எந்த " க்ளவ்ட் "சேவை சிறந்தது?





இணைய சேவையில் இயங்கும் ஒவ்வொரு நிறுவனமும், தன் பயனாளர்களுக்கு, க்ளவ்ட் சேவையின் மூலம் அவர்களின் பைல்களைத் தேக்கி வைக்க இடம் அளித்து வருகிறது. 
அவ்வப்போது, தேக்கும் இடத்தின் அளவினை அதிகரிப்பதன் மூலமும், வேறு சில கூடுதல் வசதிகளைத் தருவதன் மூலமும், தங்கள் வாடிக்கையாளர்களைத் தங்களிடமே தக்க வைத்துக் கொள்ள முயற்சி செய்கின்றன. 
புதிய பயனாளர்களைக் கவரவும் இந்த வழிகளைப் பயன்படுத்துகின்றன. எனவே, தற்போது கிடைக்கும் க்ளவ்ட் சேவைகளில், எந்த நிறுவனத்தின் க்ளவ்ட் சேவை சிறந்தது? 
தற்போதைய சூழ்நிலையையும், க்ளவ்ட் சேவை நிலைகளையும் இங்கு ஒப்பிட்டுப் பார்க்கலாம்.
“எனக்கு எது சிறந்த க்ளவ்ட் சேவை?” என்ற கேள்விக்கான பதில் உங்களிடம் தான் உள்ளது. 
உங்களுக்கு பைல்களைத் தேக்கி வைக்க எவ்வளவு இடம் தேவை மற்றும் எந்த அளவில் பாதுகாக்கப்பட வேண்டிய பைல்களுக்கு இடத்தைத் தேடுகிறீர்கள் என்பவற்றைப் பொறுத்தே இதற்கான பதில் கிடைக்கும். 
நிதி பரிமாற்றம், மக்கள் நலத்துறை சார்ந்த பிரிவுகள் ஆகியவற்றில் நீங்கள் செயல்படுபவராக இருந்தால், உயர்ந்த பாதுகாப்பான நிலையில் தேக்குவதற்கான இடம் அளிக்கும், கட்டண சேவையே உங்களுக்கு உகந்தது.
நீங்கள் ஒரு நுகர்வோராக இருந்து, அல்லது ரகசிய தகவல்களைக் கையாளாத, ஏதேனும் ஒரு நிறுவனத்தில் பணியாற்றுபவராக இருந்தால், உங்களைப் பொறுத்தவரை எளிமையாகக் கையாளக் கூடிய வசதி, குறைந்த கட்டணம், அதிக தேக்ககத்திற்கான இடம் ஆகியவை பாதுகாப்பினைக் காட்டிலும் முன்னிலை தர வேண்டிய விஷயங்களாக இருக்கும். 
இருப்பினும், க்ளவ்ட் ஸ்டோரேஜ் என்று வருகையில், நம் பைல்கள் சுருக்கப்பட்டு தேக்கப்படுவதும், இடத்தின் அளவுமே முக்கியமான அம்சங்களாகக் கருதப்படுகின்றன. 
இந்த வகையில், தனிப்பட்ட நபர் பயன்பாட்டிற்கும், வர்த்தக நிறுவனப் பயன்பாட்டிற்குமான க்ளவ்ட் ஸ்டோரேஜ் குறித்து இங்கு பார்க்கலாம். 
தற்போது நமக்குக் கிடைக்கும் ஐந்து க்ளவ்ட் ஸ்டோரேஜ் வசதிகளை இங்கு ஒப்பிட்டுக் காணலாம்.

