எல்லோரும் கொண்டாடுவோம்.
| “தமிழ்நாட்டை சிகரத்தை நோக்கிப்பயணிக்கச் செய்திருக்கிறது திராவிட மாடல் ஆட்சி” -முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மகிழ்ச்சி!
மணிப்பூரில் இன்றுயாத்திரை தொடங்குகிறார் ராகுல் காந்தி
எல்லோரும் கொண்டாடுவோம்.
தை மாதப் பிறப்பை கிராமங்களில் இன்றும் கூட வருசப் பிறப்பு எனச் சொல்வதுண்டு. தமிழ்ப் புத்தாண்டு என்று கூறும் வழக்கமும் உண்டு.
இதையொட்டியே திருவள்ளுவர் ஆண்டு எனும் தொடராண்டு தமிழ்நாடு அரசால் பின்பற்றப்படுகிறது. கவிஞர் கண்ணதாசன் ‘தைப்பாவை’ எனும் நூலை எழுதி தைப் பிறப்பை போற்றியுள்ளார்.
பல்வேறு திரையிசைப் பாடல்களும் உள்ளன. தை பிறந்தால் வழி பிறக்கும் தங்கமே தங்கம், தங்கச் சம்பா நெல்விளையும் தங்கமே தங்கம் என்றும் தை மாதப் பொங்கலுக்கு தாய் தந்த செங்கரும்ப தள்ளாடி வாடி தங்கம் போலே என்றும் பலவும் மக்கள் காதுகளில் ஒலித்துக் கொண்டுதான் இருக்கின்றன.
பொங்கல் ஒரு பண்டிகை என்பதை விட தமிழர்களின் வாழ்வியல் நடைமுறை என்றே சொல்லலாம். விவசாயப் பெருமக்களின் அறுவடைத் திருநாளான பொங்கல் மூன்று நாட்கள் வெகுவிமர்சையாகக் கொண்டாடப்படுகிறது.
முதல் நாள், உழவுக்கு - வேளாண்மைக்கு மூல காரணமாகத் திகழும் கதிரவனுக்கு நன்றி தெரிவிக்கும் நிகழ்வுதான் பொங்கல் படையல். அதனால்தான் அன்றைய தினம் பொங்கல், வீட்டின் வாசலில் (முற்றத்தில்) வைக்கப்படுகிறது.
உழவுக்கு பயன்படும் மாடுகளுக்குச் செய்யும் மரியாதை தான் இந்தப் பொங்கல். அன்றைய தினம் மாடுகள் மட்டுமின்றி இதர வளர்ப்புப் பிராணிகளான ஆடுகளும், எருமைகளும் கூட குளிப்பாட்டப்பட்டு குங்குமம் இட்டு மலர் மாலைகளோ, பல வண்ண பிளாஸ்டிக் மாலைகளோ அணிவிக்கப்பட்டு பெருமைப்படுத்தப்படும். கொம்புகளுக்கு வண்ணம் தீட்டுவதும், எண்ணெய் போடுவதும் நடக்கும். வேட்டி, துண்டு போன்றவையும் கொம்பு அல்லது கழுத்தில் கட்டப்படும்.
பொங்கல் அவற்றுக்கு படைக்கப்பட்ட பின்பு அவற்றை பொதுத் திடலில் - மந்தையில் அவிழ்த்து விரட்டி விடுவார்கள். அதுதான் மஞ்சு விரட்டு. அதுதான் ஜல்லிக்கட்டாகியது. மறுநாள் காணும் பொங்கல் என்று உறவுகளைப் புதுப்பிக்கும் நிகழ்வு கொண்டாடப்படுகிறது. சுற்றம் சூழ வாழ்வது தான் வாழ்வின் பொது அறம்.
அது தமிழ் மக்களின் வாழ்க்கை நெறியாகவும் உள்ளது. அன்றைய தினம் கடற்கரை, கோவில் உள்ளிட்ட பொது இடங்களில் மக்கள் கூடி மகிழ்வார்கள். புத்துணர்வு பெறுவார்கள்.
