மிகப்பெரிய ஊழல்வாதிகள்

தினகரன் வழங்கிய, 20 ரூபாய், 'டோக்கனை' நம்பி ஓட்டளித்த, ஆர்.கே.நகர் மக்கள், பணம் கேட்டு, தினகரன் ஆதரவு பொறுப்பாளர்களை நச்சரித்து வருகின்றனர். 
இதனால், பொறுப்பாளர்களில் பலர் வீடுகளில் தங்காமல், வெளியிடங்களுக்கு ஓட்டம் பிடித்துள்ளனர்.
சென்னை, ஆர்.கே.நகரில், வாக்காளர்களின் ஓட்டுகளை கவர, 20ம் தேதி நள்ளிரவு, ஆர்.கே.நகர் முழுவதும், 20 ரூபாய் நோட்டுகள், 'டோக்கனாக' வழங்கப்பட்டன. 

'தினகரன் வெற்றி பெற்றால், 10 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும்' என, தினகரனின் பொறுப்பாளர்கள் வாக்குறுதியளித்து, அதில் உள்ள சீரியல் எண்களை எழுதி சென்றுள்ளனர். 
ஆர்.கே.நகர் மக்களின் நம்பிக்கைக்கு உரியவராக, தினகரன் இருப்பதால், அவர் பணம் கொடுப்பார் என நம்பி, மக்களும் ஓட்டளித்தனர். 

தினகரன் வெற்றி பெற்றதால், ஆர்.கே.நகர் மக்கள் குஷியில் உள்ளனர். 20 ரூபாய் டோக்கனுக்கு, பணம் கிடைக்கும் என்ற உற்சாகத்திலும் உள்ளனர். 

அத்துடன், பணம் சப்ளை செய்த பொறுப்பாளர்களை, மொபைல் போனில் அழைத்து, '10 ஆயிரம் ரூபாய் எப்போ தருவீங்க?' என, கேட்க துவங்கி உள்ளனர். 

அவர்களில் சிலர், 'இன்று அல்லது நாளை தருவோம்' எனக் கூறி, சமாளித்து வருகின்றனர். 

மற்ற சிலர், வீடுகளில் தங்காமல், மொபைல் போனை, 'சுவிட்ச் ஆப்' செய்து, வெளியிடங்களுக்கு ஓட்டம் பிடித்துள்ளனர். இருப்பினும், தினகரனின் தேர்தல் பொறுப்பாளர்கள் தந்த, 20 ரூபாய் நோட்டை, பொக்கிஷமாக பலர் பாதுகாத்து வருகின்றனர்.

எங்கள் வீட்டில், ஆறு ஓட்டுகள் உள்ளன. 'குக்கருக்கு' ஆதரவாக பிரசாரத்திற்கு போனதால், எங்களுக்கு, அ.தி.மு.க.,வினர், 6,000 ரூபாய் தரவில்லை. ஜெ., விசுவாசியான எங்களுக்கு, பணம் கொடுக்காததால், கோபத்தில் குக்கருக்கு ஓட்டு போட்டோம்.

தினகரன் கண்டிப்பாக, 10 ஆயிரம் ரூபாய் தருவார். 'எப்படியும் நன்றி தெரிவிக்க, ஆர்.கே.நகருக்கு வருவார் என்பதால், அதற்கு முன் பணம் கொடுத்து விடுவோம்' என, அவரின் பொறுப்பாளர் தெரிவித்து உள்ளனர். 

எனவே, இன்று அல்லது நாளைக்குள் பண'ம் வரலாம் என்று பலர் காத்திருக்கின்றனர். 

பணம் வாங்கி வாக்களித்த  இளைஞர்கள் சிலரிடம் அது தவறில்லையா என கேட்டபோது "ஒரு மாற்றத்தை அதாவது  தி.மு.க., - அ.தி.மு.க., அல்லாத ஒருவர் வர வேண்டும் என, எதிர்பார்த்து  குக்கருக்கு தான் ஓட்டு போட்டேன். 
20 ரூபாய் டோக்கனுக்கு, நாளை பணம் கொடுப்பதாக, எங்கள் பகுதி பொறுப்பாளர் தெரிவித்து உள்ளார். பணம் வந்தால், 'லேப் - டாப்' வாங்குவேன்".என்று பெருமையாகக் கூறினார். 

பணத்துக்கு வாக்களித்து விட்டு மாற்றத்தை விரும்பி திமுக,அதிமுகவுக்கு வாக்களிக்காமல் தினகரனுக்கு வாக்களித்ததாக மாணவர் கூறுவது மிகவும் வேடிக்கை,வேதனை.
ஒரு சுயேட்சை வேட்பாளர் வென்று என்ன மாற்றத்தைக்கொண்டுவருவார் என்று மாணவர் எதிர்பார்த்தார்.