ட்ராப் பாக்ஸ், ஒன் ட்ரைவ் மற்றும் கூகுள் ட்ரைவ்அதிக வசதிகளைக் கொண்டவையாக இந்த மூன்றும் இயங்குகின்றன. தனிப்பட்ட நுகர்வோர் மற்றும் வர்த்தக நிறுவனங்கள் எதிர்பார்க்கும் தீர்வுகளை அளிக்கின்றன. வசதிகளை அளிப்பதுடன், கட்டண விகிதங்களும் பயனாளர்கள் எளிதாகத் தேர்ந்தெடுக்கும் வகையில் உள்ளன. பாதுகாப்பு வகையில், இந்த மூன்றும் ஒரு குறையைக் கொண்டுள்ளன. பைல்களை இணையத்திற்குக் கொண்டு செல்கையில், இங்கு அவற்றைப் பாதுகாப்பாகச் சுருக்குவது இல்லை. 
ஆனால், தேக்கி வைக்கப்படும் இடத்திற்குச் சென்றவுடன், சுருக்கப்பட்டே பாதுகாப்பாக வைக்கப்படுகின்றன. 
இந்த பாதுகாப்பு தன்மை, தனிப்பட்ட நுகர்வோர் மற்றும் சில நிறுவனங்களுக்கு பெரிய இழப்பினைத் தரப்போவதில்லை. ஒரு சில நிறுவனங்கள் கையாளும் பைல்களின் தன்மையைப் பொறுத்து, வடிவமைக்கப்படும் அமைப்பினைப் பொறுத்து, தொடக்கத்திலேயே அவை சுருக்கப்படுவது தேவைப்படலாம். எனவே, அத்தகைய நிறுவனங்கள், இந்த சேவையைப் பெறாமல் போகலாம்.

ட்ராப் பாக்ஸ்
மற்ற ஸ்டோரேஜ் வசதிகளைக் காட்டிலும், ட்ராப் பாக்ஸ் பலவகை சாதனங்களுக்கு சப்போர்ட் செய்திடுகிறது. லினக்ஸ், விண்டோஸ் போன், பிளாக் பெரி போன்றவற்றில் உருவாக்கப்படும் பைல்களையும் இதில் தேக்கி வைக்கலாம். 
ஆனால், இது அளிக்கும் இடம் மிகவும் கஞ்சத்தனமாக, 2 ஜி.பி. அளவே உள்ளது. நீங்கள் முயன்றால், கூடுதல் இடம் இலவசமாகப் பெறலாம். உங்கள் நண்பர்களுக்கு, நீங்கள் ட்ராப் பாக்ஸ் பரிந்துரைத்தால், அதற்கேற்றபடி, தேக்கும் இடம் அதிகரிக்கும். 
மேலும் உங்கள் மொபைல் போனில், தானாக கேமரா அப்லோட் வசதியை செட் செய்தாலும், ட்ராப் பாக்ஸை உங்கள் சமூக தளப் பக்கங்களில் தொடர்பு படுத்தினாலும், ட்ராப் பாக்ஸ் கூடுதல் இடத்தினை வழங்குகிறது.
ட்ராப் பாக்ஸ் ப்ரோ (Dropbox Pro): 
என்று ஒரு வசதி, மாதந்தோறும் 9.99 டாலர் செலுத்தினால் கிடைக்கிறது. அல்லது ஆண்டுக்கு 99 டாலர் செலுத்தி கூடுதல் இடம் பெறலாம். 
ஒரு டெரா பைட் இடம் தரப்படுகிறது. வர்த்தக நிறுவனங்களுக்கு, ஒன்றுக்கு ஆண்டுக்கு 150 டாலர் கட்டணத்தில் ஒரு டெரா பைட் இடம் தரப்படுகிறது.

ஒன் ட்ரைவ்மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் ஒன் ட்ரைவ் க்ளவ்ட் சேவை, இலவசமாக 15 ஜி.பி. இடம் ஒருவருக்கு தருகிறது. 
மற்றவர்களுக்கு இதனைப் பரிந்துரை செய்வதன் மூலம், மேலும் 5 ஜி.பி. இடம் பெறலாம். நீங்கள் Office 365 பயனாளராக இருந்தால், 1 டெரா பைட் இடம் இலவசமாகக் கிடைக்கும். இதில் தேக்கப்படும் பைல்களை, மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்கையில், பார்க்க மட்டும், அல்லது எடிட் செய்வதற்கும் என பல நிபந்தனைகளுடன் பகிர்ந்து கொள்ளலாம். 
இந்த வசதிகள் ட்ராப் பாக்ஸ் ப்ரோ கட்டணம் செலுத்தி வாங்கினால் மட்டுமே கிடைக்கிறது. ஆனால், ஒன் ட்ரைவில் இது இலவசம். கூடுதலாக, 100 ஜி.பி. 200 ஜி.பி. மற்றும் ஒரு டெரா பைட் இடம் வேண்டும் என்றால், மாதந்தோறும் முறையே 1.99 டாலர், 2.99 டாலர் மற்றும் 6.99 டாலர் செலுத்திப் பெறலாம். ஆனால், மைக்ரோசாப்ட் ஒரு நிபந்தனை விதிக்கிறது. 
அதன் பார்வையில் சரியற்ற கோப்புகளை அழித்துவிடும் உரிமையை மைக்ரோசாப்ட் கொண்டுள்ளது.

