நேரடி கண்காணிப்பு தேவை!
அதானி குழுமம் மீதான ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்க சிறப்பு புலனாய்வுக் குழுவை அமைக்க வேண்டும் என்று போடப்பட்ட மனுவை நிராகரித்திருக்கிறது உச்சநீதிமன்றம். அதானி வழக்கை ‘செபி’ அமைப்பே விசாரிக்கலாம் என்றும் உச்சநீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது. இந்த தீர்ப்பை அதானி வரவேற்று இருக்கிறார்.
“இந்த தீர்ப்பின் மூலமாக உண்மை வெற்றி பெற்றுள்ளது. எங்களுக்குத் துணை நின்ற அனைவர்க்கும் நன்றி. இந்தியாவின் வளர்ச்சிக்கு எங்களது பங்களிப்பு தொடரும்” என்று அதானி தனது மகிழ்ச்சியை வெளியிட்டு இருக்கிறார்.
‘அதானி தவறே செய்யவில்லை’ என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு அளிக்கவில்லை. ‘அவர் மீதான விசாரணையை செபி அமைப்பானது செய்யலாம்’ என்று தான் உச்சநீதிமன்றம் சொல்லி இருக்கிறது. எனவே, உடனடி மகிழ்ச்சி அடைய எதுவும் நடந்து விடவில்லை.விசாரணையின் இறுதி முடிவுகள் வரும் வரை அதானி காத்திருக்கத் தான் வேண்டும்.
‘செபி’ எனப்படுவது இந்திய பங்கு மற்றும் பரிவர்த்தனை வாரியம் ஆகும்.
பங்குச் சந்தைகள், நிதிச் சந்தைகளை ஒழுங்குபடுத்தும் கட்டுப்பாட்டு அமைப்பு ஆகும். 1988 ஆம் ஆண்டு இது உருவாக்கப்பட்டாலும், 1992 ஆம் ஆண்டு தான் ‘செபி சட்டம்’ உருவாக்கப்பட்டது. பங்குச் சந்தைகளை கட்டுப்படுத்தும் அமைப்பாக இது செயல்பட்டாலும் ஒன்றிய அரசின் கட்டுப்பாட்டில் இருக்கும் அமைப்பு தான் இது. ஒன்றிய நிதி அமைச்சக அதிகாரிகள், சட்ட அமைச்சக அதிகாரிகள் இதில் இருப்பார்கள். ஐந்து உறுப்பினர்களை நியமிப்பதும் ஒன்றிய அரசு தான். ரிசர்வ் வங்கி அதிகாரி ஒருவர் இதில் இருப்பார்.
ஒன்றிய அரசின் நிதியில் இருந்து தான் இந்த அமைப்பே செயல்படுகிறது. ஒன்றிய அரசின் மானியத்தில் தான் இது இயங்குகிறது. செபி வாரியத்தின் தலைவரையோ, உறுப்பினர்களையோ எப்போதும் நீக்கும் அதிகாரம் ஒன்றிய அரசுக்கே உண்டு. செபி, தனது ஒவ்வொரு செயலுக்கும் ஒன்றிய அரசின் அனுமதியைப் பெற்றாக வேண்டும்.
முழுக்க முழுக்க ஒன்றிய அரசின் தொங்கு சதையாக இருக்கும் ஒரு அமைப்பு, அதானி மீதான குற்றச்சாட்டை நேர்மையாக விசாரிக்குமா? என்பது சந்தேகத்துக்குரியதே!
அதானி மீதான குற்றச்சாட்டுகளை ஏற்கனவே செபி விசாரித்தது. எந்தத் தவறும் அதானி செய்யவில்லை என்று செபியும் சொல்லி விட்டது. அதே செபி தான் மீண்டும் விசாரிக்க வேண்டும் என்று தீர்ப்பளித்துள்ளது உச்சநீதிமன்றம்.
அதானி மீதான குற்றச்சாட்டுகள் என்பவை தனிப்பட்ட ஒரு தொழில் அதிபர் மீதான குற்றச்சாட்டுகள் அல்ல, தனிப்பட்ட ஒரு தொழில் நிறுவனத்தின் மீதான குற்றச்சாட்டுகளும் அல்ல. அதானி என்பவர், பிரதமர் நரேந்திர மோடியின் இன்னொரு முகமாகப் பார்க்கப்படுகிறார்.
