இன்றைய செய்தி,நாளைய வரலாறு. நாளைய வரலாறை படிப்போம்.

திங்கள், 10 ஜூன், 2019

இனப் படுகொலை

மொழிதான் நம்மை மனிதனாக உருவாக்குகிறது.
 மனிதகுல பரிணாமத்தின் பொழுது வெளி உலகுடன் தொடர்பை உருவாக்குவதில் மொழிதான் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருந்தது.
மனிதன் அறிவை பெறுவதற்கு மொழிதான் அடித்தளம்.  உயிர் வாழ்வதற்கு காற்றும் நீரும் எவ்வளவு அவசியமோ அவ்வளவு அறிவுக்கும் சிந்தனைக்கும் மொழி அவசியம் ஆகும்.

 மனிதன் அல்லது அவன் மூதாதையர் சுமார் 70,000 ஆண்டுகளுக்கு முன்பே ஒரு விதமான மொழியை பயன்படுத்தினர் என அறிவியல் ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன.
 மனித வரலாற்றில் குறுக்கிட்ட “ஐஸ் ஏஜ்” எனும் உறைபனிக்கால சகாப்தங்கள் கூட மனிதனின் மொழி பயன்பாட்டையும் மொழிக்கான அவனது தாகத்தையும் முயற்சியையும் தடுக்க இயலவில்லை.
 சுமார் 70,000 ஆண்டுகளாக இடையறாது மொழி தளத்தில் இயங்கிய அந்த மனித மூளையின் கற்றல் திறன் அனைத்தையும்  இன்றைக்கு புதியதாக பிறந்த குழந்தை வெளிப்படுத்தும் ஒரு கட்டத்தில் நாம் உள்ளோம்.
 பள்ளிக்கு செல்லும் பொழுதே மொழியின் சில முக்கிய கூறுகளை தன்னகத்தே குழந்தை பெற்றுள்ளது. பள்ளி கல்வி இந்த திறனை மேலும் செழுமைப்படுத்தும் என்பதில் ஐயமில்லை.
 எனினும் மொழியின் முழு பரிணாமத்தையும் அதன் மூலம் ஏனைய அனைத்து அறிவாற்றலையும் குழந்தை அறிந்து கொள்ள அது தாய் மொழியில் கல்வியை கற்பது அவசியமாகிறது.


மத்திய அரசாங்கம் மும்மொழிக் கொள்கையை வெளியிட்டு ஒரு பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இந்த தருணத்தில் பல தேசங்களில் குழந்தைகள் எவ்வளவு மொழிகளை கற்குமாறு கூறப்படுகின்றனர் எனும் கேள்வியை முன்வைப்பது அவசியமாகிறது.
இக்கேள்விக்கான பதில் நம்மிடம் கோபத்தையும் அவமானத்தையும் ஒரு சேர உருவாக்கும்.
 இங்கிலாந்து, ஜெர்மனி மற்றும் பல ஐரோப்பிய நாடுகளில் ஆரம்பக் கல்வியில் ஒரே ஒரு மொழிதான் அதுவும் தாய் மொழி மட்டுமே பயிற்றுவிக்கப்படுகிறது.

அதற்கு மேலே வரும் பொழுதுதான் அவர்கள் விரும்பும் மற்றொரு மொழி குழந்தைகளுக்கு கற்பிக்கப்படுகிறது.
அமெரிக்காவில் ஆரம்பக் கல்வியில் ஆங்கிலம் மட்டும்தான்!
பின்னர் ஸ்பானிஷ் அல்லது வேறொரு மொழி அனுமதிக்கப்படுகிறது.  ஜப்பானில் ஆரம்பக் கல்வியில் ஜப்பானிய மொழி மட்டுமே!
 பின்னர் ஆங்கிலம் அனுமதிக்கப்படுகிறது.
 ஹாங்காங்கில் ஆங்கிலமும் பின்னர் சீன மொழியும் கற்பிக்கப்படுகின்றன.
எகிப்தில் அரேபிய மொழி மட்டுமே கற்பிக்கப்படுகிறது. பின்னர் ஆறு ஆண்டு காலம் ஆங்கிலம் இரண்டாவது மொழியாக குழந்தைகள் கற்க வேண்டும். உலகம் முழுதும் குழந்தைகள் தமது தாய் மொழியை மட்டுமே ஆரம்பக் கல்வியில் கற்கின்றனர்.
பின்னர் இடைநிலைக் கல்வியில் இரண்டாவது மொழி கற்பிக்கப்படுகிறது.

