புதன், 12 ஆகஸ்ட், 2015

விண்டோஸ் 10

மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் விண்டோஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டம் வரிசையில் புதிய பதிப்பாகவும், இதுவே இறுதி பதிப்பு என்றும் கூறப்படும் விண்டோஸ் 10 ஆப்பரேட்டிங் சிஸ்டம் ஜூலை 29ஆம் தேதி இந்தியா உட்பட உலகின் 190 நாடுகளில் ஒரே நேரத்தில் இணையதளம் மூலம் வெளியானது.
 விண்டோஸ் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ அனுமதியுடன் விண்டோஸ் 7, விண்டோஸ் 8, விண்டோஸ் 8.1 ஆப்பரேட்டிங் சிஸ்டம் பயன்படுத்தும் கணினிகள் மற்றும் விண்டோஸ் 8.1 ஸ்மார்ட்போன்களை வைத்திருப்பவர்கள் விண்டோஸ் 10 பதிப்பில் உள்ள அனைத்து நவீன தொழில்நுட்ப வசதிகளையும் இலவசமாக தரம் உயர்த்திக் கொள்ளலாம். 
இந்த ஆப்பரேட்டிங் சிஸ்டத்திற்கு உங்கள் கணினியை மேம்படுத்திக் கொள்ள நீங்கள் விரும்பினால், உங்கள் இணைய இணைப்பு 3 ஜிபி அளவுள்ள கோப்பினை தரவிறக்கும் வகையில் இருக்க வேண்டும்.
வேறு இடத்தில் உள்ள கணினிக்கு நிறுவுவதாக இருந்தால் பென்டிரைவிலோ அல்லது ஐளுடீ கோப்பாக டிவிடியில் பதிந்து எடுத்துச் சென்று அப்டேட் செய்து கொள்ளலாம்.
அப்டேட் செய்ததிலிருந்து 30 நாட்கள் வரை விண்டோஸ் 10 இயங்குதளத்தைப் பயன்படுத்தி பார்த்து, பிடித்திருந்தால் தொடரலாம். 
இல்லையென்றால் மீண்டும் பழைய விண்டோஸ் பதிப்பிற்கே மாறிக் கொள்ளலாம். பழைய பதிப்பிற்கு மாற நினைப்பவர்கள் 30 நாட்களுக்குள்ளாக மாறிக் கொள்ளவேண்டும், இல்லையென்றால் முந்தைய பதிப்பின் பேக்கப் ஃபைல்கள் அழிக்கப்பட்டுவிடும்.
விண்டோஸ் 10 
விண்டோஸ் 10 முன்னோட்டப் பதிப்பில் கொடுக்கப்பட்ட வசதிகளுடன் கூடுதலாக சில வசதிகளும் சேர்த்து வழங்கப்பட்டுள்ளன.
 விண்டோசின் அடையாளமாக விளங்கிய ஸ்டார்ட் மெனு மீண்டும் இணைக்கப்பட்டுள்ளது. 
இதில் அப்ளிகேஷன்களை பின் செய்து இணைக்கவும், நீக்கவும் வசதியளிக்கப்பட்டுள்ளது.இண்டர்நெட் எக்ஸ்புளோரருக்கு பதிலாக எட்ஜ் பிரௌசர் இணைக்கப்பட்டுள்ளது. கூகுள் குரோம் பிரௌசரை நினைவுபடுத்தும் விதமாக அதே தோற்றத்துடன் இந்த பிரௌசர் அமைந்துள்ளது. 
எட்ஜ் பிரௌசர் பிடிக்காவிட்டால் உங்களுக்குப் பிடித்த வேறு பிரௌசரை டிஃபால்ட் பிரௌசராக மாற்றிக் கொள்ளலாம்.விண்டோஸ் 10ல் கொடுக்கப்பட்டுள்ள மற்றொரு வசதி கார்டெனா (ஊடிசவயயே) குரல்வழிக் கட்டளைகள் மூலம் உதவியாளர் போல கையாளும் வசதி சேர்க்கப்பட்டுள்ளது. இது தற்போது அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ், ஸ்பெயின், ஜெர்மனி, சீனா, இத்தாலி ஆகிய 7 நாடுகளில் மட்டுமே பயன்பாட்டிற்கு வந்துள்ளது.