அதனால் தான் அதானி விவகாரத்தை மிக ‘சீரியஸான’ விவகாரமாகப் பார்க்க வேண்டி இருக்கிறது.
காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரான ராகுல்காந்தி இது குறித்து தொடர்ச்சியாக வைத்து வரும் குற்றச்சாட்டுகள் மிகுந்த கவனத்துக்குரியன. “2014 ஆம் ஆண்டு 8 பில்லியன் டாலராக இருந்த அதானியின் சொத்து மதிப்பு இப்போது 140 பில்லியன் ஆனது எப்படி?
2014 ஆம் ஆண்டு உலகப் பணக்காரர்கள் பட்டியலில் 609 ஆவது இடத்தில் இருந்தவர், 2022 ஆம் ஆண்டு இரண்டாவது இடத்தை பிடித்தது எப்படி? விமான நிலையம் என்றாலும் அதானி தான். துறைமுகம் என்றாலும் அதானி தான். இந்தியா முழுக்க அனைத்து மாநிலங்களிலும் அதானி தான். அவர் எந்தத் தொழிலைத் தொடங்கினாலும் நஷ்டம் அடைவது இல்லையே எப்படி?
இவர்கள் இருவருக்குமான உறவு குஜராத் முதலமைச்சராக மோடி இருக்கும் காலத்தில் இருந்து தொடர்கிறது.
முன் அனுபவம் இல்லாதவர்கள் விமான நிலைய மேம்பாட்டுத் திட்டத்தை மேற்கொள்ள இயலாது என்ற விதியைத் திருத்தினார்கள். அதானிக்கு 6 விமான நிலையங்கள் தரப்பட்டன.
இஸ்ரேலுக்கு பிரதமர் செல்கிறார். அவருக்குப் பின்னாலேயே நடந்து அதானி செல்கிறார். உடனே இஸ்ரேல் இந்தியா இடையிலான அனைத்து தொழில்துறை ஒப்பந்தங்களும் அதானிக்கு வந்து விடுகிறது.
இதே போன்று ஆஸ்திரேலியாவுக்கு பிரதமர் செல்கிறார். உடனே மாயமந்திரமாக எஸ்.பி.ஐ. வங்கி அதானிக்கு 1 பில்லியன் டாலர் கடன் வழங்குகிறது.
வங்கதேசத்திற்கு மோடி முதல் முறையாக செல்கிறார். அங்கு மின்விநியோகத்திற்கான திட்டம் முடிவாகிறது. சில நாட்களுக்கு பின் வங்கதேசத்தின் மின்வாரியம் 25 ஆண்டுகளுக்கு மின் விநியோக உரிமையை அதானிக்கு வழங்குகிறது. 1500 மெகாவாட் மின்சார ஒப்பந்தம் அதானிக்கு கிடைக்கிறது.
இலங்கை செல்கிறார்.ஜூன் 2022ல் இலங்கை காற்றாலை மின்உற்பத்தி உரிமத்தை அதானிக்கு வழங்க வேண்டும் என மோடி அழுத்தம் கொடுப்பதாக ராஜபட்சே சொன்னார்.
இதுதான் உங்கள் வெளியுறவுக் கொள்கை. இது இந்திய வெளியுறவுக் கொள்கை அல்ல. அதானியின் வெளியுறவுக்கொள்கை” - என்று குற்றச்சாட்டுகளை பகிரங்கமாக வைத்து வருகிறார் ராகுல்காந்தி.
அதற்கும் இதுவரை அதிகாரப்பூர்வ பதில் இல்லை.
அதானி பதில் சொல்ல வேண்டிய குற்றச்சாட்டுகள் அல்ல இவை, பிரதமர் பதிலளிக்க வேண்டியவை இவை. இதுவரை பதில் அளிக்கவில்லை.