இந்தியாவில் மட்டும்தான் குழந்தைகள் மூன்று மொழியை கற்க நிர்பந்திக்கப்படுகின்றனர்.
 இந்தியாவில் நூற்றுக்கணக்கான மொழிகள், குறிப்பாக பழங்குடி இன மக்களின் மொழிகள், ‘மொழி’ எனும் அங்கீகாரத்தை இழந்துள்ளன.
அத்தகைய குழந்தைகள் நான்கு மொழிகளை கையாளும் சுமை அரசாங்கத்தால் உருவாக்கப்படுகிறது.

ஐ.நா.வின் யுனெஸ்கோ அமைப்பு 2016ம் ஆண்டு இந்தியாவில் சுமார் 4.7 கோடி குழந்தைகள் பத்தாம் வகுப்புடன் பள்ளிக் கல்வியை கைவிட்டு விட்டனர் என கண்டுபிடித்துள்ளது.
இதற்கு பெண் குழந்தைகளிடம் காட்டும் பாரபட்சம், குடும்ப பொருளாதார சூழல், பெண் குழந்தைகளுக்கு கழிப்பிட வசதியின்மை என பல காரணங்கள் உள்ளன.
இவற்றுடன் இன்னொரு முக்கிய காரணம் மொழிச் சுமையும் ஆகும். குழந்தைகள் மூன்று அல்லது நான்கு மொழிகளை கற்க திணிக்கப்படும் பொழுது பல குழந்தைகள் பள்ளிக் கல்வியை கைவிடும் போக்கு உருவாகிறது.
 உலகம் முழுதும் நடைமுறைப்படுத்தும் அறிவியல் அடிப்படையிலான மொழிக் கோட்பாட்டை இன்று அல்லது நாளை இந்தியாவும் ஏற்றுக் கொண்டுதான் ஆக வேண்டும்.

அது என்ன?
 தாய்மொழிதான் குழந்தைகள் கல்வி கற்பதற்கு ஏற்ற மொழி!
தாய்மொழி வழிக் கல்விதான் குழந்தைகளுக்கு ஆழமான அறிவையும் புரிதலையும் உருவாக்கும். இந்த கோட்பாட்டை எவ்வளவு சீக்கிரம் ஆட்சியாளர்கள் உணர்கிறார்களோ அவ்வளவு நல்லது.
எனினும் தாய்மொழி என்பது என்ன?
அரசாங்கம் திணிக்கும் மொழி தாய்மொழி அல்ல!
 ஒரு குழந்தைக்கு பெற்றோர்கள் எந்த மொழி தாய்மொழி என்று முடிவு செய்கின்றனரோ எந்தமொழி குழந்தையின் கற்றலுக்கு எளிதாக உள்ளதோ  அந்த மொழிதான் தாய் மொழியாக இருக்க இயலும். வேறு எந்த மொழியும் குழந்தை மேல் திணிக்கப்படக் கூடாது.

மொழிப் பிரச்சனையில் நமது தேசம் பல போராட்டங்களை சந்தித்துள்ளது.
 தமிழகம், கர்நாடகா, தெலுங்கானா போன்ற பல மாநில மக்கள் தமது மொழிக்காக போராடியுள்ளனர். இந்த போராட்டங்களை அவ்வப்பொழுது ஆட்சியாளர்கள் மறந்துவிடுகின்றனர்.
கல்விக் கொள்கை என அவ்வப்பொழுது ஆட்சியாளர்கள் அறிவிப்பது வாடிக்கை!
ஆனால் எத்தனை முறை இத்தகைய கொள்கைகள் அறிவிக்கப்பட்ட பொழுதும் கல்வியின் தரம் உயரவில்லை என்பதுதான் நடைமுறை உண்மை. புதிய தேசிய கல்வி கொள்கை பழைய காயங்களை மீண்டும் உரசிப்பார்க்கிறது.
 சிலரின் தேர்தல் பிரச்சாரம் வரைமுறையற்ற விதத்தில் அமைந்தது.
 அது தேசத்தை பல தளங்களில் பிளவை உருவாக்கியுள்ளது. இந்த தருணத்தில் இந்த கல்வி கொள்கை அந்த பிளவை மேலும் அதிகரிக்கும் ஆபத்தை உருவாக்குகிறது.
இந்தியை திணிப்பது என்பது மாநிலங்களுக்கு அரசியல் சட்டம் தந்துள்ள அடிப்படை உரிமைகளை தகர்க்கும் செயலாகும்.