ஆட்டோமேடிக் அப்டேட் வசதி இருந்தாலும், தேவையான கோப்பினை மட்டும் தேர்ந்தெடுத்து மேம்படுத்திக் கொள்ளவும் வசதி செய்யப்பட்டுள்ளது.விண்டோஸ் வழங்கும் ஆன்லைன் சேமிப்பு வசதியான ஸ்கை டிரைவிற்கு உங்கள் கோப்புகளை நேரடியாக அப்லோட் செய்யவும் டவுண்லோட் செய்யவும் அப்ளிகேஷன் இணைக்கப்பட்டுள்ளது. 
இதன்மூலம் விண்டோஸ் கணினி மற்றும் மொபைல் சாதனங்களில் கோப்புகளை பயன்படுத்துவது எளிதாகும்.விளையாட்டுப் பிரியர்களுக்காகவே எக்ஸ் பாக்ஸ் செயலியும் இதனுடன் இணைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் ஒரு சிறந்த கேமிங் அனுபவத்தை பெறலாம். சாதாரண கணினியை மட்டுமின்றி தொடுதிரை வசதியிலும் கையாளும் வகையில் இயங்குதளம் வடிவமைக்கப்பட்டுள்ளது.பாஸ்வேர்டு கொடுக்காமல் கணினியைத் திறக்கும் ஹலோ வசதி இணைக்கப்பட்டுள்ளது. இவ்வசதியைப் பயன்படுத்த இன்ஃபிராரெட் மற்றும் கேமரா வசதியுள்ள லேப்டாப், ஸ்மார்ட்போன்கள் தேவை.
இதன் மொபைல் பதிப்பில் ஒரே நேரத்தில் நான்கு அப்ளிகேசன் வரை பயன்படுத்தலாம். அத்துடன் பின்புலத்தில் இயங்கிக் கொண்டிருக்கும் புரோகிராம்களை பார்க்கும் வசதியும் உள்ளது.ஆக்சன் சென்டர் என்று கொடுக்கப்பட்டுள்ள வசதி உங்களுக்கு வரும் மின்னஞ்சல், செயலிகளில் வரும் நோட்டிபிகேஷன்களை ஒருங்கிணைத்துக் காட்ட அமைக்கப்பட்டுள்ளது.
டேப்ளட் மற்றும் கணினிகளில் ஒரே மாதிரியாக தோற்றம் தரும் வகையில் அதன் டெஸ்க்டாப் அமைக்கப்பட்டுள்ளது. இது பயன்படுத்துபவருக்கு எளிமையானதாக இருக்கும் என்று விண்டோஸ் கூறுகிறது.
பல்வேறு வகை வசதிகளுடன் தற்போது அறிமுகமாகியிருந்தாலும் விண்டோஸ் 10 எந்த அளவிற்கு முழுமையான பயன்பாட்டிற்கு வரும் என்பதை ஒரு சில மாதங்களுக்குப் பிறகே தெரியவரும்.
விண்டோஸ் 10 ஆப்பரேட்டிங் சிஸ்டம் இன்ஸ்டால் செய்திடத் தயாராக உள்ள நிலையில், பலர், விண் 10 பதிந்த பின்னர், அதன் இயக்கம் பிடிக்கவில்லை என்றால், முன்பு இருந்த விண்டோஸ் 8 அல்லது விண்டோஸ் 7க்குப் பின் நோக்கிச் செல்ல முடியுமா? என்று அறிய விரும்புகின்றனர். சிலர், அந்த வசதி இருந்தால் மட்டுமே, விண் 10 சிஸ்டத்தை இன்ஸ்டால் செய்திடவும் விரும்புகின்றனர். 
நீங்கள் விண்டோஸ் 8 அல்லது 7லிருந்து அப்கிரேட் வழியில், விண்டோஸ் 10 சிஸ்டத்தினை இன்ஸ்டால் செய்திருந்தால், மீண்டும் விண்டோஸ் 8 அல்லது விண் 7 சிஸ்டத்தினை மீண்டும் பெறலாம். மீண்டும் விண் 8 வேண்டும் என்றால், அதற்கும் வழி தரப்பட்டுள்ளது. இதில் ஒன்றை நினைவில் கொள்ள வேண்டும். நீங்கள் இதற்கு முன் எந்த விண்டோஸ் சிஸ்டத்தினைப் பயன்படுத்தினீர்களோ, அதற்குத்தான் மீண்டும் செல்ல முடியும். 
விண் 7லிருந்து, விண் 10 அப்கிரேட் செய்தவர்கள், விண் 7க்குச் செல்லலாம். இதற்கு ஸ்டார்ட் மெனு திறந்து, Settings என்பதனைத் தேர்ந்தெடுக்கவும். இங்கு “Update & security” என்ற ஐகானில் கிளிக் செய்து, அதில் “Recovery” என்பதனைத் தேர்ந்தெடுக்கவும். இங்கு “Go back to Windows 7″ அல்லது “Go back to Windows 8.1″ என்ற ஆப்ஷன் தரப்பட்டிருப்பதைப் பார்க்கலாம். 

