மணல் வீடு
48 ஆண்டுகளுக்குப் பிறகு கால்வாயில் செல்லும் தண்ணீர் - தமிழ்நாடு அரசுக்கு விவசாயிகள் நன்றி.
செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து வெளியேற்றப்படும் நீரின் அளவு குறைப்பு!
மணல் வீடு
தமிழ்நாடு ஆளும் தி.மு.க. அரசுக்கு களங்கம் ஏற்படுத்த முடியுமா என்று பார்க்கிறது பா.ஜ.க. அரசு. அதற்கு அமலாக்கத் துறையைப் பயன்படுத்துகிறது.
இரண்டு ஆண்டில் ரூ.4 ஆயிரத்து 730 கோடிக்கு மணல் எடுப்பில் முறைகேடு நடந்துள்ளதாக, வாய்க்கு வந்த ஒரு எண்ணிக்கையை நீதிமன்றத்தில் தாக்கல்செய்துள்ளதுஅமலாக்கத்துறை.
இரண்டு ஆண்டுகளுக்கு முன்னால் அந்த ஆற்றில் எவ்வளவு மணல் இருந்தது, இப்போது எவ்வளவு எடுக்கப்பட்டது என்று அவர்கள் எப்படிக் கணக்கிட்டார்கள்?
ஆற்று மணலையே எண்ணும் வித்தை பா.ஜ.க. அரசுக்குதான் இருக்கிறது.
ரூ.4 ஆயிரம் கோடி, ரூ.5 ஆயிரம் கோடி என்று கட்டமைக்க நினைக்கிறார்கள். இப்படிச் சொல்லி விட்டு ஆதாரங்களைத் தேடப் போகிறார்களாம்.
இதன் பிறகுதான் மாவட்ட ஆட்சியர்களிடம் விசாரணை நடத்தப் போகிறார்களாம்? மாவட்ட ஆட்சியர்களிடம் விசாரணை நடத்துவதற்கு முன்னால் ரூ.4730 கோடி என்று எந்தக் கணக்கை வைத்துச் சொன்னார்கள்?
சொல்கிறார்கள்?
இந்த மாதிரியெல்லாம் மிரட்டல் விடுப்பது பா.ஜ.க.வின் தந்திரங்களில் ஒன்று. அதை பலமுறை பார்த்திருக்கிறோம்.
2016 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் பா.ஜ.க. தனித்து போட்டியிட்டது. அப்போது பா.ஜ.க.வுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்ய பா.ஜ.க. அகில இந்தியத் தலைவர் அமித்ஷா தமிழகம் வந்தார்.
பட்டுக்கோட்டையில் 2016 மே 4-ஆம் தேதி பிரச்சாரம் மேற்கொண்ட போது, ‘‘அ.தி.மு.க. ஆட்சியில் ரூ.20 ஆயிரம் கோடி ரூபாய்க்கு மணல் கொள்ளை நடந்துள்ளது. பாலில் ஊழல் செய்ய முடியும் என்று நிரூபித்த மாநிலம் தமிழகம்தான்’’ என்றார்.
அ.தி.மு.க. ஆட்சியின் 20 ஆயிரம் கோடி ரூபாய் மணல் கொள்ளையை மையமாக வைத்தே தமிழக பா.ஜ.க. நிர்வாகிகளும் பிரச்சாரம் செய்தார்கள். அதே அ.தி.மு.க.வுடன் கூட்டணிக்கு வவ்வால் மாதிரி தொங்கியதும் பா.ஜ.க.தான். 20 ஆயிரம் கோடிக்கு ஏதாவதுவழக்குப்போட்டிருக்கிறார்களா?
நடவடிக்கை எடுத்திருக்கிறார்களா? என்று தேடிப் பார்த்தால் ஏமாந்து போவீர்கள்!
2016 ஏப்ரல் 17-ஆம் தேதி பா.ஜ.க.வின் பேஸ்புக் பக்கத்தில், ‘’தாது, மணல், கிரானைட் மாஃபியாக்களால் தமிழகத்திற்கு ரூ.2.5 லட்சம் கோடி இழப்பு’’ என பிரச்சாரம் செய்யப்பட்டது. கடந்த ஏழு ஆண்டு காலத்தில் என்ன நடவடிக்கை எடுத்தார்கள். எதுவுமில்லை.
2011 – 2021 பத்தாண்டு அ.தி.மு.க. ஆட்சியில் பொதுப்பணித் துறையை வைத்திருந்தவர்கள்தான் பன்னீர்செல்வமும் பழனிசாமியும். இவர்கள் இருவரையும் இடம் வலமாக வைத்து மேடையில் உட்கார்ந்து இருந்தவர்தான் பிரதமர் மோடி. இவர்கள் இருவரையும் சமாதானப்படுத்தி மீண்டும் அவர்கள் தோளில் பயணம் செய்யக் காத்திருக்கும் கட்சிதான் பா.ஜ.க.