இந்தி பேசாத மக்கள் மீது இந்தியை திணிக்க முற்படும் பா.ஜ.க.வின் ஆர்வக்கோளாறு மிகவும் தவறான அடித்தளத்தை கொண்டதாகும்.
தேசத்தின் மொழிகள் பற்றிய விவரங்களும் எந்த மொழி எந்த மக்கள் பிரிவினரால் பேசப்படுகின்றன எனும் உண்மையான விவரங்களும் பா.ஜ.க. அரசாங்கத்திடம் இல்லை.

 2011 மக்கள் தொகைக் கணக்கீடு 52 கோடி மக்கள் இந்தியை தாய் மொழியாக கொண்டுள்ளனர் என குறிப்பிடுகிறது.
 ஆனால் இந்த கணக்கீடு மிகவும் மோசடியானது. 
போஜ்பூரி மொழி பேசும் 5 கோடிப் பேரையும் இந்தி பேசுவதாக தவறாக சேர்த்துள்ளனர். 
அதே போல 61 வெவ்வேறு மொழிகளைப் பேசும் 9 கோடிப் பேரும் இந்தி மொழிக்கான பட்டியலில் இணைக்கப்பட்டுள்ளனர். 
இந்த 61 மொழிகளைப் பேசும் சமூகங்கள் இராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், உத்தரப் பிரதேசம், ஹரியானா என பல மாநிலங்களில் பரவி உள்ளனர். 
துல்லியமாக கூறுவதானால் இந்தியாவில் சுமார் 30% பேர்தான் இந்தி பேசுகின்றனர். 70% பேருக்கு இந்தி தாய் மொழியாக இல்லை. 
தெரிந்தே ஒரு மொழிக்கு ஆபத்தை உருவாக்குவது என்பது இனப் படுகொலைக்கு சமம் என யுனெஸ்கோ கூறுகிறது. 
தேசியத்தை பரவலாக்குவது எனும் பெயரால் இந்தியை திணிக்க அரசாங்கம் முனைகிறது. 
இதற்கான குற்றவாளிகள் இந்தி பேசும் சாதாரண மக்கள் அல்ல! 

மாறாக இந்தி மொழியை தவறாக பயன்படுத்தும் போலி தேசியவாதிகளின் அரசியல் குற்றம் இது.

இந்தியாவின் பன்முகத்தன்மைக்கு மதிப்பும் மரியாதையும் அளிக்கும் பொறுமை இவர்களுக்கு இல்லை. பன்முகத்தன்மையை உத்தரவாதப்படுத்தும் நமது அரசியல் சட்டத்தை காக்கும் பொறுமையும் இவர்களிடம் இல்லை.

பா.ஜ.க. அரசாங்கத்தின் கல்விக் கொள்கைக்கு மிகவும் காத்திரமான கோபமான எதிர்வினைகள் முன்வந்துள்ளன. இது இந்தி அல்லாத மொழிகளின் ஜனநாயக ஆர்வத்தை பிரதிபலிப்பது எனில் மிகை அல்ல. எனினும் இந்தி திணிக்கப்படமாட்டாது என அரசாங்கம் கூறியுள்ளது.
 பா.ஜ.க.அரசாங்கத்தின் இந்த பதுங்கல் தற்காலிகமானதுதான் எனக் கருதுவதில் தவறு இருக்காது.
 ஆனால் மொழி திணிக்கும் முயற்சி என்பது தொடக்கம்தான்.
 ஒரு நாசகரமான அரசியல் கருத்தாக்கத்தின் ஆபத்தை இந்த மொழித்திணிப்பு கட்டியம் கூறுகிறது எனில் மிகை அல்ல!
போலி தேசியவாதிகளுக்கும் அரசியல் சட்டம் காக்கப்பட வேண்டும் என எண்ணும் ஜனநாயகவாதிகளுக்கும் இடையே பல முரண்பாடுகள் வெடிக்க காத்திருக்கின்றன.
 கலாச்சாரம், மொழி, அறிவாற்றல், நம்பிக்கை, வரலாறு, உலக கண்ணோட்டம், நவீனம் எனப்படுவது யாது என்பன போன்ற பல அம்சங்களில் இந்த முரண்பாடுகள் முன்னுக்கு வரும் ஆபத்து உள்ளது.
 வடக்கு- தெற்கு எனும் வடிவத்தில் இந்த மோதல் உருவாகிவிடக் கூடாது என நம்புவோமாக!
நாகரீகம் மற்றும் அறிவாற்றல் ஆகிய இரண்டுக்குமே மொழிதான் அடித்தளம். எனவே எதிர்கால முரண்பாடுகளுக்கு மொழித் திணிப்பு துவக்கமாக அமைந்துவிடக்கூடாது.