அவர் உண்மையில் எதிர்பார்த்தது மாற்றத்தை அல்ல அதிக பணத்தை.லேப்டாப் வாங்க தனது வகை விற்றுள்ளார்.வருங்கால தலைவரான மாணவர்களே பணத்துக்கு வாக்கை கொடுத்து விட்டு மாற்றம்,முன்னேற்றம்,ஊழல் ஒழிய வேண்டும் என்று வீர வசனம் பேசுவது இந்திய அதிலும் முக்கிய தமிழக அரசியல் போக்கை கவலையுடன் பார்க்க வைக்கிறது.வடக்கே மதத்தை காட்டி வாக்குகள் தமிழகத்தில் பணம்.


திமுக-அதிமுக வராமல் மாற்றம் எதிர்பார்ப்பவர்கள் அதிமுகவில் இருந்தவர் அங்கு இன்னமும் ஆட்சியை கைப்பற்ற போராடுபவர் என்ற நிலையில் உள்ள தினகரனுக்கு வாக்களிப்பது மாற்றம் தரும் மனமாற்றமா?

அப்படி பட்ட உண்மை நிலையில் இருந்தால் பணத்தை எதிர்பார்க்காமல் இருக்க வேண்டும்.எத்தனை சுயேட்சைகள்,நாம் தமிழர் என்று போட்டியில் இருந்தனர்.அவர்களில் ஒருவருக்கு வாக்களிப்பதுதானே சரியானதாக இருக்கும்.

ஊழல் பேர்வழி என்று உலகறிந்த பல வழக்குகளை எதிர் கொண்ட தினகரனுக்கு வாக்களித்ததுஅதுவும் பணத்தை ஆயிரக்கணக்கில் வாங்கிக்கொண்டு  மாற்றத்தை கொண்டுவர என்ற வாக்கு மூலம் மிகப்பெரிய ஏமாற்றுத்தனம்.

வாக்குப்பணம் வாங்கிக்கொண்டு வாக்களித்தாக சொல்லும் மக்களை விட இந்த மாற்றம் விரும்பிகள்தான் மிகப்பெரிய ஊழல்வாதிகள்.
அது தினகரனை விட அதிகம்தான் .
=======================================================================================
  ஆழிப்பேரலை அழிவு 
 13-ம் ஆண்டு நினைவு.
 இந்தோனேசியாவில், சுமத்ரா தீவு அருகே 2004ம் ஆண்டு டிசம்பா் 26ம் தேதி அதிகாலை சுமார் 1 மணியளவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் பூமிக்கு கீழே நிலத்தட்டுகள் சரிந்தன. ஆய்வாளர்கள் 10 நிமிடங்கள் வரை இந்த நில நடுக்கம் பதிவாகியுள்ளதாக தெரிவித்தனர். ரிக்டர் அளவுகோலில் 9.1 முதல் 9.3 வரை நிலநடுக்கம் பதிவானது.
இதனால் சுமார் 2.30 லட்சத்திற்கும் அதிகமானோர் உயிரிழந்தனர்.
அன்று  தமிழகத்திலும்  கடலோர மாவட்டங்களை ஆழிப்பேரலை  தாக்கியது. 

சுனாமி தாக்கியதில் இந்தோனேசியா, தாய்லாந்து, மலேசியா, இந்தியா, இலங்கை உள்ளிட்ட 11 நாடுகளில் 2.30 லட்சம் பேர் உயிரிழக்க நேரிட்டது. தமிழகத்தில் சென்னை, கடலூா், வேளாங்கண்ணி, நாகப்பட்டினம், கன்னியாகுமரி உள்ளிட்ட பகுதிகளில் 7 ஆயிரத்திற்கும் அதிகமானோர் உயிரிழந்தனர். இந்தியா முழுவதற்கும் 10 ஆயிரத்திற்கும் அதிகமானோர் என்ன நடக்கிறது என்று அறிவதற்குள் உயிரிழக்க நேரிட்டது.
13 ஆண்டுகளுக்கு முன்னர் இந்தோனேசியா அருகே நிலநடுக்கம் ஏற்பட்ட போது ஆழிப்பேரலைகள் இந்திய கடலோரப் பகுதிகளை வந்தடைய 3 மணி நேரம் ஆனது. 
தற்போது உள்ள நவீன கருவிகள் அப்போது செயல்பாட்டில் இருந்திருக்கும் பட்சத்தில் லட்சக்கணக்கான மக்கள் உயிரிழக்கவும்,பாதிக்கப்படவும் மாட்டார்கள்.. 
2004-ம் ஆண்டில் சுனாமி தாக்கியபோது இந்திய பெருங்கடல் பகுதியில் சுனாமி எச்சரிக்கை கருவிகள் இல்லை. 
இந்தோனேசியா கடல் பகுதியில் இருந்த எச்சரிக்கை கருவியும் செயல்படவில்லை. 
அழிப்பேரலையின் இந்த கொடுரத் தாக்குதலுக்குப் பின்னர்  இந்திய பெருங்கடலோரம் உள்ள நாடுகள் அனைத்தும் எச்சரிக்கை கருவிகளை நிறுவியுள்ளன. 