கூகுள் ட்ரைவ் : 
ஜி மெயில், கூகுள் அப்ளிகேஷன்ஸ், கூகுள் போட்டோஸ் எனத் தன் அனைத்து சேவைகளுக்காக என 15 ஜி.பி. இலவச இடத்தினை கூகுள் ட்ரைவ் அளிக்கிறது. 
உங்களிடம் ஏற்கனவே கூகுள் அக்கவுண்ட் ஒன்று இருந்தால், உங்களுக்கு கூகுள் ட்ரைவ் வசதி உள்ளது; அதனை நீங்கள் அனுபவித்துக் கொண்டுள்ளீர்கள் என்று பொருள். இங்கு தேக்கப்படும் பைல்களை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்கையில், அதற்கான நிபந்தனைகளை எந்தவிதக் கட்டணமும் செலுத்தாமல் அமைக்க கூகுள் ட்ரைவ் உதவுகிறது. 
ஆனால், ட்ராப் பாக்ஸ் 256 பிட் என்கிரிப்ஷன் வசதி தருகையில், இது 128 பிட் என்கிரிப்ஷன் வசதி மட்டுமே தருகிறது. 

ஸ்பைடர் ஓக் மற்றும் ட்ரெசோரிட் (Spider Oak and Tresorit): 
இந்த இரண்டு க்ளவ்ட் சேவை வசதிகளும், நாம் என்ன வகையான பைல்களைத் தேக்குகிறோம் என்று கண்டு கொள்வதே இல்லை. ஏனென்றால், நம் கம்ப்யூட்டரை விட்டு பைல்கள் செல்லும்போதே, அது சுருக்கப்பட்டுவிடுகிறது. 
இவை இரண்டும், பைல் பகிர்தல் மற்றும் பாதுகாப்பு குறித்த வசதிகளை வெவ்வேறு வகைகளில் அளிக்கின்றன.

ஸ்பைடர் ஓக் 
நீங்கள் தேக்கும் பைல்களைப் பகிர்ந்து கொள்கையில், ஸ்பைடர் ஓக், இந்த பைல்களை உருவாக்கிய உங்களுக்கும், யாருக்கெல்லாம் பகிர்ந்து கொள்ள அனுமதி அளிக்கிறீர்களோ அவர்களுக்கும், ஒரு “தனி அறை” தருகிறது. 
இந்த “அறை” பாஸ்வேர்டினால், பாதுகாக்கப்படுகிறது. இதனை இணையதள லிங்க், பைல் லிங்க் அல்லது மின் அஞ்சல் அழைப்பு மூலமாக மட்டுமே அணுக முடியும். 
இங்கு கிடைக்கும் Hive என்னும் வசதி மூலம் உங்கள் சாதனங்கள் அனைத்திலும் உள்ள பைல்களை ஒருங்கிணைக்க முடியும். ஆனால், அதற்கு உங்கள் சாதனத்திலிருந்து பைல்களை நீங்கள் இழுத்து வந்து இந்த Hiveல் அமைக்க வேண்டும். 
இது இலவசமாக 2 ஜி.பி. இடம் அளிக்கிறது. கட்டணம் செலுத்தி 30 ஜி.பி. ஒரு டெரா படி, 5 டெரா பைட் இடத்தினைப் பெறலாம். இதற்கான கட்டணம் முறையே, மாதம் ஒன்றுக்கு டாலர் 7, 12 மற்றும் 25 ஆகும்.