- தமிழில்: அ. அன்வர் உசேன். 
----------------------------------------------------------------------------------------------------------------------
ஜானகிராமன்.
 ஜானகிராமன் 1996 முதல் 2000 ஆம் ஆண்டு வரை  திமுக ஆட்சியில் புதுச்சேரி முதல்வராக இருந்துள்ளார்.


நெல்லித்தோப்பு தொகுதியில் இருந்து 5 முறை எம்எல்ஏவாக தேர்வு செய்யப்பட்டவர் ஜானகிராமன்.


 சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர், திமுக உயர்நிலை செயல்திட்டக்குழு உறுப்பினராகவும் இருந்துள்ளார்.

 திமுக உயர்நிலை செயல்திட்டக்குழு உறுப்பினராக இருந்தவர்.

ஜானகிராமன் உடல்நலக்குறைவால் புதுச்சேரி பிம்ஸ் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.
 இந்நிலையில்  சிகிச்சை பலனின்றி  காலமானார்.

புதுச்சேரியில் மறைந்த ஜானகிராமன் உடலுக்கு முதல்வர் நாராயணசாமி  உள்ளிட்ட அரசியல் கட்சி தலைவர்கள் அஞ்சலி செலுத்தினர்.
திமுக தலைவர் ஸ்டாலின் உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்த உள்ளனர்.
நாளை மாலை அவரது உடல் விழுப்புரம் மாவட்டம் மரக்காணத்தை அடுத்த அவரது சொந்த கிராமமான ஆலத்தூரில் அடக்கம் செய்ப்படுகிறது.
-----------------------------------------------------------------------------------------------------------------------
 வாக்குப்பதிவு எந்திரங்கள் 
 அதிர்ச்சி தகவல்கள் 

நியூயார்க் டைம்ஸ் பத்திரிகை வெளியிட்டுள்ள ஒரு கட்டுரையில் பல அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன.

 2019 இந்திய மக்களவைத் தேர்தல் வாக்காளர்களின் மனநிலையை எதிரொலிப்பதாக இல்லை.
நாடு முழுவதும் மோடி எதிர்ப்பு அலை அதிகமாக இருந்தது.
 ஆனால், மோடி பெரும்பான்மை இடங்களுடன் ஆட்சியை பிடித்தார்.
 இந்நிலையில்தான், தேர்தல்களை வாக்குப்பதிவு எந்திரங்கள் மூலம் நடத்துவதா?
 பழைய முறையில் வாக்குச்சீட்டு அடிப்படையில் நடத்துவதா என்ற விவாதம் வலுப்பெற்றுள்ளது.

அமெரிக்காவில் நடைபெற்ற ஆய்வுகள் வாக்குப்பதிவு எந்திரத்தை கண்ணை மூடிக்கொண்டு நம்ப வேண்டியதில்லை என்று நிரூபித்திருக்கிறது.


இந்திய எதிர்க்கட்சிகள் இப்போது வாக்குச்சீட்டு முறைக்கு மாறவேண்டும் என்ற கோரிக்கையை மேலும் வலுப்படுத்தி இருக்கின்றன. சர்வதேச அளவில் கம்ப்யூட்டர் விஞ்ஞானிகளும் நிபுணர்களும் வெளியிடும் ஆய்வு முடிவுகள் இந்த கோரிக்கையை வலுப்படுத்த காரணமாகின்றன.

பொதுவாக வாக்குப்பதிவு எந்திரத்தை குறைகூறினால், இந்திய தேர்தல் கமிஷன் இரண்டு சமாதானங்களைச் சொல்லி சமாளிக்கும். நமது வாக்குப்பதிவு எந்திரங்கள் பாதுகாப்பானவை, மோசடி செய்ய முடியாதவை. வாக்குப்பதிவு எந்திரத்தை இணையத்துடன் இணைக்க முடியாது. அது தனித்து இயங்கும் வகையிலேயே தயாரிக்கப்பட்டுள்ளது என்று தேர்தல் ஆணையம் சார்பில் கூறப்படும்.