இந்த பொங்கல் திருவிழாவுக்காக மக்கள் முந்தைய ஒரு வாரமோ, ஓரிரு நாட்களோ தங்கள் வீடுகளை சுத்தப்படுத்துதல், வெள்ளையடித்தல், வண்ணம் தீட்டுதல் போன்றவற்றை செய்வார்கள்.
இது ஒவ்வோர் ஆண்டும் நடைபெறும் புதுப்பித்தல் பணி. இந்த வேலையின் போது வீடுகளில் ஏற்பட்டுள்ள சின்னஞ்சிறு பழுதுகளை எல்லாம் சரி செய்வதும் நடக்கும். இதையொட்டியே போகி. இன்னும் சொல்வதென்றால் மழை, பனியால் கிராமங்களில் மண் வீடுகளின் சுவர்கள், திண்ணைகள் பாதிக்கப்பட்டிருக்கும். அதைச் சரிசெய்வதே அந்த ஏழை எளிய மக்களின் முக்கியமான வேலையாகிவிடும்.
ஏனென்றால் மற்ற நாட்களில் அவர்கள் இதை கவனிக்க முடியாது. இந்த மராமத்துப் பணிகளும் வண்ணம் அடிக்கும் பணிகளும் நடந்து வீடுகள் புதுப்பொழிவு பெற்றிருக்கும். இதன் அடுத்த கட்டமாக வீடுகளின் வாயில்களில் மாவிலை தோரணம் அல்லது மாவிலை, ஆவாரம் பூ, கண்பீளைப்பூ (கண்வலிப்பூ என்றும் சொல்வார்கள்) கொண்ட ‘காப்பு’ கொத்தை செருகி வைப்பார்கள். வாகனங்களிலும் கூட வைக்கப்படும்.
ஏன் தங்களின் குப்பைக் குழிகளில் கூட வைப்பார்கள்.
இதில் எல்லாம் முக்கியமானது விவசாயிகள் தங்கள் வயல்களில் சனி மூலையில் (வடகிழக்கு) இந்த காப்புக் கொத்தை வைப்பார்கள். அத்துடன் தாங்கள் வழிபடும் கோவில்களிலும் - முன்னோர்களின் புதைகுழியிலும் கூட இந்த காப்புக் கொத்துக்கள் இடம் பெற்றிருக்கும்.
இதிலெல்லாம் முக்கியமானது கரும்பு. வீட்டின் வாசலில் இருபுறமும் அவரவர் வசதிக்கேற்ப ஒன்றிரண்டு கரும்புகளோ, கட்டுகளோ நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும். தங்கள் வீடுகளுக்கு வரும் உறவுகளுக்கும் விருந்தினர்களுக்கும் அவற்றை அன்புடன் வழங்குவார்கள்.
முதலிரண்டு நாட்களும் இனிப்பாகச் செல்லும் பொங்கல் மூன்றும் கிராமத்துப் பாதையில் கறிபுளி புழங்குவார்கள். அதாவது கறி, மீன் போன்ற அசைவ உணவு வகைகளை வெளுத்துக் கட்டுவார்கள். மொத்தத்தில் பொங்கல் திருநாள் தமிழக மக்களின் விழாவாக, சாதி, மத பேதமின்றி அனைவரும் பங்கேற்கும் விழாவாக நடைபெறுகிறது.
ஆனால் சிலர் சனாதன பொங்கல் விழா என்று தற்போது புறப்பட்டிருக்கிறார்கள். பொங்கல் எப்போதும் சமத்துவப் பொங்கலாகத் தான் இருக்கும். இப்போது புதிதாகப் புறப்பட்டிருப்பவர்கள் போகியின் அழிவுகள் போல வரலாற்றின் குப்பைக் கிடங்கில் வீசியெறியப்படுவார்கள்.
தமிழ்நாடு எப்போதும் போல் அமைதியாகவும் இனிமையாகவுமே பொங்கலைக் கொண்டாடும்.
எல்லோரும் கொண்டாடுவோம்.
-ப.முருகன்.