ட்ரெசோரிட்: 
இந்த க்ளவ்ட் சேவை, குழுக்களை அதாவது tresor களை அமைக்க அனுமதிக்கிறது. இந்த குழுக்களுக்கு, நீங்கள் உங்கள் நண்பர்களை அழைக்கலாம். 
உங்கள் நண்பர்களுடன் இந்த குழுவில் பைல்களைத் தேக்கிப் பகிர்ந்து கொள்ளலாம். ஒவ்வொரு குழு உறுப்பினருக்கும், குழுவினை அணுக அனுமதி தனித்தனியே தரப்படுகிறது. 
தன் தேக்கும் இடத்தினை, அனுமதியின்றி உடைக்கும் ஹேக்கர்களுக்கு, 50 ஆயிரம் டாலர் அளிப்பதாக, இந்நிறுவனம் சவால் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. இதுவரை எந்த ஹேக்கரும் இந்த முயற்சியில் வெற்றி பெறவில்லை. மாதந்தோறும் 12.5 டாலர் செலுத்தினால், சுருக்கப்பட்ட இடமாக 100 ஜி.பி. கிடைக்கிறது. 
வர்த்தக நிறுவனங்களுக்குக் கூடுதல் பாதுகாப்புடன், கூடுதல் வசதிகளுடன், அதிகக் கட்டணத்தில் இடம் அளிக்கிறது. 

இந்த ஆண்டில், இதுவரை நாம் அறிந்த வரையில் கிடைக்கின்ற க்ளவ்ட் ஸ்டோரேஜ் வசதிகள் மேலே தரப்பட்டுள்ளன. நீங்கள் எதிர்பார்க்கும் வசதி, உங்கள் பட்ஜெட் மற்றும் பாதுகாப்பின் அடிப்படையில், நீங்கள் ஒன்றைத் தேர்ந்தெடுக்கலாம்.
நன்றி:தினமலர்.
========================================================================
இன்று,
ஆகஸ்ட்-04.
  • சிட்னியில் மத்திய ரயில்நிலையம் திறக்கப்பட்டது(1906)
  • அப்பர் வோல்ட்டா ஆப்ரிக்கக் குடியரசு புர்கினா பாசோ எனப் பெயர் மாற்றம் பெற்றது(1984)
  • நாசாவின் பீனிக்ஸ் விண்கலம் செவ்வாய் கோளை நோக்கி ஏவப்பட்டது(2007)




 அதிமுகவின் காவல் துறை மக்கள் நலனுக்கா?
டாஸ்மாக் பாதுகாவலர்களா??