இதனைத் தேர்ந்தெடுத்து Get started என்ற பட்டனில் அழுத்தினால், விண்டோஸ் 10 நீக்கப்பட்டு, முன்பு உங்கள் கம்ப்யூட்டரில் பயன்படுத்தி வந்த விண்டோஸ் சிஸ்டம் இன்ஸ்டால் செய்யப்படும். இதற்கு முன்னர், மைக்ரோசாப்ட், “ஏன் பழைய விண்டோஸ் சிஸ்டத்திற்கு மாறுகிறீர்கள்?” என்ற கேள்வியைக் கேட்கும். உங்கள் புதிய சிஸ்டத்தினைப் பிடிக்காமல் போனதற்கான காரணத்தை விளக்கமாகத் தரவும். பின்னூட்டமாக மைக்ரோசாப்ட் எடுத்துக் கொள்ளும். 
இது எப்படி செயல்படுகிறது? என்ற வினா உங்களுக்கு எழலாம். விண்டோஸ் 10 சிஸ்டம் உங்கள் கம்ப்யூட்டரில் இன்ஸ்டால் செய்திடுகையில், அது உங்களின் பழைய விண்டோஸ் சிஸ்டம் செட்டிங்ஸ் குறித்த தகவல்களை “C:\Windows.old” என்ற போல்டரில் போட்டு வைக்கிற்து. இதனை பைல் எக்ஸ்புளோரர் மூலம் நீங்கள் பார்க்கலாம். ஆனால், அதனை மாற்றுவதோ நீக்குவதோ கூடாது. அதிலிருந்து பைல்களை எடுத்துப் பயன்படுத்தலாம்.
பொதுவாக, உங்கள் பழைய விண்டோஸ் சிஸ்டத்தின் ஒவ்வொரு பைலையும், புதிய சிஸ்டம் எடுத்து வைக்கும்போது, கம்ப்யூட்டர் ஹார்ட் டிஸ்க்கில் நிறைய இடம் எடுத்துக் கொள்ளப்படும். 
இதனைக் காண Disk Cleanup செயலியை இயக்கி, எவ்வளவு இடம் இதற்கெனப் பயன்படுத்தப் பட்டுள்ளது எனப் பார்க்கலாம். ஸ்டார்ட் பட்டன் கிளிக் செய்து அங்கு “Disk cleanup” என டைப் செய்து தேடவும். பின் அதனை இயக்கி, “Clean up system files” என்ற பட்டனை அழுத்தலாம். இங்கு கிடைக்கும் பட்டியலில் 'Previous Windows installation(s)” என்ற ஒரு பிரிவு இருக்கும். இதன் ப்ராப்பர்ட்டீஸ் பார்த்தால், பழைய சிஸ்டம் பைல்களுக்கு எவ்வளவு இடம் எடுத்துக் கொள்ளப்பட்டது என்று தெரிய வரும். நீங்கள் பழைய விண்டோஸ் சிஸ்டத்திற்குப் போவதில்லை என்ற முடிவினை எடுத்தால், டிஸ்க் கிளீன் அப் செயலி மூலம், இவற்றை நீக்கிவிடலாம். ஆனால், ஒருமுறை நீக்கிவிட்டால், மீண்டும் பழைய சிஸ்டம் கிடைப்பது கடினம். 
இனி, எப்படி, விண் 10லிருந்து, பழைய விண்டோஸ் சிஸ்டத்திற்குப் போகலாம் என்று பார்ப்போம். உங்களுடைய கம்ப்யூட்டரில் ஏற்கனவே, விண்டோஸ் 8.1 அல்லது விண்டோஸ் 7 பயன்படுத்தப்பட்டு வந்திருந்தால் இதனைச் செயல்படுத்தலாம். இந்த சிஸ்டம் அதற்கெனத் தரப்பட்ட ப்ராடக்ட் கீயுடன் உங்கள் கம்ப்யூட்டரில் பதியப்பட்டிருக்கும். பழைய விண்டோஸ் சிஸ்டத்திற்கு செல்வதற்கு, புதிய கம்ப்யூட்டர் ஒன்றில், விண்டோஸ் சிஸ்டம் எவ்வாறு முழுமையாகப் பதியப்படுகிறதோ, அது போல செயல்படுத்த வேண்டும். 
இதற்கென, அதிர்ஷ்டவசமாக, மைக்ரோசாப்ட் விண்டோஸ் 7 மற்றும் விண்டோஸ் 8.1 சிஸ்டங்களுக்கான ஐ.எஸ்.ஓ. பைல்களைத் தன் இணைய தளத்தில் தரவிறக்கம் செய்திடத் தருகிறது. இந்த இன்ஸ்டலேஷன் பைலைத் தரவிறக்கம் செய்திடவும். இதனை ஒரு டிவிடி அல்லது யு.எஸ்.பி. ட்ரைவில் அமைத்திட, Microsoft's Windows USB/DVD download tool என்ற மைக்ரோசாப்ட் டூலைப் பயன்படுத்தவும். 

பின்னர், அந்த யு.எஸ்.பி. அல்லது டிவிடியைப் பயன்படுத்தி, கம்ப்யூட்டரை பூட் செய்திடவும். பின்னர், அந்த சிஸ்டத்தினை மீண்டும் இன்ஸ்டால் செய்திடக் கட்டளை கொடுக்கவும். ஏற்கனவே உள்ள, விண்டோஸ் 10ன் மீதே இதனைப் பதிவு செய்திடவா என்று கேட்கப்படும். அதற்கு ஓகே கிளிக் செய்திட்டால், பழைய சிஸ்டம் மீண்டும் பதியப்படும். ஆனால், அதற்கு முன்னால், விண்டோஸ் 10 சார்ந்த முக்கிய பைல்களுக்கான பேக் காப்பி எடுத்து வைத்துக் கொள்ளவும்.
முன்னதாக, உங்கள் பழைய சிஸ்டத்தின் ப்ராடக்ட் கீயினை நகலெடுத்து வைத்திருக்க வேண்டும். உங்கள் டெஸ்க்டாப் கம்ப்யூட்டர் கேபின் அல்லது லேப் டாப் கம்ப்யூட்டரின் பின்புறத்தினை ஆய்வு செய்தால், இந்த கீ கிடைக்கலாம். சில லேப் டாப் கம்ப்யூட்டரில், அதில் பயன்படுத்தப்படும் பேட்டரியில் அல்லது அது வைக்கப்படும் இடத்தில் “certificate of authenticity” இருக்கும். அதில் இந்த கீ தரப்பட்டிருக்கும். அல்லது விண்டோஸ் எக்ஸ்புளோரர் சென்று, அதில் சி ட்ரைவிற்கு மேலாக, கம்ப்யூட்டர் என இருப்பதில், ரைட் கிளிக் செய்து, கிடைக்கும் மெனுவில், ப்ராப்பர்ட்டீஸ் தேர்ந்தெடுத்தால், காட்டப்படும் கூறுகளில், இறுதியாக ப்ராடக்ட் கீ காட்டப்படும். அதனை அப்படியே ஸ்கிரீன் ஷாட் ஆக எடுத்து வைத்துக் கொண்டு பயன்படுத்தலாம். 
நீங்கள் விண்டோஸ் 8 கொண்ட பெர்சனல் அல்லது லேப்டாப் கம்ப்யூட்டர் பயன்படுத்தி வந்திருந்தால், இந்த ப்ராடக்ட் கீக்கு வேலையே இல்லை. இந்த கீ, கம்ப்யூட்டரின் ஹார்ட்வேர் பகுதி ஒன்றில், நீக்கமுடியாதபடி பதியப்பட்டிருக்கும். விண்டோஸ் 8.1. அதனைத் தானாகக் கண்டறிந்து பயன்படுத்திக் கொள்ளும். 
இங்கு ஓர் எச்சரிக்கையினைத் தர விரும்புகிறேன். இது போல, பின்னோக்கி, பழைய விண்டோஸ் சிஸ்டத்திற்கு வர விரும்பினால், விண்டோஸ் 10 இன்ஸ்டால் செய்து ஒரு மாத காலத்திற்குள் வர வேண்டும். ஏனென்றால், விண்டோஸ் 10 பதியப்பட்ட பின் ஒரு மாத காலத்திற்குத்தான், பழைய விண்டோஸ் போல்டரில் பைல்கள் வைக்கப்பட்டிருக்கும். பின்னர், அவை நீக்கப்படும். மேலும், நீங்களாக C:\Windows.old போல்டரை நீக்கி இருந்தாலும், பழைய சிஸ்டத்திற்குச் செல்ல முடியாது.