இந்த இரண்டு சமாதானங்களுமே இப்போது ஆராய்ச்சிக்கு உட்படுத்தப்பட வேண்டியதாகிறது. மூன்றாவது ஒரு வாதமும் முன்வைக்கப்படுகிறது. அதாவது, அரசுத்துறை நிறுவனங்கள் மூலமாக மட்டுமே வாக்குப்பதிவு எந்திரங்கள் தயாரிக்கப்படுகின்றன என்று சொல்லப்படுகிறது. சமீபத்தில் தேர்தல் நேரத்திலும் தேர்தலுக்கு பிறகான நேரத்திலும் வாக்குப்பதிவு எந்திரங்கள் கண்ட பகுதியிலும் கொண்டுசெல்லப்பட்டது. வினியோகிக்கப்பட்டது. அமெரிக்க ஆராய்ச்சி என்ன சொல்கிறது என்றால் எந்திரத்தை தயாரிக்கும் நிலையிலேயே மோசடி செய்ய முடியும் என்கிறது.

அமெரிக்க ஆய்வில் தெரியவந்துள்ள உண்மைகள் 
1.   கம்ப்யூட்டர் தொழில்நுட்ப ஆய்வாளர் கிம் ஸெட்டர் தனது ஆய்வுகள் தொடர்பான கட்டுரைகளுக்காக நான்கு விருதுகளை பெற்றவர். வாக்குப்பதிவு எந்திரங்கள் எப்படி சந்தேகத்துக்குரிய வகையில் ஜனநாயகத்தை பாதிக்கிறது என்றும், ஒப்புகைச்சீட்டை இணைத்தாலும் எப்படி வாக்குப்பதிவு எந்திரம் பொருத்தமற்றதாகிறது என்பதையும் இவர் விளக்கி எழுதி இருக்கிறார்.

2.   வாக்குப்பதிவு எந்திரத்தில் ஒரு வேட்பாளரைத் தேர்வு செய்தால் திரையில் வேறு ஒரு வேட்பாளரின் பெயர் தெரிவது எப்படி என்று பென்சில்வேனியா தேர்தல் அதிகாரிகளை அமெரிக்க பேராசிரியர் ஒருவர் கேட்டிருக்கிறார். வாக்குப்பதிவு எந்திரத்துடன் இணைய இணைப்பு இல்லாவிட்டாலும், வேறு கருவிகள் பொருத்தப்பட்டிருக்கலாம் என்று இவர் சந்தேகம் எழுப்பியிருக்கிறார்.


3.   வாக்குப்பதிவு எந்திரங்களில் மோசடி செய்ய முடியாது என்று தேர்தல் ஆணையங்கள் சொன்னாலும், சுயேச்சையான கம்ப்யூட்டர் விஞ்ஞானிகளோ, மோசடிக்கு வாய்ப்பு இருப்பதாக அதிர்ச்சிகரமான தகவல்களை வெளியிடுகிறார்கள். அதாவது, வாக்குப்பதிவு எந்திரம் வலுவான பாதுகாப்பு அமைப்புடன் வடிவமைக்கப்படவில்லை. இந்தியாவில் கூறப்படுவதைப் போலவே, அமெரிக்காவிலும் வாக்குப்பதிவு எந்திரங்கள் தூரத்திலிருந்து இயக்கப்படுகின்றன என்று குறைகூறப்படுகிறது. தேர்தல் ஆணையங்கள் எத்தனை முறை மறுத்தாலும், வைஃபை, புளூடூத் போன்றவை மூலம் வாக்குப்பதிவு எந்திரத்தில் மோசடி செய்ய முடியாது என்று சொன்னாலும், வெளிவரும் ஆய்வு முடிவுகள் அச்சத்தையே ஏற்படுத்துகின்றன.