மேலும் இதன் தாக்கம், இன்றும் மக்கள் மனதை விட்டு அகலவில்லை.
======================================================================================
ன்று,
டிசம்பர்-26.


  • ரேடியம் கண்டுபிடிக்கப்பட்டது(1898)
  • தோழர் நல்லக்கண்ணு பிறந்த தினம் (1925)
  • பண்பலை வானொலி காப்புரிமம் பெறப்பட்டது(1933)
  • சோவியத் ஒன்றியம் கலைக்கப்பட்டது(1991)
  • ஆழிப்பேரலை (சுனாமி) பேரிடர் தினம்(2004)

தோழர் ரா.நல்லக்கண்ணு, 
திருவைகுண்டத்தில், 1925 டிச., 26ல் பிறந்தார். 
தனது  18வது வயதில், இ.கம்யூ., கட்சியில் சேர்ந்தார். அக்கட்சிக்கு தடை விதிக்கப்பட்ட போது, நெல்லையில் சதி வேலையில் ஈடுபட்டதாக, அவர் மீது வழக்கு பதியப்பட்டு, கைது செய்யப்பட்டார். ஏழு ஆண்டுகள் சிறையில் அடைப்பட்டு கிடந்தார்.
நாடு சுதந்திரம் அடைந்த போது விடுவிக்கப்பட்டார். 

சாதிய கொடுமைகளுக்கு எதிராக குரல் கொடுப்பவர். அதற்காக, தன் வாழ்க்கையை சிறையிலும், தலைமறைவு வாழ்க்கையிலுமே கழித்தவர். 
ஆனால் இவரது வயதான  மாமனாரையே   சாதி கலவரத்தில் கொலை செய்து விட்டனர்.

13 ஆண்டுகள், இ.கம்யூ., கட்சியின், மாநில செயலராக பணியாற்றியவர். விவசாய தொழிலாளர் சங்கத் தலைவராக இருந்தார். 
சமூக சேவைக்காக, தமிழக அரசின் அம்பேத்கர் விருது பெற்றவர். 

தனது 80வது பிறந்த நாளில் தனக்கு வழங்கப்பட்ட ஒரு கோடி ரூபாய் நிதியுதவியை அப்படியே கட்சிக்கு வழங்கி விட்டார்.


இவரின் சாதிஒழிப்பு போராட்டங்களை பாராட்டி அரசு அளித்த அம்பேதகர் விருதுடன் கிடைத்த ஒரு லட்சம் ரூபாயில் 50,000 ஐ கட்சி விவசாயிகள் பிரிவுக்கும்,மீதி 50,000ஐ மிக வறுமையில் வாடும் நிவாரணம் கேட்டு கட்சி மூலம் விண்ணப்பித்த தாழ்த்தப்பட்ட விவசாயிகளுக்கும் பகிர்ந்து வழங்கிவிட்டார். 

அப்படி கொடுத்த இவருக்கு சொந்தமாக சிறிய வீடு கூட கிடையாது.தனது மகள் வீட்டிலும்,கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகங்களிலும்தான் தங்குகிறார்.
92 அகவையடையும் தோழர் நல்லக்கண்ணு மனைவி ரஞ்சிதம் கிறிஸ்தவர்.
ஆனால் இவரை மனதை பின்னர் இவரின் கொள்கைபடியே வாழ்ந்தவர்.
தனக்கு பைபிளில் உள்ள கதைகளை அவ்வப்போது தனது மனைவி கூறிவந்ததாக நல்லக்கண்ணு நினைவு கூறுகிறார்.
ரஞ்சிதம் சிலகாலம் முன்னர்தான்  இயற்கையடைந்தார். 
=========================================================================================


இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

2025ல் தங்கம் விலை

வினேஷ் போகத் வென்றார்!

முடிவுக்கு வருகிறதா?