான்சிஸ்டர் பெல், வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டது(1947)
  • முதல்  சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை நடந்தது (1954)
  • உலகின் இரும்பினாலான மகா  கோபுரமான டோக்கியோ கோபுரம் திறக்கப்பட்டது(1958)
  • கக்கன் இறந்த தினம்.(1981)
  • முன்னாள் பிரதமர் நரசிம்மராவ் இறந்த தினம் (2004)

முதல்  சிறுநீரக மாற்று அறுவை.

1954 - உலகின் முதல் வெற்றிகரமான சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை, பாஸ்டனிலுள்ள ப்ரிகாம் மருத்துவமனையில் செய்யப்பட்டது.
 ஜோசஃப் முர்ரே தலைமையிலான மருத்துவர்கள் குழு இச்சிகிச்சையைச் செய்தது. உடலின் எதிர்ப்புச் சக்தியால் ஏற்படும் விளைவுகளைத் தடுப்பதற்காக, இரட்டையர்களுக்கிடையில் இந்த மாற்றம் செய்யப்பட்டது. ஏனெனில் இதற்கு முந்தைய முயற்சிகளில் உடல் ஏற்காததால், மாற்று சிறுநீரகம் பொருத்தப்பட்டவர்கள் உயிரிழந்தனர். 
இருதயம், இரைப்பை, தமனிகள், சிறுநீரகம் முதலான உறுப்புக்களை இறந்தவர்களின் உடலிலிருந்து மாற்றும் சிகிச்சை எதிர்காலத்தில் சாத்தியமாகும் என்று முதன்முதலில் சிகாகோ பல்கலைக்கழகத்தில் சைமன் ஃப்ளெக்ஸ்னர் என்ற அமெரிக்க ஆய்வாளர் சமர்ப்பித்த ‘நோயியலின் போக்குகள்’ என்ற ஆய்வுக் கட்டுரையில் குறிப்பிட்டிருந்தார்.
சோவியத் அறுவை சிகிச்சை நிபுணர் யூரி வோரோனி, 1933இல் இறந்தவரின் உடலிலிருந்து எடுக்கப்பட்ட சிறுநீரகத்தை ஒரு நோயாளிக்குப் பொருத்தினார். 
ஆனால், அது நோயாளிக்குப் பொருந்தாததால், அவர் 2 நாளில் இறந்தார். 

1950 ஜூன் 17 அன்று இல்லினாய்சில் ஒரு 44 வயதுப் பெண்மணிக்கு மாற்று சிறுநீரகம் பொருத்தப்பட்டது. 
ஆனால், உடலின் நோயெதிர்ப்பு செயல்பாடுகள், மாற்றப்பட்ட சிறுநீரகத்தை வெளிப்புறப்பொருள் என்று கருதி நிராகரிப்பதைத் தடுப்பதற்கான மருந்துகள் அக்காலத்தில் இல்லாததால் 10 மாதங்களுக்குப்பின் அந்தச் சிறுநீரகம் செயலிழந்தது. 
ஆனாலும் தனது பழுதாகாத மற்றொரு சிறுநீரகத்தின் உதவியுடன் அவர் 5 ஆண்டுகள் உயிர் வாழ்ந்தார்.
உயிருடன் இருக்கும் ஒருவரிடமிருந்து சிறுநீரகம் பெற்று மாற்றும் சிகிச்சையை முதன்முதலாக 1952இல் பாரீசிலுள்ள நெக்கர் மருத்துவமனையில் ஜீன் ஹாம்பர்கர் என்ற மருத்துவரால் மேற்கொள்ளப்பட்டது. 
ஆனால், அந்த சிறுநீரகம் 3 வாரத்தில் செயலிழந்தது. 
1954 டிசம்பர் 23இல் முர்ரே செய்ததே முழுமையான வெற்றிபெற்ற சிறுநீரக மாற்று சிகிச்சையாகியது. இதற்கும், இதனைத் தொடர்ந்து ஆற்றிய பணிகளுக்கும், 1990இல் மருத்துவத்துக்கான நோபல் பரிசு ஜோசஃப் முர்ரே-க்கு வழங்கப்பட்டது.
=====================================================================================================================================================================================================================


நாடு முழுவதும் 10பைசாவில் பேசவைத்த ஆ.ராசா கெட்டவர். 
இட்டிலிக்கு வரி போட்ட மோடி நல்லவர்.