4.   அமெரிக்காவின் முக்கியமான வாக்குப்பதிவு எந்திர தயாரிப்பு நிறுவனமான இஎஸ்&எஸ் ஒரு உண்மையை ஒப்புக்கொண்டுள்ளது. சில சமயம் தனது நிறுவனம், தொலைதூரத்திலிருந்தும் இணைக்கப்படும் அமைப்புடன் வாக்குப்பதிவு எந்திரங்களைத் தயாரித்து வினியோகிப்பதாக அது கூறியுள்ளது. ஒருவேளை முன்னரே எந்திரத்தில் பொருத்தாவிட்டாலும், தேர்தல் அதிகாரிகளே மோடத்துடன் இணைக்கும் வகையில் பொருத்திக் கொள்ளும் வசதியை ஏற்படுத்தித் தருவதாகவும் அந்த நிறுவனம் கூறியிருக்கிறது. இதன்மூலம் இறுதி ரிசல்ட்டை சந்தேகத்திற்கு இடமின்றி சமன் செய்ய முடியும் என்று அது கூறியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
 5.   மேலும் பல நிறுவனங்கள் இணையதளத்துடன் இணைக்கும் வசதியுடனே எந்திரங்களை தயாரிப்பதாக கூறப்படுகிறது. இது மோசடி செய்ய ரொம்ப வசதியானது. இந்த உண்மையை பல மாநில மற்றும் மத்திய தேர்தல் அதிகாரிகளே அறியாமல் இருக்கிறார்கள். வாக்குப்பதிவு முடிந்தவுடன் வாக்குச்சாவடி அதிகாரிகள் பதிவான வாக்கு விவரங்களை மோடம் வழியாக உயர் அதிகாரிகளுக்கு அனுப்புகிறார்கள்.

இந்த மோடம்களில் பெரும்பாலானவை செல்லுலர்கள். இவை பெரும்பாலும் ரேடியோ சிக்னல்களையே கால்களாகவும், டேட்டாகளாகவும் செல்போன் டவர்கள் மற்றும் மொபைல் நெட்வொர்க்கிற்கு சொந்தமான ரவுட்டர்களுக்கு அனுப்புகின்றன. இந்தியாவில் ஏர்டெல், வோடபோன் உள்ளிட்ட மொபைல் நிறுவனங்கள் அதிகமாக இவற்றை வைத்திருக்கின்றன. லேண்ட்லைன் மோடம்களை பயன்படுத்தினாலும்கூட அவற்றிலிருந்து மற்ற ரவுட்டர்களுக்கு விவரங்களை எளிதில் கடத்த முடியும். அந்த அளவுக்கு சமீபகாலத்தில் டிஜிட்டல் அமைப்புகள் நவீனப்படுத்தப்பட்டுள்ளன.

 எனவே, திறமைமிக்க ஹேக்கர்கள் எளிதாக வாக்குப்பதிவு விவரங்களை தேர்தலன்று இரவிலேயே பரிமாற முடியும். வாக்குப்பதிவு எந்திரங்களில் வைரஸ்களை செலுத்தவோ, தேர்தல் எந்திர மென்பொருளை மாற்றி அமைக்கவோ, உண்மையில் பதிவான வாக்குகளை மாற்றவோ இவர்களால் முடியும்.

6.   வேறு சில வழிகளும் இருக்கின்றன. அனுபவம்வாய்ந்த ஹேக்கர் டெலிகாம் ரவுட்டர்கள் வழியாக ஊடுருவி தேர்தல் முடிவுகளை திருத்த முடியும். மற்ற டிஜிடல் கருவிகளைப் போலவே, டெலிகாம் ரவுட்டர்களும் மோசடிக்கு இடமளிப்பவையே. சில ஆண்டுகளுக்கு முன், பிரிட்டனின் உளவு அமைப்பு, பெல்ஜியம் நாட்டின் டெலிகாம் நிறுவனமான பெல்ககாமிற்கு சொந்தமான ரவுட்டர்களை குறிவைத்து, அவற்றின் வழியாக வரும் மொபைல் தகவல்களை ஊடுருவியதைக் குறிப்பிடலாம்.

இவையெல்லாம் கணக்கில் கொண்டு, வாக்குப்பதிவு எந்திரங்கள் உபயோகிப்பதை நிறுத்த வேண்டும். வாக்குச்சீட்டு முறையையே பின்பற்ற வேண்டும். எல்லாத் தேர்தல்களையும் மறு தணிக்கை செய்ய வேண்டும். இந்தியாவில் சுதந்திரமான சுமுகமான தேர்லை நடத்த உறுதியான நடவடிக்கைகளை மேற்கொள்ள அனைவரும் குரல் எழுப்ப வேண்டும். எதிர்க்கட்சிகள் அனைத்தும் இணைந்து ஒரு முன்னணியை உருவாக்கி, ஒரே குரலில் வாக்குச்சீட்டு முறையை வலியுறுத்த வேண்டும்.
---------------------------------------------------------------------------------------------------------------------

               இதற்குதான்யா இந்திப்படிங்கனு தலையில அடிச்சுக்கிட்டேன்.
                                                              --எச்ச.ராஜா.