நாடாளுமன்றமே முடங்கிக் கிடந்தது. அதைப் பற்றி பா.ஜ.க. கவலைப்படவில்லை. நாடாளுமன்றக் கூட்டுக்குழு விசாரணை நடத்தப்பட்டிருக்க வேண்டும். ஒன்றிய அரசே முன்வந்து சிறப்பு குழு விசாரணையை அமைத்திருக்க வேண்டும்.
பா.ஜ.க.விடம் இதனை நாம் எதிர்பார்க்க முடியாது. இப்போதும் காலம் கடந்துவிடவில்லை, சிறப்பு குழு விசாரணையை அமைத்து தன்னை பா.ஜ.க. நிரூபித்தாக வேண்டும்.
அதானி விவகாரத்தை ‘செபி’ விசாரிக்கலாம் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது. ‘செபி’ நேர்மையாக விசாரிக்க வேண்டும். நேர்மையாக விசாரிக்குமா என்று சொல்ல முடியாது.
ஆனால், உச்சநீதிமன்றம் ‘செபி’யை நம்புகிறது. இவ்வளவு நம்பிக்கை வைக்கும் உச்சநீதிமன்றமானது, ‘செபி’யைக் கண்காணிக்க வேண்டும். இந்த விசாரணையானது உச்சநீதிமன்றத்தின் நேரடி கண்காணிப்பில் நடைபெற வேண்டும்.
கற்பழிப்பாளர்களை விடுவித்தது தவறு!
குஜராத் மாநிலத்தில் கடந்த 2002-இல் நடைபெற்ற கோத்ரா ரயில் எரிப்பு சம்பவத்தைத் தொடா்ந்து ஏற்பட்ட மதக் கலவரத்தில், ஐந்து மாத கா்ப்பிணியான பில்கிஸ் பானு, வன்முறையாளா்களால் கூட்டு பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கப்பட்டாா்.
பானுவின் மூன்று வயது பெண் குழந்தை உள்பட அவரது குடும்ப உறுப்பினா்கள் 7 போ் அந்தக் கலவரத்தில் கொல்லப்பட்டனா்.
தண்டனை காலம் நிறைவு பெறுவதற்கு முன்பாகவே இந்தச் சம்பவத்தோடு தொடா்புடைய குற்றவாளிகள் 11 போ் கடந்த ஆண்டு ஆகஸ்ட் 15-ஆம் தேதி சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டனா்.
இந்நிலையில், இந்த வழக்கின் இறுதி விசாரணை உச்ச நீதிமன்ற நீதிபதிகள் பி.வி.நாகரத்னா, உஜ்ஜல் புயான் ஆகியோா் அமர்வில் அக்டோபர் மாதம் தொடங்கியது.
அப்போது, மன்னிக்க முடியாத இது போன்ற குற்றச் செயலில் ஈடுபட்டவா்களை முன்கூட்டியே விடுவிப்பது தவறான செய்தியை சமூகத்தில் விதைப்பதாக ஆகும் என சிபிஐ தெரிவித்தது.
பில்கிஸ் பானு என்ற பெண்ணை கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்து, அவரது குடும்பத்தினரை கொலை செய்த குற்றவாளிகளை குஜராத் அரசு விடுவித்ததை எதிர்த்து தொடரப்பட்ட மனுக்கள் மீதான இறுதி விசாரணை நிறைவு பெற்ற தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டிருந்தது.
தீர்ப்பில், குற்றவாளிகளை விடுதலை செய்து குஜராத் அரசு பிறப்பித்த உத்தரவு ரத்து செய்யப்படுவதாக உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
பில்கிஸ் பானு கூட்டு பாலியல் வன்கொடுமை வழக்கில், குற்றவாளிகளுக்கு விதிக்கப்பட்ட தண்டனையைக் குறைக்க குஜராத் அரசுக்கு அதிகாரமில்லை என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
பில்கிஸ் பானு கூட்டு பாலியல் வன்கொடுமை வழக்கில் தண்டனை பெற்ற குற்றவாளிகளை முன்விடுதலை செய்து குஜராத் அரசு பிறப்பித்த உத்தரவு ரத்து செய்யப்படுவதாகவும், இந்த மேல்முறையீட்டு வழக்கு விசாரணைக்கு உகந்ததுதான் என்றும் உச்ச நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது.