சனி, 1 ஆகஸ்ட், 2015

"ஹால்மார்க்'

தங்கம் வாங்கப் போகிறவர்கள் ‘ஹால்மார்க்’ முத்திரை இருந்தால் தரமானது எனத் தைரியமாக வாங்குகிறார்கள். 
சாதாரண மக்களுக்கு ‘ஹால்மார்க்’ முத்திரை பற்றியெல்லாம் அதிகம் தெரிவதில்லை. அதனால் ரூ.15,000க்கும் குறைவாக தங்கம் வாங்குபவர்களிடம் ‘ஹால்மார்க்’ முத்திரையிடப்பட்ட வணிகம் 10 சதவீதத்திற்கும் கீழேதான் உள்ளது. 
ஆனால் ரூ.50,000க்கும் அதிகமான மதிப்புள்ள தங்கம் வாங்குபவர்கள் 80 சதவீதம் ‘ஹால்மார்க்’ முத்திரையிடப்பட்டதையே வாங்குகிறார்கள்.ஆனால் உலகத் தங்க கவுன்சில் ஜூலை 30, 2015 அன்று வெளியிட்டுள்ள அறிக்கை ‘ஹால்மார்க்’ முத்திரையிடல் தங்க ஆபரணங்களின் துhய்மையை முழுமையாக உறுதி செய்ய முடியாது எனக் கூறியிருக்கிறது.
மத்திய நுகர்வோர் நலன் அமைச்சகத்தின் கீழுள்ள இந்தியத் தரக் கட்டுப்பாட்டுக் கழகம் (க்ஷஐளு) வடிவமைத்துள்ள தர நிர்ணயத்தின் அடிப்படையிலேயே ‘ஹால்மார்க்’ சான்றிதழ் வழங்கப்படுவதால் மக்களிடம் நம்பிக்கை உள்ளது.
தற்போது இந்தியாவில் அங்கீகரிக்கப்பட்ட தரக் கட்டுப்பாட்டு மையங்கள் 399 உள்ளன. அதில் தமிழகத்திலேயே அதிகமான மையங்கள் (57) உள்ளன. 
கேரளாவில் 39 உள்ளன. 36 மாநிலம், யூனியன் பிரதேசங்களில் 12ல் இத்தகைய மையங்களே இல்லை. 60 சதவீதமான நிறுவனங்கள் 20 நகரங்களிலேயே உள்ளன. 
இப்படிக் குவியலாக இருப்பதால் கடும்போட்டி நிலவுவதாக அவ்வறிக்கை கூறுகிறது.அவ்வறிக்கை எழுப்பும் சந்தேகம் அதிர்ச்சிகரமானது. “
சில நகைக் கடை அதிபர்கள் தங்களது உறவினர்களை, நண்பர்களை இத்தகைய மையங்களை தங்களின் கடைகளுக்கு அருகிலேயே திறக்கச் செய்து ‘ஹால்மார்க்’ முத்திரையிடலுக்கு வழிவகுத்துக் கொள்கிறார்கள் என்ற ஐயம் உள்ளது” என்கிறது.
எனவே தர நிர்ணய அளவுகோல்கள் ஒழுங்காகக் கடைப்பிடிக்கப்படாமல் போவதும், தரமற்ற தங்கத்தை ‘ஹால்மார்க்’ முத்திரையை நம்பி நுகர்வோர் வாங்குவதுமான நிலைமை ஏற்படுகிறது.‘
ஹால்மார்க்’ முத்திரை நிறுவனங்கள் தரமற்ற உபகரணங்கள், மெத்தன நடைமுறைகள், லாபகரமின்மை ஆகியவற்றால் திணறும்போது முறைகேடுகளுக்கு இடம் ஏற்படுகிறது என உலக தங்க கவுன்சிலின் இந்தியப் பிரிவின் நிர்வாக இயக்குநர் பி.ஆர்.சோமசுந்தரம் (இந்து பிஸினஸ் லைன் - 31.7.2015) தெரிவித்துள்ளார்.
இந்தியாவின் சாதாரண மக்கள் பலரும் கொஞ்சம் கையில் பணம் சேர்ந்தால் குண்டுமணித் தங்கத்தையாவது வாங்கி வைக்கிறார்கள். இந்திய இல்லங்களில் உள்ள தங்கம் 22,000 டன்கள். ஒவ்வோர் ஆண்டும் 800 முதல் 1000 டன் வரை தங்க நுகர்வு உள்ளது. 
600 டன்கள் நகைத் தயாரிப்பில் ஈடுபடுத்தப்படுகின்றன. சான்றிதழ் பெற்ற தங்கத்தின் தரம் பற்றியே சந்தேகம் எழுமென்றால், சான்றிதழ் பெறாத தங்கம் பற்றி என்ன முடிவுக்கு வருவது?
தங்க விலைச் சரிவு - அந்நிய செலாவணி இருப்பிலும் தாக்கம்
தங்கம் விலைகள் குறைந்தாலும் உலக நாடுகளின் மத்திய வங்கிகள் தங்கத்தின் மீது வைத்துள்ள நம்பிக்கை மங்குவதில்லை. உலகப் பொருளாதாரத்தில் தங்கத்திற்கு உள்ள தனி இடமே அதற்கு காரணம்.உலக நாடுகளின் அந்நியச் செலாவணி கையிருப்புகளில் (இந்தியா உட்பட) அமெரிக்க டாலருக்கு குறிப்பிடத்தக்க இடம் உண்டு. 
ஆனால் அமெரிக்க அந்நியச் செலாவணி கையிருப்பில் 74 சதவீதம் (8000 டன்) தங்கமாகவே உள்ளது. ஜெர்மனி (68 சதம்), இத்தாலி (67 சதம்), பிரான்ஸ் (64 சதம்) என தங்கத்தையே அந்நியச் செலாவணிக் கூடையில் அதிகமாக வைத்துள்ளன. ரஷ்யாவில் (13 சதம்), இந்தியா (6 சதம்), சீனா (2 சதம்) ஆக தங்கக் கையிருப்பு உள்ளது.
டிசம்பர் 2012ல் ஒரு அவுன்ஸ் தங்கம் 1700 டாலர்களாக இருந்தது. ஜூலை 17, 2015 அன்று ஒரு அவுன்ஸ் தங்கம் 1100 டாலர்களுக்கு குறைந்துள்ளது. 
தங்கத்தின் விலை சரிவு இந்திய அந்நியச் செலாவணி கையிருப்பின் மதிப்பையும் சரித்துள்ளது. டிசம்பர் 2012ல் 28 பில்லியன் டாலர் மதிப்பில் இருந்த தங்கக் கையிருப்பு ஜூலை 2015ல் 20 பில்லியன் டாலருக்கும் கீழாக உள்ளது.
இன்னும் இறங்குமா?
செப்டம்பர் 2011ல் தான் தங்கத்தின் விலை உச்சத்தில் - ஒரு அவுன்ஸ் தங்கம் 1900 டாலர் - இருந்தது. ஜூலை22, 2015ல் ஐந்தாண்டில் இல்லாத சரிவாக 1080 டாலருக்கு வீழ்ந்துள்ளது. 1000 டாலருக்கு கீழே போகாது என்கிறார்கள். காரணம் “அது சுரங்கத்திலிருந்து எடுப்பதற்கு ஆகிற செலவு” என்கிறார் பிரபல தங்க நிறுவனத்தின் (ஜியோஜித்) டைரக்டர் சி.பி.கிருஷ்ணன். ஏற்கனவே 1130 டாலர் முதல் 1230 டாலர் வரை விலைகள் இருந்தபோது நிறைய “காளை வணிகர்கள்” தங்கத்தை வாங்கிக் குவித்துள்ளனர். அவர்கள் தங்கத்தின் விலை தங்களின் ரேஞ்சுக்கு வந்தவுடன் விற்பதற்கு முனைவார்கள். 
எனவே அப்போது மீண்டும் விலைச் சரிவுக்கான சூழ்நிலை ஏற்படும் என கணிக்கப்படுகிறது .
========================================================================
இன்று .
ஆகஸ்ட்-01.
  • உலக தாய்ப்பால் வாரம் துவக்க தினம்
  • உலக சாரணர் தினம்
  • லெபனான் ராணுவ தினம்
  • சுவிட்சர்லாந்து தேசிய தினம்(1291)
  • இந்திய விடுதலை போராட்ட வீரர் பால கங்காதர திலகர் இறந்த தினம்(1920)
                             ஸ்டாலினின் குடிநீர் கேட்டுப்போராடடத்தில் சரியான கூட்டமாமே ?
  • =======================================================================