சி.ஏ.ஏ.
பழனிசாமியின் ஓரங்க நாடகம்!
தனது நாற்காலியைக் காப்பாற்றிக் கொள்ள சிறுபான்மைச் சமூகத்துக்குத் தொடர்ந்து துரோகம் இழைத்து பா.ஜ.க.வின் பாதம் தாங்கியாகச் செயல்பட்ட பழனிசாமி, இப்போது சிறுபான்மையினரின் காவலராகக் காட்ட முயற்சித்து தனது துரோக நாடகத்தின் அடுத்த அத்தியாயத்தை நடத்திக் காட்டி வருகிறார்.
“அ.தி.மு.க. சிறுபான்மையினரை அரண் போல காத்து வருகிறது. அ.தி.மு.க. ஆட்சியில் சிறுபான்மையினருக்கு எதிரான நடவடிக்கைகள் இரும்புக் கரம் கொண்டு அடக்கப்பட்டன.
இசுலாமியர்களுக்காக நிறைய திட்டங்களைத் தீட்டி இருக்கிறோம். நாட்டு மக்களுக்காக சூழ்நிலை கருதிபா.ஜ.க.வுடன் கூட்டணி வைத்தோம். இனி பா.ஜ.க.வுடன் அ.தி.மு.க. கூட்டணிவைக்காது. கூட்டணி வேறு, கொள்கை வேறு என்பதில்உறுதியாக இருக்கிறோம். கூட்டணியில் இருந்து வெளியே வந்த போதிலும்முதலமைச்சர் ஸ்டாலின் அவர்கள், அ.தி.மு.க.வையும் பா.ஜ.க.வையும் தொடர்புபடுத்திப் பேசி வருகிறார்.
எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலிலும், சட்டமன்றத் தேர்தலிலும் பா.ஜ.க.வுடன் கூட்டணி இல்லை என்று திட்டவட்டமாகஅறிவிக்கிறேன். சிறுபான்மை மக்கள் அ.தி.மு.க.வுக்கு ஆதரவு தர வேண்டும்”- இதுதான் எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநாட்டில் பழனிசாமி பேசியது ஆகும்.
இனி வருங்காலத்தில் பா.ஜ.க.வுடன் கூட்டணி இல்லை என்று சொல்லிக் கொள்ளும் பழனிசாமி, அந்த மாநாட்டில் பா.ஜ.க.வை விமர்சித்து ஏதாவது பேசினாரா என்றால் இல்லை. சிறுபான்மையினர் நடத்தும் மாநாட்டில் கலந்து கொண்ட பழனிசாமி, சிறுபான்மை இனத்துக்கு பா.ஜ.க. செய்த துரோகங்களைப் பட்டியல் போட்டாரா என்றால் இல்லை.
மொத்தமும் தி.மு.க.வையும் முதலமைச்சரையும், கழக ஆட்சியையும்தான் விமர்சித்துப் பேசி விட்டு, ‘பா.ஜ.க.வுடன் கூட்டணி இல்லை’ என்பதை மட்டும் சொல்லி சிறுபான்மை இனத்தை ஏமாற்றப் பார்த்திருக்கிறார்.
பா.ஜ.க.வுடன் கூட்டணி இல்லை என்று சொல்வது பழனிசாமியின் தற்காலிக நாடகங்களில் ஒன்று.
சிறுபான்மையின வாக்குகளை உடைப்பதற்காக பா.ஜ.க.வால் உருவாக்கப்பட்ட சதிச் செயலின் பிரதிநிதிதான் பழனிசாமி என்பதைஅ.தி.மு.க.வினரே அறிவார்கள். உள்ளார்ந்த ஈடுபாட்டுடன் பா.ஜ.க.வுடன் கூட்டணிஇல்லை என்ற முடிவை எடுத்திருந்தால் அவர் பா.ஜ.க.வை விமர்சித்திருக்க வேண்டும்.
பா.ஜ.க.வின் தொங்கு சதையான பழனிசாமி அந்தக் காரியத்தை எப்படிச் செய்வார்?
சூழ்நிலை கருதி பா.ஜ.க.வுடன் கூட்டணி வைத்தாராம்?
என்ன சூழ்நிலை?
மக்களுக்காக கூட்டணி வைத்தாரா?
தனது நாற்காலியைக் காப்பாற்றிக் கொள்வதற்காக பா.ஜ.க.வின் பாதம் தாங்கினார். பா.ஜ.க. செய்த செயல்கள்அனைத்தையும் கைகட்டி வரவேற்றார்.
குடியுரிமை திருத்தச் சட்டத்தை ஆதரித்ததைவிட அவர் சிறுபான்மையினருக்கு இழைத்த பெரிய துரோகம் வேண்டுமா?