வேலூரில் நர்சிங் கல்லூரி எதிரே ஒரு டாஸ்மாக் கடை இயங்கி வருகிறது. இங்கு குடித்துவிட்டு வரும் குடிமகன்கள் கொடுக்கும் குடைச்சல் கொஞ்சநஞ்சமல்ல. அரை நிர்வாணமாகத்தான் அலைந்து கொண்டிருப்பார்கள். நர்சிங் கல்லூரியில் படிக்கும் மாணவிகள் இதைக் கண்டித்து பொங்கி எழுந்தார்கள். டாஸ்மாக் கடைக்கு பூட்டு போட்டார்கள். விரைந்து வந்த போலீஸ், டாஸ்மாக் கடை பூட்டை உடைத்து திறந்து விட்டு பாதுகாப்புக்கு நின்றது. போராடிய மாணவிகள் மீது தடியடி நடத்தியது. 
கைது செய்தது..
அப்துல் கலாம் உடலடக்கம் நடந்த நாளில் அரசு பொதுவிடுமுறை (டாஸ்மாக் கடைகளுக்கும் சேர்த்துதான்) அறிவித்திருந்தது. 
சென்னை ஜெ.ஜெ.நகரில் உள்ள டாஸ்மாக் கடை பார் மட்டும் அன்று திறந்திருந்தது. விற்பனை அமோகமாக நடந்தது. இதைப்பார்த்த ஒரு சமூக ஆர்வலர் இது குறித்து போலீசுக்கு தகவல் கொடுத்தார். அடுத்த சில நிமிடங்களிலேயே அந்த சமூக ஆர்வலருக்கு ஒரு போன் கால் வந்தது. 
அதில் பேசிய ஆசாமி, மெட்ராஸ் பாஷையில் இருக்கும் அத்தனை கெட்ட வார்த்தைகளையும் பயன்படுத்தினார்.முடிவில் தான் "அம்மாவின் ஆள் என்றும் இனியும் இப்படி நடந்தால் திருட்டுத்தனமாக மது,கஞ்சா விற்றதில் நீ உள்ளே போய் விடுவாய் ஜாக்கிரதை"
என்றான்.காவல்துறை வேறு அதிமுக வேறு இல்லை.
மதுவிலக்கு விஷயத்தில் அமைதி காத்து  வந்த மாணவர்களும் இந்த போராட்டத்தில் திடீர் திருப்பமாக குதித்துள்ளனர். 
அவர்களுக்கு ஆதரவாக தமிழகம்  முழுவதிலும் இருந்து பல்வேறு  தரப்பினர் ஆதரவு தெரிவித்துள்ளனர். குறிப்பாக சென்னை பல்கலைக்கழக  முதுகலை மாணவர்களான, சுனில்குமார்,  ராஜ்குமார், ஜெயபிரகாஷ் ஆகிய 3  மாணவர்களும் சாகும் வரை உண்ணாவிரதத்தை தொடங்கியுள்ளனர். 
பல்கலைக்கழக  வளாகத்தில் உண்ணாவிரதம்  இருக்கும் இவர்களுக்கு ஆதரவாக முதுகலை மாணவர்கள்  ஏராளமானோர் உடன் உள்ளனர்.

மாணவர்கள் மற்றும் இளைஞர்களுக்கு ஆதரவாக கல்லூரி மாணவிகளும் களத்தில் குதித்தனர். சக தோழர்களை போலீசார் தாக்கியதை அவர்களால்  பொறுத்துக் கொள்ள முடியவில்லை. 
இதனால், அவர்கள் அனைவரையும் விடுவிக்கும்படி போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அவர்கள் மீதும் போலீசார் தாக்குதல் நடத்தினர். 
போலீஸ்காரர் ஒருவர் குத்துச் சண்டை வீரரை போல் பிடிபட்ட மாணவர் முகத்தில் ஓங்கி குத்தினார். 
கை,  கால், முதுகு பகுதியிலும் சரமாரியாக தாக்கினார். 
இதனால், விரக்தி அடைந்த மாணவிகள் போலீசாருக்கு எதிராக கோஷமிட்டனர். 
தொடர்ந்து ஹாரிங்டன்  சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். 
இதனால், ஆத்திரம் அடைந்த உதவி கமிஷனர் மோகன்தாஸ் மாணவிகளிடம் மறியல் போராட்டத்தை  கைவிடும்படி எச்சரித்தார். 
மாணவிகள் கேட்காததை தொடர்ந்து பூட்ஸ் காலால் அவர்களை மிதித்தார். இதில், மாணவி ஒருவர் மயங்கி விழுந்தார். 

இதைத் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட மேலும் 5 மாணவிகள் போலீசாருக்கு எதிராக ஆவேசமாக பேசினர். 
இதைத் தொடர்ந்து பணியில் இருந்த ஆண்  போலீசார் மாணவிகளின் கையை பிடித்து தரதரவென இழுத்து சென்றனர். 
அப்படியும் மாணவிகள் போலீசாரின் கட்டுக்குள் வரவில்லை. 
இதைத்  தொடர்ந்து பெண் போலீசார் வரவழைக்கப்பட்டனர். 
மாணவிகளை அவர்கள் இழுத்துச் சென்று குண்டுக்கட்டாக தூக்கி, தயாராக இருந்த ஆட்டோவில்  ஏற்றினர்.


========================================================================



இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

2025ல் தங்கம் விலை

வினேஷ் போகத் வென்றார்!

முடிவுக்கு வருகிறதா?