நீங்கள், புதிய பெர்சனல் கம்ப்யூட்டர் ஒன்றை விண்டோஸ் 10 சிஸ்டத்துடன் வாங்கி இருந்தால், அதிலிருந்து விண்டோஸ் 8 அல்லது விண்டோஸ் 7 செல்வது கடினம். இதனை, விதிகளுக்குட்பட்டு மேற்கொள்வதாக இருந்தால், விண்டோஸ் 8 அல்லது விண்டோஸ் 7 லைசன்ஸ் கீ ஒன்று கட்டணம் செலுத்திப் பெற்றுத்தான் இதனை மேற்கொள்ள முடியும். அப்போது தரப்படும் ப்ராடக்ட் கீயினை, இன்ஸ்டால் செய்திடுகையில் தர வேண்டியதிருக்கும். 
எப்போது, நாம் விண் 10லிருந்து, முந்தைய சிஸ்டத்திற்குச் செல்ல விரும்புவோம். 
அன்றாடம் நாம் பயன்படுத்தும் புரோகிராம்கள், புதியதாக அமைக்கப்பட்ட விண்டோஸ் 10 சிஸ்டத்தில் செயல்படவில்லை என்றாலோ, அல்லது வேறுவிதமாகச் செயல்படத் தொடங்கினாலோ, நாம் பழைய சிஸ்டத்திற்கு மாறத் தொடங்குவோம். அல்லது முக்கியமான ஹார்ட்வேர் சாதனம் ஒருங்கிணைந்து செயல்படாமல் போனாலும் நாம் பழைய சிஸ்டத்திற்கு மாறிக் கொள்ள விரும்புவோம். 
மேலே காட்டப்பட்ட வழிகள் மூலம், எப்போது வேண்டுமானாலும், பழைய சிஸ்டத்திற்குச் செல்லலாம். மீண்டும் விரும்பினால், விண்டோஸ் 10 ஐ இன்ஸ்டால் செய்திடலாம். இலவசமாகவே இன்ஸ்டால் செய்திடலாம். ஆனால், எல்லாம் ஓர் ஆண்டு கால 
அவகாசத்திற்குள் மேற்கொள்ளப்பட வேண்டும். 
அதன் பின்னர், கட்டணம் செலுத்த வேண்டும்.
========================================================================
இன்று,
ஆகஸ்ட்-12.
  • சர்வதேச இளைஞர்கள் தினம்
  • சிகாகோ நகரம் அமைக்கப்பட்டது(1833)
  • நியூசிலாந்து சுயாட்சி பெற்றது(1853)
  • எக்கோ 1 என்ற முதலாவது தொலைத்தொடர்பு செய்மதி ஏவப்பட்டது(1960)
  • ஐசக் சிங்கர் தனது தையல் இயந்திரத்திற்கான காப்புரிமம் பெற்றார்(1851)
14-3-3 ஜீட்டா' 

 உடல் பருமனுக்கான மரபணுவை, விஞ்ஞானிகள் கண்டறிந்து சாதனை படைத்துள்ளனர். இந்த ஜீனுக்கு '14-3-3 ஜீட்டா' என பெயரிடப்பட்டுள்ளது.
உடல் பருமன் நோயால், உலகம் முழுவதும் பல்லாயிரக்கணக்கான மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். உடல்பருமனுக்கான ஜீன் குறித்து ஆராய்ச்சி மேற்கொண்ட கனடாவிலுள்ள பிரிட்டிஷ் கொலம்பியா பல்கலை., விஞ்ஞானிகள், கொழுப்பை சேகரித்து உடல் பருமனை அதிகரிக்கும் ஜீனை கண்டுபிடித்துள்ளனர். 
இதற்கு '14-3-3 ஜீட்டா' என பெயரிடப்பட்டுள்ளது.


எலிகளின் மீது விஞ்ஞானிகள் நடத்திய சோதனையில், '14-3-3 ஜீட்டா' ஜீனை கட்டுப்படுத்துவதன் மூலம், 50 சதவீத வௌ்ளை கொழுப்பு அளவு குறைவதை கண்டறிந்தனர். 
இந்த கொழுப்பு, உடல்பருமன், இதய நோய், நீரிழிவு போன்றவற்றுடன் தொடர்புடையது. இச்சோதனையை, அதிக உடல் எடை கொண்ட எலிகளின் மீது நடத்திய போது 22 சதவீத கொழுப்பு குறைந்துள்ளது.

இச்சோதனையின் மூலம், இந்த குறிப்பிட்ட ஜீனை முடக்குவதால் உடல் பருமனை கட்டுப்படுத்தலாம் என விஞ்ஞானிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
========================================================================