மாநிலங்களவையில் குடியுரிமைச் சட்டத்துக்கு ஆதரவாக வாக்களித்தவர்கள் :–
அ.தி.மு.க. எம்.பி.க்கள்:
1. SR பாலசுப்பிரமணியன்
2. N சந்திரசேகரன்
3. A முகமது ஜான்
4. AK முத்துக்கருப்பன்
5. A நவநீதகிருஷ்ணன்
6. R சசிகலா புஷ்பா
7. AK செல்வராஜ்
8. R. வைத்திலிங்கம்
9. A. விஜயகுமார்
10. விஜிலா சத்யநாத்
பா.ம.க. எம்.பி.:
11. அன்புமணி ராமதாஸ்
-– இவர்களால்தான் சிறுபான்மையினருக்கு எதிரான குடியுரிமைச் சட்டம் மாநிலங்கள் அவையில் நிறைவேறியது.
அதாவது ஆதரித்தவர்கள் 125 பேர். எதிர்த்து வாக்களித்தவர்கள் 105 பேர்.
அன்புமணி மற்றும் அந்த10 அ.தி.மு.க. எம்.பி.க்களின் ஓட்டுதான் குடியுரிமைச் சட்டம் நிறைவேறக் காரணம்.
அந்த 11 பேரும் எதிர்த்து வாக்களித்திருந்தால்
ஆதரவு 125–-11=114 ஆக குறைந்திருக்கும்.
எதிர்ப்பு 105+11=116 என்று உயர்ந்திருக்கும்.
எதிர்த்தவர்கள் 116 பேர் என்றும்
ஆதரித்தவர்கள் 114 பேர் என்றும் வந்திருக்கும். குடியுரிமைச் சட்டம் தோற்கடிக்கப்பட்டிருக்கும்.
116 க்கும் 114 என்ற கணக்கில் CAA சட்டம் தோற்கடிக்கப்பட்டிருக்கும். இந்தப் பித்தலாட்டத்தைச் செய்த பழனிசாமி தான் இன்று சிறுபான்மையர்க்கு ஆதரவாக நாடகம் ஆடுகிறார்.
குடியுரிமைச் சட்டமானது இசுலாமியர் உள்ளிட்ட சிறுபான்மை யினரையும், ஈழத்தமிழர்களையும் மட்டுமல்ல; இங்குள்ள தமிழர்களுக்கும் அச்சுறுத்தல் ஏற்படுத்தப்போகும் சட்டம் என்பதால் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் தி.மு.க. சார்பில் கடுமையாக எதிர்க்கப்பட்டது.
மாபெரும்போராட்டங்கள் நடத்தப்பட்டன. மக்களிடம் கையெழுத்து இயக்கம் நடத்தப்பட்டது.கோடிக்கணக்கான கையெழுத்துக்களுடன் குடியரசுத் தலைவரையே சந்தித்துவழங்கப்பட்டது.
அப்போது பழனிசாமி என்ன சொன்னார்? ‘யாருமே பாதிக்கப்படவில்லையே’ என்று கேட்டார். சட்டமன்றத்தில் 2021 பிப்ரவரி 20 ஆம் தேதி, குடியுரிமைச் சட்டத்துக்கு ஆதரவாக பெரிய வகுப்பு எடுத்தார் பழனிசாமி.
ஆட்சி மாறியது. 2021 செப்டம்பர் 8 அன்று, ‘நாட்டின் ஒற்றுமையையும் ஒருமைப்பாட்டையும் கேள்விக்குறியாக்கும் ஒன்றிய அரசின் குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை திரும்பப் பெற வேண்டும்’ என்று சட்டமன்றத்தில் தனித் தீர்மானத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் கொண்டு வந்தார்கள்.
இந்த தனித் தீர்மானத்தை சட்டமன்றத்துக்குள் இருந்து அ.தி.மு.க. ஆதரித்திருக்க வேண்டும். அல்லது தீர்மானத்தை எதிர்த்திருக்க வேண்டும். இரண்டையும் செய்யவில்லை. வேறு ஒரு காரணத்தைச் சொல்லி முன்னதாகவே வெளிநடப்பு நாடகத்தை நடத்தி வெளியேறி விட்டார்கள்.
இதுதான் இவர்கள் பா.ஜ.க.வை எதிர்க்கும் லட்சணம்.
‘ஓ.பன்னீர்செல்வம் இருந்து பா.ஜ.க.வை ஆதரிக்க கட்டாயப்படுத்தினார்’ என்பது உண்மையானால், இப்போது தான் பன்னீர்செல்வம் தனியாகப் போய்விட்டாரே.
அதன்பிறகும் ஏன் குடியுரிமைச் சட்டத்தை எதிர்க்கத் தயங்கினார் பழனிசாமி?
ஏனென்றால், இப்போது நடத்துவதும் பா.ஜ.க. போட்டுத் தந்த ‘ஓரங்க நாடகம்’ தான் என்பதால்!
முரசொலி(12.01.24)