எடப்பாடி பழனிசாமி ஆட்சியில் அமைச்சராக இருந்த விஜயபாஸ்கர் குடும்பத்தினர் புதுக்கோட்டை மாவட்டத்தில் குவாரி தொழில் நடத்தினார்கள்.
2017 ஏப்ரலில் விஜய பாஸ்கருக்குச் சொந்தமான 35 இடங்களில் வருமானவரித் துறை ரெய்டு நடத்தியது. அதில், புதுக்கோட்டையில் இருந்த விஜயபாஸ்கருக்கு வேண்டப்பட்ட குவாரிகளும் தப்பவில்லை.
குவாரிகளில் கற்கள் வெட்டி எடுக்கப்பட்டதில் விதிகளை மீறிப் பல லட்சம் கன மீட்டர் அளவுக்குக் கற்கள் வெட்டப்பட்டது எல்லாம் வெளிச்சத்துக்கு வந்தது. கல்குவாரியில் மத்திய பொதுப்பணித்துறை அதிகாரிகள் ஆய்வு நடத்திய போது பல ஆயிரம் கோடி ரூபாய் இழப்பை ஏற்படுத்தும் விதத்தில், அனுமதிக்கப்பட்டதைவிட நான்கு மடங்கு கற்களை வெட்டி எடுத்த விஷயத்தை வருமானவரித் துறை கண்டுபிடித்தது.
கல்குவாரியில் மட்டுமே விதிகளை மீறி 500 கோடி ரூபாய்க்கு மேல் பணத்தைக் குவித்ததாகப் புகார் எழுந்தது. சட்டத்துக்குப் புறம்பாக மணலை அள்ளி வழுதப்பட்டி ஆற்றையே கபளீகரம் செய்துவிட்டதாக குற்றச்சாட்டு படிக்கப்பட்டது.
ஆனால், அந்த விஜயபாஸ்கர் மீது இந்த 6 ஆண்டுக் காலத்தில் சட்டவிரோத பணப் பரிமாற்றத்திற்காக அமலாக்கத் துறை சிறு துரும்பைக்கூடக் கிள்ளிப் போடவில்லை.
2017--ல் நடந்த ரெய்டுக்குப் பிறகு விஜயபாஸ்கரின் நிலங்களையும் வங்கிக் கணக்குகளையும் வருமானவரித்துறை முடக்கியது. அதனை எதிர்த்து விஜயபாஸ்கர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்.
2022 டிசம்பரில் இந்த வழக்கு நீதிபதி அனிதா சுமந்த் முன்பு விசாரணைக்கு வந்த போது,“விஜயபாஸ்கருக்குச் சொந்தமான குவாரிகளில் அளவுக்கு அதிகமான கற்கள் எடுக்கப்பட்டிருக்கின்றன.
ஆனால், குறைவாகவே கணக்குக் காட்டி வரி ஏய்ப்பு நடத்தியிருக்கிறார். குட்கா, குவாரி நிறு வனங்களிடமிருந்து மொத்தம் ரூ.87.90 கோடி லஞ்சமாகப் பெற்றிருக்கிறார்.
அதற்கான எல்லா ஆதாரங்களும் விஜயபாஸ்கர் வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில் கண்டுபிடிக்கப்பட்டன. அதனால்தான் சொத்துகள் முடக்கப்பட்டன’’என வருமானவரித் துறை சொன்னது. குட்கா, குவாரி நிறுவனங்களிடம் இருந்து லஞ்சம் வாங்கியதாக வருமானவரித் துறையே ஒப்புக் கொண்ட பிறகும் விஜயபாஸ்கர் மீது நடவடிக்கை எடுக்கவில்லை. அப்படியே தான் கிடக்கிறது வழக்கு.
குட்கா வழக்கில் சி.பி.ஐ. வழக்கு நடத்துவதற்கும் - மற்ற ஊழல் வழக்குகளில் லஞ்ச ஒழிப்புத் துறை விசாரணை நடத்துவதற்கும் அனுமதி தராமல் ‘சனாதனி’ ஆளுநர் ரவி என்ன இழுப்பு இழுத்தார் என்பதும் அனைவருக்கும் தெரியும்.
இத்தகையவர்கள்தான் ரூ.4 ஆயிரத்து 730 கோடி என்று மணல் வீடு கட்டுகிறார்கள்.
-------------------------------------